Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

டிங் டாங் காதல்

டிங் டாங் – 20.1

அன்று ஞாயிற்றுக்கிழமை. வைஷ்ணவியின் இல்லம் மொத்தமும் ஆனந்தமாய் மிளிரியது. காரணம் கார்த்தியின் மொத்த குடும்பமும் வைஷ்ணவியை முறையாய் பெண் பார்க்க வந்திருந்தனர். இரு குடும்பமும் முதலிலே பேசி வைத்திருந்த காரணத்தால் சேர்மத்தாய்க்கும் சுபத்ராவிற்கும் வைஷ்ணவியின் பிரியத்தை பற்றி தெரியவில்லை.

அதனால் எந்த விதமான இடையூறும் இல்லாமல், சங்கடமான பேச்சுகளும் இல்லாமல் இயல்பான பேச்சுகளுடன் அமைதியாக நகர்கின்றது. மறு பக்கம் வைஷ்ணவியின் சகோதரன் சித்தார்த் மாப்பிள்ளை வீட்டாரை கவனிக்க தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி அடுக்கிக்கொண்டே இருந்தான்.

வைஷ்ணவி தன்னை தான் பெண் பார்க்க வந்துள்ளனர் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் அவர்கள் பேசுவதை நின்று ஆசையாக கேட்டுக்கொண்டிருந்தாள்.

“வைஷ்ணவி உள்ள வா” அடக்கப்பட்ட கோவத்தோடு மஹேஸ்வரி மகளை கடிந்தார்.



Advertisement

சுருங்கிய முகத்துடன் அறைக்குள் சென்ற மகளை பார்த்தவர் அவள் பின்பே செல்ல, மகாலட்சுமியும் அவரோடு சென்றார்.

அங்கு வியர்வை வடிந்த முகத்துடன் ஷெர்லின் தோழிக்காக சேலையின் மடிப்புகளை நேர்த்தியாக எடுத்து அயர்ன் செய்து உள்ளே வந்த தோழியை முறைத்து நின்றாள்.

“ஐ ரெடியா?” மகிழ்ச்சியாக வைஷ்ணவி தோழியிடம் சென்றாள்.

Advertisement

“அது ரெடி ஆகி பத்து நிமிஷம் ஆச்சு” அன்னையும் மகளை பார்த்து கோவப்பட்டார்.

Advertisement

“அட இதெல்லாம் எதுக்கு வைஷ்ணவி அம்மா? வைஷ்ணவியை தான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே. பிள்ளை புடவை கட்டி கஷ்டப்பட வேணாம். விடுங்க இந்த சுடிதார் கூட அழகா தான் இருக்கு என் மருமகளுக்கு” வைஷ்ணவியை பார்த்து இன்முகமாய் மஹாலக்ஷ்மி கூறினார்.

“அய்ய இந்த டிரஸ் போட்டு உங்க கூட நிப்பாளா இவ?” – ஷெர்லின்

“ஏன் இந்த டிரஸ்க்கு என்ன கொறச்சல்?” – வைஷ்ணவி

Advertisement

“ஓ மறந்து போச்சா? ஒரு நாள் உங்க வீட்டு நாய தொறத்திட்டு போய் சாக்கடைல விழுந்தியே… அது இந்த டிரஸ் போட்டு தான்” என்றவள் மஹாலக்ஷ்மி பக்கம் திரும்பி,

“அது எப்ப தெரியுமா ஆண்ட்டி? நீங்க இங்க வந்திங்களே அதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான். ஒடம்பு மொத்தமும் சாக்கடை தண்ணி தான். பக்கத்துல போய் தூக்கலாம்-னு போனா அப்டியே கப்பு தாங்கல” – ஷெர்லின்

“ரகசியத்தை எல்லாம் ஒடக்கிறதுன்னு முடிவாகிடுச்சு அப்போ பரிச்சைக்கு பயந்து ராத்திரியோட ராத்திரியா வீட்டு சுவரை ஏறி குதிக்கிறேன்னு சொல்லி சாணில விழுந்தவ உங்க மருமக-னு உன்ன பொண்ணு பாக்க வந்த இடத்துல வச்சு சொல்லுவேன்டி” வைஷ்ணவியின் சபதம்.

