Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 7 2

“அவர் வந்த பிறகு எடுத்துக்குறேனே?”, என்று அவள் கேட்க “ஐயோ இந்தப் பொண்ணு ஏழரையே கூட்டாம போகாது போல? அவனே வந்து சமாளிக்கட்டும்”, என்று எண்ணி “அவன் வர நேரம் ஆகும் ம்மா. இங்க வந்து உக்காரு”, என்றான்.

அவன் சொன்ன இருக்கையில் அமர்ந்தவள் “என்ன அவர் இவ்வளவு நேரம் கழிச்சா வரது? சீக்கிரம் வந்தா தானே பிஸ்னஸ் சூடு பிடிக்கும்?”, என்று கட்டின மனைவியை போல அரட்ட அவனுக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை .



Advertisement

“இங்க பாரு மா, அன்னைக்கு அவன் பர்சை எடுத்ததை தவிர்த்து எனக்கு உன்னைப் பத்தி எதுவும் தெரியாது. பாத்தா கலகலப்பா நல்ல பொண்ணு மாதிரி தான் இருக்க. ஆனா அவன் உன் மேல கொலைவெறில இருக்கான். ஏன்னா நீ செஞ்ச காரியம் அப்படி? ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போறது தான் உனக்கு நல்லது”, என்று எச்சரித்தான்.

Advertisement

“நான் செஞ்சது தப்பு தான். இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை. இப்ப என்னால அவரைப் பாக்காம போக முடியாது. அவர் எப்ப வருவார்?”

Advertisement

“இன்னும் அஞ்சு நிமிசத்துல வந்துருவான்” ,என்று அவன் சொன்னதும் அவளுக்கு பதட்டம் வந்தது. நகத்தை கடித்த படி அவன் வரவுக்காக காத்திருந்தாள். தன்னுடைய வண்டியை அதற்குரிய இடத்தில் நிறுத்கி விட்டு கடைக்கு வந்தவன் அவளைக் கண்டதும் அதிர்ந்து போனான்.

Advertisement

சுள்ளென்று ஒரு எரிச்சல் அவன் உடல் முழுவதும் பரவியது. “ஐயோ கோபமா பாக்குறானே? அப்படியே அப்பளம் மாதிரி பொரியப் போறான்”, என்று எண்ணி அவனைப் பாவமாக பார்த்தாள்.

அவள் பயம் அவனை தடுத்ததோ என்னவோ? கருப்பட்டியைப் பார்த்து “என்னவாம் டா?”, என்று கேட்டான்.

“ஏதோ போட்டோ எடுக்கணுமாம். பாத்து எடுத்துக் கொடு. நான் போய் சாப்பிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு ஓடியே விட்டான். அங்கேயே இருந்து யார் அவனிடம் பாட்டு வாங்குவது?

அவன் முறைப்பைக் கண்டு பயம் வந்தாலும் முன்னே வைத்த காலை பின்னே வைக்க அவளுக்கு மனதில்லை. எப்படியாவது அவனிடம் பேசி விட வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.

“போட்டோ தானே எடுக்கணும்? அங்க போய் நில்லுங்க”, என்று வரவழைத்த பொறுமையுடன் சொன்னான் சிவன்.

“நான் போட்டோ எடுக்க வரலை. உங்களைப் பாக்க தான் வந்தேன்”, என்று சொல்ல அவன் எரிச்சல் அதிகமானது.

“கண்டவங்களும் வந்து பாக்குறதுக்கு நான் என்ன மியூசியமா? வெளிய போங்க”

“பிளீஸ் நான் சொல்றதைக் கேளுங்க. நான் செஞ்சது தப்பு தான்”

“அதுக்கு இப்ப என்ன செய்யனும்?”

“நீங்க என்னை மன்னிக்கணும்”

“என்னால அதை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. என் அண்ணனோட உடலை வாங்க கூட காசு இல்லாம என்னை நிக்க வச்சிட்டல்ல? முதல்ல இங்க இருந்து போ. எனக்கு உன்னைப் பாக்கவே வெறுப்பா இருக்கு”

“பிளீஸ், நான் செஞ்சது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்னு எனக்கு புரியுது. உங்க கால்ல நாளும் விழுறேன். ஆயுசு முழுக்க கூட உங்க கிட்ட மன்னிப்பு கேக்குறேன். அப்புறம் எனக்கு… எனக்கு உண்மையிலே உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. நான் உங்களை விரும்புறேன். இது சத்தியம்”

“இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் எனக்கு பிடிக்காது. ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போயிரு”

“என்னை உங்களுக்கு பிடிக்கலையா? அந்த தப்பை மறந்துட்டு பதில் சொல்லுங்க. பிளீஸ் என் காதலை ஏத்துக்கோங்க. என்னால நீங்க இல்லாம இருக்க முடியும்னு தோணலை. உங்க நினைப்பாவே இருக்கு. இந்த ஒரு வாரமும் என்னோட மெஸ்ஸேஜ்க்கு நீங்க ரிப்ளை கூட பண்ணாதது எனக்கு கஷ்டமா இருந்துச்சு. அதான் நேர்ல வந்தேன். பிளீஸ் என் காதலை எத்துக்கோங்க”, என்று அவள் கெஞ்ச அவள் கண்களில் இருந்த யாசகம் அவனை திகைக்க வைத்தது.

