Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 3 3

“சரி கேக்குறேன். இப்ப நீ சென்னையில இறங்கிட்டேன்னு சொல்லு. நான் கேக்குறேன்”

“இல்லை மா. நான்…”



Advertisement

“அப்படின்னா நீயும் கல்யாணம்னு சொல்லிட்டு எவளையோ இழுத்துட்டு போய்ட்டியா? உன் அண்ணன் மாதிரி தான் நீயும்னு நிரூபிச்சிட்டல்ல? இனி நீ எங்களுக்கு வேண்டாம் டா. நான் என் பொண்ணுங்களைப் பாத்துக்குவேன். என் முகத்துல முழிக்காத”, என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.

Advertisement

அம்மா பேச்சில் அவன் விக்கித்து நிற்க இங்கே கோபத்தில் இருந்த பார்வதியை மதி திட்டினாள். அன்னையின் குரல் கேட்டதும் அவளுக்கு விழிப்பு வந்து விட்டது. பார்வதி அண்ணனைத் திட்டவும் மதிக்கு கோபம் வந்தது.

Advertisement

“எனக்கு என்ன இன்னைக்கு கல்யாணமா நடக்கப் போகுது? பொண்ணு தானே பாக்க வறாங்க? அதுக்குன்னு அண்ணாவை இப்படித் திட்டுவியா? அதுக்கு என்ன பிரச்சனைன்னு கூட தெரியலை. இந்த நேரத்துல போன் பண்ணிருக்கு? அதைக் கூட விசாரிக்காம ஏன் மா இப்படி பேசுற?”

Advertisement

“பேசாம போயிரு டி, தங்கச்சி முக்கியம் இல்லைன்னு நினைக்கிறவன் எனக்கு பிள்ளையே இல்லை. மூத்தவன் கழுத்தை அறுத்த மாதிரியே இவனும் செஞ்சிட்டான். இப்படி பாசமே இல்லாத ரெண்டு கல்லு பிள்ளைகளைப் பெத்து வச்சிருக்கேன்?”

“நீ ஆயிரம் சொன்னாலும் நான் என் அண்ணனை நம்புறேன். அண்ணா அப்படி எல்லாம் செய்யாது”, என்று சொல்லி மதி மீண்டும் சிவனை அழைக்கும் போது அங்கே நர்ஸ் அவனிடம் ஹாஸ்பிட்டல் பில் பேப்பரை நீட்டிக் கொண்டிருந்தாள்.

நாப்பதாயிரம் என்று அதில் இருக்க திகைத்து நின்றவன் தங்கையின் போனைக் கட் பண்ணி விட்டான். அடுத்து என்ன செய்ய என்று கூட அவனுக்கு தெரியவில்லை.

அவனுடைய அக்கவுண்டில் பணம் இருக்கிறது தான். ஆனால் அதற்கான ஏ.டி.எம் அவன் பர்சில் அல்லவா மாட்டி இருக்கிறது. “பணம் கட்டிருங்க. நான் பாடியைக் கொண்டு போக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்றேன்”, என்று சொல்லி விட்டு சிஸ்டர் செல்ல அவனோ அந்த பேப்பரை வெறித்து பார்த்துக் கொண்டு நின்றான்.

கையில் ஐயாயிரம் பணத்தை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்ய முடியும்? கருப்பட்டியிடம் கேட்டால் ஏதாவது ஏற்பாடு செய்வான் தான். ஆனால் பல கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் அவனால் எப்படி இங்கே உதவ முடியும்?

கணவனின் மார்பில் விழுந்து கதறிய கண்மணி மருத்துவமனை ஊழியர்கள் வந்து இளவரசனின் உடலை எடுத்துச் செல்லவும் வெளியே வந்தாள். இளவரசன் உடல் உறுப்புக்களைத் தானம் செய்திருந்ததால் அவனைக் கொண்டு சென்றார்கள்.

கலங்கிய கண்களுடன் வெளியே வந்தவளின் கண்ணில் பட்டான் திகைத்த படி நின்ற சிவன். அவன் பார்வையும் அவன் கையில் இருந்த பேப்பரும் அது மருத்துவமனை பில் என்று புரிந்தது.

வேகமாக அவனை நெருங்கியவள் தன்னுடைய பையை எடுத்து அதில் இருந்து ஏ.டி.எம் கார்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

அவன் அவளைப் பார்க்க “இந்தா சிவா. இதுல பணம் இருக்கும். எவ்வளவு கட்டணுமோ கட்டிரு. அப்படியே செலவுக்கும் பணம் எடுத்துக்கோ. நம்பர் பன்னிரெண்டு பத்து”, என்றாள்.

அந்த நேரத்தில் அவளிடம் பணம் வாங்குவது அவமானமாக தான் இருந்தது. அவனுடைய அண்ணனுக்கு செய்ய வேண்டியது அவனுடைய கடமை அல்லவா? ஆனால் அவனால் அது முடிய வில்லை. அவளிடம் அதை வாங்குவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இருக்க வில்லை. அதை வாங்கிச் சென்றவன் முதலில் மருத்துவமனைக்கான பணத்தை செலுத்தினான். பின் கையில் பணம் இருப்பதால் ஏ.டி.எம் செல்லாமல் அவள் அருகே வந்து அதை நீட்டினான்.

