Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தித்திக்கும் தீத்திரள்

4..தித்திக்கும் தீத்திரள்..

4….

“ மாப்பிள்ளை வந்துட்டாரு… “ என்று ஒருவர் ஓங்கி குரல் கொடுக்க… முக்கிய உறவினர்கள் அனைவரும் வரவேற்பில் வந்து கூடினர்.

அலங்கரிக்கப்பட்ட சொகுசு வாகனத்திலிருந்து அதிகார தோரணையுடன் இறங்கியவனை கண்டதும் சேதுபதியின் முகத்தில் பொங்கி வழிந்த மகிழ்ச்சியும் கர்வமும் ஒரே நொடியில் காணாமல் போக குழப்பமும் தவிப்பும் குடி கொண்டது.



Advertisement

அவரது தவிப்பை பிரதிபலிக்கும் விதமாய் தயங்கியபடியே கணவரிடம் வந்த காஞ்சனா..”என்னங்க மாப்பிள்ளை வருவாருன்னு பார்த்தா இந்த பையன் வந்து இறங்குது.”என்றிட… “அதான் எனக்கும் ஒன்னும் புரியல இவன் எப்படி இங்கே வந்தான். இனி இந்த ஊர் பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லித் தான அடிச்சு துரத்துனேன்,  எந்த தைரியத்துல இப்போ இங்க  வந்து நிக்கிறான். ” என்று  கோபமும் குழப்பமுமாய் பேசினார் சேதுபதி.

“ஏதாவது கலாட்டா பண்ணி காசு பார்க்கலாம்னு வந்திருப்பான் அப்பா, இவனை நினைச்சு தேவையில்லாம கவலைப்படாதீங்க, நீங்க ஒரு வார்த்தை  சரின்னு மட்டும்  சொல்லுங்க இவனை இங்கேயே பொளந்து  போட்டுடுறேன்  “  என்று பொறுமை இழந்து பொரிந்து கொட்டினான், சேதுபதியின் கடைசி மகன் விஷ்ணு.

“டேய் சும்மா இருடா எப்ப பார்த்தாலும் வெட்டுறேன் குத்துறேன்னு ரவுடித் தனமாவே பேசிட்டு,   அன்னைக்கே இதெல்லாம் வேணாம்னு சொன்னேன், நீ தான்… மேல கை வச்சு அனுப்புனா தான் அசிங்கப்பட்டு  இந்த பக்கமே வரமாட்டான்னு அடிச்சு..  கார் சாவியை புடுங்கி வச்சிட்டு ஊரை விட்டு துரத்தி விட்ட, இப்ப எங்க வந்து நிக்கிறான் பாரு. “என்று மகனை அடக்கியவர்… வந்தவன் என்ன திட்டத்துடன் இருக்கிறான் என்று புரியாத குழப்பத்துடன் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சேதுபதி.

Advertisement

“என்னையா இது சின்ன முதலாளி வருவார்ன்னு பார்த்தா அவரோட ஃப்ரெண்ட் வந்து இறங்குறாரு ஒருவேளை சின்ன முதலாளி பின்னாடி வருவாரோ?,  “ என்று விடுதி பணியாளர்கள் தங்களுக்குள்ளே கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.

Advertisement

தன் பேரன் வந்த செய்தி அறிந்ததும் ஆர்வத்துடன்  அவ்விடம் வந்து சேர்ந்த துர்க்கேஸ்வரி.. “ என்ன சேதுபதி  இப்படி மலைச்சுப் போய் நிக்கிற? ” என்றவர் விஷ்ணுவின் புறம் திரும்பி, “நீ தானே பொண்ணோட தம்பி, போய் மாலை  போட்டு வரவேற்பு கொடு”  என்று சின்னவனுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

“என்னது நான் மாலை போடுமா அதுவும் இவனு….?” என்று கோபமாய் துவங்கிய விஷ்ணு தந்தையின் கண் பார்வையில் வார்த்தையை அடக்கிக் கொண்டு… ” என் அக்காவை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை வரட்டும் அவருக்கு  மாலை போட்டு மரியாதை பண்ணுறேன். ” என்று சற்று திமிராகவே பதில் தந்தான்.

