Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 12 1

அத்தியாயம் 12 

எந்தன் உள்ளம் உந்தன்

நினவில் பொங்கித் ததும்பும்

உண்மை அறிவாயோ?!!!



Advertisement

கண்மணி மற்றும் கருப்பட்டியைத் திரும்பிப் பார்த்தான் சிவன். சோர்வாக நின்றிருந்த கண்மணியை கைத்தாங்கலாக பிடித்திருந்தான் கருப்பட்டி. ஏனோ இருவரையும் கண்டதும் அவனுக்கு பொருத்தமான ஜோடியாக பட்டது. 

Advertisement

“அண்ணா, எனக்கு கருப்பட்டிக்கும் கண்மணிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு தோணுது. நான் நினைக்கிறது சரியா? இதுல உனக்கு சம்மதமா?”, என்று மானசீகமாக தன்னுடைய அண்ணன் இளவரசனின் ஆத்மாவிடம் கேட்டான். 

Advertisement

“எல்லாம் சரி தான்”, என்ற குரல் பட்டென்று கேட்டது. அதிர்ந்து திரும்பிப் பார்த்தான் சிவன். அவனது அன்னை பார்வதி தான் “எல்லாம் சரி தான் செல்வி. நீ கருப்பட்டி கண்மணியை அண்ணா அண்ணின்னே சொல்லு. நீ மாறினதே எங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்”, என்று மகளிடம் பேசிக் கொண்டிருந்தாள். சிவனுக்கு அது அவனுடைய அண்ணனின் வாக்காகவே பட்டது. எப்படியாவது அவர்களை வாழ்வில் ஒன்றிணைக்க முடிவு எடுத்தான்.  

Advertisement

“அண்ணி என்னை மன்னிச்சிருங்க. நான் உங்களை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்”, என்றாள் செல்வி.

“நீ எனக்கு தங்கச்சி மாதிரி செல்வி. என்னைப் பேச உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. தயவு செஞ்சு மன்னிப்பு கேட்டு என்னைத் தள்ளி வைக்காதே”, என்று சொன்னாள் கண்மணி.

“சரி தள்ளி வைக்கலை. சம்பந்தி ஆகிறலாமா? என் பையனுக்கு ஒரு பெண்ணைப் பெத்து தறீங்களா?”

“என்னை மன்னிச்சிரு செல்வி. என்னால அது முடியாது”, என்று அவள் சொல்ல செல்வி முகம் வாடியது. 

“என்னை மன்னிக்கலையா அண்ணி?”

“அப்படி இல்லை டா. எனக்கு பிறக்க போறது பையன் தான். எனக்கு கண்டிப்பா தெரியும். உங்க அண்ணா சொல்லிட்டு போய்ருக்கார். நான் வருவேன்னு. கண்டிப்பா வருவார். எனக்கு நம்பிக்கை இருக்கு. அவர் என் கூடவே தான் இருப்பார்”, என்று அழுது கொண்டே சொன்னவள் அப்படியே மயங்கிச் சரிய கருப்பட்டி அவளைத் தாங்கிக் கொண்டான். அந்த அறையில் கிடந்த மற்றொரு படுக்கையில் கருப்பட்டி அவளைப் படுக்க வைக்க சிவன் மருத்துவரைத் தேடிச் சென்றான்.

அவளைப் பரிசோதித்த டாக்டர் “ஸ்ட்ரெஸ்ல வந்த மயக்கம் தான். ரொம்ப வீக்கா இருக்காங்க. நல்லா ஹெல்தியா சாப்பிட வைங்க”, என்று சொல்லிச் செல்ல அனைவரும் கண்மணி பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அண்ணன் மீது உயிரையே வைத்திருக்கும் அவளையா உடனே அடுத்த ஆளைப் பிடிக்க போவதாக பேசினோம் என்று செல்விக்கு அவளை நினைத்தே அவமானமாக இருந்தது. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வர யாரும் பார்க்க வில்லை என்றாலும் சிவன் பார்த்து விட்டான். 

நர்ஸ் அனைவரையும் வெளியே போகச் சொல்ல சிவன் மட்டும் தங்கை அருகில் வந்தான். அண்ணனை நிமிர்ந்து பார்த்தாள். 

