Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ராகம் – 17.4

அதிர்துடியன் செல்லவுமே யாழியின் பார்வை உடைந்திருந்த கைபேசியில் பதிய ‘என்னாகியது தனக்கு..? ஏன் இப்படி நடந்து கொள்கிறேன் எத்தனை பேர் திருமணத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி எப்படி எல்லாம் போஸ் கொடுத்து அவர்கள் காதலை வெளிபடுத்தி சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்டு லைக்ஸ் அள்ளி குவிக்கின்றனர்.., ஆனால் என்னால் கணவனுடன் ஒரு செல்பி எடுக்க முடியவில்லையே ஏன்..? என்ற கவலை அரிக்க தொடங்கி விட்டது.

அதே சமயம் ‘க்ளோஸ் யுவர் ஐஸ் யாழி’ என்றபடியே அவள் முன் வந்து நின்றான் அதிர்,

‘எதுக்கு..??’ என்பதாக அவள் பார்க்க..,

அது சர்ப்ரைஸ்..!! இப்போ சொல்ல முடியாது நீ கண்ணை மூடு’



Advertisement

‘சர்ப்ரைசா..’ என்றவளிடம் இத்தனை நேரம் இருந்த வேதனை மறைந்து முகம் கொள்ளா புன்னகை…!!

பரவாயில்லை அவள் பயந்தது போல அல்லாமல் இவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தெரிந்திருக்கிறதே என்று நினைத்தவளுக்கு காணொளிகளில் கண்டது போல தன்னையும் இரவு நேரத்தில் கண்ணை கட்டி  வெளியே கூட்டி சென்று… என்று கற்பனைகள் சிறகு முளைக்கவும்,

‘ஓகே’ என்று ஜோராக தலை அசைத்தவள் இருகண்களையும் மூடிக்கொள்ள சில நிமிடங்களுக்கு பின் ‘இப்போ திற’ என்றான்.

Advertisement

யாழியும் முகத்தில் இருந்து கைகளை அகற்ற அடுத்த நொடியே அவள் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது மெத்தையில் அவள் எதிரே இருந்த பரிசை கண்டு.

Advertisement

கிட்டத்தட்ட அமர்ந்திருந்த அவள்  உயரத்திற்கு இணையாக  இருந்த பெட்டியை கண்டவள் , ‘எனக்கா..??’ என்று நம்பமுடியாமல் அவனை பார்க்க 

‘ஆம்’ என்றவன் அவள் அருகே அமர்ந்தான். 

‘இதை ஏன் முதல்லையே சொல்லலை நா… நான் எவ்ளோ… என்னென்னமோ நெனச்சேன்’ என்றவளுக்கு ஆனந்த கண்ணீர் ஊற்றெடுக்க  கண்களை துடைத்து கொண்டே ஆவலுடன் மெத்தையில் ஏறி நின்றவள் வேக வேகமாக  பெட்டியை திறந்து உள்ளே பார்க்க யாழியின் விழிகள் இப்போது கொண்ட அதிர்ச்சியில் மூடவும் மறுத்தது..!! 

Advertisement

அவள் செவி தீண்டி,  ‘பிடிச்சிருக்கா..??’ என்று அதிர் கேட்டது கூட யாழிக்கு கேட்கவில்லை  அந்த அளவு பேரதிர்ச்சி..!!

‘யாழி உன்னை தான் கிப்ட் பிடிச்சிருக்கா..??’ என்றிட, 

‘விழிகளில் கலக்கத்துடன் ‘என்ன இது..??’ என்பது போல அவனை பார்த்தாள்.

‘எப்பவும் ஒரு வைப்போட வளர்ச்சியில ஹஸ்பன்ட்டோட பங்கு கட்டாயம் இருக்கனும்ன்னு நினைப்பேன்..  இப்போ ஏதோ என்னால முடிஞ்சது.. கண்டிப்பா உன்னை சர்ப்ரைஸ் பண்ணி இருப்பேன்னு நம்புறேன்’

‘அது.. அதுக்காக இப்ப..’ என்றவளின் உதடுகள் துடித்து அடங்கியது.

‘உன்னோட கனவை, ஆசையை, லட்சியத்தை நிறைவேற்ற உங்க அப்பா என்ன எபோர்ட் (effort) எடுத்தாருன்னு எனக்கு தெரியாது ஆனா இதுல உன்னோட கனவு நிறைவேறுவதற்கு தேவையான அத்தனையும் இருக்கு’ என்று கூற திருடனுக்கு தேள் கொட்டிய நிலை தான் யாழியினது..!!

