Skip to content
Post Views: 1,341
பிரியம் – 5.1
காலை ஐந்து என அலாரம் அடிக்க,வலித்த கண்களை மெதுவாக திறந்தாள் திவ்யா. இரவு முழுவதும் அழுததால் இமைகள் தடித்து முகம் வீங்கியிருந்தது.
Advertisement
மெல்ல கைகளை கொண்டு முகத்தை துடைத்தவளுக்கு நேற்றைய அழுகையின் மிச்சமாய் கலக்கம் இருந்தது, மழை விட்டும் நிற்காமல் வெளியில் தூறிக் கொண்டிருக்கும் தூறல் போலவே!
தன் அருகில் ஒருவரை ஒருவர் அணைத்தபடி படி தூக்கத்தை தழுவிருந்த அவள் செல்வங்களைப் பார்த்தாள் திவ்யா.
Advertisement
Advertisement
கை நீட்டி தன்யாவின் தலையை வருடினாள்.பிள்ளை முகமும் தாயினது போலவே அழுததால் வீங்கிருக்க மனதைக் குற்ற உணர்வு அழுத்தத் தொடங்கியது.
‘தேவா என்ன தப்பு செய்திருந்தாலும் பிள்ளைகளிடம் அவனைப் பற்றி நீ மறைத்தது சரி இல்லை திவ்யா!’மனது சொல்ல, வலியோடான புன்னகை அவள் இதழ்களில்.
Advertisement
“அம்மாவ மன்னிச்சிருங்க குட்டீஸ்”முணுமுணுத்தவள் இருவர் நெற்றியிலும் முத்தம் பதித்து விட்டு,கட்டிலில் கிடந்த தேவாவின் புகைப்படத்தை கிழிக்க போனவளுக்கு கண்ணீர் உருண்டோட,புறங்கையால் துடைத்துக் கொண்டாள்.
ஒரு ஆழ்ந்த மூச்சுடன் அலமாரியை திறந்து அவளின் உடையின் அடியில் அப்படத்தை பத்திரப்படுத்தி வைத்தவளின் விழிகள் அங்கிருந்த சிறு பெட்டியின் மீது பதிந்தது.மனம் திறக்க வேண்டாம் என எச்சரித்ததையும் பொருட்படுத்தாது அதைத் திறந்தவளை பார்த்து பல்லிளித்தது பிளாட்டின பிரேஸ்லேட் ஒன்று.
‘தேவந்தனம்’மெல்ல அதை வருடியவளின் உதடுகள் உச்சரிக்க,பழைய நினைவுகளில் தொண்டை அடைத்தது அவளுக்கு.நினைவுகள் பின்னோக்கி செல்ல கடல் அலைகளாய் மனம் பாய்ந்தது.
‘இது என்ன தேவா?’பரிசுப் பெட்டி நீட்டியவனைப் பார்த்து ஆராய்ச்சியாய் வினவினாள் திவ்யா.
‘என் சக்கரைக்கு இந்த தேவாவின் அக்கறை’என்றான் கண் சிமிட்டி ஆளை வசீகரிக்கும் புன்னகையுடன்.
‘பிரேஸ்லேட் மாதிரி இருக்கு! ப்ச்,எதுக்கு பிளாட்டினத்துல வாங்கனீங்க தேவா?’என கோபப்பட்டவளிடம்,
‘சக்கரை!’என்று லேசாக அவன் முறைக்க,
‘ஆமா இப்படி கூப்பிட்டே என்னைக் கரைங்க’எனப் பொருமியபடி, ‘முறைச்சாலும் எப்டி இவருக்கு மட்டும் கன்னத்துல குழி விழுகுதோ..?!அதுல விழுந்து தான் மாட்டிகிட்ட திவ்யா!’ சத்தமாக முனகிக் கொண்டவளைப் பார்த்து சிரிப்புடன் அவள் கன்னம் கிள்ளியவன்,
‘தனா,அதுல என்ன எழுதி இருக்குன்னு படிச்சுப் பாரேன்பா’எனவும், பிரேஸ் லெட்டின் மேல் வளைவுகளில் எழுதிருந்ததை படித்தாள் திவ்யா.
‘தேவந்தனம்..?’
