Skip to content
Post Views: 12,240
உன் சுவாசம் என் மூச்சில் 21
குழந்தையை கையில் ஏந்தியவன் ஒரு வித பரவச நிலையில் இருந்தான். ‘ என் மகன் என்னோட ரத்தம் என்னோட வாரிசு ’ என பலவிதமாக மனதில் மகனை கொஞ்சிக்கொண்டே எழிலின் அருகில் குழந்தையை வைத்தவன்,
குழந்தை அதன் செவ்விதழ் மூடி உறங்கும் அழகை கண்டு எழில்விழியின் நிறத்தில் அவளின் முக அமைப்பில் பிறந்த குழந்தையை விட்டு பிரிய மனம் இல்லாது குழந்தையே நின்று கதிரவன் ரசித்துக்கொண்டிருந்தான்.
Advertisement
செவிலியர் வெளியே செல்லுமாறு கூற கதிரவனும் மனதே இல்லாது வெளியே வந்து அவனின் தாய் தந்தை தனது சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் அழைத்து தனக்கு மகன் பிறந்ததை கூறி, அவர்களின் வாழ்த்தையும் பெற்றுவிட்டு அன்னலெட்சுமி வெங்கடேசனிடமும் சொல்லிவிட்டு குழந்தைக்கு தேவையானதை வாங்க வெளியே சென்றுவிட்டான்.
சுக பிரசவம் என்பதாலும் குழந்தையும் ஆரோக்கியமாக இருந்தததால் உடனே வேற அறைக்கு மாற்றப்பட்டு குழந்தைக்கு தாய்ப்பாலும் குடுக்க ஆரம்பித்தாள் எழில்விழி. கதிரவன் கடைக்கு சென்று குழந்தைக்கு தேவையான ஆடைகள் ஸ்வெட்டர் கொசுவலை பவுடர் சோப்பு என அனைத்தும் பின் கிளுகிளுப்பை என அவனுக்கு தெரிந்த வகையில் அனைத்தையும் வாங்கிக்கொண்டு எழில்விழி அறைக்கு வர,
அங்கு அன்னலெட்சுமி எழில்விழியை திட்டிக்கொண்டிருக்க எழில்விழியோ கண்கள் கலங்கியவாறு அமர்ந்திருந்தாள். அதனை கண்டு வேகமாக உள்ளே நுழைந்தவன் பதட்டமாக,
Advertisement
“ என்ன!!…. என்ன ஆச்சு எதுக்கு விழி அழற??… எதுக்கு அத்தை அவளை திட்டுறீங்க??… ” என கேட்க மருமகனின் பதட்டத்தில் அன்னலெட்சுமியும் பதறி
Advertisement
“ மாப்பிள்ளை ஒன்னும் இல்லை மாப்பிள்ளை. இவதான் கிறுக்கச்சி மாதிரி உட்கார்ந்து அழறா. அதான் திட்டிக்கிட்டு இருந்தேன். பச்சை உடம்புக்காரி இப்படி உட்கார்ந்து அழுதா சளி பிடிச்சு பிள்ளைக்கு சளி பிடிக்கும். சொன்னா கேட்காம அழுறா அதான் சத்தம் போட்டேன் வேற ஒன்னும் இல்ல மாப்பிள்ளை ” என கூற
அதில் கடுப்பானவன், “ அவ அழுதா எதுக்கு அழுறான்னு கேட்கணும் அதைவிட்டு திட்டிக்கிட்டு இருக்கீங்க அப்புறம் அவ அதுக்கும் சேர்த்து அழுவா. என்ன நீங்க….. ” என கூறிவிட்டு பக்கத்தில் தொட்டியை பார்க்க அவனுடைய மகன் அழகாக உறங்கிக்கொண்டிருக்க அதனை கண்ட அன்னலெட்சுமியோ
“ பேரப்பிள்ளை இப்போதான் தூங்குனான் மாப்பிள்ளை. அவன் சின்னப்பிள்ளை பால் குடிக்க தெரியல அதான் உங்க சம்சாரம் உட்கார்ந்து அழறா ” என அன்னலெட்சுமி கூற கதிரவன் பதில் கூறாது எழில்விழி அருகில் செல்ல அன்னலெட்சுமியும் தம்பதிக்கு தனிமை குடுக்கும் எண்ணத்தில்,
