Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 2 1

அத்தியாயம் 2

இதழோரம் புன்னகையும்

இமையோரம் கனவும் தோன்றுவது

காதலில் மட்டுமே!!!



Advertisement

கடையில் புவியரசன் மற்ற வேலைகளைப் பார்க்க இங்கே சுஜி மதிய சமையலை ஆரம்பித்திருந்தாள்.

Advertisement

அன்று மாலை ஆறு மணி ஆனதும் விளக்கேற்றும் வேளை என்பதால் சாமிக்கு பூ கட்டி போட்டு விட்டு மகளைத் தேடினாள் சுஜிதா. அவள் பாரியின் மடியில் அமர்ந்து டி‌வி பார்த்துக் கொண்டிருக்க “பாப்பு அம்மா சாமி கும்பிடப் போறேன். எழுந்து வா”, என்று அழைத்தாள்.

Advertisement

“தாத்தா நா சாமி கும்பிட்டு வரேன்”, என்று சொல்லி பவித்ரா அவர் மடியில் இருந்து இறங்க “சரி டா தங்கம், போயிட்டு வாங்க”, என்றார் பாரி.

Advertisement

அம்மாவுடன் சாமி அறைக்குச் சென்றவள் அம்மாவை போலவே சம்மணம் போட்டு அமர்ந்து கையை கூப்ப சிறு சிரிப்புடன் மகளைப் பார்த்தாள் சுஜி. சின்னஞ்சிறிய கைகள் கூப்பி இருக்க கண்களை மூடி அமர்ந்திருக்கும் மகளின் தோரணை அப்படி ஒரு அழகிய கவிதையாக இருந்தது.

பவித்ராவுக்கு மூன்று வயது தான் என்றாலும் கொஞ்சம் அறிவு முதிர்ச்சி அவளுக்கு அதிகமாக தான் இருந்தது. “யார் பொண்ணு? அவர் அறிவு இவளுக்கு வரத் தானே செய்யும்?”, என்று பெருமையாகவே எண்ணிக் கொண்டாள். கணவனைப் பற்றிய பெருமையும் பூரிப்பும் அவள் மனதில் வந்தது.

“பூஜை செய்யலாமா பாப்பு?”, என்று மகளைக் கேட்க “சரி மா. நா மணி அடிக்கிறேன்”, என்று சொல்லி மணி அடித்தாள் பவித்ரா. இருவரும் சாமி கும்பிட ஆரம்பித்தார்கள்.

அன்று கடையில் வேலை அதிகம் என்பதால் சரியான தலை வலி புவிக்கு. “மாமா டீ குடிக்க போகலாமா?”, என்று பரணியிடம் கேட்டான்.

“நீ போயிட்டு வா மாப்பிள்ளை. எனக்கு வேண்டாம். கொஞ்சம் வேலை இருக்கு”, என்று மறுத்தான் பரணி.

“சரி நீ வேலையைப் பாரு, நான் உனக்கு எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான் புவி. கடையில் இருந்து வீடு அருகில் தான். நடந்து சென்றால் பத்து நிமிடம் தான் என்றாலும் புவியும் பரணியும் தங்களின் வண்டியில் தான் செல்வார்கள்.

வீட்டுக்கு வந்த புவியின் காதில் மணி சத்தமும் மனைவி மற்றும் மகளின் “கந்தா போற்றி, கடம்பா போற்றி, முருகா போற்றி, வேலவா போற்றி”, என்ற சத்தமும் காதில் விழுந்தது.

அதற்கு பின் ஒரு சுலோகத்தை சுஜி மகளுக்கு சொல்லிக் கொடுக்க அதை அப்படியே தன்னுடைய மழலைக் குரலில் திருப்பி பாடினாள் பவித்ரா.

அவர்கள் குரலைக் கேட்டு அசையாமல் வாயில் படியிலே நின்று விட்டான் புவி. “என்ன டா அப்படியே நின்னுட்ட?”, என்று கேட்டாள் மல்லிகா.

“ஒண்ணும் இல்லை மா, டீ குடிக்க வந்தேன்”, என்று சொன்ன புவி தாய் தந்தை அருகில் சென்று அமர்ந்தான்.