“என்ன டா?”

“அண்ணியை ரொம்ப தப்பா பேசிட்டேன்ல?”

“இல்லைனு சொல்ல மாட்டேன். ஆனா அதை விட இன்னொரு விஷயம் சூப்பரா பேசிட்ட செல்வி”

“நானா? நான் என்ன பேசினேன்?”

“அண்ணன் அண்ணின்னு பேசினல்ல?”

“எனக்கு புரியலைண்ணா”

“உன் அண்ணனையும் அண்ணியையும் சேத்து வச்சிறலாமா?”, என்று அவன் கண்கள் மின்னக் கேட்க அப்போது தான் அவளுக்கு அவள் சொன்னதே நினைவில் வந்தது. 

“அண்ணா”, என்று ஆர்வமாக அழைத்தாள். 

“எனக்கு அப்படி தோணுது டா. நீ என்ன சொல்ற?”

“ரொம்ப நல்ல விஷயம். எப்படியும் கருப்பட்டி அண்ணா சுந்தரி அம்மாவை பாத்துக்கணும்னு கல்யாணம் பண்ணிக்கப் போறது இல்லை. அவங்க ரெண்டு பேரும் சேந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்”

“சரி எல்லாம் நான் பாத்துக்குறேன். நீ யார்க் கிட்டயும் இதைப் பத்தி பேசாதே. என் மருமகனை மட்டும் பாத்துக்கோ”, என்று சொல்ல சந்தோஷமாக சரி என்று சொன்னாள். 

செல்வி மருத்துவமனையில் இன்னும் மூன்று நாட்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப் பட்டது. அதனால் பார்வதி அவளுக்கு துணையாக இருந்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டாள். மற்ற அனைவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்.

கண்மணி மற்றும் மதி இருவரும் மருத்துவமனை வாசலில் இருக்க சிவன் மற்றும் கருப்பட்டி இருவரும் வண்டியை எடுக்கச் சென்றார்கள். 

“நான் மதியை அழைச்சிட்டு முன்னாடி போறேன் மச்சான். நீ கண்மணியை அழைச்சிட்டு மெதுவா வா”, என்றான் கருப்பட்டி.

அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நொடி யோசித்த சிவன் “நான் மதியைக் கூட்டிட்டு முன்னாடி போறேன் டா. எனக்கு ஸ்டூடியோல கொஞ்சம் வேலை இருக்கு”, என்று அவசரமாக சொல்லி விட்டு அவன் மறுத்துப் பேசும் முன் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றான். 

“எனக்கு தெரியாம ஸ்டூடியோல என்ன வேலை?”, என்று குழம்பிய படியே வண்டியை எடுத்தான் கருப்பட்டி.

பெண்கள் இருவரின் முன்னே வண்டியை நிறுத்திய சிவன் “கண்மணி நீ கருப்பட்டி கூட வா. நீ ஏறு மதி“, என்றான்.

“அண்ணி உன் கூட வரட்டும் அண்ணா. நான் கருப்பட்டி அண்ணா கூட வரேன்”, என்று மதி சொல்ல “உன் கிட்ட நீ வரியா வரலையான்னு கேக்கலை. ஏறுன்னு சொன்னேன். ஏறு”, என்று கடுமையான முகத்துடன் சொல்ல அண்ணனின் கோபத்தில் திகைத்த படி அவன் பின்னே ஏறி அமர்ந்தாள். 

கண்மணியும் “சிவாவுக்கு ஏன் இவ்வளவு கோபம்?”, என்று குழம்பிப் போனாள். அப்போது கருப்பட்டி வர அவன் பின்னே ஏறி அமர்ந்தாள். 

மீண்டும் அமைதியான பயணம். ஆனால் வரும் போது இருந்த இறுக்கம் இப்போது அவளுக்கு இல்லை. கருப்பட்டியோ எதுவும் பேசாமல் சாலையில் கவனம் வைத்திருந்தான். என்ன தான் மெதுவாக வண்டியை ஓட்டிச் சென்றாலும் ஒரு மாடு அவன் வண்டிக்கு முன்னே வர சடன் பிரேக் போட்டான். 

