Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 12 1

அத்தியாயம் 12 

எந்தன் இதயத்தில் ரணமாய்

பதிந்து கொண்டே இருக்கிறது

நீ கிடைக்காத ஏமாற்றம்!!!



Advertisement

“சரி பண்ணுறேன். ஆனா இப்ப காலேஜ் முடிஞ்சிருச்சு. நாளைல இருந்து ஒரு மாசம் லீவ் தான்”, என்றாள்.

Advertisement

“சரி, உன் வீட்டுக்கு போகனுமா? நாளைக்கு கொண்டு போய் விடுறேன். இருந்துட்டு வரியா?”, என்று அவன் கேட்க “ஏங்க காலேஜ் முடிஞ்சிருச்சுன்னு சொல்றேன். நீங்க என்ன டான்னா?”, என்று முறைத்த படி கேட்டாள்.

Advertisement

“கொஞ்ச நேரம் வாயை மூடுறியா? காலேஜ் முடிஞ்சிருச்சு அதானே? அதை ஏன் கீறல் விழுந்த ரெக்காட் மாதிரி திருப்பி திருப்பிச் சொல்லிட்டு இருக்க? எரிச்சலா இருக்கு. படு பேசாம”, என்று அவன் கத்தியதும் அதிர்ந்து விட்டாள்.

Advertisement

அடுத்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அவள் அழுது கொண்டே படுத்து விட இவனுக்கு தான் என்னவோ போல ஆகி விட்டது. தன்னுடைய இயலாமையை அவள் மேல் காட்டி விட்டது புரிந்தது.

“கொடி”, என்று கெஞ்சுதலுடன் அழைத்தான். அவனைத் திரும்பி பார்த்தவள் “என்னைத் திட்டினதுல நீங்க சந்தோஷமா இருக்கீங்க தானே? எனக்கு அது போதும்”, என்றாள்.

“ஏய், பிளீஸ் சாரி டி”, என்றதும் அவனைப் பார்த்து திரும்பிப் படுத்தவள் “உங்களுக்கு என்னைப் பிடிக்காதா?”, என்று கேட்டாள்.

“ஏன் டி படுத்துற? உனக்கு தெரியாதா?”

“அப்புறம் ஏன் இப்படி?”

“இன்னைக்கு நாளை நான் எப்படி எதிர் பாத்துட்டு வந்தேன்னு உனக்கு தெரியும் தானே?”

“ம்ம்”

“எல்லாம் போச்சு டி. நான் நாலு நாள்ல ஐ.பி.எஸ் ட்ரைனிங் போகணும். கால் லட்டர் வந்துருச்சு”, என்று சொல்ல அவளுக்கு அதை எப்படி எடுக்க என்று தெரியவில்லை. அவன் கனவில் அடி எடுத்து வைத்திருக்கிறான் என்று சந்தோஷப் படவா? இல்லை அவனை பிரிய வேண்டும் என்பதை நினைத்து அழவா என்று தெரிய வில்லை.

அடுத்த நொடி என்ன நினைத்தாளோ? அவளாகவே அவன் நெஞ்சில் போய் சாய்ந்து கொண்டாள். அவனும் அவளை இறுக அனைத்துக் கொண்டான். இப்போது அந்த அணைப்பு அவனுக்கு தேவையாக இருந்தது.

அவள் உடல் அழுகையில் குலுங்க “நான் போக வேண்டாமா?”, என்று கேட்டான்.

“அது எப்படிங்க உங்களை போக வேண்டாம்னு சொல்லுவேன்? கண்டிப்பா நீங்க போகணும். அது உங்க கனவு. ஆனா எனக்கு கஷ்டமாக இருக்கு”

“நீயும் பி.ஜி படி. நாள் ஓடிரும்”

“ம்ம்”

“சரி தூங்கு”, என்றதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் பார்வையில் இருந்த கேள்வியைப் படித்தவன் “அவசரமா எனக்கு எதுவுமே வேண்டாம். உனக்கு புரியுதா?”, என்று கேட்டான்.

