Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 12 2

“அம்மா என்னை ஒண்ணும் சொல்லலை. இவ்வளவு நேரம் உன் பொண்டாட்டியை தான் திட்டிட்டு இருக்காங்க. அதை தான் நான் கேட்டுட்டு இருக்கேன். என் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு சுஜி என்ன செய்வா. அவளை பொறாமை பிடிச்சவ, ராசி கெட்டவன்னு பேசுறாங்க. ஆமா நீ என்ன நினைச்சிட்டு இருக்க? உன் இஷ்டம் இல்லாம உனக்கு கல்யாணம் பண்ணி வச்சோம் தான். ஆனா அதுக்கப்புறம் நீ பொறுப்பா நடந்துக்க வேண்டாமா? உன் பொண்டாட்டியை இப்படி அடுத்தவங்களை பேச விட்டு வேடிக்கை பாக்குறியே? உன்னை என் அண்ணான்னு நினைக்கவே எரிச்சலா இருக்கு? நீ சுஜியை கொடுமை படுத்துறதுக்கு தான் என் வாழ்க்கை இப்படி வந்து நிக்குது”, என்று பொரிந்து தள்ளி விட்டாள் வெண்ணிலா.

குற்ற உணர்வுடன் நின்ற புவி மனைவியைத் தேட அப்போது தான் அவள் மயங்கி விழுந்து கிடப்பது தெரிந்தது.



Advertisement

“சுஜி”, என்ற படி அவளை நெருங்கினான் புவி. மற்றவர்கள் கவனமும் அங்கே செல்ல “என்ன ஆச்சு மா உனக்கு? ஐயோ நான் பாவி. உனக்கு ஒண்ணும் இல்லை. ஒண்ணும் இருக்காது”, என்று தனக்கு தானே பேசிய படி அவளை கைகளில் தூக்கி கொண்டு காருக்கு சென்றான். அவன் முகத்தில் இருந்த பதட்டத்தை வியப்பாக பார்த்தார்கள் அனைவரும். வெண்ணிலாவுக்கு தோழியுடனே செல்ல ஆசை தான். ஆனால் இப்போது அவளுடன் தன்னுடைய அண்ணன் தான் இருக்க வேண்டும் என்று புரிந்து அப்படியே நின்று விட்டாள்.

Advertisement

அவன் கார் கிளம்பிச் சென்ற பின்னரும் அனைவரும் அப்படியே இருக்க “இப்ப உனக்கு சந்தோஷமா மா? எல்லாரோட நிம்மதியையும் அழிச்சிட்டு நீ மட்டும் சந்தோஷமா இரு”, என்று கத்தி விட்டு தனது அறைக்குச் சென்று விட்டாள் வெண்ணிலா. மல்லிகாவே சற்று பயந்து தான் போனாள். வீட்டுக்கு வந்த பாரி வீட்டின் அமைதியை கணித்து என்ன நடந்தது என்று வெண்ணிலாவிடம் கேட்க அனைத்தையும் சொன்னாள்.

Advertisement

அதைக் கேட்ட பாரி மனைவியை அருவருப்பான பார்வையைப் பார்க்க மல்லிகா அமைதியாக நின்றாள். மயக்கத்தில் இருந்த சுஜிக்கு உள்ளே டிரீட்மெண்ட் நடக்க வெளிய படபடப்புடன் நின்றிருந்தான். அவன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் சொன்னது அவள் மீதான காதலை.

Advertisement

சிறிது நேரம் கழித்து அவனை உள்ளே அழைக்கும் போது சுஜி மயக்கம் தெளிந்து அமர்ந்திருந்தாள். என்ன நடந்தது என்று அவளுக்கும் தெரிய வில்லை.

இருவரையும் அமர வைத்த டாக்டர் அவள் குழந்தை உண்டாகி இருப்பதாக சொல்ல இருவரும் கொஞ்சம் திகைத்து தான் போனார்கள். புவி சந்தோஷ வானில் பறந்தான் என்றால் சுஜிக்கோ சந்தோசத்தில் பேச்சு வர வில்லை. தன்னவனின் வாரிசை தாங்கி இருப்பது அவளுக்கு பெருமை அல்லவா? ஆனால் அது காதலால் வராமல் அடுத்தவர்கள் பேசிய பேச்சால் வந்தது என்று எண்ணி அவள் உள்ளம் கசந்தது.

டாக்டர் அவர்களுக்கு வழி முறைகளை சொல்லிக் கொள்ள இருவரும் கேட்டுக் கொண்டார்கள். வீட்டுக்கு வந்ததும் அனைவரும் என்ன ஆச்சு என்று கேட்க அவனோ யாரிடமும் பேசாமல் அறைக்குள் சென்று விட்டான்.

யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் சுஜியும் அறைக்குள் சென்று விட்டாள். அப்போது அவன் அவளிடம் பேச முற்பட “உங்க மனசுல நினைச்சது நடந்துருச்சுல்ல? உங்களுக்கு இது போதும் தானே? குழந்தை இல்லைன்னு உங்க வீட்ல சொன்னதுக்காக தானே என்னை தொட்டீங்க? இனி அவங்களும் என்னை இங்க இருந்து விரட்ட மாட்டாங்க. இப்ப சந்தோஷமா?”, என்று கேள்வி கேட்டு விட்டு எப்போதும் போல வேலை செய்ய சமையல் அறைக்குச் சென்று விட்டாள்.

“இவ என்ன இப்படிச் சொல்றா?”, என்று திகைத்துப் போனான் புவி. அவன் வெளியே வந்ததும் பாரி அவனிடம் விசாரிக்க அவன் டாக்டர் சொன்னதைச் சொல்ல அனைவரின் முகமும் மலர்ந்தது.

