Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 6 4

அங்கே அவள் தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்க அவர்கள் பேசுவதைக் கேட்ட படி உமாவின் பேச்சை ரசித்து சிரித்தான். அது தான் அவர்கள் எடுத்த செல்ஃபியில் விழுந்திருந்தது. அது உமாவுக்கு தெரியாதே. ஆனாலும் அவனுடைய புகைப்படம் கிடைத்த சந்தோசத்தில் இருந்தாள். அன்று முழுவதுமே அவன் முகத்தை அடிக்கடி பார்த்தாள். ஜும் செய்து பார்த்தாள். அவன் உருவத்தை மட்டும் தனியே கட் செய்தாள்.

அவன் கண்களை வெகு அருகாமையில் பார்த்தாள். அப்படிப் பார்க்கும் போது இன்று அவன் கண்களை வெகு அருகாமையில் பார்த்ததும் நினைவில் வந்தது.



Advertisement

சில நேரம் அவளது விரல்கள் அவனுடைய கண்களை வருடி, உதடுகளில் வந்தடையும் போது சிறு சிரிப்பும் வெட்கமும் கூட அவள் முகத்தில் உருவானது.

Advertisement

“நான் ஏன் இப்படி ஆயிட்டேன்? அப்படின்னா உண்மையிலே அவங்களை நான் லவ் பண்ணுறேனா? அதனால தான் அவங்க அன்னைக்கு என்னை ரசிக்கலைன்னு அவ்வளவு கோபம் எனக்கு வந்துச்சா?”, என்று குழம்பிப் போனாள்.

Advertisement

ஆனாலும் அவளால் ஒரு முடிவுக்கு வர முடிய வில்லை. அன்று இரவு அவனை மறக்க வேண்டும் என்று அவள் எண்ண ஆனால் அவனை மறப்பது மட்டும் அல்ல, அவளால் தூங்கக் கூட முடிய வில்லை. எப்போதடா அவனைச் சென்று பார்ப்போம் என்றும் அப்படி அவனைப் பார்த்தால் அவனிடம் என்ன பேச வேண்டும் என்பது வரைக்கும் அவளது கற்பனை தறிகெட்டு ஓட அது கூட அவளுக்கு சுகமாக இருந்தது.

Advertisement

அவள் செய்த தவறின் குற்ற உணர்வு கூட அவன் மீது எழுந்த காதலால் சற்று பின்னுக்கு போனது. ஏனோ மனதே லேசானது போல ஒரு உணர்வு எழுந்து அவளை இம்சித்தது.

அடுத்த நாள் தந்தை அலுவலகம் சென்றதும் அவனைக் காணச் செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தாள். ஆனால் அடுத்த நாள் காலையில் அலுவலகம் கிளம்பி விட்டு அவள் அறைக்கு வந்த ராதாகிருஷ்ணன் “இன்னும் உடம்பு முழுசா சரியாகலை உமா குட்டி. அதனால எங்கயும் போகாம வீட்ல ரெஸ்ட் எடுக்கணும்”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.

இது வரை தந்தையின் பேச்சை மீறாதவளுக்கு இப்போது என்ன செய்ய என்று பெரும் தவிப்பு எழுந்தது. ஏனோ அவனைக் காண வேண்டும், அவன் திட்டினால் கூட அவன் குரலைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிக் கொண்டே இருக்க கிளம்ப முடிவு எடுத்து விட்டாள்.

“நேத்து மாதிரி அப்பா கிட்ட ஏதாவது பொய் சொல்லிறலாம்”, என்று எண்ணியவள் நேற்று போல குளிக்காமல் எல்லாம் செல்லாமல் நன்றாக குளித்து சூப்பரான உடையை அணிந்து கொண்டு கிளம்பினாள்.

கிளம்பி முடித்து சந்தோஷமாக அவள் கீழே வர ஹாலிலே அமர்ந்திருந்தாள் கோதை. மகள் வெளியே போவது புரிந்து முறைத்துப் பார்க்க “நீ என்ன மா இந்த நேரத்துல தூங்காம முழிச்சிட்டு இருக்க?”, என்று கேட்டாள்.

“உன்னை மாதிரி பிள்ளையை பெத்தா நான் வாட்ச்மேன் வேலை தான் பாக்கணும். எங்க டி கிளம்பிட்ட?”

“பிரண்ட்ஸ் பாக்க”

“ஒண்ணும் வேண்டாம். அப்பா வந்தா சத்தம் போடுவார்”

“அம்மா பிளீஸ் மா, அப்பாவை எப்படியாவது சமாளிச்சிறலாம். அப்பா வரதுக்குள்ள வந்துருவேன்“

“வேண்டாம் டி, அப்பா என்னை தான் திட்டுவார்”

“நிஜமா அப்பா வரதுக்குள்ள வந்துருவேன் மா. அப்பாவுக்கு நான் வெளிய போனதே தெரிய வேண்டாம். வெளிய போனதே தெரியலைன்னா உனக்கும் திட்டு விழாது, எனக்கும் திட்டு விழாது. என் செல்ல அம்மால்ல. பிளீஸ்”, என்று அன்னையைக் கொஞ்ச மகளின் கொஞ்சலில் விழுந்தவள் “சரி சரி போய்ட்டு வா”, என்றாள்.

