Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சுதர்சன சக்கரம்

சுதர்சன சக்கரம் – 6

ஜோதிடரின் பேச்சைக் கேட்டு அமலா கோபம் கொள்ளவில்லை. மாறாக, ‘இதற்கு தான் இங்கெல்லாம் வருவதில்லை.’ என்று மனதினுள் நினைத்தவர், தன் தாயைப் பார்த்து, “அம்மா! வாருங்கள் நாம் போகலாம்.” என்றார் அவசரமாக.

“கொஞ்சம் பொறுமையாக இரு அமலா.” என்று அவரிடம் கெஞ்சலாக சொல்லிவிட்டு, ஜோதிடரைப் பார்த்தவர், “ஐயா! இது என் பேத்தி ஜாதகம் தான். அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதற்கு தான் நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம். நீங்கள் இன்னொரு தடவை நன்றாக பார்த்துவிட்டு கூறுங்கள்.” என்றார் மனம் பொறுக்காதவராக.

அவர் சொல்படி திரும்பவும், புருவங்களை இடுக்கிக் கொண்டபடியே ஜாதகத்தை திரும்பவும் ஆராய்ந்தார்.

தன் எழுதுகோலால் ஏதேதோ குறிப்பு எழுத்திக்கொண்டு, ஏதேதோ கணக்குப் போட்டார். அவர் முகத்தில் அதிக குழப்பம் மண்டிக்கிடந்தது.



Advertisement

ஒரு கட்டத்தில் ஜாதக குறிப்பை மூடிவைத்தவர், “இந்த பெண்ணிற்கு திருமணமாகி விட்டது.” என்று திரும்பவும் முன்பு சொன்னதையே மொழிந்தார்.

அதில் கோபம் கொண்டு எழுந்த அமலா, எதுவும் பேசாமல் வெளியே சென்றார்.

ஆண்டாளும் சனாவின் ஜாதகத்தைப் பெற்றுக்கொண்டு அமலாவின் பின்னே வந்தார்.

Advertisement

“ஏன் அமலா இவ்வளவு கோபம் கொள்கின்றாய்?.” என்றார் அவரை சாந்தப்படுத்தும் நோக்கோடு.

Advertisement

“பின்ன என்னம்மா… அந்த ஆள் எப்படி பேசுறாருன்னு பாருங்க. சனாவின் ஜாதகத்தைப் பற்றி தெரியவில்லை என்றால், அதை வெளிப்படையாக கூறலாமே!. எதற்காக இப்படி பேச வேண்டும்?.” என்று பொரிந்து தள்ளியவர், “எனக்கு அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டது. நீங்கள் வண்டியில் ஏறுங்கள் உங்களை வீட்டில் விட்டு செல்கின்றேன்.” என்று கூறிக் கொண்டே, தன் மகிழுந்தில் ஏறினார்.

அமலா அங்கிருந்து வெளியேறி வந்ததும், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தன் அலுவலக வேலையைப் பற்றி திட்டமிட ஆரம்பித்தார்.

ஆனால் ஜோதிடர் கூறியதைக் கேட்டு ஆண்டாளின் முகம் வெகுவாக குழம்பிப் போய் இருந்தது.

Advertisement

சில வினாடிகள் கடந்ததும், தன் அன்னை மெளனமாக வருவதைப் பார்த்தவர், “என்னம்மா…. என்ன சிந்தனை செய்துகொண்டிருக்கின்றீர்கள்?. அந்த பிராட் சொன்னதை யோசித்துக்கொண்டிருக்கின்றீர்களா?.” என்று இப்போதும் முகத்தில் கோபம் குறையாமல் கேட்டார்.

மெதுவாக தன் தலையை ஆட்டிய ஆண்டாள், “எனக்கு மனது எதுவோ செய்கின்றது அமலா. இவர் இதுவரை தப்பாக ஒரு விஷயம் கூட கூறியதில்லை. அப்படி இருக்க…” என்றவர் வார்த்தைகள் உள்ளே சென்றது.

“அம்மா…” என்று அவரை கண்டிப்பாக பார்த்தவர், “நீங்கள் இதுபோல் பேசுவது, உங்கள் பேத்தியை நீங்களே சந்தேகப்படுவது போல் ஆகாதா?. எதுவோ ஒரு ஜோசியக்காரன் சொல்லியதற்கு, சுத்தமான தங்கத்தால் ஒளிரும் என் மகளை சந்தேகம் கொள்வதா?.” என்றதும், ஆண்டாள் பதறிவிட்டார்.

