Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 4

விடாமல் அடித்த அலைபேசி அழைப்பில் முயன்று கண்களை திறந்து பார்த்தான், திரையில் மிளிர்ந்தது அம்முவின் பெரியம்மா ஷ்யாமளாவின் எண், தன்னையே நொந்து கொண்டான், நேற்று அவளை அழைத்த வந்த பிறகு அவர்களிடம் பேசவில்லை பாவம் மிகவும் பயந்திருப்பார்கள்.

அழைப்பு நின்றுவிட்டது, தன் அருகில் பார்க்க போர்வைக்குள் சுருண்டு குழைந்தாயாய் உறங்கி கொண்டிருந்தாள் அவன் அம்மு, பாத்ரூம் சென்று வந்தவன் காபி ஆர்டர் செய்துவிட்டு பால்கனி செல்ல மழை இன்னும் பெய்து கொண்டிருந்தது.

மனம் மிகவும் லேசாக இருந்தது, இரவு “தனுகுந்து (குளிருது)” என்று  அவனை ஒட்டிக் கொண்டு படுத்தவளை தன்னில் புதைத்து கொள்ள, வெகு காலமாக வராமல் ஏமாற்றிக் கொண்டிருந்த நிம்மதியான உறக்கம் அவனை தழுவி கொண்டது.



Advertisement

மீண்டும் திரையில் அவர் பெயர் ஒளிர அழைப்பை ஏற்று செவியில் வைக்கும் போதே “மோனே, எண்டே அம்மு” என்றவரின் பரிதவிப்பான குரல் வந்து விழுந்தது.

“அம்மு நல்லா இருக்கா, தூங்குறா” என்க தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

“அழுதாளா? என்னை தேடினாளா?” என்று கேக்க தாய்மையின் பரிதவிப்பை உணர முடிந்தது “உங்கள தேடினா.. இப்போ பிரச்னை இல்ல, என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல” என்க “அது இல்லனா உங்க கூட அவளை அனுப்பிருப்போமா, இந்த குடும்பத்து மேல உங்களுக்கு இருக்கும் வெறுப்பு எனக்கு புரியுது, உங்க எடத்துல வேற யார்  இருந்திருந்தாலும் இந்த குடும்பத்தை அழிச்சிருப்பாங்க, நீங்க இவங்கள மன்னிக்க கூடாது, அதுக்கு அருகதை இல்லாதவங்க இவங்க, என் அம்முவுக்கு இனிமே எல்லாம் நீங்க தான், நல்லா இருங்க ரெண்டுபேரும்” என்றவர் அழைப்பை துண்டித்துவிட்டார். 

Advertisement

மீண்டும் அவள் அருகில் சென்று படுத்துக் கொண்டான், அவன் நினைவுகள் பின் நோக்கி சென்றது.

Advertisement

வீட்டை பார்த்து சென்ற ஒரு வாரத்தில் வந்து விட்டனர் குடும்பத்தோடு பால் காய்ச்ச , பொருட்களை ஏற்றி செல்லும் வண்டியுடன் பின்னேயே காரில் போகலாம் என்ற பிரகாஷின் யோசனையை மறுத்துவிட்டான் ஜெகன்நாதன்.

“முடியாது பா, ஆலப்புழா போய் அங்கேயிருந்து படகுல தான் போகணும்”  என்க, மகனின் ஆசை புரிந்து “சரி” என்றுவிட்டார் பிரகாஷ்.

அருமையான தந்தை அவர், பிள்ளைகள் ஆசைப்படும் அனைத்தையும் வாங்கி கொடுத்து அவர்களை தறுதலை ஆக்கும் தந்தை அல்ல, நல்ல வழிகாட்டி உற்ற நண்பன், சீதாராணியின் காதல் கணவன் , ஆம் சொந்த அத்தை மகளை காதலித்து பதினெட்டு வயதிலே சென்று  பெண் கேட்டவர் “இங்க பாருங்க மாமா நா படிக்க வெளியூர் போறேன், நா அந்த பக்கம் போனதும் என் சீதைக்கு வேற  மாப்பிள பாத்தீங்க அவ்ளோ தான் படிச்சுட்டு நல்ல  வேலையோட வருவேன் அது வரைக்கும் என் பொண்டாட்டியை நல்லா பாத்துக்கோங்க” என்று மிரட்டி சென்றவர்.