“ஏய் சொல்லிக்கோடி… கள்ள மங்கா திங்க போன இடத்துல நாய் விரட்ட நீ அலறி அடிச்சு ஓடுன வீடியோ இன்னும் என்கிட்டே தான் இருக்கு” – ஷெர்லின்

“க்ராதகி… நட்புக்கே துரோகம் பண்றியா நீ? அடுத்த ஜென்மத்துல உன்ன என்னோட தோழியா நான் ஏத்துக்க போறதில்ல” – வைஷ்ணவி

தோழி அருகே வந்த ஷெர்லின், “இந்த ஜென்மத்துலையே உன்ன நான் தோழியா ஏத்துக்கல. இதுல அடுத்த ஜென்மம் ஒன்னு தான் கேடு. ஒழுங்கா இதெல்லாம் போடு… இல்லையா இந்த சுடிதார் மேலயே சேலைய கட்டிவிட்டு லட்டு திங்க போய்டுவேன்”

“என்ன ரொம்ப தான் மெரட்டுற? இதுக்கு தான் பார்லர்ல இருந்து ஆள கூட்டிட்டு வர சொன்னேன். இப்போ பாருங்க கருகுன வயர் மாதிரி இருக்க இவ எனக்கு மேக்கப் போட்டு விடணுமா?”

புலம்பியவாறே குளியலறை சென்ற தோழியிடம், “நீங்க குடுக்குற ஐநூறு ரூபாய்க்கு ஐஸ்வர்யா ராய் மாதிரி கேக்குறனு தானேடி அவங்க வரவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க”

சிரிப்போடு நின்ற மஹாலக்ஷ்மியை பார்த்து, “இப்போ கூட நேரம் இருக்கு வேற பொண்ணு பாக்கலாம்” அவரின் மாறாத சிரிப்பில் ஏமார்ந்த தோழி, “சொந்தமா சூனியம் வச்சுக்குறிங்க…” என அடுத்த அடுத்த வேலைகளை பார்களானாள்.

ஒருவழியாக முக்கி திணறி வைஷ்ணவிக்கு புடவையை கட்டும் முன் ஷெர்லின் பாதி ஆளாய் மாறினாள். படுத்தி எடுத்துவிட்டாள் வைஷ்ணவி, இங்க சரியில்ல, அங்க தெரிகிறது, அந்த பக்கம் மடிப்பு சரியில்லை என்று.

“இதெல்லாம் தேவையாடா? நான் தான் உன்ன சுடிதார்ல இருக்க சொன்னேன்ல?”

“த்தை அப்டிலாம் இருக்க முடியாது… நான் புடவை கட்டி, காபி கொண்டு வந்து தருவேன். எல்லாரும் பொண்ணு புடிச்சிருக்குன்னு சொல்லணும். சரியா?” அத்தையிடம் உத்தரவை கேள்வியாய் வைத்தாள்.

“கடைக்குட்டி சிங்கம் படத்துல இந்த டயலாக் பேசுன அந்த பொண்ண கார்த்தி கடைசி வர கல்யாணமே பண்ணிக்க மாட்டாரு… அங்கையும் கார்த்தி இங்கையும் கார்த்தி… ச்ச… என்ன ஒரு ஒற்றுமை” பூரித்த ஷெர்லினை வைஷ்ணவி எரித்தாள் பார்வையாலே.

“சொல்லிட்டா போச்சு. என் மருமக அழகு” வைஷ்ணவி நாடி பிடித்து கொஞ்சியவர் வெளியில் சென்றுவிட்டார்.

வைஷ்ணவியை வெளியில் அழைத்து வந்த மஹேஸ்வரி அனைவர் முன்பும் மகளை வணங்க கூறி நிற்க, “ஏன் ப்பா கேக்குறேன்னு தப்பா நெனைக்க வேணாம். உன்ற மகன் ரொம்ப பொறுப்பா இருக்காப்டி. உங்களுக்கு விருப்பம்ன்னா என்ற பேத்திய சித்தார்த்க்கு கல்யாணம் மூச்சுரலாம்” அங்கிருந்த எவரும் இதை நிச்சயம் எதிர்பார்க்கவே இல்லை.

சுபத்ராவிற்கு பயமும், ஆச்சிரியமும் சேர்ந்து தொற்றிக்கொண்டது. திருமணம், குடும்பம் என்றெல்லாம் மனதளவில் கூட தயாராகவில்லை அவள். வைஷ்ணவியின் தந்தைக்கு யோசனையானது.

பெண் கொடுத்து பெண் எடுப்பது வழக்கம் தான் ஆனால் ஏதோ ஒரு தயக்கம், மகனை பார்த்தார்… அவனோ நிலைகொள்ளாமல் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவன் சம்மதம் இல்லாமல் எந்த நிலை வந்தாலும் இதை பற்றி சம்மதம் தெரிவிக்க கூடாதென்று உறுதியாக இருந்தார்.

