Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சுதர்சன சக்கரம்

சுதர்சன சக்கரம் – 14

பச்சை விளக்கு வந்தும், அந்த வாகன நெரிசலில், சிவாவால் வேகமாக செல்ல முடியவில்லை.

இதே போல ஊர்ந்து ஊர்ந்து சென்று, அவன் அந்த லாரியை பிடிப்பது இயலாத காரியம். அதனால் தான், துரிதமாக செயல்பட்டு, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தான்.

பல்லைக்கடித்துக் கொண்டு அவன் தன் மகிழுந்தை செலுத்த, அப்போது காவல்துறையினரிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

“சார்! நீங்கள் சொன்ன அந்த லாரி, எங்கள் கண்காணிப்பு கேமெராவில் பதிவாகி உள்ளது. ஆனால் அது வேறு ஒரு சாலையில் திரும்பும் போது, அதை நாங்கள் தவறவிட்டுவிட்டோம் சார்.” என்று பயபக்தியாக கூறினர்.



Advertisement

அதில் எரிச்சல் அடைந்தவன், “ஏன் அந்த சாலையில், நீங்கள் கண்காணிப்பு கேமெரா வைக்கவில்லையா?.” என்க.

“அது பழுதடைந்துவிட்டது சார். அதனால் எங்கள் டீம்மால் அந்த லாரியை பிடிக்கமுடியவில்லை.” என்று சாதரணமாக பதில் கூறி வைத்தனர்.

“கொலைகாரனைப் பிடிக்க, இவர்களை நேரில் வரச்சொன்னால், என்னவெல்லாம் காரணம் கூறுகின்றனர்.” என்று முணுமுணுத்துவிட்டு, அவன் தான், அந்த கொலைகாரனின் அடுத்த குறி என்பதனை அறியாமல், தன் நிறுவனத்திற்கு சென்றான்.

Advertisement

ஒளி ஊடுருவாத இருட்டு அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தது அந்த உருவம். சனா தன் குறியில் இருந்து தப்பிவிட்டதை நினைத்து கோபத்தில் கத்திக்கொண்டிருந்த, அந்த உருவம், தன் அடுத்த குறியான சிவாவின் புகைப்படத்தில் வட்டம் போட்டு வைத்தது.

Advertisement

அதிஷ்டவசத்தால் உயிர் தப்பிய சனாவைப் போல சிவா தப்பிப்பானா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

***************************

சக்ராவின் இதழ் தந்த சுகத்தில் பனிக்கட்டியாகியவள், அவன் கண்கள் தந்த வேட்கையில், சூரியன் வெட்கையில் உருகிய பனிக்கட்டியைப் போல், சுயத்துக்கு திரும்பி, கோபமாக தன் இதழை துடைத்தாள்.

Advertisement

பின் அவளை மென்புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த சக்ராவை நோக்கி தீப்பார்வை பார்த்தவள், “இதற்கு என்ன அர்த்தம் சக்ரா?. என்னை கவுக்க விபத்து போல நாடகம் ஆட தேவையில்லை.” என்றவள் தன் இதழில் கைவைத்து, “இதுவே போதும். என்று சொல்லாமல் சொல்கின்றாயா?” என்று அனல் தகிக்கும் அஞ்சன விழிகளில் உறுத்து விழித்தாள்.

தொடர்ந்து பேசியவள், “என்னை அவ்வளவு கீழ்த்தரமாக நினைத்தாயா?.” என்று ஒவ்வொரு வார்த்தைகளிலும் அழுத்தத்தைக் கூட்டி கேட்டாள்.

அவன் பதில் கூறுவதற்குள், ‘ஆம் அப்படித்தான். அவன் இதழ் அணைப்பில் நீயும் உலகம் மறந்து தானே நின்றாய்!.’ என்று அவளது உள்ளம் அவளைக் காறி உமிழ்ந்தது. அதில் தன்னை நினைத்தே அவளுக்கு கேவலமாக இருந்தது.

