Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காற்று சொன்னது காதலானது

காற்று சொன்னது… காதலானது… – 10

அத்தியாயம் – 10 :

 ரதிக்குக் கல்லூரியில் தெரிந்த முதல் ஆண் மகன் ப்ரித்வி தான்.

இருபாலரும் படிக்கும் பள்ளியில் தான் படித்திருந்தாள். ஆனாலும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி வகுப்புகள் இருந்த பள்ளி என்பதாலும், ரதி அதிகம் யாரிடமும் பேசுபவள் இல்லை என்பதாலும், பள்ளியில் ஆண் நண்பர்கள் என யாரும் இல்லை.



Advertisement

தானாக ஃபோன் செய்து பேசி, நான்கு மணி நேரம் அவசிய வேலையாய் தான் என்றாலும், ஒன்றாகச் சுற்றி, ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டு, செல்லும் போது அவள் கேட்காமலேயே ஒரு ஐஸ்-க்ரீம் வாங்கி அனுப்பி, என ப்ரித்வியுடன் செலவிட்ட நொடிகளிலேயே உழன்றுக்கொண்டிருந்தாள் ரதி.

ப்ரித்வியை நினைக்கையில் தானாக இதழ்கள் விரிந்து, உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பதை எல்லாம் உணர முடிந்தது.

கல்லூரி செல்கையில், எங்காவது அவன் தென்பட மாட்டானா, என்று கண்கள் தேடியது. எங்காவது அவனைக் கண்டுவிட்டால், அவன் திரும்பிப் பார்க்காத வரை, கண்களாலேயே அவனைத் தொடர்வாள்.

Advertisement

ஒருவேளை, அவன் திரும்பிப் பார்த்துவிட்டால், ‘அவனைக் காணவே இல்லையே’ என்பது போல் திரும்பிக்கொள்வாள் தான். ஆனால், அதையும் மீறி, ப்ரித்வி சில நேரம் இவள் திரும்பிக்கொள்ளும் முன், இவளைக் கண்டுக்கொண்டு, புன்னகைப்பதுண்டு.

Advertisement

இவள் அனுமதி இல்லாமலே, இதழ்களும், இதயமும் புன்னகைப் பூக்க கடந்தநாட்களில் எல்லாம் வானில் பறப்பது போல் தான் இருக்கும் ரதிக்கு.

ஒரே துறை தான். இவள் வகுப்பறைக்கு அருகில் தான் அவன் வகுப்பறையும். ஒரே வளாகத்தில் இருக்கும் விடுதிகளில் தான் இருந்தனர். அலைபேசி எண்ணும் கூடத்தான் இருந்தது.

ரதி நினைத்தால், அடிக்கடி அவனிடம் பேசலாம் தான். ஆனால், தவிர்த்தாள்.

Advertisement

ப்ரித்வியின் மீது அவளுக்கு ஈர்ப்பு இருப்பது அவளுக்கே தான் அப்பட்டமாகத் தெரிந்ததே. இதில் அவனுடன் பேசி, அதை வளர்ப்பானேன் என்று தான் அவளின் எண்ணம்.

கல்லூரியில் வண்ண-வண்ணமாய் காதல் பறவைகளைப் பார்ப்பதாலும், ஏதோ அன்று ப்ரித்வி இவளுடன் அக்கறையாய் பேசி, நல்லவிதமாக நடந்துக்கொண்டதாலும், அவன் மேல் வந்த ஈர்ப்பு என்று அவளே அவளுக்குச் சொல்லிக்கொண்டாள்.

அதை வளரவிட வேண்டாம் என நினைத்தாள் தான். ஆனால், அவனைக் கண்டாலோ, அவனைப் பற்றி யாரும் பேசுவதைக் கேட்க நேர்ந்தாலோ, இல்லை, பட்டர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிட்டாலோ, மனம் தானாக அவன்பால் சாய்வதை முயற்சி செய்தும் தடுக்க முடியவில்லை.

‘எதுக்குத் தடுக்கணும். இது ஒரு மாதிரி ஜாலியா தான இருக்கு. என்ஜாய் பண்ணுவோம்’ என்று அந்த உணர்வைப் புறந்தள்ள முயற்சிக்காமல், அனுபவிக்கத் தொடங்கினாள்.