அதற்குள் அன்னையிடம் சுப்பிரமணி, “ம்மா என்ன ம்மா இது பேச்சு?”

“இதுல என்றா தப்பு இருக்கு? மனசுல பட்டது கேட்டுபோட்டேன்” – சேர்மத்தாய்.

“சுபத்ராக்கு இப்போ கல்யாணம் பண்ணனும்னு எண்ணமே எனக்கு இல்ல ம்மா… இன்னும் கொஞ்சம் நாள் எங்க கூடயே இருக்கட்டும்ன்னு மகா ஆசை” – சுப்பிரமணி

“இந்த வூடு என்ன பட்டணத்துலையா இருக்குது? கால் தடுக்குனா நம்ம வூடு தான் சுப்பிரமணி. கண்ணு முன்னாடியே தானே இருக்க போறா… நல்லது நடக்குறப்ப தானா நடக்கும்னு வுட்றனும். உன் வூட்டுக்காரிக்கு புரிய வைக்கிறது உன்ற பொறுபு. அந்த கல்யாணம் நடந்தா இந்த கல்யாணமும் தன்னால நடக்கும்”

“அத்தை என்ன அத்தை இது? கட்டாயப்படுத்துற மாதிரி இருக்கு. நம்மளோட விருப்பத்தை அவங்க மேல திணிக்க வேணாம்” – மஹாலக்ஷ்மி

“திணிக்கிறேனா? திணிக்கிற அளவு என்ற அம்மணிக்கு என்ன குறை?” சேர்மத்தாய்க்கு கோவம் வந்தது மருமகள் பேச்சில்.

“பிரச்சனை வேணாம் பாட்டி… நான் சுபத்ராவை கல்யாணம் பண்ணிக்கிறேன்” பிரச்சனை பெரிதாகவிருப்பது புரிந்து ஒடனே தன்னுடைய முடிவை தெரிவித்த மகனை குழப்பத்தோடு பார்த்தார் வைஷ்ணவி தந்தை.

“அம்மா சொல்றாங்கன்னு அவசரம் வேணாம் தம்பி. எப்படி இருந்தாலும் வைஷ்ணவி தான் எங்க வீட்டு மருமக. ஜாதகம், ரெண்டு பெருக்கும் பிடித்தம்னு எல்லாம் இருக்கு. யாரும் உங்கள வற்புறுத்தல. தப்பா நெனைக்க வேணாம் சார்” சித்தார்த்திடம் கூறி அவன் தந்தையிடம் மன்னிப்பை வேண்டினார் சுப்பிரமணி.

“இதுல தப்பா நெனைக்க என்ன இருக்கு? அந்நியமா நினைக்காம சம்மந்தி-னு உரிமையா சொல்லுங்க” மகனை பற்றிய பேச்சு தீவிரமாக போகும் முன்பு அப்டியே அதை விட்டுவிட முயன்றார் சுந்தரம்.

“சரிங்க சம்மந்தி. கல்யாணம் எப்ப, போ எப்ப வைக்கலாம்?”

வார்த்தைகள் திசை மாற்றத்தை பார்த்தவன் சேர்மத்தாய் தன்னை கவனிக்காதிருப்பது கவனித்து அமைதியாக அங்கிருந்து தன்னுடைய அறைக்குள் நுழையும் முன்பே சகோதரி கை பிடித்து நிறுத்தினாள், “ஏண்டா சீர்காழி சித்தார்த்து… நான் ஹீரோயின் மாதிரி நிக்க வேண்டிய இடத்துல நீ ஹீரோ ஆகிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி போற?”

“அதான நல்லா கேளுங்க சங்கி மங்கி… இங்க நான் ஒருத்தி இருக்கறப்ப வேற புள்ள பின்னாடி போகலாமா?” – ஷெர்லின்

“இந்த பென்சில் மீசை காரண கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நீ வடக்கன் ஒருத்தன புடிச்சிடலாம் அழகுராஜா” – வைஷ்ணவி

“போடி லூசு” சகோதரியின் பேச்சில் கடுப்பானவன் அவள் தலையில் அடித்து உள்ளே செல்ல, “சொல்லிட்டு போடா வீரபாகு”

“அவன் போய் ரெண்டு நாள் ஆச்சு. இங்கிட்டு திரும்பி பாரு… உன் ஆளே இல்லாம உனக்கு பூ வைக்க போறாய்ங்களாம் உன் குடும்பம்” சபையை நோக்கி தோழியின் கவனத்தை திருப்பினாள் ஷெர்லின்.

