Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 3 2

மகனிடம் இருந்து இன்னும் அழைப்பு வரவில்லையே என்று அந்த தாய்க்கு வேதனையாக இருந்தது. வந்து விடுவானா? இல்லை மூத்தவன் போல பொறுப்பை தட்டிக் கழித்து விட்டுச் சென்று விடுவானா என்ற பயம் அரித்தது. சிவன் அப்படிக் கிடையாது என்றாலும் அந்த தாய்க்கு கொஞ்சம் நம்பிக்கை குறைவாக தான் இருந்தது.

காரில் பயணம் செய்து கொண்டிருந்த சிவனுக்கு கருப்பட்டியை அழைத்து தகவல் சொல்ல வேண்டும் என்று கூட நினைவில் இல்லை.



Advertisement

கருப்பட்டியும் அவனே அழைப்பான் என்று எண்ணி தொல்லை செய்ய வில்லை. அதிகாலை மூன்று மணி போல அந்த தனியார் மருத்துவமனை முன்பு இறங்கினான் சிவன். அவன் பணத்தை எடுத்து டிரைவரிடம் நீட்ட “வேண்டாம் தம்பி, ஐயா உங்க கிட்ட பணம் வாங்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. மீறி வாங்கினா என் வேலை போயிரும். நான் கிளம்புறேங்க தம்பி, விடிஞ்சதும் விருந்து அது இதுன்னு இருக்கு. அவங்களுக்கு கார் தேவைப்படும்”, என்று சொன்னதும் அவருக்கு நன்றி சொல்லி விடை கொடுத்தான் சிவன்.

அவர் சென்றதும் அவசரமாக உள்ளே சென்றான். மருத்துவமனையே அமைதியாக இருந்தது. ரிசப்ஷனில் இருந்த பெண் அரை தூக்கத்தில் இருந்தாள். அவளை நெருங்கி “இங்கே இளவரசன்னு ஒரு பேசன்ட் அட்மிட் ஆகிருக்காங்க. அவங்க எங்க இருக்காங்க?”, என்று கேட்டான்.

Advertisement

Advertisement

“ஐ. சி. யு ல இருக்குறவங்களா?”

“ஆமா”

Advertisement

“அதோ அந்த பக்கம் போங்க”, என்று சொல்ல அங்கே பரபரப்பாக சென்றான். ஊரே உறங்கி கொண்டிருக்கும் அந்த வேளையிலும் ஹாஸ்பிட்டல் லேசான பரபரப்புடன் தான் இருந்தது. டீ வாங்கிக் கொண்டு சிலர் நடந்து கொண்டு தான் இருந்தார்கள்.

அவன் ஐ.சி.யுவை நெருங்கிய போது அங்கிருந்த சேரில் தலை குனிந்து ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் கை கால்கள் அசைவதிலே அவள் உறங்க வில்லை என்று புரிந்தது. கூடவே அவள் தான் கண்மணி என்றும் புரிந்தது.

அண்ணனுக்கு என்ன ஆனதோ என்று படபடப்பாக இருந்ததால் வேகமாக அவளை நெருங்கி “என்னங்க?”, என்று அழைத்தான்.

அவன் அழைப்பில் நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கலங்கிச் சிவந்திருந்தது. அவனைக் கண்டதும் “சிவா”, என்று அழைத்தாள்.

“ஆமா…. அண்ணன்….”

“என் கூட வா”, என்று சொன்னவள் அந்த ஐ.சி.யு அறைக்குள் நுழைந்தாள். அங்கு அமர்ந்திருந்த டியூட்டி நர்ஸ் அவர்களை நிமிர்ந்து பார்க்க “இவர் இளாவோட தம்பி சிஸ்டர். அவரைப் பாக்கட்டும்”, என்றாள்.

“சரி ரொம்ப பேச வேண்டாம். நீங்க வெளிய இருங்க மா. அவர் மட்டும் போய் பேசட்டும். நீங்க வாங்க சார்”, என்று சொன்ன அந்த நர்ஸ் எழுந்து நடக்க தன்னுடைய பேகைக் கழட்டி எங்கே வைப்பது என்று விழித்தான். கண்மணி கையை நீட்ட அவள் கையில் கொடுத்து விட்டு அந்த சிஸ்டர் பின்னே சென்றான்.

அங்கு ஒரு கட்டிலில் தளர்ந்து போய் படுத்திருந்தான் இளவரசன். அவன் தோற்றம் இந்த ஆக்ஸிடெண்டால் முற்றிலும் மாறி இருந்தது. அவன் தலையில் கட்டு, கை கால்களில் கட்டு. அவனது இயத் துடிப்பு பீப் பீப் என்ற வகையில் தான் இருந்தது. ஏதேதோ கருவிகளை மாட்டி இருந்தார்கள்.

