Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

டிங் டாங் காதல்

டிங் டாங் – 22.1

“வெக்க படு… வெக்க படு… வெக்க படு” மந்திரத்தை ஜபிப்பது போல் வைஷ்ணவியின் காதிலே ஷெர்லின் கூவிக்கொண்டே இருக்க, திருமண கோலத்தில் தயாராகி அமர்ந்திருந்த வைஷ்ணவி அதே மந்திரத்தை மனதில் மௌனமாக உச்சரித்துக்கொண்டிருந்தாள்.

நேற்று நடந்த நிச்சய விழாவில் மணப்பெண்ணிற்குரிய எந்தவொரு அடையாளமும் இல்லாமல் தன் வாக்கில் சந்தோசமாக வளைய வந்த வைஷ்ணவியை கார்த்தியின் வீட்டினர் விசித்திரமாக பார்த்துவைக்க,

“கொஞ்சமாவது வெக்கப்பட்டுடி… எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க” வைஷ்ணவியின் காதில் வந்து மாலையை சரி செய்வது போல் கிசுகிசுத்தார் அவள் அன்னை மஹேஸ்வரி.

“நான் என்ன தப்பு பண்ணேன் ஏன் வெக்கப்படணும்?” எதிர் கேள்வி கேட்டவளை மணமேடை என்றும் பாராமல் கையிலேயே கிள்ளி வைத்தார்.



Advertisement

வலியில் முகம் சுருங்கிட மெல்லிய, “ஆ வலிக்கிது ம்மா” சத்தம் அவளிடம்.

அருகில் இருந்த நண்பனிடம் ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருந்த கார்த்தி வேகமாக அவளையும் கோவமாக நின்ற மாமியாரையும் பார்த்தவன், “என்னாச்சு வைஷ்ணவி” என்க அவனிடம் அன்னையின் சேட்டையை வத்தி வைத்துவிட்டாள்.

“விடுங்க அத்தை. அவ அவளா இருந்தா தான் அழகு” சுற்றம் பார்க்காமல் கூட்டத்திலிருந்து அவளை மறைந்து முன் வந்து நின்று வைஷ்ணவியின் கையை பற்றி காயத்தை ஆராய்ந்தான்.

Advertisement

கத்தும் அளவு பெரிதாக காயம் இல்லை, “இப்போ வலி இல்ல” எனவும் தான் அவள் கண்களை பார்த்து தலை அசைத்து அமைதியாக மீண்டும் அவள் அருகே வந்து நின்றுவிட்டான்.

Advertisement

மருமகனை மீறி தன்னை பார்த்து புருவம் உயர்த்தி சிரிக்கும் மகளை அதிகம் விரட்ட முடியாமல் போக, வைஷ்ணவியை முறைத்துக்கொண்டு விருந்தினர்களை கவனிக்க சென்றுவிட்டார் அப்பொழுது.

ஆனால் அதன் பிறகு அறைக்குள் வந்த மகளை திட்டி தீர்த்துவிட்டார். அதன் வெளிப்பாடே இன்று வைஷ்ணவி, ஷெர்லின் இருவரும் வெட்கத்தை முயன்று வரவழைக்கின்றனர். வந்ததா என்று கேட்டால் நிச்சயம் இல்லை, வெட்கத்திற்கு பதிலாக பசி தான் வந்தது.

வெளியில் இன்னும் சற்று நேரத்தில் திருமணம் நடக்க ஏற்பாடுகள் கலைக்கட்டிக்கொண்டிருக்க, உடுத்தியிருந்த சேலையை சீர் செய்துகொண்டிருந்த பியூடிசியன் பெண்ணை செய்தது வரை போதுமென அனுப்பிவைத்து கதவை திறந்து தலையை வெளியில் விட்டு அன்னையை தேடினாள்.

Advertisement

அழைத்தால் கேட்கும் தூரத்தில் தான் நிற்க, “ம்மா… மாதாஜி. மஹேஸ்வரி… மஹேசு” பல விதமாக அழைத்தும் மேள தாளங்களின் சத்தத்தில் கேட்காமல் போக குரலை சற்று உயர்த்தி,

“சுந்தரம் பொண்டாட்டி” என அழைக்க அங்கு அமர்ந்திருந்த சில கண்கள் தவறாமல் வைஷ்ணவியை பார்த்து சிரித்தது, அன்னைக்கு ஏதாவது உதவி வேண்டுமா என தயாராகி கேட்க வந்த கார்த்தி காதிலும் கேட்டது.

மஹேஸ்வரியோ இயலாமையில் மகளை நெருங்கி வந்து, “கொஞ்சமாவது பொண்ணா நடந்துக்கோ வைஷ்ணவி மா” கெஞ்சினார்.

“ம்மா பசிக்கிது ம்மா” முகமே வாடிக்கிடந்தது மணப்பெண்ணுக்கு. ஏழு மணி முகுர்த்தம் என்பதால் காலை மூன்று மணிக்கெல்லாம் எழுப்பி மேக்அப் போட தயாராகிவிட்டாள்.