” என்ன உளறுற நீ?, யார் கிட்ட பேசிட்டு இருக்கோம்னு தெரிஞ்சு தான் பேசுறியா?,” என்று துடுக்காய் பேசியவனை பார்த்து எரிச்சலுடன்  வினவினார் துர்கேஸ்வரி.

Advertisement

” அது வந்து மா… மாப்பிள்ளைக்கு பதிலா மாப்பிள்ளையோட பிரண்டுக்கு மாலைப் போடச் சொல்லவும்… ஒரு பதட்டத்துல என்ன பேசுறோம்னு தெரியாம சின்ன பையன்   அவசரப்பட்டு பேசிட்டான். அவனுக்கு பதிலா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் அம்மா ” என்று மகனின் தவறுக்கு மன்றாடலுடன் மன்னிப்பு  வேண்டினார் சேதுபதி.

“என் பேசிட்டு இருக்கீங்க நீங்க?, இவன் தான் என் பேரன்,  இவனுக்கு தான் உங்க பொண்ண பேசி முடிச்சிருக்கு.  நீங்க என்னடான்னா என் பேரனை பார்த்து மாப்பிள்ளையோட  ஃப்ரெண்ட்னு சொல்றீங்க?, ஆமா நான் தெரியாம தான் கேட்கிறேன் மாப்பிள்ளையா நீங்க வேற யாரு எதிர் பாக்குறீங்க?. எனக்கு ஒன்னும் புரியல..” என்று என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாத குழப்பத்துடன் வினவினார் துர்க்கேஸ்வரி.

” என்னது இவர் தான் சின்ன முதலாளியா?” என்று கூடி நின்று கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிப்படையாகவே அதிர்ச்சியை வெளிப்படுத்த… ” இங்க என்ன நடக்குது?, இவன் தான் என் பேரன்னு சொன்னா ஏன் எல்லாரும் இப்படி அதிர்ச்சி ஆகுறீங்க?, “என்று குழப்பமாய் வினவியவர், தன் பேரன் முகம் நோக்கிட.. அவனோ  கர்வம் நிறைந்த பார்வையுடனும் ஒருவித வக்கிர புன்னகையுடனும் சேதுபதி குடும்பத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.

அவன் முகம் பிரதிபலிக்கும் விசித்திர உணர்வுகளை புரிந்துக் கொள்ள முடியவில்லை என்றாலும், நடந்து கொண்டிருக்கும் குழப்பம் அனைத்திற்கும் தன் பேரனும் ஒருவித காரணமாக இருக்கக்கூடும் என்று புரிந்து கொண்ட துர்கேஸ்வரி, ” அகரா… இதெல்லாம் உன் வேலை தானா?, எல்லாரும் உன்னை மாப்பிள்ளையோட ஃப்ரெண்டுன்னு சொல்றாங்க?. என்ன சித்து விளையாட்டு பண்ணி வச்சிருக்க?..  ” என்று சற்று அதட்டலாய் வினவினார்.

”  லாஸ்ட் டைம் நான் இங்க வெக்கேஷன் ட்ரிப் வந்தபோ, இவங்க யாருக்கும் என்னை அடையாளம் தெரியல பாட்டி.   சோ  என்னை சுந்தரோட ஃப்ரெண்டுன்னு நினைச்சுட்டாங்க, நானும் எதையும் கிளாரிஃபை பண்ணல அப்படியே விட்டுட்டேன்.” என்று அசட்டையாக பதில் தந்தான் அவன்.