“என்ன வார்த்தைகளை மொழிந்துவிட்டாய் அமலா. நான் போய் என் சனா குட்டியின் மேல் சந்தேகம் கொள்வேனா!.” என்றார் ஆற்றாமையாக.

தொடர்ந்து பேசியவர், “நானே சனா குட்டிக்கு திருமணம் ஆகவில்லை என்ற கவலையில் இங்கே வந்தால், அவரோ திருமணம் ஆகிவிட்டது என்று சாதிக்கின்றாரே…” என்றார் வருத்தமாக.

“அம்மா! இதில் இருந்தே தெரியவில்லையா! இதெல்லாம் பித்தலாட்டம் என்று.” என சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வீடு வந்துவிட்டது.

*****************************

தன் மகள் மாலினியின் நிச்சயதார்த்தத்திற்கு தடபுடலாக ஏற்பாடுகளை தன் வீட்டில் செய்துகொண்டிருந்தார் ரவி.

அருணகிரி அது அனைத்தையும் பார்த்து கண்டும்காணாமல் இருந்து கொண்டார்.

‘மாலினி திருமணத்திற்கு முன்பே சனாவின் திருமணத்தை முடித்து விட வேண்டும்.’ என்று தன் மனதினுள் நினைத்துக் கொண்டார் அருணகிரி.

அங்கே வேலையாட்களை ஏவிக் கொண்டிருந்த உமாவின் முகத்தில் அவ்வளவு புன்னகை.

நேற்றில் இருந்தே முகத்தில் தோன்றிய தேஜசுடன் தான் வளம் வந்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் தான் எதையோ சாதித்துவிட்டதாக மகிழ்ச்சி தோன்றியது.

மாலினியின் அறைக்குள் சென்றவர், “மாலினி! இன்று இரவு விழாவிற்கு உடுத்தப்போகும் உடையை தேர்வு செய்துவிட்டாயா?.” என்று கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தார்.

அவளோ, நேற்று சனா எடுத்துக்கொடுத்த லெஹெங்காவை ஆசையாக வருடிக் கொண்டிருந்தவள், தன் தாய் அழைத்ததை கண்டுகொள்ளவில்லை.

அவளது பார்வை, அவள் கையில் வைத்திருக்கும் உடையில் நிலை கொண்டிருப்பதைப் பார்த்தவர், “ஆகா… எவ்வளவு அருமையான உடை. இதை நான் உன்னிடம் பார்த்ததே இல்லையே!.” என்றார் அதை வருடியபடியே.

அப்போது தான் தன் அன்னையைப் பார்த்தவள், “அழகாக இருக்கின்றது அல்லவா அம்மா!. அது தான் என் செலக்சன்.” என்று இல்லாத காலரை தூக்கிவிட்டாள்.

“ஆனால் விலை அதிகம் இருப்பதைப் போல உள்ளது மாலினி.” என்று அவர் கேட்க.

“ஆமாம் அம்மா! விலை ஏழரை லட்சம்.” என்றதும் உமாவின் மூச்சி அதிர்ச்சியில் ஒரு கணம் நின்றே போய் விட்டது.

பின் அதில் இருந்து மீண்டவர், “உன் தாத்தா நம் கண்ணில் பணத்தையே காட்டமாட்டேங்கிறார். நீ எப்படி இதை வாங்கினாய்?.” என்றார்.

வராத வெட்கத்தை வரவழைத்தவளாக, “இதை சக்ரா தான் எனக்கு வாங்கி தந்தார் அம்மா!.” என்று கூறியதும், அவரை கையில் பிடிக்க முடியவில்லை.

அவளை நெட்டி முறித்தவர், “நான் கும்பிடும் அந்த ஆண்டவன் என்னை கைவிடவில்லை. சக்ராவின் பற்றாத போக்கைப் பார்த்து நான் தான் கொஞ்சம் பயந்துபோய்விட்டேன். அதனால் தான் அவனை நெருங்கி உன்னை பழக சொன்னேன். இப்போது பார் அதற்கு பலன் கிடைத்துவிட்டது.” என்று சந்தோஷ மிகுதியில் ஏதேதோ உளற ஆரம்பித்தார்.

