Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கவிபாடும் கானகமயிலே

கானகமயில் -17

கானகமயில் -17



Advertisement

நன்றாக உறங்கி எழுந்திருந்த சாகர் அப்போது தான் உறங்க ஆரம்பித்திருந்த அழகனைப் பார்த்தவாறு மகேஷிடம், “நான் வேணா உங்களை மாத்தி விடட்டுமா சார், நீங்க கொஞ்ச நேரம் தூங்குறீங்களா?” என்று கேட்டான் 3 மணி வாக்கில்.

“சரி வா” என்றவனாய் காரை ஓரம் கட்டி நிறுத்திய மகேஷ் அவனுக்கு வாய்ப்பு வழங்க, காரை ஆர்வமாக செலுத்திய சாகர், “ஏன் சார் அழகன் சார் கிட்ட வேற ஏதாவது ரகசியம் இருக்குதா என்ன? ஏன்னா நமக்கு ஏதாவது பிரச்சனை இருந்தாலும் சரி இல்லாட்டியும் சரி ஏதாவது ஒரு சூழ்நிலையில, ஏதாவது ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தோ, காட்சியைப் பார்த்தோ சிரிப்போம் இல்லையா. ஆனா இவர் அப்படி கூட பண்ண மாட்டேங்குறாரு, எதையோ முழுங்குன மாதிரி எப்ப பார்த்தாலும் வெரப்பாவே இருக்காரு. உங்களுக்கு சாரை தெரிஞ்சு, நீங்க பழக ஆரம்பிச்சதுல இருந்தே இப்படி தான் இருக்காரா?” என்று தன்னையும் அறியாமல் கேட்டு விட்டான்.

ஒரு கணம் பழைய அழகனின் முகம் கண் முன் வந்து சென்றது மகேஷூக்கு. ஆனால் நண்பனை பற்றி உண்மைகளைச் சொல்ல வேண்டும் என்றால் அது நண்பனின் மூலம் தெரிந்தால் தான் நன்றாக இருக்கும். தான் எதையாவது சொல்லப்போய் மீண்டும் அவன் வாழ்வில் ஒரு பெரும் சூறாவளி சூழ நேரிட்டால் என்ன செய்வது என்பதால், “எனக்கு தெரிஞ்சு இவ்வளவு மோசமா இல்ல நல்லா தான் இருந்தான். ஆனா  திடீர்னு இப்படி மாறிட்டான், எனக்குமே ஐந்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த அழகனுக்கும் இப்ப இருக்கிற அழகனுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்குன்னு தெரியும். ஆனா அதுக்கு காரணம் என்னன்னு தான் தெரியல. எப்படி நாம கேட்டாலும் சொல்ல மாட்டான், அதனால தான் நான் கேட்குறதையே விட்டுட்டேன். நீயும் கேட்க வேண்டாம், சொல்லனும்னா அவனே சொல்லி இருப்பான் இல்லையா..”

Advertisement

“ஆனாலும் இவரு ரொம்பவே ரூடா, ரஃப்பா இருக்காரு சார். இன்னும் எப்படி சொல்றது, ஒரு ரோபோ மாதிரி இருக்காரு.‌ ஆனா காலமெல்லாம் இப்படியே இருந்திட முடியாது இல்லைங்களா அதனால தான் கேட்டேன்” என்று சொன்னான்‌ சாகர்.

Advertisement

‘சாகருக்கு எங்கே தெரியப்போகிறது ஒரு காலத்தில் யாரிடமும் ஒட்டாமல் இருந்தவன், அவள் ஒருவளது வருகையால் மொத்தமாக மாறிப் போயிருந்த காலமும் வந்தது. ஆனால் அவனை விலகி, விட்டு விட்டு செல்கையில் மொத்தமாக அவன் சந்தோசத்தை வாரி சுருட்டி எடுத்துக்கொண்டு அவள் சென்று விட்டால் என்பதை இவன் எங்கே அறிந்திருக்க போகிறான்’ என்று நினைத்தவாறே அமர்ந்திருந்த மகேஷ் சிறிது நேரத்தில் அழகன் மீது சாய்ந்து உறங்கி விட்டான்..

