Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 2 2

எப்போதுமே மல்லிகா மகேஷின் மனைவி ரேணுகாவுக்கு சப்போர்ட் செய்து தான் பேசுவாள். ஏனென்றால் ரேணுகா மல்லிகாவின் சொந்த அண்ணன் மகள். அந்த பாசம் மல்லிகாவை கட்டிப் போட்டிருந்தது. ரேணுகாவை ஒரு வேலையும் செய்ய விட மாட்டாள். ஆனால் இன்று மூத்த மகனின் மனம் கோணமல் மூத்த மருமகள் நடப்பதைப் பார்த்ததும் “ரேணுகா மட்டும் எப்படி என் ரெண்டாவது மகனை கவனிக்காம இருக்கலாம்”, என்ற கோபத்தில் சுள்ளென்று கேட்டு விட்டாள்.

மல்லிகா அப்படிக் கேட்டதும் திகைத்துப் போனவன் “அமைதியா இருங்க மா. ரேணு காதுல நீங்க சொல்றது விழுந்துறப் போகுது. அப்புறம் ஏதாவது பஞ்சாயத்தைக் கூட்டிற போறா? அவ சொன்னா என்ன ஏதுன்னு விசாரிக்காம உங்க அண்ணனும் அண்ணியும் வந்து எனக்கு நாள் கணக்குல அட்வைஸ் பண்ணி சாகடிப்பாங்க”, என்று எரிச்சலுடன் சொன்னான் மகேஷ்.



Advertisement

ரேணுகா அப்படி தான் இருந்தாள். இங்கு என்ன நடந்தாலும் அவளுடைய பிறந்த வீட்டில் ஒப்பித்து விடுவாள். பிறக்கும் போதே அவளுக்கு சேவை செய்ய நான்கு வேலைக்கார்கள் இருந்தார்கள் என்பதால் திமிர் அவளுடைய ரத்ததிலே ஊறி இருந்தது.

ஒரு முறை “என்னோட துணியை துவைச்சு போடு”, என்று மகேஷ் சொன்ன ஒரு வார்த்தையில் அவள் செய்த அலும்புகள் பல.

Advertisement

Advertisement

மகேஷின் அத்தையும், மாமாவும், மச்சினனும் வந்து கொடுத்த சொற்பொழிவில் “என் துணியை நானே துவைச்சிக்கிறேன்”, என்று சொல்லி விட்டான் மகேஷ்.

ஆனால் சுஜி திருமணம் முடிந்து வந்த பிறகு “நீ ஏன் துவைக்கணும்? ஒண்ணுக்கும் வக்கில்லாத வீட்ல இருந்து வந்த சுஜி துவைக்கட்டும்”, என்று சொன்ன மல்லிகா அவர்களின் துணியையும் சுஜியையே துவைக்க வைத்தாள். அதைப் பார்த்து கூட புவி ஒன்றும் சொல்ல வில்லை.

Advertisement

மகேஷும் மல்லிகாவும் பழைய நினைவில் மூழ்கி இருக்க அவன் முன்பு ஆவி பறக்க டீயையும் சூடான போண்டாக்களையும் வைத்து விட்டுச் சென்றாள் சுஜி.

அங்கிருந்து செல்லும் சுஜியைப் பார்த்த இருவருக்கும் குற்ற உணர்வு வந்தது. ஆனால் அவளை அழைத்து பேச அவர்களுக்கு மனதில்லை.

ஏழை என்றால் கிள்ளுக்கீரை என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஊறிப் போனதால் கூட இருக்கலாம். அந்த டீயை எடுத்து பருகிய மகேஷ்க்கு தலை வலி சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனது. தன்னுடைய அறைக்குச் சென்றான். விளக்கு வைத்த பிறகும் கட்டிலில் படுத்திருந்த ரேணுகா ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள். தலை கூட சீவாமல் கொண்டையைப் போட்டுக் கொண்டு அவள் இருந்த கோலம் சற்று எரிச்சலாக இருந்தது.

தளைய தளைய சேலை கட்டி, நீண்ட தலை முடியை பின்னலாக போட்டு தோட்டத்தில் பூத்திருந்த ஜாதிமல்லியை தலையில் சூடி நெற்றியில் திருநீறு, வகிட்டில் குங்குமம் என்று தெய்வீக அழகுடன் நின்ற சுஜியின் முகம் அவன் நினைவில் வந்தது.