வெண்ணிலா சந்தோசத்துடன் தோழியைக் கட்டிக் கொண்டாள். மல்லிகா எதுவுமே பேச வில்லை. ரேணுகாவோ தனக்கு ஏன் இன்னும் குழந்தை இல்லை என்று கவலைப் பட்டு ஒரு வாரம் தன்னுடைய அம்மா வீட்டில் இருக்கச் சென்று விட்டாள்.

வெண்ணிலாவிடம் பாரி மறு கல்யாணம் பற்றி பேச வெண்ணிலா அதை மறுத்து விட்டு வேலைக்கு மீண்டும் டிரை செய்தாள். ஏற்கனவே இண்டர்வியூ அட்டண்ட் செய்த இடத்தில் வேலை இருப்பதாக சொல்ல உடனடியாக சென்று விட்டாள். வீட்டில் யாராலும் அவளைத் தடுக்க முடியவில்லை.

சுஜி வாழ்க்கை எப்போதும் போல தான் இருந்தது. அவளை புரிந்து கொள்ள முடியாமல் புவி தான் திணறிப் போனான். பரணி வெண்ணிலாவைப் பற்றி எண்ணிக் கொண்டே காலத்தை ஓட்டினான். இப்போது வரை அவள் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை.

மல்லிகா எப்போதும் போல சுஜியை திட்டிக் கொண்டு தான் இருந்தாள். அதைப் பொறுத்து போவதைத் தவிர அவளுக்கு வேறு வழி இருக்க வில்லை. சுஜி பிள்ளை உண்டாகி இருப்பது தெரிந்து அவளுடைய வீட்டில் இருந்து அனைவரும் வந்து பார்த்து விட்டுச் சென்றார்கள். மைதிலியும் தோழியை போனில் வாழ்த்தினாள்.

இதற்கிடையில் மதன் மைதிலி காதல் மேலும் வளர்ந்திருக்க ஒரு நாள் தன்னுடைய கண் முன் இருந்த பேப்பரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் கேசவன். ஏனென்றால் அந்த பேப்பர் மைதிலியின் போன் பில்.

அவள் ஒரே எண்ணுக்கு பல முறை பேசி இருப்பது தெரிய விசாரித்துப் பார்த்ததில் அந்த எண் மதனுடையது என்றும் தெரிய வந்தது.

மைதிலி தன்னிடம் பொய்ச் சொல்லி இருக்கிறாள் என்று புரிந்தது. அவளுடைய அறைக் கதவைத் தட்டினார்.

அவள் கதவை திறந்ததும் உள்ளே வந்தவர் அவளுடைய போனை தான் எடுத்துப் பார்த்தார். மைதிலி கொஞ்சம் பயந்து விட்டாள். ‘மை ஹஸ்பண்ட்’ என்று சேவ் ஆகி இருந்த எண்ணைக் காட்டி “என்ன டி இதெல்லாம்? கடைசில உன் அம்மா புத்தி தான் உனக்கும் இருக்குனு காமிச்சிட்டல்ல?”, என்று கோபமாக கேட்டார்.

“அப்பா”, என்று மைதிலி அழைக்க “வாயை மூடு”, என்றார் கேசவன்.

“என்னமோ பிரண்டோட அண்ணான்னு சொன்ன? இப்ப இதுக்கு என்ன அர்த்தம் மைதிலி?”

“அவரை எனக்கு பிடிச்சிருக்கு பா”, என்று ஒரு வழியாக சொல்லி விட்டாள்.

“நான் எப்படி இதுக்கு ஒத்துக்குவேன்னு நினைக்கிற?”

“நீங்க ஒத்துக்கலைன்னாலும் எனக்கு அவர் தான் வேணும்”, என்று நிமிர்வாகவே சொன்னாள். காதல் அந்த தைரியத்தை அவளுக்கு கொடுத்திருந்தது.

“உனக்கு இருபத்தி அஞ்சு லட்சம் கொடுக்து வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன். நீ எனக்கு தெரியாம இப்படி ஒரு வேலை செய்றியா?”

“எனக்கு அது தேவை இல்லை. எனக்கு என் மதன் தான் வேணும்”, என்று அவள் சொல்ல “அதுக்கு அவன் உயிரோட இருக்கணுமே? அவனைத் தேடிப் போய் கொன்னுருவேன்”, என்று சொன்னார் கேசவன்.

திகைத்து போன மைதிலிக்கு விஷயத்தை இன்னும் பெரிதாக்க மனதில்லை. இதை அப்படியே விட்டால் கேசவன் அப்படி தான் செய்வார் என்று அவளுக்கு தெரியும். அதனால் “என்ன மிரட்டுறீங்களா? நீங்க என்ன அவரைத் தேடிப் போய்க் கொல்லுறது? நானே அவரை வரச் சொல்றேன். இருங்க ஒரு நிமிஷம்”, என்று சொன்னவள் தந்தையின் கையில் இருந்த போனைப் பறித்து மதனை அழைத்தாள்.

“சொல்லு பொண்டாட்டி”, என்று மதன் உற்சாகமாக பேச “இப்ப நீங்க எங்க வீட்டுக்கு வரணும்”, என்றாள் மைதிலி.

அவள் எப்போதும் போல விளையாட்டுக்கு கேட்கிறாள் என்று எண்ணி “எனக்கு வேலை இருக்கு டி”, என்றான் மதன்.

“நான் வேணும்னா வாங்க, இல்லைன்னா..”, என்று அவள் சொல்ல அப்போது தான் அவளுடைய குரல் மாறுபாடு அவனுக்கு புரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!