Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனம் வேண்டிநிற்கும் வரம் நீயே

வரம் நீயே 22 (2)

ஒரு பெரிய அடியை வாங்கியது அந்த குடும்பம்.

தான் உயிரோடு இருக்க, தன் மகனுக்கு பேரன் கொள்ளி வைப்பதை பார்த்து, தாத்தா மாரடைப்பில் விழுந்தார்.

அவரை கண்ணும் கருத்துமாக பார்த்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. மகன் பிரிந்த துக்கத்தில், மூன்றே மாதங்களில் அவரது உயிர் பிரிந்து விட்டது.

அடுத்த பெரிய அடியை தாங்க முடியாமல், அமுதவல்லி துவண்டு போனார். மாமியாரும் அவரும் மட்டுமே ஒருவருக்கொருவர் துணை என்றானது.



Advertisement

அரசன் தன் படிப்பை முடித்து, கூடவே காவல்துறைக்கான தேர்விலும் வெற்றி பெற்றிருந்தான்.

அஞ்சனா அப்போது தான் மணிகர்ணிக்காவை கருவுற்றிருந்தாள். சில நாட்கள் ஓய்வு வேண்டி பிறந்த வீடு வந்திருந்தாள்.

அரசன் மறுநாள் ஊருக்கு வருவதாக இருக்க, தங்கம்மாள் கலவரத்தை உண்டு பண்ண ஆரம்பித்தார்.

Advertisement

தங்கமீனாட்சி பூப்பெய்தி இருக்க, அதற்கான சீர்வரிசைகளை கொண்டு சென்ற அமுதாவை, பிடித்துக் கொண்டார்.

Advertisement

அரசனுக்கு தங்க மீனாட்சியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு!

அமுதவல்லி மட்டுமல்ல, அஞ்சனாவும் அவளது பாட்டியும் கூட இதைக்கேட்டு அதிர்ந்து போனார்கள். முதலில் மேம்போக்காய் மறுக்க, தங்கம்மாள் உறுதியானார்.

அமுதவல்லிக்கு கடுப்பாகி விட, அவரும் தீவிரமாக மறுத்து விட்டார். ஆனால், தங்கம்மாள் விடுவதாக இல்லை. அகிலாண்டேஸ்வரிக்கு கூட இது சரியென பட்டது.

Advertisement

“உங்க புள்ளையால தான் என் மக இப்படி இருக்கா. அவ வாழ்க்கைய சரி பண்ணுற கடமை உங்க புள்ளைக்கு இருக்கு” என்று அபாண்டமாக பேச, அஞ்சனாவிற்கு சட்டென கோபம் ஏறியது.

“உங்க மகன் வண்டி ஓட்ட தெரியாம ஓட்டி, அவன காப்பாத்த போன எங்கப்பாவ கொன்னுட்டான். உங்க மக கால காயப்படுத்திட்டான். அதுக்கு என் தம்பி மேல பழி போடுறீங்க? எங்கப்பா சாவுக்கு உங்க புள்ள தான் காரணம்னு நான் ஆரம்பிச்சா, தாங்க மாட்டீங்க சொல்லிட்டேன்” என்று கத்தி விட்டிருந்தாள்.

அமுதவல்லி கூட இதைத்தடுக்கவில்லை. அபாண்டமாக பேசுபவர்களிடம் அவர்கள் போக்கில் பேசினால் தான் விடுபட முடியும். இல்லையென்றால் மொத்தமாய் மிளைகாய் அரைத்து விடுவார்கள் என்று அறிந்திருந்தார்.

“என் பேரன கூட்டிட்டுப்போய் கொன்னது உன் தம்பி” என்று தங்கம்மாள் எகிறிக் கொண்டு வர, “சரி.. அப்படியே வச்சுப்போம். அந்த கொலைகாரனுக்கு ஏன் ஆத்தா உன் வீட்டுப்பிள்ளைய கொடுக்குற? நல்லவனா பார்த்து கொடுக்க வேண்டியதுதான?” என்று கேட்டு வாயை திறக்க முடியாமல் செய்தாள்.

