Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 19 2

“அம்மா நான் உன்னை அதிகமா பேசிட்டேன்னு தெரியும். ஆனா சுஜி பாவம் மா. நீ அவளை கஷ்டப் படுத்துறதுனால தான் சொன்னேன். உனக்கு புரியுதா?”, என்று அன்னையை சமாதானப் படுத்தினான்.

“இப்ப புரியுதுப்பா. சுஜியோட அருமை எனக்கு இப்ப தெரிஞ்சிருச்சு”, என்று மல்லிகா சொல்ல “சரி என்ன விஷயம் பேச வந்த?”, என்று கேட்டார் பாரி.



Advertisement

“வெண்ணிலா கல்யாணம் விஷயம் பேசணும் பா”, என்று புவி சொல்ல பாரி யோசனையில் ஆழ்ந்தார்.

Advertisement

“அவ தான் வேண்டாம்னு பிடிவாதமா இருக்காளே? அந்த படுபாவி வெங்கட் இவளை வேண்டாம்னு சொல்லி அடுத்த மாசமே வேற கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டான். ஆனா இவ மட்டும் இப்படி இருக்கா”, என்று புலம்பினாள் மல்லிகா.

Advertisement

“நாம பாக்குற மாப்பிள்ளையை தானே வேண்டாம்னு சொல்றா. அவளுக்கு பிடிச்ச மாப்பிள்ளையை கொண்டு வந்தா ஒரு வேளை சம்மதிக்கலாம்ல?”, என்று புவி சொன்னதும் “என்னப்பா சொல்ற?”, என்று கேட்டார் பாரி.

Advertisement

“வெண்ணிலாவுக்கு சின்ன வயசுல இருந்தே பரணி மாமாவை ரொம்ப பிடிக்கும். பேசாம மாமாவுக்கே வெண்ணிலாவை கட்டி வச்சிறலாமா?”, என்று புவி கேட்க இருவருமே அதிர்ந்து போனார்கள்.

“அது வேண்டாம் பா. வெண்ணிலாவுக்கு கல்யாணம் முடியுறதுக்கு முன்னாடி பரணியை அவளுக்கு பாத்திருந்தா நல்லா இருந்துருக்கும். ஆனா இப்ப ரெண்டாந்தாரமா அவனுக்கு பொண்ணைக் கொடுத்தா ஊர் என்ன பேசும்? அவனே என்ன நினைப்பான்? அம்மா அப்பா இல்லைன்னு ரெண்டாந்தாரமா கட்டி வச்சிட்டாங்கன்னு தானே நினைப்பான்? நாம வளத்த ஆட்டை நாமளே பழி கொடுக்குற மாதிரி ஆகிரும்”, என்று மறுத்தார் பாரி.

“நம்ம மாமா அப்படி எல்லாம் நினைக்க மாட்டார் பா”

“இப்ப வேண்டாம் புவி. நாம முன்னாடியே அவனுக்கு வெண்ணிலாவைக் கட்டி வச்சிருக்கலாம். உங்க அம்மா தான் பணம் பணக்காரங்கன்னு அலையுவா. கடைசில இப்படி ஆகிருச்சு”

“நான் முன்னாடி தான் அப்படி இருந்தேன். இப்ப அப்படி இல்லைங்க. நாம பரணி கிட்ட பேசலாம். அவன் நாம வளத்த பிள்ளைங்க. எப்படியும் அவனும் கல்யாணமே வேண்டாம்னு சொல்றான். வெண்ணிலாவைச் சொன்னா அவனும் அவளுக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு முடிவு எடுப்பான்ல?”, என்றாள் மல்லிகா.

“ஆமா பா. வெண்ணிலாவைச் சொன்னா கண்டிப்பா மாமா கட்டிக்குவாங்க”, என்று சொன்னான் புவி.

“வெண்ணிலா மாட்டேன்னு சொல்லுவா புவி”

“ரெண்டு பேர் கிட்டயும் சம்மதம் வாங்குறது என்னோட பொறுப்பு”, என்று புவி சொல்ல “அப்படின்னா எங்களுக்கு சம்மதம். பிள்ளைங்க சந்தோஷம் தானே எங்களுக்கு முக்கியம்”, என்றார் பாரி.

அதற்கு பிறகு புவி, சுஜி, பவித்ரா, வெண்ணிலா நான்கு பேரும் மைதிலியைக் காண சுஜியின் பிறந்த வீட்டுக்கு சென்றார்கள். அவர்கள் வந்ததும் வீடே கொண்டாட்டமாக இருந்தது.

அங்கிருந்து கிளம்பும் போது “பவி குட்டிக்கு மூணு வயசு ஆகிருச்சு சுஜி. இன்னொரு குழந்தையை பெத்துக்க இது தான் சரியான நேரம்”, என்று சொன்னாள் சுந்தரி.