பின்னே பெட்டி முழுக்க அவள் upsc எக்ஸாம்க்கு தயாராவதற்கு தேவையான புத்தகங்களை நிரப்பி வைத்திருந்தான் அதிர்துடியன்.

அவள் அதிர்ச்சியில் எழுந்த புன்னகையை லாவகமாக இதழ்களை மீறாமல் பார்த்து கொண்டவன் தொடர்ந்து,

‘மனைவியின் லட்சியத்தை தடை செய்யாம அவளுக்கு தோள் கொடுத்து அவளை உயர்த்த வேண்டியது ஒரு கணவனோட கடமை தானே..??’ என்று கேட்க,

விலகாத அச்சத்துடன்  யாழியின் தலையும் ‘ஆம்’ என்று அசைந்தது.

*************************************

‘ஏற்கனவே காலேஜ் முடிச்சிட்டு ஒரு வருஷமா இதுக்காக படிச்சிட்டு இருக்க நீ இப்போ தொடர்ந்து படிக்கிறப்போ கண்டிப்பா அடுத்த upscல டாப் ரேங்க் வர கூட வாய்ப்பு இருக்கு… ஆனா உங்க அப்பா ஏன் அவசரப்பட்டு உனக்கு கல்யாணத்துக்கு பார்த்தார்னு தான் தெரியலை எப்படி இருந்தாலும் அவர் உன்னை படிக்க வைக்க மாட்டார்ன்னு தெரிஞ்சதால தான் நான் உன்னை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சு..’

‘அப்… அப்பபோ என்னை பிடிக்காதா..??’

‘என்ன கேள்விடா இது..?? பிடிக்காத பெண்ணை காப்பாத்தா யாராவது இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுப்பாங்களா…?? எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சதால தான் உங்க அப்பா கிட்ட இருந்து காப்பாத்தி உன் கனவை நிறைவேத்த போராடிட்டு இருக்கேன்’ என்று அவளுக்கு புரியும் மொழியில் கூற அது அவளிடம் சரியாக வேலை செய்தது.

‘அவன் கூறுவது சரி தானே..!! இப்படி தான் ஆதர்ஷ நாயகன் இருக்க வேண்டும்’ என்று ஒருவர் கூறி இருந்தார் இவனும் அது போலவே இருக்கிறானே ஆ… ஆனா., ஆனால் அவளு.. என்று யோசனையில் இருந்த யாழியின் முகத்தை தன் புறம் திருப்பியவன்,

“இப்படி ஒரு உயர்ந்த லட்சியத்தை வச்சிட்டு வெறித்தனமா படிக்கிற பிள்ளைக்கு எந்த டைவர்ஷனும் இருக்க கூடாதுன்னு தான் பிரஸ்ட் நைட்க்கு நான் ரூம் டெக்கரேட் பண்ணலை’ என்று கூற யாழி முகத்தில் ஈயாடவில்லை.

“ஆனா ஒன்னு யாழி அடுத்த வருஷம் நீ கலெக்டர் ஆன பிறகு கண்டிப்பா ரூம் டெக்கரேட் பண்ணி போட்டோ எடுத்து உன் பிரெண்ட்ஸ் அப்புறம் fb, இன்ஸ்டா, ட்விட்டர் இன்னும் எங்க எல்லாம் நீ சொல்றியோ அங்க எல்லாம் போஸ்ட் பண்ணிடலாம் சரியா..??” என்று கேட்க யாழிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.

அவள் ஆசைகள் எதையும் மறுக்காமல் செய்ய ஒத்துக்கொள்கிறானே ஆனால் என்ன ஒன்று உடனே இல்லாமல் அவள் கலெக்டர் ஆன பிறகு என்கிறான் அவ்வளவே ..!!

அவனையே பார்த்து கொண்டிருந்தவள் சில நிமிடங்களுக்கு பின் “ஆஅ.. அதான் எனக்காக பூஜை கூட கேன்சல் பண்ணிடீங்களா…??” என்று கேட்டவளிடம் குற்ற உணர்ச்சி…,

அவள் குழந்தை தனத்தில் விழ துடித்த மனதை கட்டுபடுத்தியவன் “ஆமா நீ upsc மெயின்ஸ் நல்லபடியா முடி அன்னைக்கு நைட்டே பூஜையை ஜமாய்க்கலாம், என்றவன் இன்னும்  வேற எதாவது கேட்க  இருக்கா..??” என்று கேட்டிட,

‘இல்லை’ என்ற தலை அசைப்பு பெண்ணிடம்.