அவள் அனல் மிகுந்த பேச்சு, அவனை எதுவும் செய்யவில்லை. தன் கையைக்கட்டிக் கொண்டு சாவகாசமாக நின்றவன், “இதில் இருந்தே உன் உள்ளம் எனக்கு புரிந்துவிட்டது சனா.” என்றான் கனிவு மிகுந்த குரலில்.

“என்ன?. என்ன உளறுகின்றாய்?.” என்று புரியாமல், கண்கள் இடுங்க அவனைப் பார்த்தாள்.

“உன் மனதில் உள்ளவற்றை மறைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை நீ அறிவாயா?” என்று கேட்டபடியே அவள் கையைப்பற்றினான்.

உடனே சனாவின் மனதிலோ அதிக பரபரப்பு உண்டானது.

“உண்மையைக் கூறு சனா… உன் மனதில் நான் இருப்பது உண்மை தானே!. இல்லை என்றால் உன் தந்தையைப் போலவே நானும் இருந்து விடுவேன் என்று பயப்படுகின்றாயா?.” என்று கேட்டவன் கண்களில் காதல் மட்டுமே வழிந்துகொண்டிருந்தது.

அவனிடம் இருந்து தன் கையை உருவியவள், “என்ன பேசுகின்றாய் சக்ரா!. எனக்கு பயமா?.” என்று ஒற்றை உதடு வளைத்தபடி கேட்டவள், “என் அன்னை என்னை ஒரு வீர மகள் போல தான் வளர்த்திருக்கின்றார். எனக்கு பயம் என்பதே கிடையாது.” என்று வீரமங்கையாக பேசினாள்.

“பின் ஏன் தயங்குகின்றாய்?. நாம் இருவரும் சேர்ந்து வாழ்ந்து தான் பார்ப்போமே!.” என்று கூறியபோது, சனாவை இதற்கு எப்படியாவது ஒத்துக்கொள்ள வைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் தீவிரமாக இருந்தது.

இப்போது நிமிர்ந்து அவனை நேர்பார்வை பார்த்தவள், “அதெல்லாம் முடியாது. என் சாவியை நீ கொடுத்தால் நான் இப்படியே சென்றுவிடுவேன்.” என்றவள், தான் வந்த விஷயத்தில் குறியாக நின்றாள்.

பெருமூச்சு ஒன்றை விட்டவன் பார்வை அவள் கழுத்தை ஆராய்ந்தது. உடனே சிறிதும் யோசிக்காமல், அவள் புடவையுனுள் இருந்த தாலியை எடுத்து வெளியே போட்டவன், “இது உண்மை தானே! இதுக்கு மதிப்பு கொடுத்து தானே திருமணம் வேண்டாம் என்கின்றாய்!.” என்று ஆவேசம் மிகுந்த குரலில் கேட்டான்.

அவனது கோபத்தில் பெண்ணவளும் வெகுண்டு எழுந்து, “ஆம் அப்படித்தான்… ஆனால் அதற்காக உன்னுடன் வாழ முடியாது.” என்று உண்மையைக் கூறிவிட்டாள் சனா.

அதைக்கேட்ட சக்ராவின் முகத்தில் வெற்றியின் களிப்பு தாண்டவமாடியது.

புன்னகையை இதழ்களுக்குள் அடக்கிக்கொண்டவன், “உனக்கு இந்த ஒரு சாவி மட்டும் போதுமா?. உன்னிடம் இருப்பதைத் தவிர மிச்சம் ஐந்து சாவிகள் வேண்டாமா?.” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டான்.

“இல்லை தேவை இல்லை. இரண்டு சாவிகள் மூலமே அதை திறந்துவிடலாம். முதலில் அதை என்னிடம் கூடு.” என்று தன் கையை நீட்டினாள்.

அவள் சொன்னதைக் கேட்டு, ‘பெட்டியை திறக்க இரண்டு சாவிகள் மட்டும் போதுமா! இவள் என்ன புது கதை சொல்கின்றாள்!. இதைப் பற்றி தாத்தாவிடம் பேசவேண்டும்.” என்று தன் மனதினுள் நினைத்துக்கொண்டான்.