‘ம்ம்,இந்த சக்கரை தான்..தேவாவின் நந்தனம்.அதான் தேவந்தனம்’ கன்னம் குழிய அழகாய் புன்னகைத்தான் தேவராஜ்.
நினைவலைகளை சுமந்தவளின் மூடிருந்த விழிகளுக்குள் புன்னகையுடன் தோன்றியது தேவாவின் விம்பம்.மெதுவாக விழி திறந்தவள் ப்ரேஸ்லேட்டை வருடினாள்.
அதன் மேல் பகுதி இரண்டாக பிரிந்து ஒற்றைப் பக்கம் ‘தேவந்தனம்’ என எழுதி இருக்க மற்றைய பகுதி சிறிய இதயத்துடன் அவ்வெழுத்தை தொட்டு நின்றது.மெலிதாக இருந்த அதன் உள் பகுதியில் ‘ஐ வில் ஆல் வேய்ஸ் லவ் யூ’ என சிறிதாக எழுதிருந்தது.
“யூ ஆர் தெ லையர் தேவா” வெறுப்பாக கூறியவள்,பிரேஸ் லேட்டை தூக்கி போட்டு கபோர்ட்டை சாத்தினாள்.
மனதின் வெம்மையை தீர்க்க தலைக்கு குளித்து விட்டு வெளியில் வந்தவள் சமையலறை சென்று காபிக்கான வேலையை மேற்கொண்டாள்.கைகள் தம் பொறுப்பை எடுத்துக் கொள்ள கண்களோ வெளியில் சிந்தும் சிதர்களை அடிக்கடி தொட்டு மீண்டன.
தயாரான காபியை கைகளில் எடுத்துக் கொண்டவள்,ஒரு சிப் பருகி விட்டு கப்பின் விளிம்பை வருடியவாரு யோசனையில் ஆழ்ந்தாள்.நேற்று மகள் கேட்ட கேள்விகள் அனைத்தும் இன்னும் அவளை சுழற்றி அடிக்க தளர்ந்து தவிக்கத் தொடங்கினாள் திவ்யா.
“திவி”
“திவிம்மா”சீதாவின் இரு அழைப்புக்களும் அவளை அசைக்காமல் இருக்க,தோளைத் தொட்டரவரை உணர்ந்து அலைப்புறுதலுடன் அவரை ஏறிட்டாள் திவ்யா.
அவள் கண்களில் இருந்த அலைப்புறுதலைப் பார்த்தவருக்கு மனம் கசிய வாஞ்சையாய் அவள் தலை வருடினார்.
ஒற்றைக் கையால் சீதா கைகளை பற்றியவள்,”பேசணும் மா!”என்றாள் கமறிய குரலில்.
‘மா’ எனும் திவ்யாவின் அழைப்பு,அவள் தாயை தேடுவதாய் இருக்கும்.இரு குழந்தைகளின் தாயானவள் இப்போது குழந்தையாய் மாற,“பேசலாம் திவிமா!”என்றார் கனிவுடன் சீதா.
தனக்கும் ஒரு காபி எடுத்துக் கொண்டவர்,அவளை அழைத்து வந்து சோஃபாவில் அமர வைத்தார்.அவள் தலையில் சுற்றியிருந்த டவலைக் கழட்டி மென்மையாக துவட்டி விட்டவர் ஆதரவாக திவ்யாவை மடி சாய்த்து தலை கோதிக் கொடுத்தார்.
அவளே ஆரம்பிக்கட்டும் எனக் காத்திருந்தார் சீதா.
கரகரத்த குரல் மெலிதாக வர பேசத் தொடங்கினாள் திவ்யா.
“தனு நேத்து தேவா ஃபோட்டோ பார்த்து..என் அப்பாவா இதுன்னு என்கிட்ட கேட்டழுதா மா!”சீதா முகம் பார்க்காது அவள் கூற,
அவளைத் திருப்பி தன் முகம் பார்க்கச் செய்தார் சீதா.சட்டென நீர் நிறைந்தது அவள் விழிகளில்.
“நீ..நீங்க என்னைத் திட்டுறதுன்னா கூட திட்டுங்கத்தை.ஆனா தேவா ஃபோட்டோவ மட்டும் வீசச் சொல்லிடாதீங்க”அவள் சொல்லியதில் புன்னகை அரும்ப,‘இவள் அன்புக்கு கொடுத்து வைக்காதவன் என் மகன்’என விரக்தியாக நினைத்துக் கொண்டார் சீதா.
