Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 16 1

அத்தியாயம் 16

என் தனிமையை விரட்டி

வெற்றி வாகை சூடுகிறது

உந்தன் நினைவுகள்!!!



Advertisement

“நிதானமாவா? இவனைக் கொன்னா தாண்ணே என் ஆத்திரம் தீரும்”, என்று அவன் இளங்கோ சட்டையைப் பிடிக்க “டேய் என்ன நடந்ததுன்னு சொல்லு டா”, என்றான் மணிவாசகம்.

Advertisement

“இப்ப நீ அமைதியாகலைன்னா உன்னை அடிச்சே கொன்னுருவேன் வரதா”, என்று சொன்னார் மணியம்மை. 

Advertisement

“அடி மா. என்னை அடிச்சே கொன்னுரு. உனக்கு நான் பிள்ளையாவே பிறந்துருக்க வேண்டாம் மா”, என்று கலங்கிய குரலில் சொல்ல அனைவருமே திகைத்து விட்டார்கள். 

Advertisement

வரதனா அழுவது என்று அவர்களுக்கு வியப்பாக இருந்தது. 

“டேய் வரதா, என்ன ஆச்சு டா?”, என்று கேட்ட மணியம்மையும் மகனின் கண்ணீரைக் கண்டு கலங்கிப் போனார். 

“நான் உனக்கு பிள்ளையா பிறக்காம இருந்திருந்தா இந்த கேடு கெட்ட குடும்பதுல கல்யாணம் பண்ணாம இருந்துருக்கலாம்ல?”, என்று தேம்பிய படியே கேட்டான் வரதன். கணவன் அழுவதைக் கண்டு சுதா கண்களிலும் கண்ணீர் வடிந்தது. 

“ஏமா சுதா, என்ன நடந்துச்சுன்னு நீயாவது சொல்லு மா”, என்றார் கேசவன். அவள் தலை குனிந்த படி அழுது கொண்டிருந்தாள். யாரையும் அவளால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. 

“யாராவது சொன்னா தானே தெரியும்? இப்ப சொல்லப் போறீங்களா இல்லையா?”, என்று கேசவன் கத்த “இவங்க மூணு பேரும் சேந்து நம்ம வீட்டு பிள்ளையை அசிங்கப் படுத்தி வீட்டை விட்டே விரட்டிட்டாங்கண்ணே?”, என்றான் வரதன். 

“யாரு நம்ம பூவையா?”, என்று அதிர்ந்து போனார் கேசவன். பெண்கள் கூட திகைத்து போனார்கள்.

“ஆமா அண்ணே, அவளை மட்டும் இல்லை. நம்ம வீட்டு மாப்பிள்ளையையும் இந்த நாய்ங்க தப்பா பேசிருக்காங்க”

“என்ன டா சொல்ற? ஆமா அவங்க எங்க?”, என்று கேட்டார் மணியம்மை.

“இவங்க பேசின பேச்சுக்கு அவங்க எப்படி மா இங்க இருப்பாங்க? எப்ப போனாங்கன்னே தெரியலை. மாப்பிள்ளை பூவை அழைச்சிட்டு போய்ட்டார். இந்த சனியனுங்க அவங்களை விரட்டி விட்டுருச்சு”

“வரதா என்ன நடந்துச்சுன்னு முழுசா சொல்லு டா”, என்று கேசவன் கேட்டதும் நடந்த அனைத்தையும் சொன்னான். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து தான் போனார்கள். மணிவாசகம் இளங்கோவை அடிக்கப் போக கேசவன் தான் தடுத்து விட்டார். “மாப்பிள்ளை சொன்ன மாதிரி சாக்கடையை தொடக் கூடாது டா”, என்றார். 

அதைக் கேட்டு கொதித்து போன இளங்கோ “என்ன நான் சாக்கடையா?”, என்று கோபத்துடன் கேட்டான். 

“நீ சாக்கடை இல்லாம யார் டா? நீங்க சாக்கடையை விட கேவலம்? எங்க வந்து யாரை பேசுறீங்க? ஒழுங்கு மரியாதையா வீட்டை விட்டு வெளிய போ”, என்று கத்தி விட்டார் கேசவன். 

அனைவருமே சுதாவின் குடும்பத்தை திட்டினார்கள். சுதாவுக்கு என்ன செய்ய என்று கூட தெரியவில்லை. தவறு அவர்கள் பக்கம் என்பதால் அமைதியாக இருந்தாள். கண்களில் மட்டும் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. 