Advertisement

மகனின் ஆசை போலவே ஆலப்புழா வரை ட்ரைனில் வந்து அங்கு அறை எடுத்துக்கொண்டனர், குளித்து காலை உணவு உண்டு அங்கு செல்லவேண்டும், இனி பயணம் படகில் அவனை பரபரப்பு தொற்றிக் கொண்டது, அவளை காணப்போகிறோம் என்பதே அத்தனை உற்சாகமாக இருந்தது.

                            *********************************************************************

காலிங் பெல் ஓசையில் களைந்து எழுந்து செல்ல காபி வந்திருந்தது, வாங்கி உள்ளே வைத்தவன் மனைவியின் அருகில் செல்ல தூக்கம் களைந்து கொண்டிருந்தது அவளுக்கு.

அவன் இத்தனை நேரம் படுக்கையில் இருந்தது அவனுக்கே ஆச்சர்யம்  “இப்படி அங்க தூங்கினா, என்னை ரெண்டே நாள்ல கப்பல்ல இருந்து கடல்ல தூக்கி போட்ருவாங்க என் செல்லக் குட்டி” என்று மனைவியை கொஞ்சியவன் “எப்படியாவது அவளை சமாளிச்சுடு ஜகா” என்று தன்னை தயார் படுத்திக்கொண்டு அவளை எழுப்பினான்.

முதல் நாள் போலவே கொஞ்சம் நேரம் தடுமாறியவள், பிறகு அவன் சொல்லுவதை கேட்டு நடந்தாள், அவள் உண்டு முடிக்கும் வரை அனைவரும் பொறுமையாக இருந்து அவளை அழைத்துக் கொண்டு சென்றனர்.

உறவு பிள்ளைகளை இரவே அனுப்பிவிட்டான், டிரைவர் சீட்டில் இவன் அமர செல்ல துறை செல்வம் தடுத்து விட்டார் “உன் சிந்தனை இப்போ இங்க இருக்காது, நீ பின்னாடி போ நா பாத்துக்குறேன்” என்றவர் வண்டியை எடுத்தார்.

அவன் வாதம் புரியவில்லை இப்பொழுது கவனம் செலுத்தி எந்த வேலையும் செய்யும் மனநிலையில் இல்லை அவன், அம்முவுடன் பின்னால் ஏறிக் கொண்டான், முதல் முறை வீட்டில் இருந்து வெளி வந்து உலகை பார்க்கும் குழந்தையின் குதூகலம் அவள் முகத்தில்.. உற்சாகமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள், விழிகளை மூடி பின்னால் சாய்ந்து கொண்டான்.

 

*******************************************************************************************************

சட்டென்று தொடங்கி,

சட சட என்று பெய்து,

முழுதாக கொட்டி,

மொத்தமாக நனைக்கும்.

மே மாத மழை இன்றும் பெய்து கொண்டிருக்கிறது, வானத்தையும் பூமியையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு, ஊசிமுனைகளாக மண்ணை துளைத்து இறங்கி கொண்டிருக்கிறது.

காயல் நீரில் விழுந்து சிதறும் மழையின் நர்த்தனத்தை அந்த பழைய தரவாடு வீட்டின் முதல் தளத்தின் ஜன்னல் திட்டில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள் அம்மு.

தொலைவில் குடை பிடித்து  தோனி துழைந்து  பெண் ஒருவள் செல்வது தெரிந்தது, “அம்மு” என்ற அழைப்பில் திரும்பி பார்க்க மர படிக்கட்டுகளை ஏற முடியாமல் ஏறி வந்ததில் மூச்சு வாங்க நின்றிருந்தார்  அவள் அச்சம்மா(அப்பாவின்அம்மா லக்ஷ்மிகுட்டி).

அவள் அந்த ஜன்னலை பிடித்து நிற்கும்போதெல்லாம் அவர் மனம் பதறும், அம்முவின் தாயின் நினைவில் நெஞ்சம் விம்மும். 

 “எந்தா குட்டி இது,  எத்ர ப்ராவிஷம் பறையனும், இவிட இங்கன ஒட்டைக்கு நிக்கண்டான்னு” ( “என்ன பாப்பா இது, எத்தனை தடவ சொல்றது இங்க இது மாதிரி தனியா நிக்காதான்னு” ).  என்றவரை கை பிடித்து அழைத்து சென்று ஜன்னலின் திட்டில் செதுக்கப் பட்ட தன் பெயரை காண்பித்தாள்.