Advertisement
“ எழிலு பேரப்பிள்ளை கண்முழிச்சு சிணுங்குனா ஒரு குரல் குடுத்தா நான் வெளில நிக்குறேன் ” என கூறி சென்றுவிட கதிரவன் எழில்விழியின் கலங்கிய கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைத்து,
“ ஏண்டி!!… நம்ம பையன் என்ன பிறந்து ஆறு மாசமா ஆச்சு???… பால் குடிக்க தெரியலைன்னு உட்கார்ந்து அழுற. உனக்கு அழுறதுக்கு எதாவது காரணம் வேணும் என்ன??… ” என கேட்க அதுவரை கவலையில் இருந்தவள் கணவன் பேச்சில் இருந்த அழுத்தத்தில் நிமிர்ந்து,
“ இல்லைங்க….. ” என எதோ கூறவந்தவளிடம்
“ இங்க பாரு சும்மா ஒன்னொன்னுக்கும் கண்ணை கசக்கிட்டு இருக்காத. அவன் ரெண்டு நாலு போனா தன்னால பால் குடிக்க ஆரம்பிச்சுடுவான் சரியா??… ”
“ ஹ்ம்ம் ” என எழில்விழி தலையை ஆட்ட அதில் அவளின் அருகில் நெருங்கி வந்தவன் தலையை பரிவாக தடவியவாறு,
“ விழி…. ” என மெதுவாக அழைக்க அந்த குரலில் இருந்த மென்மையில் மெதுவாக கதிரவனின் கண்களை பார்த்தவள் நெற்றியில் முத்தம் வைத்தவன்,
“ ரொம்ப கஷ்டப்பட்டியோ??…. ” என கேட்க
“ ஹம்ம்ஹும்…… ” என மறுப்பாக தலையை அசைத்தவளிடம்
“ ஆனா நான் ரொம்ப கஷ்டபட்டுட்டேன். நீ கத்தும் போது வாழ்க்கைல முதல் முறை எனக்கு பயம் வந்துச்சு. நல்லபடியா நம்ம பையனை பெத்துட்ட. நமக்கு ஒரு பையன் போதும் ” என கதிரவன் கூற, அதுவரை அமைதியாக இருந்த எழில்விழி
“ இல்ல… இல்லங்க… எனக்கு ஒரு பொண்ணு ஒன்னு பெத்துக்கணும். ஆசையா இருக்கு ” என கூறி சிரிக்க அந்த சிரிப்பில் மயங்கியவன் ஏனோ அவள் கூறிய வார்த்தைகளில் இருந்த ஏக்கத்தை கவனிக்க தவறிவிட்டான். அதோடு அந்த வார்த்தைகளையும் மனதில் ஏற்ற மறந்துவிட்டான்.
“ விழி ”
“ என்னங்க??? ”
“ பையன் அப்பிடியே உன்னைய மாதிரியே இருக்கான். அதனால் அடுத்து பொண்ணு எல்லாம் வேணாம் என்னைய மாதிரி பையனையே பெத்துக்குடு ” என கதிரவன் கூற
“ இல்லங்க பொண்ணுதான்…. ” என எழில்விழி எதோ கூற வர சரியாக அவர்களின் மகன் சிணுங்க ஆரம்பிக்க,
“ ஹ்ம்ம் எங்க…. இன்னொரு பிள்ளையை பத்தி பேசுனதுக்கே சிணுங்குறான். இதுல எங்க நாம அடுத்த பிள்ளையை பெத்துக்குறது” என சிரிப்புடன் கதிரவன் புலம்ப கதிரவனின் இத்தைகைய பேச்சில் முதலில் அதிர்ந்து பின் வெட்க சிரிப்புடன்,
“ அம்மாவை வர சொல்லுங்க ” என கூறிய எழில்விழியிடம் மகனை தூக்கி குடுத்துவிட்டு வெளியே சென்றுவிட அன்னலெட்சுமியின் உதவியுடன் பிள்ளைக்கு பால் புகட்டினாள்.
அன்றைய நாள் சென்றுவிட மறுநாள் விடியலில் மனைவியிடமும் மகனிடமும் மனதே இல்லாது விடைபெற்று சென்றுவிட அன்றே தெய்வானையும் சுவாமிநாதனும் பேரனை பார்க்க வந்துவிட்டனர்.