“என்ன இத இவ்வளவு அசால்ட்டா சொல்ற?, இப்போ அதனால எவ்வளவு குழப்பம் நடந்திருக்குன்னு பாரு!..” என்று பேரனை அதட்டியவர், மற்றவர்கள் புறம் திரும்பி..” என் பேரன் எப்பவும்  இப்படித் தான்.  சொத்து பத்து இருந்தாலும் தன்னை பெரிய ஆளா காட்டிக்கவே பிடிக்காது. எல்லார் கிட்டயும் சரிசமமா பழகணும்னு  நினைச்சு தான்…  தான் யாருங்கிற விஷயத்தை உங்ககிட்ட இருந்து மறைச்சிருப்பான். இவன்   யாருன்னு தெரிஞ்சிருந்தா  நீங்க எல்லாரும் அவன வேற மாதிரி ட்ரீட் பண்ணிருப்பீங்கல.. உண்மை தெரியாததால இவன் கூட ரொம்ப சகஜமா பழகி இருப்பீங்க.. அதுக்காக தான் அப்படி செஞ்சிருப்பான். இருந்தாலும் என் பேரன் செஞ்சது தப்பு தான் அவனுக்காக நான் உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறேன்.” என்று தன் பேரன் செய்த குறும்புத்தனம் விபரீதமாக மாறியதற்காக மனதார மன்னிப்பு வேண்டினார்.

“தப்பு பண்ணுனவங்களே இங்க தைரியமா முன்னாடி நிக்கும் போது.. நீங்க எதுக்கு பாட்டி தேவை இல்லாம மன்னிப்பு கேக்குறீங்க?, ” என்று திமிராய் வினவியவன், சேதுபதியின் முகம் பயத்தில் வெளிரிப் போவதை கண்டு.. மெலிதாய் புன்னகைத்துக் கொண்டே…” நான் யாருங்கிற உண்மையை சொல்லாம, பணக்கார திமிரு கொஞ்சம் கூட இல்லாம,  ஸ்டேட்டஸ் பாக்காம… உங்க கூட பழகினது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு லேட்டா தான்  புரிஞ்சது மாமா. நான் உங்களை மாமான்னு கூப்பிடலாம் தானே!.  இப்போ  எனக்கு அந்த  தகுதி இருக்கு தானே!” என்று  சேதுபதி குடும்பத்திற்கு மட்டும் புரியும் விதத்தில் குத்தலாய் வினவினான்,  கரன் என்று நட்பு வட்டத்திலும் அகரன் என்று பாட்டியாலும் செல்லமாய் அழைக்கப்படும் சுந்தர அகரன்.

“சாரி தம்பி… நீங்க யாருன்னு தெரியாம…”என்று தயக்கத்துடன் மன்னிப்பு வேண்டும் குரலில் சேதுபதி  துவங்க…

வேகமாய் கை உயர்த்தி அவரை பேசவிடாமல் தடுத்தவன், “நான் தான் சொன்னேன்ல, உண்மையை மறைச்சு உங்க கூட சகஜமாக பழகினது என்னோட  தப்பு தான்.  அதுக்கான விளைவையும் அனுபவிச்சிட்டேன்.  ” என்று அகரன் கூறிக் கொண்டிருக்க.. இடையில் நுழைந்த சேதுபதி, “அது வந்து தம்பி நான் உங்களை சின்ன வயசுல பார்த்தது. இவ்வளவு வளர்ந்ததுக்கு அப்புறம் சரியா அடையாளம் தெரியல, சின்ன முதலாளி பெயர் சுந்தர்ன்னு  ஞாபகத்துல இருந்தது,  உங்க கூட வந்த தம்பி அவரோட பேரு சுந்தர்ன்னு  சொல்லவும்,  அவர் தான் எங்க  சின்ன முதலாளியா இருப்பார்ன்னு  நினைச்சிட்டோம், நாங்க தப்பா புரிஞ்சுகிட்டதால என்னென்னமோ நடந்துடுச்சு… ” என்று  தன் தவறுக்கான விளக்கம் கொடுக்க முன் வந்தார் சேதுபதி.

” நான் உங்ககிட்ட நடந்த எதுக்கும் விளக்கம் கேட்கலையே!,  பழைய விஷயம் எல்லாத்தையும் மறந்துடுங்க,  இப்ப சொல்லுங்க எனக்கு உங்க பொண்ண கல்யாணம் பண்ணி வைக்க உங்களுக்கு சம்மதமா?, ” என்று என்னவென்று கணிக்க முடியாத உணர்வுடன் வெறுமையான குரலில் பேசினான்  அகரன்.