ஏதோ பதின்பருவத்தின் முடிவில் துளிர்த்த ஈர்ப்பு தானே. அதற்கு எப்படியும் ஆயுள் குறைவு தான். அதை நினைத்துக் குழம்பாமல், ப்ரித்விக்கு அவள் ஈர்ப்பு புரிவது போல் எதையும் செய்து, அவனையும் குழப்பாமல், படிப்பிலே அவளின் கவனம்.

எப்போதும், நன்றாகவே படிக்கும் பெண் தான் ரதி. ஆனால், இப்போதோ, ப்ரித்வி போல் கல்லூரியில் பெயர் வாங்க வேண்டும் என்ற ஆசை வேறு வந்தது அவளுக்கு.

 முதல் செமெஸ்டரில் ‘C ப்ரோக்ராமிங்’ எடுக்க வந்த பேராசிரியர் வேறு, “ப்ரோக்ராமிங் எல்லாம் புரிஞ்சு பண்ணனும். சும்மா, படிச்சோமா, மார்க் எடுத்தோமான்னு இல்லாம, அதை ஈடுபாட்டோட பண்ணனும். க்ளாஸ்ல சொல்லிக்குடுக்கறது இல்லாம, நீங்களே நிறைய கத்துக்கணும். நெட்ல இல்லாததா!.

உங்க சீனியர் பேட்ச்ல ப்ரித்வின்னு ஒரு பையன். ஃபைனல் இயர்ல இருக்குறவங்களுக்குச் சமமா கோடிங் பண்ணுவான். வெளிகாலேஜ்ல நடக்குற கோடிங் போட்டிகள்ல எல்லாம் கலந்து, நிறைய ஜெயிச்சிருக்கான். இன்ட்ரெஸ்ட் எடுத்துப் படிச்சா, நீங்களும் அவனை மாதிரி வரலாம்” என்று வேறு சொல்லி வைக்க, ‘நானும் ப்ரித்வி மாதிரி கோடிங் கத்துப்பேன்’ என்று அவனை முன்னோடியாக எடுத்துக்கொண்டாள் ரதி.

“இவ்ளோ படிப்ஸா இருந்தா எப்டி? அதான் ப்ரித்விக்கு கேர்ள்-ஃப்ரெண்ட் இல்ல போல” என்று ரதியின் வகுப்புப் பெண்கள் அவனைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருக்க, “அப்டியே இருக்கட்டும். அப்போ தான உங்களுக்கு இன்னொருத்தி பாய்-ஃப்ரெண்ட்டை பாக்கறேன்னு குற்றவுணர்வு இருக்காது” என்றாள் ரதி அவர்களிடம்.

“ச்ச ச்ச. ஆள் இருந்தாலும், நாங்க சைட் அடிப்போம். அது எங்க உரிமை” என்று ஒருத்தி சொல்ல, “ரைட்டு. நீங்க நடத்துங்க..” என்றாள் ரதி.

அன்றிரவு, ‘ப்ரித்வி ரொம்ப படிப்ஸோ. வாழ்க்கை கம்ப்யூட்டர் சயின்ஸ் பேசியே போய்டுமோ… இந்தப் பொண்ணுங்க வேற இஷ்டத்துக்கு சைட் அடிக்கறாங்களே. காலம் முழுக்க பொத்திப் பொத்தியா பாத்துக்க முடியும். எனக்கு வேற இந்தப் பொண்ணுங்க சைட் அடிக்கறதுல பிபி ஏறுதே. கல்யாணம் பண்ணா ரொம்ப கஷ்டம் தானோ…’ என்று ஏதேதோ அவள் யோசித்துக்கொண்டிருக்க, ‘அதை அவரைக் கல்யாணம் பண்ணிக்க போறவங்க யோசிக்கணும். நீயே, ஓரமா நின்னு சைட் அடிக்கற கேசு. இதுல மத்தவங்க பாக்குறது உனக்கு பிபி ஏறுதா…?’ என்று அவள் மனசாட்சி சிரித்தது.

அவனிடம், முதல் முறையாகப் பேசி, இரண்டு வாரங்கள் கடந்திருந்த நிலையில், அன்று அவனைப் பற்றியே அனைவரும் பேசியதாலோ என்னவோ, அவனிடம் பேசும் ஆவல் மேலிட்டது.

