Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் சுவாசம் என் மூச்சில்

உன் சுவாசம் என் மூச்சில் 24

உன் சுவாசம் என் மூச்சில் 24

 

    எழில்விழியை உறங்க சொல்லிவிட்டு  வெளிய வந்த கதிரவன் வெங்கடேசனுக்கு அழைக்க அழைப்பை ஏற்றவுடன்,

“ மாமா….. ”



Advertisement

“  மாப்பிளை  எப்பிடி இருக்கீங்க?.. கண்ணாவும் எழிலும் எப்பிடி இருக்காங்க??… ”

“ ஹ்ம்ம் எல்லாரும் நல்ல இருக்கோம் மாமா. அது…. ஒரு விஷயம்.. ”

“ சொல்லுங்க மாப்பிள்ளை ”

Advertisement

“  எழிலு மறுபடியும் கன்ஸீவா இருக்கா மாமா ”

Advertisement

“  ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை. எழிலு நல்லா இருக்கா??…. நாங்க நாளைக்கு ஊருக்கு  கிளம்பி வரோம் மாப்பிள்ளை ”

“ சரி மாமா அத்தைகிட்டயும் சொல்லிடுங்க ”

“ ஹ்ம்ம் சரி மாப்பிளை ” என வெங்கடேசன் பேசியவுடன் அழைப்பை துண்டித்துவிட்டு வீட்டிற்கு  வந்த கதிரவன் கண்களில் ஹாலில் தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த எழில்விழி விழ,

Advertisement

    அவளின் அருகில் சென்றவன் அவளின் தலையை வாஞ்சையுடன் தடவிக்கொண்டே,

‘ நீ நம்ம கண்ணாவ பிரசிவிக்கும்போதே நான் பயந்துட்டேன். இதுல ரெண்டாவது குழந்தை???….. எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு. இந்த முறையும் நல்லபடியா பிள்ளை பெத்து எடுத்துடு விழி. போதும் நமக்கு ரெண்டு பிள்ளைங்க ’ என மனதில் எண்ணிக்கொண்டே அவனும் அவளின் அருகில் உறங்கிவிட்டான்.

   அவன் மனதில் எண்ணியதை பெண்ணிடம் கூறி இருக்கலாம் ஏனோ ஆணவனுக்கு ஆணவமா இல்லை அறியாமையா  என தெரியவில்லை பெண்ணிடம் மனம்விட்டு பேச தெரியவில்லை.

   எழில்விழி சிறுது நேரத்தில் எழ அருகில் உறங்கிக்கொண்டிருந்த கதிரவனை கண்டு புன்சிரிப்புடன் அவனின் தலையை தன் விரல்களால்  கோத அந்த இதத்தில் அவளின் புறம் திரும்பி படுத்தவன் மெதுவாக கண்களை பிரித்து அவளின் கண்களை பார்த்து,

“ இப்போ மட்டும் என் பக்கத்துல வர நேத்து கையை போட்டதுக்கு தட்டிவிட்ட ”  என கேட்க அவனின் கேள்வியில் அவளின் விரல்கள் வேலை நிறுத்தம் செய்ய,

“  ஏய்!!… நீ தலையை கோதுறன்னு தான் உன் பக்கம் திரும்பி படுத்துருக்குறேன் அதை செஞ்சுக்கிட்டே நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு ” என கதிரவன் கூற

  அவன் பேச்சில் நெருக்கத்தில் எல்லாம் மறந்த நிலையில்,

“ என்ன கேள்விங்க??… ” என எழில்விழி கேட்க

“ ஹ்ம்ம் எதுக்கு நேத்து என் அணைப்புல இருந்து  தள்ளி படுத்த ”

“ அது…. அது… நேத்து கோவத்துல… ” என எழில்விழி இழுக்க

“ கோவம்ன்னா நான் வேணாமா??… ” என கதிரவன் மீண்டும் கேட்க எழில்விழி முழித்துக்கொண்டிருந்தாள்.