“அம்மான்னா அம்மா தான்”, என்று சொல்லி சிட்டாக பறந்து சென்றாள். வாட்ச்மேனிடம் “ஃபிரண்ட்ஸைப் பாக்க போறேன் அங்கிள். அப்பா கிட்ட சொல்லிறாதீங்க”, என்று வேறு சொல்லிச் சென்றாள். அவள் எப்போதும் போல சொல்லாமல் சென்றிருந்தால் கூட அவர் அதை பெரிதாக எடுத்திருக்க மாட்டாரோ என்னவோ?

குழப்பமாக வெளியே செல்லும் அவளுடைய காரைப் பார்த்தவருக்கு சிறு குழப்பம் வந்தாலும் வேறு ஒன்றும் எண்ண வில்லை.

அவனுடைய கடைக்கு நாலு கடை தள்ளி காரை நிறுத்தி விட்டு நடந்து அவன் கடைக்கு வந்தாள். படபடவென்று வந்தது உமாவுக்கு. அவள் இதற்கு முன்பு இப்படி எல்லாம் உணர்வுகளை அனுபவித்ததில்லை.

கடைக்கு வந்ததும் “ஹாய்”, என்று புன்னகையுடன் சொல்ல கருப்பட்டி மற்றும் சிவன் இருவரும் அவளைக் கண்டு அதிர்ந்து தான் போனார்கள்.

கருப்பட்டிக்கு அவள் ஏன் மீண்டும் மீண்டும் வருகிறாள் என்று வியப்பாக தான் இருந்தது. “டேய் சில பேருக்கு நாம ஒரு தடவை சொல்றது புரியாதா? போகச் சொல்லு டா இங்க இருந்து”, என்று கருப்பட்டியிடம் சொன்னான் சிவன்.

“நம்மளை திட்ட விட்டு வேடிக்கை பாத்துட்டு ரொம்ப திட்டிட்டோமொன்னு பீல் பண்ணுவான்? நமக்கு எதுக்கு வம்பு?”, என்று எண்ணிய கருப்பட்டி “அதை நீயே சொல்லு மச்சான். நான் யூரின் போயிட்டு வரேன்”, என்று சொல்லி கழண்டு கொண்டான்.

“இவன் என்ன இப்படி கழண்டுட்டு போறான்”, என்று எண்ணி சிவன் கருப்பட்டி போன பாதையைப் பார்க்க அவன் அருகே வந்து நின்ற உமா “அவங்க போனா போறாங்க. நான் உங்களைப் பாக்க தான் வந்தேன்”, என்றாள்.

அழகு சிலை போல முகத்தில் புன்னகையுடன் வந்து நிற்கும் அவளைக் கண்டு அவன் மனம் சிறிது தடுமாறியது உண்மை. “முதல் நாள்ல இருந்து இப்ப வரைக்கும் இவ கிட்ட மட்டும் தடுமாறிட்டு இருக்கேனே?”, என்று தன்னையே கடிந்து கொண்டு “உனக்கு என்ன மானம் ரோஷம் இல்லையா? உன்னை இங்க வராதேன்னு சொன்னேன் தானே?”, என்று கேட்டான்.

“எனக்கு நிஜமாவே மானம் ரோஷம் உங்க விசயத்துல வரவே மாட்டிக்குது. நான் என்ன பண்ண?”, என்று அவள் அப்பாவியாக உரைக்க அவன் தான் நே என்று விழித்தான்.

“அவ பேச்சும் சிரிப்பும் சரி இல்லை டா சிவா. எப்படியாவது அவளை இங்க இருந்து அனுப்பு”, என்று அவனது உள்மனது குரல் கொடுக்க “இப்ப என்ன மன்னிப்பு தானே கேக்க வந்த? நான் மன்னிச்சிட்டேன் போதுமா? போ இங்க இருந்து”, என்றான்.

“என்ன இப்படி பொசுக்குன்னு இறங்கி வந்துட்டீங்க? அதுக்குள்ள மன்னிச்சா எப்படி?”, என்று வியப்பாக கேட்டாள்.

“ப்ச் இப்ப உனக்கு என்ன வேணும்?”

“நீங்க தான் வேணும்”, என்று அவள் பட்டென்று சொல்ல “உமா”, என்று கத்தினான் சிவன். சொன்னவள் என்னமோ சாதாரணமாக தான் இருந்தாள். ஆனால் அவனுக்கு தான் அவள் சொன்னதைக் கேட்டு உடல் நடுங்கியது.