பேரனை கொஞ்சிவிட்டு சுவாமிநாதன் வெங்கடேசனிடம் பேச அறைக்கு வெளியே சென்றுவிட தெய்வானையோ,
“ நல்ல வேலை ஆம்பள பிள்ளையை பெத்துட்ட நான் கூட உங்க அம்மாவுக்கு எல்லாம் பொம்பள பிள்ளைகளா….. உனக்கும் பொம்பள பிள்ளை பிறக்குமேன்னு கவலைபட்டேன். பரவா இல்லை ஆம்பள பிள்ளையை பெத்துட்ட. என் வீட்டுக்கே மூத்த வாரிசு என் பேரன் ” என கொஞ்ச அவரின் பேச்சு அம்மா மகள் இருவரின் மனதையும் பாதித்தது.
மனதில் பட்டதை எப்பொழுதும் கேட்டுவிடும் அன்னலெட்சுமி,
“ என்ன மதினி இப்பிடி சொல்றிங்க எனக்கு மூணும் பொண்ணுங்கதான் ஆனா எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே…. ” என கூற
“ என்ன இருந்தாலும் பொண்ணுன்னா செலவுதான் பையன்னாதான் வரவு ” என கூறிய தெய்வானையிடம்
“ அப்படி ஒன்னும் செலவு இல்ல மதினி. பெத்த பிள்ளைகளுக்கு செய்ய முடியாமையா நாம இருக்கோம் ” என அன்னலெட்சுமியும் கூற
“ அட !!…. மதினி எங்க கதிர் மாதிரி இளிச்சவாயன் கிடைச்சா உங்கள மாதிரி செலவே இல்லாம பொண்ணை கட்டிக்குடுத்து பிரசவமும் பார்த்துடலாம் ” என தெய்வானை கூறிக்கொண்டிருக்கையில்,
“ எழில்மாதிரி தங்கமான பொறுமையான குணமான பொண்ணு கிடைச்சா நாமதான் தங்கம் போட்டு பொண்ணை கட்டி கூட்டிகிட்டு வந்துருக்கணும் ” என சுவாமிநாதன் கூறிக்கொண்டே அறைக்குள் வர அவரின் குரலிலிருந்த அழுத்தத்தில் தெய்வானை அமைதியாகிவிட
“ என்ன கம்முனு ஆகிட்ட உன் மகன் கோவத்துக்கும் உன் குணத்துக்கு ஒரு பிள்ளை நம்ம வீட்டுல வாழமுடியுமா??… எழிலு அனுசரிச்சு போறதால குடும்பம் போகுது. இல்ல மாசம் ஒரு பஞ்சாயத்துன்னு போயிருக்கும் நம்ம குடும்ப மானம். பேசாம இரு கொஞ்ச நேரம் சரியா??… ” என சுவாமிநாதன் கடுமையாக பேச,
அவரின் பேச்சை விட சம்பந்தி முன்னிலையில் பேசியது கவுரவ குறைச்சலாக போய்விட வேகமாக அறையைவிட்டு வெளியேறிவிட்டார் தெய்வானை.
அதனை கண்டு,
“ என்ன அண்ணே!!…. எதுக்கு மதினி கிட்ட இப்படி பேசுறீங்க??… பாவம் அவுங்க கோச்சுக்கிட்டு போய்ட்டாங்க நானு ஆத்தமாட்டாம எதையாவது பேசிப்புடுறேன். என் வாயும் சும்மா இருக்க மாட்டேங்குது ” என அன்னலெட்சுமி புலம்ப சுவாமிநாதனோ,
“ நீ சும்மா இரு தங்கச்சி. அவ எப்போதும் அப்டித்தான் நல்ல நாலு பெரிய நாலு நல்ல விசேஷம் அன்னைக்கு எல்லாம் யாரையாவது மனசு நோகுற மாதிரி பேசிப்புடுவா. ஆனா மனசுல ஒன்னும் இருக்காது. நீயும் எதுவும் நினைச்சுகாத எழிலு ” என மனைவியை விட்டுகுடுக்காது சுவாமிநாதன் பேச எழில்விழியோ,
“ என்ன மாமா எனக்கு அத்தை பத்தி தெரியாதா??… நான் ஒன்னும் நினைக்கல ” என கூற அதன் பின் சிறுது நேரம் பேசிவிட்டு சென்றனர் சுவாமிநாதன் தெய்வானை தம்பதி.
