Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 5 2

“அடடே அவனுக்கும் இதே ஊர் தானா? ஏ.டி. எம் கார்ட் கூட இதுல தான் இருந்துச்சா. ஐயோ பாவம்”, என்று வாய் விட்டே புலம்பினாள்.

அப்போது “என்ன உமா, தன்னாலே பேசிட்டு இருக்க?”, என்ற கேட்ட படி அறைக்குள் வந்தார் ராதாகிருஷ்ணன்;



Advertisement

“அப்பா“, என்ற படி திரும்பிப் பார்த்தாள்.

Advertisement

அவள் அருகில் வந்தவர் அப்போது தான் அந்த பர்ஸைப் பார்த்தார். “என்ன டா? ஆமா இது யாரோட பர்ஸ் பாப்பா? ஜென்ஸ் பர்ஸ் மாதிரி இருக்கு”, என்று கேட்க அவளால் சட்டென்று உண்மையை அவரிடம் சொல்ல முடியவில்லை. அவள் செய்ததைச் சொன்னால் அவர் கட்டாயம் அவளைக் கடிந்து கொள்வார் என்று அவளுக்கு தெரியும். தந்தையின் கோபத்துக்கு அவளால் ஆளாக முடியாதே.

Advertisement

அதனால் “கல்யாணத்துக்கு போட்டோ எடுக்க வந்திருந்தவர் பர்சை மிஸ் பண்ணிட்டார். திருப்பிக் கொடுக்க முடியலை பா”, என்று பொய் சொன்னாள்.

Advertisement

“என்ன உமா இது? இத்தனை நாள் இதை உன் கையிலயா வச்சிருக்குறது? உடனே கொடுத்துருக்க வேண்டாமா? இல்லை அங்கேயே யார் கிட்டயாவது கொடுத்துட்டு வந்துருக்கலாம்ல?”, என்று அவர் சிறு கண்டிப்புடன் கேட்க அதுவே அவள் கண்களில் கண்ணீரை வர வைத்தது.

இதற்கே இப்படி என்றால் அவள் செய்த திருட்டுச் செயல் தெரிந்தால் அவ்வளவு தான் என்று எண்ணிக் கொண்டு “சாரிப்பா”, என்றாள்.

“சரி, விடு. அதுல அட்ரஸ் ஏதாவது இருந்தா  இன்னைக்கே அதைக் கொரியர் அனுப்பி விட்டுரு”

“சரிப்பா”, என்று சொன்னவள் அதை நேரில் சென்று கொடுத்து அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணினாள். ஆனாலும் அவன் என்ன சொல்வானோ என்று பயமாக தான் இருந்தது.

அன்று ,மதியமே அந்த கடையைக் கண்டு பிடித்துச் சென்று விட்டாள். ஆனால் இளவரசனுக்கு காரியம் செய்ய அவர்கள் சென்றிருந்ததால் அன்று ஸ்டூடியோ அடைக்கப் பட்டிருந்தது. சரி நாளைக்கு வந்து கொடுக்க வேண்டும் என்று எண்ணி வீட்டுக்குச் சென்றவள் அதன் பிறகு அதை மறந்தே போனாள்.

அதற்கு அடுத்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு நாள் வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்க டிநகர் வந்திருந்தான் சிவன். அப்போது உமா ராதாகிருஷ்ணன்னுடன் ஷாப்பிங் வந்திருந்தாள். அவன் அவளை பார்த்து விட்டான்.

“இவளா?”, என்று ஒரு நொடி ஆர்வம் வந்தாலும் அவள் செய்த செயலும் தான் பணம் இல்லாமல் மருத்துவமனைக்கு பணம் கட்டக்  கூட வழி இல்லாமல் நின்றதும் நினைவில் வர வெறுப்புடன் அவளைப் பார்த்தான். யார் முகத்தில் விழிக்க கூடாது என்று எண்ணி இருந்தானோ அவளைப் பார்த்ததும் அவன் கோபம் எல்லாம் உச்சக் கட்டத்தில் எகிறியது.

இந்த நிமிடம் அவளைக் கொன்று போட்டால் கூட அவன் ஆத்திரம் அடங்காது போல. அப்படி ஒரு நிலையில் இருந்தான். ஆனால் அவளைக் கண்டதும் ஒரு நொடி வந்த ஆர்வத்தை அவனே உணர வில்லை.

தந்தையுடன் ஒரு கடைக்குச் சென்று கொண்டிருந்தவள் எதற்கோ திரும்பும் போது அவனைப் பார்த்து விட்டாள். பார்த்தவளுக்கு சட்டென்று ஒரு அதிர்வு. அதுவும் அவனுடைய கண்களில் இருந்த கொலைவெறியில் விதிர்த்து போனாள். அவன் கோபம் நியாயமானது என்று இப்போது புரிந்தது. ஆனால் இப்போது அவன் அருகில் சென்றால் தன்னை என்ன செய்வானோ என்ற பயம் வந்தது. அதுவும் தந்தை முன்பு அவளுக்கு ஒரு கெட்ட பெயர் வருவதை அவள் விரும்ப வில்லை.

