Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அன்பில் இணைந்த இதயங்கள்

அன்பில் இணைந்த இதயங்கள்….6

அன்பில் இணைந்த இதயங்கள்….6

கயல்விழி தனது அறையில் ஓய்ந்து போய் படுத்து கிடந்தாள்.சத்யா அவளை வெளியில் தள்ளிவிட்டு திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டான்.எப்படி இவள் வீடு வந்து சேர்ந்தாள் என்று இவளுக்கே தெரியவில்லை கால்கள் அதன் போக்கில் அவளின் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டது.ஆனால் உடலில் உயிர் இருந்த போதிலும் உள்ளம் இறந்து போயிருந்தது.இனி உயிர்பிக்க வாய்ப்பில்லை என்பது திண்ணம் என்று அவளின் மூளை எடுத்துரைக்க கலங்கிய கண்களை துடைக்க கூட தோன்றாமல் தனது அறைக்குள் வந்தவள் அப்படியே தனது படுக்கையில் சரிந்துவிட்டாள்.

கண்களில் கண்ணீர் அருவி போல வந்து கொண்டிருந்தது அதை துடைக்கும் எண்ணம் இல்லாமல் வெறித்தபடியே படுத்திருந்தவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கு தெரியவில்லை.அடுத்த நாள் காலை கயல்வழிக்கு கண்களை திறக்க மிக கடினமாக இருந்தது.உடல் எல்லாம் வலியுடன் சூடும் கூடியிருக்க அவளுக்கு காய்ச்சல் என்று புரிந்தது.ஆனால் அவளால் தன் உடலை நகர்த்த கூட முடியவில்லை.உடலும்,மனதும் வலுவிழந்ததை போலிருந்தது.

அனன்யா மாலை பள்ளி விட்டு வீட்டிற்கு வர அவளின் கேர்டேக்கர்  அவளுக்கு தேவையான உணவினை வழங்கினார்.அவர் கொடுத்த உணவினை உண்டுவிட்டு வீட்டின் வெளி வரண்டாவில் அவள் உலாத்திக் கொண்டிருந்தாள்.அப்போது கயல்விழியின் அறையில் இருந்து முனகல் சத்தம் கேட்க,அனு அவளின் அறை கதவை மெல்ல தட்ட கதவு பூட்டப்படாமல் இருந்ததால் திறந்து கொண்டது.



Advertisement

காலையில் இருந்து கயல்விழிக்கு எழுந்து கொள்ளவே முடியவில்லை அந்தளவிற்கு காய்ச்சல் அதிகமாக இருக்க எழுந்து மாத்திரை போடலாம் என்றால் கூட அவளால் உடம்பை அசைக்க முடியாமல் போனது.அதே சமயம் இயற்கை வேறு அழைக்க மெல்ல தனது உடம்பை திடமாக்கிக் கொண்டு எழுந்தாள்.அடிமேல் அடிவைத்து அவள் குளியலறை நோக்கி சென்றுவிட்டு மீண்டும் கட்டிலை நோக்கி வர பாதி வழியிலேயே உடல் ஒத்துழைக்காமல் மயங்கி சரிந்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்திற்கு செல்லும் நேரம் மனதோ அவளின் குடும்பத்தில் உள்ள அனைவரின் முகத்தையும் விழிமூடி பார்த்து என்னை மன்னிச்சிடுங்க என்று முணுமுணுத்திவிட்டு விழிமூட,அதே நேரம் அவளின் மூடிய விழிகளில் சத்யாவின் முகமும் தெரிய தொடங்க மன்னித்துவிடு என்ற வார்த்தை கூட தொண்டையில் இருந்து வர மறுத்தது.வார்த்தை வர மறுத்து தெண்டையடைத்து முழு மயக்கத்திற்கு சென்றுவிட்டாள்.