நாலு நாளில் மருத்துவமனையில் இருந்து எழில்விழியையும் அவள் மகனையும் வீட்டிற்கு அழைத்துவந்துவிட்டார்கள். இடையில் கதிரவனும் வந்து மனைவி மகனை பார்த்துவிட்டு சென்றுவிட ஒரு நாள் கணவனுக்கு போனில் பேச அழைப்பு விடுத்தாள். அழைப்பை ஏற்றவன்,
“ என்ன விழி எப்படி இருக்க??… பையன் என்ன செய்றான்??… ” என கேட்க
“ ஹ்ம்ம் நல்ல இருக்கேன்ங்க. தம்பி தூங்குறான் ”
“ சரி சொல்லு என்ன விஷயம்??…. ”
“ நீங்க இப்போ பிரீயா இருக்கீங்களா??…. ”
“ சும்மா இருக்குறதாலதான் சொல்லுன்னு சொல்றேன். அதுல என்ன ஒரு கேள்வி உனக்கு??.. ”
“ இல்லங்க முக்கியமா பேசணும் அதான் ”
“ சொல்லு என்ன விஷயம்??… ”
“ அது இன்னும் அஞ்சு நாளுல தம்பி பிறந்து இருபத்தியொராவது நாலு வருது. அன்னைக்கு புண்ணியதானம் பண்ணி பேரு வைக்கணும் ”
“ சரி வெச்சுடுவோம் ”
“ அதான் அவன் நட்சத்திரத்துக்கு ரா ரி தா இந்த எழுத்துல பேரு வைக்கணும் அதான் உங்களுக்கு எதாவது தோன்றதை சொல்றிங்களா??…. அதையே வைப்போமா??…” என எழில்விழி கேட்க
“ ஓ!!… எனக்கு ஒன்னும் தோணல உனக்கு பிடிச்ச பேரையே வை. நான் விசேஷம் அன்னைக்கு அதிகாலைல தான் வருவேன். லீவு இல்ல. அப்போ சொல்லு பேரை ”
“ ஹ்ம்ம் நான் பேரை யோசிச்சுட்டு உங்களுக்கு அனுப்பவா??… ”
“ ஹ்ம்ம் சரி பிரீயானவுடன் நானும் பார்த்து சொல்றேன். ஆனா உனக்கு பிடிச்சா சரிதான்”
“ ஹ்ம்ம் சரிங்க. சாப்பிட்டீங்களா என்ன பண்ணுறீங்க?…. ”
“ அப்பாடி ஒரு வழியா புருஷன் நியாபகம் வந்துருச்சா??… சரி எப்போ இங்க வரபோற அதை பத்தி ஒன்னும் பேசிகலையா??… ”
“ இல்லங்க. அம்மா ஒரு ஆறு மாசம் இருந்துட்டு அப்புறம் அழைச்சுட்டு போலாம்ன்னு…… ” என எழில்விழி பேசிக்கொண்டிருக்கயிலையே அழைப்பு துண்டிக்கப்பட
‘ என்ன கட் ஆகிடுச்சு??…’ என யோசித்துக்கொண்டிருக்கையில் மீண்டும் கதிரவனுக்கு அழைப்புவிடுத்தாள். அழைப்பை முதல் முறை கதிரவன் எடுக்காமல் இருக்க மீண்டும் அழைப்புவிடுத்தாள். இம்முறை அழைப்பை ஏற்றவன்,
“ என்ன??… ” என எரிந்துவிழ கணவனின் இந்த திடீர் கோவம் எதற்கென புரியாமல்,
“ இல்லங்க போன் கட் ஆகிடுச்சு ”
“ கட் ஆகல. நான் தான் கட் பண்ணுனே ”
“ ஏங்க??…. ”
“ ஹ்ம்ம் நீதான் ஆறு மாசம் இருந்துட்டு வரேன்னு சொன்ன. அப்புறம் எதுக்கு போன் பேசிகிட்டு??… போனிலையே நாம குடும்பம் நடத்தவா??… எனக்கு வேற வேலை இல்ல அதான் போனை வச்சுட்டு என் வேலைய பார்க்க போனே. உனக்கு என்ன பிரச்சனை??….” என மீண்டும் எரிந்துவிழ அதில் கலங்கிய எழில்விழி
“ என்னங்க நான் இன்னும் முழுசா சொல்லிமுடிக்கல ”
“ நீ வளவளன்னு பேசிகிட்டு இருக்குறத கேட்டுட்டுகிட்டு இருக்க எனக்கு நேரம் இல்லை வை போனை ” என மீண்டும் அழைப்பை கதிரவன் துண்டிக்க அதில் எழில்விழி முதலில் கண்கள் கலங்கியவாறு அலைபேசியை வெறித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.