  கதிரவனுக்கு அவளின் முதல் விலகல் வலிநிறைந்த கோவம், பெண்ணுக்கோ அவளின் நியாயமான கோவம்.

   நேற்றைய அவளின் கோவத்தில் அவளின் செயல் அவளுக்கு சரியாக தோன்றியது, இன்று அவனின் விளக்கத்தில் தவறாக தோன்ற அதை விளக்கும் வகையறியாது தன் விழிகளை பெரிதாக்கி முழிக்க அதில் மீண்டும் ஒரு  முறை சுகமாக விழுந்தவன்,

“ சொல்லு விழி கோவம்ன்னா நான் வேணாமா உனக்கு ” என கேட்க

“ அப்படி இல்லங்க அது…. அது…. ”

“ சொல்லு கோவம்ன்னா என்கிட்ட சண்டை போடணும். அதை விட்டு கோவத்தை என்னைய தள்ளி வச்சு தான் காமிப்பிப்பாயா. நானும் தள்ளிவைச்சா தாங்குவியா??.. ” என கேட்டவனிடம் பதில்  சொல்ல தோன்றாது அவனை நெருங்கி அணைத்துக்கொள்ள அவனும் அதற்கு மேல் பேசாது அமைதியாக சற்றே இறுக்கமாக மனையாளை அணைத்துக்கொண்டான் நேற்று விட்ட அணைப்பையும் ஈடுசெய்யும் விதமாக.

   சிறுது நேரத்தில் தம்பதியின் அமைதியான காதலை கலைக்கும் விதமாக கண்ணாவின் குரல் கேட்க வேகமாக அணைப்பில் இருந்து விலகியவள்

“ நான் கண்ணாவுக்கு பால் அடுப்புல வைக்குறேங்க. நேரம் ஆச்சு ” என எழில்விழி எழ அவனும் எழுந்துகொண்டு,

“ விழி நீ கன்ஸீவா இருக்கறதை நான் அம்மாகிட்ட சொல்லிடுறேன். அத்தைக்கும் மாமாவுக்கும் சொல்லிட்டேன் ” என கதிரவன் கூற,

   எழில்விழியும் புன்னகையுடனும் சிறு வெட்கத்துடனும் சரி  என தலையை ஆட்டிவிட்டு வேகமாக மகனை காண  அறைக்கு செல்ல அங்கு தெய்வானையும் எழுந்து பேரனை சமாதானம் செய்துக்கொண்டிருக்க கண்ணாவும் தன் தாயின் வருகையில் வேகமாக அழுகையை நிறுத்திவிட்டு எழில்விழியிடம் தாவினான்.  

   எழில்விழியும் கண்ணாவை தூக்கி கொஞ்சிக்கொண்டு தெய்வானையிடம்,

“ அத்தை டீ போடவா??…. ” என கேட்க

“ ஆமா அது ஒண்ணுதான் இப்போ எனக்கு குறைச்சல் ” என தெய்வானை கடுப்படிக்க

“ வேற என்னம்மா குறைச்சல் உனக்கு??… ” என கேட்டுக்கொண்டு அறைக்குள் வந்த கதிரவன் எழில்விழியிடம்,

“ போ போய் பிள்ளைக்கு பாலும் அம்மாவுக்கு டீயும் போடு ” என கூறி அவளையும் பிள்ளையையும் அனுப்பிவிட்டு,

“  இப்போ சொல்லும்மா உனக்கு என்ன பிரச்சனை. எதுக்கு இப்போ கோவமா இருக்க??… ” என கேட்ட கதிரவனிடம்

“ ஹம்ம்ஹும் ஏன்டா நா யாருடா உன் பிள்ளைக்கு??… ” என தெய்வானை கேட்க

“ ஏம்மா உனக்கே  மறந்து போச்சா??… ” என நக்கலாக கதிரவன் கேட்க அதில் மேலும் கடுப்பான தெய்வானை,

“ எனக்கு நியாபகம் இருக்கு உங்களுக்கு எல்லா நியாபகம் இருக்கா நான் தான் அவனுக்கு அப்பத்தான்னு ” என கேட்க

