Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சத்தை எரித்தாய்

நெஞ்சத்தை எரித்தாய் 1 1

நெஞ்சத்தை எரித்தாய்…!

மல்லி நூறாவது முறையாக கடிகாரத்தை பார்த்த போதும் மணி பதினொன்றில் இருந்து குறையவுமில்லை.சுந்தரும் இன்னும் வரவில்லை. இன்று அவர்களின் பத்தாவது திருமணநாள்.

உணவு மேசையில் அவனுக்கு பிடித்த மட்டன் தம் பிரியாணி, சிக்கன் சுக்கா, பிஷ் பிரை, கூடவே அவனுக்கு பிடித்த கத்திரிக்காய் கொஸ்து, அதோடு மகளுக்கு பிடித்த இனிப்பான ரசமலாய் எல்லாம் அவளோடு அவன் வரவுக்காக இரண்டு மணி நேரமாக காத்திருக்கின்றன.

இப்போதெல்லாம் அவன் ஒன்பது மணிக்கு தான் வருகிறான் என்று அந்த நேரத்தில் சூடாக செய்தது. இப்போது ஆறி வாடிப் போயிருந்தது அவளைப் போலவே. மாமியார்  காமாட்சி கூட கோபித்தார் தான். (Clonazepam)



Advertisement

“என்ன பெரிய கல்யாண நாள்? அப்படி என்ன இங்க என் மவன் கிளுகிளுன்னு வாழ்ந்து கிளிக்கிறான் இந்த நாளை கொண்டாட? அவன் அழகுக்கும் திறமைக்கும் எப்படியா பட்ட மருமக வந்திருக்கணும் தெரியுமா? இதுல இன்னிக்கி கிருத்திகைனு கூட பாக்காம அசைவம் செஞ்சு வெச்சிருக்கே. எல்லாம் உன்ன பெத்தவங்கள சொல்லணும்….”

இப்படி அவளை மட்டுமின்றி அவளைப் பெற்றவர்களையும் சேர்த்து திட்டும் காமாட்சி யாரோ அல்ல. அவள் சொந்த அத்தை தான். அவள் அப்பாவின் சொந்த தங்கை தான். சுந்தரேஸ்வரனும் அவள் அத்தை மகன் தான்.

அத்தைக்கும் மாமாவுக்கும் தனியாக இட்லி ஊற்றி சட்னி செய்து இனிப்பை மட்டும் கூட வைத்துக் கொடுத்தாள். நன்றாக திருப்தியாக உண்டு விட்டு போகும் போதும் நொட்டு தான்.

Advertisement

“ராசாவுக்கு பிரியாணில கறி பதமா வெந்திருக்கா? காரம் தூக்கலா போட்டியா? அப்ப தான் அவனுக்கு பிடிக்கும்….” என்று ஒரு வெத்து அதிகாரம் செய்து விட்டு தான் போனார்.

Advertisement

கல்யாணம் ஆனதில் இருந்து அவர்கள் பக்கமே திரும்பாமல் இருந்து விட்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் மாமாவுக்கு நெஞ்சு வலி வர அப்போது மகனைத் தேடி இங்கே வந்தவர்கள் இருவரும்.

அவருக்கு பைபாஸ் செய்து வீட்டுக்கு வந்த பிறகும் மகனின் வளமான வாழ்வைப் பார்த்து விட்டு இங்கேயே தங்கி விட்டார்கள்.

ஆரம்பத்தில் அத்தை அவளை மாமனாரைக் காப்பாற்றிய தெய்வம் என்று கொண்டாடியவர் தான். ஆனால் கூடவே இருந்து கவனித்ததில் மகன் மருமகளை எந்த இடத்தில் வைத்திருக்கிறான் என்று புரிய அவர் குணமும் மாறிப்போனது.பேச்சும் வரைமுறை இன்றி தான் போனது.