“நீயே வச்சிக்கோ சிவா. செலவுக்கு இதுல இருந்து எடுத்துக்கோ”, என்று சொன்னவள் ஏங்கி ஏங்கி ஒப்பாரி வைக்க வில்லை. அமைதியாக அழுது கொண்டிருந்தாள். கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக பொழிந்தது. அவளது துக்கம் அவனுக்கும் புரிந்தது. ஆனால் இதற்கு யாரால் என்ன ஆறுதல் சொல்ல முடியும்?

அவன் இழந்தது ஒரு உறவை என்றால் அவள் இழந்தது அவளுடைய வாழ்க்கையை அல்லவா? “அழாதீங்க, அண்ணன் திரும்பி வந்துருவான்?”, என்றா அவளிடம் சொல்ல முடியும்? அதனால் அமைதியாக நின்றான்.

“அண்ணாவை ஊருக்கு கொண்டு போய்றலாமா?”, என்று கேட்டான் சிவன்.

“ஆமா, உங்க அப்பாவோட காலடில இளாவை அடக்கம் பண்ணனும். அது தான் அவன் ஆசை”, என்று கசந்த குரலில் சொன்னாள் கண்மணி.

“சரி இங்க எல்லாம் முடிஞ்சதும் போகலாம். இங்க யாருக்காவது தகவல் சொல்லணுமா?”

“வேண்டாம், நாங்க திருப்பூர் வந்து ஒரு மாசம் தான் ஆகுது. இங்க வேற யாரையும் எனக்கு தெரியாது”

“அதுக்கு முன்னாடி எங்க இருந்தீங்க? அங்க இருக்குறவங்களுக்கு சொல்லனுமா? உங்க சொந்தக்காரங்களுக்கு சொல்லணும்ல?”, என்று கேட்டான் சிவன்.

“இதுக்கு முன்னாடி ஒசூர்ல இருந்தோம். இளாவோட ஆஃபிஸ்ல வேலை பாக்குறவங்களைத் தவிர வேற யாரையும் எனக்கு தெரியாது. அவங்க எல்லாரையும் தேடிப் பிடிச்சு எல்லாம் சொல்ல அவசியம் இல்லை. அப்புறம் எனக்கு சொந்தக்காரங்கன்னு யாருமே இல்லை”, என்று சொல்ல அவனுக்கு அவளை நினைத்து வேதனையாக இருந்தது.

“கவலைப்படாதீங்க. இனி நாங்க உங்களுக்கு இருக்கோம்”, என்றான் சிவன். அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள். ஆனால் வேறு எதுவும் சொல்ல வில்லை.

அடுத்த ஒரு மணி நேரத்தில் இளாவின் உடலை வாங்கிக் கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட்டது. வண்டி கிளம்பியதும் உடனே கருப்பட்டியை அழைத்தான். அதை எடுத்து “சொல்லு மச்சான், என்ன டா இன்னும் கால் பண்ணலையேன்னு நினைச்சேன்? பஸ் ஸ்டாண்ட்க்கு வரட்டா டா?”, என்று கேட்டான்.

“வேண்டாம் டா”

“அப்ப நீயே வந்துறியா? சரி நான் முன்னாடி போய் கடையை திறந்துறேன். நீ பின்னாடி வா”

“கருப்பட்டி….”

“என்ன டா?”

“இன்னைக்கு கடை திறக்க வேண்டாம் டா”

“திறக்க வேண்டாமா? ஏன் என்ன ஆச்சு சிவா? உன் குரல் வேற சரி இல்லை”

“அண்ணா இறந்துட்டான் டா, பாடியை ஊருக்கு தான் கொண்டு வந்துட்டு இருக்கேன்“

“என்ன மச்சான் சொல்ற? இளா அண்ணனா?”

“ஆமா டா, மதியம் பன்னிரெண்டு மணி போல வந்துருவோம். வீட்ல இருக்குறவங்களுக்கு இன்னும் தெரியாது. நீயே சொல்லிரு டா. அப்புறம் அடக்கத்துக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணு டா. இன்னைக்கே அடக்கம் பண்ணனும். அம்மா கிட்ட பக்குவமா சொல்லு. அப்புறம் மத்த ஏற்பாடுக்கு பணம்…”

“அதை நான் பாத்துக்குறேன் டா”, என்று சொல்லி போனை வைத்த கருப்பட்டி உடனடியாக சுந்தரியிடம் சொல்லி விட்டு சிவன் வீட்டுக்கு சென்றான்.

“வாடா கருவாயா? என்ன காலைலே வந்துருக்க? உன் நண்பன் தூது அனுப்புனானா?”, என்று கேட்டாள் செல்வி.

“உன் கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா?”, என்று செல்வியைப் பார்த்துக் கேட்டவன் பார்வதி அருகில் சென்று அமர்ந்து “அம்மா”, என்றான்.