அதைக் கேட்ட மாலினிக்கு தான் ஏதோ போல் ஆனது. தன் தாயின் முகத்தில் மின்னிய புன்னகை எதையோ சாதித்தது போல் காட்ட, அவளோ உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள்.

“இனி தேவி நிறுவனமே உன் காலின் கீழ் வந்துவிடும் மாலினி. இனி நாம் வைத்தது மட்டும் தான் சட்டம்.” என்று கூறி ஆர்ப்பரித்தார்.

“சரி அம்மா. நான் கிளம்புகின்றேன். உதவிக்கு சனா அக்காவை அழைத்துக்கொள்கின்றேன்.” என்றதும் உமா கோபம் கொள்ளவில்லை.

மாறாக, “அதுவும் சரி தான். அவள் வந்தால் உனக்கு உதவியாக இருக்கும்.” என்று கூறிவிட்டு சென்றார்.

அவர் சென்றதும், வேகமாக அவள் தொடர்பு கொண்டது என்னவோ சக்ராவிற்கு தான்.

அப்போது தான் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்தவன், மாலினி அழைப்பை பார்த்து, “இப்போது என்ன செய்து வைத்தாள்….” என்று சலித்துக்கொண்டே, அதை எடுத்து தன் காதில் வைத்தான்.

“ஹலோ சக்ரா நான் தான் மாலினி பேசுகின்றேன்.” என்றதும்.

“ம்…” என்று மட்டும் தான் அவன் வாயில் இருந்து வந்தது.

பின் பெருமூச்சி ஒன்றை விட்டவளாக, மடை திறந்த வெள்ளம் போல் அனைத்தையும் அவனிடம் கூறினாள், “ப்ளீஸ் சக்ரா. அம்மா உங்களிடம் கேட்டால், அந்த லெஹெங்காவை நீங்கள் தான் வாங்கி கொடுத்தீர்கள் என்று சொல்லிவிடுங்கள்.” என்று அவள் சொல்லி முடிக்க, எண்ணெய்யில் போட்ட கடுகை போல் வெடிக்க ஆரம்பித்தான் சக்ரா.

“உனக்கு தான் அறிவில்லை என்றால், உன் அக்காவுக்குமா இல்லை.” என்று இருவரையும் சேர்ந்தே வசைபாட ஆரம்பித்தான்.

அதில் மாலினிக்கும் கோபம் வந்துவிட்டது. ஆனால் சக்ராவிற்கு பயந்து அமைதியானாள்.

பின், ஒருவாறு தன் பயத்தை கைவிட்டவளாக, “என் அக்காவிடம் நான் கேட்கின்றேன். உங்களுக்கு எதற்காக வலிக்கின்றது.” என்றாள் அதிகப்படியாக.

அதில் சில கணங்கள் பேசாது இருந்துவிட்டு பின், “அதில் நானும் சம்பந்தப்பட்டு இருக்கின்றேன். அதனால் எனக்கும் வலிக்க தான் செய்யும்.” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு, இணைப்பை துண்டித்தான்.

அவன் சொல்லியது புரியாமல் அலைபேசியை வெறித்துப் பார்த்தவள், “இந்த பூமியில் நம்மை தவிர அனைவரும் லூசு தான் போல…” என்று தோள்களைக் குலுக்கிவிட்டு திரும்பவும் லெஹெங்காவில் தன் பார்வையை திருப்பினாள்.

சக்ராவோ ப்ளூடூத்தை எடுத்து தன் காதில் மாட்டிவிட்டு, அவன் அடுத்து அழைத்தது என்னவோ தன் மனம் கவர்ந்தவளுக்கு தான்.

ஆனால் அழைப்பு சனாவிற்கு செல்லவில்லை. அப்போது தான் அவள் தன்னை ப்ளாக் செய்திருப்பதை உணர்ந்து பல்லைக்கடித்தவன், தன் இன்னொரு சிம் மூலம் அவளுக்கு அழைத்தான்.

இன்று வேகமாக அலுவலகம் சென்ற சனா. அங்கே தன் அறையில் அமர்ந்து சில கோப்புகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது அலைபேசி சிணுங்கவே, உடனே அதை எடுத்து காதில் வைத்தாள்.

இணைப்பு இணைக்கப்பட்டதும் தான் தாமதம், “எதற்காக என்னை ப்ளாக் செய்தாய்?.” என்று சூடாக கேட்டான்.