Advertisement

சுந்தரையே எதுவும் கேட்க முடியாத போது அவரிடம் மட்டும் என்ன கேட்க முடியும்? அவள் மெளனமாக ஒதுங்க ஒதுங்க அவரின் வார்த்தைகளும் எல்லை மீறிப் போய்க் கொண்டு இருந்தது. ஆனால் மல்லியின் கவலை இப்போது இது அல்ல. அவள் கவலையெல்லாம் வேறு.

மல்லிக்கும் சுந்தருக்கும் திருமணம் முடிந்து இன்றோடு பத்து வருடங்கள் ஆகி விட்டன. இப்போது திருமண வாழ்க்கை மட்டுமல்ல அவளுமே சுந்தருக்கு அலுத்து விட்டதோ?

சுந்தருக்காக காத்திருந்த இந்த இரண்டு மணி நேரமாக மல்லியின் மனதில் இதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லை.

அதுவே மனதைப் பிசைய ஒரே இடத்தில் உட்கார முடியாமல் எழுந்தவள் அங்கிருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டாள்.

மாநிறம். ஐந்தடி உயரம். திருமணம் ஆகி பதினெட்டில் வந்த போது இருந்த மெல்லிய உடல்வாகு போய் ஒரு குழந்தையும் பெற்றதால் சற்றே சதைப்பிடிப்பான உடல் என்றாலும் அதுவும் அவளுக்கு அழகாக தான் இருந்தது. திருத்தமான முகம்.

முதல் திருமண நாளில் அவன் வாங்கித் தந்திருந்த இரண்டு கிராம் தோடும் ஏழாம் திருமண நாளில் அவன் வாங்கித் தந்திருந்த ஐந்து பவுன் தங்க நெக்லேசும் அணிந்திருந்தாள். இடையில் போன வருடம் வாங்கித் தந்த வெளிர் பச்சையில் ரோஸ் வண்ண சரிகைக் கரை வைத்த பிரிண்டட் சில்க். புடவை நாகரீகமாக இருந்தாலும் கட்டிய விதம் நாட்டுப்புறமாக இருந்தது. கணுக்காலுக்கு சற்றே மேலே ஏறி இருந்தது. நெற்றியில் பெரிய சைசில் சாந்து பொட்டு. அதன் மேலே விளக்கேற்றி சாமி கும்பிட்ட போது வைத்த திருநீறு.

நீண்ட பின்னலில் மல்லிகை சரம். முன்பெல்லாம் சுந்தருக்கு அவள் தலையில் மல்லி வைத்தாலே விலக முடியாது. அவளை சுற்றி சுற்றி வருவான். “என் மல்லி மேலே மதுர மல்லி வாசனை மயக்குதுடி…”என்று உருகி வழிவான்.

மல்லி மதுரை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவள். அப்பா சீனிவாசன் அந்த கிராமத்துக்கு பெரிய தனக்காரர். பெரிய அளவில் மல்லிகை சாகுபடி. மதுரை மல்லிக்கு உலகம் முழுக்க மவுசு இருக்கையில் அவருக்கு வருமானமும் குறைவில்லை. மல்லிக்கு ஒரு தம்பி மட்டுமே. இருவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர்.

காமாட்சி பக்கத்து கிராமத்தில் தான் வாழ்க்கைப்பட்டு இருந்தார். அவர் கணவர் அங்கே ஒரு மளிகைக்கடை சின்னதாக நடத்திக் கொண்டிருந்தார். சின்ன வயதில் இருந்தே அண்ணனுக்கும் தங்கைக்கும் சம்பந்தி ஆகும் ஆசை.

மல்லி பிறந்ததுமே “என் மருமகளே! “ என்று தூக்கிய அத்தை மடியில் மல்லி ஈரம் செய்ய “இது என்ன மருவாதி இல்லாம மாமியா மடியில உச்சா போவுறது….?” என்று அவளை கண்ணை சுருக்கி நாக்கை துருத்தி மிரட்ட சீனிவாசன் சத்தம் போட்டு சிரித்தார்.

