Skip to content
Post Views: 4,680
மனதிலோர் மோகன ராகம்
அத்தியாயம் 15
மிருதுளாவின் வீட்டிலிருந்து ராகா தன் பிஜிக்கு வந்து சேரவே மணி ஒன்பதாகியிருந்தது. வந்ததில் இருந்தே ராகாவின் கவனம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது அவள் கைப்பேசி. அன்றைய தினம் போல சத்யா கைப்பேசியில் அழைப்பானோ என்று பதற்றம் கலந்த ஆர்வத்துடன் அல்லாடி கொண்டிருந்தாள்.
Advertisement
கடிகார முட்கள் ஒன்பதைத் தாண்டிய பின்பும் சத்யாவிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி கூட வந்திருக்கவில்லை. அவன் “ஆன்லைனில்” இருக்கிறானா என்று நொடிக்கொரு தரம் நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தவளின் பொறுமை குறைந்து போயிற்று.
அதிலும், ஒருதரம், அவன் வாட்ஸ்ஸப்பின் “typing…” என்ற குறி கட்டிவிட்டு, செய்தி ஏதும் அனுப்பாமல் அழித்துவிடவும், ஏற்கனவே எதிர்பார்ப்புடன் காணப்பட்ட ராகாவின் கைகள், “ஆல் ஒ.கே?” என்று அவன் அன்று வினவியதைப் போலவே கேள்வி கேட்டு சத்யாவின் கைப்பேசிக்குச் செய்தி அனுப்பியிருந்தது.
“ஐய்யோ மடச்சி? எதுக்கு இப்போ அவனுக்கு மெசேஜ் பண்ண? இப்போ அனுப்புன மெசேஜ்ஜை டெலீட் பண்ணா, அதுவும் “டெலீட்டட்”ன்னு அவனுக்கு போட்டு குடுத்துரும். டேய் மார்க்கு என்னடா டிசைன் பண்ணி வச்சிருக்க வாட்ஸ்ஸப்பை. அனுப்பன மெசேஜ் வேண்டாம்னு தானே ஒரு மனுஷன் டெலீட் குடுக்கறான், அதை “உனக்கு மெசேஜ் பண்ணிட்டு டெலீட் பண்ணிட்டாங்க பாரு! என்ன மெசேஜ்ன்னு கேள்ளுன்னு” நீ போட்டு குடுக்கற! ஒரு டெலீட் மெசேஜ்ஜை சமாளிக்க, தொக்கா பல பொய்வேற சொல்ல வேண்டியிருக்கு. இந்த பாவமெல்லாம் உன்னைத் தான் சேரும். பார்த்துக்க!” என்று நிம்மதியாய் எங்கோ உலாத்தும் மார்க் சக்கர்பர்கிக்கு வாட்ஸ்ஸப் செயலி குறித்து இலவசமாகச் சில அறிவுரைகள் அள்ளி வீசினாள்..
Advertisement
அவள் செய்தி அனுப்பி நீல நிற டிக்குள் காட்டியும் அவனிடமிருந்து எந்தப் பதில் மொழியும் வரவில்லை. “சே! மெசேஜ் பார்த்துட்டும் எதும் ரிப்ளை பண்ணமாட்டேங்கறான். ஒரு வேளை, அவன் பர்சனல் விஷயத்தைப் பத்தி பேச பிடிக்கலையோ என்னவோ! அதான் அமைதியா இருக்கான்”
Advertisement
“அதுவும் அவனா எதுவும் கேட்காதப்போ, நீயாவே எதுக்கு வாலண்டியரா மெசேஜ் செஞ்சிருக்க? என்ன நினைக்க போறானோ? அவனே டென்ஷனா இருக்கான்னு தெரியுது, உனக்கு ரிப்ளை பண்ண மாட்டான். பேசாம போர்வைய இழுத்து போர்த்திட்டு தூங்கு போ!” என்று படுத்த வாக்கில் கைப்பேசியை பார்த்து கொண்டிருக்க, சத்யாவிடமிருந்து அழைப்பு வந்தது.
பதட்டத்தில் முகத்தின் நேரே பிடித்திருந்த கைப்பேசி, மூக்கில் பொட்டென விழுந்து, விழுந்த வேகத்தில் அழைப்பு ஏற்கப்பட்டிருந்தது. “ராகா! தூங்கிட்டீங்களா? டிஸ்டர்ப் பண்ணிட்டனா?” என்ற கேள்வியுடன் தான் பேச்சை துவங்கினான் சத்யா.