“ம்ம்”, என்றவள் அவன் நெஞ்சிலே மீண்டும் சாய்ந்து கொண்டாள். இருவரும் சிறிது நேரம் பேசிய படியே தூங்கிப் போனார்கள். அடுத்த நாள் விஷயம் கேள்விப் பட்டு கதிரவன் அவனை வாழ்த்தினார். தேவகியும் தான். ஆனால் அவள் முகம் ஒரு மாதிரி இருப்பதை தேவகி பார்த்து விட்டார்.

அடுத்த நாள் அவன் வெளியே சென்றதும் அவளை அழைத்து “என்ன டா, அவன் ஊருக்கு போறான்னு கஷ்டமா இருக்கா?”, என்று கேட்டார்.

“ம்ம், ஆமா மா”

“அவன் கிளம்புறதுக்கு இன்னும் மூணு நாள் இருக்கு. அது வரைக்குமாவது அவன் கூட சந்தோஷமா இருக்கலாம்ல? இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு இருந்தா அவனுக்கு எப்படி இருக்கும் சொல்லு?”

“அம்மா, நீங்க அவருக்கு வேற பொண்ணு பாத்து கட்டி வச்சிருக்கலாம்ல?”, என்று அவள் அழுகையோடே கேட்க திகைத்து போனார்.

“என்ன ஆச்சு மா? ஏன் இப்படி பேசுற?”

“நான் அவருக்கு ஏத்தவளே இல்லை மா. அவரைக் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டு இருக்குற கொலைகாரி”

“ஏன் இப்படி எல்லாம் பேசுற? என்னன்னு விவரமா சொல்லு. மாறன் எதுவும் சொன்னானா? ஏதாவது சண்டையா?”

“அம்மா, நான் அவர் கூட இது வரைக்கும் சந்தோசமாவே இல்லை மா”

“என்ன சொல்ற பூவு?”

“ஆமா மா, என்னோட படிப்பு முடியட்டும்னு…”, என்று எல்லாம் சொன்னாள்.

“ஐயோ கடவுளே, இத்தனை நாள் நான் இதைக் கவனிக்கலையே? படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் காலா காலத்துல நடக்க வேண்டியது நடக்க வேண்டாமா? இங்க பாரு பூவு. இப்ப தான் உன் படிப்பு முடிஞ்சிருச்சே? இன்னைக்கே உங்க வாழ்க்கையை துவங்குங்க. குழந்தை உருவானா கூட நான் பாத்துக்குறேன். நீ எவ்வளவு படிக்கணுமோ அவ்வளவு படி. அவன் அவனோட வேலையைப் பாக்கட்டும். வாழ வேண்டிய வயசுல இப்படி இளமையை தொலைச்சிட்டு நிக்கலாமா? இங்க பாரு. இன்னைக்கு தான் உனக்கு கல்யாணம் ஆகிருக்குன்னு நினைச்சிக்கோ. அவன் கூட சந்தோஷமா இரு”

“ம்ம்”, என்றாள்.

அன்று இரவு அவள் அவனிடம் தேவகி சொன்னதைச் சொல்ல “நான் அதை யோசிக்காம இருப்பேன்னு நினைச்சியா கொடி? உன் கூட வாழ்ந்தா இந்த மூணு நாள் எனக்கு திருப்தியை தரும் தான். ஒரு வேளை குழந்தையும் உருவாகலாம். அப்படி உருவானா அதை கிட்ட இருந்து பாக்க நான் இருக்க வேண்டாமா?”, என்று கேட்டான்.

அவள் அவனையே பார்க்க “உன்னை இங்க மாசமாக்கிட்டு நான் காட்டுக்குள்ள போய் உக்காந்தா அது வாழ்க்கையா டி? எனக்கு நம்ம வாழ்க்கை மூணு நாள் அவசரத்துல இருக்க கூடாது டி. முழுமையா வேணும். நமக்கு இன்னும் காலம் இருக்கு. உனக்கு இன்னும் வயசு ஆகலை. அத்தை கிட்ட சொல்லு. புரிஞ்சிப்பாங்க”, என்றவன் அவளுடைய அருகாமையை மட்டும் இழக்கவே இல்லை. அவளைக் கட்டி அணைத்த படி தூங்கினான்.

அடுத்த நாள் பூங்கொடி சொன்னதைக் கேட்ட தேவகிக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை. அன்று மணிமாறன் மனைவியை அழைத்துக் கொண்டு அவளது வீட்டுக்கு சென்றான்.