“என்னடா   மீனாட்சிய ரொம்ப பிடிச்சிருக்கு அவள   தான் கல்யாணம்  பண்ணுவேன்னு  என்னை  சரிகட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சு, மணமேடை வரைக்கும் வந்துட்டு இப்போ வந்து சம்மதமான்னு கேட்டுட்டு இருக்க?,  ” என்று துர்க்கேஸ்வரி குழப்பமாய் வினவ…

” அது வந்து பாட்டி அவங்க வேற யாரையோ மாப்பிள்ளைன்னு நினைச்சு கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இருப்பாங்க, திடீர்னு  என்னைப் பார்த்ததும் என்ன செய்றதுன்னு தெரியாம தடுமாறிப் போயிட்டாங்களே!, அதனால தான்… அவங்க எதிர்பார்த்த மாப்பிள்ளையை விட்டுட்டு என்னை மாப்பிள்ளையா ஏத்துக்க அவங்களுக்கு சம்மதமான்னு கேட்டேன்.” என்றான் அகரன்.

“நீ சொல்றதும் சரிதான்.. இங்க எல்லாரும் உன்னோட ப்ரெண்ட் சுந்தரை தானே மாப்பிள்ளன்னு நினைச்சுட்டு இருந்தாங்க!, நீ இப்படி ஒரு குட்டி கலாட்டா பண்ணி வச்சிருக்க விஷயம் முன்னாடியே தெரிஞ்சி இருந்தா எல்லார்கிட்டயும் நானே பேசி புரிய வச்சிருப்பேன்.” என்று தனது செல்லப் பேரனுக்கு பதில் தந்தவர், சேதுபதி குடும்பத்திடம் திரும்பி, “இங்க பாருப்பா சேதுபதி,  இவன் தான் என் பேரன் சுந்தர அகரன். இவனுக்கு உன் பொண்ண கட்டி கொடுக்க சம்மதமா?” என்று பேரனின் வார்த்தையில் இருக்கும் உள் அர்த்தம் புரியாமல்  வினவினார் துர்கேஸ்வரி.

என்ன பதில் சொல்வது என்ற புரியாத குழப்பமும் தவிப்பமாய் சேதுபதி குடும்பம் தயக்கத்துடன் நின்று இருக்க… மெல்ல அவர்களை நெருங்கிச் சென்ற அகரன்.. ”    இப்ப கூட நான் உங்க தகுதிக்கு பொருத்தமான ஆள் இல்லையோ!” என்று குத்தலாய் வினவ…
” அப்படி எல்லாம் இல்ல மாப்பிள்ளை.  நீங்க எங்க? நாங்க எங்க? உங்கள போய் அப்படி நினைப்போமா!, பழசையெல்லாம் மறந்து விடுவோம்ன்னு நீங்களே சொன்னதுக்கப்புறம் எனக்கு என்ன தயக்கம் இருக்கப் போகுது” என்று மகிழ்வுடன் சம்மதம் தெரிவித்தவர், தன் மகன் புறம் திரும்பி..” என்னடா இன்னும் வேடிக்கை பாத்துட்டு இருக்க மாப்பிள்ளை எவ்ளோ நேரம் வாசல்லயே நிப்பாரு போ போய் மாலையை போட்டு மணமேடைக்கு அழைச்சிட்டு போ” என்று  உத்தரவு பிறப்பித்தார் சேதுபதி.

தன் தந்தை இத்தனை எளிதாக திருமணத்திற்கு சம்மதிப்பார் என்று சற்றும் எதிர்பாத்திராத விஷ்ணு மெதுவாய் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில், “நாம அவ்ளோ அவமானப்படுத்தினப்ப கூட  அவர் யாருன்னு உண்மைய சொல்லாம ஊர விட்டுப் போனவரு..  இப்போ திடீர்னு வந்து பழசையெல்லாம் மறந்துட்டேன்னு  சொல்றத பார்க்கும்போது  இதுல ஏதோ தப்பா இருக்குற மாதிரி தெரியுதே அப்பா. பேசாம இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லிடுவோம். ” என்று தன் மனதில் உணரும் உறுத்தலை அறிவுறுத்தினான்.