“சே சே இல்ல மிஸ்டர் சத்யா!” என்று துவங்கியவள், “மிஸ்டர் இல்ல,ஜஸ்ட் சத்யா” என்று சிரிப்புடன் தன்னைத் திருத்தி கொண்டாள். மறுமுனையில் அவனும் அவள் சிரிப்பில் கொஞ்சம் போல் பங்கு கொண்டான். அவன் வாயிலிருந்து மட்டுமாகவே சிரிப்பொலி எழுந்தது போலத் தோன்றவும் எப்படி இவனை சமாதானம் செய்ய என்று இதயம் பரிதவிக்கத் துவங்கியது.
Advertisement
“சாப்பிட்டீங்களா?” என்று சத்யா வினவ, ஒற்றை வார்த்தையில் எல்லாம் பதில் சொல்ல மனமில்லாத ராகா, “அதை ஏன் கேட்கறீங்க! மைக்கில் கூட சேர்ந்து சுத்துனா, வட, பஜ்ஜின்னு அவனுக்கு கம்பெனிக்கு சாப்பிட வச்சிடுவான். அதை விடக் கொடுமை, அந்த பஜ்ஜி போண்டா அமெளண்டைக் கூட கம்பெனி அக்கவுண்ட்ஸ்ல காட்டி வசூல் பண்ணிடுவான். அவன் கூடப் பஜ்ஜி டீலாம் குடிச்சேன். சுத்தமா பசிக்கவேயில்ல.” என்று முடித்தாள்.
“சாப்பிட்டியான்னு ஒரு கேள்விக்கு இவளோ பெரிய லெந்தான டைலாக் தேவையே இல்ல குமாரூ. கொஞ்சம் குறைச்சுக்கோ!” என்று சாடிய மனசாட்சியை புரம் தள்ளிவிட்டு அவனைச் சகஜமாகப் பேச வைப்பது ஒன்றே குறியாகக் கொண்டு வளவளத்தாள். மறுமுனையில் அவன் இவளது பேச்சைக் கேட்டுக் கொண்டானே தவிரப் பதில் ஏதும் சொல்லவில்லை.
மைக்கின் பஜ்ஜி காதல் பற்றிப் பேசியாகிவிட்டது.
தன் தேநீர் காதல் பற்றிச் சொல்லியாகிவிட்டது.
மேலே பேச்சை வளர்க்க, நடாஷா வளர்க்கும் நாய் பற்றிப் பேசலாம்.
வனிஷாவை நடாஷாவின் நாய் துரத்திய சம்பவம் பற்றிப் பேசலாம்.
ஆனால் மறுமுனையில் அவனிடம் இருந்து ஏதேனும் பதில்மொழி வந்தால் தானே பேச்சை வளர்க்க முடியும். அமைதியாக இவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருப்பவனிடம் மேலே தொடர்ந்து எப்படித்தான் பேச்சை வளர்ப்பது?
“நீங்க சாப்பிட்டீங்களா சத்யா?” என்று வெறுமனே அவன் மௌனத்தைக் கலைக்கவென வினவினாள். “டேய் இதுக்கும் ம்ம்ம் சப்பிட்டேன்னு ஒன் வேர்ட் ஆன்ஸர்ல பதில் சொல்லி என்னை அலர விடாத டா.” என்று மனதினுள் வேண்டிக் கொண்டே தான் கேள்வியைத் தொடுத்தாள்.
சிறிது நேரம் சத்யா அமைதியாக இருக்க, “ஹலோ, சத்யா! லைன்ல இருக்கீங்களா?” என்று வினவ, “ராகா, நான் மதியமும் ஒழுங்கா சாப்பிடலை. பசிக்குது. எங்கையாச்சும் சாப்பிட போலாமா! இஃப் யூ ஆர் ஃப்ரீ?” என்று அவன் பதில் சொல்லுவான் என ராகா சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
“ஹான்.. என்ன?” என்று அவன் கேள்வி அவள் மூளையில் பதியவே சற்று நேரமெடுத்தது. அவன் கேள்வியை மூளை உணர்ந்து, “ஹே உன்னை சாப்பிட கூப்பிடறான்!” என்று புரியவைத்து, அந்த உணர்ச்சி அவள் இதயத்தை பதைபதைக்க வைத்து, திடுதிடுத்த நெஞ்சத்தை பெருமூச்செடுத்து இவள் சமாதானம் செய்து, அவன் கேள்விக்கு உண்டான பதில் சொல்ல நேரம் எடுத்தது.
