Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சத்தை எரித்தாய்

நெஞ்சத்தை எரித்தாய் 15 2

முன்பு வீட்டில் இருந்து குடும்பத்தையும் மகளையும் பார்த்துக் கொண்டு இருந்தாள் என்றால் இப்போது அதோடு சேர்த்து வேலைக்கும் போய் அவளுக்கு தான் பணிச்சுமை அதிகமாகி இருந்தது. இப்போதும் அவன் தன் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்த அவள் இப்போது இரட்டை குதிரையில் சவாரி செய்யும் நிலை.

அப்படி என்ன இவனோடு இருந்தே ஆக வேண்டிய கட்டாயம்?

சுந்தரோடு மீண்டும் ஒரே வீட்டில் இருக்க ஆரம்பித்த பிறகு தினமும் தோன்றும் அதே எண்ணம் இன்றும் அதுவும் இப்போது….

மல்லி வந்ததை பார்த்து விட்டு ப்ரியா சந்தோஷமாக புன்னகை செய்ய மல்லி கடுகடுத்த முகத்தை முயன்று சாதாரணமாக ஆக்கிக் கொண்டு சுந்தரின் பின்னால் ஏறி அமர்ந்தாள்.



Advertisement

இருவருக்கும் இடையே ஒரு குழந்தை உட்காரும் அளவுக்கு இடைவெளி. மனதிலோ உலக அளவுக்கு இடைவெளி வந்து விட்டதே!

சுந்தர் மல்லியின் மனப்போக்கு அறியாதவனாக பின்னால் திரும்பி  “போகலாமா..?” என்று கேட்க மல்லி “ம்ம்…” என்றதோடு சரி.

“நல்லா நவந்து உக்காரு மல்லி…! விழுந்துறப் போற….” என்று அக்கறையோடு சொன்னவனை சட்டை கூட செய்யவில்லை.

Advertisement

நேராக பார்த்தபடி அமர்ந்திருக்க சில நொடிகள் காத்திருந்து விட்டு மல்லி அசைவதாக இல்லை என்று புரிய ஒரு பெருமூச்சோடு சுந்தர் வண்டியை எடுத்தான்.

Advertisement

ப்ரியா மல்லி மனநிலை புரியாமல் முன்னால் இருந்தபடி “அம்மா…அம்மா…! முன்னால வாம்மா…! நாம பேசிட்டே ஜாலியா போவோம்….:” என்று ஆசையாக கேட்க அவளுக்கும் மல்லியிடம் இருந்து திட்டு தான் கிடைத்தது.

“பாப்பா! அதான் நீ ஆசைப்பட்டபடி ஒண்ணா ஒரே வண்டியில போறோம் இல்ல? அப்புறமும் சும்மா நொச்சு நொச்சுன்னு ஏதாவது சொல்லிட்டே இருக்கக் கூடாது. பேசாம உக்காந்து வேடிக்கை பாத்துட்டு வா….”

அதில் ப்ரியாவின் முகத்தில் இருந்த சிரிப்பு சுத்தமாக மறைந்து விட சுந்தரால் நடுவே மல்லியை அதட்டவோ ப்ரியாவை சமாதானம் செய்யவோ எதற்கும் வாயைத் திறக்க முடியவில்லை. மூவருமே சிரிப்பைத் தொலைத்த முகத்தோடு பள்ளிக்கு போய்க் கொண்டிருந்தனர்.

Advertisement

வண்டியை ஒட்டிக்கொண்டு சென்ற சுந்தருக்கு  அந்த நாள் ஞாபகம் வந்தது

ப்ரியாவை முதல் நாள் பள்ளியில் கொண்டு போய் விட்ட நாள். இருவருமாக கொஞ்சலும் சிரிப்புமாக மகளை பள்ளியில் சேர்த்த நாள். அப்போதெல்லாம் சுந்தர் அவளை சுற்றி சுற்றி வருவான்.

மகளுக்குப் புதிதாக தைத்த சீருடையை அணிவித்துக் கொண்டே சுந்தர், மகளுக்கு பள்ளியில் உண்ண தின்பண்டங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மல்லியிடம் சரசமாக பேசினான்.