“அட மடையா.. அதிர்ஷ்டம் வாசக் கதவை தட்டும் போது முட்டாள் தனமா கதவை அடைச்சிட்டு போக சொல்றியா?, அதான் அவரே எல்லாத்தையும் மறந்துட்டேன்னு சொல்றாருல நீ எதுக்கு தேவையில்லாம யோசிச்சிட்டு இருக்க, போய் மாலையை போடு..” என்று தயங்கிய மகனை வற்புறுத்தி அனுப்பி வைத்தார் சேதுபதி.

தந்தையின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட விஷ்ணுவும் அகரனை வரவேற்கும் விதமாய் மாலையிட… ” பணக்காரன்னு தெரிஞ்சதும் உன் வால சுருட்டி வச்சுக்கிட்ட போல!, இப்படியே இரு, இதுதான் உனக்கு நல்லது, ” என்று வெறுப்புடன் கூறினான் அகரன்.

தன் அக்காவை மணக்கப் போகின்றவனின் குரலும் சொன்ன வார்த்தையும் ஏனோ விஷ்ணுவின் மனதிற்குள் அச்சத்தை விதைத்தது.. இருந்தும் தனக்குள் உணரும் அச்சத்தை மறைத்துக் கொண்டு அகரனின் கரம் பற்றி  மண மேடைக்கு அழைத்துச் சென்றான்.

தங்கையின் உதவியால் விருப்பமில்லாத திருமணத்திலிருந்து தப்பிக்க போகிறோம் என்று  நிம்மதியுடன்…  தனக்கான உடைமைகளுடன்  படிப்பிற்காக பெற்ற கல்வி சான்றிதழ்களையும் பத்திரப்படுத்திக் கொண்டு தங்கையின் சமிக்சைக்காக  காத்திருந்த மீனாட்சியின் அறைக்குள் அவசரமாய் ஓடி வந்த விசாலாட்சி…” நீ எங்கேயும் போகக்கூடாது மீனா.  இந்த கல்யாணம் கண்டிப்பா நடந்தே ஆகணும்” என்றாள்.

“இவ்வளவு நேரம் எனக்கு ஹெல்ப் பண்ற மாதிரி பேசிட்டு,  கடைசி நேரத்துல வந்து இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்னு சொல்ற?.. நியூ அப்பா மாதிரியே என்னை ஏமாத்த பாக்குறியா?” என்று ஒன்றும் புரியாமல் ஒரு நொடி குழம்பி நின்றவள் மறுநொடி தனக்குள்ளேயே  எதையோ சிந்தித்துக் கொண்டு  , ” நீ ஏன் இப்படி  மாத்தி மாத்திப் பேசுறன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சிடுச்சு!” என்று ஏளனப் புன்னகையுடன் கூறினாள் மீனாட்சி.

“என்ன புரிஞ்சது?” என்று புரியாத குழப்பத்துடன்  விசாலாட்சி வினவ… ” நான் இந்த கல்யாணம் வேணாம்னு ஓடிப்போயிட்டா  சினிமா.. சீரியல்ல, அப்புறம் நிறைய  நாவல்ல வர  மாதிரி உன்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்கன்னு பயந்துட்டு தானே இப்படி பேசுற?, அதுக்கும் என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு பேசாம நீயும் என் கூட கிளம்பி வந்துடு… நீயும் படிச்சு முடிச்சு சர்டிபிகேட் எல்லாம் கையில வச்சிருக்க தானே!,  நாம ரெண்டு பேருமே இங்கிருந்து மஞ்சு கூட போயிடுவோம். நீ வேலை தேடு நான் கரனைத் தேடுறேன்” என்று தற்போது இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்ட மகிழ்வுடன் குதூகலமாய் கூறினாள் மீனாட்சி.