“அநியாயம்… அக்கிரமம்” பொங்கினாள் வைஷ்ணவி.

“அதே தான்” எரிமலையாய் பொங்கிய ஷெர்லின் வைஷ்ணவியிடம், “அதே ஆவேசத்த கண்ணுல வச்சு சேலய மடிச்சு கட்டிட்டு போய் கூட்டத்துக்கு நடுல நில்லு… உன் பேச்ச இனி எவனும் தட்ட மாட்டானுக” – ஷெர்லின்

“ஆமா… அதுக்கப்பறம் கல்யாணம்-னு ஒன்னு நடந்தா தானே தட்ட??”

வைஷ்ணவியின் மாடுலேஷன் சரியில்லாமல் போக நண்பியை திரும்பி பார்த்த பொழுது தான் அவள் எள்ளல் பேச்சு புரிந்தது ஷெர்லினுக்கு, “ஹிஹி… தமாசு தமாசு” சமாளித்துவிட்டாள் ஒரு வழியாக.

“பூ வைக்கிறது அடுத்த வாரம் வெள்ளி கிழமை இருக்கட்டும். கல்யாணம் கார்த்தி ஊர்ல இருந்து வந்ததும் வச்சுக்கலாம்” தினசரி நாட்காட்டியை பார்த்து கூறினார்.

“ஏங்க கார்த்தி இல்லாம எப்படி பூ வைக்கிறது?” தயக்கத்தோடு கணவனை பார்த்தார் மஹாலக்ஷ்மி.

“இப்போ வைக்கிறது தான் சரியா வரும் மருமகளே… என்ற பேரன் வரவே இன்னும் அஞ்சு மாசம் ஆகும். அப்றம் பூ வச்சு, கல்யாணம் இன்னும் நாளாகும். இப்பயே வச்சுப்போட்டா தான் சரியாப்படும்” என்றார் சேர்மத்தாய்.

அவர் கூறுவதும் சரியாக பட, “சரிங்க அத்தை” என்றார் மஹாலக்ஷ்மி.

“அப்றம் சீர் செனத்தை எல்லாம் என்ன பண்ணுவீங்க?” – சேர்மத்தாய்.

அன்னையை பார்வையால் கெஞ்சிய சுப்பிரமணி சுந்தரிடம் திரும்பி, “அம்மா அந்த காலத்து மனுசங்க அதான் அவசரத்துல கேட்டுட்டாங்க, நல்லது கெட்டது சொல்லி தர்ற ஒரு வாத்தியாரா இருந்துட்டு நான் இதெல்லாம் கேக்குறது தப்பு. உங்க மகளுக்கு நீங்க என்ன பண்ணணுமோ அத பண்ணுங்க.

அது எதுலயும் ஒரு ரூபா என் பையனோ, நாங்களோ எடுக்க மாட்டோம். எங்க பசங்க தான் எங்களோட உயிரே அவங்க அவங்க குடும்பத்தோட சந்தோசமா இருந்தா அதுவே எங்களுக்கு போதும்” என்றார். மஹேஸ்வரிக்கும், சுந்தருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி அவரது பேச்சில்.

சுப்ரமணியிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியுள்ளார் தான் ஆனால் அவரது குண நலன்களை பற்றியும், கார்த்தியை பற்றியும் முழுதாக அவர்கள் வாழ்ந்த பழைய இடத்தை பிடித்தால் தானே தெரிந்துகொள்ள முடியும், அது சாத்தியப்படாது என்று தெரிந்தது, ஆனால் இப்பொழுது சுப்ரமணியன் எதார்த்தமான பேச்சும், மஹாலக்ஷ்மி வைஷ்ணவியை ரசித்து சிரிப்போடு பார்ப்பதை பார்த்தும் இருந்த சிறு கவலைகள் கூட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை போலே மனம் நிம்மதியடைந்தது.

“ரொம்ப சந்தோசமா இருக்கு சம்மந்தி… என் பொண்ண பத்தி நாங்க கவலையே பட வேண்டாம். ஆனாலும் நாங்க எங்களால முடிஞ்ச அளவு நகை சேத்து வச்சிருக்கோம். வைஷ்ணவிக்கு அறுவது பவுன், மாப்பிள்ளைக்கு அஞ்சு பவுன் போடுவோம். அது போக பண்ட பாத்திரம், கட்டில், பீரோ எல்லாம் வாங்கிடலாம்”

“அதெல்லாம் வேணாம் அண்ணா. வீட்டுல எல்லாமே இருக்கு” – மஹாலக்ஷ்மி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!