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த அனு கயல்விழியின் நிலை கண்டு,

Advertisement

“அய்யோ கயல் அக்கா….கயல் அக்கா….”என்று கத்திக் கொண்டே ஓடி வந்து அவளது முகத்தை தூக்க முகம் கை,கால் எல்லாம் கொதித்துக் கொண்டிருந்தது.அனுவின் சத்தில் அவளின் கேர்டேக்ரும் வந்துவிட அனுவும் அவரும் சேர்ந்து கயலை மெல்ல தூக்கி கட்டிலுக்கு மாற்றியிருந்தனர்.பின் வேகமாக அவர் பக்கத்தில் உள்ள மருத்துவரை அழைத்து வந்தார்.அவர் கயல்விழி பரிசோதித்துவிட்டு காய்ச்சல் அதிகமான காரணத்தால் தான் இந்த மயக்கம் என்றுவிட்டு மருந்துகளை கொடுத்துவிட்டு,அதிக காய்ச்சல் குறைய ஊசியும் போட்டுவிட்டு சென்றார்.

Advertisement

ஊசி ஏறியவுடன் தான் கயல்விழிக்கு சற்று நினைவு திரும்ப தொடங்கியிருந்தது.அதற்குள் ஆர்த்தி வந்திருந்தாள் அலுவலகத்தில் இருந்து அனுவின் கேர்டேக்ர் அவளுக்கும் அழைத்திருத்தார்,

“உடம்பை பார்த்துக்க மாட்டியா கயல்….இப்படியா கேர்லெஸ்ஸா இருப்ப….பாரு உன்னால எத்தனை பேருக்கு கஷ்டம்….அனு கேர்டேக்ர் வேற அவசரத்துல எனக்கு போன் பண்ணி பயமுறுத்திட்டாங்க.அதனால நான் வேற ஹாப்பனவர் பர்மிஷன் போட்டு வந்தேன்…இங்க வந்து பார்த்தா சாதாரண காய்ச்சல் தான் ப்ச்….”என்று குறை கூற,கயல் அனைத்தையும் உணர்ச்சிகள் அற்ற விழிகளுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“ம்ம்மா….ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க….கயலக்காவுக்கு உடம்பு முடியலை இப்ப போய் இப்படி பேசுறீங்க…பாவம் ம்மா அவங்க….”என்று அனு கோபமாக கூற,

Advertisement

“ஏய் உனக்கு என்னடீ தெரியும்….இன்னைக்கு முடிக்காத வேலையை வேற நான் நாளைக்கு முடிக்கனும் எவ்வளவு நேரம் ஆகுதோ….உனக்கு என்ன தெரியும்….நீ போ…போய் படிக்கிற வழியை பாரு….”என்று அதட்டி மகளை அனுப்பிவிட்டு,கயலிடம் திரும்பி,

“தப்பா எடுத்துக்காத கயல் உனக்கே நல்லா தெரியும் இப்ப தான் நாங்க பிளாட் வாங்கியிருக்கோம்…அதுக்கு லோன் போயிட்டு இருக்கு…கொஞ்சம் ஓவர் டையம் எல்லாம் பார்த்தா தான் சரிவரும்…உனக்கு காய்ச்சல் அதிகமா இருந்தா நீ வேணா உன் வீட்டுக்கு போயிட்டு வாயேன்….நானும் நீ வந்ததில் இருந்து பார்க்கிறேன்….நீ போனது போல தெரியலை….”என்று ஆர்த்தி கேட்க,கயல்விழியின் முகத்தில் விரக்கிதியான புன்னகை மட்டுமே,

“இல்ல பராவாயில்லை ஆர்த்தி….நான் பார்த்துக்குறேன்…நீங்க பாருங்க….அப்புறம் மன்னிச்சுடுங்க என்னால உங்களுக்கு கஷ்டம்….”என்று சோர்வாக கூறினாள்.

“ம்ம்…ஓகே கயல் பார்த்துக்கோ….”என்றுவிட்டு ஆர்த்தி சென்றுவிட்டாள்.

