Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 5 2

“ஏன் டி, இப்ப என்ன? நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கணும் அதானே? அதுக்கு எதுக்கு என் பிள்ளை பாசத்தை சோதிக்கிற? எனக்கு எல்லா பிள்ளைகளும் ஒண்ணு தான். மகேஷ்க்கு மாதிரியே பணக்கார இடம் புவிக்கும் அமையணும்னு நினைச்சேன். இது தப்பா?”, என்று கேட்டாள் மல்லிகா.

“அப்படின்னா இத்தனை நாள்ல பணக்கார பொண்ணா பாத்துருக்க வேண்டியது தானே மா?”



Advertisement

“நாங்க பாக்காமலா இருந்தோம்? சரியான பொண்ணு அமையலை டி. நீ வேற பொண்ணு பாரேன் வெண்ணிலா. நாம கொஞ்சம் வெயிட் பண்ணலாம்”, என்று மல்லிகா சொன்னதும் “பாதீங்களாப்பா, இவங்களுக்கு அவன் மேல அக்கறையே இல்லை. அதான் இப்படி பேசுறாங்க”, என்றாள் வெண்ணிலா.

“சரி சரி நான் சம்மதிக்கிறேன். அந்த பொண்ணையே பாருங்க”, என்று வேண்டா வெறுப்பாக சொன்னாள் மல்லிகா.

Advertisement

Advertisement

“அப்பா, இது சுஜியோட அப்பா நம்பர். இந்த நம்பருக்கு பேசுங்க. பொண்ணு பாக்க வரதா சொல்லுங்க”, என்று வெண்ணிலா நம்பர் கொடுத்ததும் “சரி மா, கண்டிப்பா பேசுறேன். ஆனா புவி வரட்டும். அவன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்குறேன்”, என்று சொன்னார் பாரி. ஆனால் “அண்ணன் வந்தா என்ன சொல்வானோ?”, என்று பயமாக இருந்தது வெண்ணிலாவுக்கு.

புவியின் வரவுக்காக அனைவரும் காத்திருக்க அவனும் பரணியும் வந்தார்கள். இருவரும் அமர்ந்ததும் “கல்யாணம் விஷயம் பேசணும் பா”, என்றார் பாரி.

Advertisement

அதைக் கேட்டு பரணி எழுந்து கொள்ள “உக்காரு டா, உடனே ஓடுவான். இப்ப கல்யாணம் பத்தி பேசுறது புவிக்கு தான், உனக்கு இல்லை”, என்றார் பாரி.

“சிக்கிட்டியா?”, என்பது போல பரணி அவனைப் பார்க்க “அப்பா அதெல்லாம் எதுக்கு? ஒண்ணும் வேண்டாம்”, என்றான் புவி. மகேஷும் ரேணுகாவும் கூட அங்கே தான் இருந்தார்கள்.

திருமணம் செய்யும் போது மகேஷ்க்கு இல்லாத குற்ற உணர்வு இப்போதெல்லாம் அதிகம் இருக்கிறது. அண்ணனுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டோமே என்ற வருத்தம் அவனுக்கு இருப்பதால் எப்படியாவது புவி இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வேண்டுமே என்று எண்ணி அண்ணனைப் பார்த்தான்.

“மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறானே?”, என்று வெண்ணிலா எண்ணிக் கொண்டிருக்க “நான் உனக்கு பொண்ணு பாத்துட்டேன் புவி. பொண்ணு வேற யாரும் இல்லை. நம்ம வெண்ணிலா பிரண்டு தான்”, என்றார் பாரி.

“இது உன் வேலையா?”, என்று கேட்ட புவி தங்கையை முறைத்தான்.

“இப்ப முடிவா என்ன தான் டா சொல்ற?”, என்று கேட்டார் பாரி.

“அம்மா, நீயாவது அப்பா கிட்ட சொல்லேன்”, என்று புவி மல்லிகாவிடம் கேட்டான்.

“எனக்கு அந்த பொண்ணைப் பிடிக்கல தான். ஆனா நீ கல்யாணம் பண்ணி தான் ஆகணும்”, என்று அந்த நேரத்திலும் மல்லிகா சொல்ல மல்லிகாவை பாரியும் வெண்ணிலாவும் முறைத்தார்கள்.

