Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சத்தை எரித்தாய்

நெஞ்சத்தை எரித்தாய் 15 1

அத்தியாயம் 15

 அன்றைய சம்பவத்துக்குப் பிறகு வீட்டில் மீண்டும் மௌனம் சூழ்ந்தது. மல்லிக்கு அவள் வேலை ஏழு நாளும் இருக்க சுந்தரும் அவன் தொழிலை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

இதில் ப்ரியாவை இருவராலுமே அதிகம் கவனிக்க முடியவில்லை.  ப்ரியா பள்ளியில் இருக்கும் நேரம் பிரச்சனை இல்லை. ஆனால் மாலையில் அவள் பள்ளியை விட்டு வந்த பிறகும் மல்லிக்கு அவள் கிச்சனில் இரவு உணவு தயார் செய்யும் வேலை இருந்தது. ஆனாலும் நடுவில் வந்து ப்ரியாவை பள்ளியில் இருந்து அழைத்து வந்து உடை மாற்றி அவளுக்கு சாப்பிட கொடுத்து தன்னோடு அழைத்துக் கொண்டு போவாள்.

அங்கே அவள் சமையலை பார்க்க பிரியா அங்கே அமர்ந்து வீட்டுப்பாடங்களை செய்வாள். அதன்பிறகு பொழுது போகாமல் சுற்றி சுற்றி வருவாள். சில நாட்கள் சிவகாமி வந்து தன்னோடு டிவி பார்க்க அழைத்துப் போவார். ஆனால் தினமும் அவர்கள் வீட்டுக்கு போய் அவர்களைத் தொல்லை செய்யக் கூடாது என்று மல்லி விட மாட்டாள்.



Advertisement

இதில் சனி ஞாயிறும் கூட அவள் கிச்சனை மூட முடியாமல் வேலை செய்ய வேண்டி இருக்க ப்ரியா மெல்ல மெல்ல அதில் பாதிக்கப்படலானாள்.

ஆரம்பத்தில் மல்லிக்கு இது தெரியவில்லை. சுந்தரும் மல்லி வந்த பிறகு ப்ரியாவின் பொறுப்பை அவளிடம் விட்டு விட்டு முழு மூச்சாக தன் தொழிலில் ஈடுபட பிரியா மெல்ல மெல்ல படிப்பில் பின்தங்கியதோடு ஆளும் டல்லாகிக் கொண்டே போனாள்.

மல்லிக்கும் ஏழு நாளும் வேலை வேலை என்று ஓடுவது அதுவும் கடினமான வேலைகளை மணிக்கணக்காக செய்வது கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் இந்த தொழிலை விட்டால் வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.  சாவித்திரியிடம் யோசனை கேட்க அவளும் அவளுக்குத் தெரிந்த யோசனையை  சொன்னாள்.

Advertisement

“வல்லி! இப்ப நிறைய லேடீஸ் வேலைக்கு போறாங்க. அவங்களுக்கு அதனால ரெடி டு குக் மாதிரி சீக்கிரம் சமைக்கிற மாதிரி எல்லாம் ரெடி பண்ணி பாக்கெட் பண்ணி கொடுத்தா அவங்க சமைக்கிற நேரம் மிச்சம் ஆகும்.

Advertisement

நீ அந்த மாதிரி எதாச்சும் செய்ய முடியுமா யோசிச்சு பாரேன். அதோட இப்ப நிறைய பேருக்கு ஆர்கானிக் பொருள் என்றால் நல்லா இருக்கும் என்று ஒரு நம்பிக்கை. அதுக்கும் என்ன செய்யலாம் என்று யோசியேன்.

இன்னும் இட்லி மாவு, வத்தல், வடகம் இப்படி பொருளுக்கும் கூட தேவை இருக்கு. அதுவும் நல்ல யோசனை தான். இதுல எது உனக்கு ஒத்து வரும் என்று யோசி…”

மல்லிக்கும் உடனே எதுவும் யோசனை தோன்றாமல் இருக்க அவள் கிச்சன் வேலைகள் வழக்கம் போல தொடர்ந்தன. ப்ரியாவிற்கு காலாண்டு பரிட்சை முடிந்து லீவும் முடிந்து பள்ளி திறக்க முதல் நாளே அவள் வகுப்பு ஆசிரியை ரேங்க் கார்ட் வாங்க அவர்களை அழைத்திருந்தார்.