மகேஷ், அழகன், சாகர் மூன்று பேரும் வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்த போது மணி எட்டாகி இருந்தது. ஏழு மணி ஆன போது தான் மீண்டும் சாகரை இறங்கச் சொல்லி தான் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான் மகேஷ்.

அவர்கள் வந்து சேர்ந்த இடத்தை கண்டு வாய் பிளந்து நின்ற அழகனோ, “பார்க்க எவ்வளவு அழகா இருக்குது” என்றான் பச்சை போர்வையே தன் மீது போர்த்தி இருந்த மலைகளைப் பார்த்தவாறு.

Advertisement

“ஆமா அழகாக தான் இருக்குது. ஆனா இங்க நாம தங்குறதுக்கு தான் எந்த இடமும் இல்லை” என்ற சாகர் சொல்ல,

“அதெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல நம்மளைக் கூட்டிட்டு போறதுக்கு ஆள் வரும். ஆனா நம்ம இங்க வந்து சேருறதுக்கு இவ்வளவு நேரம் ஆகும்னு குத்துமதிப்பா தான் சொல்லி இருந்தேன். ஒரு ஒன்பது மணிக்குள்ள வாங்கன்னு சொன்னதால தான் இன்னும் வரல போல. கொஞ்ச நேரம் கார்லையே வெயிட் பண்ணுவோம், பசிச்சா இருக்கிறதை சாப்பிடுங்க” என்றான் மகேஷ்.

பல்லை விளக்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான் சாகர். ஆனால் அழகனுக்கு குளித்தாக வேண்டிய கட்டாயம். உறங்கி எழுந்ததும் குளித்து விட்டு தான் மற்ற வேலைகளை கவனிப்பான். ‘குளிச்சா நல்லாருக்கும். ஆனா இங்க எங்க போய் குளிக்கிறது?’ என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே தொலைவில் அருவி கொட்டுவது போலான நீர் நிலை ஒன்றின் சத்தம் அவன் செவியை வந்து தீண்டியது.

மெல்ல காரை விட்டு இறங்கியவன் மகேஷிடம், “பக்கத்துல ஏதாவது ஆறு இல்லன்னா ஓடை மாதிரி இருக்கான்னு பார்த்துட்டு நான் குளிச்சிட்டு வந்துடறேன். நீங்க வெயிட் பண்ணுங்க, அப்படி நம்மளைக் கூட்டிட்டு போகுற ஆள் வந்துட்டாங்கன்னா எனக்கு கால் பண்ணுங்க” என்று சொல்லி விட்டு உயர்ந்து நின்ற அந்த மலையின் அடிவாரத்தில் இருந்த காட்டுக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்தான்.

அங்கு இருப்பவர்கள் பயன்படுத்தும் பாதை போல் தான் தெரிந்தது. ஏனெனில் சீராக ஒருவர் நடந்து செல்லும் ஒற்றையடி பாதை போல் நெடுநெடுவென்று காட்டுக்குள் சென்றது அந்த பாதை. நாலாபுறமும் விழிகளை சுழ விட்டவாறு நடந்து சென்று கொண்டிருந்தவன், முன்னேறி நடக்க நடக்க நீரின் சலசலப்பு பெரிதாய் செவியை வந்தடைவதை உணர்ந்தவன், “பக்கத்துல எதாவது ஆறு இருக்கணும் இல்லன்னா நீரோடை இருக்கும்னு நினைக்கிறேன். நீரோட சத்தம் ரொம்ப நல்லா துல்லியமா கேட்குது” தன்னைப் போல் சொல்லிக் கொண்டு உள்ளே நடந்தவன், காலைவேளை என்றாலும் கூட அடர்ந்து செழித்து வளர்ந்திருந்த மரங்களினூடே சூரிய ஒளி மெல்லிய கோடு போல் படர்வதைக் கவனித்துக்கொண்டு தான் நடந்தான்.