‘சரி நீ உட்காந்து  படி நான் உனக்கு குவெஸ்டின்ஸ் செட் பண்றேன்’

‘என்னது..??’

“ஆமாடா எக்ஸாம்க்கு ப்ரிபரேஷன் மட்டும் போதாது அப்பப்போ டெஸ்ட் வச்சி எப்படி பெர்பார்ம் பண்றோம்னும் ஸெல்ப் அனலைஸ் பண்ணிக்கணும் நீ ஏற்கனவே இதுக்காக ஒரு வருஷம் உழைச்சிருக்க அது எந்த அளவுல இருக்குன்னு எனக்கு தெரிய வேண்டாமா..?? அப்போ தானே அடுத்து என்ன செய்யலாம்ன்னு நான் முடிவு பண்ண முடியும்” என்றவன், 

‘அப்புறம் யாழி ஆன்லைன் டெஸ்ட் கூட இருக்கு குறிப்பிட்ட டைம்க்குள்ள முடிக்க அது ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் ஆனா இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் அதை அட்டென்ட் பண்ணுவ சரியா..??’ என்று கேட்க,

‘சரி’ என்று தலை அசைப்பதை தவிர யாழிக்கும் வேறு மார்க்கம் இல்லை.

‘ஓகே அப்போ இனி தினமும் ஒவ்வொரு டாப்பிக் எடுத்துட்டு உனக்கு டெஸ்ட் வைப்பேன் நீ படிக்க ஆரம்பி’ என்று கூற அரண்டு போனாள் பெண்ணவள்.

பின்னே அன்று என்ன பேசுகிறோம் என்று புரியாமல் அவசரத்திற்கு எதையோ உளறி கொட்டி அவளே வாயை கொடுத்து மாட்டி கொண்டாளே இப்போது எப்படி இதில் இருந்து தப்பிப்பது என்று புரியாமல் திகைத்திருந்தவள்  மெல்ல ‘இப்பவேவா..??’ என்று எச்சில் கூட்டி விழுங்க, 

ஆம் என்று தலை அசைத்தவன், ‘எப்பவும் எங்க அம்மா ஒரு பழமொழி சொல்லிட்டே இருப்பாங்க’ என்று நிறுத்தியவன் அச்சத்தில் வெளிறிப்போய் இருந்த அவள் முகத்தை கண்டு எழுந்த புன்னகையை அழகாய் மறைத்து, 

‘ஒன்றே செய் ! அதுவும் நன்றே செய் ! அதுவும் இன்றே செய்ன்னு..!!’ சோ நீ என்ன பண்ற இன்னையில இருந்தே படிக்க ஸ்டார்ட் பண்ணிடு.. அப்புறம் நீ கேட்ட ஹனிமூன், போட்டோஷூட் அதுவும் நீ கேட்ட போட்டோகிராபரை கையோட கூட்டிட்டு போறது எல்லாம் நீ கலெக்டர் ஆன பிறகு பார்த்துக்கலாம். இப்போ யாழிக்கு ஓகேவா..?? நீ எதிர்பார்த்த மாதிரி இருக்கேனா..?? எந்த தடையும் சொல்லாம உன்னோட ஆசை எல்லாம் நிறைவேத்திட்டேனா..??’ என்று கேட்க,

யாழியால் என்ன பதில் சொல்ல முடியும்..?? 

‘கடவுளே இதென்ன சத்திய சோதனை..!! என்னைக்கோ சும்மா அடிச்சி விட்டதை நிஜம்ன்னு நம்பி என் மேல இவ்ளோ நம்பிக்கை வச்சி இருக்காரே இப்போ நான் இல்லைன்னு சொன்னா என்னாகும்..?? கண்டிப்பா கோபப்படுவாரு, திட்டுவாரு, என்னை பிடிக்காம போகும் என்ற நினைவே அவளை கொன்று கிழிக்க அவளையும் அறியாமல் கண்ணீர் கரைபுரண்டோடியது..,

‘என்னை வேண்டாம் சொன்னா நான் எப்படி இருப்பேன்..??’ என்று வெகு நேரம் தத்தளித்தவள்  இறுதியில் ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு அமர்ந்தாள்.

எத்தனை நேரம் புத்தகத்தை பார்த்து வெறித்தவாறு அமர்ந்திருந்தாளோ  தெரியாது ஆனால் வராத படிப்பை வா வா என்றால்  எப்படி வரும்..?? என்பது தெரிய அப்போதும் அழுகை தான் வந்தது பேதைக்கு..!!