”  நிறைய  சினிமா சீரியல் பார்த்து பார்த்து உன் மூளை  முழங்கால் வரைக்கும் வளர்ந்திடுச்சு,  அதான் கண்டதையும் கற்பனை பண்ணிட்டு நீயா ஏதாவது உளறிட்டு இருக்க.. ” என்று விசாலாட்சி விளக்கம் கொடுக்க துவங்கிட, பொறுமை இழந்து இடையில் நுழைந்த மீனாட்சி, ” நான் கண்டதையும் கற்பனை பண்றது இருக்கட்டும்,  நீ எதுக்கு என்னை இங்க பிடிச்சு வைக்க ட்ரை பண்ற அதுக்கு சரியான காரணத்தை சொல்லு..” என்றாள்.

” என்னை முதல்ல பேச விடு… அப்ப தான் என்னால இங்க என்ன நடந்துட்டு இருக்குன்னு சொல்ல முடியும், ” என்றவள் தனது அலைபேசியில் பதிவு செய்த புகைப்படம் ஒன்றை தேடி எடுத்து, “இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்னு சொன்னதுக்கு  காரணம் இதுதான்…” என்றவள் அதிலிருந்த புகைப்படத்தை மீனாட்சியிடம் காட்டி…” நாம நினைச்ச மாதிரி  கரன் வேற யாரோ இல்ல, அவர் தான் துர்கேஸ்வரி அம்மாவோட பேரன். கல்யாண மாப்பிள்ளையும் அவர் தான்.”  என்று தன் தமக்கையின் வாழ்வு சீரானதை எண்ணி மகிழ்வுடன் அறிவித்தாள் விசாலாட்சி.

“உண்மைய தான் சொல்றியா?, ஆனா கரனுக்கு அப்பா அம்மா யாரும் இல்லைன்னு சொன்னாரே!” என்று தங்கையின் வார்த்தைகளில் முழுமையான நம்பிக்கையை உணர முடியாமல் குழப்பத்துடன் வினவினாள் மீனாட்சி.

“அப்பா அம்மா இல்லன்னு தானே சொன்னாரு, பாட்டி இல்லைன்னு சொல்லலையே!.. ” என்று மாப்பிள்ளை வரவேற்பில் நிகழ்ந்த சம்பவங்கள் அனைத்தையும் விளக்கி கூறி முடித்தவள்..” இன்னும் என்ன யோசிச்சிட்டு நிக்கிற?,  உனக்கும் உன்னோட கரனுக்கும் தான் கல்யாணம் ஆகப்போகுது. ” என்றவள் அப்போதுதான் தன் தமக்கையின் தோற்றத்தில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து..” என்ன இது இங்க இருந்து கிளம்புறதுக்காக பட்டுப்  புடவையை  மாத்திட்டு,  மேக்கப் எல்லாம் ரிமூவ் பண்ணி ரெடியா இருக்க போல, சீக்கிரம் சீக்கிரம் நமக்கு ரொம்ப நேரம் இல்லை,  மாப்பிள்ளை மண மேடைக்கு போயிட்டாரு அடுத்து  உன்னைத் தான் கூப்பிடுவாங்க..”என்று மீண்டும் மீனாட்சி திருமணத்திற்காக அலங்கரித்தாள் விசாலாட்சி.

பட்டுப் புடவை கட்டி தயாராகும் வேளையில் ‘முகூர்த்தத்துக்கு நேரமாச்சு கல்யாணப் பொண்ண கூட்டிட்டு வர சொன்னாங்க’ என்று… குதித்தோடி வந்த சிறுமி ஒருவள் கூறிட.. திருமணத்திற்கு தயாரான தனது தமக்கையை மண மேடைக்கு அழைத்து சென்றாள் விசாலாட்சி.

ஊரார் பார்க்க… உற்றார் வாழ்த்து கூற… அவையில் அமர்ந்திருந்தோர் ஆசீர்வதித்து அர்ச்சதை தூவிட… தங்கச் சங்கிலியில் கோர்த்திருந்த திருமாங்கல்யத்தை… மீனாட்சியின் கழுத்தில் அணிவித்து இனி இவள் என்னவள் என்று  ஊர் உலகத்திற்கு அறிவித்தான் சுந்தர அகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!