இதற்குள் அவள் மெளனத்தை சத்யா தவறாக அர்த்தம் கொண்டிருந்தான். “தப்பா கேட்டிருந்தா சாரி ராகா. ஜஸ்ட் தோணுச்சு யோசிக்காம கேட்டுட்டேன்.” என்று அவன் பேசத் துவங்கவும், ராகா பதட்டப்பட்டாள். “மத்த நேரமெல்லாம் திறந்த வாய் மூடாம பேசு, இப்போ பதில் சொல்ல வேண்டிய நேரத்தில அமைதியாகிடு” என்று தன் மனசாட்சியை சாடிவிட்டு,
“இல்ல, இல்ல, தப்பாலாம் எதும் கேட்கலை. நான் ஃப்ரீ தான். உங்களுக்கு ஒ.கேன்னா சாப்பிட போலாம். எனக்கு ஒரு வேளையும் இல்ல. இன்ஃபாக்ட் எனக்கும் லைட்டா பசிக்கத்தான் செய்யுது” என்று எங்கே அவன் மனம் மாறி விடுமோ என்ற ஐயத்தில் அவசர அவசரமாக வார்த்தைகள் வந்து விழ, அதைக் கேட்டு சத்யாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“சரி ராகா. உங்க பிஜி லோகேஷன் அனுப்புங்க. நான் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்” என்றவன் சொன்னது போலவே அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவள் பிஜி வாயிலில் வந்து நின்றிருந்தான்.
“எப்புட்ராஆ… இந்த பெங்களூர் ட்ராஃபிக்ல நீங்க நீந்தி நீந்தி பக்கத்து தெருவுக்கு போறதுக்கே அரை மணி நேரம் ஆகும். அதுக்குள்ள வந்துட்டீங்க?” என்று அவன் கார் எங்கே நிறுத்தியுள்ளான் என்று பார்த்துக் கொண்டே வினவினாள்.
அவள் “எப்புட்றா” கேட்டு கலகலவென நகைத்தவன், “நான் இங்க பக்கத்தில தான் இருந்தேன். அதான் சீக்கரம் வர முடிஞ்சது. அண்ட் கார்ல வரலை.”
“கார்ல வரலையா? என்ன சொல்லறீங்க? மல்டி மில்லியனர், தி கிரேட் சத்யசாய்ராம், கார்ல வராம வேற எப்படி வந்தீங்க? ஏன் கார்ல வரலை! கமான் டெல் மீ! டெல் மீ! த வேர்ல்ட் வாண்ட்ஸ் டு நோ!” என்று அர்னாப் கோஸ்வாமி சாயலில் கத்திக் கேட்டாள் ராகா.
“ஒரு வேளை, இங்க பக்கத்தில தான் சுத்திட்டு இருந்திருப்பானோ? காடுபெசனஹள்ளில தான் நான் தங்கி இருக்கேன்னு லேசு பாசா தெரிஞ்சிருக்குமா இருக்கும். அதான் இங்க சுத்திட்டு இருந்திருக்கானோ?” என்றெல்லாம் விபரீதமான போக்கில் மூளை யோசிக்கத் துவங்கியிருந்தது.
“ம்ம்ம்ம்கும் நினைப்பு தான் உனக்கு டோலி!! அப்படியே மேடம் பெரிய ஒ.கே கண்மணி தாரா, உன் நினைப்பாவே துல்ஹர் சுத்திட்டு திரியப் போறாராக்கும். போங்க போங்க.. மன்சை பத்திரமா பார்த்துக்கோங்க. புண்படுத்திட்டே இருக்காதீங்க” என்று தனக்குள்ளாகவே பேசிக் கொண்டாள்.
ஆனால் வெளியே சத்யாவிடம், ஆர்ப்பாட்டமாகவே பேசினாள். “கமான் சொல்லுங்க! ஐ வாண்ட் டு நோ! உங்க வண்டி எங்க? த நேஷன் வாண்ட்ஸ் டு நோ” என்றாள் சிரிப்புடன்.