“என் தம்பிக்கும் நடந்த எதுக்கும் சம்பந்தம் கிடையாது. அவன் மேல பழிய போட்டு உங்க பொண்ண கட்டிக்க சொல்லுறது தப்பு. அத விட அப்படி அவன் மேல தப்பிருந்தா, தப்பு பண்ணவன் வீட்டுக்கு உங்க புள்ளைய அனுப்பக்கூடாது. பிள்ளையும் கிள்ளி தொட்டியையும் ஆட்டுவீங்களோ? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? ஏன் அத்த.. நீங்க கேட்க மாட்டீங்களா? கொஞ்சம் கூட நியாயமே இல்லாம பேசிட்டு இருக்காங்க.” என்று எல்லோரையும் பேசி, மகாலட்சுமியையும் இழுத்து பேசி விட்டாள் அஞ்சனா.

“என்ன அமுதா மகள பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க?” என்று அஞ்சனாவை விட்டு விட்டு அமுதாவிடம் பாய, அவர் தூரமாக ஒன்றும் புரியாமல் அமர்ந்து இருந்த மீனாட்சியை தான் பார்த்தார்.

இங்கு பேசுவது மீனாட்சியின் காதில் அறைகுறையாகத்தான் விழுந்தது. அவள் மலங்க மலங்க விழித்தபடி அமர்ந்து இருந்தாள்.

“உன் மகளுக்கு என் மகன நீ கேட்டுருக்கலாம் அகிலா. தப்பில்ல. உரிமையா கேட்ருக்கலாம். கட்டிக்கிற முறை தான். அந்த முறைய சொல்லி நீ கேட்டுருந்தா நான் என் மகன் கிட்ட பேசியிருப்பேன். ஆனா முன்னாடி நடந்தத காரணம் காட்டி, அவன கொலைகாரன்னு பேசி அதுக்கு தண்டனையா உன் மகள கல்யாணம் பண்ணி வைக்கனும்னு சொல்லுறியே.. இதுக்கு ஒத்துக்கிட்டா என் புள்ள வாழ்க்கை என்னாகுறது? முடியாது அகிலா. நிச்சயமா முடியாது.”

அமுதவல்லி அழுத்தமாக சொல்லி விட்டு, அப்போதே கிளம்பி விட்டிருந்தார்.

அவர் பேசியதை மொத்த ஊரும் கேட்டிருந்தது. அது சரியென்றே நினைத்தது.

நடந்த பிரச்சனையை மனதில் வைத்து மருகி, அமுதவல்லியின் மாமியாரும் உயிரை விட்டுருந்தார். அந்த பதட்டத்தில், அரசனுக்கு இந்த திருமண பேச்சு தெரியாமல் போனது.

பாட்டியின் இறுதி காரியம் முடிந்ததும், காவல்துறை பயிற்சிக்கு செல்ல யோசித்தான். அமுதவல்லியை தனியாக விட்டு விட்டுச் செல்ல அவனுக்கு மனமில்லை. ஆனால், மகனின் கனவை கலைக்க அமுதவல்லியால் முடியாதே.

பல அடிகளை தாங்கியது போல், இதையும் தாங்கிக் கொண்டு மகனை அனுப்பி விட்டார். மாமனார் போனதிலிருந்தே தொழில் எல்லாம் அவர் கையில் இருக்க, இப்போதும் தைரியமாகவே நின்றார்.

மணிகர்ணிக்கா பிறந்து இரண்டு மாதங்களுக்குப்பிறகு தான், அரசன் பயிற்சி முடித்து வந்து சேர்ந்தான்.

அப்போது தான், தங்கமீனாட்சிக்கும் அவனுக்கும் திருமண பேச்சு என்ற ஒன்று நடந்ததே அவனுக்குத் தெரியும்.

