Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 6 2

அவனோ அவன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க “இவன் என்ன புத்தர் மாதிரி உக்காந்துருக்கான்?”, என்று வியப்பாக இருந்தது கருப்பட்டிக்கு.

ஏனென்றால் சிவன் நேரில் அவளைப் பார்த்தால் அவளை குறைந்தது வார்த்தையிலாவது குதறுவான் என்பது தான் அவனது எண்ணம். ஆனால் அவன் அமைதியை கருப்பட்டி எதிர் பார்க்க வில்லை.



Advertisement

அந்த இடமே அமைதியில் இருக்க “ஏமா, உன்னைத் தானே சொல்றேன்? இங்க இருந்து போ”, என்று மீண்டும் சொன்னான் கருப்பட்டி.

Advertisement

“பிளீஸ் நான் ஒரு அஞ்சு நிமிஷம் அவர் கிட்ட பேசணும்”, என்று கெஞ்சலுடன் கேட்டாள் உமா.

Advertisement

“உன் கிட்ட பேசுறது தான் எங்களுக்கு வேலையா?”, என்று கருப்பட்டி கேட்க “வேலையை பார் மாப்பிள்ளை. கண்டவங்க கிட்ட எதுக்கு தேவையில்லாத பேச்சு?”, என்றான் சிவன். அதில் அவமானமாக இருந்தது உமாவுக்கு.

Advertisement

ஆனாலும் அவள் மன்னிப்பு கேட்க வேண்டுமே. “பிளீஸ் நான் செஞ்சது தப்பு தான். என்னை மன்னிச்சிருங்க”, என்று சொல்ல இப்போது கருப்பட்டி எதுவும் சொல்ல வில்லை. சிவனே பேசிக்கட்டும் என்று எண்ணிக் கொண்டு அவன் வேலையைப் பார்த்தான்.

சிவாவோ அவள் புறம் திரும்பவே இல்லை. “நான் அன்னைக்கு சின்ன கோபத்துல தான் அப்படி பண்ணிட்டேன். வேணும்னு எதுவுமே பண்ணலை. ஆனா என்னோட தப்பு உங்க வாழ்க்கையில அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திருக்கும்னு எனக்கு தெரியாது. எங்க அப்பா கண்டிக்கும் போதே என்னோட தப்பை நான் உணர்ந்துட்டேன்”, என்று பேசிக் கொண்டிருந்தாள் உமா.

அவள் அப்பா என்றதும் அது வரை அமைதியாக இருந்த சிவனின் மனம் கண்மணிக்காக சற்று குமுறியது. அவளுடைய தந்தையின் மேல் எழுந்த கோபத்தில் “இவளை இங்க இருந்து போகச் சொல்லு டா. பொம்பளைப் பிள்ளைன்னு பொறுமையா போறேன். கடை முன்னாடி வந்து நின்னு வியாபாரத்தைக் கெடுத்துட்டு இருந்தா அசிங்கப் பட்டு தான் போகணும்”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான் சிவன். அவன் அப்படிச் சொன்னதும் உமா கண்கள் கலங்கியது.

அந்த நிலையிலும் “இங்க என்ன வியாபாரம் நடக்குது?”, என்ற எண்ணம் வந்த கருப்பட்டி அதைச் சொல்லி நண்பனின் கோபத்துக்கு ஆளாக வில்லை. அதனால் “ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா? போ மா இங்க இருந்து”, என்றான் அவளிடம்.

அதற்கு மேல் அங்கே நிற்பது அவளுக்கே ஒரு மாதிரி இருக்க அவனைத் திரும்பி திரும்பிப் பார்த்த படி இரண்டு அடி எடுத்து வைத்தவள் அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

இருவரும் அதிர்ந்து போனார்கள். “ஐயோ என்ன ஆச்சு?”, என்று பதறிய படி சிவன் அவள் அருகே செல்ல கருப்பட்டியும் அங்கே சென்றான்.

பக்கத்து கடைகளில் இருந்தவர்களும் வந்து விட்டார்கள். “என்ன ஆச்சு? யார் இந்த பொண்ணு?”, என்று கேட்டார் ஒருவர்.

“போட்டோ எடுக்கணும்னு வந்துச்சுண்ணா? என்னன்னு தெரியலை மயங்கி விழுந்துருச்சு. கருப்பட்டி தண்ணி எடு”, என்று சொன்னதும் அவன் எடுத்துக் கொடுத்தான். அதை வாங்கி அவள் முகத்தில் தெளிக்க கொஞ்சம் கொஞ்சமாக கண்களைத் திறந்தாள்.