எப்படி அவனிடம் இருந்து தப்பிக்க என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போது “என்ன மா எங்க பாக்குற?”, என்று கேட்டார் ராதாகிருஷ்ணன். அவர் பார்வையும் சுற்றி அலசியது.

“ஒண்ணும் இல்லைப்பா, வாங்க போகலாம்”, என்று சொல்லி சிறிது பயத்துடன் அவரை கடைக்குள் அழைத்துச் சென்றாள். தன்னை பின் தொடர்ந்து வருவானோ என்று உண்மையில் அவளுக்கு பயமாக தான் இருந்தது. அவனும் அவள் கழுத்தை நெரித்து தன்னுடைய பர்சை வாங்க வேண்டும் என்று ஒரு நொடி நினைத்தான் தான்.

ஆனால் ராதாகிருஷ்ணன் திரும்பிய போது சிவனும் அவரைப் பார்த்து விட்டான். அவரைப் பார்த்ததும் சட்டென்று ஒரு திகைப்பு அவனுக்கு. அவரை எங்கேயோ வெகு அருகில் பார்த்தது போல இருந்தது அவனுக்கு.

“இந்த ஆள் இவளோட அப்பாவா? ஆனா இவரை எங்கயோ பாத்துருக்குமோமே? எங்க பாத்தோம்? நம்ம கடைக்கு வந்திருப்பாரோ? இல்லையே ரொம்ப சமீபத்துல பாத்த மாதிரியே இருக்கே?”, என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. சட்டென்று அவனுக்கு நினைவில் வர வில்லை.

ஒரு நொடி அமைதியாக நின்றான். அடுத்து என்ன செய்ய என்று அவனுக்கு தெரிய வில்லை. அதுவும் அவள் பயந்து போய் சென்றது வேறு அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது.

இந்த நிமிடம் உமா மேல் கோபம் வந்தாலும் நடு ரோட்டில் வைத்து அவளுடைய மானத்தை வாங்க அவனுக்கு விருப்பம் இல்லை. அவனுடைய ஏடிஎம் கார்டை கூட பிளாக் செய்து புதுக் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தான். பணம் போனது கஷ்டமாக தான் இருந்தது. ஆனாலும் “என்னைக்காவது என் கையில சிக்காமலா போய்ருவா?” , என்று எண்ணிக் கொண்டு கடுப்புடன் அங்கிருந்து சென்று விட்டான்.

கடைக்குள் இருக்கும் போது உமாவின் பயந்த முகத்தை கவனித்துக் கொண்டு தான் இருந்தார் ராதாகிருஷ்ணன். ஷாப்பிங் முடித்து விட்டு கடையை விட்டு வெளியே வந்த உமாவின் கண்கள் சுற்றி அலசியது. அவன் எங்காவது தென்படுகிறானா என்று தேடினாள். அவன் இல்லை என்றதும் அப்பாடா என்ற நிம்மதி வந்தது.

மகளைக் கவனித்துக் கொண்டிருந்தவர் காரில் ஏறி அமர்ந்து காரைக் கிளப்பும் வரை எதுவும் கேட்க வில்லை.

சிறிது தூரம் சென்றதும் ஒரு மரத்தடியில் காரை நிறுத்தி விட்டு “என்ன ஆச்சு உமா? உனக்கு என்ன பிரச்சனை?”, என்று கேட்டார்.

“ஆன்… என்னப்பா? ஒண்ணும் இல்லையே பா? நீங்க காரை எடுங்க”

“ஒண்ணும் இல்லையா? இல்லை நான் உன்னை ஒண்ணுமே கேக்க கூடாதுன்னு நினைக்கிறியா உமா?”

“ஐயோ, அப்படி எல்லாம் இல்லைப்பா”

“அப்ப என்ன பிரச்சனைன்னு சொல்லு. கடைக்குள்ள போனதுல இருந்து நீ நீயா இல்லை. உனக்கு பிடிக்காத கலர்ல டிரஸ் எடுத்துருக்க? நான் கேள்வி கேட்டா ரெண்டாவது டைம் கேக்கும் போது தான் பதில் வருது. கடையை விட்டு வெளியே வந்த பிறகு கூட நீ யாரையோ தேடி அவங்க இல்லைன்னதும் நிம்மதியான? நீ என்னோட உயிர் டா. உனக்கு ஒண்ணுன்னா என்னால தாங்க முடியாது. என்ன விசயம்னு சொல்லு”

“அப்பா அது வந்து….”

“சொல்லு டா”

“நீங்க என்னை தப்பா நினைச்சிருவீங்கன்னு தான் பா சொல்லலை”

“நீ என் பொண்ணு டா. உனக்கு ஒரு பிரச்சனைன்னா நான் பாத்துட்டு இருப்பேனா?”

“அன்னைக்கு இந்த பர்சை கொடுக்க சொன்னீங்கல்ல? நான் கொண்டு போய்க் கொடுக்கலை பா”

“தொலைஞ்சு போன பர்ஸைக் கொடுக்க எதுக்கு இவ்வளவு தயக்கம் உமா?”, என்று கூர்மையாக கேட்டார்.