அதிலும் அந்த காட்டின் குளிர்ச்சியும், பறவையினங்களின் வித்தியாசமான ஒலிகளும், செவிக்கும் மனதிற்கும் இன்னிசை காணமாய் தோன்றிட, அதையெல்லாம் அனுபவித்தவாறு முன்னேறியவனுக்கு பல நாட்களுக்கு பிறகு மனமும், உடலும் உற்சாகமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருப்பது போல் இருந்தது.

வந்த வழியை மறந்து விடக்கூடாது என்பதற்காக பின்னால் திரும்பிப் பாதையை நன்றாக கவனித்துக் கொண்டவனுக்கு, அவன் நடந்து செல்லும் பாதையில் இருந்து சிறிது தொலைவில் இதே போல் மற்றொரு பாதை செல்வதையும், இதே போல் அங்கேயும் வரிசையாக ஒரே போலான மரங்கள் இருப்பதையும் கண்டு விட்டு குழப்பமாய் இருந்தது.

‘ஒருவேளை தடம்மாறி போயிட்டா என்ன பண்றது?’ என்று யோசனையில் நொடியில் விழுந்தவன், ஏதேனும் குறியீடு போல் போட்டு வைத்தால் திரும்பி செல்ல ஏதுவாக இருக்கும் என்று நினைத்து அருகில் இருந்த மரத்தில் கீழே கிடந்த கல் கொண்டு ‘A’ என்ற குறியீட்டை அடையாளமாய் செதுக்கியவன், வரிசையாக அடுத்தடுத்த மரத்திலும் அதே போல் செதுக்கி வைத்துக் கொண்டே முன்னேறினான்..

‘திரும்பி வரும்போது இந்த குறியீட்டை அடையாளம் வைத்து எளிதாக கார் இருக்கும் இடத்திற்கு சென்று விடலாம்’ என்ற எண்ணக் கணக்கோடு மேலும் முன்னேறியவன் சமதள பரப்பாய் இருந்த அந்த பாதை, திடீரென்று சரிவான பகுதி நோக்கி தடம் மாறுவதைக் கண்டு விட்டு சற்று உஷாராக எதற்கும் இருக்கட்டும் என்று மரத்தின் கீழே கிடந்த குச்சி ஒன்றை எடுத்து ஊன்றுகோல் போல் பிடித்துக் கொண்டான்.

அவன் அவ்வாறு செய்திருக்காவிட்டால் அடுத்தடுத்து நடக்கையில் பெரிதாய் தோன்றிய சரிவில் நிச்சியம் தடுமாறி பிடிமானமின்றி விழுந்திருப்பான். இப்போது குச்சியின் உதவியால் கவனமோடு கீழே இறங்கியவனுக்கு சரிவில் இறங்க இறங்க வியர்த்துக் கொட்டியது.

வட்ட வடிவில் குழி போல் இருந்த இடத்தை சென்று அடைந்தது அவன் நடந்த பாதை. மறுபடியும் வேறு திசையில் மேடேறி செல்வதற்கு எந்த ஒரு வழிப்பாதையும் இல்லாதிருந்ததைக் கண்டு குழம்பி நிற்கையில் தடதடவென்று கூட்டமாய் இவன் இருக்கும் திசையை நோக்கி ஏதோ ஓடி வருவது போல் ஒரு பிரம்மை ஏற்பட்டது. ஆனால் சில நொடிகளில் அது பிரம்மை இல்லை, நிஜம் என்று புரிந்து கொண்டான்.