வெகு அருகில் தெரிந்த அவனைக் கண்டு ஒரு நொடி திகைத்து விட்டாள். அவள் தன்னையே பார்க்கவும் அப்போது தான் அவனுக்குமே அவள் அருகாமை புரிந்தது. வெகு அருகில் அவளது கண்களும் அவளது அழகு முகமும் தெரிய ஒரு நொடி அவனுக்குள் எழுந்த உணர்வு என்னவென்று அவனுக்கே புரிய வில்லை.

“யாரு மா நீ? எதுக்கு மயங்கி விழுந்த?”, என்று யாரோ கேட்கவும் தான் இருவரும் நடப்புக்கு வந்தார்கள். சிவன் அங்கிருந்து எழுந்து ஒதுங்கிச் செல்ல அவனைப் பார்த்த படி அவளும் எழுந்து நின்றாள்.

“தெரியலை, தலை சுத்திருச்சு. அதான். வேற ஒண்ணும் இல்லை. நீங்க போங்க. நான் பாத்துக்குறேன்”, என்று உமா சொல்ல “பாத்து போ மா”, என்று சொல்லி விட்டு அனைவரும் கலைந்தார்கள். சிவன் மற்றும் கருப்பட்டி மட்டும் அங்கு நின்றார்கள்.

உமா சிவனைப் பார்க்க அவனோ முகத்தை திருப்பிக் கொண்டான். அதில் முகம் வாடிப் போய் அங்கிருந்து சென்றாள் உமா.

அவள் போன பின்பு அவள் போன பாதையையே பார்த்துக் கொண்டிருந்தான். என்ன இருந்தாலும் முதன்முதலில் அவன் மனதில் சலனத்தை விதைத்தவள் ஆயிற்றே. “பத்திரமா வீட்டுக்கு போய்ருவாளா?”, என்ற கவலை அவனுக்குள் எழுந்தது.

“என்ன டா அப்படியே நிக்குற?”, என்று கேட்டான் கருப்பட்டி.

“ஒண்ணும் இல்லை. பத்திரமா போய்ருவாளான்னு நினைச்சேன்?”

“அவளைப் பத்தி உனக்கு என்ன கவலை?”

“ரொம்ப திட்டிட்டேனோன்னு தோணுச்சு?”

“ஆமா ஆமா ரொம்ப ரொம்ப திட்டிட்ட? இதுக்கு பேர் திட்டா டா? இன்னும் சொல்லப் போனா நான் தான் திட்டினேன். நீ ஒண்ணுமே சொல்லலையே?”

“ம்ம், அவ கண்ணு எல்லாம் கலங்கிருச்சு. அதான் கேட்டேன். மனசுக்கு என்னமோ மாதிரி இருக்கு?”

“குத்தம் செஞ்ச நெஞ்சு உறுத்துதோ என்னவோ? அதான் அழுறா. இதுல உன் மனசுக்கு என்ன பிரச்சனை?”, என்று கூர்மையாக கேட்க அப்போது தான் தன்னை மறந்து உளறிக் கொண்டிருப்பது சிவனுக்கு புரிந்தது.

“ஒண்ணும் இல்லை டா, ஏதோ தோணுச்சு. அது தப்பா? சரி வா வேலையைப் பாப்போம்”, என்று சொல்லி பேச்சை மாற்றி விட்டான்.

எப்போதும் மாலையில் வீட்டுக்கு வராத ராதாகிருஷ்ணன் அன்று மகளுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவளைக் காண வந்திருந்தார்.

அவர் வீட்டுக்கு வரும் போது கோதை டி‌வி பார்த்துக் கொண்டிருந்தாள். “பாப்பா மதியம் சாப்பிட்டாளா?”, என்று கேட்டார்.

“மதியம் சாப்பாடு கொடுத்து மருந்து கொடுத்துட்டு தான் நான் தூங்கவே போனேன் போதுமா?”, என்று சொன்னாள் கோதை.

“சரி ஏன் கத்துற? நான் அவளை பாத்துட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றவரை வரவேற்றது வெறும் அறை தான். குளியல் அறைக் கதவு திறந்திருக்க அவள் காலையில் போட்டிருந்த உடையும் கட்டிலில் கிடக்க “எங்கயாவது கிளம்பி போய்ட்டாளா? காச்சலை வச்சிக்கிட்டு ஏன் போகணும்?”, என்று எண்ணி மகளுக்கு அழைத்தார்.