“அப்பா அது வந்து…”

“உண்மையைச் சொல்லு உமா”, என்று அவர் கேட்க கலங்கிய கண்களுடன் அனைத்தையும் சொல்லி விட்டாள்.

“நீ செஞ்சது ரொம்ப தப்பு உமா”, என்று சொல்ல அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. மகள் அழுவது கஷ்டமாக இருந்தாலும் மனதில் இருந்ததைச் சொல்லி விட்டார்.

“நீ ஆசையா சில குருப் போட்டோ எடுக்கச் சொன்ன. அந்த பையன் எடுத்தான் தானே? ஆனா திருப்பி திருப்பி எடுக்கச் சொன்னா அவன் வேலையை யாரு பாப்பா?”, என்று அவர் கேட்டதும் அவளுக்கு குற்ற உணர்வாக இருந்தது.

“இல்லைப்பா அவங்க திமிரா பேசவும்….. கோபத்துல….”, என்று தயக்கத்துடன் சொன்னாள்.

“ஒருத்தங்க அவங்களுக்கு பிடிச்ச வேலையை செய்யும் போது யார் குறுக்கிட்டாலும் கோபம் வரத் தான் செய்யும் உமா. அது உழைக்கிறவங்களோட ஆதங்கம். அவன் பொண்ணு மாப்பிள்ளையை எடுக்காம உங்க பின்னாடி அலையணும்னு நீ எப்படி நினைக்கலாம்? உன் கிட்ட இருந்து இப்படி ஒரு செய்கையை நான் எதிர் பாக்கலை உமா”, என்று மகளைக் கண்டித்தார் ராதாகிருஷ்ணன்.

“சாரிப்பா”

“என் கிட்ட சாரி சொன்னா ஆச்சா? பர்ஸ் இல்லாம அந்த பையன் என்ன கஷ்டப் பட்டானோ?”

“அன்னைக்கு கோபத்துல எடுத்துட்டேன் பா. ஆனா நீங்க சொன்னதும் திருப்பிக் கொடுக்கணும்னு நினைச்சேன் பா. அவங்க கடைக்கு போனேன். பூட்டி இருந்துச்சு. அதான்……”

“சரி அந்த பையனோட அட்ரஸ் சொல்லு. இப்பவே கொடுத்துட்டு போய்றலாம்”

“பயமா இருக்கு பா”

“இப்பவும் கொடுக்கலைன்னா நீ நிம்மதியா இருக்க முடியாது உமா. அவன் கோபத்துல ஏதாவது பேசினா வாங்கிக்க தான் செய்யனும். உன்னைப் பெத்த பாவத்துக்கு நானும் வாங்கிக் கட்டிக்கிறேன்”

“இனி இப்படி செய்ய மாட்டேன் பா”, என்று சொல்லி அட்ரஸ் சொல்ல கார் அவனுடைய ஸ்டூடியோ பக்கம் திரும்பியது.

அவர்கள்; நல்ல நேரம் அவர்கள் போன போது கடையில் கருப்பட்டி தான் நின்றிருந்தான். இவர்களைக் கண்டதும் “வாங்க சார், வாங்க மேடம். என்ன போட்டோ எடுக்கணுமா? இல்லை வேற ஏதாவது….?”, என்று கேட்டான்.

“இல்லைப்பா. இங்க சிவான்னு…..”, என்று தயக்கத்துடன் கேட்டார் ராதாகிருஷ்ணன்.

“என் ஃபிரண்ட் தான் சார். கடைக்கு போயிருக்கான். என்ன விஷயம் சார்?”

“அவர் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இதைக் கொடுத்துட்டு போகலாம்னு வந்தோம் பா”, என்று சொல்லி அவர் அவனுடைய பர்சை நீட்ட அதைக் கண்ட கருப்பட்டி கண்களில் கோபம் ஏறியது.

“ஓஹோ நீ தான் அந்த புண்ணியவதியா?”, என்று உமாவிடம் சீறினான்.

அவள் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக நிற்க “அவளை மன்னிச்சிரு பா. சின்ன பொண்ணு. ரொம்ப செல்லம் கொடுத்துட்டோம். அதான் ஏதோ தெரியாம பண்ணிட்டா”, என்றார் ராதாகிருஷ்ணன்.

“யார் சார் சின்ன பொண்ணு? இவளா? இவளால அவனுக்கு எவ்வளவு மன உளைச்சல் தெரியுமா? நீங்க எல்லாம் பணக்காரங்கல்ல? அதான் இவ்வளவு அசால்ட்டா தப்பு பண்ணிட்டு வந்து சாரின்னு சொல்றீங்க? பணம் இல்லாம நிர்க்கதையா அவன் நின்ன கதையை சொல்லும் போது எனக்கே இவளை வெட்டிப் போடணும்னு தோணுச்சு. பணக்காரங்கன்னா பணத் திமிர்ல என்ன வேணும்னாலும் செய்வீங்களா? இவளை எல்லாம் போலீஸ்ல தான் பிடிச்சுக் கொடுக்கணும்”, என்று அவன் கத்த உமா பீதியில் உறைந்து தந்தையின் கரத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!