Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நான் மீட்டிடும் வீணையே

நான் மீட்டிடும் வீணையே 19 3

“ஏட்டி என்ன குரல் ஒரு மாதிரி இருக்கு? உடம்புக்கு முடியலையா?”

“ஆமா மா, என்னமோ மாதிரி இருக்கு. எது சாப்பிட்டாலும் மேல மேல வருது”



Advertisement

“பூவு நாள் தள்ளிப் போயிருக்கா கண்ணு?”

“ஆமா மா, எட்டு நாள்”, என்று கண்கள் மின்னச் சொன்னாள். அவள் கைகள் அவளுடைய அடி வயிறை தடவிப் பார்த்தது. மணிமாறனைப் போன்று ஒரு சின்ன உருவம் அவளுடைய கற்பனையில் வந்தது. தன்னவனின் உயிரை தனக்குள் சுமக்கப் போகிறோம் என்று பூரித்துப் போனாள். இதை அவனிடம் சொன்னால் அவன் என்ன செய்வான் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.

Advertisement

Advertisement

“ஆத்தா மகமாயி, என் வேண்டுதலை நிறைவேத்திட்ட. கண்ணு மாப்பிள்ளை எப்ப வருவார்?”, என்று மணியம்மை கேட்டதும் தான் நடப்புக்கு வந்தாள்.

“நைட் ஏழு மணி ஆகிரும் மா”

Advertisement

“அதுக்கப்புறம் அவரை ஆஸ்பத்திரி அழைச்சிட்டு போகச் சொல்லு”

“கொஞ்ச நாள் போகட்டும் மா”

“இல்லை இல்லை.. நீ முதல்ல காட்டிட்டு வா. அது வரைக்கும் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்”

“நீ தான் உளறுவ?”

“ஆமா நான் தான் உளறிட்டு இருக்கேன். சரி படுத்துக்கோ”, என்று சொல்லி போனை வைத்தார் மணியம்மை.

அன்று இரவு வீட்டுக்குள் வந்த மணிமாறன் கண்டது சோர்வாக படுத்திருந்த மனைவியைத் தான்.

“கொடி என்ன ஆச்சு டி?”

“உடம்புக்கு முடியலைங்க. ஹாஸ்பிட்டல் போகணும்”

“சரி வண்டில உக்காந்துக்குவியா? டேக்ஸி சொல்லவா?”

“இங்க குவாட்ரஸ்ல இருக்குற ஹாஸ்பிட்டல்க்கே போகலாம்”, என்று சொன்னதும் அவனும் அவளை அழைத்துச் சென்றான்.

போகும் போதே “என்ன டி செய்யுது? ரொம்ப சோர்வா தெரியுற? நேத்து நைட் உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேனா?”, என்று பரிதவிப்புடன் கேட்டான்.

அவன் சொன்ன கஷ்டம் எது என்று புரிய அவள் உதடு கடித்துக் கொண்டாள். அவன் முகத்தில் உண்மையான கவலை தெரியவும் “ஆமா ரொம்ப கஷ்டப் படுத்திட்டீங்க? ஆனா நேத்து இல்லை”, என்றாள்.

“வேற என்னைக்கு டி?”

“என்னைக்கோ யாருக்கு தெரியும்?”

“என்ன டி சொல்ற? எனக்கு ஒண்ணுமே புரியலை”

“நீங்க கஷ்டப் படுத்தினதுல ஒரு வேளை குட்டி போலீஸ் வரப் போறானோ என்னவோ?”, என்று அவள் கண்கள் மின்னச் சொல்ல ஆனந்தமாக அதிர்ந்து போனான் மணிமாறன். அவளை கொஞ்ச எழுந்த ஆவலை சுற்றி இருந்த ஆட்களைப் பார்த்து அடக்கினான்.

“இதை இங்க வச்சா டி சொல்றது? வீட்லயே சொல்றதுக்கு என்ன? எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? இப்ப ஒரு முத்தம் கூட கொடுக்க முடியலை. வீட்டுக்கு போயிட்டு வருவோமா?”