திடீரென்று வண்டியை நிறுத்தவும் அவன் மீது மோதியவள் அவன் தோள் மீது கை வைத்துக் கொண்டாள். அவளுக்கு படபடப்பாக வந்தது.

“சாரி கண்மணி. பதறாதீங்க. திடீர்னு மாடு வரவும்…. உங்களுக்கு ஒண்ணும் இல்லை தானே?”, என்று பதட்டமாக கேட்டான்.

“எனக்கு ஒண்ணும் இல்லை. வண்டியை எடுங்க”, என்று சொன்னவள் அவன் தோளில் இருந்து கையை எடுக்க மறந்திருந்தாள். அவனும் அதை முதலில் கவனிக்கவே இல்லை. கவனித்த பின்பு ஒரு சின்ன சலனம் அவனுக்குள் எழுந்தது.

இது வரை மதி, நிலா, செல்வி, பார்வதி அவன் வண்டியில் வந்திருக்கிறார்கள் தான். சில நேரம் இருவரைக் கூட ஒரே நேரத்தில் வண்டியில் ஏற்றுவான். அப்போதெல்லாம் அவன் இப்படி ஜெர்க் ஆனதில்லை. “இவங்க புதுசா வந்தவங்கல்ல? அதான் ஒரு மாதிரி இருக்கு போல? அதெல்லாம் பழகிரும்”, என்று தனக்கு தானே எண்ணிக் கொண்டான்.

அதே நேரம் வண்டியில் செல்லும் போது அமைதியாக வந்தாள் மதி.

“மதி மா”, என்று அழைத்தான் சிவன். அண்ணனின் குரலில் இருந்த அன்பில் உருகிப் போனவள் “என்னண்ணா?”, என்று கேட்டாள்.

“என் மேல கோபமா டா?”

“உன் மேல நான் எப்படி கோபப் படுவேன்? ஆனா சின்ன குழப்பம் தான்”

“என்ன குழப்பம்?”

“நான் உனக்கு பிடிக்காத எதையும் செஞ்சிட்டேனா?”, என்று கேட்கும் போதே அவள் கண்கள் கலங்கி விட்டது. 

அதை கண்ணாடியில் பார்த்தவன் “என்ன மதி கண் கலங்கிட்டு?”, என்று கேட்டான்.

“நீ அரட்டிப் பேசினதும் கஷ்டமா போச்சு? என் மேல உனக்கு ஏதாவது கோபமா அண்ணா?”

“நீ எனக்கு இன்னொரு அம்மா டா மதி. உன் மேல கோபப் படுவேனா? அப்ப நான் ஏன் அப்படிச் சொன்னேன்னா?”

“வேண்டாம்ணா. எனக்கு தெரிய வேண்டாம். நீ ஏதாவது செஞ்சா அதுல ஒரு அர்த்தம் இருக்கும். எனக்கு புரிஞ்சிருச்சு”

“என்ன புரிஞ்சிருச்சு?”, என்று சிரிப்புடன் கேட்டான்.

“அண்ணியும் கருப்பட்டி அண்ணாவும் ஒண்ணா வரணும்னு நினைச்சிருக்கலாம்”

“அறிவாளி மதி நீ. எப்பவுமே நீ பொறுமையானவ. ரொம்ப பொறுப்பாவும் இருப்ப. உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு டா”

“சே சே எனக்கு என் அண்ணனை நினைச்சு தான் பெருமையா இருக்கு பா. ஏன்னா என்னை இப்படி நல்ல பிள்ளையா வளத்ததே என் அண்ணன் தானே?”, என்று சொல்ல அவன் நெகிழ்ந்து போனான்.

“இந்த அண்ணன் மேல உனக்கு கோபமே இல்லையா டா?”

“எதுக்குண்ணா?”

“அன்னைக்கு பொண்ணு பாக்க வறேன்னு சொன்னவங்க சகுனம் சரியில்லைன்னு சொல்லி வரவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அம்மா அவங்க வீட்ல போய் திருப்பியும் பேசச் சொன்னாங்க. கவர்ன்மெண்ட் மாப்பிள்ளையை விட அவங்களுக்கு மனசில்லை. ஆனா நான் முடியாதுன்னு சொன்னேன். அது உனக்கு வருத்தமா இருந்துருக்கும்ல?”