“என்னடா மல்லி! பொண்ணுக்கு மூணு வயசு ஆச்சு…. ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டா. உனக்கு இனி பொழுது போகாதே…நாம அடுத்து உன்னை பிஸியாக வைக்க ஏதாவது பிளான் பண்ணா என்ன? என்ன சொல்றே….?”

பேச்சிலேயே மாமன் மகளை மயக்கி மணமுடித்தவனாயிற்றே?அவள் இப்போது தன்னிடம் மயங்கி சுற்றி சுற்றி வரும்போது கேட்க வேண்டுமா?

“அத்தான்! ஏற்கனவே எங்களுக்காக நீங்க கடுமையா உழைக்கறீங்க. தினமும் காலையில் போனா வீட்டுக்கு வர பாதி ராத்திரி ஆகுது. சனி ஞாயிறு கூட ரெஸ்ட் எடுக்க முடியாம ஓடறீங்க. இன்னும் நம்ப குடும்பம் பெரிசானா உங்களுக்கு இன்னும் சுமை கூடிடும். நமக்கு எல்லாமே இவளே இருக்கட்டும் . நீங்க இனி உங்கள எப்படி ப்ரீ பண்ணிக்கலாம் என்று யோசிங்க அத்தான்…”

தான் கேட்ட கேள்வியின் காரணம் புரியாமல் வெள்ளந்தியாக பதில் சொன்ன மனைவியை காதலோடு பார்த்தான் சுந்தர்.

இனி மல்லி சொன்னது போல வேலையை குறைத்துக் கொண்டு வீட்டில் அதிக நேரம் இருக்க வேண்டும் என்று நினைத்தான் தான். ஆனால் அவனால் வெகு நேரம் அந்த முடிவில் நிற்க முடியவில்லை.

அவனோடு தொழில் செய்ய ஆரம்பித்தவர்கள் வேக வேகமாக முன்னேற அவனுடைய முன்னேற்றம் ரொம்ப மெதுவாக தான் இருந்தது. அவர்களை எட்டிப் பிடிக்க வேண்டும் என்று நினைத்து எப்படி எப்படியோ போய் எப்படி எப்படியோ திசை மாறி …

சுந்தர் பெருமூச்செறிந்தான். அவன் இன்னும் வேதனைப்பட அங்கே அடுத்த கட்ட விஷயங்கள் காத்திருந்தன.

எப்போதும் இது போல பள்ளிக்கு வரும்போது தன் பள்ளியைப் பற்றியும் தோழிகளைப் பற்றியும் கலகலத்துக் கொண்டு வரும் ப்ரியா அன்று பள்ளிக்குள் மூவரூமாக நடந்து செல்லலும் போதும் அமைதியாகவே வந்தாள்.

அவள் முகத்தில் எதோ ஒரு பயம்.. எப்போதும் அவனோ மல்லியோ கோபித்தால் கூட அவளே வந்து ஒட்டிக் கொள்பவள் அன்று அவர்களை விட்டு சற்றுத்தள்ளி தயங்கித் தயங்கி நடந்து வந்தாள்.

ஆரம்பத்தில் பெற்றவர்கள் இருவரும் தங்கள் சொந்த எண்ணங்களில் பிணைக்கப்பட்டு மகளை கவனிக்க தவறினாலும் சில நிமிடங்களிலேயே மகளின் உற்சாகக் குறைவை கவனித்து விட்டனர்.

மல்லி இரண்டு எட்டு முன்னால் நடந்து மகளின் கையோடு தன் கையை கோர்த்துக் கொள்ள ப்ரியாவின் முகம் அப்போதும் தெளியவில்லை. ஃபோர்த் ‘ஈ’ வகுப்பின் வாசலில் ப்ரியா நின்று விட பள்ளி ஆசிரியை அப்போது ப்ரீயாக தான் இருந்தார்.