“ஏற்கனவே கொடுத்ததுல இந்த நிலைமை. பேசாம வாங்க. அப்புறம் இன்னும் முடிவா தெரியலைங்க. அதுக்குள்ள அவசரப் பட வேண்டாம். அப்புறம் ரொம்ப கஷ்டமா இருக்கும்”

“இல்லை, முடிவா இது குழந்தை தான்”, என்று சொன்னவன் அவளைக் கைத் தாங்களாக அழைத்துச் சென்றான்.

அவர்கள் ஆசைப் பட்ட படி அது குழந்தை தான் என்றும் கொஞ்ச நாள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் டாக்டர் சொல்ல சந்தோஷமாக வீட்டுக்கு வந்தார்கள்.

வீட்டுக்கு வந்ததும் அவன் செய்த முதல் வேலை அவளது சேலையை விலக்கி அவளுடைய மணி வயிற்றுக்கு முத்தம் கொடுத்தது தான். அதற்கு பின்னரும் அவளை வெகு நேரம் கொஞ்சி விட்டே அவளை வீட்டுக்கு பேச விட்டான்.

முதலில் மணியம்மைக்கு தான் அழைத்தாள். “சொல்லு கண்ணு டாக்டர் கிட்ட போனியா?”, என்று கேட்டார் மணியம்மை.

“ஆமா மா, வயித்துல பாப்பா இருக்குனு சொன்னாங்க”, என்று வெட்கத்துடன் சொல்ல “ரொம்ப சந்தோஷம் கண்ணு. சரி நீ தேவகி கிட்ட சொல்லு. அவளுக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப் படுவா”, என்றார்.

“அண்ணன்கள் கிட்ட….”

“உன் அண்ணன் அண்ணிகளுக்கு நான் சொல்லிக்கிறேன். நீ தேவகி கிட்ட பேசு”, என்று சொல்லி போனை வைத்த மணியம்மை முகம் மலர்ந்தே இருந்தது.

அதன் பின் கதிரவனுக்கு அழைத்தாள். மணிமாறனைப் பேசச் சொல்ல அவன் நீயே சொல் என்று சொல்லி விட்டு அவளை தன் தோளில் சாய்த்திருந்தான்.

“மருமகளே எப்படி இருக்க மா?”, என்று கேட்டார் கதிரவன்.

“நல்லா இருக்கேன் மாமா. அப்புறம் மாமா….”

“என்ன டா?”

“நீங்களும் அம்மாவும் இங்க வறீங்களா?”

“வந்துட்டா போச்சு. அவன் வந்துட்டானா? அவன் கிட்ட சொல்லி டிக்கட் போடச் சொல்லு”

“சொல்றேன் மாமா”

“அப்படியே ரிட்டர்ன் டிக்கட்டும் போடச் சொல்லு மா”

“அது வேண்டாம் மாமா. நீங்க திரும்பி போறது எப்பன்னு தெரியலை. ஒரு வேளை உங்க பேரன் கூட திரும்பிப் போவீங்களோ என்னவோ?”

“பூங்கொடி…”

“ஆமா மாமா, இப்ப தான் டாக்டர் கிட்ட போயிட்டு வந்தோம்”

“ரொம்ப சந்தோஷம் மா. இதோ தேவகி கிட்ட கொடுக்குறேன். நீயே சொல்லு”

“சரி மாமா”, என்று அவள் சொன்னதும் “குட்டிமா எப்படி டா இருக்க?”, என்று கேட்டார் தேவகி.

“உங்க குட்டிமாக்கே ஒரு குட்டி வரப் போகுது மா. மாமா கூட இங்க வாங்க. என்னால தனியா எதுவும் செய்ய முடியலை”

“நிஜமாவா கண்ணு? ரொம்ப சந்தோஷம். கண்டிப்பா வரேன். அதை விட எனக்கு வேற என்ன வேலை இருக்கு? நாங்க வர வரைக்கும் கவனமா இரு”, என்றவர் மேலும் சில வார்த்தைகள் பேசி விட்டே வைத்தார்.

தேவகியும் கதிரவனும் அங்கே செல்கிறார்கள் என்று தெரிந்த மணியம்மையும் மகளை நினைத்து நிம்மதி கொண்டார். வீட்டில் அவர் விஷயத்தை சொன்னதும் ஆள் ஆளுக்கு மணிமாறன் மற்றும் பூங்கொடிக்கு அழைத்து பேசினார்கள்.