“சரி பொண்ணு யாருன்னு சொல்லுங்க”, என்று எரிச்சலுடன் கேட்டான் புவி.

“பொண்ணு பேர் சுஜிதா. இன்ஜினியரிங் படிச்சிருக்கா”, என்றார் பாரி.

“அப்பா விளையாடுறீங்களா? படிச்ச பொண்ணு எப்படி என்னைக் கட்டிக்கும்? அதெல்லாம் வேண்டாம். வேற பொண்ணு பாருங்க. ஸ்கூல் மட்டும் படிச்சிருந்தா போதும்”

“இப்படிச் சொல்லி இன்னும் எத்தனை நாளைக் கடத்தப் போற? உனக்கு பொண்ணு பாத்து சலிச்சிட்டேன். ஒழுங்கா இந்த பொண்ணை ஒத்துக்கோ”, என்றார் பாரி.

“முடியாது, என்னைக் கட்டாயப் படுத்தாதீங்க பா. அப்புறம் நீங்க தான் கஷ்டப் படுவீங்க”, என்று அவன் சொல்ல “அண்ணா நீ சம்மதிக்கலைன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஒழுங்கா ஒத்துக்கோ”, என்றாள் வெண்ணிலா.

“என்ன மிரட்டுறியா?”, என்று அவன் அசால்ட்டாக தங்கையிடம் கேட்க “உன்னை மிரட்ட முடியுமா? ஆனா எனக்கு உன் வாழ்க்கை முக்கியம். அதுக்கு என்ன வேணும்னாலும் செய்வேன்”, என்று சொன்னவள் அங்கே பழம் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து தன்னுடைய கையை அறுத்துக் கொண்டாள். அவள் செய்கையில் அனைவரும் ஸ்தம்பித்துப் போனார்கள்.

அவள் இப்படி செய்வாள் என்று யாருமே நினைக்க வில்லை. ரேணுகாவோ ஆவேன்று வாயைப் பிளந்த படி நின்றாள். அவளுக்கும் தான் அண்ணன் இருக்கிறான். அவனை அவளுக்கு பிடிக்கும் தான். அதற்காக அவனுக்காக கையை எல்லாம் வெட்டிக் கொள்ள அவளால் முடியாது.

எல்லாரும் திகைத்து பதறிப் போய் நிற்க “லூசா நீ?”, என்று கேட்ட பரணி சட்டென்று அவளை நெருங்கி அவள் கையில் ஒரு துண்டை எடுத்து கட்டினான்.

கொஞ்சம் ஆழமாக வெட்டி இருந்ததால் ரத்தம் கொட்டியது. அவள் மயங்கிச் சரிய பரணி அவளை கைகளில் தூக்கிக் கொண்டான். மற்றவர்கள் அவன் பின்னால் ஓடினார்கள். அடுத்த பத்து நிமிடத்தில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு காப்பாற்றப் பட்டாள் வெண்ணிலா.

தங்கையின் செயலில் துடித்துப் போன புவியின் மனதுக்குள் ஆயிரம் யோசனைகள். வெண்ணிலா கண் விழித்ததும் அவள் கையைப் பற்றிக் கொண்டு “நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன். இனி இப்படி ஒரு கிறுக்குத்தனம் செய்யாத வெண்ணிலா. அப்படி செஞ்சா நானே உன்னைக் கொன்னுறுவேன்”, என்று சம்மதம் சொன்னான்.

அதைக் கேட்டு அவள் முகம் மலர்ந்தது. அனைவரும் வெளியே இருக்க “ஏன் டி இப்படி பண்ணின?”, என்று கேட்டான் பரணி.

“அவனை சம்மதிக்க வைக்க வேற வழி எனக்கு தெரியலை மாமா”, என்றாள் வெண்ணிலா.

“உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா எங்களால தாங்க முடியுமா வெண்ணிலா. பிளீஸ் இனி இப்படி ஒரு காரியம் செய்யாத”

“சரி மாமா”

“ரொம்ப வலிக்குதா?”, என்று கேட்ட பரணியின் கை விரல்கள் அவளுடைய வெட்டுப் பட்ட கரத்தை வருடிக் கொடுத்தது.