“என்னுடன் சேர்ந்து வாழ்ந்தால், அது உனக்குக் கிடைக்கும்.” என்றவன் கண்கள் சனாவின் சிவந்த கண்களை நோக்கின.

“விருப்பம் இல்லாத பெண்ணை வற்புறுத்த உனக்கு எந்த வித அதிகாரமும் கிடையாது சக்ரா.” என்றவள் அடுத்த கணத்தில், “இந்த தாலிக்கு மதிப்பு கொடுத்தது உண்மையாக இருந்தாலும், உன் மேலே எனக்கு சிறிதும் காதல் இல்லை. இனியும் வராது. திருமணம் என்ற ஒரு அத்தியாயம் என் வாழ்வில் கிடையாது.” என்று உறுதியாக கூறினாள்.

“சும்மா இதையே சொல்லாதே எனக்கு விளக்கம் கூறு.” என்றான் எரிச்சல் மிகுந்த குரலில்.

“இங்கே பார் சக்ரா… என் தந்தையை நினைத்து ஒன்றும் நான் திருமணம் வேண்டாம் என்று கூறவில்லை. தெரிந்தோ தெரியாமலோ நீ என் கழுத்தில் தாலியை அணிவித்துவிட்டாய். என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது என் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் தான். அதற்காக உன்னுடன் என்னால் வாழ முடியாது.” என்று கூறிவிட்டு சுவரை வெறிக்க ஆரம்பித்தாள்.

அவள் தன் கருத்தில் பிடிவாதமாக இருந்தாள். அதற்கு அந்த வீட்டில் தன் அன்னைக்கு ஏற்பட்ட அநீதியாக கூட இருக்கலாம். அது சக்ராவிற்கு புரிந்தே இருந்தது. இருந்தாலும் அதனை உறுதி செய்துகொள்ள அவளிடம் கேட்டான்.

“ஏன் அப்படி சொல்கின்றாய்?. நான் ஆறு அடியில் அழகாக இருக்கின்றேன். எயிட்பாக் கூட இருக்கின்றது.” என்று தன் ஆர்ம்ஸை தூக்கிக் காட்டியபடி கேட்டான்.

அதற்கு அவனை நக்கலாக மேலிருந்து கீழ் பார்த்துவிட்டு, “திருமணம் என்பது இருவர் மட்டுமே சம்பந்தப்பட்டது கிடையாது சக்ரா. என் அம்மாவின் வாழ்வை அழித்த உன் வீட்டில் என்னால் வாழ முடியாது. உடனே தனியாக சென்று விடலாம் என்று கூறாதே!. உன் அன்னையை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவ்வளவு கோபம் வருகின்றது. அவரின் மகனான உன்னையும் எனக்கு பிடிக்கவில்லை.” என்றவள் சிறிது யோசித்துவிட்டு, “ஏன் நீயும் தானே சிறுவயதில் என்னை வெறுப்பாக பார்த்தாய்!.” என்று சொல்லி நிறுத்தினாள்.

‘அது இப்போது தான் உன் நியாபகத்தில் வரவேண்டுமா!.’ என்று மனதினுள் சலித்துக்கொண்டவன், தன் காற்சட்டைப் பையில் இருந்து அந்த சாவி பெண்டன்ட்டை எடுத்தவன், “எனக்கும் வேறு திருமணத்தில் நாட்டம் இல்லை. ஆனால் சில காலம் வாழ்ந்தாலும், உன்னுடனே வாழ நினைக்கின்றேன். இரண்டு மாதங்கள்…. இரண்டே மாதங்கள் மட்டும் நீ என்னுடன் வாழ்ந்தால், நான் உனக்கு இதை தருகின்றேன்.” என்று அந்த பெண்டன்ட்டை சுட்டிக்கட்டியபடி கூறினான்.