இது தான் இன்றைய மனிதனின் நிலை.மனிதன் காசை தேடி ஓட ஆரம்பித்துவிட்டான்.அவனுக்கு மனிதர்கள் தேவையில்லை என்ற எண்ணம் தோன்ற தொடங்கிவிட்டது.அதே போல் காசால் அனைத்தையும் வாங்கிவிடலாம் என்ற இறுமாப்பு மூளையில் கூடியேறிவிட்டது.ஆனால் அவன் ஒன்றை மறந்துவிடுகிறான் எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் ஒருசில நேரங்களில் மனிதர்களின் துணை வேண்டும் இல்லையேல் பணம் இருந்தும் பலனில்லை என்பதை வாழ்க்கை ஒருமுறையேனும் அவர்களுக்கு காட்டிவிடும்.

கயல்விழி நிலைக்கூட இப்போது அது தான்.அவளிடம் அனைத்தையும் வாங்க பணமிருக்கிறது.ஆனால் தன் மனபாரங்களை பகிர்ந்து கொள்ள நல்ல மனம் கொண்ட மனிதர்கள் இல்லை.தலைகோத தந்தை இல்லை,அதட்ட தாய் இல்லை,அவளை தாங்க தமக்கை இல்லை,அவளிடம் சீண்டி விளையாட தங்கை இல்லை.உயிர் உள்ள எதுவுமே அவளிடம் இல்லை உயிரற்ற பணம் மட்டுமே அவள் கையில்.தனது நிலையை எண்ணி அழுவதா,சிரிப்பதா என்று புரியாத நிலையில் இருந்தாள் கயல்விழி.ஆனால் ஒன்றை மட்டும் கண்டு கொண்டாள் உறவுகள் அற்ற ஒரு வாழ்வு உயிற்ற உடலை போன்றது.

“இழந்த உறவுகளை மீட்டு எடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல தான் ஆனால் இப்படியே இருந்தால் எதுவும் சரியாகாது.நாம் தான் முயற்சி செய்ய வேண்டும் அவர்கள் என்னை ஒதுக்கினாள் என்ன நான் அவர்களிடம் நெருங்கி என் மன்னிப்பை வேண்டுவேன்……தவறு இழைத்துவிட்டேன் தான் அதை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பை அவர்களிடம் நான் தான் கேட்க வேண்டும்….”என்று முடிவெடுத்த கயல்விழி ஒன்றை மறந்து போனாள்.அவள் போகும் பாதையில் பல இன்னல்கள் வரும் அதை எதிர்கொள்ள இரும்பின் இதயம் வேண்டும்.

கயல்விழி முதல் முறை தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்க தொடங்கினாள்.இனி இதுபோல் தனியாக தனது வாழ்வை நகர்த்துவது நல்லதிற்கு அல்ல என்று புரிந்து கொண்டாள்.சத்யாவின் இந்த வரவு கூட நல்லதிற்கு தான் என்று நினைத்தாள்.ஆம் அவன் வரவில் தான் தனிமை என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை உணர்ந்து கொண்டாள்.

கயல்விழி நேற்று இரவு வீட்டிற்கு வந்த போது விடியும் சமயம் ஆகிவிட்டது.தன்னை தேட கூட யாரும் இல்லையே என்று தான் அவள் மிகவும் கலங்கினாள்.அதோடு காய்ச்சலும் சேர்ந்து கொள்ள இப்போது ஆர்த்தி கூறியதைக் கேட்டவளுக்கு  மனதின் வெறுமை மேலும் தான் கூடி போனது.பணம் இருந்து என்ன பயன் இதோ படுக்கையில் கிடக்கிறேன் எழக் கூட முடியவில்லை என்னை பார்த்துக்கொள்ள என்று யாரும் இல்லையே என்ன வாழ்க்கை இது என்று தான் கயல்விழிக்கு தோன்றியது.அதன் விளைவு அவள் அடுத்த இரு நாட்கள் கழித்து கோவை சென்றுவிட்டாள்.