“ அம்மா உனக்கு என்ன இப்போ அதை முதல்ல தெளிவா சொல்லு ” என கதிரவனும் கேட்க

“ கண்ணா அழுறான்னு சமாதானம் பண்ணுறேன் கொஞ்சம் கூட அழுகையை நிறுத்தாம ஏதோ தெரியாதவங்க தூக்குன மாதிரி அழறான். இப்படித்தான் ஆளு அண்டாம வளர்ப்பியா ” என தெய்வானை கத்த

“ என்ன அண்டாவ வளர்த்துட்டோம் குண்டாவ வளர்த்துட்டோம்ன்னு கத்திக்கிட்டு இருக்க.  என்ன இப்போ  நீ அடிக்கடி வர போக இருந்தா பிள்ளைக்கு உன்னைய தெரிய போகுது. விடும்மா  அடுத்த பிள்ளையை நீயே வள என்ன இப்போ ” என  கதிரவன் சொல்ல

“ என்ன அடுத்த பிள்ளையா??… டேய்!!… அது எல்லாம் ஒன்னும் வேணாம். ஒரு பிள்ளையை பெத்து படிக்க வச்சு ஒழுங்கா வளக்கவே இந்த காலத்துல பெரிய விஷயமா இருக்கு. இதுல எதுக்கு ரெண்டு பிள்ளை??… நானே சொல்லணும்ன்னு நினைச்சேன் அதான் கண்ணாவுக்கு ரெண்டு வயசு ஆகிடுச்சுல பேசாம அவளை குடும்ப கட்டுப்பாடு பண்ண சொல்லு ” என தெய்வானை பேசிக்கொண்டு செல்ல கதிரவன் ஒன்றும் கூறாது அமைதியாக இருக்க,

“ என்னடா நான் பேசிகிட்டு இருக்கேன் நீ ஒன்னும் சொல்லல ” என தெய்வானை கேட்க

“ இல்ல நீ இப்போ என்ன சொல்லவர. ஒரு பிள்ளையை பெத்து வளக்க உனக்கு துப்பு இல்ல இதுல இன்னொன்னு எதுக்குன்னு கேட்குறீயா??… ” என  அழுத்தமான குரலால் கேட்ட கதிரவனை கண்டு

“ டேய் கதிரு!!… நான்  அப்பிடி சொல்லலடா.  நீயே  மாச சம்பளகாரன். அதுவும்  ஒரு சம்பளம். பத்தாததுக்கு நீ உன் மாமனார் வீட்டுல இருந்து சல்லி காசு வாங்க மாட்ட. அவசரத்துக்கு உதவி  செய்ய மாமன் மச்சான்னு  ஒருத்தரும் இல்ல.

   இருக்குறவங்களையும் சும்மா உப்பு பெறாத காரணத்தை சொல்லி தள்ளி வைக்குற. இதுல ரெண்டு பிள்ளை எல்லாம் கஷ்டம்டா. அதான் நான் என்ன சொல்லவரேன்னா….. ” என தெய்வானை பேசிக்கொண்டிருக்கையில்,

“ ஒரு நிமிசம்மா  நான் சொல்றதை நீ கவனி. ஏற்கனவே விழி மறுபடியும் கன்ஸீவா இருக்கா இன்னைக்குத்தான் உறுதி படுத்திட்டு வந்தோம் சும்மா எதையாவது சொல்லணுமேன்னு சொல்லாத கடுப்பாகுது ” என கதிரவன் எரிந்துவிழ

“ என்னடா சொல்றா மறுபடியும் பிள்ளையா??.. ” என சிறிது தெய்வானை அதிர

“ என்னம்மா ஏன் எனக்கு எல்லாம் ரெண்டு பிள்ளை பிறக்காதா??.. சும்மா ஏதாவது   கருத்து சொல்லணும். அதுக்குதான் இப்போ கிளம்பி வந்தியாக்கும். சிங்க குட்டிமாதிரி ஒரு பிள்ளைய பெத்துவச்சுருக்கேன். அவனுக்கு துணையா இன்னொருத்தன் பிறக்க போறானேன்னு சந்தோசமா சொன்னா எரிச்சலை கிளப்புற ” என  கதிரவன் கோவமாக பேச