அவன் அருகே சென்று “சார்”, என்று அழைத்தாள் அந்த சிஸ்டர். சிறிது நேரத்திற்கு பிறகு தான் அவள் பக்கம் திரும்பினான் இளவரசன். அவள் அருகில் நின்ற சிவனைக் கண்டு அவன் கண்கள் மின்னியது.

செயற்கை சுவாசம் பொருத்தி இருந்த கருவியை அகற்றுமாறு கையைக் கொண்டு செல்ல சிஸ்டரே அதை அகற்றி “சீக்கிரம் பேச வேண்டியதை பேசிடுங்க சார்”, என்றாள்.

தம்பியையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். சிவாவும் தன்னுடைய அண்ணனைத் தான் பார்த்தான். அண்ணனின் நிலைமை அவனைக் கலங்க வைத்தது. அவனால் சட்டென்று எதையும் பேசி விட முடிய வில்லை.

“எப்படி இருக்க சிவா?”, என்று திக்கித் திணறிக் கேட்டான் இளவரசன்.

“நல்லா இருக்கேன். உனக்கும் ஒண்ணும் இல்லை இளா. நீ நல்லா ஆகிருவ. சீக்கிரமா நாம வீட்டுக்கு போகலாம். நான் உன்னைக் கூப்பிட தான் வந்தேன்”,  என்று அவசரமாக சொன்னான் சிவன்.

“நான் என்னோட கடைசி நிமிடத்தில் இருக்கேன்னு எனக்கு தெரியும் சிவா. எங்க உன்னைப் பாக்க முடியாம போயிடுமோன்னு தான் கவலைப் பட்டேன். உன்னைப் பாத்துட்டேன். அதுவே எனக்கு சந்தோஷமா இருக்கு. இனி எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை”

“உனக்கு ஒண்ணும் ஆகாது இளா”

“நான் உன்னை அம்மா அப்பாவை தங்கச்சிகளை ஏமாத்திட்டு வந்தது தான் என்னை இப்படி பழி வாங்கிருச்சோ என்னவோ?”

“ஐயோ, அப்படி எல்லாம் இல்லை இளா. எங்க யாருக்கும் உன் மேல எந்த கோபமும் இல்லை. நீ அண்ணியை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்துருக்கலாம்னு தான் பேசுவோம்”

“நீ பொய்ச் சொல்ற? கண்டிப்பா அம்மாவுக்கு என் மேல கோபம் இருக்கும். நிறைய சாபம் கொடுத்துருப்பாங்க. அப்பா என்னால தான் செத்துட்டார். தாய் தகப்பன் கண்ணீருக்கு காரணமா இருந்ததால தான் என்னோட விதி இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிருச்சு. என்னை நீயாவது மன்னிச்சிரு சிவா. ரொம்ப சுயநலமா இருந்துட்டேன்”

“காதல் எதுவுமே பாக்காது அண்ணா. உன் மேல எந்த தப்பும் இல்லை. விடு”

“கண்மணியை நீ பாத்துக்குவியா சிவா? அவ ரொம்ப பாவம். அவளுக்கு என்னை விட்டா வேற யாருமே இல்லை. அவளை இப்படி பாதில விட்டுட்டு போறதை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. அவ வாழ்க்கைல ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சிட்டா. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நீ ஏற்படுத்திக் கொடுக்கணும் சிவா”

“அண்ணா உனக்கு ஒண்ணுமே ஆகாது டா. அவங்களை நாம பாத்துக்கலாம். நீ டென்ஷன் ஆகாத”, என்று சிவன் சொல்லும் போதே கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய ரத்த அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்தது. நர்ஸ் டாக்டரை அழைக்கச் சென்றாள்.

“எனக்காக கண்மணியை மட்டும் விட்டுறாத டா”, என்று மீண்டும் சொன்னான் இளவரசன்.

“சரி நான் பாத்துக்குறேன் போதுமா? நீ தேவையில்லாம யோசிக்காத”

“நீ வந்த பிறகு எனக்கு ஆயிரம் யானையோட பலம் வந்த மாதிரி இருக்கு டா. கண்மணி கிட்ட பேசணும். அவளை வரச் சொல்றியா?”

“இரு, கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி வெளியே சென்றான். அப்போது இன்னொரு சிஸ்டர் வந்து “சார் நீங்க ரொம்ப பேசக் கூடாது”, என்றாள்.

“இப்ப பேசலைன்னா என்னால எப்பவுமே பேச முடியாம போயிரும்னு எனக்கு தெரியும் சிஸ்டர். என்னோட உடல் நிலை ரொம்ப மோசமா ஆகிட்டு வருதுன்னு எனக்கு தெரியும்”, என்று சொல்லும் போதே அவன் மூச்சுக்கு தடுமாறினான். அந்த செயற்கை சுவாசம் பொருத்திய கருவியை அவனுக்கு மாட்டியவள் வேறு பல கருவிகளையும் சோதனை செய்தாள்.