தனது வீட்டினரை பார்க்கவேண்டும் அவர்களிடம் மன்னிப்பை யாசிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டவளுக்கு காய்ச்சல் கூட பெரிதாக தெரியவில்லை.இரு நாட்களில் தன்னை ஓரளவிற்கு தேற்றி கொண்டு வந்துவிட்டாள்.இதற்கு இடையில் அனு ஒருமுறை வந்து அவளைப் பார்த்துவிட்டு தான் போனாள்.அலுவலகத்திற்கு தகவல் கூறி மேலும் மூன்று நாட்கள் விடுப்பு எடுத்தவள் இதோ கோவைக்கு வந்து இறங்கிவிட்டாள்.

தனது சொந்த மண்னை மிதிக்கும் போது அவளது உடலில் மறித்து போன உற்சாகம் மீண்டு எழுந்திருந்தது.பேருந்தில் இருந்து இறங்கியவள் தனது வீட்டினை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.மனதில் ஒருவித பரபரப்பு ஒட்டிக் கொண்டு தான் இருந்தது.அவளது வீட்டின் வாசலில் வந்திறங்கியவள் அங்கு கட்டப்பட்டிருந்த பந்தலைக் கண்டு யோசனை செய்தவாரே நின்றாள்.

நந்தினி யாரோ வாசலில் வரும் அரவம் கேட்டு வெளியில் எட்டி பார்த்தாள்.வாசலில் நின்றிருந்த கயலைக் கண்டு அதிர்ந்து,அவள் வேகமாக தனது அன்னையை அழைக்க உள்ளே செல்ல,கயலோ,

“என்ன பந்தல் எல்லாம் போட்டிருக்காங்க….என்ன விஷேமா இருக்கும்….ச்சை நமக்கு தான் ஒண்ணும் தெரியலை…..”என்று யோசனை செய்தவாறே வீட்டின் உள்ளே காலை வைக்க போக,

“நில்லுடி….அங்கேயே…”என்று பார்வதியின் அழுத்தமான குரலில்,கயலின் கால்கள் பின்னோக்கி சென்றது.

“ம்மா….”என்று கயல் அழைக்க,அவரோ இறுகி போய் நின்றவர்,வேகமாக வெளியில் வந்து யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு கயலின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு பின் பக்கமாக சென்றார் நந்தினியும் அவர்களுடன் சென்றாள்.

“ம்ம்மா….ம்மா…என்னமா….”என்று கயல் புரியாமல் கேட்டுக் கொண்டே வர,அவளின் கேள்விகளை கூட அவர் காதில் வாங்கவில்லை என்பது அவரின் முகத்திலேயே தெரிந்தது.வேகமாக இழுத்து வந்தவர் பின் பக்கம் இருக்கும் பழைய சாமான்கள் வைக்கும் அறையில் அவளை தள்ளி கதவை அடைத்தார்.

“ம்மா….ம்மா….என்னம்மா….ஏன்மா என்னை இப்படி இழுத்துட்டு வர….ம்மா….பேசுமா….”என்று கயல் அவரின் கையை பிடிக்க வர,அவரோ விலகி நின்று கொண்டார்.ஆனால் தனது அழுகையை அடக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் ஏறி இறங்கிய தொண்டைகுழி கூறியது.முன்பிருந்த கயலுக்கு அடுத்தவரின் மனது புரியாது ஆனால் இப்போது இருப்பவளுக்கு அனைத்தும் விளங்குமே பரிதவிப்புடன் தாயின் அருகே சென்று,

“ம்மா…..ப்ளீஸ் ம்மா….நீ அழாத….நான் தப்பு பன்னிட்டேன் தான் அதுக்காக தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்க வந்தேன்….நீ இப்படி அழாத ம்மா….என்னால தாங்க முடியல….ப்ளீஸ்….”என்று கூறிக் கொண்டே அவரின் கையை பிடிக்க,அவரோ மெல்ல அவரின் கையை விடுவித்துக் கொண்டார்.கயலுக்கு புரிந்து போனது தாய் இன்னும் தன்னை மன்னிக்கவில்லை என்று அவள் பரிதவிப்புடன் திரும்ப அங்கு கைகளை பிசைந்தபடி நின்றிருந்தாள் நந்தினி.அவளைக் கண்டவுடன் தனது அழுகையை துடைத்துக் கொண்டே,