“அப்போ நீங்க என்ன சொன்னீங்க?” என்று வைசாலி கேட்க, “யாரு இப்படி கேனைத்தனமா பேசுனது தான்” என்றான் அரசன்.

“ஏன்?”

“இப்ப தங்கமீனாட்சி வயசு என்ன தெரியுமா? பத்தொன்பது தான் இருக்கும். என் வயசு என்ன? அந்த புள்ள வயசு என்ன?”

வைசாலி உடனே கணக்கு போட்டு விட்டு, “அப்போ ஏழு வயசுலயே அப்படி ஆகிடுச்சா?” என்று வருத்தமாக கேட்டாள்.

அரசன் தலையசைத்தான்.

“அந்த பொண்ணு ரொம்ப சின்ன பொண்ணு. நான் ப்ளஸ்டூ முடிச்சுட்டேன். அது ரெண்டாவது படிச்சு முடிச்சுருக்கு. நினைச்சு பாரு. நாராசமா இல்ல?”

அரசன் கடுப்பாக கேட்க, வைசாலி மெல்ல தலையாட்டினாள்.

“எந்த லூசுடா இது இப்படி பேசுச்சுனு ஒரே கடுப்பு. ஆனா அம்மா இதை பத்தி பேசக்கூடாதுனு சொல்லிட்டாங்க. முக்கியமா என்னை அடிக்கடி ஊருக்கு வர்ரத தடுத்துட்டாங்க. திருவிழா வீட்டுல எதுவும் விசேஷம்னா மட்டும் தான் ஊருக்கு வரனும்னு சொல்லிட்டாங்க. அவங்க வர சொன்னாலும் என்னால வர முடியாது. அது வேற விசயம். முதல்ல நார்த்ல தான் போஸ்டிங் வந்தது. அது முடிஞ்சு இந்த பக்கம் ட்ராண்ஸ்பர் வாங்கிட்டு வந்துட்டேன். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி தான் மறுபடியும் இந்த பிரச்சனை வந்துச்சு”

“மறுபடியும் கல்யாணம் பத்தி பேசுனாங்களா?”

“ம்ம்.. திருவிழானு லீவ் போட்டு வந்துருந்தேன். அப்ப தான் அகிலா அத்த வீட்டுக்கு வந்து, நேரா என் கிட்டயே பேசுச்சு. பிடிச்சு திட்டிட்டேன். அப்பவும் விடாம ஊர் ஆளுங்க முன்னாடி பேசுச்சு” என்றவன் அந்த நாள் நினைவில் பல்லைக்கடித்தான்.

ஊர் பெரியவர்களை அழைத்து வைத்துக் கொண்டு அகிலாண்டேஸ்வரி பஞ்சாயத்து செய்ய, அரசனுக்கு கடுப்பாக இருந்தது. அமுதவல்லி முதலில் சொன்னதை தான் மறுபடியும் சொல்லி வைத்தார்.

ஆனால் அகிலாண்டேஸ்வரி வார்த்தைகளை விட்டிருந்தார். மகளுக்காக பேசுகிறேன் என்று, அவளது காலை பற்றி பேசி வைத்தார்.

“என் மவள நொண்டியாக்கிட்டு இப்படி பேசுறீங்களே.. பெத்த புள்ளைய பறி கொடுத்து பொம்பள புள்ளையும் நொண்டியா போய் வீட்டுல கிடக்குறா.. அவள நான் எப்படி கரையேத்துவேன்? காரணமானவக நீங்களே ஒரு வழி சொல்லுங்க” என்று அகிலா அழ, அமுதவல்லி அஞ்சனா இருவரின் பார்வையும் மீனாட்சியிடம் பாய்ந்தது.

அங்கு தான் நின்று இருந்தாள். பாதியில் தான் எதோ பிரச்சனையோ என்று வந்து சேர்ந்தாள்.