“ ஏதே!!!…. இன்னொருத்தனா??.. ஏன் இன்னொருத்தியா இருந்தா என்ன செய்வ??.. ” என தெய்வானை கேட்க  அவரின் பேச்சு புரியாது கதிரவன் அமைதியாக தெய்வானையையே பார்க்க அவரோ,

“ என்ன புரியலையாக்கும். இல்ல அடுத்து பிறக்க போற பிள்ளை பொம்பள பிள்ளையா இருந்தா என்ன செய்வ??.. அதுக்கு சீறு நகை நட்டு  எல்லாம் போட்டு கட்டிக்குடுக்கணும். செய்றதுக்கு என்ன இங்க இருக்கு. இல்ல உன் பொண்டாட்டிதான் அம்புட்டையும் கொண்டு வந்துருக்காளா??… ஒன்னும் இல்லைல ” என கூற

      கதிரவனோ இன்னும் குழப்பத்தில் புருவங்களை சுருக்கிக்கொண்டு யோசனையில் இருந்தான். இதுவரை  இருவரும் பேசியதை தெய்வானைக்கு டீ கொண்டு வந்த  எழில்விழியும் கேட்டு கதிரவனின் பதிலுக்காக காத்திருக்க அவனோ குழப்பம் தெரியாது நின்றுகொண்டிருந்தான்.

   அவன் இதுவரை பெண் குழந்தை பற்றி யோசிக்கவே இல்லை. அவனின் முதல் பிள்ளையும் சரி இப்பொழுது ரெண்டாவது கரு உண்டான போதும் சரி அவன் ஆண் குழந்தை என எண்ணியே பேச, இதில் அவனுக்கு பெண் குழந்தை மேல் நாட்டமும் இல்லை பெண் குழந்தை பற்றிய சிந்தனையும் இல்லை.

   இதில் தெய்வானை, ‘ இப்பொழுது பெண் குழந்தை பிறந்தால் என்ன செய்வாய்??… ’ என கேட்ட பொழுதுதான்

‘ ஆமா பெண் குழந்தை பிறந்தால்….. ’ என்ற சிந்தனையே வந்தது. அதற்கு அடுத்து யோசிக்க தோணாது மூளை நிறுத்தம் செய்ய  தெய்வானையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

   அதனை கண்ட தெய்வானை,

“ என்னடா முழிக்குற??… ஓ!!… துரை இந்த முறை ஆண் பிள்ளை பிறக்கும்ன்னு கனவு கண்டுக்கிட்டு இருந்திங்களோ??…  நாம என்ன கடவு ளா??.. எதோ நம்ம புண்ணியத்துல மூத்த பிள்ளையே ஆம்பள பிள்ளை. இதுல இந்த  முறை பொம்பள  பிள்ளை பிறந்தா  என்ன செய்வ??… ” என கேட்டவரிடம்

“ இது என்ன கேள்விம்மா எல்லாம்  என் பிள்ளைதானே வளர்க்க  வேண்டியதுதான் ”  என சாதாரணமாக கதிரவன் கூற அதுல எழில்விழி அதுவரை இருந்த மன பாரம் நீங்க தெய்வானைக்கு டீயை குடுக்க,

 அவளைக்கண்ட தெய்வானையோ எழில்விழியை கண்டு,

“ நான் பார்க்க தானே போறேன். இது மட்டும் பொம்பள பிள்ளையா இருந்தா எப்பிடி வளக்க போறன்னு.  ஏன் அவன் குணம் உனக்கு தெரியாது??… நாளை பின்ன பிள்ளை வளர்ந்து கட்டிக்குடுக்கற இடத்துல பெண்ணை குடுத்துட்டு தலை குனிஞ்சு  போனும். அது தெரியாது உனக்கு. அவன் குணத்துக்கு யாரையும் அனுசரிக்கமாட்டான். அவனா பெண்ணுக்காக   குனிஞ்சு  நிமிர போறான் ” என கூற எழில்விழியோ கணவனை ஓர் பார்வை பார்த்துவிட்டு தெய்வானையிடம்,