“நந்து….எப்படிடீ இருக்க…உனக்கு ஒண்ணு தெரியுமா உன்னை போலவே ஒரு பொண்ணு…..”என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே,

“நீ எதுக்கு இங்க வந்த….திரும்பியும் எங்க நிம்மதிய கெடுக்கவா….போயிடு….”என்று நந்தினி கூற கயல்விழி விக்கித்து போய் தன் தங்கை பார்த்தாள்.

“ஏய்….என்னடி நான் உங்களை எல்லாம் பார்க்க….”என்று ஏதோ கூற வந்தவளை கை நீட்டி தடுத்த நந்தினி,

“போதும் நீ எதுவும் சொல்ல வேண்டாம்….நீ செய்தவரை போதும் கிளம்பு….இன்னும் கொஞ்ச நேரத்தில பெரியக்காவும்,அத்தானும் வந்திடுவாங்க….அவங்க வரத்துக்கு முன்னடி நீ இங்கிருந்து போய்டு…..”என்று நந்தினி கூற,கயல்விழி உடைந்தேவிட்டாள் அப்படியே அவள் மடங்கி அமர்ந்து அழ பார்வதியின் கால்கள் இளைய மகளின் அருகே போக துடித்தது ஆனாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு மகளை பார்த்தவருக்கு உடலில் உயிரில்லை என்று தான் கூற வேண்டும்.முகமும்,உடலும் ஒட்டி போய் ஏதோ நோய்வாய்ப்பட்டவள் போல் வந்து நின்றவளைக் காண பெற்றவருக்கு மனது எரிந்தது.ஆனால் அவளால் ஏற்பட்ட காயங்கள் யாவும் இன்றளவும் தங்களை துரத்துகிறதே.

“க்கா…ப்ளீஸ்க்கா….அழுது எல்லாம் சீன் கிரியேட் பண்ணாத எனக்கு அடுத்த வாரம் கல்யாணம் ஏற்பாடகியிருக்கு….”என்று கூற கயலிவிழியின் கண்களில் அவ்வளவு மகிழ்ச்சி,

“ஏய் குட்டிமா….உனக்கு கல்யாணமா….என்கிட்ட சொல்லவே இல்லை….என்னை நீ கூப்பிடலனா என்ன நான் சரியா வந்துட்டேன் பார்த்தியா…. உன் கல்யாணத்தை பார்க்க….”என்று மலர்ந்த முகத்துடன் கூற,பார்வதிக்கு கயலின் முகத்தில் தெரிந்த மாற்றம் சற்றே நிம்மதியை தந்தது என்று தான் கூற வேண்டும்.இதுவே பழைய கயல்விழி என்றால் வீட்டை இரண்டாக மாற்றியிருப்பாள்.இப்போது வரை கூட உறவுகளில் எத்தனை பேச்சுகளை சமாளிக்க வேண்டியிருந்தது.ஏன் பெரியவள் கயலுக்கு முடிக்காமல் இளையவளுக்கு முடிக்கிறீர்கள் என்று கேட்டார்களே.அவளுக்கு ஜாதக தோஷம் என்று பார்வதி தான் அனைவரிடமும் பொய் கூறிவிட்டார்.அடுத்து அவள் திருமணத்திற்கு வராததற்கு வேறு பதில் கூற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் இருந்தார்.

பின்னே ஒருவளை மட்டும் பார்த்தாள் மற்ற இரு பெண்களின் நிலை மோசமாகிவிடுமே.பெற்றவர்களுக்கு அனைத்து குழந்தைகளும் ஒன்று தான் இப்போது ஒருவளை கரையேத்துவோம் பின் கயல்விழி பற்றி யோசிப்போம் என்று நினைத்தவருக்கு திடீர் என்று கயல்விழி வந்து நிற்கவும் அத்தனை குற்றவுணர்ச்சியாகி போனது.