Advertisement

முன்பு எல்லாம் சுந்தருக்கு வேலை இருக்கும் என்பதால் இதற்கு மல்லி மட்டுமே போவது வழக்கம். அன்று ப்ரியா வந்து மல்லியிடமும் சுந்தரிடமும் ரேங்க் கார்ட் வாங்க மறுநாள் போக வேண்டும் என்றதோடு இருவரும் வந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.

மல்லி மகளுக்காக வாங்க என்று சுந்தரிடம் கேட்க விருப்பம் இல்லாமல் மெளனமாக இருக்க சுந்தருக்கு மல்லியின் அமைதி அலட்சியமாகத் தெரிந்தது. அவன் தன் கோபத்தை மகளிடம் காட்டினான்.

“இங்க பாரு பாப்பா! அதான் உங்கம்மா வரேன்னு சொல்லியாச்சுல்ல? எனக்கு வேலை இருக்கு. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க…”

சுந்தர் மறுக்கவும் ப்ரியா ஓவென்று அழ ஆரம்பிக்க இருவரும் சேர்ந்து தான் அவளை சமாதானம் செய்ய வேண்டி இருந்தது.

“சரி பாப்பா! நாம என் வண்டியில போவோம். அப்பா வேலை முடிச்சிட்டு அப்புறமா பைக்கில் வருவாங்க..” என்று மல்லி போக்குவரத்து பிரச்னையை முடித்து வைக்க ப்ரியா லேசில் ஒத்துக் கொள்வதாக இல்லை.

 அவளுக்கு முன்பு மூவருமாக வெளியே செல்லும்போது போன மாதிரி பைக்கில் ஒரு குடும்பமாக போகும் ஆசை. அவள் முன்னால் அமர்ந்திருக்க அப்பா வண்டி ஒட்ட மல்லி பின்னால் அமர்ந்து எக்கி சுந்தரின் தோள் மேல் மோவாய் வைத்தபடி அவளிடம் பேசிக் கொண்டு வரும் ஆசை.

அதோடு அவள் தோழிகள் எல்லாம் அம்மா அப்பா இருவரோடும் தான் வருவோம் என்று  சொல்லி இருக்க அவளால் அம்மா கூட மட்டுமே போக முடியுமா?

ப்ரியா மூவருமாக சேர்ந்து தான் போக வேண்டும் என்று அதற்கும் பிடிவாதம் பிடிக்க மல்லிக்கு கோபம் வந்தாலும் இழுத்துப் பிடிக்க வேண்டிய நிலை.

பிள்ளையார் சதுர்த்தி அன்று  மல்லி அவளை அடித்ததற்கு அழுததில் அவளுக்கு காய்ச்சல் வந்து இரண்டு நாள் ஆனது ஜுரம் சரியாக. ஏற்கனவே பிரியா அரை மணி நேரமாக அழுததே மல்லிக்கு மறுபடி ஜுரம் வந்து விடுமோ என்ற கவலையைத் தர சுந்தருக்கும் சேர்த்து அவளே வாக்கைக் கொடுத்தாள்.

“சரி பாப்பா! மூணு பேருமாவே சேர்ந்து போகலாம்..நீ இப்படி அழுதிட்டே இருந்தா அப்புறம் டாக்டர் ஊசி தான் போடுவாங்க…எது சொல்றதா இருந்தாலும் அழாம சொல்லு…”

என்று சமாதானம் செய்ய சுந்தர் அமைதியாக இருவரையும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

மல்லியின் சமாதானத்தில் ப்ரியா சமாதானம் ஆனாளோ என்னவோ சுந்தருக்கு பழைய நிலை மீண்டது போல ஒரு ஆசுவாசம்.