“என் தப்பு தான்.மறந்து போய் அங்கயே அந்த ஃபோட்டோவ வெச்சது.ஆனா தனு பார்ப்பான்னே நினைக்கலத்தை. நிறைய அழுதா.அவ அழுகையை நிறுத்த முடியாத நிலைல இருக்கேன்! நிறைய கேள்வி கேட்டா..அதுக்கு பதில் தெரிஞ்சும் பேசாம இருக்கேன் த்த! அவக்கிட்ட என்ன சொல்வேன் அத்தை..?தேவ்..தேவா பத்தி உண்மையை சொல்லிடவா?”என்றாள் தவிப்பும் குழப்பமுமாக கன்னத்தில் கண்ணீர் வழிய.
மருமகளின் கண்ணீரில் இன்னும் இன்னும் தேவாவின் மேல் வெறுப்பு அதிகமானது சீதாவுக்கு.இன்று நேற்றா அவனை நினைத்து அழுகிறாள் இவள்.ஐந்து வருடங்களுக்கு மேலாகவல்லவா இத்தனை துயரங்களை அனுபவிக்கிறாள். தேவராஜ் என்ற ஒருவனால் அவள்பட்ட அவமானங்கள் தான் எத்தனை எத்தனை?சீதா மனம் முழுவதும் மகன் மீது ஆற்றாமையும்,கோபமும் எழ அதை வார்த்தைகளில் அவளிடம் காட்டினார்.
“நீ எதுக்கு திவி இப்போ அழற?உன் நேசத்துக்கு தகுதியானவா அவன்?சொல்லு?நம்மல விட்டுப் போனவனை நாம ஏன் நினைக்கனும் திவி!எதுக்கு அவனைப் பத்தி சொல்லப் போற?இல்லை,என்னனு சொல்லப் போற திவி?” என்றவருக்கு அதற்கு மேல் கோபமெல்லாம் போய் விட பேசமுடியாமல் தொண்டை அடைத்தது.
என்ன தான் தேவராஜ் மேல் கோபமாக இருந்தாலும் அவனின் தாயல்லவா! திவ்யாவைக் காட்டிலும் சற்றும் குறையாத வலி அவரிடமும்.எழுந்து மாமியாரைத் தோளோடு அணைத்துக் கொண்டாள் திவ்யா.
“ஆனா,தனுவும்,அத்துவும் அவங்க அப்பாவ பத்தி தெரிஞ்சுக்கிறது அவங்க உரிமை இல்லையா அத்தை அது!அவங்க உரிமையை நாம எப்டி அத்தை பறிக்கலாம்,மறைக்கலாம்?”வெறுமையாக கேட்டவள்,
“தேவா பத்தி உண்மை தெரிஞ்சா அவங்களும்,அவங்க அப்பாவ..என் தேவாவ வெறுத்துடுவாங்களா த்தை!”என்றாள் பரிதவித்தவளாய்.
சீதாவின் கண்ணோரம் கண்ணீர் துளிர்த்தது.திவ்யாவிற்கு காட்டாமல் கண் சிமிட்டிக் கொண்டவர்,
“பிள்ளைகளுக்கு பெத்தவங்க எப்பவுமே நல்ல முன்னுதாரணமா இருக்கனும் திவ்யா.அந்தத் தகுதி தேவாக்கு இருக்கா, சொல்லுமா? தன் அப்பா இப்படி செஞ்சிட்டான்னு அந்தப் பசங்களுக்கு தெரிஞ்சா..நம்ம தன்யா,அத்து மனநிலை அப்படியே மாறிடாது!நாளைக்கு அவங்களும் தேவா மாதிரியானா?”என்றவரை முடிக்க விடாமல்,
“இல்ல அத்தை.என் பிள்ளைங்களுக்கு எப்பவுமே என் தேவா தப்பான அப்பாவா தெரியக் கூடாது” என்று இடை புகுந்து உறுதியுடன் கூறியவளுக்கு உள்ளே வலித்தது.‘ஏன் தேவா இப்படி செய்தீங்க?’ என உள் மனம் கதறியது.
