Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 17 1

அத்தியாயம் 17

எந்தன் இரும்பு இதயத்தையும் 

அசைத்து தான் பார்க்கிறது 

உந்தன் காந்தப் பார்வை!!!



Advertisement

“எங்க இருக்க வெண்ணிலா?”, என்று கேட்டான் புவி.

Advertisement

“இப்ப தான் ஹாஸ்டல் வந்தேண்ணா”

Advertisement

“சரி இப்பவே ஊருக்கு கிளம்பி வா. நான் டிக்கட் போட்டு உனக்கு சொல்றேன். மணி ஒன்பது தான ஆகுது. அதெல்லாம் பஸ் இருக்கும்”

Advertisement

“என்ன விளையாடுறியா? என்னால லீவ் போட முடியாது. ஆஃபிஸ்ல வொர்க் இருக்கு”

“நீ ஒரு ஆள் தான் ஆஃபிசை தூக்கி நிறுத்தணும்னு அவசியம் இல்லை. கிளம்பி வா”

“அண்ணா”

“நான் சொன்னா கேப்பியா மாட்டியா?”

“நீ சொன்னா கேப்பேன் தான். ஆனா அங்க வந்தா தேவையில்லாத பேச்சு வரும்”

“உன் கல்யாண விஷயம் யாரும் பேச மாட்டாங்க”

“அப்புறம் ஏன் கூப்பிடுற?”

“பரணி மாமாக்கு ஒரு வரன் வந்திருக்கு. ஆனா கேட்டா முடியவே முடியாதுன்னு சொல்றான்”, என்று சொல்லி அவன் அமைதியாக இருக்க வெண்ணிலாவோ அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

அவள் அமைதியை பார்த்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“என்ன வெண்ணிலா அமைதியா இருக்க?”, என்று கேட்டான் புவி.

“ஆன்… அது… மாமாக்கு கல்யாணம் பேசுறீங்களா?”

“ஆமா. எத்தனை நாள் மாமாவை தனியா விட முடியும்? அவனுக்கும் ஒரு வாழ்க்கை அமையனும்ல?”

“மாமா என்ன சொன்னாங்க?”, என்று எதிர் பார்ப்புடன் கேட்டாள்.

“மாமாவுக்கு கல்யாணம் பண்ண விருப்பமே இல்லையாம்”

“ஓ”

“ஆமா வெண்ணிலா, நீ வந்து பேசு”

“நான் வந்து பேசினா அவங்க கேப்பாங்களா?”

“ஒரு வேளை கேக்கலாம். அது மட்டுமில்லாம நம்ம கடை திறப்பு விழாவும் இருக்கு. நீ வா. நான் டிக்கட் அனுப்புறேன்”, என்று சொன்னவன் அவள் மறுக்கும் முன் போனை வைத்து விட்டான். சுஜிக்கு சந்தேகம் வலுத்தது.

அடுத்த நாள் எப்போதும் போல விடிந்தது. வெண்ணிலாவை அழைக்க புவி தான் பஸ் ஸ்டாண்ட் வந்திருந்தான். அண்ணனைக் கண்டதும் ஒரு ஏமாற்றம் அவள் மனதில் எழுந்தது. அதை மறைத்து “எப்படி இருக்கண்ணா?”, என்று கேட்டாள்.

“நல்லா இருக்கேன்”

“சுஜி, பாப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா?”

“அதான் தினமும் வீடியோ கால்ல பேசுறியே? சரி வா போகலாம்”, என்று சொல்லி அவன் வண்டியைக் கிளப்பியதும் அவன் பின்னே ஏறி அமர்ந்தாள்.

வீட்டை நெருங்க நெருங்க நெஞ்சில் இரும்பு குண்டை வைத்துக் கட்டியது போல மனம் பாரமாக இருந்தது.

கேட் முன்னே வண்டியை நிறுத்திய புவி “நீ உள்ள போ வெண்ணிலா, நான் கடைக்கு போயிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.

தயக்கத்துடன் அவள் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து கொண்டிருந்த பரணி அவளைக் கண்டதும் கையில் இருந்த பைப்பைக் கீழே போட்டான்.

அவளைக் கண்டதும் அவன் கண்கள் கலங்கிச் சிவந்தன. படபடக்கும் மனதை அடக்கிய படி அவனை நெருங்கியவள் “எப்படி இருக்க மாமா?”, என்று கேட்டாள்.

இத்தனை நாள் பேசாதவள் இன்று பேசவும் அவன் கண்களில் இருந்து கண்ணீர் வடிய அவனால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.

எப்போதும் முகம் கழுவி, பொட்டு வைத்து, தலை சீவி, பூ வைத்து மலர்ந்து இருப்பவள் இன்றோ வாடி வதங்கிப் போய் இருந்தாள்.

“உன்னால தான் டா பாவி, உன்னால தான் அவ இப்படி ஆகிட்டா. அவ வாழ்க்கையே வீணா போகிருச்சு”, என்று அவன் மனசாட்சி இடித்துரைக்க அவளையே குற்ற உணர்வுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனை ஒரு நொடி ஆழப் பார்த்தவள் அடுத்த நொடி வீட்டுக்குள் சென்று விட்டாள். அவள் பின்னே செல்லத் துடித்த கால்களை அடக்கி அப்படியே மடங்கி அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தான்.

“ஏய் வெண்ணிலா வா வா”, என்று வரவேற்றாள் சுஜி.

“எப்படி இருக்க சுஜி?”