“ஏ என்னங்க இன்னைக்கு பீஸ்ட் மோட்ல பேசறீங்க!” என்று அவளுக்கு மறுமொழி சொன்ன போதும், சத்யா நேரடியாக அவள் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. மனதில் இதைக் குறிப்பெடுத்துக் கொண்டவள் மேலே தூண்டி அவளாய் இந்தப் பேச்சைத் திரும்ப எடுக்கவுமில்லை.
“சரி எங்க சாப்பிடலாம் சொல்லுங்க! ஐய்யோ மல்ட்டி மில்லியனர் டின்னர்க்கு கூட்டிட்டுப் போறாரு, செம ஸ்டைலிஷ்ஷான ப்ளேஸா இருக்கப் போகுது! வகை வகையான ஐட்டம்ஸ் சாப்பிடப் போறேன்னு நினைக்கறப்போவே நாக்கு ஊறுதே! இன்னைக்கு ஒரு புடி!!!” என்று அவன் என்ன நினைத்துக் கொள்வானோ என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் ராகமாக அவள் சொல்லக் கேட்டுத் திரும்பவும் நகைத்தான்.
அவனுடன் பேசவும், சிரிக்கவும் இயல்பாகக் கைவந்தது. கைப்பேசியில் இருந்த தயக்கம் கூட நேரில் விடைபெற்றுச் சென்றுவிட்டிருக்க, இலகுவாக அவனுடன் பேசலானாள். மிருதுளா பற்றிய பேச்சையும், அன்றைய மாலையில் நடந்த ரகளையையும் இருவருமே பேசாமல் தவிர்த்தனர்.
“அவனாக இதைப் பற்றித் தன்னுடன் பகிர்ந்து கொள்ளாத போது, நானாக இந்தப் பேச்சை எடுப்பது கூடாது” என்ற முடிவை ராகா எட்டியிருந்தாள். இருவருமாய் பேசிக் கொண்டே அங்கிருந்து பத்து நிமிட நடை தூரத்தில் இருந்த ஒரு தள்ளு வண்டிக் கடைக்கு அருகில் வந்து நிற்க, கடை வாயிலில் இருந்து எழுந்த சூடான தோசை வாசம் நாசியைத் துளைத்தது ராகாவிற்கு.
“இங்க மைசூர் தோசை கார சட்னி சூப்பரா இருக்கும். சாப்பிடறீங்களா? ஐ மீன் இந்த மாதிரி கடையிலலாம் சாப்பிடுவீங்க தானே?” என குளிருக்கு இதமாய் கைகளைப் பரபரவென தேய்த்துக் கொண்டு அவனிடம் வினவினாள்.
“சாப்பாடுன்னு ஒண்ணு நேரத்துக்கு கிடைச்சா போதும். இது தான் வேணும், இங்க தான் சாப்பிடுவேங்கறதுலாம் கொஞ்ச வருஷமாவே இல்ல” என்றவன் குரல், அந்த வாக்கியத்தை முடிக்கும் தறுவாயில் வெகுவாக உள்ளே சென்றிருந்ததை ராகா உணர்ந்தாள்.
சில வருடங்கள் முன்பு அவன் அன்னை இறந்து போயிருந்தார் என்பது ராகாவிற்குத் தெரிந்திருக்க, தன் அன்னை இருந்த வரையில் நல்ல உணவை உண்டிருப்பான் என்பதும், அவர் மறைவுக்குப் பின்னர், தமக்கைக்கும் திருமணம் ஆகியிருக்க, அவனையும் அவன் தந்தையையும் “சாப்பிட்டியா?” என்று மனதாற கேட்கக் கூட ஆட்கள் இல்லாமல் போயிருப்பர் என்பதும் புலனாயிற்று.
எந்த விதத்திலும் தன் பேச்சால் அவன் மனதை புண்படுத்திவிடக் கூடாது என்ற எண்ணம் ராகாவின் மனதில் தோன்றிய நொடி அது தான் எனலாம். அவன் பேசியது காதுகளிலேயே விழாதது போல நடந்துகொண்ட ராகா, அவனுக்கும் சேர்த்து ஆளுக்கு இரண்டு மைசூர் தோசை ஆடர் சொல்லிவிட்டு, கடையின் வாயிலில் போடப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியில் அவன் அருகே அமர்ந்தாள்.
நேரம் பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்த வேளையிலும் அந்தக் கடையில் கூட்டம் குறைந்தபாடில்லை. இருவரும் சாதாரணமாகப் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசிய படிக்கே உண்டனர்.