********************************

யாழி  இந்திய அரசியலமைப்பை கையில் வைத்து கொண்டு அமர்ந்திருப்பதை கண்டவன் மேஜையின் முன் அமர்ந்து அது குறித்த கேள்விகளை தயாரிக்க தொடங்கினான்.

சில நிமிடங்களிலேயே அவனருகே நிழலாட அவள் தான் என்பது புரிந்தும் அமைதியாக கேள்விகளை எழுதி கொண்டிருந்தான்,

‘என்னங்க’

‘என்னடா..??’

‘எனக்கு பசிக்குது’

‘பழம் இருக்கே சாப்பிட வேண்டியது தானே இதை கூட என்னை கேட்டுட்டு இருப்பியா..??’

‘ஹ்ம்ம் சரி’ என்று தலை அசைத்து ஆப்பிளை எடுத்தவள் ‘உங்களுக்கு..??’ என்று கேட்க,

‘நீ சாப்பிடு எனக்கு வேண்டாம்’ என்று அவன் மறுக்கும் முன் அவனிடம் ஆப்பிளை நறுக்கி கொடுத்தாள்.

எப்போதும் அவனோடு பகிர்ந்து உண்ணும் அவள் குணத்தை கண்டு புன்னகையுடன் ஆப்பிளை வாங்கி அவன் சாப்பிட தொடங்கவும் அவளும் சாப்பிட்டு வந்து அமர்ந்தாள்.

‘பசி போயிடுச்சா..?? இப்போ படி’ என்றவன் அவளருகே அமர்ந்து மற்ற புத்தகங்களை பார்வையிட தொடங்கினான்.

‘ஹ்ம்ம்’ என்று தலை அசைத்து சில நொடிகள் புத்தகத்தை வெறித்தவள் மீண்டும் அவனை சுரண்டினாள்,

‘என்னடி இப்போ திரும்ப பசிக்குதா..??’

‘இல்லை என்..எனக்கு தூக்கம் வருது..’

‘தூக்கமா..?? இவ்ளோ சீக்கிரமா..??’ என்று மணியை பார்க்க அது ஒன்பதே முக்கால் என்று காட்டியது.

‘ஆமாம்’ என்று அவள் தலையசைக்க,

‘படிக்கிறப்போ எப்படி தூக்கம் வரும்…?? 

‘இது என்ன கேள்வி.?? படிக்கிறப்போ இல்லை புத்தகத்தை கையில் வைத்திருந்தாலே தூக்கம் வரும் அத்தகைய அரிய வியாதி யாழிக்கு..!!  ஆனால் இதை அவனிடம் சொல்லவா முடியும்..?’

அதனால் அவன் நம்பும் வகையில் ‘இத்.. இது புது இடம் அதான் எனக்கு சீக்கிரமா தூக்கம் வருது’ என்றாள்.

‘என்னடி இது..?? எல்லாருக்கும் பொதுவா புது இடத்துல சீக்கிரம் தூக்கம் வராது சொல்லுவாங்க ஆனா உனக்கு மட்டும் வித்யாசமா இவ்ளோ சீக்கிரம் தூக்கம் வருது..??’ என்றிட,

‘தெரியல ஆனா தூக்கம் வருது..’ என்று அவள் கண்களை கசக்க,

‘அப்போ உன் வீட்ல வராதா..??’

‘வராது’

‘ஏன் …, அங்க விடிய விடிய படிப்பியா..??’ என்று அவன் கேட்க அதற்கும் ‘ஆம்’ என்று தலையை உருட்டி வைத்தாள்.

‘சரி அப்போ ஒன்னு பண்ணலாம் இனி நீ நைட் சீக்கிரம் தூங்கிடு காலையில படி உன்னை யாரையும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு நான் சொல்லிடுறேன்’ என்று கூற,

‘ஆனா எங்க அம்மா இங்க வேலை செய்ய சொல்லி இருக்காங்களே’

‘அதெல்லாம் தேவை இல்ல  நீ படிச்சி கலெக்டர் ஆன பிறகு மொத்தமா எல்லா வீட்டு வேலையும் பார்த்துப்ப  சரியா..??’ 

‘வாவ்’ என்று மனதினுள் குதுகளித்தவள் அப்போ லைட் ஆப் பண்ணட்டா..??’ என்றிட,

‘எதுக்கு..?? அது இருக்கட்டும்’

‘நீங்க லைட் போட்டுட்டா தூங்குவீங்க..??’ என்ற அவள் கேள்விக்கு அவனும் என்ன பதில் சொல்ல..??

‘சரி ஆப் பண்ணு’ என்று விட்டு குப்புற படுத்துவிட்டான்.