இரவு மணி ஒன்பதிற்கு ப்ரித்வியின் திரையில் மின்னியது, ரதியின், ‘ஹலோ’ என்ற குறுஞ்செய்தி.

ரதி அளவிற்கெல்லாம் ப்ரித்வி அவள் நினைவிலேயே உழலவில்லை தான். ஆனால், அவளிடமிருந்து வந்த குறுஞ்செய்தியைக் கண்டதும் உள்ளுக்குள் பரவசம்.

“சொல்லு ரதி…” என்று அடுத்த நொடியே அவனிடமிருந்து பதில் வர, ‘ஐயையோ… என்ன பேசணும்ன்னே யோசிக்கலையே. இவங்க வேற இப்டி உடனே ஆன்லைன் வந்துட்டாங்களே…’ என்று ரதி இங்கே படபடத்தாள்.

ரதி குறுஞ்செய்தியைப் பார்த்து விட்டதாக, இரண்டு நீல நிறக் குறியீடுகள் காட்டிக்கொடுத்தன. ஆனால், பதில் வராமலிருக்க, “என்ன ரதி? ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க, “அதெல்லாம் எதுவுமில்ல” என்றாள் விரைந்து.

“அப்புறம் என்ன?” என்று அவன் கேட்க, “சும்மா தான். பேசலாம்ன்னு. ஏன் பேசக் கூடாதா?” என்று அவள் கேட்க, அவள் படபடக்கும் விழிகள் அவனுக்குள் வந்து போனது.

“ஏன் கூடாது. ரதி பேசலாமே…” என்று அவன் சொல்ல, இருவருமே பற்கள் தெரிய சிரித்துக்கொண்டனர்.

‘ஐயோ. சிரிக்காத ரதி. இந்தப் பையன் பேச்சுல விழாத ரதி. சும்மாவே அவனைப் பாத்தா உனக்குப் பட்டாம்பூச்சி பறக்குது…’ என்று ரதி எச்சரித்ததை எல்லாம் அவள் மனம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

இவளுக்குத் தான் இத்தனை படபடப்பு. அந்த ப்ரித்வியோ, அவன் வழக்கத்தை விட, அதிகமாக இளிக்கிறோம் என்பதை எல்லாம் உணரவே இல்லை.

 “இன்னைக்கு க்ளாஸ்ல சார் உங்கள பத்தி ரொம்ப பெருமையா சொன்னாங்க. நீங்க கோடிங் எல்லாம் ரொம்ப நல்லா பண்ணுவீங்கன்னு” என்று ரதி தொடங்க, “சரி…..” என்று இழுத்தான் ப்ரித்வி. 

“எனக்கும் கத்துக்கணும். நீங்க கைட் பண்ணுவீங்களா?” என்று கேட்க, “பண்ணலாமே. எங்க ஊர் பொண்ணா வேற போய்ட்ட” என்று ப்ரித்வி சொல்ல சிரித்துக்கொண்டாள். 

“அப்போ. நாளைக்கு உங்கள நான் பார்க்கலாமா?” என்று அவனைப் பார்க்கும் ஆசையில் கேட்டுவிட்டு, அதன் பின் தனக்கு அடங்காது கேட்டுவிட்ட விரல்களை எண்ணி நாக்கைக் கடித்துக்கொண்டாள். 

“ஹான். பார்ப்போமே. ஈவ்னிங் லைப்ரரில பார்ப்போம்” என்று அவன் சொல்ல, “சரி” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். 

‘அடிக்கடி பார்த்து… பேசி… ஈர்ப்பை வளரவிடக் கூடாதுன்னு அம்மணி எடுத்த முடிவு என்னாச்சு’ என்று அவளது மனசாட்சி கேள்வி கேட்க, ‘இதெல்லாம் நான் படிப்புக்காக தான் மீட் பண்ண போறேன். இதெல்லாம் கணக்குல வராது’ என்று அதனிடம் சொல்லிச் சமாளித்தாள். 

அடுத்த நாள் மாலை எப்போதடா வரும் என்று காத்திருப்புடனே படுக்கைக்குச் சென்றாள். 