அது அத்தையின் செல்ல மிரட்டல் என்று நினைத்து வந்த சிரிப்பு.

ஆனால் மல்லி வளர வளர காமாட்சியின் அதிகாரம் கரை கடந்து போனது. அண்ணனின் வீட்டில் எல்லாவற்றிலும் தன் அதிகாரத்தை செலுத்த ஆரம்பித்தார்.

தன் வீட்டில் என்ன தேவை என்றாலும் அது சீனிவாசன் பணத்தில் தான் நடத்திக் கொண்டார். சுந்தரின் எல்லா செலவுகளுக்கும் சீனிவாசன் தான் பொறுப்பு.

“உன் மருமகன் சைக்கிள் கேக்கறான்…. இந்த தீபாவளிக்கு அவனுக்கு மூணு செட்டு டிரஸ் வேணுமாம்…. இப்ப காலேஜ் போக ஆரம்பிச்சிட்டான் இல்ல?  பைக் வேணுமாம்…”

 இப்படி சுந்தர் வளர வளர லிஸ்டும் அவற்றின் விலையும் கூட கூடிக் கொண்டே போனது.

சீனிவாசன் ஒரு அளவு வரும்வரை கேட்டும் கேட்காமலும் எல்லா செலவினங்களையும் சந்தோஷமாகவே ஏற்றார்.

ஒரு பக்கத்தில் தங்கை என்ற பாசம். மறு பக்கத்தில் தன் மகள் வாழப்போகும் இடம் என்று கணக்கு பார்க்காமல் செலவு செய்தார். அவர் மனைவி மல்லியின் அம்மா லக்ஷ்மி கணவருக்கு அடங்கிய மனைவி என்பதால் அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே எதிலும் வந்ததே இல்லை.

அதனால் மல்லியும் சுந்தரும் வளர வளர ஒருவருக்கொருவர் என்ற எண்ணத்தை இருவரின் மனதிலும் சுற்றி இருந்தவர்கள் முக்கியமாக காமாட்சி பதிய வைத்துக் கொண்டே இருந்தார்.

எல்லாம் ஒரு நாள் முடிவுக்கு வந்தது. காமாட்சி ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனுசனை கடித்த கதையாக சீனிவாசனின் காட்டையே கேட்டபோது அவர்களின் சொந்தமும் முடிவுக்கு வந்தது.

மல்லி பனிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க சுந்தர் உயர் பட்டப்படிப்பு முடித்து இருந்தான். சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தான்.

அப்போது காமாட்சி தான் இந்த முடிவை எடுத்தார். கணவரையும் அழைத்துக் கொண்டு அண்ணன் வீட்டுக்கு வந்தார். அவர் என்ன கேட்கப் போகிறார் என்று தெரியாமல் சீனிவாசனும் லக்ஷ்மியும் அன்பாக வரவேற்று உபசரித்தனர். எல்லாம் காமாட்சி வந்த காரணத்தை சொல்லும் வரை தான்.

“அண்ணா! பேசாம உன் மல்லிக் காட்ட உன் மருமகனுக்கே எழுதி வெச்சிடு. அவன் தொழில் பண்ணணும் என்று வீட்டுல மல்லுகட்டிக் கொண்டு இருக்கான். அதனால ஓஹோன்னு பாத்துக்குவான். நாளைக்கு எல்லாம் உன் மக தானே ஆளப் போறா? மிச்சத்தை எல்லாம் உன் மகனுக்கு குடு. நா எதுவும் கேக்க மாட்டேன்… என்ன சொல்றே..?”

அதுவரை தங்கையின் ஆணைகளுக்கு எல்லாம் தலையாட்டிக் கொண்டு இருந்தவருக்கு அவரின் உயிர் மூச்சான மல்லிக் காட்டை கேட்டதும் பொறுக்க முடியவில்லை.

