ராகம் – 20.1
அதிர்துடியன் தன் கையில் திணித்து விட்டு போன புத்தகத்தை கண்டவளுக்கு கண்களை கரித்து கொண்டு வந்தது.., ஒருபுறம் அவன் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அவளால் நிஜமாக்க முடியாதே என்ற வருத்தம் என்றால் மறுபுறம் இத்தனை அழகான வீட்டை ஹவுஸ் டூர் போட்டாலே இருபது எபிசொட் வரை போடலாம், இதன் அழகிய கட்டமைப்பே அதிகபடியான வியூஸ் கொடுக்கும் ஆனால் அதுவும் முடியாத நிலை..!!
பின்னே அவள் வீடியோ எடுக்க கைபேசி வேண்டுமே..?? வாங்கி கொடுத்த கையோடு உடைக்கவும் வைத்துவிட்டவனின் படுக்கை அறை, குளியலறையை மட்டுமே நான்கு வீடியோவாக போடலாம் அத்தனை பெரியது… அது மட்டுமா அவர்கள் வீட்டின் முன்புறம், பின்புறம், தோட்டம், சமையலறை, பூஜையறை, மற்றவர்கள் படுக்கை அறை என்று கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கான கன்டென்ட் கையில் இருக்கையில் அதை காணொளியாக மாற்ற முடியாத சோகம் பெண்னவளிடம்.
அவள் வீட்டிலேயே ஒருமுறை ஹவுஸ் டூர் எடுக்க முற்ப்பட்டு இருவரும் சுகமதியிடம் எக்கச்சக்கமாக வாங்கி கட்டி கொண்டதோடு இல்லாமல் இப்படி ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணினா இப்பவே உங்க அப்பாவை கூப்பிட்டு சொல்ல வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கவும் யாழி விஷ்ணுவிடம்,
Advertisement
‘என்னடா இது உங்க அம்மா இன்னும் அப்டேட் ஆகாம இருக்காங்க’ என்று குறைபட்டவள் அப்போதே அவனிடம்,
“நீ வேணும்ன்னா பாரு எனக்கு கல்யாணம் ஆனது நான் முதல் போட போறதே என் மாமியார் வீட்டோட ஹவுஸ் டூர் தான் அப்படி போட்டு உங்க அம்மா மூஞ்சில கரியை பூசலை நான் யாழி இல்லடா” என்று மார்தட்டியவளுக்கு இப்போதும் அதை நினைத்து அழுகை பீறிட்டது.
அவள் நினைத்தது போல ஒரு வீடியோ கூட எடுக்க முடியாமல் போன வருத்தத்தை தன் மனதோடு புதைத்தவள் கண்களை துடைத்து கொண்டு கீழே வந்தாள்.
Advertisement
கைபேசி சரியாகி வரும் வரை வீட்டை சுற்றிலும் இருக்கும் இடங்களை சுற்றி பார்த்து எங்கு என்ன வீடியோ எடுக்கலாம் என்று முடிவு செய்து வைக்கலாம் என்று கீழிறங்கியவள் முதலில் சென்று நின்றது காம்பவுண்ட் கேட்டில் தான்..!!
Advertisement
அங்கிருந்து அவர்கள் பங்களாவை யாழி பார்த்து கொண்டிருக்க, ‘ஹாய் யாழி..’ என்றவாறே கேட்டை திறந்து உள்ளே நுழைந்தார் ப்ரஷாந்தினி
‘இவங்களா..??’ என்று ஒரு நொடி திகைத்தவள் ‘வா.. வாங்க’ என்றவாறு உள்ளே அழைத்து சென்றவள் ‘அத்தை’ என்று அழைக்கவும்,
அவங்களை ஏன் டிஸ்டர்ப் பண்ற..?? நான் அதியை பார்க்க வந்தேன் கால் பண்ணா எடுக்கல,
Advertisement
‘ஐ திங்க் அதி இஸ் இன் டிரைவிங்’ ஆனா கல்யாணம் ஆகி புது வைப்பை தனியா விட்டுட்டு எங்க போயிட்டான்..?? என்று கேட்க,
‘இவங்களுக்கு எப்படி தெரியும்…??’ என்று அடிவயிற்றில் அமிலம் சுரக்க அவரை பார்த்த யாழிக்கு தெரியுமே இப்போது அவன் ஓசூர் சென்றிருப்பதும் அது குறித்து அவளுக்கு அழைத்து தகவல் தெரிவித்ததில்,
‘ரீச் ஆகிட்டு எப்படியும் கால் வரும் நான் அப்பவே பேசிக்கிறேன் நீ எப்படி இருக்க யாழி ..??’