அது புரிந்தாலும் வேலை தலைக்கு மேல் கிடந்ததே, மகளின் நாடி பிடித்து, “கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ வைஷ்ணவி. கல்யாணம் ஆனதும் ஒடனே உன்னக்கு ஏதாவது கொண்டு வர சொல்றேன்”

“ம்மா அது வர என் வயிறு தாங்காது ம்மா” மகள் அப்பாவியாய் அன்னையிடம் போராட, “மஹேஸ்வரி” என கணவனின் குரல் கேட்டு,

“வரேன் டா. அண்ணனை கலர் வாங்கிட்டு வர சொல்றேன்” என சென்றுவிட்டார்.

சோர்ந்த முகத்துடன் உள்ளே வந்து பார்க்க, அங்கு தன்னுடைய கட்டிலில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள் ஷெர்லின். வந்த ஆத்திரத்தில் எதையாவது அவள் மண்டையில் போட்டு உடைக்க தோன்றியது, “ஷெர்லின்…. ஷெரூ பேபி” அவள் கையை சுரண்ட, வைஷ்ணவி கையை உதறி உறக்கத்தை தொடர்ந்தாள்.

பின்னே, வைஷ்ணவிக்கு முன்பே எழுந்தது அவள் தானே. இல்லம் சென்று வருகிறேன் என கூறியவளை பிடித்து தன்னுடனே வைத்துக்கொண்டாள் வைஷ்ணவி.

“ஏய் பசிக்கிது ஷெர்லின் சமையல்கட்டுல போய் ஏதாவது வாங்கிட்டு வர்றியா?”

ஷெர்லினை உலுக்க தூக்கத்தில் கண்ணை திறந்தவள், “இந்த பாருங்க மிஸ்டர் சுந்தர் பிச்சை ரொம்ப வேலை வாங்குறீங்க நானும் எவ்ளோ தான் வே…” உலர துவங்கிய தோழியை வாயை வேகமாக மூடி அவள் தலையிலேயே கொட்டு வைத்து அவள் அருகில் அமர்ந்துகொண்டாள்.

வயிறு வேறு சில பல நிமிடங்களாக உருட்டிக்கொண்டு இருந்தது. கதவு திறக்கும் சத்தத்தில் வைஷ்ணவி திரும்ப, அங்கு ஒரு சிறிய தட்டில் இலை போட்டு இரண்டு இட்லி, ஒரு ரவை தோசை, மூன்று விதமான சட்னியோடு உள்ளே வந்தான் கார்த்தி.

“இந்தா சாப்புடு” உடையில் பட்டுவிடாமல் இருக்க நாற்காலியில் போட்டிருந்த ஒரு துண்டை அவள் மடியில் வைத்து தட்டை அவள் கையில் திணித்தான்.

பசியில் உடனே வாங்கியவள் வேக வேகமாக உண்ண துவங்க, இளம் பச்சை பட்டுடுத்தி, அடர்ந்த ரோஜா நிற பார்டர் வைத்த புடவையில் அழகான ஒப்பனையில் மிளிரும் தன்னவளை பார்வையாலே வருடினான் கார்த்தி. கண்களை நிறைத்தது அவள் அழகும், அந்த முகத்திலிருந்த மிளிர்வும் கட்டி போட்டது அவனை.

முன்னரே அன்னை தந்தையிடம் கூறியிருந்தது போல் ஆறு மாதம் அங்கில்லாமல், உண்மையான வேலை நான்கு மாதங்களை சவுதியில் முடித்து, தன்னுடைய சீனியர் செஃப் ஒருவரிடம் தான் தன்னுடைய பிளானில் மாற்றம் செய்தது கூறியவன் அதற்கான காரணத்தை தன்னுடைய திருமணமாக கூற, அவரும் மறுக்காமல் அவனை அவன் வழியில் செல்ல அனுமதித்துவிட்டார்.

அதே நேரம் இங்கு அவனுடைய ரெசார்ட்டின் துவக்க விழாவும் இருக்க யாருக்கும் அறிவிக்காமல் வந்து இறங்கினான் இன்ப அதிர்ச்சியாக.

மகன் இல்லாமல் அவன் ஆரமிக்கப்போகும் ரிசார்ட் துவங்கவிருப்பது வருத்தமாக இருக்க, அவன் வந்ததும் இருந்த சிறு சஞ்சலங்கள் கூட பறந்து போனது சுப்பிரமணிக்கு. அனைவரையும் விட வைஷ்ணவி தான் சந்தோசத்தில் ஷெர்லினுடன் ஆடி தீர்த்துவிட்டாள்.

அடுத்த இரண்டு மாதமும் கார்த்தி சவுதியில் இருந்தது போலவே கைபேசியில் மட்டும் பேசிக்கொண்டனர். அலைபேசியின் மூலம் தான் காதல் அலை வீசியது அவர்கள் வாழ்க்கையில்.

அதை தவிர இவள் வரவிற்காகவே காலை காபி அருந்திக்கொண்டே காத்திருப்பான் மாடியில், அந்த சின்ன சிரிப்பிற்காக. சிறு பிள்ளைத்தனமாக இருந்தாலும் இருவருக்கும் அது காவியமாகவே தெரிந்தது.