“சரி மா”, என்று சுஜி வெட்கத்துடன் முணுமுணுக்க வீட்டுக்குச் செல்லலாமா என்று கேட்க வந்த புவி சுந்தரி பேசியதையும் மனைவி முகத்தில் வந்து போன வெட்கத்தையும் பார்த்து விட்டான். அவனுக்கு அவள் மேல் இருந்து பார்வையை திருப்ப முடியவில்லை.

அங்கிருந்து கிளம்பும் போது கடை திறப்பு விழாவுக்கு அனைவரையும் முறைப் படி அழைத்தான் புவி. அவர்களும் வருகிறோம் என்று சொல்லி விடை கொடுத்தார்கள்.

வீட்டுக்கு வரும் போது பவித்ரா வெண்ணிலாவின் மடியில் படுத்து தூங்கி விட எதுவும் தெரியாதது போல “வெண்ணிலா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்”, என்றான் புவி.

அவள் அதிர்ச்சியாக சுஜியைப் பார்க்க அவளோ பொறுமையாக இருக்கும் படி கண்ணைக் காட்டினாள். அதனால் “கல்யாணம் எல்லாம் வேண்டாம் அண்ணா. என்னால இன்னொரு குடும்பத்துல தெரியாதவங்க கூட போய் இன்னொரு உறவை ஏற்படுத்த முடியாது. இதுக்கு தான் நான் ஊருக்கு வர மாட்டேன்னு சொன்னேன்”, என்றாள் வெண்ணிலா.

“கல்யாணம் முடிஞ்சா நீ யார் வீட்டுக்கும் போக வேண்டாம். நம்ம வீட்லயே இருக்கலாம். ஏன்னா மாப்பிள்ளை நம்ம பரணி மாமா தான். நீ அவரைக் கல்யாணம் பண்ணலைன்னா காலம் முழுக்க தனியா தான் இருப்பாங்க. அவர் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டார். இப்ப நீ தான் சொல்லணும்”, என்றான் புவி.

பரணி சம்மதித்து விட்டான் என்று சொன்னதும் எழுந்த சந்தோஷத்தை மறைத்துக் கொண்டு “உங்க இஷ்டம் அண்ணா”, என்று சாதாரணமாக சொல்வது போல சொன்ன வெண்ணிலா சந்தோசத்தில் சுஜியைக் கட்டிக் கொண்டாள். தங்கையின் சந்தோஷத்தை பாராதது போல பார்த்து நிம்மதி கொண்டான் புவி.

வீட்டுக்கு வந்ததும் பரணி மற்றும் வெண்ணிலா இருவரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டார்கள் என்று புவி பெரியவர்களிடமும் மகேஷ் மற்றும் ரேணுகாவிடமும் சொல்ல அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம். வெண்ணிலாவுக்கு வாழ்க்கை கொடுப்பதற்காக பரணியை புகழ்ந்து தள்ளினார்கள்.

அவர்கள் புகழ்ச்சியில் அவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது. உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் அதைச் சொல்ல அவளுக்கு செய்த சத்தியம் விட வில்லை.

கடை திறப்பு நாளிலே அவர்கள் திருமணத்தை செய்து வைக்க முடிவு எடுத்தார்கள். வீட்டு உறுப்பினர்கள் மட்டும் இருந்தால் போதும் என்று புவி சொல்லி விட்டான். அதை விடுத்து சுஜியின் பிறந்த வீட்டுக்கும் ரேணுகாவின் வீட்டுக்கும் மட்டும் அழைப்பு விடப் பட்டிருந்தது.

கடை திறக்கும் நாளில் அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள். கடைக்கு பவித்ரா பெயரைத் தான் புவி வைத்திருந்தான். அனைவரும் வந்ததும் சுஜியின் கையில் கத்திரிக்கோலைக் கொடுத்து ரிப்பன் வெட்டச் சொல்லி மனைவியை பெருமை படுத்தினான் புவி.

கடை திறப்பு விழா நல்ல படியாக முடிந்த பின்னர் அனைவரும் கோவிலுக்கு சென்றார்கள். வீட்டு ஆட்கள் முன்னிலையில் வெண்ணிலா கழுத்தில் தாலி கட்டினான் பரணி.

இரண்டாவது திருமணம் என்பதால் இந்த கல்யாணத்தை பிரம்மாண்டமாக செய்ய யாரும் விரும்ப வில்லை. விஷயம் கேள்விப் பட்ட வெங்கட் மற்றும் அருணாவுக்கு சந்தோஷம். ஆனால் அவர்கள் வர முடியாது என்று வருத்தப் பட்டார்கள். ஏனென்றால் உண்மை இன்னும் யாருக்கும் தெரியாமல் இருக்க வெங்கட் இங்கே வந்தால் நிச்சயம் அவனுக்கு அடி உதை தான் கிடைக்கும் என்பதால் வெண்ணிலா அவர்களை சமாதானப் படுத்தினாள்.

பரணியின் அறைக்குள் முதலிரவுக்காக அனுப்ப பட்டாள் வெண்ணிலா. அவன் அவளை தயக்கமாக பார்க்க அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட்டாள்.