“அண்ணன் கொடுத்து வச்சவன், அவனுக்கு அப்படி ஒரு பொண்டாட்டி. எனக்கும் இருக்கே?”, என்று எண்ணி அவன் அவளைப் பார்க்க அவளோ “வந்துட்டீங்களா?”, என்று கேட்டு விட்டு மீண்டும் புத்தகத்தைப் படித்தாள். இங்கேயே இருந்தால் போன தலைவலி மீண்டும் வந்து விடும் என்று எண்ணி மீண்டும் வெளியே சென்று விடலாம் என்று எண்ணிய மகேஷ் வீட்டை விட்டு வெளியே வந்தான்.

பவித்ராவை இடுப்பில் வைத்துக் கொண்டு நிலாவைக் காட்டி சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள் சுஜி. ஏனோ அந்த காட்சியைப் பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை இல்லை என்பது மகேஷ்க்கு வருத்தம் தான். அதனால் அவன் டாக்டரிடம் பரிசோதிக்கச் செல்லலாம் என்று எண்ணி ரேணுகாவை அழைக்க அவளோ பிறந்த வீட்டில் சொல்லி விட்டாள்.

அவனும் சேர்ந்து சோதனை செய்ய தான் அவன் நினைத்தான். ஆனால் என்னமோ குழந்தை இல்லாததற்கு ரேணுகா தான் காரணம் என்று அவன் சொல்லி விட்டது போல அவனது மாமா வந்து சத்தம் போட்டு விட்டுச் செல்ல அதன் பிறகு குழந்தை பற்றிய பேச்சையே அவன் எடுக்க வில்லை.

பவித்ராவை அவன் ஏக்கமாக பார்க்க “மகேஷ் அப்பா”, என்று அழைத்தாள் பவித்ரா.

தன் முகத்தை சரி செய்து கொண்டவன் “சாப்பிடுறியா குட்டி? சித்தப்பா வந்து தூக்குறேன், சரியா?”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

“சீக்கிரம் வீட்டுக்கு வந்துருங்க தம்பி. ஏற்கனவே நேரம் ஆகிருச்சு”, என்று சுஜி எங்கோ பார்த்துக் கொண்டு சொல்ல அவனும் அவள் முகம் பார்க்காமலே தலையசைத்து விட்டுச் சென்றான்.

பவித்ராவுக்கு உணவை ஊட்டி முடித்த சுஜி அவளை சிறிது நேரம் விளையாட விட்டு வீட்டுக்குள் தூக்கிச் சென்று பாரியிடம் கொடுத்தாள். பவித்ரா தாத்தாவுடன் விளையாடிக் கொண்டிருக்க தனியாளாக அனைவருக்கும் இரவு சமையலை முடித்தாள் சுஜி.

சப்பாத்தியும் குருமாவும் செய்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு அவள் கிடந்த பாத்திரங்களை கழுவ ஒவ்வொருவராக வந்து சாப்பிட்டார்கள்.

ஒன்பது மணி போல வீட்டுக்கு வந்த மகேஷ் அறையில் படுத்திருந்த ரேணுகாவிடம் “வா ரேணு சாப்பிடலாம். பசிக்குது”, என்று அழைத்தான்.

“நான் அப்பவே சாப்பிட்டேன். நீங்க போய் சாப்பிடுங்க”, என்று சொல்லி விட்டு அவள் கதையில் மூழ்க அவளை பரிமாறச் சொல்லி அவளுடைய அப்பாவிடம் திட்டு வாங்குவதற்கு தானே எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று எண்ணி வெளியே வந்தான். ஹாலில் ஒருவருமே இல்லை.

பாரியும் மல்லிகாவும் அவர்களின் அறையில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருப்பது கேட்டது. “இந்த அம்மாவாது எனக்கு வந்து பரிமாறக் கூடாதா?”, என்ற ஆதங்கத்துடன் சாப்பிட அமர்ந்தான்.

சுஜி சமையல் அறையில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். சுஜிக்கு அவனுக்கு பரிமாற ஆசை தான். ஆனால் தான் சென்றால் அது சரியாக இருக்காது என்றும் அவன் சரியாக சாப்பிட மாட்டான் என்பதாலும் அவள் அங்கே செல்ல வில்லை.