அதிலும் ராகா சிரிப்புடன் அவனிடம் வாயாடினாலும் அவள் வார்த்தைகளில் வெகு கவனமாகவே இருந்தாள். பொதுவான சினிமா கதாநாயகர்கள், கன்னட படங்கள், ராஜ்குமார் மகன் புனீத்தின் மரணம், வீரப்பன் – ராஜ்குமார் – நக்கீரன் பற்றிய விவாதம், அன்றாட கர்நாடக – தமிழக அரசியல், காவேரி பிரச்சனை போன்ற தினப்படி விஷயங்களை மட்டுமே தன் பேச்சில் கொண்டு வந்தாள்.
தப்பித் தவறிக் கூட தன் அலுவலகம் பற்றியோ, தன் வேலை தொடர்பான விஷயங்களோ தன் பேச்சில் எட்டிப்பார்க்கா வண்ணம் நடந்து கொண்டாள். அவளது இந்த அக்கறை சத்யாவிற்கு அப்பட்டமாகப் புலப்படவே செய்தது. அவளாக மாலை நடந்த விஷயங்கள் பற்றி ஏதேனும் கேட்டுவிட்டால், மிருதுளா பற்றி குறையாய் தவறாய் ஏதேனும் சொல்லிவிட நேருமோ என்ற கவலை அவனுக்கு நிறையவே இருக்க, ராகா அவன் மனதை உணர்ந்து கொண்டவள் போலவே நடந்து கொண்டது மனதிற்கு இதமாகவும், அதே நேரம் ராகாவின் மீது மதிப்புக் கூட்டும் விதமாகவும் அமைந்தது.
இரவு உணவை முடித்துக் கொண்டதும், தன் பிஜியை நோக்கி மெல்ல நடக்கத் துவங்கியிருந்த ராகாவின் கால்கள். மனமென்னவோ அந்த இனிய மனநிலை இன்னமும் கொஞ்ச நேரம் நீடிக்காதா என்றே நினைத்தது. இத்தனைக்கும் இருவரும் காதலர்கள் இல்லை. ஏன் நண்பர்கள் கூட இல்லை. பொதுவான விஷயங்கள் மட்டுமே இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
ராகாவின் வீட்டினர் பற்றியோ, சத்யா தன் அன்னை, அக்கா பற்றியோ எதையும் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை என்ற போதிலும், மகிழ்ச்சி என்பதைக் கடந்த நிம்மதியை இருவரின் மனமும் அடைந்திருந்தது.
ராகா என்றுமே தன் வீட்டினரைப் பற்றிய பேச்சு எழும் போது பெரும்பான்மையாக அந்தப் பேச்சில் கலந்து கொள்ள மாட்டாள். தன் அன்னையின் மீதிருந்த அந்த பயம் கலந்த மரியாதை பாசமின்மை போலவே பார்ப்பவர்க்குத் தோன்றும்.
“இதென்ன அம்மா மேல கொஞ்சம் கூட பாசமே இல்லாத மாதிரி பேசறா! இப்படியெல்லாம் பொண்ணுக இருப்பாங்களா? பெத்த அம்மாவை யாருக்காவது பிடிக்காம போகுமா? இப்படி குறை சொல்லத் தோணுமா?” என்றெல்லாம் கேள்விகள் எழ வாய்ப்புகள் கொடுக்கா வண்ணம் நடந்து கொள்ளப் பழகியிருந்தாள் ராகா.
சத்யா தொனத் தொனவென அவள் வீட்டினரைப் பற்றி கேட்காமல் பொதுவான விஷயங்களைப் பற்றியே பேசியது இதமாக இருந்தது. அவனுடன் நேரம் செலவிட பிடித்திருந்தது. இந்த நிம்மதியை இன்னும் கொஞ்ச நேரம் நீட்டிக்க இயலுமா என்றே ராகாவின் மனது அசைபோட, இம்முறை சத்யா அவளது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருந்தான்.
“ராகா, தோசை காரமா சாப்பிட்டது கொஞ்சம் நெஞ்சை கரிக்கறாப்ல இருக்குல.. இங்க பக்கத்தில லஸ்ஸி ஷாப் ஒண்ணு இருக்கு. அங்க மேங்கோ லஸ்ஸீ நல்லா இருக்கும். போலாமா?” என்று அவன் கேட்க, ராகா மறுப்பேதும் சொல்லாமல் தலையசைத்தாள்.