“அதை என்னிடம் கொடு…” என்று சொல்லி அதை அவள் பறிக்க முயல, தன் தலைக்கு மேல் அதை தூக்கி பிடித்தவன், “உனக்கு வேறு வழி இல்லை சனா… இல்லையேல் சாவியை மறந்துவிடு…” என்றான்.

“என்னை மிரட்டாதே சக்ரா!. அதை உன்னிடம் இருந்து எப்படி வாங்க வேண்டும் என்பதை நான் அறிவேன்.”

“எப்படி?.” என்றவன் மூச்சை இழுத்து வெளியே விட்டு, “இதோ இந்த வீட்டிலையே நாம் வசிக்கலாம் சனா…. இரண்டே மாதங்கள்…. இது உன்னையும் என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் நான் பார்த்துக்கொள்கின்றேன். சரி என்று மட்டும் சொல் சனா…” என்று அவன் கண்கள் அவளிடம் யாசித்தன.

அவன் இறுதியாக சொன்ன வாக்கியத்தை யோசித்துப் பார்த்தாள் சனா. அவளுக்கு அவன் மீது காதல் இருக்கா, இல்லையா என்பதே தெரியவில்லை. ஆனால் அவன் தொடுதலில் சில சமயம் மின்சாரம் பாய்ந்த உணர்வு இருந்தது. ஆனால் அதற்கு அவளால் பெயர் சூட்ட இயலவில்லை.

“சரி. வெறும் இரண்டு மாதங்கள் தானே! நான் உன்னுடன் இருக்கின்றேன். ஆனால் கணவன் மனைவியாக இல்லை. நீயும் சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும்.” என்று கறாரான குரலில் கூறினாள்.

சக்ராவின் ஆவல் ததும்பிய கண்கள், “சரி சனா. உன் விருப்பம்.” என்று உடனே ஒத்துக்கொண்டான்.

‘எனக்கு இதுவே போதும். இரண்டு மாதத்தில் உன் அடி மனதில் உள்ள காதலை வெளியே கொண்டு வருகின்றேன் சனா.’ என்று மனதில் இன்பமாய் நினைத்துக் கொண்டான் சக்ரா.

அப்போது சனாவிற்கு மாலினியிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை எடுத்து அவள் காதில் வைத்ததும், “அக்கா! ஒரு பிரச்சனை. சீக்கிரம் வீட்டிற்கு வா….” என்றவள், சனா என்னவென்று கேட்பதற்குள் இணைப்பை அணைத்திருந்தாள்.

சக்ராவும், சுதர்சனாவும் சேர்ந்து சுதர்சன சக்கரமாய் மாறுவார்களா என்று இன்னும் இரண்டு மாதங்களில் தெரிந்துவிடும்.

தங்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல், இவர்கள் ஒரே வீட்டில் வசிக்க முடிவெடுத்தது, வேதாவிற்கு மட்டும் தெரிந்தால், இவர்களின் நிலை?.

***********************************

“இன்றைக்கு நான் என் வீட்டில் இருந்த ஒரு பழங்கால பெட்டியை திறக்கப்போகின்றேன்.” என்று சொல்லிக் கொண்டே ஒரு சிறு பெட்டியை எடுத்து நேரலை காணொளிப்பதிவைத் துவங்கினான் சிவா.

“இதோ இது தான் அதற்குரிய தங்க சாவி…” என்று கூறிக் கொண்டே தன் கழுத்து சங்கிலியில் இருந்த பெண்டன்ட்டை கழட்டினான்.

“இதோ… இந்த பெண்டன்ட்டை வைத்து தான் நான் இந்த பெட்டியை திறக்கப்போகின்றேன். இதில் நிஜமாகவே பொக்கிஷம் ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்கலாம்.” என்று சொல்லிக் கொண்டே, அந்த பெண்டன்ட் சாவியை ஓட்டையின் உள்ளே விட்டான்.

அதை திறந்து கொண்டிருக்கும் போதே, “அச்சிச்சோ…” என்று ஒரு வித வினோத ஒலியை எழுப்பினான் சிவா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!