ஆனால் சிறுது நேரத்தில் கணவனின் இந்த கோவத்தை புரிந்துகொண்டவளுக்கு முகத்தில் புன்னகை வந்துவிட்டது.
“ ஹையோ!!!… அட…. என் அவசரகார புருசா நானே மூணு மாசத்துல வரலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன்னு சொல்ல வந்தா அவசரப்பட்டு போனை வச்சாச்சு.
என்னைய பார்க்காம இருக்க முடியல ஆனா நேரடியா இதை சொல்லமாட்டாங்களாம். ஹ்ம்ம் இப்படி ஒன்னொன்னுக்கு கோவப்பட்டே நமக்கு அன்பை காட்டி எந்நேரமும் நம்மள பதட்டத்துலையே வச்சுருக்காரு ” என வாய்விட்டே எழில்விழி புலம்ப,
அதற்குள் அவளின் மகன் பசிக்கு அழ ஆரம்பித்தான். மகனிற்கு பால் குடுத்துவிட்டு அவனையும் உறங்கவைத்துவிட்டு அவளும் உண்டுவிட்டு போனை எடுத்து இணையதளம் மூலம் மகனிற்கு பல பெயர்களை ஒரு நோட்டில் எழுத்திவைத்தாள்.
பின் அதில் நான்கு பெயரை முடிவுசெய்து கணவனிடம் கேட்க வேண்டும் என எண்ணிக்கொண்டு உறங்கிவிட்டாள்.
மறுநாள் மகனை கவனித்துவிட்டு பின் கதிரவனுக்கு அலைபேசியில் அழைக்க முதல் அழைப்பிலையே எடுத்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அவனின் அமைதியில்,
“ என்னங்க…. என்னங்க….. ” என அழைத்த எழில்விழி குரலில் கதிரவன்
“ இருக்கேன் ” என கடுப்பாக கூற
“ எங்க இருக்கீங்க??… ” என எழில்விழி மெதுவாக பேச்சை ஆரம்பிக்க
“ ஹ்ம்ம் நடுரோட்டுல இருக்கேன் உனக்கு என்ன இப்போ ” என கடுபடித்தவனிடம் ஏனோ எழில்விழிக்கு பயம் வராமல் சிரிப்புதான் வந்தது.
ஏனெனில் அவனின் அந்த எரிச்சல் கோவம் அவளின் பிரிவால் வந்தது அல்லவா. எனவே பேச்சை வளர்க்கும் விதமாக அவனின் பேச்சிற்கு பதில் கூறாது,
“ என்னங்க சாப்பிட்டீங்களா???.. ” என கேட்க
“ இல்ல என்ன செய்ய போற??… வந்து சமைச்சு குடுக்கப்போறியா??… பேசாம வச்சுடு. காலைளையே போனை போட்டு என்னைய கடுப்பேத்தாம ” என கூறியவனிடம்
“ இல்லங்க நான் மூணு மாசத்துல நம்ம வீட்டுக்கு வந்துடலாம்ன்னு இருக்கேன். அதான், அப்போ உங்களுக்கு எப்போ தோதுன்னு சொன்னா அன்னைக்கே வந்து அழைச்சுட்டு போங்க. அம்மாகிட்டயும் அப்பாக்கிட்டயும் சொல்லணும்ல அதான் போன் செஞ்சேன் ” என மெதுவாக கூறிய எழில்விழி கதிரவனின் பதிலுக்காக காத்திருக்க அவனோ சிறுது நேரம் ஒன்றும் பேசாது,
“ அப்போ உனக்கு நான் உன்னைய தேடுறேன்னு தெரியுது. இருந்தும் ஆறு மாசம்னு நேத்து சொல்லி என்னைய டென்ஷன் படுத்திட்டு இன்னைக்கு சாவுகாசமா போனை போட்டு மூணு மாசத்துல வரேன்னு சொல்லுற ” என அழுத்தமாக கேட்டவனிடம்
எழில்விழிக்கு அதுவரை இருந்த இலகுத்தன்மை போய் ஒரு வித பதட்டம் வர,
“ இல்லங்க நேத்தே சொல்லலாம்ன்னு நினைச்சேன் நீங்கதான் போனை வச்சுட்டீங்க. மறுக்கா போன் பண்ணுனே நீங்க நான் சொல்லவரத கேட்கவே இல்ல ” என தன்னிலை விளக்கம் குடுக்க,
அதற்கு பதில் கூறாது,
“ சரி வை எனக்கு நேரமாச்சு ” என கூறி அழைப்பை துண்டித்துவிட அதில் கணவனின் மேல் எழில்விழிக்கு கடுப்பு வர,
“ என்ன இவரு சீக்கிரம் வரேன்னு சொன்னாலும் திட்டுறாரு லேட்டா வரேன்னு சொன்னாலும் திட்டுறாரு. இப்போ நான் என்ன செய்றது??… கோவமா போனை வச்சாரா இல்ல எதார்த்தமா வச்சாரா??… ” என புலம்பிக்கொண்டிருக்க கதிரவனோ சுவாமிநாதனுக்கு அழைத்து புண்ணியதானம் பற்றி பேசிவிட்டு மூணாம் மாதத்தில் எழில்விழியையும் குழந்தையையும் அழைத்துவர நல்ல நாள் பார்க்க சொல்லிக்கொண்டிருந்தான்.