அவன் யார் என்பதை உணர்ந்த பெண்ணவளின் குரலிலோ சிறிது தடுமாற்றம்.

ஆனால் அவனிடம் அதைக் காட்டிக்கொள்ளாதவள், “என்னை அதிகாரமாக பேச உனக்கு உரிமை இல்லை சக்ரா. உன் லிமிட்டை தாண்டாமல் இரு.” என்றாள் பல்லைக் கடித்துக்கொண்டு.

அவள் கோப பேச்சு ஆடவனின் மனதில் குற்றால சாரலை உருவாக்கியதோ என்னவோ, உடனே அவன் முகத்தில் கேலி பரவ, “உரிமையா?. அதெல்லாம் இருக்கின்றது….” என்று இழுத்தவன், பின், “இருக்கின்றது தானே!” என்றான் வசீகர குரலில்.

அவனது பேச்சைக் கேட்ட பெண்ணவளுக்கு படபடவென்று வந்தது. ‘இதற்கு மேல் அவனிடம் பேசினால், ஏதாவது ஏடாகூடமாக பேசிவிடுவான் எமகாதகன்.’ என்று நினைத்தவள் இணைப்பை தன் காதில் இருந்து எடுக்கப்போனாள்.

ஆனால் அதற்குள், “நீ இப்போது இணைப்பை அணைத்தால், நீ இருக்கும் இடத்திற்கே வந்துவிடுவேன்.” என்றவன் வார்த்தைகள் மிரட்டலாக வந்தது.

“பைத்தியகாரா…” என்று அவள் வாய்க்குள் முணுமுணுத்தது, அவன் காதில் வந்தடைந்ததும், அவனுக்கு புன்னகை அரும்பியது.

“சரி என்னை பிறகு திட்டலாம். இப்போது எனக்கு ஒழுங்காக பதில் சொல். மாலினிக்கு நீ எதற்காக அவ்வளவு செலவு செய்கின்றாய்?.” என்றான் புன்னகையை கைவிட்டவனாக.

“உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை சக்ரா.” என அவள் கடுப்பாக.

“இதை என் முன்னால் நீ சொல்லியிருந்தால்…..” என்று அவன் எதுவோ சொல்லவருவதற்குள், அதை தடை செய்யும் விதமாக, “முன்பு நீ எனக்கு தந்த அந்த தேவை இல்லாத பொருளை விற்று தான், இதை என் தங்கைக்கு வாங்கினேன். உன் வருங்கால மனைவி தானே அவள். இதற்கு நீ சந்தோசம் தானே கொள்ளவேண்டும்.” என்றாள்.

‘இவன் ஏதவாது பேசி நம்மை சீண்டிக்கொண்டிருப்பான். இவன் வாயை முதலில் அடைக்கவேண்டும்.’ என்று நினைத்து தான், இவ்வாறு அவள் கூறினாள்.

ஆனால் அதைக் கேட்ட சக்ராவின் முகம் பாறை போல் இறுகிவிட்டது. அவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் இணைப்பை அணைத்துவிட்டு, அதே கோபத்தோடு ஆக்ரோஷமாக நீச்சல் குளத்தில் பாய்ந்தான்.

அவனது கோபத்தை நீரால் கூட ஆற்ற முடியவில்லை போல. அது அவன் நிச்சல் அடிக்கும் விதத்திலையே தெரிந்தது.

அவன் இணைப்பை ரத்து செய்ததும் தன் தோள்களைக் குலுக்கியவள், “உன்னிடம் இப்படி தான் பேச வேண்டும் சக்ரா…” என்று சொல்லிவிட்டு, தன் கைப்பையில் இருந்த பொன் தாலியை எடுத்துப்பார்த்தாள்.

அந்த பொன் தாலியை தடவி பார்த்து கண்களை மூடியவளுக்கு பழைய நினைவுகள் வெள்ளத்தின் சுழற்சி போல் தன்னுள் சுருட்டிக்கொள்ள பார்த்தது.

அவள் உணர்வுகளில் கட்டுண்டு இருக்க, அங்கே ஓர் இடத்தில், அந்தகார அறையில், அவளின் புகைப்படத்தின் கீழே முதல் இலக்கு என்று எழுதி வைத்துக்கொண்டிருந்தன, கருப்பு நிற கையுறை அணிந்த கைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!