யாழியும் புத்தகங்களை எல்லாம் பெட்டியில் அடுக்கி வைத்து அதை கையெடுத்து கும்பிட்டுவிட்டு வந்து படுத்தாள்.

ஆனால் மேலும் சில நிமிடங்கள் கடந்தும் இருவருக்கும் உறக்கம் வரவில்லை,

‘ஏன் தூங்கலையா..??’ என்றான் ஒரு கையால் தலையை தாங்கி அவளை பார்த்தவாறு,

‘இல்லை’ என்பதாக தலையசைத்து ,  ‘நீங்க..??’ என்றாள்.

‘நீ இப்படி புரண்டு படுத்துட்டு இருந்தா எப்படி தூங்க..?? அமைதியா ஒரு இடத்துல படுடி’ என்றான் அதட்டலாக,

‘என்ன இது இவ்வளவு நேரம் நல்லா பேசிட்டு இருந்தாங்க இப்போ திரும்ப திட்றாங்க’ என்று எண்ணியவளுக்கு கண்களில் நீர் முட்டியது..,

‘ஷ்ஷ் யாழி என்ன இது..?? ஸ்டாப் க்ரையிங், என்னாச்சு..??’,

‘இல்ல எனக்கு எப்பவும் என்னோட டெடியை பிடிச்சிட்டு தூங்கினா தான் தூக்கம் வரும்’ என்றாள் மெல்லிய குரலில்,

‘டெடியா..?? அதற்கு இப்போது அவன் எங்கே போக ..??”

‘அது  எங்க அப்பா என்னோட டென்த் பர்த்டேக்கு வாங்கி கொடுத்தது இவ்ளோ வருஷமா பத்திரமா வச்சிருக்கேன் தெரியுமா..?? அது புசுபுசுன்னு என் உயரத்துக்கு இருக்கும் அதை கட்டி பிடிச்சிட்டு தூங்கினா தான் எனக்கு தூக்கம் வரும்’ என்றாள் மெல்லிய குரலில்,

சில நொடிகள் அவளை பார்த்தவன் பின் அவளை நெருங்கி மார்பை சுற்றி கட்டிக்கொண்டு இருந்த அவள் கைகளை தளர்த்தி மெல்ல அதற்குள் நுழைந்தான்.

அடுத்த சில கணங்களில் அவன் மூச்சுக்காற்று அவள் முகத்தில் அறைந்து கொண்டிருக்கவும் அதில் யாழி அதிர்வோடு அதிரனை பார்த்தாள்.

“இனி நான் தான் உனக்கு டெடி..!! ஆனா நீ கேட்கிற மாதிரி சாப்ட்டா, புசுபுசுன்னு எல்லாம் இருக்க மாட்டேன் கொஞ்சம் அட்ஜ்ஸ்ட் பண்ணிக்கோ” என்று அவள் முகத்தை தன் மார்பில் சாய்த்து அவளை கட்டிக்கொண்டு சொல்ல,

‘யாழிக்கோ மூச்சு தாளம் தப்பி போனது..!!

‘என்ன இது..??’ என்று நிமிர்ந்து அவஸ்த்தையுடன் அவனையே பார்த்திருக்க,

‘ப்ச் இந்நேரத்துக்கு வெளியே போய் வாங்கிட்டு வர முடியாது யாழி.., அதனால இப்போ மட்டும் இல்ல இனிமேல் எப்பவும் நான் தான் உன்னோட டெடி புரிஞ்சதா…??” 

அவன் முகமும் குரலும் அவளை வசீகரிக்க மறுபேச்சு பேசாமல் யாழி ‘சரி’ என்று தலை அசைத்தாலும் அவளருகே இருந்த அவன் முகத்தில் இருந்து அவளால் பார்வையை அகற்ற முடியாமல் போக விழிகளோ மீண்டும் மீண்டும் அவன் இடப்புற புருவ தழும்பில் நிலைத்தது… அதை கண்டவன், 

“இப்படி பார்க்காதடி நீ கலெக்டர் ஆன பிறகு தான் நமக்கு குழந்தைங்கன்னு முடிவு பண்ணி இருக்கேன் இப்படி பார்த்த அப்புறம் நம்ம பசங்களை தான் நீ கலெக்டர் ஆக்க வேண்டி இருக்கும்… ப்ளீஸ் க்ளோஸ் யுவர் ஐஸ்’ என்றதும் யாழி கண்களை இறுக மூடிக்கொள்ள அவள் உச்சியில் இதழ் பதித்து அவனும் சுகமாக கண்ணயர்ந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!