“ அத்தை எனக்கு பொம்பள பிள்ளை வேணும்ன்னு ஆசை. அதனால நான் பெத்துக்கத்தான் போறேன். அதுவும் பத்து பிள்ளை பெத்து பத்தாவதா பொம்பள பிள்ளை பிறந்தாலும் பரவா இல்லை. நான் படிக்காத படிப்பை வேலையை தன்னம்பிக்கையை தைரியத்தை நல்ல வாழ்க்கையை என் மகளுக்கு குடுக்கணும். அது என்னோட ஆசை” என எழில்விழி கூறினாலும் பார்வையோ ‘ நீ ஏதாவது கூறேன்’ என்ற இறைஞ்சுலுடன் கணவனையே நோக்கியது.

   எழில்விழி வாயை திறந்து கூறினாலே கதிரவன் புரியாது ஆயிரம் குறை கூறுவான். இதில் பாவையின் பார்வையின் பொருளை கணவன் சரியாக புரிந்த்துக்கொள்ளவா போகிறான்??…..

   கதிரவன் அவளின் பதிலில் அவளை ஒரு முறை அழுத்தமாக பார்த்தவன் ஒன்றும் கூறாது நிற்க  தெய்வானையோ,

“ ஹ்ம்ம்…. நல்ல ஆசை போ உனக்கு. பொம்பள பிள்ளை வேணும் கொஞ்சனும்ன்னு செய்யணும்ன்னு ஆசைன்னா ஏன் சாரதா கணேசன் பிள்ளை  இல்ல. அவளை தூக்கி கொஞ்சு. அதை விட்டு இன்னொரு பிள்ளை பெத்துக்கணுமா???…” என கேட்க,

   அதுவரை அமைதியாக பேசிக்கொண்டிருந்த எழில்விழி தெய்வானையின் பேச்சில் கணவனை காண, அவன் எதுவும் கூறாது அமைதியாக நின்றுகொண்டிருக்க  அதனை கண்டு அவனுக்கும் தெய்வானை பேச்சில் உடன்பாடு என எண்ணி,

“ அத்தை யாரு சொன்னாலும் ஏன் உங்க பிள்ளையே சொன்னாலும் நான் என் குழந்தையை பெத்து எடுக்கதான் போறேன். அவரே இந்த குழந்தையை அழிக்க சொன்னாலும் நான் செய்ய மாட்டேன். நான் கோழைதான்,

   தைரியமான மகளா அன்னைக்கு என் படிப்புக்காக நான் போராடிருக்கணும், தைரியமான மருமகளா புகுந்தவீட்டுல என் சுயமரியாதையை காப்பாத்திருக்கணும். தைரியமான மனைவியா என் புருஷன்கிட்ட நான் என் காதலை என் வலியை வெளிப்படையா சொல்லி என்னைய புரிய வச்சுருக்கனும். ஆனா இதை எதுவும் நான் செய்யல. அதனால நான் ஒரு நல்ல தைரியமான அம்மாவா வாச்சும் இருக்கனும்ன்னு நினைக்குறேன்.

   அதனால என் குழந்தையை அழிக்க மாட்டேன். உங்களுக்கு எல்லாம் பிடிக்கலைன்னா என் பிள்ளையை தூக்க வேணாம் கொஞ்ச வேணாம்” என கூறி கதிரவனை கலங்கிய கண்களால் முறைத்துவிட்டு அறையைவிட்டு வெளியேறிவிட,

“ பார்த்தியா அவ பேசுறதை எல்லாம். நீ குடுக்குற இடம். பேசிகிட்டு இருக்கைல ஒரு மட்டு மரியாதை இல்லாம பேசுறா.