சுந்தருக்கு மல்லி தன் வியாபாரத்தில் உதவவில்லை. இந்த கால பெண்களைப் போல நடையுடை பாவனைகளில் நாகரீகமாக இல்லை. அதோடு ஆளும் உடம்பை பேணாமல் கண்டதையும் சாப்பிட்டு குண்டடித்திருக்க எல்லாம் சேர்ந்து வந்த சலிப்பில் தான் அவன் வேறு பெண்ணைத் தேடியது.

அதுவும் பல முறை மல்லியிடம் சொல்லி சொல்லி பார்த்து விட்டு அவள் அசையவே இல்லை என்ற வெறுப்பில் தான் மேட்ரிமோனி சைட்டில் விண்ணப்பித்திருந்தான்.

ஆனால் இந்த நான்கு மாதங்களில் மல்லி முற்றிலும் அவன் எதிர்பார்த்தபடி மாறியிருந்தாள். அவனுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது போக சொந்தமாகவே தொழில் செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டாளே அவன் மனைவி?

ஆளும் இளைத்து அவன் கல்யாணம் செய்து வந்தபோது இருந்த மாதிரி சிறு பெண்ணாக தோற்றம் மெருகேறி இருக்க உடையும் இப்போதெல்லாம் பதினெட்டு முழ புடவையை சுற்றிக்கொண்டு நிற்காமல் நாகரீக உடைகளுக்கு மாறியிருக்க அவன் அவள் மேல் கொண்டிருந்த கோபமெல்லாம் போயே போய் விட்டது.

வீட்டை  பூட்டிக்கொண்டு மல்லி வர சுந்தர் அதற்குள் பைக்கை வெளியே எடுத்திருந்தான். பிரியா சீருடையில் பைக்கில் முன்னால் அமர்ந்து முகமெல்லாம் மலர மல்லியின் வரவுக்காக பார்த்திருந்தாள்.

“அப்பா ஸ்கூல் போயிட்டு வரும்போது அப்படியே ***** ஹோட்டல்ல பிரியாணி சாப்பிட்டு வரலாம் பா.. அப்புறம் சாயந்தரம் நாம எல்லாம் ஜாலியா சினிமாவுக்கு போலாமா…? அங்க இன்டர்வல்ல எனக்கு நீ பாப்கார்ன் வாங்கித் தரணும். என் பிரெண்ட் சொல்றா அந்த ***  தியேட்டர்ல பாப்கார்ன்ல நாமளே வேண்டிய அளவுக்கு மசாலா உப்பு எல்லாம் போட்டுக்கலாமாம்…”

ப்ரியாவின் வாய் விடாமல் சலசலத்துக் கொண்டிருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு மூவரும் வெளியே போகிறார்கள் அல்லவா? இதை அவள் எவ்வளவு தூரம் தேடினாள் என்று அவர்கள் இன்னும் அறிந்திருக்கவில்லை.

சுந்தர் மகளின் பேச்சைக் கேட்டு முகமெல்லாம் புன்னகையோடு தலையாட்டிக்கொண்டு இருக்க மல்லி வெளியே வந்தாள்.

சுந்தர் பழசை எல்லாம் மறந்து விட்டு எதுவுமே நடக்காதது போல மகளிடம் பேசிக் கொண்டு இருந்ததை பார்க்க அந்த மேட்ரிமோனி சைட்டில் தனக்கு குழந்தைகள் இல்லை என்று அவன் போட்டது அசந்தர்ப்பமாகஅந்த நேரத்தில்  நினைவு வந்தது. என்ன ஒரு திருட்டுத்தனம்!

அவனை பார்க்காமல் இருந்த போது கூட மல்லி ஒருவாறு தன்னை தேற்றிக்கொண்டு இருந்தாள். ஆனால் இப்போது அவனை தினமும் பார்க்க பார்க்க ஆறியிருந்த மனக்காயத்தை கிளறிக் கிளறி ரணமாக ஆகிக் கொண்டே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!