கண்மணியும் சிவனும் உள்ளே வரும் போதே டியூட்டி டாக்டரும் வந்திருந்தார். இளாவின் கண்கள் மனைவி மற்றும் தம்பியைப் பார்த்தாலும் அவனுக்கு மூச்சு விட சிரமமாக இருந்தது. டாக்டர் ஏதேதோ செய்து பார்த்தார் தான். ஆனால் அவனுடைய இதயத் துடிப்பு வெகுவாக குறைந்து கொண்டிருந்தது.

“டாக்டர் அவரை எப்படியாவது காப்பாத்துங்க”, என்று சொல்லி அழுதாள் கண்மணி.

“நான் அதுக்கு தான் மா முயற்சி பண்ணுறேன். நீங்க அவர் கிட்ட உக்காந்து ஏதாவது பேசுங்க. அவர் கிட்ட பேச்சு கொடுங்க”, என்றார் டாக்டர்.

உடனே அவன் தலைப் பக்கம் சென்று “இளா, இங்க பாரு டா., உனக்கு ஒண்ணுமே ஆகாது. என்னைப் பாரு டா”, என்று அழுதாள் கண்மணி.

“உன்னை பாதிலே விட்டுட்டு போறேன்ல? என்னை மன்னிச்சிரு டி”, என்றான் இளவரசன்.

“உன்னால என்னை விட்டு போக முடியாது இளா. நீ என் உயிர்ல கலந்துருக்க டா. அப்படியே போனாலும் என்னையும் உன் கூட கூட்டிட்டு போய்ரு டா. நீ இல்லாத இந்த உலகத்துல நான் எப்படி இனி இருப்பேன்? என்னை தனியா விட்டுட்டு போய்றாத டா”

“நீ இருக்கணும் கண்மணி. நீ இருக்கணும். கண்டிப்பா நான் உனக்காக வருவேன்”, என்று சொன்னவன் அவளுடைய அடி வயிற்றைத் தொட்டான். அவளும் தன்னுடைய வயிற்றோடு அவன் கையை இறுக சேர்த்து வைத்துக் கொண்டாள்.

“நீ அம்மா கிட்ட போய்ரு கண்மணி. நீ அங்க தான் இருக்கணும். அது தான் உனக்கு பாது…காப்பு”, என்று திக்கித் திணறிப் பேசினான்.

“கண்டிப்பா போறேன் டா”

“நான் வருவேன் கண்மணி, உன் கூடவே இருப்பேன்“, என்று மனைவியிடம் சொன்னவன் தம்பியைத் திரும்பி பார்த்து “இவளை பாத்துக்கோ டா. அம்மா கிட்ட மன்னிப்பு கேட்டேன்னு சொல்லு”, என்றான்.

அடுத்த நொடி அவன் உயிர் அவனுடைய உடலை விட்டுச் சென்றிருந்தது. அவன் இந்த உலகத்தில் இல்லை என்பதை தாங்க முடியாமல் முகத்தை மூடிக் கொண்டு அழுதான் சிவன்.

“இளா, என்னை இப்படி தனியா விட்டுட்டு போய்ட்டியே? இனி எனக்கு யாரு டா இருக்கா? ஏன் டா இப்படி பண்ணின?”, என்று அவன் நெஞ்சில் படுத்து அழுதாள் கண்மணி.

“சாரி”, என்று சிவனின் தோளில் தட்டிச் சொன்ன டாக்டர் “பார்மாலிட்டிஸ் படி பண்ணிருங்க”, என்று அங்கிருந்த சிஸ்டரிடம் சொல்லி விட்டுச் சென்றார்.

“சின்ன வயசுல இருந்தே ஸ்கூல்க்கு அவசரமா போவ? அப்பா ஏதாவது வாங்கிட்டு வந்தாலும் அவசரமா அதை நீ தான் கையில வாங்குவ? படிச்சு முடிச்ச உடனே அவசரமா வேலைக்கு போன? அவசரமா கல்யாணம் பண்ணின? கடைசில அவசரமா இந்த உலகத்தை விட்டே போய்ட்டியே டா”, என்று புலம்பினான் சிவன்.

வீட்டுக்குச் சொல்ல வேண்டும் என்ற நினைவு வர பார்வதியை அழைத்தான். அந்த பக்கம் எடுத்ததும் “அம்மா”, என்று அழைத்தான். அன்னையிடம் எப்படி உண்மையை உரைக்க என்று அவனுக்கு கவலையாக இருந்தது. ஆனால் இருந்த கோபத்தில் அவன் குரலில் இருந்த பேதத்தை அந்த தாய் உணரவில்லை.

“என்ன டா அம்மா? இனி என்னை அப்படிக் கூப்பிடாதே”, என்று வெடுக்கென்று சொன்னாள் பார்வதி.

அன்னையின் கோபம் புரிய “அம்மா நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க”, என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!