“நீ டீ குடிக்க வர நேரம் தான் இவ உள்ள போய் உக்காந்துக்குவா. பெரிய இடத்துல பொண்ணு பாத்திருந்தா கணவனை அறிஞ்சு நடப்பா. இங்க அப்படியா? யார் என் பேச்சைக் கேட்டா?”, என்று மல்லிகா புலம்ப “ஏன் அந்த டீயை நீயே உன் மகனுக்கு கொடுக்க வேண்டியது தானே? அந்த பிள்ளை தான் வரணுமா? இவன் வருவான் வருவான்னு சுஜி பாத்துட்டு தான் இருந்தா. இவன் வர நேரம் தவறினதுனால தான் சாமி கும்பிட போச்சு. இன்னைக்கு ஒரு நாள் நீ போட்டுக் கொடுக்க வேண்டியது தானே?”, என்று கேட்டார் பாரி. அதற்கு மல்லிகா ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஆரம்பித்தது.

தாய் தந்தை வாக்குவாதம் எல்லாம் புவியின் காதில் விழவே இல்லை. மகள் மற்றும் மனைவியின் குரல் மட்டுமே கேட்டது. அதில் கட்டுன்று இருந்தான். இவர்கள் சந்தைக் கடை போல சத்தம் போட்டுக் கொண்டிருந்தாலும் மனைவி மற்றும் மகளின் குரல் அவன் மனதுக்கு அமைதியைக் கொடுத்தது.

பூஜை முடித்த சுஜி தன் நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு மகளுக்கும் பூசி விட்டு வெளியே வந்தாள்.

ஹாலில் பாரிக்கும் மல்லிகாவுக்கும் நடக்கும் வாக்குவாதத்தைக் கவனிக்காமல் சோபாவில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடி இருந்த புவியின் தோற்றம் அவளைப் பாதித்தது.

“பாப்பு, அப்பாவுக்கு விபூதி எடுத்து பூசி விடு”, என்று மகளிடம் சொன்ன சுஜி டீ போடச் சென்றாள். பவித்ரா விபூதி எடுத்து வந்து தந்தைக்கு பூச மகளின் தொடுகையில் கண் விழித்தவன் அவளை வாரி அனைத்துக் கொண்டான்.

மகள் ஏதோ சொல்ல அதற்கு பதில் சொன்ன புவியைக் கண்ட பாரிக்கு “இதே பேச்சை சுஜியிடமும் இவன் பேசக் கூடாதா?”, என்று எண்ணிக் கொண்டார்.

டீ போட்டுக் கொண்டிருந்த சுஜிக்கு கணவனின் தோற்றமே மனக் கண்ணில் வந்தது. அவனுக்கு தலை வலி போல என்று யூகித்து அவசர அவசரமாக இஞ்சி மற்றும் ஏலக்காய் தட்டி டீ போட்டாள்.

அதை ஒரு டம்ளரில் ஊற்றி மற்றொரு டம்ப்ளரால் ஆற்றிக் கொண்டே ஹாலுக்கு வர அந்த டீயின் வாசனை அவன் மூக்கைத் துளைத்ததால் கண்களைத் திருப்பிப் பார்த்தான்.

அவன் முன் இருந்த டீபாயில் டீயை வைத்த சுஜி “அம்மு, தாத்தா மடியில உக்காரு. அப்பா டீ குடிக்கட்டும். நீ கொட்டி விட்டுருவ”, என்று மகளுக்கு உத்தரவிட அதுவும் சமத்தாக “சரி மா”, என்ற படி பாரி மடியில் ஏறி அமர்ந்தது.

புவி அந்த டீயை ரசித்துக் குடித்தான். அப்போது அவன் முன்பு போண்டாவை வைக்க அமைதியாக அந்த போண்டாவை சாப்பிட்டுக் கொண்டே டீ குடித்தவன் அப்போதும் பெற்றவர்கள் வாக்குவாதத்தில் இருக்க அதை கண்டு கொள்ளாமலே இருந்தான்.