வந்த சில நாட்களிலேயே வேலைகள் கார்த்தியை மொத்தமாக தன் பக்கம் பிடித்துக்கொள்ள, பார்ட்னர்ஸ் தங்களுக்குள் பேசி சில காலங்கள் ஒவ்வொரு இடத்தை பார்த்துக்கொள்வதாக பேசியிருக்க, இந்த இரண்டு வருடம் கார்த்திக்கு குற்றாலத்தில் இருக்கும் ரெசார்ட்டை பார்க்கும் பொறுப்பு, அவன் திருமண வாழ்க்கையை கருத்தில் கொண்டு நண்பர்கள் முடிவெடுத்தனர்.

அதற்காகவே குற்றாலத்திலே இருவருக்கும் ஒரு தனி வீடை சுப்பிரமணி பார்த்துவைத்துவிட்டார். மகன் அரை மணி நேர பயணம் தானே என பேசியும் பயன் இல்லாமல் போனது.

“டேஸ்ட் நல்லா இருக்குங்க” என்றாள் தோசையை ஆவலாக ருசித்துக்கொண்டு.

“என்னோட ஜுனியர்ஸ் தான். எனக்காக நம்ம கல்யாணத்துக்கு பண்ணுவேன்னு சொல்லிட்டாங்க” என்றான் சந்தோசமாக.

“ம்ம்ம் அப்பா சொன்னாங்க, சாப்பாடு ஐட்டம்ஸ் கூட எல்லாமே வித்யாசமா இருக்குன்னு சொன்னாங்க. நீங்க சாப்பிட்டீங்களா?”

சிரித்தான், “எனக்கு பசி பழக்கம் தான். நீ சாப்புடு” அவளோ எழுந்து வந்து அவன் அருகில் சிறிதும் யோசிக்காமல் ஒரு கவளம் எடுத்து அவன் வாயருகே நீட்டினாள்.

அவள் திடீர் செயலில் வியந்தவனுக்கு நடப்பது புரியவே இல்லை, “ம்ம்ம் வாய தொறங்க” மீண்டும் அவள் அழுத்தி சொல்லவும் தான் வாயை திறந்தான்.

அவளும் உண்டு அவனுக்கும் சரி சமமாக ஊட்டியவள், “என் லிப்ஸ்டிக் எதுவும் அழிஞ்சிடுச்சா?” என கேட்டாள்.

தூரத்திலிருந்து பார்த்தாலே போதையேற்றிய அந்த இதழ்களை அருகில் பார்க்கவும் ஆசையை கட்டுப்படுத்த முடியவில்லை அவனால், வெளியில் இருக்கும் உறவுகளை நினைவில் வைத்து கேலியாக, “ஏன் ஸ்மட்ஜ் ப்ரூப் போடலையா?” என தன்னையும் மீறி குனிந்தவனின் நெஞ்சில் கை வைத்து நிறுத்தியவள் கண்கள் வெளியில் வந்து விழும் அளவிற்கு விரிந்து கிடந்தது.

“சமயலு…” அவள் எச்சரிக்கையில் அவனுக்கு இன்னும் போதையேற வைஷ்ணவியின் இடையோடு மெதுவாக கைகள் போட்டு இடைவெளி நீளாமல் பார்த்துக்கொண்டான்.

“வைஷ்ணவி…” ஆசையாக அவன் அழைக்க, கண்களை இறுக்கமாக மூடி நின்றவள் ம்ம் எனவில்லை ஆ எனவும் இல்லை.

“வைஷ்ணவி…” கார்த்தி மீண்டும் அழைத்தான்.

“வெளிய போங்க நீங்க” திக்கி திணறி அவனுக்கு ஆணையிட்டவள் கண்களை திறந்தபாடில்லை.

“ஒரே ஒரு முத்தம்டா” ஆசையாக அவன் அருகில் நெருங்க,

“பர்ஸ்ட் நைட்க்கு இன்னும் நேரமிருக்கு”

திடீரென கேட்ட குரலில் வைஷ்ணவி கண்களை வேகமாக திறக்க, கார்த்தியோ அவளை விட்டு தேவையான இடைவேளையில் தள்ளி நின்றான்.

இருவரும் ஒரு சேர சத்தம் வந்த திசையில் பார்க்க, அங்கு ஷெர்லின் சுவற்றின் பக்கம் திரும்பி படுத்துக்கொண்டு, “எதுவும் பாக்கல-னு எனக்கும் சொல்ல ஆசை தானுங்கோ” எனவும் அவள் கேலியில் கார்த்தி அறையை விட்டே ஓடிவிட, வைஷ்ணவி முகத்திலிருந்த சிகப்பை மறைக்க குளியலறைக்குள் பதுங்கிக்கொண்டாள் கையை கழுவும் சாக்கில்.

அதன் பிறகு தோழி செய்த அளப்பறையில் வராத வெட்கம் எல்லாம் வைஷ்ணவிக்கு வந்து வாழ்க்கையில் முதல் முறையாக வாயடைத்து போனாள்.

‘யோவ் சமயலு எல்லாம் உன்னால தான்’ செல்லமாக அவனை திட்டியும்வைத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!