அண்ணன்கள் யாருமே கோபத்தில் இருந்து மலை இறங்க வில்லை. அவர்களை பெண்களும் சமாதானம் செய்ய வில்லை. மணியம்மை கூட எந்த மகனையும் அடக்க வில்லை. அவரின் ஒரே செல்ல மகளையும் மருமகனையும் நோகடித்தவர்களுக்காக அவர் எப்படி பேசுவாராம்? 

”இவங்க யாரும் இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது. இன்னைக்கு நடந்த இந்த கல்யாணத்தை நான் மறக்க நினைக்கிறேன். இவளையும் கூட்டிட்டு போகச் சொல்லுங்க. இல்லைன்னா எல்லாரையும் கொன்னுட்டு ஜெயிலுக்கு போக கூட தயங்க மாட்டேன்”, என்று கத்தினான் வரதன். 

“இவங்க கிட்ட எல்லாம் பேசிட்டு இருக்க கூடாது டா தம்பி. வச்சு செய்யணும்”, என்ற தம்பிதுரை இளங்கோவை போட்டு புரட்டி எடுக்க சுந்தரியும் மேகலாவும் மட்டும் தடுத்தார்கள். சுதா இருந்த இடத்தை விட்டு அசைய வில்லை. அதில் மேகலாவுக்கும் தலையில் ஒரு அடியும், சுந்தரிக்கு ஒரு மிதியும் விழுந்தது. இளங்கோ அடி வாங்குவதை வரதன் வீட்டில் யாருமே தடுக்க வில்லை.

“டேய் துரை விட்டுரு டா. செத்துற போறான்”, என்று கேசவன் சொன்னதும் தான் விட்டான். சட்டை கிழிந்து முகம் வீங்கி நின்றிருந்தான் இளங்கோ. தன்னை அடித்து விட்டார்களே என்று ஆத்திரமாக வந்தது அவனுக்கு. ஆனால் தந்தையை நினைத்து அதை விட பயமாக இருந்தது. 

அதனால் “அக்கா, சுந்தரி கிளம்புங்க போகலாம். இனி இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க கூடாது”, என்றான் இளங்கோ. 

“என்ன நீங்க மட்டும் போறீங்க? உன் தங்கச்சியையும் கூட்டிட்டு கிளம்புடா”, என்று வரதன் சொல்ல அவனுக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை. தங்கையை வீட்டுக்கு அழைத்துச் சென்றால் தந்தை என்ன செய்வாரோ என்று பயந்து போனான்.

“வரதா, அவங்க செஞ்சது தப்பு தான். அதுக்கு அவங்களை மன்னிக்கச் சொல்லலை. ஆனா சுதா நம்ம வீட்டு பொண்ணு டா. அவ இங்க இருக்கட்டும்”, என்றார் மணியம்மை.

“அவளும் இங்க இருக்க கூடாது மா. அவளால தானே இந்த கேடு கெட்டவங்களை எல்லாம் பாக்க வேண்டியது இருக்கு. அவ கூட இனி நான் வாழவே மாட்டேன்”, என்று சொல்ல சுதா அதிர்ந்து போனாள்.

“கேசவா வரதன் கிட்ட எடுத்துச் சொல்லு டா. நீ சொன்னா அவன் கேப்பான். பொம்பளை பிள்ளை வாழ்க்கை டா. நம்ம குடும்பத்துக்கு அந்த சாபம் வர வேண்டாம்”

“அம்மா, அப்ப பூங்கொடி யாரு மா? அவளைக் காயப் படுத்துனவங்களை அப்படியே விடச் சொல்றீங்களா?”, என்று அன்னையிடம் கத்திய கேசவன் “இங்க பாரு மா சுதா. நடக்குறதை எல்லாம் நீ பாத்துட்டு தான் இருக்க. நல்லது கெட்டது உனக்கும் தெரியும். இனிமே உன் குடும்பத்துக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இருக்க கூடாது. அப்படி இருந்தா இங்க இரு. இல்லைன்னா இவங்க கூட கிளம்பி போய்கிட்டே இரு”, என்றார்.