புண்ணியதானம் நாளுக்கு முதல் நாள் மதியமே கதிரவன் வந்துவிட அதில் சந்தோசம் ஆனவள்,
“ என்னங்க லீவு கிடைச்சுடுச்சா??.. சொல்லவே இல்ல ” என முகத்தில் புன்னகை பொங்க கேட்ட மனைவியிடம் பதில் கூறாது அமைதியாக மகனை தேடி சுற்றிலும் பார்க்க அவன் பேசாததில் கண்கள் கலங்கியவாறு,
“ என்னங்க என்கிட்ட நீங்க போன்ல பேசி நாலு நாள் ஆச்சு. எதுக்கு கோவமா இருக்கீங்க??… இப்ப கூட பேசாம உங்க மகனை தேடிகிட்டு இருக்கீங்க. அவனை அம்மா குளிக்க வச்சுக்கிட்டு இருக்காங்க ” என விழிகளை துடைத்துக்கொண்டே எழில்விழி அறைக்குள் சென்றுவிட,
அவளை பின்தொடர்ந்து அறைக்கு வந்தவன் அவளை பின்னிருந்து அணைத்தவன்,
“ அடியே!!!… என் அழுமூஞ்சி பொண்டாட்டி நானே உன்னையே ரொம்ப மனசு தேடுதுன்னு தான் போன் பேசாம இருக்கேன் . அதோட சும்மாவே உன் விழில நான் விழுந்துகிடக்கேன். இதுல இப்போ சும்மா இன்னும் அழகா செமையா இருக்க இதுல உன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன்னு வை அப்புறம் மூணு மாசம் எல்லாம் பாக்க மாட்டேன் உன்னைய இப்பவே கையோட கூட்டிட்டு போயிடுவேன் ” என கூறி அணைப்பை இறுக்க
அந்த அணைப்பில் சந்தோசமாக பொருந்தியவள் அவனின் பேச்சில் வெட்கம் கொண்டு மெதுவாக சிரிக்க அதனை ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
கணவனின் இந்த மாற்றம் ஒரு வித நிம்மதியையும் அவன் மீதான காதலையும் பெண்ணவளுக்கு பெருக்கியது. கதிரவனுக்கோ திருமணத்தின் போது இருந்த அவளை பற்றிய ரசிப்பு பிடித்தம் உரிமை உணர்வு என அனைத்தும் இந்த பிரிவில் நேசமாக மாற அதனை சிறிதாக உணர ஆரம்பித்து அதனை மனைவியிடம் வெளிப்படுத்தவும் செய்ய, அது கூட அவனின் மனதிற்கு பிடித்தமாக இருக்க விரும்பியே அந்த நேசத்தில் கட்டுண்டு இருக்கிறான்
அவர்களின் மோன நிலையை கலைக்கும் விதமாக அவன் மகனின் சத்தம் கேட்க,
“ விழி தம்பி குளிச்சுட்டான்னா தூக்கிட்டு வா பார்த்து பத்து நாள் ஆகுது ” என கூறிக்கொண்டு வேகமாக குளியல் அறைக்கு சென்றவன் முகம் கை கால் கழுவி உடை மாற்றி அறைக்கு வெளியே வந்தவன் அங்கு அன்னலெட்சுமி கையில் குழந்தையை வைத்துக்கொண்டிருக்க,
அவனின் மகனை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து வேகமாக அன்னலெட்சுமி அருகில் நின்ற எழில்விழியிடம் சென்ற கதிரவன்,
“ ஏய்!!… விழி என்னடி பண்ணிவச்சுருக்கீங்க??… ” என கத்த அவனின் சத்தத்தில் தாய் மகள் இருவரும் பதற எழில்விழியோ,
“ என்னங்க என்ன பண்ணிட்டேன்??… ” என பயத்துடன் கேட்க
“ இது என்ன என் பையனை இப்படி மஞ்சளா மாத்தி வச்சுருக்கீங்க ” என கேட்க
‘ ஓ இவ்வளவுதான்….. ’ என ஆசுவாசமான அன்னலெட்சுமி,