“உன் பிஜில தேட மாட்டாங்க தானே! மணி இப்போவே பத்தரை ஆகிடுச்சு. நாம திரும்ப பிஜி போக பதின்னொன்னரை ஆகிடும். இஸ் இட் ஒ.கே ஃபார் யூ?” என்று கரிசனமாக வினவினான். ஒருபக்கம் ராகாவுடன் நேரம் செலவிட வேண்டும் என்ற எண்ணம் ஊந்தி தள்ளினாலும், அவளது நிலைமையையும் எண்ணிப் பார்க்கும் படிக்கு மனசாட்சி அறிவுறுத்தியது.
“சேசே! நான் என்ன காலேஜ் ஹாஸ்டல்லயா இருக்கேன். எப்போ போறேன்? எப்போ வருவேன்னு விசாரிக்க? பேயிங் கெஸ்ட் ஹவுஸ் தான். அதுவுமில்லாம வேலை முடிஞ்சு நேரங்கெட்ட நேரத்தில ராத்திரி, ரெண்டு மணி, மூணு மணின்னுலாம் வந்திருக்கேன். அதெல்லாம் யாரும் எதும் கேட்க மாட்டாங்க” என்றவள், தன் வேலை குறித்து அப்போது தான் வாய்திறந்திருந்தாள்.
சத்யாவின் முகம் இறுகுவது பக்கவாட்டில் இருந்து பார்வையை ஓட்டியவளுக்குத் தெரிய, “சாரி” என்று இலேசாக அவள் உதடுகள் முணுமுணுத்தன. அவன் காதுகளில் அவள் வார்த்தைகள் விழவும், அவள் பக்கம் திரும்பிப் பார்த்தவன் இதழ் பிரிக்காமல் முறுவலித்தான்.
“நீ எதுக்கு இப்போ சாரி சொல்லற?” என்று நடையை நிறுத்திவிட்டு, கைகளை பேண்டின் பாக்கெட்டினுள் விட்ட படிக்கே வினவியிருந்தான். அவன் கேள்வி அவளுக்குப் புரிந்த போதும், ராகா மௌனமாகத் தலையசைத்து, “சும்மா தான், நோ ரீசன்” என்று மட்டுமாகக் கூறியிருந்தாள். அவள் தோள் குலுக்கலுடன் பதில் சொல்லியது பார்த்து, இன்னமும் அழகாய் முறுவலித்தான்.
“கம்.லெட்ஸ் வாக்” என்று கூறியவன், அதன் பின்னர் தோண்டித் துருவி வேறெதுவும் கேட்கவில்லை. அந்த லஸ்ஸி கடை எங்கே என்று விசாரிப்பதிலும், அவன் முதல்முறை லஸ்ஸி அங்கே குடித்த அனுபவம் குறித்தும் பேச்சை திசைதிருப்பியிருந்தான். அவன் முயற்சி புரிந்து ராகாவுன் அவன் பேச்சில் முழுவதுமாக ஈடுபாடு காட்டினாள்.
அவன் கூறிய லஸ்ஸி கடையில் ஆளுக்கு ஒரு மேங்கோ லஸ்ஸி குடித்துவிட்டு, மீண்டும் வந்த வழியே மெல்லமாக நடந்து அவளது பிஜியை எட்டியிருந்தனர்.
“தேங்கியூ ஃபார் த டின்னர் சத்யா” என்று ராகா உண்மையான மகிழ்ச்சியுடன் கூற, சத்யாவும் ஆமோதிப்பாய் தலையசைத்தான். அன்றைய தினம் போலச் சப்தம் எழுப்பாமல், “தேங்கியூ” என்று அவன் கூற, அந்த நன்றி எதற்காக என்று புரிந்து ராகா மையமாய் தலையசைத்து விடைபெற்றாள்.
தன் அறைக்குள் வந்து கட்டிலில் விழுந்த நொடி,ராகாவின் கைப்பேசி, கினுங் என்றது. சத்யாவிடமிருந்து தான் மீண்டுமாய் குறுஞ்செய்தி வந்திருக்குமோ என்று ஆர்வத்துடன் கைப்பேசியை எடுத்தவளுக்கு மிருதுளாவின் எண்ணில் இருந்து வந்திருந்த செய்தியை திறந்து படிக்கக் கூடப் பிடிக்கவில்லை.
error: Content is protected !!