அதிலும் தடதடவென்ற சத்தம் நிச்சியம் ஒன்றுக்கும் மேற்பட்ட ஏதோ ஒன்று இவன் இருக்கும் திசையை நெருங்கிக் கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது. ‘ஒருவேளை இந்த இடத்துக்கு தான் வருதோ?’ என்று நினைத்தவன் கையில் இருந்த குச்சியை ஊன்றி அந்த பள்ளத்தில் இருந்து வந்த வழியே சில அடி தூரம் மேலேறி வந்திருப்பான். அப்போது தான் புழுதியை கிளப்பியவாறு ஏதோ ஒரு விலங்கினக் கூட்டம் இவனை நோக்கி வருவதைக் கண்டு விட்டான்.

அதிலும் அது என்னவென்று தெரியாத அளவிற்கு புழுதி பட்டாளம் அந்த இடத்தை ஆக்கிரமித்து இருக்க, நொடியில் இவனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவன் திகைத்து இருக்கையில், சட்டென்று ஒரு கரம் அவனை அந்த இடத்தில் இருந்து இழுத்து மரத்தின் பின்னே நிற்க வைத்திட, அடுத்த சில மணித்துளிகளில் அவன் நின்ற இடத்தை வேகமாய் கடந்து சென்றன முள்ளம்பன்றிகளின் கூட்டம்.

தன்னைக் காப்பாற்றிய நபர் யார் என்று கூட பார்க்காமல் கூட்டமாய் சென்ற முள்ளம்பன்றிகளையே பார்த்திருந்தான் அழகன்.‌ ‘ஒருவேளை அவற்றிற்கு இடையூறாக தான் நிற்பதை உணர்ந்து,  தன்னை தாக்க வந்தவன் என்று நினைத்து அவர்களது பாதுகாப்பிற்காக அவற்றின் முதுகில் உள்ள முட்களை எல்லாம் ஆயுதமாய் தன் மீது எறிந்திருந்தால் நிச்சயம் இந்நேரம் சல்லடை சல்லடையாய் துளைக்கப்பட்டு உயிரை விட்டிருப்போம்’ என்று நினைத்தவனுக்கு அதை நினைக்கையிலே உடல் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.

‘நல்ல வேளை இவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து யாரோ நம்மளைக் காப்பாத்திட்டாங்க, அவங்களுக்கு முதல்ல நன்றியை சொல்லணும்’ என்ற எண்ணத்தோடு விழிகளை திரும்பியவன் அதிர்ந்து உறைந்து நின்று விட்டான்.

ஏனெனில் புடவையை ஒரு மாதிரியாக கட்டியிருந்தாள் அந்த பெண். முட்டிக்கு சற்று கீழே துவங்கிய அந்த புடவை வேறு விதமாய் சுற்றப்பட்டு அவள் மார்பில் முடியப்பட்டிருந்தது. அதோடு இணைக்கப்பட்டிருந்த துண்டு போல் ஆன ஒரு நீள துணி அதே நிறத்தில் இருந்தது. ஆனால் அது அவளது ஒரு பக்க ஷோல்டரை மட்டும் மறைத்தால் போல் கட்டப்பட்டு மறுபக்க முனை சரிவாய் இடையோடு பிணைக்கப்பட்டிருக்க, ஒரு பக்க ஷோல்டர் வெறுமையாய் இருந்தது. தலையில் ஏற்றி கட்டப்பட்டிருந்த கொண்டையிலிருந்து நீர் சொட்டு சொட்டாய் வடிந்து கொண்டிருந்தது.

கொண்டையில் மட்டுமல்ல உடலிலும் நீர் சொட்டிக் கொண்டிருக்க, துவைத்த துணிகளை வலது புற தோளில் போட்டுக் கொண்டு நின்றிருந்த அந்தப் பெண் இவனை அந்நியப் பார்வை பார்த்து,
“யார் நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்று வினவினாள்.