இவ்வளவு அழகான பெண் வந்து காதலைச் சொன்னால் யாரும் தடுமாறுவது இயல்பு தானே? உமா அவ்வளவு அழகாக இருந்தாள். ஒரு நொடி அவளை ஆர்வமாக பார்த்தவன் பின் அவளிடம் இருந்து பார்வையை விலக்கி “இங்க பாரு உன்னோட வாழ்க்கை முறை வேற, என்னோட வாழ்க்கை முறை வேற? நீயும் நானும் தண்டவாளம் மாதிரி. ஒரு நாளும் ஒண்ணு சேர முடியாது. அடுத்த வேளைக்கு என்ன சமைக்கன்னு யோசிச்சு வாழுறவங்க நாங்க. ஆனா நீங்க அப்படி இல்லை. என் வாழ்க்கை அமைதியா போய்கிட்டு இருக்கு. அதைக் கெடுக்காத”, என்று சொன்னான். ஏனென்றால் இந்த ஒரு வாரமும் அவளிடம் இருந்து வந்த குறுஞ்செய்திகள் அவனை சலனப் படுத்தி இருந்தது.

அதுவும் வீட்டில் கண்மணியை பார்க்கும் போது அவனுடைய சலனமே அவனுக்கு குற்ற உணர்ச்சியைக் கொடுத்தது. அவளை அனாதையாக்கி தனியே நிற்க வைத்த ஒரு குடும்பத்தில் உள்ள பெண்ணின் மீது தன்னுடைய மனம் செல்வதா என்று அவனையே அவன் கடிந்து கொண்டான்.

அவன் மனது புரியாமல் “நான் பணக்காரி மாதிரி எல்லாம் இருக்க மாட்டேன். என்னால உங்க வீட்ல உங்க கூட அட்ஜஸ்ட் பண்ணி வாழ முடியும்? பிளீஸ் என்னோட காதலை ஏத்துக்கோங்க”, என்று கெஞ்சினாள் உமா.

“யாரு நீயா? கண்டிப்பா உன்னால முடியாது. நீங்க எல்லாரும் பணக்காரங்க. ஆனா நாங்க அப்படி இல்லை. இன்னைக்கு வயசுக்கோளாறுல என் பின்னாடி சுத்துற? இது காதல் எல்லாம் இல்லை. கொஞ்ச நாள் போச்சுன்னா எல்லாம் மறந்துரும். நீ செஞ்ச தப்புக்கு வேணும்னா உன்னை மன்னிக்கிறேன். இனி என்னைப் பாக்க வராத”

“பிளீஸ் நான் என்ன சொல்றேன்னா…?”

“நீ எதுவும் சொல்ல வேண்டாம். உங்க வீட்ல ஏதாவது ஒரு பையனைப் பாத்து கட்டி வைப்பாங்க. அவனைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இரு. பிளீஸ் இங்க இருந்து போ”

”இல்லை எனக்கு நீங்க வேணும்”, என்று அவள் சொல்ல உள்ளுக்குள் எரிச்சலும் கொலைவெறியும் வந்தது. ஒதுங்கி ஒதுங்கி போனாலும் விடாமல் துரத்தும் அவளை என்ன செய்ய என்று அவனுக்கு தெரிய வில்லை.

“உனக்கு என்ன பைத்தியமா?”, என்று கோபமாக கேட்டான். அப்போது பக்கத்து கடைக்காரர் “சிவா ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இருக்காப்பா?”, என்று கேட்ட படி வந்தார்,.

“இருக்குண்ணே, இருங்க எடுத்து தரேன்”, என்று சொல்லி அதை எடுத்துக் கொடுத்தான்.

பணத்தை வாங்கியவர் “என்ன பா, இந்த பிள்ளை அடிக்கடி கடைக்கு வருது? அன்னைக்கு மயக்கம் போட்டு விழுந்த பொண்ணு தானே? இப்பவும் வந்துருக்கு. யார் இது? தெரிஞ்ச பிள்ளையா?”, என்று சந்தேகமாக கேட்டார்.

“இல்லைண்ணே, அன்னைக்கு போட்டோ எடுக்க வந்தாங்க. இன்னைக்கு அதை வாங்க வந்திருக்காங்க. இப்ப அதைக் கொடுக்கணும்”, என்று சொல்ல “சரிப்பா”, என்று சொல்லி சென்றார்.

அவர்  சென்றதும் அவன் கோபம் தலைக்கேற “இப்ப உனக்கு நிம்மதியா? இப்படி என் பேரையும் என் கடையோட பேரையும் கெடுக்க தானே இங்க வந்துருக்க?”, என்று கேட்டான் சிவன்.

“இல்லை என்னோட காதல்….”, என்று அவள் சொல்ல வர “அடச்சே வாயை மூடு. என்ன டி பெரிய காதல்? நீ பண்ணுறது காதலா? சும்மா உடம்பு சுகத்துக்கு வேண்டி தானே என் பின்னாடி அலையுற?”, என்று கோபமாக கேட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனவள் “சிவா வார்த்தையை அளந்து பேசுங்க”, என்றாள்.

“நான் உண்மையைத் தான் சொல்றேன். பின்ன எதுக்கு என் பின்னாடி அலைய போற? பசங்களுக்கு நூல் விட்டு உன் காரியத்தை நிறைவேத்துற மாதிரி பொண்ணு தானே நீ?”

“நான் அப்படி எல்லாம் இல்லை சிவா. நீங்க பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு”

“நான் உண்மையைத் தான் சொல்றேன். நீ அப்படி பட்ட பொண்ணு தான். அது சரி உன் குடும்பம் நல்ல குடும்பமா இருந்திருந்தா நீயும் நல்லவளா இருந்திருப்ப? குடும்பமே எப்படியோ?”

“சிவா இது தான் லிமிட். என்னை என்ன வேணும்னாலும் பேசுங்க. என் குடும்பத்தை பத்தி பேசுற வேலை வச்சிக்காதீங்க”, என்று சொன்னாள். ஆனாலும் அவள் குரலில் கோபம் எல்லாம் ஏற வில்லை. அவன் இப்படி பேசுகிறானே என்ற ஆதங்கம் தான் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!