“அட, என் பேர் எல்லாம் உங்களுக்கு தெரியுமா? எப்படி கண்டு பிடிச்சீங்க?”, என்று கண்களில் ஆர்வம் மின்னக் கேட்டாள்.

“எப்படியோ தெரியும்? உன்னைப் பாக்கவே எனக்கு பிடிக்கலை. தயவு செஞ்சு இங்க இருந்து போ”, என்று எரிந்து விழுந்தான்.

“இப்ப வேணும்னா போறேன். ஆனா உங்க வாழ்க்கையை விட்டு மட்டும் எப்பவும் போக மாட்டேன்”, என்று தீர்க்கமாக அவனுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்து சொல்ல ஒரு நொடி ஜெர்க் ஆனாலும் “நீ சொல்றதுக்கு என்ன அர்த்தம்?”, என்று தீர்க்கமாக கேட்டான்.

“நான் உங்களை விரும்புறேன்னு அர்த்தம். ஒரு நாள்ல உங்க மேல பைத்தியமாகிட்டேன்னு அர்த்தம்”

“உமா”

“உமா தான். உங்க உமா தான். இந்த சிவனுக்காக படைக்கப் பட்ட உமா மகேஸ்வரி நான் தான்”, என்று அவ்வளவு உறுதியாக அவள் சொல்ல அவன் வாயடைத்து போனான்.

அவனுக்கு ஒன்றுமே புரிய வில்லை. நேற்று அழுது மன்னிப்பு கேட்டாள். இன்று காதலைச் சொல்கிறாள். விளையாடுகிறாளா என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. ஆனாலும் அவள் காதல் என்று சொன்னது உண்மையாக இருக்க கூடாதா என்று அவன் அடி மனம் ஒரு சதவீதம் ஏங்கியது மட்டும் உண்மை.

“இங்க பாரு உமா. இது நாலு பேர் வந்து போற இடம். தேவையில்லாம இங்க வந்து என் நேரத்தை வீணாக்காத. நீ என் பர்சை எடுத்ததை வேணும்னா நான் மன்னிச்சிறேன். அதை அதோட விட்டுரு. இனி நீ யாரோ நான் யாரோ? கிளம்பு”, என்று அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.

“நேத்து நான் மன்னிப்பு கேக்க தான் வந்தேன். ஆனா இன்னைக்கு நீங்க என்னை மன்னிக்கவே கூடாதுன்னு கேக்குறேன். காலம் முழுக்க நீங்க எனக்கு தண்டனை கொடுக்கணும். நான் உங்க மனைவியா இருந்து அந்த தண்டனையை அனுபவிக்கணும்”, என்று அவள் சொல்ல விக்கித்துப் போனான்.

“இவ பேசுறதை புரிஞ்சு பேசுறாளா? இல்லை என்ன நோக்கத்தோட பேசுறா?”, என்ற குழப்பம் வந்தாலும் “லூசு மாதிரி பேசிட்டு இருந்த நான் மனுசனா இருக்க மாட்டேன்”, என்று எரிந்து விழுந்தான்.

“இல்லை நான் உங்களை …”

“அடச்சி வாயை மூடு. அன்னைக்கு பர்ஸ் எடுத்துட்டு போன? இன்னைக்கு தேவையில்லாம கடுப்பை கிளப்பிக்கிட்டு இருக்க? போடி இங்க இருந்து. இன்னொரு தடவை என் கண்ணு முன்னாடி வந்த அசிங்கமா போயிரும் பாத்துக்கோ”, என்று அவன் சொல்லும் போதே போட்டோ எடுக்க ஒரு ஆள் வர அவன் அவரை வரவேற்க நகர்ந்தான்.

“நீங்க என்ன சொன்னாலும் ஐ லவ் யு தான். நாளைக்கு வரேன்”, என்று சிறு சிரிப்புடன் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள் உமா. அவள் கடையில் இருந்து சிறு சிரிப்புடன் நடந்து வந்ததையும் காரில் ஏறிச் சென்றதையும் ஒரு ஜோடிக் கண்கள் கண்டு கொண்டது.

சிவன் அந்த கஷ்டமரை கவனித்து அனுப்பினாலும் அவனுக்கு அவள் நினைப்பாகவே தான் இருந்தது. அவன் மனம் என்னும் குளத்தில் கல்லெறிந்து விட்டு சென்று விட்டாள்.

அவள் மீது இருந்த எரிச்சலில் அப்போது கடைக்கு வந்த கருப்பட்டியிடம் “ஒண்ணுக்கு போறதுக்கு இவ்வளவு நேரமா டா?”, என்று எரிந்து விழுந்தான் சிவன். அவனை வியப்பாக பார்த்தான் கருப்பட்டி.

காதல் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!