Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 9 1

அத்தியாயம்

கூரான கத்தியும் உன் மைதீட்டிய

விழிகளும் ஒன்று தான் என்று

கண்டேன் அது கொடுக்கும் வலியில்!!!



Advertisement

“அவ கேக்குறது சரி தான் அருண். எனக்கு இன்னொரு குடும்பம் இருக்கு. உங்க ரெண்டு பேரைத் தவிர எனக்கு இன்னொரு பொண்ணும் இருக்கா”, என்று ராதாகிருஷ்ணன் சொல்ல இருவருமே அதிர்ந்து போனார்கள்.

Advertisement

உமாவுக்கு கூட அவர்களுடைய வக்கீல் இன்னொரு குடும்பம் இருக்கிறது என்று சொல்லி இருந்தாரே தவிர ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்ல வில்லை.

Advertisement

உமா அமைதியாக இருக்க “அப்பா, நீங்க என்ன சொல்றீங்க?”, என்று கேட்டான் அருண்.

Advertisement

“ஆமா அருண். எனக்கு ரெண்டு மனைவி. அவ பேர் பவித்ரா. பவித்ரமானவ. உங்க அம்மா மாதிரி சுயநலவாதி கிடையாது”, என்று சொல்ல கோதை மௌனமாக கண்ணீர் வடித்தாள். பிள்ளைகள் இருவரும் அன்னையைப் பார்த்தார்கள்.

ராதாகிருஷ்ணன் தன்னுடைய வாழ்க்கை கதையை சொல்ல ஆரம்பித்தார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தான் அவர். கஷ்டத்திலும் அவருடைய பெற்றோர் அவரை நன்கு படிக்க வைத்தார்கள். குடும்ப சூழ்நிலை உணர்ந்து அவரும் நன்கு படித்தார். படித்ததும் அவருக்கு கோதையின் தந்தை நடத்தி வந்த கம்பெனியில் வேலை கிடைத்தது.

ராதாகிருஷ்ணனும் உண்மையாக நேர்மையாக தான் அங்கு வேலை செய்தார். அவர் நேர்மையைக் கண்ட கோதையின் தந்தை மாணிக்கம் அவரை தன்னுடைய மகளுக்கு கணவனாக்கிக் கொள்ள விரும்பினார்.

அதை தன்னுடைய மனைவி உமா மற்றும் மகள் கோதையிடம் கேட்க இருவரும் சந்தோஷமாக சரி என்று சொன்னார்கள். ஆனால் ராதாகிருஷ்ணன் குடும்ப ஏற்றதாழ்வைக் கணக்கில் கொண்டு மறுக்க தான் செய்தார். உடனே மாணிக்கம் ராதாகிருஷ்ணனின் வீட்டுக்கு செல்ல கோவைக்குச் சென்றார். ராதாகிருஷ்ணனுக்கு தெரியாமலே அவருடைய அன்னையிடம் நயமாக பேசினார். மகனின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அவரும் சரி என்று சொல்ல அவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்தது.

தொழில்கள் அனைத்தும் சென்னையில் இருப்பதால் ராதாகிருஷணன் மனைவி வீட்டிலே இருந்து கொண்டார். மாணிக்கம் மற்றும் உமா இருவரும் அவரை மரியாதை குறைச்சலாக நடத்தாததால் ராதாகிருஷ்ணனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

திருமணம் முடிந்து ஒரு வருடம் வரை இருவருக்கும் குழந்தை இல்லை. உமாவின் நச்சரிச்சலால் மருத்துவமனைக்குச் சென்றார்கள் கோதையும் ராதாகிருஷ்ணனும். அங்கே இருவருக்கும் டெஸ்ட் எடுக்க பட இருவருக்குமே எந்த பிரச்சனையும் இல்லை என்று தான் வந்தது.

“பொறுமையா இருங்க”, என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.

மூன்று வருடம் வரைக்குமே அவர்களுக்கு குழந்தை இல்லாததால் கோதை மனதுக்குள் கலங்க ஆரம்பித்தாள். ஆனால் ராதாகிருஷணன் மனைவியைத் தான் தேற்றினார்.

“பிறக்கும் போது பிறக்கட்டும் கோதை. ரொம்ப கவலைபட்டு உடம்பைக் கெடுக்காதே”, என்று சொல்ல அவளுக்கு தான் கலவையாக இருந்தது.