திவ்யாவின் கைகளை தன் கைகளுக்குள் எடுத்து பொத்திக் கொண்ட சீதா அவளை ஆதூரமாய் நோக்கினார்.
“தெரிஞ்ச நிஜமா இருக்கறதுக்கு தெரியாத நிழலா இருந்துடலாம் திவி.அவனைப் பத்தி குழந்தைகளுக்கு தெரியாம இருக்கறதே நல்லதுமா”என்றார்.இதைச் சொல்வதற்கு ஒரு தாயாய் எத்தனை தவித்திருப்பார் சீதா.சொந்த மகனாக இருந்தும் சுயநலமாக இராமல் அவர் இத்தனை திடமாக இருப்பதற்கு எத்தனை வலியை உள்ளே அனுபவித்திருப்பார்.மாமியாரை உணர்ந்தவளாய் புன்னகைக்க முயன்றாள் திவ்யா.
அது முடியாமல் போக அவரைக் கவலையாக நோக்கியவளிடம்,
“த..தனுக்கிட்ட தேவா பத்தி என்ன சொன்ன திவி?”என்றார் நடுங்கிய குரலில்.
“எங்கிட்ட முதல்ல என்னன்னு சொல்லவே இல்ல அத்தை அவ.தூக்கம் வராம புரண்டுகிட்டே இருந்தா!என்னன்னு எவ்ளோ கேட்டுப் பார்த்துட்டேன்.அவ்ளோ அழுத்தமா இருந்தா”அவள் சொல்ல,
“தேவாவோட அந்த அழுத்த குணம் அவளுக்கிட்டையும் இருக்கா திவி?”என்று பதறினார் சீதா.
கண்கள் கலங்க ஆமென தலையசைத்தாள் திவ்யா.பயந்து போனார் அவர்.
“அழுதுட்டே இருந்தவ..நான் அதட்டவும் தேவா ஃபோட்டோவ எடுத்து என்கிட்ட நீட்டறா அத்தை.‘இது தான் என் அப்பாவா?ஏன் அவர் என்ன பார்க்க இவ்வளவு நாளா வரல’ன்னு அழுதுகிட்டே அத்தனை கேள்வி கேட்டா!என்னால பதில் சொல்ல முடியல அத்தை.நானும் அவ கூட சேர்ந்து அழுததுல ரொம்ப பயந்து போயிட்டா. ‘நீ சொல்ல வேணாம் மா.நான் இனிமே அப்பாவ பத்தி கேக்க மாட்டேன் அழாத.நம்ம கூட இல்லாத டாடி நமக்கு வேணாம்’னு சொல்றா அத்தை. மொத்தமா உடைஞ்சு போயிட்டேன் அத்தை. முடில,இதுக்கு மேல என்னால முடியும்னு தோணலத்தை”என்றழுதாள்.
பேசமுடியவில்லை சீதாவால்.அவள் முன் உடைந்து திவ்யாவை இன்னும் பலகீனமாக்கிவிடுவோமோ எனப் பயந்தார்.
“இந்த வயசுல அவ பக்குவத்தை நினைச்சு சந்தோசப்படறதா இல்ல அவ குழந்தை பருவம் என்னால போகுதேன்னு கவலைப் படறதா ஒன்னுமே புரியல அத்தை.நான் தேவா பத்தி சொல்லிடவா அத்தை”அவள் கேட்க,
“திவி”என அதட்டினார் அவர்.
“ம்மா”என்ற தனு குரலில்,அவர்கள் பேச்சு நின்று போக மளமளவென கண்களையும்,முகத்தையும் துடைத்துக் கொண்டாள் திவ்யா. தூக்கத்தோடு எழுந்து ஹால் வந்தாள் தன்யா.தாய் அருகில் வந்தவள் அவள் மடியில் ஏறி தாயைக் கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.
அப்போது தான் நேரத்தை பார்த்தாள் திவ்யா.காலை ஏழு மணியை நெருங்கிக் கொண்டிருக்க பள்ளி செல்ல எழும்பும் நேரமாகிருந்தது.அந்தப் பழக்கத்தில் எழுந்து வந்திருந்தாள் தன்யா.
தாயின் கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்த தன்யா, “வாசமா இருக்க ம்மா!”என்று கூறி தாயை வாசம் பிடித்தாள்.