ஆனால் அவள் போனோ அங்கிருந்த டேபிள் மீது இருந்து சத்தம் கொடுத்தது.

தூங்கும் போது கூட போனைப் பிரியாத உமா போன் இல்லாமல் எங்கு சென்றாள் என்று வியப்பாக இருந்தது அவருக்கு. அவசரமாக கீழே வந்தவர் “உமா எங்க?”, என்று கேட்டார்.

“ரூம்ல தானே இருந்தா?”

“கோதை, இவ்வளவு வயசு ஆகியும் உனக்கு ஏன் பொறுப்பு வர மாட்டிக்கு? பொண்ணு வீட்ல இருக்காளா இல்லையான்னு கூட உனக்கு தெரியாதா?”, என்று கத்தி விட்டு வெளியே சென்றவர் காரை தேட அது இல்லை என்றதும் செக்யூரிட்டியிடம் எப்போது உமா கிளம்பினாள் என்று கேட்டு விட்டு வீட்டுக்குள் வந்து சோபாவில் அமர்ந்தார்.

“நிஜமாவே அவ ரூம்ல தூங்கிட்டு இருக்கானு தாங்க நினைச்சேன்”, என்றாள் கோதை. ராதாகிருஷ்ணனோ மனைவிக்கு பதில் எதுவும் சொல்லாமல் மகளைப் பற்றிய யோசனையில் இருந்தார்.

உமா காரை எடுத்துக் கொண்டு வெளியே செல்வது அவரைப் பொறுத்தவரை புதிய விஷயம் கிடையாது. ஆனால் அவர் மூளையை குழப்பியது இரண்டு விஷயம் தான். அது அவள் காச்சல் இருக்கும் போது வெளியே சென்றதும், போனை வைத்து விட்டுச் சென்றதும் தான்.

அவள் வீட்டுக்கு வந்த போது மாலை ஐந்து மணி ஆகி இருந்தது. அப்போது ராதாகிருஷ்ணன் மற்றும் கோதை இருவரும் ஹாலில் தான் அமர்ந்திருந்தார்கள்.

கலைந்த ஓவியம் போல உள்ளே வந்தவள் தந்தை மற்றும் தாயை நிமிர்ந்து பார்க்காமல் மாடிப் படியில் கால் வைத்தாள். அவர்களைப் பார்க்க அவளுக்கு குற்ற உணர்வாக இருந்தது. அவர்களை கண்டு கொள்ளாமல் அவள் செல்வது கோதைக்கு வியப்பாக இருந்தது.

ராதாகிருஷ்ணனோ மகளைத் தான் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தார். “ஏய் நில்லு டி, ரெண்டு பேரும் இங்க உக்காந்துருக்கோம். நீ பேசாம போற? முதல்ல இங்க வா”, என்று கோதை அரட்ட வேறு வழி இல்லாமல் அவர்கள் முன்னால் வந்து தலை குனிந்து நின்றாள்.

எப்போதாவது கோதை இப்படி அவளை அரட்டினால் ராதாகிருஷ்ணன் “அவளே இப்ப தான் வெளிய போய்ட்டு வந்துருக்கா. வந்ததும் உன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கணுமா?”, என்று மனைவியைத் திட்டி விட்டு மகளை அறைக்கு போகச் சொல்லுவார். ஆனால் இன்று கோதை விசாரணை நடத்த அவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.

“உமா, உன் கிட்ட தான் கேக்குறேன். உடம்பு சரியில்லாத இந்த நேரத்துல எங்க போயிட்டு வந்த? அதுவும் என் கிட்ட கூட சொல்லாம?”, என்று கோதை கேட்க உமாவுக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை.

உண்மையைச் சொன்னால் தந்தை திட்டுவார் என்று அவளுக்கு தெரியும். அதனால் என்ன பொய் சொல்லலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

“உமா”, என்று மீண்டும் கோதை அரட்ட “வீட்டுக்குள்ளே இருக்க போர் அடிச்சதுன்னு காரை எடுத்துட்டு பக்கத்துல இருக்குற பார்க்குக்கு போனேன். அப்ப நிஷா டிநகர் போகலாம்னு கூப்பிட்டா. வீட்ல வந்து உன் கிட்ட சொல்லிட்டு போனா நேரம் ஆகும்னு அப்படியே போயிட்டேன். அப்புறம் இப்ப காச்சல் எல்லாம் இல்லை”, என்று அவசரமாக சொன்னாள் உமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!