தாயின் தவறான அறிவுரையைக் கேட்டு கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய முடிவு எடுத்தாள். ராதாகிருஷ்ணன் அதை ஒத்துக் கொள்ளவே இல்லை. இருவரின் பெற்றோர்களும் கோதைக்கு சப்போர்ட் செய்ய ராதாகிருஷ்ணன் அப்போதும் மறுக்க தான் செய்தார்.

ஆனால் நீங்கள் திருமணம் செய்யாவிடில் இறந்து விடுவேன் என்று பிளாக்மெயில் செய்து அவரை சம்மதிக்க வைத்தாள் கோதை. அதே போல அவர்கள் அலுவலகத்திலே வேலைப் பார்த்த கஷ்டப் பட்ட பெண்ணான பவித்ராவிடம் இது பற்றி பேசினார்கள்.

இரண்டாவதா என்று அதிர்ந்தவள் வேண்டாம் என்று சொல்ல அவளுடைய தந்தையும் சித்தியும் பணத்துக்காக இதற்கு சம்மதித்தார்கள். மணமக்கள் விருப்பம் இல்லாமலே ராதாகிருஷ்ணன் மற்றும் பவித்ராவின் திருமணம் கோதை முன்னிலையிலே நடந்தது.

அவர்கள் இருவரையும் முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்ததும் கோதை தான். அப்போது எல்லாம் அவளுக்கு வாரிசு வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது. தன்னுடைய கணவனை இன்னொரு பெண்ணிடம் விட்டுக் கொடுக்கிறோமே என்ற எண்ணம் வரவே இல்லை.

ஆனால் முதலிரவு அறைக்குள் இருந்த ராதாகிருஷ்ணனுக்கோ படபடப்பாக தான் இருந்தது. கூடவே பவித்ரா வாழ்க்கையை வீணாக்கி விட்டோமே என்ற குற்ற உணர்வும் வந்தது.

“என்னை மன்னிச்சிரு பவித்ரா. நான் சூழ்நிலைக் கைதியாகிட்டேன். எனக்கு இதுல துளி கூட விருப்பம் இல்லை. ஆனால் அதை இப்ப சொல்லி ஒரு பயனும் இல்லை. இனி நீயும் என்னோட மனைவி தான். உன்னை எக்காலத்துலயும் கை விட மாட்டேன். ஆனா இந்த வாழ்க்கையை ஆரம்பிக்கிறது எல்லாம் கொஞ்ச நாள் கழிச்சு வச்சிக்கலாம்”, என்றார் ராதாகிருஷ்ணன்.

அவர் பேச்சில் பவித்ராவும் நிம்மதி கொண்டாள். கூடவே அவரை அவளுக்கு பிடிக்கவும் செய்தது.

அடுத்து வந்த நாட்களில் பவித்ரா மற்றும் ராதாகிருஷ்ணன் இருவரும் சேர்ந்தே அலுவலகம் செல்ல கோதை அப்போதும் சாதாரணமாக தான் இருந்தாள். தினமும் கணவரை பவித்ரா அறையில் தான் உறங்கப் போகச் சொன்னாள். திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்தது. இப்போது ராதாகிருஷ்ணன் மற்றும் பவித்ரா இருவரும் தங்களின் வாழ்க்கையையும் துவங்கி இருந்தார்கள். அதற்கு இருவருக்கும் இடையில் உண்டான காதலே காரணம்.

அதற்கு அடுத்த மாதத்தில் பவித்ரா உண்டாவதற்கு பதிலாக கோதை குழந்தை உண்டாக அப்போது ஆரம்பித்தது பிரச்சனை. மனைவி குழந்தை உண்டாகி இருப்பது தெரிந்து ஆவலாக கோதையைக் காண அறைக்குச் சென்றார் ராதாகிருஷ்ணன். அவளும் சந்தோஷமாக அவரை அணைத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து அவர் உறங்க செல்ல வேண்டும் என்று  எழுந்து கொள்ள “எங்க போறீங்க?”, என்று கேட்டாள் கோதை.