“சத்தியமா இல்லைண்ணா”

“மதி”

“ஆமாண்ணா, எங்க எண்ணன் என்ன தெரியுமா நினைச்சிருக்கும்? அந்த மாப்பிள்ளை நல்லவனா இருந்திருந்தா நாம பாக்க போற பொண்ணு வீட்ல ஒரு கஷ்டம்னு தெரிஞ்சு அதை பகிர்ந்துக்க வந்துருக்கணும், இப்படி ஓடி ஒழிஞ்சிருக்க கூடாதுன்னு நினைச்சிருக்கும். சரி தானே?”

“ஆமா டா, பொண்ணு பாக்குறப்பவே இப்படி யோசிக்கிறவங்க நாளைக்கு ஏதாவது ஆச்சுன்னா…..”

“கண்டிப்பா என் மேல தாண்ணா பழி போடுவாங்க. நான் கல்யாணம் முடிஞ்சு போன உடனே அவங்க வீட்ல யாருக்கோ கை ஓடிஞ்சா கூட அது என்னால தான்னு பேசுவாங்க”

“ஆமா டா, அதான் வேண்டாம்னு சொன்னேன். அண்ணன் உனக்கு நல்ல மாப்பிள்ளையா பாக்குறேன் சரியா? என்னோட தேவதையை கட்டிக்க ஒரு ராஜகுமாரனைத் தான் பாப்பேன்”

“நீ யாரையும் பாரு. நீ சொன்னா நான் செய்வேன்”

“வேலை பிடிச்சிருக்கா மதி?”

“ரொம்ப பிடிச்சிருக்குண்ணா. கவர்ன்மெண்ட் வேலை கிடைச்சாலும் இது நல்ல எக்ஸ்பீரியன்சா இருக்கும்”

“சரி டா”, என்று அவன் சொல்லும் போதே வீடு வந்திருந்தது. வெண்ணிலா வீட்டில் யாரையும் காணாமல் வாசலிலே அமர்ந்திருந்தாள்.

“எங்க போய்ட்டீங்க எல்லாரும்? நான் பயந்துட்டேன் தெரியுமா? சுந்தரி அம்மா கிட்ட கேக்கலாம்னு போனா அவங்க நல்லா தூங்கிட்டு இருந்தாங்க. அதான் வந்து வாசல்லே உக்காந்துட்டேன்”, என்று அவள் சொல்ல அவள் தலையை அன்பாக வருடி விட்டான் சிவன்.

“நம்ம வீட்டுக்கு குட்டி பையன் வந்துட்டான் நிலா. செல்வி அக்காவுக்கு ஆம்பளைப் பையன் பிறந்துட்டான்”, என்றாள் மதி.

“அப்படியா? நான் பாக்கலையே? அண்ணா என்னை ஏன் கூட்டிட்டு போகலை? நான் வந்ததும் போயிருக்கலாம்ல?”, என்று சிணுங்கினாள் வெண்ணிலா. 

“நீ ஸ்கூல்க்கு போயிருந்தல்ல மா? இப்ப என்ன? நாளைக்கு உனக்கு லீவ் தானே? நாளைக்கு கூட்டிட்டு போறேன் சரியா? மதி தலை வலிக்குது. டீ போடேன். எல்லாருக்கும் சேத்து போடு”

“இதோ போடுறேன் அண்ணா”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றவள் “நிலா போய் யுனிபார்ம் மாத்தி முகம் கழுவு”, என்று தங்கையையும் கவனித்துக் கொண்டாள்.

கண்மணி மற்றும் கருப்பட்டி இருவரும் வரும் போது சிவன் திண்ணையில் அமர்ந்திருக்க அவன் அருகில் சென்று அமர்ந்தான் கருப்பட்டி. கண்மணி வீட்டுக்குள் சென்று விட்டாள்.

“எங்கயோ போகணும்னு சொன்ன?”, என்று கேட்டான் கருப்பட்டி. 

“எங்க டா?”

“ஸ்டூடியோல வேலை இருக்குனு சொன்ன?”

“மதி டீ போடுறா டா. குடிச்சிட்டு போகணும்”

“ஓகோ”, என்று சொன்ன கருப்பட்டி வேறு கதை பேசிக் கொண்டிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!