மகளின் செய்கையில் சிரித்தாள் திவ்யா.
“அம்மாக்கு கிச்சு கிச்சு வருது தனு.எந்திரிடி”அவள் நெளிந்து கொண்டே சொல்ல,இன்னும் புதைந்து தலையை இங்கும் அங்கும் அசைத்து தாயிற்கு குறுகுறுப்பு மூட்டினாள் மகள்.
“தனு” சிரிப்புடன் திவ்யா சிணுங்க,பிள்ளை கிளுக்கி சிரித்தபடி மேலும் அவளுக்கு குறுகுறுப்பு மூட்ட இருவரையும் நெகிழ்வாகப் பார்த்துக் கொண்டிருந்தார் சீதா.
“ப்ரஷ் பண்ணு தனுக்ககுட்டி,பாட்டி பால் எடுத்துட்டு வரேன்” என சொல்லி பேத்தி தலையை வருடி விட்டு சமையலறை சென்றார்.
“எழுந்திரு தனு.ஃப்ரெஷ் ஆகிட்டு வரலாம்”திவ்யா மகளை எழுப்பியவள் அறை செல்ல,ஆதன் அமர்ந்த படி தூங்கிக் கொண்டிருந்தான்.தூக்கத்தில் ஒரு பக்கம் தலை சரிந்து விழ விழித்து பார்த்து விட்டு மீண்டும் தூக்கத்தை தொடர பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் அப்படி ஒரு சிரிப்பு.
“டேய் அத்து!”தனு கட்டிலில் குதித்தேறி அவனை உலுக்க,
“போ”என தூக்கக் கலக்கத்தில் தள்ளி விட்டான் அவன்.
“தனு,போடி போய் ஃப்ரெஷ் ஆகு!என் சமத்து குட்டியை விடு”என சொல்லி ஆதனை அணைத்துக் கொண்டாள் திவ்யா.
“ஹ்க்கும்”என்று நொடித்துக் கொண்டு சென்ற மகளைப் பார்த்து சிரித்த திவ்யா, தன் மடியில் தூக்கத்தை தொடர்ந்த மகன் சிகையை கோதினாள்.
தனுவுக்கு அப்பாவாக தேவாவின் முகம் தெரிந்து விட்டது.அது கூட தெரியாமல் இருக்கும் ஆதனுக்கு தெரிய வந்தால்?வளர வளர அப்பா பற்றிய புரிதல் அவனுக்கும் வருமல்லவா?போகும் பள்ளியில் அவனுடன் படிக்கும் பிள்ளைகளுக்கு தந்தை இருக்க அப்படி ஒரு உறவு தனக்கு இல்லை, எங்கே அவர் என கேட்க மாட்டான் என என்ன நிச்சயம்! தன்யாவை போல் கேள்வி கேட்டால் நான் என்ன சொல்ல?அவளை யோசனைகள் அலைக்கழிக்க தான் மட்டும் தான் என அவர்களுக்கு இன்று தெரியப்படுத்திட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லையே!நாம் புரிய வைக்க சொல்ல,அது சிறிது பிசகினாலும் அர்த்தம் மாறிவிடும்.நாம் ஒன்று சொல்லப் போய் பிள்ளைகள் அதற்கு வேறு மாதிரி அர்த்தம் கொண்டால்?எப்போதுமே வளரும் பிள்ளைகளிடம் ஏதாவது ஒன்றை பேசும் போது அதை அதிக கவனத்தில் கொள்ள வேண்டும் பெரியவர்கள். நிறைய பேர் இந்த இடத்தில் தான் சருக்குகிறார்கள்.சின்ன பிள்ளைகள் தானே என எதையும் உளறி வைக்க முடியுமா என்ன?அதிகமாக அவதானம் கொண்டவர்களே அவர்கள் தான் இல்லையா? பக்குவமாக கையாள வேண்டிய ஒன்றை திவ்யா எப்படி சமாளிப்பாள்?
அன்று பாடசாலைக்கு பிள்ளைகள் இருவரையும் லீவ் போட சொல்லி விட்டாள் திவ்யா.
ஏன் என கேட்ட பிள்ளைகளிடம் இன்று, தான் அவர்களுடன் இருப்பதாகக் கூறினாள்.வெளியில் சென்று வருவோம் என்றாள் மாமியாரிடம்.