அவன் திகைப்பாக பார்க்கும் போதே அவள் நிம்மதியாக உறங்க ஆரம்பித்து விட்டாள். அவனுக்கு தான் உறக்கம் வர வில்லை. இந்த உறக்கம் எத்தனை நாள் கனவு என்று அவளுக்கு தானே தெரியும்?

இங்கே புவியின் அறையிலோ எப்போதும் இல்லாமல் இன்று அதிகமாகவே மனைவிக்காக தவம் இருந்தான். அவள் நினைவே அவன் மனதில் ஓடியது. இத்தனை நாள் அவளை கஷ்டப் படுத்தி விட்டோமே என்று குற்ற உணர்வாகவும் இருந்தது.

அவன் நினைத்திருந்தால் எல்லாவற்றையும் சரி செய்திருக்க முடியும்? அப்படி இருந்தும் ஏன் அப்படிச் செய்யாமல் இருந்தோம் என்று தன்னுடைய தலையிலே தட்டிக் கொண்டான். இத்தனை நாள் ஏக்கத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் போல தாகம் எழுந்தது.

எப்போதும் போல எல்லா வேலைகளையும் முடித்த சுஜிக்கு நிச்சயம் ஒரு படபடப்பு எழத் தான் செய்தது. வெண்ணிலா வாழ்க்கை சரியாகும் வரை தான் அந்த பிரிவு. இப்போது வெண்ணிலா வாழ்வு சீராகி விட தங்கள் வாழ்வு எப்படி மாறும் என்ற எதிர்பார்ப்பு கிளர்ந்தது.

கூடவே இன்று முழுவதும் அவனுடைய கண் பேசிய பாஷைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவள் ஆகிற்றே. இரவு உணவின் போது கூட “வெண்ணிலாவை விட்டுட்டு சீக்கிரம் ரூமுக்கு வந்துரு”, என்று அவளுடைய காதில் முணுமுணுத்து விட்டே சென்றிருந்தான்.

எப்படி இருந்தாலும் அவள் சென்று தானே ஆக வேண்டும் என்ற உண்மை புரிய தடுமாற்றத்துடன் அறைக்குள் சென்று கதவை அடைத்தது தான் தெரியும்.

“ஐ லவ் யு சுஜி..”, என்ற படி அவளை வாரிச் சுருட்டிக் கொண்டான் புவி. இருவருக்கும் இடையே காற்று கூட புக முடியாத அளவு நெருக்கம் வந்தது.

அவனுடைய இதழ்கள் தன்னுடைய தாகத்தை தணித்துக் கொள்ள அவள் உதடுகளை நாட கரங்களோ அவள் மேனியில் தடம் பதித்தது.

அவனை பொறுமையாக இருங்க என்று சொல்லக் கூட முடியாமல் திணறியவள் வேறு வழி இல்லாததால் என்னமும் செய்து கொள் என்பது போல அவன் கரங்களுக்குள் அடங்கி விட்டாள்.

முதல் முறை அவர்கள் கூடலின் போது திருமணம் என்றால் என்ன? முதலிரவு என்றால் என்ன என்று தெரியாத போதே அவளை ஆசையாக அதிகம் நாடியவன் இன்று அவள் மனம் புரிந்த பிறகு சும்மாவா இருப்பான்?

மூச்சு திணறத் திணற அவளை முத்தமிட்டவன் தன்னுடைய மூச்சுக் காற்றை அவளுக்கு வழங்கினான். அவனுடைய கரங்கள் இரண்டும் அவளை முழுமையாக உணர அவன் தொடுகையில் உருகிக் கொண்டிருந்தாள் சுஜி.

“என்னங்க பாப்பா இருக்கா”, என்று திக்கித் திணறி அவள் சொல்ல “பிள்ளைங்க இருக்குற யாரும் ஒண்ணா இருக்குறது இல்லையா? அவ நல்லா தூங்குறா. நீ ஏதாவது பேசி அவளை எழுப்பிறாத”, என்று சொல்லி மீண்டும் அவள் வாயை அடைத்தான்.

“கொஞ்சம் பேசணும்”, என்று அவள் சொல்ல “அதெல்லாம் அப்புறம். எவ்வளவு வருசத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்? அதை சரி செய்ய வேண்டாமா? இன்னும் ஒரு நாள் கூட என்னால வெயிட் பண்ண முடியாது டி பிளீஸ்”, என்று வெட்கத்தை விட்டு அவளிடம் கெஞ்சினான்.

இதற்கு மேல் அவனுடைய அன்பிற்கு சாட்சியாக என்ன வேண்டுமாம்? அவன் அவளுடைய கணவன். அவளுக்கே உரிமையான காதலன் என்ற உணர்வு சற்று கூடுதலாக எழ அவனுடைய கன்னங்களை தன்னுடைய கரத்தால் தாங்கிப் பிடித்தவள் முதல் முறையாக அவன் இதழ்களில் முத்தமிட்டாள். அவர்கள் வாழ்க்கை அங்கே மீண்டும் மலர்ந்தது.

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!