“ மாப்பிளை பிள்ளைக்கு மஞ்சள் தேச்சு குளுப்பாட்டுறது நல்லது. அதோட இந்த பூனை மூடி எல்லாம் போயிடும் ” என அன்னலெட்சுமி சிரித்துக்கொண்டே கூற
“ என்னது பூனை முடியா நீங்க தேச்சுருக்கறதை பார்த்தா என் மகனுக்கு பின்னாடி மீசையே முளைக்காது போல இனிமே அவனுக்கு மஞ்சள் தேச்சு எல்லாம் குளிப்பாட்ட வேணாம் ” என கதிரவன் கூற அதற்கு எழில்விழி மறுத்து எதோ கூற வர,
“ சும்மா அழறது இல்ல இடைல இடைல எதையாவது பேசி என்னைய கடுப்பேத்துறதை விட்டு முதல்ல நான் சொல்றதை கேட்டு பழகு ” என கூறிவிட்டு சென்றுவிட அன்னலெட்சுமி பாவமாக எழில்விழியை பார்த்துக்கொண்டிருந்தார்.
அதனை கண்டு, “ என்னமா??… ” என எழில்விழி கேட்க
“ ஏண்டி மூணு பிள்ளைகளை பெத்து அதுகளுக்கு பிரசவம் பார்த்த எனக்கு தெரியாது என்ன செய்யணும்ன்னு ” என கேட்க
“ அதை உன் மருமகன்கிட்ட சொல்லவேண்டியது தானே ” என எழில்விழி கேட்க
“ சாகுறவரை வைத்தியன் விடமாட்டான் செத்தாலும் பஞ்சாங்கக்காரன் விடமாட்டான் உன் புருஷன் கிட்ட எதையாவது சொல்லபோனா நம்மள நோகடிச்சு நொந்து நம்ம மனசை கலங்கடிக்காம விடமாட்டாரு. இது எனக்கு தேவையா??… நீயாச்சு உன் மகனாச்சு உன் புருஷனாச்சு….. ” என அன்னலெட்சுமி கூறி கொண்டே சமையலை செய்ய சென்றுவிட மகனை தூக்கிக்கொண்டு அறைக்கு சென்றுவிட்டாள்.
அங்கு கதிரவன் கொஞ்ச நேரம் மகனை கையில் வைத்திருக்க அவனிடம் எழில்விழி தான் பெயர் தேர்வு செய்ததை சொல்ல கதிரவனோ,
“ கடைசியா என்ன பேரை முடிவு பண்ணிருக்க??… ” என கேட்க
“ எனக்கு ரித்விக் பேரு பிடிச்சுருக்குங்க வைப்போமா??…. ” என எழில்விழி ஆசையாக கேட்க
“ ஹ்ம்ம் வைப்போம் ” என கூறிவிட்டு மகனை கொஞ்ச ஆரம்பித்துவிட்டான்.
அன்று மாலையே தெய்வானையும் சுவாமிநாதனும் மறுநாள் விசேஷத்திற்கு வந்துவிட, அனைவரும் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க பேரனை மடியில் வைத்துகொண்டு தெய்வானை கதிரவனிடம்,
“ ஏன் கதிரு அம்மா ஒன்னு கேட்கவா??… ” என மெதுவாக கேட்க பூ கட்டிக்கொண்டிருந்த எழில்விழியும் தெய்வானை என்ன கூற போகிறார் என கவனித்துக்கொண்டே தனது வேலையை பார்க்க,
“ என்னம்மா கேட்க போற கேளு ” என கதிரவன் கூற
“ இல்ல என் அப்பா பேரை உங்கள்ள யாருக்காவது வைக்கணும்ன்னு ஆசை ஆனா என் மாமியார் மாமனார் என்ன வைக்கவிடல சரி நம்ம பேர பிள்ளைகளுக்காவது வைக்கலாம்னா மூத்தவனுக்கு பொண்ணு அதான் உன் மகனுக்கு வைப்போமா??…. எனக்கு ஆசையா இருக்குடா ” என கேட்ட தெய்வானையிடம் மறுக்க தோன்றாது எழில்விழியை திரும்பி கூட பார்க்காது
“ ஹ்ம்ம் வைம்மா உன் பேரன்தானே உனக்கு இல்லாத உரிமையா ” என கூறிவிட எழில்விழிக்கோ அழுகை வந்துவிட்டது.