அவர்களை பார்த்ததும் “கம் இன் பிரியா மம்மி டாடி…!” என்று உள்ளே அழைத்தார். மூவருமாக உள்ளே போய் அவர் எதிரே இருந்த பெஞ்சில் அமர ஆசிரியை தன் எதிரே இருந்த ரேங்க் கார்ட் கட்டில் ப்ரியாவின் ரேங்க் கார்டை தேடி எடுத்தார்.

அதை உடனே அவர்களிடம் கொடுக்காமல் மேலே வைத்துக் கொண்டவர் இருவர் முகத்தையும் பார்த்து விட்டு ப்ரியாவின் முகத்தையும் பார்த்தார். ப்ரியாவின் தலை குனிந்து இருக்க மல்லி சுந்தர் இருவர் முகத்திலும் குழப்பம்.

“மற்ற பசங்க எல்லாம் அம்மா இல்ல அப்பா மட்டும் கூட்டிட்டு வந்தா போதும். பிரியா டைரில மட்டும் தான் உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வர சொல்லி எழுதி இருந்தேன். ஏன் தெரியுமா? இதோ பாருங்க….”

என்று அவள் ரேங்க் கார்டை அவர்கள் பக்கம் திருப்பி வைத்தார்.

புருவங்கள் முடிச்சிட இருவரின் பார்வையும் ஒரே நேரத்தில் அதில் விழ எல்லா பாடங்களிலும் அவள் தோல்வி அடைந்திருந்தாள்.

அதற்கு முன் இருந்த மாதத் தேர்வில் ஓரளவு மதிப்பெண் வாங்கி இருந்ததை விட இப்போது காலாண்டுத் தேர்வில் பல படிகள் கீழே. கூடவே மாணவரின் பழகும் விதம், தோற்றம், மனநிலை என பல மதிப்பீடுகளிலும் ப்ரியா திருப்தியாக இல்லை.

இருவரும் தங்களை மீறி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள ப்ரியாவிடம் இருந்து அமைதி மட்டுமே.

“பிரியா மம்மி! ப்ரியாவை எனக்கு நல்லாவே தெரியும். போன வருஷம் வரைக்கும் நல்லா படிச்சிட்டு இருந்த பொண்ணு தான். நாலாங்கிளாஸ் ஒண்ணும பெரிய கிளாஸ் இல்லை தான். ஆனா அவள் கிளாஸ்ல இப்பலாம் இருக்கிற விதம் தான் சரியா இல்லை….” என்றவர் அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ப்ரியாவை “ப்ரியா! போய் ராணி மிஸ் கிட்ட இந்த புக்கை குடுத்துட்டு அவங்க ஒரு புக் தருவாங்க…அதை வாங்கிட்டு வா…” என்று சொல்ல பதிலே பேசாமல் ப்ரியா அதை வாங்கிக் கொண்டு வகுப்பை விட்டு வெளியேறினாள்.

அவள் தலை குனிந்தபடி மெதுவாக நடந்து போவதை மூவரும் வேடிக்கை பார்க்க அவர்களின் கவனத்தை கலைத்தார் ஆசிரியை.

“அந்த பொண்ணு நடையில் ஒரு துள்ளல் இருக்கும்..இப்ப இல்லை பார்த்தீங்களா? குழந்தை முகத்தில் சுத்தமா சிரிப்பு மறைஞ்சு போச்சு. எப்போதும் வாட்டமாகவே தான் இருக்கா. முன்னலாம் கிளாஸ்ல அதிகம் பேசி என் கிட்ட அடி வாங்குவா. இப்பலாம் எப்போதும் அமைதி தான். பாடத்திலும் கவனம் இல்லை. என்னவோ சரியில்லை. என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா? எதோ அந்த குழந்தையின் மனசை பாதிச்சு இருக்கு….”

ஆசிரியை பேசிக் கொண்டே போக இருவரும் அதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? இருவருமே மெளனமாக இருக்க ஆசிரியை இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தார்.

ஹலோ பிரெண்ட்ஸ் கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதனால் எபி போட முடியல. மன்னிச்சு. இனி விரைவாக வந்து கதையை முடிக்க முயற்சி செய்றேன் பா. Very sorry for the delay

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!