    நான் என்ன சொல்லிட்டேன் நீ பொண்ணுங்கன்னா இப்படித்தான் இருக்கனும்ன்னு நினைக்குற ஆளு. இதுல உன் பொண்ணு எதாவது சின்ன தப்பு பண்ணுனாலும் உன்னால தாங்க முடியுமா??… இல்ல இந்த கால பிள்ளைங்க சொல்றதை கேட்குற மாதிரியா இருக்குங்க” என தெய்வானை மீண்டும் பேச அதில் கடுப்பான கதிரவன்,

“ இங்க பாரும்மா உன் பேச்சை கேட்குற ஆளு எல்லாம் நான் இல்ல. பெத்துக்குற எங்களுக்கு தெரியும் பிள்ளையை வளக்க சும்மா தொணதொணன்னு எதையாவது பேசாத” என கூறிவிட்டு அவனும் அறையைவிட்டு வெளியேறிவிட,

   மகன் மற்றும் மருமகளின் உதாசனத்தில் உடனடியாக ஊருக்கு தெய்வானை கிளம்ப கதிரவனும் எதுவும் கூறாது பஸ் ஏற்றிவிட்டு ஸ்வாமிநாதனுக்கு  அழைத்து  இங்கு நடந்ததை மேலோட்டமாக கூறி தெய்வானை ஊருக்கு வருவதை சொல்ல ஸ்வாமிநாதனோ,

“ அவ கிடக்குறா விடு கதிரு. அவளுக்கு அவ நினைச்சது நடக்கணும். இல்ல அப்படி நடக்கலைன்னா நாம பேசுறதுக்கு செய்றதுக்கு எல்லாம் எதிரா சொல்லணும். இல்லைனா அவ மனசு ஆறாது. நான் அவளை பார்த்துக்கறேன் நீ எழிலை பார்த்துக்கோ. நான் ஒரு வாரத்துல வரேன் பார்க்க” என கூற கதிரவனும் சிறுது நேரம் பேசிவிட்டு  அவனின் வேலையை பார்க்க  சென்றுவிட,

    இரவு பத்து மணிபோல வீட்டிற்கு வந்தவன் ஹாலில் அவனுக்காக காத்திருக்கும் மனைவியை சட்டை செய்யாது அறைக்கு சென்று ஆடை மாற்றி உறங்க செல்ல அதனை கண்டு,

“ என்னங்க சாப்பிட வாங்க” என எழில்விழி அழைக்க அதில் கடுப்பான கதிரவன்

“ இங்க பாரு பொம்பளைகளை அடிக்குறது  ரொம்ப மட்டமான கேவலமான செயலா நினைக்குறவன் நானு. அதனால் தயவு செய்து இப்போ எதையாவது பேசி என் கையை ஓங்க வச்சுறாத” என கூறி மீண்டும் படுத்து கண்களை மூடிக்கொள்ள,

   கணவனின் பேச்சில் அதிர்ந்தவள் கணவனை கலங்கிய கண்களோடு உறுத்து விழிக்க,

    கதிரவனின் இமைக்குள் விழிகள் அசைவதை வைத்தே அவன் உறங்கவில்லை என்பதை உணர்ந்தவள் சிறுது நேரம் எதுவும் பேசாது பேச தோன்றாது அமைதியாக இருந்தவள் பின் உண்ணவும்  தோணாது ஹாலில் தரையில் அமர்ந்து விட்டத்தை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள்.

    அவளால் கணிக்கவே முடியவில்லை கதிரவனின் இன்றை கோவம் எதற்கென்று.  ‘ ஒரு வேளை’ என எண்ணி வேகமாக தனது வயிற்றை இரு கரங்களை அணைத்துக்கொண்டாள். விழி நீரை   துடைக்க தோணாது,

“ உன்னைய இழக்க  மாட்டேன் பாப்பா. நீ வேணும் அம்மாவுக்கு.  நீ என் பொண்ணுதான். எனக்கு தெரியும் நீ என் பாப்பா” என தனக்குள்  சிறு புள்ளியாக  இருக்கும் தனது மகவுடன் பேசிக்கொண்டிருக்கையில்,