அச்சு அசலாக கவித்தாரகாவின் சாயலில் நின்ற பெண்ணைக் கண்டு அதிர்ந்து நின்று இருந்து அழகனோ, ‘யார் நீங்கள்?’ என்று அவள் கேட்ட வார்த்தைகளில் அதிர்ந்து, “என்ன, என்னைத் தெரியலையா?” என்றான்.

மீண்டும் அவனை யாரோ மூன்றாம் மனிதனைப் போல் பார்த்து வைத்தவள், “நீங்கள் யார் என்று என்னால் கணிக்க இயலவில்லை. ஆபத்தில் இருந்தீர்கள் ஆதலால் காப்பாற்றினேன். அதற்காக நீங்கள் யார் என்று தெரிந்ததாக அர்த்தம் கொள்ள வேண்டாம், நகருங்கள்” என்று கூறி அவனை சுற்றிக்கொண்டு நெடுநெடுவென்று காட்டிற்குள் புகுந்து சென்றாள் அவள். அவளையே பார்த்தவாறு றைந்து நின்றான் அழகன்.

ஆனால் அவ்வாறு அவன் உறைந்து நின்றது சில நிமிடங்கள் தான், அவள் செல்கிறாள் என்று புத்திக்கு உரைத்த மறுகணம் தடதடவென்று அவள் பின்னே ஓடினான். காய்ந்த சருகுகளின் மிதியடி சத்தமோ அல்லது அவன் கால் தடத்தின் சத்தமோ ஏதோ ஒன்று அவள் செவியை வந்தடைந்ததும் நின்று திரும்பி அவனை முறைத்தவள், “எதற்காக என் பின்னே இங்கனம் வந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கோப குரலில் கேட்டிட,

“உண்மையாவே என்னை உனக்கு தெரியலையா?” என்று மீண்டும் கேட்டான். அவள் தன்னை மறந்தது போல் நடிக்கிறாளோ என்று நினைத்து.

“முன்பின் அறிமுகமற்ற நபரை காப்பாற்றியது ஏதோ மனிதநேயம் இருப்பதால் தான். அதற்கு நன்றி கூறாது, என்னையே யார் என்கிறீர்? நீங்கள் யார் என்பதை நானும் அறியேன். அது மட்டும் இன்றி வெளியாட்களுக்கு எங்களுடைய குடி பகுதியில் நாங்கள் அனுமதி அளித்தது கிடையாது. அவ்வாறு இருக்கையில் இவ்வளவு தொலைவு வரை எவ்வாறு தங்களால் வர முடிந்தது? யார் நீங்கள், முதலில் அதை கூறுங்கள்” என்று எதிர் கேள்வி கேட்டவளை விழிவிரித்துப் பார்த்தான் அவன்.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தயங்கி நின்ற சில நொடிகளில் அவனை அங்குல அங்குலமாக அளவிட்டாள் அந்த பெண், இவன் நிச்சியம் வேறு ஒரு இடத்தில் இருந்து தான் வந்திருக்கிறான் என்பதை அவன் அணிந்திருந்த உடையை வைத்து அறிந்து கொண்டவள், அவன் பதில் கூறாது தன் முகத்தையே கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு பார்த்திருப்பதை உணர்ந்தவளுக்கு,  அந்த பார்வை ஏதோ ஒரு ஒவ்வாத உணர்வை தோற்றுவித்தது.

மறுகணம் அங்கிருந்து எட்டி நடை போட்டவள், மருந்துக்கு கூட பின்னால் திரும்பி பார்க்கவில்லை. அவள் செல்வதை கூட உணராது, ‘உண்மையாவே என்னை மறந்துட்டாளா? ஆனா ஏன், எதுக்கு மறக்கணும்? எப்படி அவளால மறக்க முடிஞ்சுது? அவ்வளவு தானா என்‌ மேலே அவள் வச்சுருந்த காதல்?’ என்று தனக்குள் உழன்று கொண்டிருந்த அழகன், அவள் காட்டுக்குள் சென்று மறைந்து வெகு நேரம் கழித்தே தன்னிலை பெற்றான்.