அடுத்த நாள் மாலை அவளுக்கு முன்னேயே அவன் நூலகத்தில் அமர்ந்திருந்தான். 

நூலகத்தின் ஒரு பக்கத்தில் புத்தகங்களுக்கான இடம் இருக்க, ஒரு தடுப்புச் சுவருக்குப் பின், மேசைகளும் நாற்காலிகளும் நேர்த்தியாக அடுக்கப்பட்டு மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு ஏதுவாக இடம் இருந்தது. 

சிலர் படிப்பதற்கும், குளிரூட்டப்பட்ட அறை என்பதால் சிலர் பொழுதுபோக்கவும், சில காதல் ஜோடிகள் யாருக்கும் கேட்காத கிசுகிசுப்புக் குரலில் ரகசியம் பேசவும் என பல விதமாக உபயோகப்பட்டுக்கொண்டிருந்தது அந்த நூலகத்திற்குள் இருந்த அறை. 

ரதி அறைக்குள் நுழையும் போதே, அந்த அறையின் ஒரு மூலையில் மடிக்கணினிக்கு சார்ஜ் போட்ட வண்ணம் அமர்ந்திருந்தான் ப்ரித்வி. 

அந்த அறையின் வாயிலில் நின்றுக்கொண்டே, இரண்டு நிமிடம் அவனை இடையூறு இல்லாமல் பார்த்துக்கொண்டாள். 

அது என்னவோ, அவன் பேசும்போதோ, இல்லை அவன் இவளைப் பார்த்துவிட்டாலோ, ரதியால் அவனை நேர்கொண்டு பார்க்க முடிவதில்லை. 

இந்த உணர்வுகள் எல்லாம் சிறுபிள்ளைத்  தனமாகத் தெரிந்தாலும், ரசித்தாள். 

மடிக்கணினியிலிருந்து தலையை உயர்த்தியவன், விழிகளில் ரதி விழ, தான் இருக்குமிடம் தெரியாமல் வாயிலிலேயே நிற்கிறாள் என்று நினைத்துக்கொண்டவன், ‘இங்க இருக்கேன்’ என்பது போல அவளுக்குக் கையசைத்தான்.

‘எனக்குத் தெரியாதா… நீ எங்க இருக்கன்னு’ என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டு, அவன் அமர்ந்திருக்கும் இடத்திற்குச் சென்றாள்.

அவன் அமர்ந்திருந்த நாற்காலிக்கு அடுத்த நாற்காலியில் அமர்ந்தாள். நூலகம் என்பதால், ஒரு நாற்காலிக்கும் அடுத்த நாற்காலிக்கும் ஒரு கணிசமான இடைவேளை இருந்தது.

“பக்கத்துல வந்து உக்காரு” என்று ப்ரித்வி ஹஸ்கி வாய்ஸில் பேச, விழித்தாள் ரதி.

“ச்சேரை என்கிட்ட போட்டு உக்காரு” என்றான் அதே குரலில்.

ரதி அசையாமல் அமர்ந்திருக்க, “ப்ச். கிட்ட வா…” என்றான் மீண்டும்.

“இல்ல…. இங்கேயே…. “ என்று வார்த்தைகளை விழுங்கி, கண்களை விழித்து விழித்துப் பார்க்க, அதில் சிரிப்பு வந்துவிட்டது ப்ரித்விக்கு.

“அட… லைப்ரரில நீ இப்டி தூரமா உக்காந்தா சத்தமா பேசணும். மத்தவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகும். நீ கிட்ட வந்து உக்காந்தா சத்தமில்லாம பேசலாம்ன்னு கிட்ட வரச் சொன்னேன்” என்று அவன் விளக்க, “ஏன் லைப்ரரில உக்காந்து பேசணும்?” என்றாள் ரதி.

“முதல்ல கிட்ட வா. அப்புறம் சொல்றேன்” என்று அவன் மீண்டும் சொல்லவும், அவள் இருக்கையை விட்டு எழுந்துவிட, அவனே அவள் இருக்கையைச் சத்தமில்லாமல் அவனருகில் இழுத்துப் போட்டான்.

“ம்ம். இப்போ உக்காரு” எனவும் அமர்ந்துக்கொண்டாள்.