அங்கே அனைவரிடமும் விஷயத்தைச் சொல்ல அனைவருக்கும் சந்தோஷம் தான். அடுத்த நாள் அவன் செல்ல வேண்டும் என்ற நிலையில் முந்தைய நாள் இரவு அவள் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். அடுத்த நாள் இதே நேரம் அவன் அவள் அருகில் இருக்க மாட்டான் என்பதே அவளுக்கு அழுகையை வர வைக்கப் போதுமானதாக இருந்தது. அவனுக்குமே கஷ்டமாக தான் இருந்தது.

“கொடி, அழாத டி”

“எனக்கு கஷ்டமா இருக்குங்க”

“கொஞ்ச நாள் தான் டா”

“என்னால தான் உங்களுக்கு ரொம்ப கஷ்டம். நீங்க வேற யாரையோ கல்யாணம் பண்ணிருந்தா நல்லா இருந்துருப்பீங்க? நான் உங்களை ரொம்ப சோதிச்சிட்டேன்”, என்றவள் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.

“தேவையில்லாம யோசிக்காத டி”

“பிளீஸ், நீங்க எனக்கு வேணும். உங்க கூட ஒரு நாள் கூட வாழலைன்னா என்னோட குற்ற உணர்ச்சியே என்னைக் கொன்னுரும்”

“போடி பைத்தியம். அதெல்லாம் ஒண்ணும் இல்லை தூங்கு”

“பிளீஸ்ங்க”

“கொஞ்சம் என்னையும் புரிஞ்சிக்கோ கொடி. உன்னைத் தொட்ட பிறகு என்னால உன்னை விட்டுப் போக முடியாது. இது அவசரத்துல நடக்க கூடாது. உனக்கு புரியுதா? ஒண்ணுமே இல்லாதவன் கடைசி வரை அப்படியே இருந்தா அது பெரிய விஷயம் இல்லை. ஆனா எல்லாம் கிடைச்சு ஆண்டு அனுபவிச்ச பிறகு ஒண்ணுமே உனக்கு இல்லைன்னா அவ்வளவு தான் அவன் நிலைமை. அங்க ட்ரைனிங் எப்படி இருக்கும்னு தெரியாது. என் உணர்வுகள் என் கட்டுக்குள்ள இருக்கணும். உன் கூட வாழ்ந்துட்டேனா அதுக்கு ஏங்கிப் போயிருவேன் டி”, என்றான் மணிமாறன்.

அதற்கு மேல் அவனிடம் அதைப் பற்றி பேசாமல் வேறு பேசிக் கொண்டிருந்தாள். ஒரு வழியாக அவன் கிளம்பும் நாளும் வந்தது. அவளுடைய வீட்டில் இருந்து அனைவரும் வந்திருந்தார்கள்.

மணிமாறன் அவனுடைய அறையில் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் கண்ணீரை அடக்குவது அவனுக்கு புரிந்தது. கிளம்பி முடித்து அவள் அருகே வந்தவன் அவளை தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டான்.

“அழாத கொடி. எனக்கு நேரம் கிடைக்கும் போது உனக்கு கால் பண்ணுறேன். டைம் கிடைச்சா பாக்க வரேன். காலேஜ் ஆரம்பிக்கிற வரை உங்க வீட்ல வேணும்னா போய் இருக்கியா?”, என்று கேட்டான்.

“வேண்டாம். நான் இங்கயே இருக்கேன்”

“ஏன் டி, அங்க இருந்தா பிள்ளைக கூட சந்தோஷமா இருப்பல்ல?”