“என்ன டா சொல்லப் போற? சிவாவும் எவளையாவது இழுத்துட்டு ஓடிட்டான்னா?”, என்று கேட்டாள் பார்வதி.

“லூசு மாதிரி பேசாத மா. என்ன நிலைமைன்னு தெரியாம அண்ணனை ஏசிக்கிட்டு”, என்று சுள்ளென்று கேட்டான்.

“ஏசாசம என்ன டா செய்ய? இன்னைக்கு சாயங்காலம் இவளை பொண்ணு பாக்க வராங்க. அந்த நினைப்பு இல்லாம அவன் எங்க போய் ஒழிஞ்சான்?”

“எங்கயும் ஒழியலை. உன் மூத்த மகன் பிணத்தை தூக்கிட்டு ஊருக்கு தான் வந்துட்டு இருக்கான். போதுமா?”, என்று பட்டென்று அவன் விசயத்தைச் சொல்ல அனைவரும் அதிர்ந்தார்கள்.

தூங்கி எழுந்து அமர்ந்திருந்த மதி மற்றும் வெண்ணிலா கூட அவன் சொன்னதைக் கேட்டு அவசரமாக வெளியே வந்து விட்டார்கள்.

“எலேய் கருப்பட்டி நீ என்னல சொல்ற?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டாள் பார்வதி.

“உண்மையா தான் மா சொல்றேன். இளா அண்ணன் இறந்துருச்சாம். அதோட உடலை வாங்கிட்டு தான் சிவா வந்துட்டு இருக்கான். மதியம் வந்துரும். எல்லா ஏற்பாடும் பண்ணனும்”, என்று அவன் சொல்ல அடுத்த நொடி அனைவரும் அழுத சத்தத்தில் சொந்த பந்தங்கள் அக்கம் பக்கத்தினர் அனைவரும் அங்கே கூடி விஸேஷம் நடக்க வேண்டிய அந்த வீடு இழவு வீடானது.

வண்டியில் வந்து கொண்டிருந்த சிவன் தன்னுடைய போனில் இருந்து அவனுடைய சொந்தக்காரர்களுக்கு தகவல் சொன்னான். முதல் ஆளாக செல்வியின் புகுந்த வீட்டுக்கும் சொன்னான். உடனே கிளம்பி ஊருக்குப் போவதாக சொல்லி போனை வைத்த செந்திலும் இப்படி ஒரு நிகழ்வை எதிர் பார்க்க வில்லை.

செந்திலுக்கு செல்விக்கு இளவரசன் என்று ஒரு அண்ணன் இருக்கிறான் என்று மட்டும் தான் தெரியும். மத்த படி வேறு எந்த விவரமும் தெரியாது. ஆனாலும் முகம் தெரியாத மச்சானுக்காக அவன் மனம் வேதனை கொண்டது.

உடனே செல்விக்கு அழைத்தான். அவள் கதறிய கதறலில் அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு அப்பா அம்மா தங்கையைக் கிளம்பச் சொல்லி அவனும் கிளம்பச் சென்றான்.

மதியம் ஒரு மணி போல ஆம்புலன்ஸ் ஊர் அருகே வந்தது. கண்களை மூடி இறுக்கத்தில் இருந்த கண்மணியைப் பார்த்தான் சிவன். தனக்கே இப்படி என்றால் அவளுக்கு எப்படி இருக்கும் என்று அவனுக்கு புரிந்தது.

ஆம்புலன்ஸ் அவனது வீட்டை நோக்கிச் செல்ல அவனது இதயம் பல மடங்காக துடித்தது. வீட்டின் முன்னால் ஆம்புலன்ஸ் நின்றதும் அனைவரும் அதை நோக்கி ஓடி வந்தார்கள்.

முதல் ஆளாக கீழே இறங்கி தாயை ஒரு கையால் அணைத்துப் பிடித்தவன் கருப்பட்டியை கண்ணால் அழைத்தான். கருப்பட்டி, ஆம்புலன்ஸ் டிரைவர், செந்தில் மூவரும் சேர்ந்து இளவரசனை வீட்டின் வராண்டாவில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தார்கள். அடுத்த நொடி பார்வதி மூன்று தங்கைகள் அவனைக் கட்டிப் பிடித்துக் கதற ஆரம்பித்தார்கள்.

ஆம்புலன்சில் இருந்து இறங்கிய கண்மணிக்கு அடுத்து என்ன செய்ய என்று கூட தெரியவில்லை. உள்ளே போகலாமா வேண்டாமா என்று கூட புரிய வில்லை. அனைவரும் அவளையே பார்ப்பது போல இருந்தது.

கண்களில் நீர் வழிய பரிதாபமாக நிற்க அவளைப் பார்த்த கருப்பட்டிக்கு வேதனையாக இருந்தது. வீட்டுக்குள் சென்று சிவனை அழைத்து வந்த கருப்பட்டி கண்மணியை காட்டி ஏதோ சொன்னான்.

உடனே சிவன் அவள் அருகே வந்து அவள் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு இளவரசனின் தலைப்பக்கம் போடப் பட்டிருந்த ஒரு இருக்கையில் அவளை அமரச் சொன்னான்.

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!