“என் லேப்டாப்க்கு சார்ஜ் போடணும். லைப்ரரி இல்லன்னா வேற ஏதாவது காலி க்ளாஸ்ரூம்ல உக்காரலாம். ஆனா, யாராவது பார்த்தா, ‘ப்ரித்வியும் ரதியும் யாரும் இல்லாத க்ளாஸ்ரூம்ல தனியா உக்காந்துட்டு இருந்தாங்க’ன்னு தான சொல்லுவாங்க. அதுக்கு இதுவே பரவாயில்ல” என்று சொல்லிவிட்டு, அவள் வேறெதுவும் பேசும்முன், “இப்போ இங்க பாரு…” என்று அவனுடைய மடிக்கணினியைப் பார்க்க வைத்தான்.

அவளுக்குப் பயன்படக் கூடிய வலைத்தளங்கள், யூட்யூப் சேனல்கள், கோடிங் போட்டிகள் நடத்தும் வலைத்தளங்கள், இவனுடைய குறிப்புகள் சிலவென, ஒரு மணி நேரம் அவளிடம் பேசிக்கொண்டிருந்தான்.

அந்தச் சந்திப்பிற்குப் பிறகு, இப்படியான சந்திப்புகள் அவர்களுக்குள் அடிக்கடி நிகழ்ந்து.

பேச்சு பல நேரம் கோடிங், படிப்பு சுற்றியே தான் இருக்கும். கல்லூரி, விடுதி, திரைப்படங்கள், விளையாட்டு என்று பொதுவான பேச்சும் சில நேரம் உண்டு.

நடுநடுவே ரதியின் கவனம் அவன் மீது தான் என்றாலும், அவன் சொன்னவற்றிலும் கொஞ்சம் கவனம் பதிக்கத்தான் செய்தாள்.

அதன்பின், அவனிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதற்காகவே, வெகு சிரத்தையுடன் கோடிங் கற்றுக்கொண்டாள். விடாமல், பயிற்சி செய்தாள்.

அவ்வப்போது, ‘சந்தேகம்’ எனக் காரணம் சொல்லி, அவனை நேரில் சந்தித்தாள்.

என்னவோ, அவனுக்குப் பிடித்ததைச் செய்ய இவளுக்குமே ஆர்வம் மிகுதியாய் இருக்க, ஆர்வத்துடனே படித்தாள். கற்றுக்கொண்டாள்.

முதலாமாண்டின் முடிவில்  அவள் ஓரளவுக்குக் கற்றுத் தேர்ந்த பின், 

வாரம் அல்லது  மாதம் ஒருமுறை என கோடிங் போட்டிகள் வைக்கும் வலைத்தளங்களில் அவளை உறுப்பினராகச் சொல்லி, போட்டிகளில் கலந்துக்கொள்ள சொன்னான் ப்ரித்வி.

உலகம் முழுவதும் இருப்பவர்கள் கலந்துக்கொள்ளும் போட்டிகளாகவே அவை இருக்கும். அவன் சொன்னதையெல்லாம் தட்டாமல் செய்தாள்.

முதலில் போட்டிகளில் கேட்கப்படும் கேள்விகளில் சிலவற்றிற்கு மட்டுமே பதில்கள் கண்டறிய முடியும்படி இருந்தது.

‘எனக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுத முடியல. நாலு கேள்வில ரெண்டு தான் சால்வ் பண்ணேன். அதுக்குள்ள டைம் முடிஞ்சிடுச்சு’ என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு வந்து ரதி புலம்பவும், அவளைச் சமாதானம் செய்வது அவன் வேலையாகிப் போனது.

“யாருமே எடுத்ததும், எல்லா கேள்வியையும் சால்வ் பண்ண மாட்டாங்க. நீ விடாம ப்ராக்டிஸ் பண்ணா கண்டிப்பா முடியும்” என்று அவன் சொல்லச் சொல்ல அமைதியாய் நின்றாள்.

“ரதி… உன் பேட்ச்ல உன் அளவுக்கு நிச்சயமா யாருக்கும் கோடிங் தெரியாது. இப்போ தான செகெண்ட் இயர் படிக்கற. அடுத்த வருஷம் பாரேன். இப்போ எனக்குத் தெரியவர்றதை விட உனக்கு அப்போ அதிகமா தெரியும்” என்று அவனுக்கருகில் முகத்தைத் தொங்கப்போட்டு நின்றுக்கொண்டிருந்தவளின், முகத்திற்கு நேராக குனிந்துப் பேசினான்.