தங்கையிடம் பொங்கி விட்டார். கூடவே அடுத்தவன் சொத்தை திருட ஆசைப்படும் மனைவியை கட்டுப்படுத்த முடியாதவன் எல்லாம் ஆம்பிளையா என்று தங்கை கணவரையும் சேர்த்து வாங்கு வாங்கென்று வாங்கி விட காமாட்சிக்கும் ரோசம் பொங்கியது.

“ஊருக்கே தெரியும். உன் மக என் வீட்டுக்கு தான் மருமகளா ஆகப்போறா என்று! இப்ப நான் மாட்டேன்னு சொன்ன பிறகு உன் பொண்ண எவன் கட்டுவான் என்று நானும் பாத்துடறேன்….”

அப்படி மிரட்டினால் அண்ணனை படிய வைத்து விடலாம் என்று காமாட்சியின் கணக்கு. கிராமங்களில் ஒருவருக்கு பேசிய பெண்ணை அவ்வளவு சுலபமாக அடுத்தவர் கட்ட மாட்டார்கள் என்ற தைரியம். அதனால் எப்படியும் அண்ணனை அதை வைத்து மண்டியிட வைத்து விடலாம் என்ற எண்ணம்.

ஆனால் சீனிவாசன் அப்படி எல்லாம் பயந்து விடவில்லை.

“நீ என்ன என் மகளை வேண்டாம் என்று சொல்றது? நான் சொல்றேன். இனி நீயும் வேண்டாம்..உன் சங்காத்தமும் வேண்டாம்…உன் சம்பந்தமும் வேண்டாம்… வீட்டை விட்டு முதல்ல வெளியே போங்க ரெண்டு பேரும்….”

என்று கழுத்தை பிடித்து தள்ளி விட்டார்.

பெரியவர்கள் எளிதாக தாங்கள் பேசியதை மறந்து விட்டனர். ஆனால் சின்னவர்கள் மறக்கவில்லை.

அதிலும் சுந்தர் முக்கியமாக மறக்கவில்லை. இரு குடும்பங்களுக்கும் நடுவே பேச்சு வார்த்தை அறவே நின்று போக சீனிவாசன் மகளிடம் கண்டித்து சொன்னார்.

“நமக்கும் அத்தை வீட்டுக்கும் இனி ஓட்டும் இல்லை. உறவும் இல்லை. அவங்க கூட யாராவது பேச்சு வெச்சுகிட்டீங்கனா அவங்க கூட எனக்கு உறவு அறுந்து போகும்….”

வீட்டில் எல்லோரையும் வைத்துக்கொண்டு சொன்னாலும் அவர் பார்வை மல்லி மேலே தான்.

மல்லியும் அப்பா பேச்சை மீறும் எண்ணத்தில் இல்லை. அதற்கான வயதிலும் இல்லை. ஆனால் சுந்தர் இருந்தானே? அவன் அவளை பள்ளியில் வந்து வந்து பார்த்து அவள் மனதை தன்னை விட்டு திரும்பாமல் பார்த்துக் கொண்டான்.

மல்லி பள்ளியில் இருந்து வீட்டுக்கு நடந்து வரும் வழியில் சிறிது தூரம் காடாக இருக்கும். அதை அவளை சந்திக்கும் இடமாக மாற்றிக் கொண்டான். அங்கே ஒரு ஆலமரம் இருக்க அவர்கள் சந்திப்பை மற்றவர்கள் அறியாமல் அது மறைத்தது.

ஆறு மாதங்கள் அவர்கள் சந்திப்பு ரகசியமாக தொடர ஒரு நாள் சீனிவாசனுக்கு அது தெரிந்து போனது.

அவர் மகள் மேல் அதுவரை தலையை வருடிக் கொடுக்க மட்டுமே கை வைப்பவர்  அன்று அடி வெளுத்து விட்டார்.

அது தெரிந்த சுந்தர் வீட்டுக்கே வந்து விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!