“ஆமா….நீ கல்யாணத்துக்கு வந்தா கல்யாணமே நடக்காது….”என்று நந்தினி கத்த,கயல்விழிக்கு அதிர்ச்சி,

“என்ன சொல்லுற நந்து….நான்….நான் என்ன பண்ணனேன்….”

“நீ என்ன பண்ணல…அது தான் நீ ஏற்கனவே பண்ணிட்டியே…..அதுவே காலத்துக்கும் போதும்…உனக்கு ஒன்னு தெரியுமா மாப்பிள்ளை வீட்ல உன்னை பத்தி தெரிஞ்சி வேண்டாம்னு தான் போனாங்க…அவர் தான் பேசி இந்த கல்யாணத்துக்கே சம்மதம் வாங்கியிருக்கார்…..இப்ப உன்னை யாராவது பார்த்துட்டா….பிரச்சனை ஆகிடும் ப்ளீஸ்….”என்று தங்கை கெஞ்ச,கயல்விழிக்கு இனி தான் இருந்து என்ன பயன் என்ற நிலை தான்.

“எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டேன்….என்னால் என்னை சார்ந்தவருகளும் அல்லவா காயப்பட்டு நிக்கிறார்கள்….எப்படி மன்னிப்பார்கள் என்று வந்தேன்…இதோ வருடங்கள் கடந்தும் தான் செய்த செயலின் வீரியம் தன் தங்கையை அல்லவா தாக்கியிருக்கிறது….”என்றவள் வாய்விட்டே கதறினாள்.

“அய்யோ…நந்துமா….என்னை மன்னிச்சிடுடா….நான் இப்படி எல்லாம் நடக்கும்னு நினைக்கலை….எல்லாம் என் தப்பு தான்….என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்க….”என்று கயல்விழி பார்வதியின் காலிலேயே விழுந்துவிட்டாள்.

“இப்ப அழுது என்னக்கா பண்றது….நீ இதெல்லாம் செய்றதுக்கு முன்னே யோசிச்சிருக்கனும்…..ஆனா நீ தான் சுயநலவாதி ஆச்சே…..அதான் உன்னை பத்தி மட்டும் யோசிச்சிட்ட….”என்று நந்தினி கூற கயல்விழிக்கு மீண்டும் அடி பலத்த அடி.பட்ட இடத்திலேயே படும் என்பார்களே அதே போல் அவளுக்கும் பட்டது.மெல்ல நிமிர்ந்து தாயை பார்த்தாள் அவரோ புடவை முந்தானையால் தன் வாயை மூடிக் கொண்டு அழுது கொண்டிருந்தார்.ஒருநிமிடம் தன் கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு எழுந்தாள்.

“நான் போயிடுறேன்….ஆனா…”என்று அவள் மேலும் கூறும் முன்,

“கயலம்மா…..”என்று பார்வதி உடைந்தேவிட்டார்.வேகமாக அவரின் நீட்டிய கைகளில் தன் கையை கோர்த்தவள்,

“ம்மா….ம்மா…ஏன் அழுவுற…இங்க பாரு…என்னை பாரேன்…..”என்று அவரின் முகத்தை வலுகட்டாயமாக நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவள்,

“ப்ச்…அழாத….எனக்கு கோபம் எல்லாம் இல்லமா….வருத்தம் தான்….இது கூட நான் செஞ்ச தப்புக்கு தண்டனைனு நினைச்சுக்குறேன்…..நீ அழாத…..”என்றவள் ஒரு கையால் தன் தங்கை அழைக்க அவளும் அதே அழுகையுடன் கயலின் கைகளை பிடித்துக் கொண்டாள்.தன்னுடன் சீண்டி விளையாடும் அக்கா இன்று இப்படி உடைவதை அவளால் தாங்க முடியவில்லை தான் ஆனால் அவளின் மனது தன் எதிர்காலத்தை நினைத்து பயந்து போயிருந்தது.அதில் தவறில்லையே.