“ரொம்ப வலிக்கலை. ஆனா கொஞ்சம் வலிக்குது மாமா”, என்று அவனுக்கு பதில் கொடுத்தாலும் அவன் தொடுகையில் அவளுக்குள் பல நாணப் பூக்கள் பூத்தன.

டாக்டர் அனுமதி கொடுத்ததும் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தனர். வீட்டுக்கு வந்ததும் “அப்பா சுஜி வீட்ல பேசுங்கப்பா. நாளைக்கே பொண்ணு பாக்க வரோம்னு சொல்லுங்க”, என்று நச்சரித்தாள் வெண்ணிலா. அதனால் பாரி சுஜி வீட்டுக்கு அழைத்தார்.

ஏற்கனவே மைதிலி சொல்லி இருந்ததால் அந்த போனை மதன் தான் எடுத்தான். அவன் சீரியசாக பாரியிடம் பேசிக் கொண்டிருக்கவும் வீட்டில் இருந்த அனைவரின் கவனமும் மதன் பக்கம் திரும்பியது.

பேசி முடித்து அவன் போனை வைத்ததும் அனைவரும் மதன் முகத்தைப் பார்க்க “நம்ம சுஜியை பொண்ணு பாக்க வரலாமான்னு கேட்டாங்க. மாப்பிள்ளை பேர் புவியரசன். வேந்தன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்ன்னு ஒரு கடை வச்சிருக்காராம்”, என்று சொன்ன மதன் தங்கையைப் பார்க்க அவளோ மனதில் எழுந்த உவகையை மறைக்க முடியாமல் முகத்தில் காட்டினாள்.

தங்கை மனது அப்பட்டமாக புரிந்தது அவனுக்கு. “இப்பவே அவளுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணனும் அண்ணா? அவளுக்கு இருபத்தி ஒரு வயசு தான் ஆகுது”, என்றான் ரகு.

“பொண்ணுன்னு இருந்தா நாலு வீட்ல கேக்க தான் செய்வாங்க டா. நீ அமைதியா இரு ரகு”, என்று சொன்ன சுந்தரி “நீங்க என்னங்க சொல்றீங்க?”, என்று கணவரிடம் கேட்டாள்.

“எப்படினாலும் அவளுக்கு கல்யாணம் செய்யனும் தான். சீக்கிரம் செஞ்சா நல்லதும் கூட. மாப்பிள்ளை என்ன படிச்சிருக்கார் மதன்? ஏன் கேக்குறேன்னா கடை வச்சிருக்கார்ன்னு சொன்ன தானே? இஞ்சினியரிங் படிச்சா எப்படி கடை வைப்பார்?”, என்று கேட்டார் தணிகாச்சலம்.

“அது வந்துப்பா…. மாப்பிள்ளை பன்னிரெண்டு வரை தான் படிச்சிருக்கார்”, என்று தயக்கத்துடன் சொன்னான் மதன்.

“என்னது பன்னிரெண்டா? காலேஜ் கூட படிக்காதவனையா மாப்பிள்ளைன்னு சொல்ற? லூசா டா நீ?”, என்று அவர் கத்த அவனுக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. மற்றவர்களுக்கும் அதே திகைப்பு தான்.

“அவங்க கேட்டாங்க, நான் சொன்னேன். இதுல என்னை எதுக்கு சத்தம் போடுறீங்க?”, என்று கேட்டான் மதன். வேறு என்ன சொல்ல முடியும் அவனால்?

“சத்தம் போடாம உன்னைக் கொஞ்சுவாங்களா? மாப்பிள்ளை படிக்கலைன்னு தெரிஞ்ச உடனே போனை வைக்க வேண்டியது தானே? எதுக்கு பேசிட்டு இருக்க? என்ன என் பொண்ணு உனக்கு பாரமா ஆகிருவான்னு அவளை இப்பவே எவனோ ஒருத்தனுக்கு தள்ளி விடப் பாக்குறியா? சம்பாதிக்கிற திமிர் அப்படி தானே? என் பொண்ணுக்கு அப்பன் நான் இருக்கேன் டா”, என்று கோபமாக கேட்டார் தணிகாச்சலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!