“நல்லா இருக்கேன்”

“பாத்தாலே தெரியுது. அண்ணா உன்னை நல்லா கவனிக்கார் போல?”, என்று புன்னகையுடன் கேட்ட வெண்ணிலாவின் முகத்தில் லேசான சோகம் இருக்க தான் செய்தது.

“என்ன நடந்துச்சுன்னு யோசிக்கிறதுக்குள்ள எல்லாம் மாறிருச்சு வெண்ணிலா. எனக்கே உங்க அண்ணா இப்படி எல்லாம் பேசுவாங்களான்னு இப்ப வரைக்கும் அதிர்ச்சி தான்”

“அவனை அப்படியே பிடிச்சு வச்சிக்கோ. சரி என் பட்டுக் குட்டி எங்க?”

“ரூம்ல தனியா விளையாடிட்டு இருக்கா. இங்க விட்டா எதையாவது உடைச்சு போட்டுறா. பயங்கர சேட்டை”

“அவ அவளோட அப்பன் மாதிரி இருக்கா. சரி நான் போய் அவளைப் பாக்குறேன்”

“சரி போ, நான் உனக்கு டீ போடுறேன்”

“டீ வேண்டாம். ஒரு காபி தா. உன் கையால காபி குடிச்சு எவ்வளவு நாள் ஆச்சு?”, என்று சொல்லி விட்டே வெண்ணிலா சுஜியின் அறைக்குச் செல்ல சிறு சிரிப்புடன் காபி போடச் சென்றாள் சுஜி.

வெண்ணிலாவைக் கண்டதும் “அத்தை”, என்று அழைத்த படி அவளை கட்டிக் கொண்டாள் பவி. வெண்ணிலாவும் அவளை தூக்கி கொஞ்சியவள் அதற்கு பின் அவளுக்கு என வாங்கி வந்த பொருள்களை எல்லாம் கொடுத்து அவள் முகத்தில் வந்து போகும் சந்தோசத்தை ரசித்தாள்.

பவியைத் தூக்கி கொண்டே வெண்ணிலா ஹாலுக்கு வர அவளுக்கு காபி கொடுத்தாள் சுஜி.

இருவரும் பேசிக் கொண்டிருக்க ஒவ்வொருவராக எழுந்து வந்தவர்கள் வெண்ணிலாவை நலம் விசாரித்தார்கள்.

கடைக்கு போய் விட்டு வந்த புவி பரணி தன்னை மறந்து அமர்ந்திருக்கவும் அவன் அருகில் வந்தான். அவன் வரவைக் கூட பரணி உணர வில்லை.

வெயில் அவன் முகத்தில் விழ வியர்வை ஆறாக பெருகியதைக் கூட அவன் உணர வில்லை. “வெண்ணிலாவின் வரவு இவனை இந்த அளவுக்கு பாதிக்கிறது என்றால் சுஜி சொன்னது போல இருவருக்கும் இடையே ஏதோ இருக்குமோ? நான் தான் கவனிக்காம போய்ட்டேனா?”, என்று எண்ணியவன் “யோவ் மாமா என்னய்யா பண்ணுற? வெயில்ல இருந்து விட்டமின் வாங்குறியா என்ன?”, என்று கேட்டான்.

“ஆன் அது.. மாப்பிள்ளை”, என்று திடுக்கிட்டு நிமிர்ந்தவன் அப்போது தான் பைப்பைப் பார்த்தான். அது ஒரு இடத்தில் சின்னக் குளத்தையே உருவாக்கி இருந்தது.

“ஐயோ”, என்ற படி அவன் பைப்பைத் தூக்க போக மோட்டாரை நிறுத்திய புவி “நீ தண்ணி அடிச்சது போதும். உள்ள வா”, என்று சொல்லி அவனையும் இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றான்.

அவ்வளவு நேரம் கலகலப்பாக வீட்டினரிடம் பேசிக் கொண்டிருந்த வெண்ணிலா பரணியின் வரவைப் பார்த்து அமைதியாகி விட அது யாருக்கு தெரிந்ததோ இல்லையோ சுஜி மற்றும் புவியின் கண்களில் விழுந்தது. ஏதோ நடந்திருக்கிறது என்று இருவர் மனமும் அடித்துச் சொன்னது.

மற்ற அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க அறைக்குச் சென்ற பரணி முகமோ இடிந்து போய் இருந்தது. அவளைப் பார்க்க பார்க்க அவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது.

தான் மட்டும் அன்று அவள் மேல் கை வைக்க வில்லை என்றால் கட்டாயம் அவள் அவளுடைய கணவனோடு நன்றாக வாழ்ந்திருப்பாள் என்று எண்ணி எண்ணி தன்னையே வருத்திக் கொண்டான்.

பழைய வெண்ணிலாவைக் காண அவனுக்கு ஆசையாக இருந்தது. ஆனால் அது தன்னால் தான் முடியும் என்றும் தான் மட்டுமே அவளை மாற்ற முடியும் என்றும் அவனுக்கு தெரியவில்லை.

எப்படியாவது அவள் இங்கிருந்து செல்லும் முன் அவளை வேறு திருமணம் செய்து கொள்ளச் சொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தான். அந்த முடிவு அவன் மனதுக்கு பிடிக்க வில்லை என்பது அவன் ஆழ்மனதுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.

வெண்ணிலாவிடம் பேச நேரம் பார்த்துக் கொண்டிருக்க அன்று மாலை அவன் டீ குடிக்க வரும் போது வெண்ணிலா பவித்ராவுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். அவர்களை நெருங்கினான் பரணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!