“ப்ச்…அழதாடா நந்து….கல்யாண பொண்ணு அழலாமா….அழாத…நான் தான் போயிடுறேன் சொல்லிட்டேனே….எனக்கு ஒரே ஒரு முறை அப்பா பார்க்கனும்….”என்று கயல் கூற,அதுவரை அவளின் அணைப்பில் இருந்த இருவரும் அதிர்ந்து விலகினர்.

“எ….என்னாச்சு….”

“அப்பா…அப்பா உன் மேல இன்னும் கோபமா தான் இருக்கார் அக்கா….உன்னை பத்தி பேச்சை எடுத்தாலே….ரொம்ப கோபம் வந்திடும்…..அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்ததிலிருந்து அவரை நாங்க ரொம்ப கவனமா தான் பார்த்துக்குறோம்….”என்று நந்தினி கூற,

“ம்ம்….புரியுதுடா…சரி….நான் கிளம்புறேன்….”என்றுவிட்டு இருவரையும் விட்டு விலகி நடக்க,வேகமாக அவளின் கைகளை பிடித்து நிறுத்திய பார்வதி,

“இருந்து அப்பா வை பார்த்துட்டே போ…”என்று கூற,

“வேண்டாம்மா…. என்னை பார்த்தா அவருக்கு கோபம் தான் அதிகம் வரும்….நல்ல நாளும் அதுவுமா அப்பாவை கஷ்டபடுத்த வேண்டாம்….நான் கிளம்புறேன்…நந்து வேற பயந்துகிட்டே இருக்கா….அவளை பாருங்க….நான் வரேன்….”என்றுவிட்டு யாரின் பதிலையும் எதிர்பாராமல் வேகமாக வந்துவிட்டாள்.பார்வதியும்,நந்தினியும் அழைத்தும் காதில் வாங்காது போல் ஓட்டமும் நடையுமாக வந்தவள் நின்ற இடம் பேருந்து நிலையம்.தனக்கான பேருந்தை பார்த்து அமர்ந்தவளுக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது.தனது முகத்தினை சீட்டில் முன் வைத்து யாரும் அறியாமல் அழுது தீர்த்தாள்.

தனது வீட்டினர் ஒதுக்கிவிட்டனர் என்பதிற்கு எல்லாம் கயல்விழி வருந்தவில்லை தான் செய்த தவறுக்கு எனக்கான தண்டனை இது இதை நான் முழுமனதாக ஏற்கிறேன் என்று தனக்குள் கூறிக் கொண்டாள்.பாறை உளியால் பல அடிகளை வாங்கிய பின் தானே சிற்பமாக மாறும் அது போல் தான் கயல்விழியும் பல அடிகளை வாங்கி தன்னை தானே செதுக்க தொடங்கினாள்.

கயல்விழி கோவையில் இருந்து சென்னை வந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது.இதோ அலுவலகமும் செல்ல தொடங்கிவிட்டாள்.முன்பிருந்ததை விட அவளின் முகம் இப்போது எந்தவித உணர்வினையும் காட்டவில்லை இனி அனைத்தையும் தாங்கி கொள்ள தான் வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டாள்.அவள் சென்னை வந்ததிலிருந்து செய்த ஒரே நல்ல காரியம் தினமும் காலையும்,மாலையும் தன் தாய்க்கு அழைத்துவிடுவாள்.அவர் பேசுகிறா என்று எல்லாம் யோசிக்கமாட்டாள் ஆனால் இவள் பேசுவாள் மறுபக்கம் ம்ம் என்ற வார்த்தை மட்டுமே வரும்.தனது அழைப்பை அவர் எடுத்ததே போதும் என்று நினைத்தாள்.மாற்றங்கள் ஒன்றே மாறாதது கயல்விழியின் இந்த மாற்றம் அவளின் வாழ்வில் பல திருப்பங்களை கொண்டு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!