“எங்க போவேன்? எப்பவும் போல பவித்ரா ரூமுக்கு தான்”

“இல்லை, இன்னைக்கு இங்கயே படுங்களேன், பிளீஸ்”, என்று சொல்ல அவரும் மனைவி ஆசைப் படி அங்கே தங்க சம்மதித்து “சரி இரு அவ கிட்ட சொல்லிட்டு வரேன்”, என்றார்.,

“ஏன் ஏன் சொல்லணும்? என் புருஷன் என் கூட இருக்க அவ அனுமதி கொடுக்கணுமா? நீங்க எங்கயும் போக கூடாது”, என்று சொல்ல அவருக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை. ஹார்மோன் பிரச்சனையால் இப்படி செய்கிறாளா என்று எண்ணிய ராதாகிருஷ்ணன் அன்று மனைவியுடனே தங்கிக் கொண்டார்.

விடிய விடிய அவர் வருவார் என்று காத்திருந்து ஏமாந்து போனாள் பவித்ரா. அடுத்த நாள் காலையில் சரியாக உறங்காமல் பவித்ரா கண்கள் சிவந்து போய் இருந்தது. வீட்டில் வைத்து எதுவும் பேசாமல் அலுவலகம் செல்லும் போது “ஏன் பவி கண்ணு சிவப்பா இருக்கு?”, என்று கேட்டார்.

“தெரியலை, தினமும் உங்க கைக்குள்ளே தூங்கி பழகிட்டேனா? நேத்து நீங்க இல்லைன்னதும் தூங்க முடியலை. ஒரு வேளை நீங்க வரும் போது நான் தூங்கிறக் கூடாதேன்னு முழிச்சிட்டே இருந்தேன்”, என்று சொல்லும் போதே ஏமாற்றத்தில் அவள் கண்கள் கலங்கி விட்டது.

“சாரி பவி, கோதை மாசமா இருக்கா. அதான் அவ கூடவே இருந்துட்டேன்”, என்று குற்ற உணர்வுடன் சொன்னார்.

“அப்படியா? ரொம்ப சந்தோஷம். எனக்கு இது தெரியாது”

“உன் கிட்ட யாருமே சொல்லலையா?”

“சொல்லலைங்க”, என்று சொன்ன பவித்ராவுக்கு அந்த நொடி எதிர்காலத்தைப் பற்றிய பயம் பூதாகரமாக இருந்தது.

அன்று இரவும் பவித்ரா தனியே தூங்கும் படி தான் ஆனது. அடுத்த நாள் அவர் பவித்ராவிடம் மன்னிப்பு கேட்க “விடுங்க, நான் பழகிக்கிறேன்”, என்று சொன்ன பவித்ராவால் என்ன முயன்றும் அவளது கண்ணீரை அடக்க முடிய வில்லை.

தன்னுடைய கல்யாண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதை அவள் உணர்ந்து கொண்டாள். அதற்கு பிறகு வீட்டில் தினமும் பிரச்சனை தான். பவித்ரா சாப்பிட வந்தால் “பொண்ணும் மாப்பிள்ளையும் சாப்பிட்ட பிறகு நீ சாப்பிடு”, என்று உமா அவளை துரத்தி அடித்தாள். ராதாகிருஷ்ணன் கேட்டால் பவித்ரா சாப்பிட்டு விட்டாள் என்று சொல்லப் பட்டது. பவித்ராவும் ராதாகிருஷ்ணனும் நேருக்கு நேர் பேசாமல் கோதை பார்த்துக் கொண்டாள்.

அடுத்த நாளே மாணிக்கம் பவித்ராவை அலுவலகம் செல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார். அதுவும் அவளாகவே ஏதாவது ஒரு காரணத்தை ராதாகிருஷ்ணனிடம் சொல்ல வேண்டும் என்றும் சொல்லி விட்டார்.

“எனக்கு ஆபீஸ் வரலைப் பிடிக்கலைங்க. கொஞ்ச நாள் வீட்ல ரெஸ்ட் எடுக்குறேனே?”,. என்று பவித்ரா கணவரிடம் கெஞ்சியதும் அவரும் சரி என்று சொன்னார்.

அப்படி வீட்டில் இருக்கும் தருணத்தில் தான் அவளுடைய வயிற்றிலும் கரு உண்டாகி இருப்பது பவித்ராவுக்கு தெரிந்தது. சந்தோஷமாக தான் இருந்தது. ஆனால் அந்த சந்தோஷத்தை அவளால் அனுபவிக்க முடிய வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!