பின்னர் வேக வேகமாக அவள் சென்ற திசையில் ஓடினான். சில அடி தூரம் வரை காடு போல் இருந்த பகுதி அதன் பிறகு ஓடை ஒன்றில் சென்று முடிவடைய, இவன் தான் அவள் எந்த திசையில் சென்று இருப்பாள் என்று தெரியாமல் திகைத்து நின்றான். ஏனெனில் ஓடையைத் தாண்டி மறுகரைக்கு செல்ல வேண்டும் என்றால் நிச்சயம் படகு போல் ஏதோ ஒன்று தேவைப்படும், அந்த அளவுக்கு அந்த ஓடை சற்றே பெரியதாகவே இருந்தது.

எத்திசையில் சென்று இருப்பாள் என்று தெரியாமல் குழம்பி நின்று இருந்தவன் பின்பு நேரமாவதை உணர்ந்து ஓடைக்குள் இறங்கி குளிக்க ஆரம்பித்தான். வெற்று உடலோடு சிறிது நேரம், அந்த குளிர்ந்த நீரில் மல்லாந்து கிடந்தான். ஓடும் நீரானது அவன் மார்பில் இருந்த வடுவை இதமாய் வருடி செல்ல, இவனது கரமும் அதை வருடிக் கொடுத்தது.

வெகுநேர சிந்தனைக்கு பிறகு, ‘எப்படியும் நிச்சயம் இங்கு தான் ஏதேனும் ஒரு கிராமத்தில் அவள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அவளைக் கண்டுபிடித்து ஏன் என்னை தெரியவில்லை என்று சொன்னாய் என கேட்க வேண்டும்’ என்று ஆவலும், கோபமும் அவனுள் எழுந்ததால், அதை தணிக்கும் பொருட்டு நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தான்.

அதேநேரம் கரையோரம் வைத்திருந்த அவன் உடையில் இருந்த அலைபேசி சத்தமிட்டதை உணர்ந்து ‘மகேஷ் தான் கூப்பிடுறான் போல’ என்ற எண்ணத்தோடு விரைந்து குளித்து முடித்து கரையேறியவன், மீண்டும் ஓடையின் மறுபக்கம் பார்த்தான். யாரும் அங்கு இல்லை என்ற போதும், இவனுக்கு நெருக்கமான ஏதோ ஒன்று அங்கிருந்து இவனை காண்பது போல் ஒரு பிரம்மை தோன்றிட, சிறிது நேரம் அப்படியே நின்று இருந்தவன் மீண்டும் மீண்டும் மகேஷ் அழைப்பை உணர்ந்து வந்த வழியே திரும்பி செல்ல ஆரம்பித்தான்.

அவ்வளவு நேரம் மரத்தின் பின்னே ஒளிந்து நின்றிருந்த அந்த பெண்ணோ, தலையை மட்டும் சாய்த்து அவன் சென்ற திசையை பார்த்திருந்தாள். ‘ஏன் இவரைக் காண்கையில் இரு‌ மாதிரியான உணர்வு எழ வேண்டும். அந்நிய உணர்வு தோன்றினாலும், அதே கணம் மனதிற்கு நெருக்கமான உணர்வும் தோன்றுகிறது’ என்ற குழப்பத்தோடு தன் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.  எவ்வாறு அவள் உடலில் இருந்து நீர் சொட்டு சொட்டாக சொட்டுகிறதோ, அதேபோல் அவனது முகமும், வார்த்தைகளும் சொட்டு சொட்டாய் அவளுள் சேகரமாகிக் கொண்டிருந்தது..

 

 

கண்ட கணத்தில் கலங்கி
நின்றேன் அவனால்..
வேற்றாளென புத்தியுரைக்க
நெருங்கிய உறவென மனம்
வாதம் செய்வதேனோ?

           – கானகமயில் கவிபாடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!