“ஸ்கூல் லீவ் போடக் கூடாது.அது பேட் ஹேப்பிட்னு சொல்வியே மா?இப்போ லீவ் போட சொல்ற?”ஆதன் கேள்வி கேட்க,அவனுக்கு பதில் சொல்லியே அலுத்துப் போன திவ்யா, அழுகாத குறை தான்.
“உனக்கு வேணும்னா நீ போடா அத்து!நானும் அம்மாவும் இன்னைக்கு என்ஜாய் செய்வோம்”என வெறுப்பேற்றிய தமக்கையின் பேச்சில் தான் அவன் கேள்விகள் அடங்கியது.
இவர்கள் மூவரையும் பார்த்திருந்த சீதா,உள்ளே கணவரின் சத்தம் கேட்க அவர்கள் அறைக்குள் நுழைந்து கொண்டார்.
“இப்படி வந்து உக்காரு சீதா”என்றழைத்தார் ராமலிங்கம்.
“நீங்க எப்போ எழுந்தீங்க?என்னைய ஏன் கூப்பிடல?ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”கேள்விகளை அடிக்கியபடி சீதா அவர் அருகில் அமர,மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
“காலைல நீயும், திவியும் பேசிட்டிருக்கும் போதே எழுந்து வந்துட்டேன்!ஆனா உங்களை தொந்தர செய்ய வேணாம்னு உள்ள வந்து படுத்துக்கிட்டேன்!எனக்கு நம்ம பொண்ணு படற கஷ்டத்தை பார்க்க முடியலப்பா.நம்ம மகனை நம்பி வந்தவ,நீ சொல்ற மாதிரி அவளை இப்படியே விட்டு வைக்க முடியாது சீதா. அவளுக்கும், குழந்தைகளுக்கும் ஒரு துணை தேவை. நீ சொல்லு சீதா.என்ன செய்யலாம்?நம்ம ஊர்ல தெரிஞ்சவங்க கிட்ட பேசிப் பார்க்கலாமா?”லிங்கம் கேட்க,வருத்தத்தை காட்டிய சீதா முகம்,அவர் இறுதியாக சொன்னதில் மெல்ல கோபத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.
“யார்ங்க ஊர்ல நம்மளை மதிப்பாங்க?.நம்ம பையன் செஞ்சு வெச்ச காரியத்துக்கு யார் மாதிப்பாங்க.?எல்லாம் அந்த ஆனந்தி பொண்ணால வந்தது.பொண்ணா அவ,பிசாசு.!எவ்ளோ அன்போட இருந்தவங்க நம்ம பசங்க. தேவா,திவி ரெண்டு பேருக்கு இடைல வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டாளே. அவளுக்கெல்லாம் நல்ல சாவே..”
“சீதா”மனைவியை பேச விடாமல் அதட்டினார் லிங்கம்.
கலங்கினார் சீதா.
“நம்ம திவியை பார்த்தீங்க தானே இன்னைக்கு.அவ பசங்க கிட்ட என்ன சொல்லறதுன்னு தெரியாம தவிக்கிறா?எல்லாம் இந்த தேவால தானே.?அவன் ஒரு கோழைங்க!நம்ம மகன் ஒரு கோழை”அழுதவரை தோள் சாய்த்துக் கொண்டார் லிங்கம்.
“அழாதப்பா.எல்லாம் அந்த கடவுளுக்கு தெரியும்”மனைவியை சமாதானம் செய்தவர் இம்முறை திவ்யாவின் மறுமணத்திற்கு நல்ல துணையை தேடும் முயற்சியில் தானே இறங்கயிருந்தார்.மனைவிக்கு தெரியாமல் சென்னையில் அவருக்கு தெரிந்த பக்கத்தில் சொல்லி மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென நினைத்துக் கொண்டார்.
வெளியில் காலிங் பெல் சத்தம் கேட்க,
“அத்தை நீங்க கொஞ்சம் யார்னு பாக்கறீங்களா?நான் காலைக்கு என்ன சமைக்கலாம்னு பார்த்திட்டிருக்கேன்” எனக் குரல் கொடுத்தாள் திவ்யா.