அவள் ரொம்ப ஆசையாக மகனுக்கு பெயர் வைக்க தேர்வு செய்து அதனை கணவனிடம் கூறியும் சற்றும் அதனை மதியாது அவர்கள் இஷ்டத்திற்கு பெயரை வைக்க போவதில் கோவமும் அழுகையும் வர அதனை வெளியில் காட்டாது மிகவும் சிரமபட்டு கதிரவனிடம்,
“ என்னங்க அவனுக்கு நட்சத்திர படி பேரு…. ” என பேசவந்தவளை பேசவிடாது
“ அது எல்லாம் மூதாதையர் பேரை வச்சா ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ சும்மா குழப்பம் பண்ணாம இரு. என் அப்பா பேரு கண்ணாயிரம் இந்த பேரை வச்சாலே எந்த கண்ணும் வராது பிள்ளைக்கு ” என கூறி சந்தோசமாக பேரனை தொட்டிலில் போட சென்றுவிட எழில்விழி மெதுவாக கதிரவன் அருகில் வந்து,
“ என்னங்க நான் ஆசையா பேரை செலக்ட் பண்ணுனே ” என கூற அவளை கண்ட கதிரவனுக்கோ அவளின் வலி ஏமாற்றம் புரியாது,
“ ஏய்!!… என்ன இப்போ பேருதானே. உனக்கு பிடிச்சதை நீ கூப்புடு. எங்க அம்மா எவ்வளவு ஆசையா கேட்குறாங்க. இதுல என்ன இருக்கு. என் தாத்தா பேரையே வைப்போம் ” என கூற
“ இல்லங்க அந்த பேரு ரொம்ப பழைய பேரா இருக்கு…….” என எழில்விழி பேசிக்கொண்டிருக்கயிலையே விழிகள் அவள் அறியாமல் கலங்கிவிட அதில் கடுப்பானவன்,
“ சும்மா உனக்காக எங்க அம்மாகிட்ட சண்டை போடுறேன்னு என் அம்மா எது சொன்னாலும் நான் கேட்காம உன் பேச்சை கேட்பேன்னு கனவுல கூட நினைக்காத. என் அம்மா தப்புன்னா நான் கண்டிப்பேன். ஆனா அதுக்காக என் அம்மாவை மதிக்காம இருப்பேன்னு நினைச்சியா??…. உனக்கு எங்க அம்மா வைக்குற பேரு பிடிக்கலைன்னா நீ உனக்கு பிடிச்ச பேருல கூப்பிட்டுக்கோ ஆனா எங்க அம்மா அவுங்க பேரனுக்கு அவுங்களுக்கு பிடிச்ச பெயரைதான் வைப்பாங்க. போ போய் வேலைய பாரு சும்மா ஒன்னும் இல்லாததை எல்லாம் மண்டைல ஏத்திக்கிட்டு” என அவனும் வெளியே சென்றுவிட,
ஏமாற்றம் தந்த வலி தன் மகனிற்கு தான் பெயர் வைக்கமுடியாத இயலாமை கண்ணாயிரம் பெயர் பிடித்தமின்மை கணவன் தன்னை புரிந்துகொள்ளாதது என மனதில் எரிச்சல் கோவம் ஏற்பட அதனை வெளியே காட்டகூட முடியாது வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
ஒரே ஒரு வார்த்தையாலே
என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு பார்வையாலே
உள்ளூர கரைகிறதே……
யாரோ மனசு உலுக்க……
ஏதோ உடைந்து வலிக்க
ஓ சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு
தவிக்கும் ஒரு இதயம்
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு
தவிர்க்கும் ஒரு இதயம்
காதல் என்னும்
கைக்குழந்தை
கதறி அழுகிறதே
உறவை நெனச்சு உள்ளம் இப்போ
போராடுதே
ஒரே ஒரு வார்த்தை கேட்டு
என் நெஞ்சு வெடிச்சிருச்சே
ஒரே ஒரு பார்வை புயலாய்
என்மேல் அடிச்சிருச்சே
error: Content is protected !!