வந்தவள் காதில் விழுந்தது அந்த வார்த்தைகள். யார் யாரோ அவளை இதைச் சொல்லி நோகடித்து இருக்கின்றனர். அப்போதெல்லாம் அவளுக்கு அவ்வளவு வலித்தது இல்லை. பெற்ற அன்னை ஊர் முன்னால் தன்னை பேசியதை கேட்டு, உடைந்து போனாள்.

கண்ணில் வழிந்த நீரோடு அவள் அந்த இடத்தை காலி செய்ய, அமுதவல்லிக்கு மனம் துடித்தது. அந்த துடிப்பு அகிலாவின் மேல் கோபமாக திரும்பியது.

அவர் வாயைத்திறக்கும் முன், “போதும்.. கொஞ்சம் வாய மூடுறீங்களா?” என்று அரசன் கத்தியிருந்தான்.

“என் வாழ்க்கை இது. நீங்க போடுற பொய்யான பழிக்காக நான் என் வாழ்க்கைய பணயம் வைக்க முடியாது. ஊருக்கே தெரியும் அங்க என்ன நடந்துச்சுனு. நீங்க உங்க இஷ்டத்துக்கு பேசுனா எல்லாம் உண்மையாகிடுமா? நான் உங்க மகள கட்டிக்கிட்டா, நீங்க போட்ட பழிய எல்லாம் நான் ஏத்துக்கிட்டேன்னு ஆகிடும். முடியாது. கல்யாணம் பண்ண முடியாது. உங்களால என்ன முடியுமோ செய்யுங்க. பார்த்துடுறேன்”

சபையில் சத்தமிட்டவன், அப்போதே ஊரை விட்டு கிளம்பி விட்டான். திருவிழாவும் மறந்து..

“காப்பு கட்டின பிறகு ஊர விட்டு போகக்கூடாது” என்று தடுத்த ஊர் மக்களை அவன் கருத்தில் கொள்ளவில்லை.

அமுதவல்லி மகனை தடுக்கவில்லை. போகட்டும் என்று விட்டு விட்டார். இருந்தால் பேசிப்பேசியே மகனை மீண்டும் குற்ற உணர்ச்சியில் தள்ளி விடுவார்கள்.

எல்லோரும் அமுதவல்லியிடம் வர, அவரும் அரசன் பேசியதை தான் பேசினார். இனி இந்த பேச்சு வரக்கூடாது என்று முடித்து விட்டார்.

ஊரே ஒப்புக் கொண்டாலும், அகிலாண்டேஸ்வரி ஒப்புக்கொள்ளவில்லை. அவரது குடும்பம் ஒப்புக் கொள்ளவில்லை. ஊருக்குள் விசயத்தை சொல்லிக் கொண்டே இருந்தனர்.‌ ஆனால் யாரும் காதில் வாங்குவதாக இல்லை.

“அப்போ காலையில வந்தவங்க மீனாட்சியோட அம்மாவா?” என்று கேட்க, “அம்மாவா? வந்தாங்களா?” என்று கேட்டான் அரசன்.

அகிலாண்டேஸ்வரி பேசியதை வைசாலி கூற, அரசனுக்கு புரிந்தது.

“அப்படித்தான் பேசிட்டு இருப்பாங்க. விடு. இவங்களா தான் திருந்தனும்”

“அப்ப என் கிட்ட சொன்ன லேடிஸ் யாரு?”

“அகிலா அத்தையோட தம்பி பொண்டாட்டி அக்கானு, அவங்க குடும்பம் மட்டும் தான் இத இன்னும் பேசிட்டு இருக்காங்க. மத்த யாருக்குமே இதுல விருப்பம் இல்ல. அவங்க தான் சொல்லிருக்க முடியும் உன் கிட்ட “

“ஓஹோ.. அவங்கள திரும்பி பார்த்தா பேசிக்கிறேன்” என்று முடித்தாள் வைசாலி.

வரம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!