அவனே சப்பாத்தி மற்றும் குருமாவை எடுத்து வைத்து சாப்பிட்டான். சாப்பாடு ருசியாக இருந்தாலும் அவன் மனதுக்குள் இருந்த தனிமையால் அதிகம் உண்ணாமல் எழுந்து கொண்டான்.

சுஜி கவனித்துக் கொண்டு தாள் இருந்தாள். “இந்த ரேணுகா வந்து அவனுக்கு பரிமாறக் கூடாதா?”, என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள்.

அப்போது “சுஜி”, என்று அழைத்தார் பாரி.

“இதோ வரேன் மாமா. பாப்பா தூங்கிட்டாளா?”

“ஆமா மா. இவளை உள்ள படுக்க வச்சிரு”, என்று சொல்லி பேத்தியைக் கொடுத்தார்.

குழந்தையை வாங்கிக் கொண்டு அறைக்குச் செல்லும் மருமகளைப் பார்த்து பெருமூச்சுடன் தனது அறைக்குச் சென்றார்.

பத்து மணிக்கு கடையில் இருந்து வந்தான் பரணி. அவனுக்கு சுஜி தான் பரிமாறினாள். அவன் சாப்பிட்டு விட்டு அவனுடைய அறைக்குச் சென்று விட்டான். அவன் காலையில் சீக்கிரம் எழுந்து கடை திறக்கச் செல்வான் என்பதால் இரவும் சீக்கிரமாக வீட்டுக்கு வந்து விடுவான்.

புவி பதினொரு மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டுக்கு வரும் போது சுஜியைத் தவிர மற்ற அனைவரும் உறங்கி இருந்தார்கள். அவன் புல்லட் சத்தம் கேட்டதும் கதவைத் திறந்தவள் அவனுக்கு உணவு எடுத்து வைக்கச் சென்றாள்.

சப்பாத்தி லேசாக ஆறிப் போயிருந்தது. உழைத்து களைத்து வருபவனுக்கு ஆறியதைக் கொடுக்கவா என்று எண்ணி குழம்பை சூடு செய்தாள்.

அறைக்குள் சென்ற புவி மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு குளிக்கச் சென்றான். அவன் வரும் போது அவனுக்கு மெதுவான சப்பாத்தியையும் சூடான குருமாவையும் பரிமாற அமைதியாக உண்டான்.

அவன் உண்டு முடித்ததும் அவள் எல்லாம் எடுத்து வைக்க அவன் சிறிது நேரம் டி‌வி பார்த்தான். அவள் எல்லாம் ஒதுங்க வைத்து விட்டு மீதி இருந்த இரண்டு சப்பாத்தியை உண்டு விட்டு அறைக்குச் சென்றதும் அவனும் டி‌வியை அனைத்து விட்டு அறைக்குச் சென்றான்.

குழந்தைக்கு அந்த பக்கம் அவள் படுத்திருக்க அவனும் குழந்தைக்கு மறுபக்கம் சென்று படுத்து விட்டான். சுஜி அவன் வருவதைப் பார்த்த படி விழித்து தான் இருந்தாள். புவி பவித்ராவின் நெற்றியில் முத்தம் பதிக்க அவன் தொடுகையில் கண் விழித்த அந்த குட்டியும் அப்பா என்ற படி அவன் மேல் கையையும் காலையும் தூக்கிப் போட்டது.

அந்த குட்டிக் கால்களை அவன் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்க இந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சுஜிக்கு மகளிடம் பேசுவது போல தன்னிடம் பேச மாட்டானா என்று உள்ளம் ஏங்க ஆரம்பித்தது.

“ஏங்கி ஏங்கி சாகாத டி”, என்று தனக்கு தானே திட்டிக் கொண்டாள். அடுத்த நாள் அவனுக்கு கடை அடைக்க வேண்டிய நாள். வாரத்தில் ஒரு நாள் அவர்கள் கடையை அடைத்து விடுவார்கள். அதனால் சீக்கிரம் எழ வேண்டாம் என்பதால் அவன் தூங்காமல் விழித்திருக்க அவளுக்குமே அன்று அவ்வளவு எளிதாக உறக்கம் வரவில்லை. மனதில் எழுந்த ஏக்கம் அவளை தூங்க விடவில்லை. இருவருக்குமே திருமணத்திற்கு முன்பு நடந்த பழைய நினைவுகள் அணிவகுத்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!