    அறையில் படுத்து இருந்தவன் அவளின் அரவம் கேட்காது இருக்க அறையை விட்டு  வெளியே வந்து பார்க்க ஹாலில் அமர்ந்து  அநாதரவான தோற்றத்தில் இருந்தவளை கண்டு அவனின் மனதில் வலி உண்டாக தனது கோவத்தை மறந்து அவளை வேகமாக நெருங்கி,

“ என்னடி ஏன் இப்படி இருக்க?…” என கேட்டவனிடம்

“ என்னங்க…. என்னங்க… என… எனக்கு…” என எழில்விழி தேம்பி அழ

   அதில் மேலும் கடுப்பானவன்,

“ என்னடி??… என்ன சொல்லி தொலை. எதுக்கு அழுற???…” என கதிரவன் கத்த

“ இல்ல எனக்கு இந்த பாப்பா வேணும்ங்க. நான் ரொம்ப ஆசையா இருந்தேன் பொம்பள பிள்ளை வேணும்ன்னு” என அழுகையுடன்  கூற

“ அதுக்கு ஏண்டி இப்படி அழுற. யாரு இப்போ என்ன சொன்னா??… இந்த வீட்டுல என் குடும்பத்துல நான் சொல்றதுதான் முடிவு. நாம இந்த பிள்ளையை பெத்துக்கத்தான் போறோம் சரியா??…  எங்க அம்மா சொன்னா நான்  கேட்டுடுவேனா??…” என கதிரவன் மீண்டும் எரிச்சல் குரலில் கூற

“ இல்ல உங்க….. உங்களுக்கு பெண் குழந்தை பிடிக்காதா??… வேணாமா?…” என மெதுவாக கேட்க

“ ஆமா எனக்கு பெண் குழந்தை வேணாம். இதுவும் ஆண் பிள்ளையா இருந்தா சந்தோசம். அதே பெண் குழந்தையை இருந்தா….” என சிறுது இடைவெளி விட்டவன்

“ ஹ்ம்ம் பெண் குழந்தையா இருந்தா என்ன செய்ய வளர்த்துதான் ஆகணும். ஆனா  எனக்கு…. நான்…. ம்ச்ப் பொண்ணா இல்லாம ஆண் குழந்தையா இருக்கனும்ன்னு வேண்டிக்குறேன். வேற என்ன சொல்ல” என கூறிவிட்டு சமையல் அறைக்கு சென்றவன் சிறுது நேரம் சென்று  எழில்விழியிடம் வந்து,

“ விழி எந்த குழந்தையா இருந்தாலும் ஆரோக்கியமா இருக்கனும். அதுக்கு முதல்ல சாப்புடு” என  கூறிவிட்டு  அறைக்கு சென்றுவிட அவனின் பின் வந்தவள்,

“ என்னங்க எதுக்கு உங்களுக்கு பொண் குழந்தை வேணாம்ன்னு சொல்றிங்க?…” என மெதுவாக எழில்விழி கேட்க  கதிரவனோ,

“ போ போய் உன்னைய  சாப்புடுன்னு சொன்னே” என கூறிவிட்டு படுக்க ஆயத்தமாக எழில்விழி மீண்டும் அவனை நெருங்கி,

“ எதுக்கு என் மேல வந்தவுடனே கோவமா இருந்திங்க??…” என கேட்க

“ ஏன்னு உனக்கு  தெரியாது??….” என  அவளின் தோளினை அழுத்திபற்றி கேட்ட கதிரவனின் கண்கள் கோவத்தில்  ரத்த சிவப்பென சிவந்து அவளை உறுத்துவிழித்த அவனின் விழி பாஷை புரியாது பயத்தில் ஓரடி பின் வைத்து நகர அவளை இன்னும் கதிரவன் முறைத்துக்கொண்டிருந்தான். 

 

 

நீ தந்த காயமும்
நீ தந்த கோபமும்
என்னோடு இருக்கிறதே…….
நான் தந்த பாசமும்
நான் கொண்ட நேசமும்
உன்னோடு இருக்கிறதா
….

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!