அடுத்த நான்கு நாட்களில் கதிரவனும் தேவகியும் இங்கு வந்து விட்டார்கள். அதன் பின் தேவகி அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். அவளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பதை கதிரவன் பார்த்துக் கொண்டார்.

மேலும் ஒரு மாதம் கடந்த நிலையில் அந்த வெப்சைட்டில் இருந்த துணிகள் ஒவ்வொன்றாக சேல்ஸ் ஆனது. அதை பூங்கொடிக்கு தெரியாமல் ஆர்டர் செய்தவர்களுக்கு அனுப்பி வைத்தான்.

பத்தில் எட்டு டிரஸ் சேல்ஸ் ஆனதும் அந்த பணத்தை அவளிடம் கொடுத்தான். அவள் காரணம் கேட்டதுக்கு அவன் நடந்ததைச் சொன்னான். அவள் முகம் மலர்ந்தது.

அவளை மேலும் அதை செய்ய சொன்னான். அவளும் சரி என்றாள். தேவகி அவளுக்கு துணையாக இருந்தார்.

அவளுடைய தொழில் வளர்ந்தது போல அவளது குழந்தையும் அவள் வயிற்றில் வளர்ந்தது. அந்த வெப்சைட் பாப்புலர் ஆனது. அதிக பணமும் கிடைத்தது. அவளுடைய கனவு நிறைவேறியதில் சந்தோஷமாக இருந்தாள்.

நாட்கள் செல்ல செல்ல அனைவரும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள். கேசவன் அனைவரையும் அழைத்து கொண்டு தங்கையைக் காண வந்தார்.

மணிமாறனுடன் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தாள் பூங்கொடி. நாளுக்கு நாள் அவன் மீதான காதல் அவளுக்கு அதிகரித்துக் கொண்டு தான் இருந்தது. அவளுக்கு அனைத்துமாக இருந்தான் அவன்.

ஒன்பதாம் மாதம் அவளுக்கு வளைகாப்பு வைத்து அழைத்துச் சென்றார்கள். மணிமாறன் மற்றும் பூங்கொடி இருவரும் பிரிவை நினைத்து தவித்துப் போனார்கள். அவளை அழைத்துக் கொண்டு சென்றதும் அடுத்த நாளே தமிழ்நாட்டுக்கு டிரான்ஸ்பர் கேட்டான். உடனே கிடைக்காது என்று தெரியும் தான். இருந்தாலும் போட்டு வைத்தான்.

அவனுக்கு அவளுடன் இருக்க வேண்டும் போல இருந்தது. அவளுக்கு குழந்தை பிறக்க இன்னும் ஐந்து நாட்கள் இருக்கும் போது லீவ் போட்டு விட்டு வந்து விட்டான். லீவ் நாட்களில் மனைவி வீட்டிலே தங்கிக் கொண்டான். அதற்கு கதிரவன் மற்றும் தேவகி இருவரும் எதுவும் சொல்ல வில்லை.

குழந்தை பிறக்கும் போது அவன் தன்னுடன் இருப்பான் என்ற நிம்மதியில் இருந்தாள் பூங்கொடி. டாக்டர்கள் சொன்ன நேரத்துக்கு அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மொத்த குடும்பமே பூரித்தது.

“என் மகனை ஏமாத்திட்டீங்களே மச்சான்”, என்றான் வரதன். “கவலைப்படாதீங்க, அடுத்த தடவை பாத்துக்கலாம்”, என்று மணிமாறன் சொல்ல பூங்கொடி முகம் சிவந்தது.

குழந்தைக்கு இளமாறன் என்ற பெயர் வைத்தார்கள். அவனுக்கு பெயர் சூட்டும் விழாவில் நான்கு தாய்மாமன்களும் சீர் வரிசையை குவித்து விட்டார்கள். இளமாறனுக்கு ஆறு மாதம் இருக்கும் போது மணிமாறனுக்கு டிரான்ஸ்பர் கிடைத்தது. அவனுக்கு பெரிய போஸ்டிங் கிடைக்க அனைவருக்குமே சந்தோசமே. அவனுக்கோ மனைவி மகனுடன் இருப்பதே சந்தோஷமாக இருந்தது.

…….முற்றும்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!