 அழகாக மலையாளத்தில் அவள் பெயரை செதுக்கி வைத்திருந்தாள் “ஹ்ம்ம் கொள்ளாம், ஷெரி வா நிண்டே வெலிச்சன் கானன்டா (ஹ்ம்ம் நல்லா இருக்கு சரி வா உன் பெரியப்பா பாக்க வேண்டாம்)” என்றவர் அவளை அழைத்துக்கொண்டு கீழிறங்கினார்.

(இதிலிருந்து நாம் கதையை தமிழில் மட்டும் கொண்டு செல்வோம்)

முதல் தளத்தில் இருந்து கீழிறங்கியவள் அடுக்களை வழி பின்கட்டை அடைந்தாள், தோட்டத்தில் மழை நீரும் காயல் நீரும் தேங்கி நின்றது, இவர்கள் வீட்டு சிறிய படகு காயல் கரையின் மரத்தில் கட்டப்பட்டிருந்தது.

அங்கிருந்து பாட்டியுடன் நடந்து பக்கத்தில் இருக்கும் தங்கள் புதிய வீட்டிற்கு சென்றாள் “எங்க போன இவ்ளோ நேரம்” என்ற பெரியப்பாவின் கர்ஜனையில் பெரியம்மாவின் வயிற்றோடு முகத்தை புதைத்துக்கொண்டாள் பதினைந்து வயதேயான அம்மு.

“இங்க தாண்டா இருந்தா நீ போ” என்ற பாட்டி பெரிய மருமகளுக்கு கண் காண்பிக்க, அவளை அடுக்கலைக்குள் தள்ளிக் கொண்டு சென்றார் பெரியம்மா, “டீ வெச்சுட்டு எவ்ளோ நேரம் கூப்பிடுறேன், அங்க ஏன் தனியா போற ? இனிமே அங்க இப்படி போக கூடாது புது ஆளுங்க தங்க வராங்கல்லா இனிமே அவங்க காலி பண்ற வரைக்கும் அது அவங்க வீடு சரியா” என்க  முகம் வாடி விட்டது அவளுக்கு.

சூடான டீயை கண்ணாடி க்ளாசில் ஊற்றி அவள் கையில் வைத்தவர் “என் அம்மு நல்ல பொண்ணு , நா சொன்னா அவளுக்கு புரியும் வர போற அங்கிளுக்கு  உடம்பு சரி இல்லாத ஒரு பையன் இருக்காங்களாம், அவங்க அப்பா இல்லாம ரொம்ப கஷ்டப் படுறாங்களாம் , அதனால எல்லாரும் ஒண்ணா இருக்க இங்க வராங்க , நாம தான அவங்கள நல்லா பாத்துக்கணும் பாக்கலாமா..” என்க “ஹ்ம்ம்” என்று உடனே சம்மதமாக தலையாட்டி சிரித்தாள்.

அம்மு இயற்கையின் குழந்தை, மிக சிறிய ஆசைகள் பிடிவாதம் கிடையாது, கோவம் கொள்ள தெரியாது, கோழி வாத்து முயல் குட்டி இவை தான் அவளின் தோழமைகள், பட்டாம்பூச்சி பிடிக்கிறேன் பறவையை பார்க்கிறேன் என்று எப்பொழுதும் தோட்டத்தில் தவம் கிடப்பவள்.

பெரியம்மாவின் “அம்மு குட்டா” என்ற அழைப்பில் தொடங்கும் நாள் பாட்டியின் கதை பெட்டகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அருமையான கதையோடு முடியும்.

மழையில் நனைய பிடிக்கும், அடர் சிகப்புநிற கண்ணாடி வளவிகள் பிடிக்கும், கிணற்றடியில் இருக்கும் தேச்சி பூவில்(இட்லி பூ) மாலை கட்டி தினமும் கிருஷ்ணனை காணப்போவது பிடிக்கும், தரவாடு வீட்டின் முதல் தளத்தில் இருக்கும் அவள் அன்னையின் அறை பிடிக்கும், ரப்பர் மர பாலின் வாசம் பிடிக்கும், பிடிதங்கள்…. அது நீண்டு கொண்டே  போகும் ராம பக்தன் ஹனுமானின் வாலைப்போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!