அவள் அதிர்ந்து விழிக்க “இன்னும் என்ன டி இங்க இருக்க போற? இவ்வளவு அசிங்க படுத்தின பிறகு நீ இங்க வாழப் போறியா? வா டி”, என்று மேகலா அவள் கை பற்றி அழைக்க சுதா வரதனைத் தான் பார்த்தாள். அவனோ சிலை போல நின்றான். 

“நான் யாருக்குமே வேண்டாமா?”, என்று அவள் யோசிக்கும் போதே அவளை இழுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டாள் மேகலா. சுதா மீண்டும் வீட்டுக்குள் செல்ல நினைக்க அவள் கையை மேகலா விடவே இல்லை.  இளங்கோ காரை எடுக்க சுதாவை உள்ளே தள்ளி ஏற வைத்தாள் மேகலா. சுந்தரியும் ஏறிக் கொண்டாள். 

அவர்கள் சென்ற பிறகும் அனைவரும் இன்னுமே கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்க மணியம்மை மட்டும் மகளுக்காகவும் வரதனின் வாழ்க்கைக்காகவும் அழுதாள். 

“அண்ணே பூவை பாத்துட்டு வருவோமா?”, என்று கேட்டான் வரதன். 

“இந்த நேரத்துல வேண்டாம் டா. அவங்க தூங்கிருப்பாங்க”, என்றார் கேசவன். 

“இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் நம்ம தங்கச்சி எப்படிண்ணே தூங்கும்? கண்டிப்பா தூங்கிருக்க மாட்டா. மாப்பிள்ளை கிட்ட மன்னிப்பு கேக்க வேண்டியது நம்ம கடமைண்ணே”, என்றான் மணிவாசகம்.

“ஆமாண்ணே, நாம இப்ப போய் பேசித் தான் ஆகணும்”, என்றான் தம்பிதுரை. பெண்கள் அனைவருக்கும் என்ன செய்ய என்று தெரியவில்லை. இப்படி நடக்கும் என்று அவர்கள் எதிர் பார்க்க வில்லையே. ஆண்கள் நான்கு பேர் மட்டும் மணிமாறன் வீட்டுக்கு கிளம்பினார்கள். 

அதே நேரம் தங்களின் அறையில் பூங்கொடி அழுது கொண்டிருக்க மணிமாறன் அவள் மனதை மாற்ற முயற்சி செய்து தோற்றுக் கொண்டிருந்தான். அங்கே நடந்தது இவர்கள் இருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. சிறிது நேரத்துக்கு முன் அவர்கள் இருவரும் வந்த போது கூட “என்ன இந்த நேரத்துல வந்துருக்கீங்க?”, என்று கேட்டார் கதிரவன். 

“அங்க பிரைவசி இருக்காது பா அதான்”, என்று சமாளித்தான் மணிமாறன். ஆனால் இருவர் முகத்தை வைத்தே எதுவோ சரி இல்லை என்று கண்டு கொண்ட கதிரவன் “சரி போய்த் தூங்குங்க. காலைல பேசிக்கலாம்”, என்றார். அப்பா கண்டு கொண்டார் என்று எண்ணிய மணிமாறன் அவளை அழைத்துக் கொண்டு அறைக்கு வந்தான். வந்ததில் இருந்து ஒரே அழுகை தான். 

“பிளீஸ் அழாத டி. எனக்கு கஷ்டமா இருக்கு கொடி”, என்று அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

“எப்படிங்க அழாம இருக்க முடியும்? அவங்க என்னை என்ன பேசிருந்தாலும் என் அண்ணனுக்காக அதை பெருசா எடுக்காம இருந்துருப்பேன். ஆனா அவங்க பேசினது உங்களையும் சேத்து. அதை என்னால மறக்கவோ மன்னிக்கவோ முடியலைங்க”

“இப்பவும் வரதன் மச்சானுக்காக நாம மன்னிச்சு தான் ஆகணும். ஏற்கனவே நாம சொல்லாம கொள்ளாம வந்ததுக்கு அங்க என்ன நினைப்பாங்களோன்னு இருக்கு”

“இனி நினைக்க என்ன இருக்கு? என் கிட்ட கேட்டா நான் உண்மையைச் சொல்லிருவேன்”

“சுதாவுக்காக நாம பாக்கணும் டி. அவ நல்ல பொண்ணு”

“அவங்க நல்ல பொண்ணு தான். ஆனா அவங்க வீட்டாளுங்க பேசினது..”, என்று மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்தாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!