அழுத முகத்தை துடைத்து கொண்டார் சீதா.“சரி திவி!”என்றவர்,“நான் போய் பார்த்துட்டு உங்களுக்கு அப்படியே காபி எடுத்துட்டு வரேங்க”அறையை விட்டு வெளியில் வந்து வாசல் கதவை திறக்க சாப்பாட்டுப் பாத்திரத்தை ஏந்தியவாறு புன்னகையுடன் நின்றிருந்தான் ரிஷி.
“காலை வணக்கம் டார்ஜு”அவன் சொல்ல,ரிஷியின் புன்னகை சீதாவையும் தொற்றிக் கொண்டது.
முகம் மலர்ந்து போனவராய்,“உள்ள வாப்பா ரிஷி”என்றழைத்தார்.
“இல்ல டார்ஜிலிங் வேலைக்கு டைமாச்சு!இந்தாங்க வெண்பொங்கல் உங்களுக்கு தான்”என நீட்டியவன் தலையை உள்ளே விட்டு,“அந்த சில்வண்டு இல்லல்ல?” என ஆதனைப் பற்றிக் கேட்டான் அத்தனை எச்சரிக்கையாக.
வாய்விட்டு சிரித்தார் சீதா.
“உள்ள தான் இருக்கான்பா ரிஷி.ஆனா பாரு நீ யாருக்கெல்லாம் பயப்பட வேண்டியதா இருக்குன்னு”
“எதே!!உங்க பேரன் உள்ள இருக்கானா?அவன்ட்ட பொங்கல் தந்து விட்டேன்னு சொல்லிடாதீங்க. அப்பறம் என்கிட்ட பொங்கிட்டு வருவான். ச்சேஹ்!டேய் ரிஷி உன் நிலமை இப்படி ஆகிப் போச்சே.!”எனப் புலம்ப,புன்னகை வாடவில்லை சீதா முகத்தில்.
அந்நேரம் அங்கு வந்த திவ்யாவை பார்த்தவன்,“ஹாய் சீனியர்”என அவளுக்கொரு வணக்கத்தை வைத்தான்.
சுவரில் மாட்டிருந்த கடிகாரத்தை பார்த்து விட்டு,ரிஷியிடம் திரும்பியவள்,
“இப்பவே ஆபீஸ்க்கு லேட்டாச்சே ரிஷி!இங்க என்ன அத்தை கூட அரட்டை. அப்பறம் எப்போ கிளம்ப”கறார் சீனியராய் திவ்யா சொல்ல,
“இருந்தாலும் நீங்க இப்படி சின்சியரா இருக்க கூடாது சீனியர்”என பொருமியவன்,
“போன வாரம் புலாவ் தந்துவிட்டீங்கல்ல..?உங்க கிட்ட வெறும் பாத்திரமா தரக்கூடாதுன்னு வெண்பொங்கல் செஞ்சி தந்தது குத்தமா போச்சு!உங்க மருமகளை அடிக்கடி மாமியார் கொடுமை செஞ்சிக்கோங்க டார்ஜிலிங்!”என்றான் சீதாவிடம்.
முறைத்த திவ்யாவைக் கண்டு கொள்ளாமல்,”எல்லாருக்கும் சேர்த்து தான் செஞ்சிருக்கேன் டார்ஜூ!சோ நீங்க காலை சாப்பாடு செய்ய வேணாம்”என்றவன் அவனைப் பார்த்து சிரித்தபடி அங்கு வந்த லிங்கத்துக்கு காலை வணக்கத்தை வைத்து விட்டு நடையை கட்டி விட்டான்.
“இவனோட..!”திவ்யா சிரிப்புடன் முனகிக் கொண்டு அவன் தந்துவிட்ட பொங்களோடு சமையலறைக்குள் நுழைந்து கொள்ள,
புன்னகையுடன் கணவன் புறம் திரும்பிய சீதா,“ரிஷி கொஞ்சம் திவ்யாவை விட வயசுல பெரிய பையனா பொறந்திருக்கலாம்-ங்க நம்ம திவ்யாக்கு கேட்டிருக்கலாம்!”என்றார் வருத்தமாக.
“ப்ச்,என்ன பேசற சீதா.திவ்யாக்கு கேட்டுருப்போகுது”என மெல்லிய குரலில் அதட்டினார் லிங்கம்.
error: Content is protected !!