பெரியவர்களுக்கு திகைப்பு தான். ஒரு பேச்சுக்கு கூட அவன் அவர்கள் பேச்சை என்னவென்று கேட்க வில்லை. ஏன் இப்படி வழக்கடிக்கிறீங்க என்று கோபப் பட வில்லை. அமைதியாக இருங்க என்று எரிந்து விழவும் இல்லை.

அலையில்லாத நதி போன்று முகத்தை வைத்து கொண்டு அமர்ந்திருந்த மகனைப் பார்த்தார் பாரி. அவனை பேச வைக்க “பரணி வரலையாப்பா?”, என்று கேட்டார்.

“இல்லைப்பா, நான் தான் மாமாவுக்கு எடுத்துட்டு போகணும்”, என்று பாரியிடம் புவி சொல்ல உடனேயே சமையல் அறைக்குள் சென்றாள் சுஜி. அவள் செல்வது பரணிக்கு டீயும் பண்டமும் எடுத்து வைக்க என்று அவனுக்கு புரிந்தது. ஆனால் பெரியவர்களுக்கு புரியவில்லை.

அவன் டீயைக் குடித்து முடிக்கவும் அவன் முன் சிறிய பையை வைத்தாள் சுஜி. அது பரணிக்கு தான் என்று அனைவருக்கும் புரிந்தது. அதை எடுத்துக் கொண்டு புவி அங்கிருந்து சென்று விட்டான்.

சுஜியும் உள்ளே சென்று விட “என்னங்க இவன் இப்படி இருக்கான்?”, என்று கேட்டாள் மல்லிகா.

“எப்படி?”, என்று சற்று எரிச்சலுடன் கேட்டார்.

“சுத்தமா ஒரு வார்த்தை பேசுறது இல்லை. அவன் பேசுறது பவித்ரா கிட்டயும் பரணி கிட்டயும் மட்டும் தான். நாம பேசிட்டு இருக்குறதைக் கூட அவன் கவனிக்கலையே? நாம அவனுக்கு வேற பொண்ணை பாத்துருக்கணுமோ? அவ வந்த பிறகு தான் ரொம்ப மாறிட்டான்”

“வாயை மூடு, சுஜியா இருக்க போய் தான் வீட்ல எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கு. முதல்ல உன் மகனுக்கு சுஜியை பிடிக்கலைன்னு ஒரு எண்ணம் உனக்குள்ள இருக்கு பாரு, அதை மாத்து. அவனுக்கு பிடிக்காமலா பவித்ரா வந்து பிறந்திருக்கா? இப்ப கூட பாரு அவன் ஒரு வார்த்தை கூட சுஜி கிட்ட பேசலை. ஆனா அவ அவன் தலை வலியை புரிஞ்சிக்கிட்டு அவனுக்கு டீ கொடுக்குறா. அவன் சொல்லாமலே பரணிக்கும் கொடுத்து விடுறா. அந்த புரிதல் அவங்க வாழ்க்கையை பாத்துக்கும். நீ இடையில நாருதர் வேலை பண்ணாம இருந்தா போதும்”, என்று சொன்ன பாரி “வா குட்டி மா, நாம தோட்டத்துல விளையாடலாம். உன் ஆச்சி தொல்லை தாங்க முடியலை”, என்று சொல்லி பேத்தியை தூக்கி கொண்டு சென்றார்.

மல்லிகா மூத்த மகனைப் பற்றி யோசனையில் இருக்க “அம்மா எனக்கு தலை வலிக்குது. ஒரு டீ வேணும்”, என்ற படி வந்து அமர்ந்தான் அவளின் இரண்டாவது மகன் மகேஷ். மகேஷ் ஐ. டி. ஐ படித்து விட்டு தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து ஒரு எலெக்ட்ரிக்கல் கடையை வைத்திருக்கிறான்.

மூத்த மகனை சுஜி கவனித்துக் கொள்வதைப் பற்றி யோசனையில் இருந்த மல்லிகா மகேஷ் டீ கேட்கவும் “ஏன் அதை உன் பொண்டாட்டி கிட்ட கேக்க வேண்டியது தானே?”, என்று படக்கென்று கேட்டு விட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!