“இங்க இருந்தா உங்களோட வாசனை இந்த ரூம் முழுக்க இருக்கும். உங்க டிரஸ் எல்லாம் எனக்கு துணையா இருக்கும். நீங்க கை வச்ச எல்லா பொருளையும் தொட்டுப் பாத்து நான் சந்தோஷப் படுவேன். அங்க போனா இதெல்லாம் கிடைக்காதுல்ல?”, என்று அவள் கேட்க அவள் பதிலில் நெகிழ்ந்து போனவன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“அப்பாவும் அத்தையும் என்னை நல்லா பாத்துக்கிட்டாலும் எனக்கு அம்மா இல்லாதது குறையா தான் டி தோணும். ஸ்கூல் காலேஜ்ல எனக்கு எந்த பொண்ணு மேலயும் ஈடுபாடு வந்ததே இல்லை. நிறைய கல்யாணம் முடிஞ்சவங்களைப் பாத்து யோசிச்சிருக்கேன்? யாருன்னே தெரியாத ஒரு பொண்ணும் பையனும் கல்யாணம் அப்படிங்குற பேர்ல ஒண்ணு சேந்து எப்படி ஒண்ணா வாழுறாங்கன்னு? ஆனா அதுக்கு அர்த்தம் இப்ப புரியுது டி”

“கொடி”

“ம்ம்”

“ஒரே ஒரு முத்தம் கொடேன். நீயா கொடுத்தது இல்லைல?”, என்று அவன் கேட்க அவள் முகம் சிவந்தது. ஆனால் அவன் ஆசையாக கேட்டால் அவள் எப்படி மறுப்பாளாம்?

அவனுடைய இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டாள். கடைசி வரை தன்னுடைய உதட்டில் முத்தமிட மாட்டாள் என்று எண்ணியவன் அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தான்.

அவனுடைய முத்தத்தின் வேகமே ஒரு அதிர்ச்சி என்றால் அவளுடைய உடலில் பயணிக்கும் அவனுடைய கரங்களின் வேகம் அவளுக்கு மற்றொரு அதிர்ச்சி தான்.

“கொடி”

“ம்ம்”

“நேத்து ஏன் மறுத்தேன்னு இருக்கு டி”, என்று அவன் அவளுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்த படி பிதற்ற இப்போது அவனைத் தேற்றுவது தன்னுடைய கடமை புரிய “அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நமக்கான காலம் நிறைய இருக்கு. அது வர வரைக்கும் நாம காத்துட்டு இருப்போம். இப்ப சட்டை எல்லாம் கசங்குது. நேரம் வேற ஆச்சு. வாங்க போகலாம்”, என்றாள்.

“என்னை லவ் பண்ணுறியா கொடி?”

“ரொம்ப ரொம்பன்னு சொன்னா என்ன பண்ணுவீங்களாம்?”

“இத்தனை நாளை தொலைச்சிட்டேன்னு அழ வேண்டியது தான்”, என்று அவன் சோகமாக சொல்ல அவனைக் கண்டு புன்னகைத்தவள் “நான் காத்துட்டு இருப்பேன். நல்ல படியா போயிட்டு வாங்க”, என்றாள். மீண்டும் அவளை முத்தமிட்டு விட்டு பேகை எடுத்துக் கொண்டு வந்தான். கண்ணீர் மல்க கணவனுக்கு விடை கொடுத்தாள் பூங்கொடி.

மணிமாறன் ட்ரைனிங் சென்று ஒரு மாதம் முடிந்திருந்தது. வாரத்தில் ஞாயிறு அன்று மட்டும் தான் பூங்கொடிக்கு போன் செய்வான். அந்த ஒரு நாளுக்காக வாரம் முழுக்க இருவரும் காத்திருந்தார்கள். அவர்கள் மனநிலை உணர்ந்து தேவகி மற்றும் கதிரவன் அவனிடம் இரண்டு வார்த்தை பேசி விட்டு அவளிடம் கொடுத்து விடுவார்கள்.

போனை வைக்க இருவருக்குமே மனதிருக்காது. ஆனால் அடுத்த ஆள் பேச வேண்டும் என்றால் வைத்து தானே ஆக வேண்டும்? ட்ரைனிங் அவனுக்கு கஷ்டமாக தான் இருந்தது. அவன் ஏற்கனவே போலீஸ் ட்ரைனிங் எடுத்திருந்ததால் அங்கு சமாளித்தான்.

இதற்கிடையில் பூங்கொடிக்கு ரிசல்ட் வந்திருந்தது. அவள் அதே காலேஜில் மேற்படிப்புக்கு விண்ணப்பித்திருந்தாள். காலேஜ் ஆரம்பிக்க இன்னும் இரண்டு வாரம் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!