“அப்டியா? உங்கள விடவா?” என்று ஆர்வமாய் நிமிர்ந்துப் பார்க்க, “ஆமாம்….” என்றான் ப்ரித்வி.

“ரதி. நீ எவ்ளோ கன்ஸிஸ்டென்ட் தெரியுமா? லீட்கோட் வெப்சைட்ல உன்னோட ப்ராக்ரஸ் பார்த்தேன். நானே சால்வ் பண்ணாத சில கேள்விகளைக் கூட நீ சால்வ் பண்ணிட்ட. I am Really Proud of You. இந்த கான்டெஸ்ட்ல கேக்கற கேள்விக்கு எல்லாத்தையும் உன்னால நிச்சயம் சால்வ் பண்ண முடியும். அவங்க குடுக்கற நேரத்துக்குள்ள முடிக்க முடியல. அந்த ஸ்பீட் எல்லாம் நீ ப்ராக்டிஸ் பண்ணப் பண்ண வந்துடும்” என்று அவன் ஏதேதோ சொன்னாலும், அவள் மனம், அவன் சொன்ன, ‘Proud of You’விலே நின்றது.

அதுவே அவளுக்குப் போதுமான சமாதானமாக இருந்தது.

இத்தனை நேரம் சோகமாய் இருந்தவள், சிரிக்கவும் தான் ப்ரித்வி நிம்மதியாக உணர்ந்தான்.

கல்லூரியிலிருந்து, ஆண்கள் விடுதியும், பெண்கள் விடுதியும் எதிரெதிர் திசைகளில் இருந்தது.

ஆயினும், அன்று அவளுக்காக, பெண்கள் விடுதி வரை, அவளுடன் பேசிக்கொண்டே நடந்து, அவளை விடுதியின் வாசலில் விட்டுவிட்டு வந்தான்.

ப்ரித்வியையும், ரதியையும் அடிக்கடி மற்ற மாணவர்கள் ஒன்றாகப் பார்ப்பதால், அவர்களை இணைத்துப் பேசுவதுண்டு.

அன்றும் அதே போல், அவர்களை ஒன்றாய் பார்த்த மாணவிகள் சிலர், அவர்களுக்காகப் பேசிக்கொண்டனர்.

“இந்த ப்ரித்வி பாரேன். ரதி கூட ஹாஸ்டல் வரைக்கும் நடந்து வந்து விட்டுட்டுப் போறாங்க” என்று ஒருவர் சொல்ல, “ம்ம்ம். வேற எந்தப் பொண்ணு கிட்டயும் ப்ரித்வி இப்டி அதிகமா பேசிப் பழகி எல்லாம் பாத்ததே இல்ல” என்று இன்னொருவர் சொல்ல, அதற்கு, “ரதி மட்டும் என்ன. அவளை வேற பையன் கூட இப்டி அதிகமா பேசிப் பார்த்திருக்கியா? நம்ப கேள்வி கேட்டாலே, அளந்து அளந்து பதில் சொல்ற பொண்ணு. ப்ரித்வி கூட அவ்ளோ நேரம் பேசறா” என்று பதில் வந்தது.

“ஆனாலும், ஜோடிப்பொருத்தம் நல்லா தான் இருக்கு” என்று ஒரு குரல் சொல்ல, அதற்கு மற்றவர்கள் ஆமோதிப்பாய் தலையசைத்தனர். “ஆனா, ரெண்டும் படிப்ஸ் கேஸ். இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி, கொழந்தைப் பொறந்தா என்ன ஆகும்… புள்ளைங்களுக்கு ‘Python, Java’ன்னு பேர் வைப்பாங்களா?” என்று ஒருத்தி சொல்ல, அந்தக் கூட்டத்தில் கலகலவெனச் சிரிப்பு.

இந்தப் பெண்கள் பேசுவது, அவர்களை விட்டு சற்றுத் தொலைவில் நின்றிருந்த ரித்விக் செவிகளிலும் விழுந்தது.

                                  ** ** ** ** ** **

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!