அவள் மெளனமாக இருப்பதை கண்டு ‘நீ சொல்லலாம்ல’
‘ஹ்ம்ம்’
‘பால் கொழுக்கட்டை செய்தேன்…’ என்று அவர் முடிக்கும் முன்னமே,
‘நீங்க சமைப்பீங்களா டாக்டர்..??
‘ஹும் சமைப்பேனே, ஏன் கேட்கிற..??’
“இல்ல நீங்க டாக்டர் ஆச்சே அப்போ எப்படி…, எதுக்கு சமைக்கணும்..??’
அவள் கேள்வியில் எழுந்த புன்னகையுடன் “டாக்டரா இருந்தா சமைக்க கூடாதா யாழி..?? அப்போ என் பொண்ணுக்கு யார் புவா கொடுப்பா..??”
‘உங்களுக்கு பொண்ணு இருக்கா..??’
‘பெண்ணும் இருக்கா, புருஷனும் இருக்காங்க’ என்று புன்னகையுடனே கூற,
‘நிஜமாவா..?? உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா..??’
யாழியின் முகத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் போட்டி போடுவதை கண்டவர், ‘விட்டா கற்பூரம் அடிச்சி சத்தியம் பண்ண சொல்லுவ போல…’ என்று சிரிக்க,
‘இல்.. இல்லலா அப்படி இல்ல.., உங்களை பத்தி தெரியாது அதான் சும்மா கேட்டேன்’
‘அட ஆமால்ல, அன்னைக்கு சரியா இன்ட்ரோ பண்ணிக்கவே இல்ல நாம’ என்றவர் அதுக்கென்ன இப்போ சொல்றேன் என்று அவள் புறம் நன்கு திரும்பி அமர்ந்தவர்,
“அதியோட க்ளோஸ் பிரெண்ட் முரளி தான் என்னோட ஹஸ்பன்ட் அவங்க ரெண்டு பேரும் ஒரே தெரு சின்ன வயசுல இருந்தே பிரெண்ட்ஸ் நானும் அவங்க கூட தான் படிச்சேன் நான் மெடிசின் எடுத்தேன் அவரும் அதியும் பிசினஸ் லைன்ல வந்துட்டாங்க கல்யாணத்துக்கு அப்புறம் மாமியார் மாமனார் கூட தான் இருக்கேன் எனக்கு மூணு வயசுல ஒரு பொண்ணு இருக்கா இன்னும் ஆறு மாசத்துல பையன் பிறக்க போறான் இந்த தகவல் போதுமா..??” என்று கேட்க,
யாழிக்கோ படித்தால் சொந்த காலில் நின்று தனித்து வாழ்ந்து சாதிக்க வேண்டும் என்று தானே அர்த்தம் இவர் என்ன சமைக்கிறார் என்ற கேள்வி மட்டுமல்ல டாக்டராக இருந்தும் அவர் சமைப்பதும் மாமியார் மாமனாருடன் இருப்பதும் அதை விட இரண்டு குழந்தைகள் எல்லாமே மிக பெரிய ஆச்சர்யமாக இருந்தது,
‘அப்போ இவரை யாரும் சமையலறையில் முடக்கவில்லையா..??’ என்று கேள்வி அவளுக்கே எழ,
‘லூசு யாழி இதென்ன கேள்வி நீ தான் அவங்க ஹாஸ்பிட்டல்ல வேலை செய்யறதை பார்த்தியே அப்புறமும் என்ன கேள்வி இது..??’
அவர் புடவையில் இருப்பதை கண்டு, ‘நீங்க அன்னைக்கு குர்தி போட்டு இருந்தீங்க..?? இன்னைக்கு ஏன் சாரி..??’ என்று அபத்தமாக வினவ,
‘இன்னைக்கு காலேஜ்க்கு ஸ்பீச் கொடுக்க கூப்பிட்டு இருக்காங்க யாழி அதான்…’
‘ஆனா அதுக்கு ஏன் சாரில போகணும்..??’
“யாழி என்ன தான் நமக்கு ஆடை சுதந்திரம் இருந்தாலும் எந்த இடத்துக்கு என்ன மாதிரி உடுத்தணும்ங்கிற அடிப்படை அறிவு வேணும், அதோட ஆள் பாதி ஆடை பாதி இல்லையா..?? பல நேரம் நமக்கான மரியாதை நம்மளை நாம எப்படி வெளிபடுத்துறோம் என்பதை பொறுத்து அமையுது, என்ன தான் மத்தவங்க பார்வையிலன்னு சொல்லிகிட்டாலும் எப்பவும் நம்ம டிக்னிட்டி நம்ம கையில தான்” என்று கூற
யாழிக்கோ மொத்தமாக குழம்பிய நிலை ஒருவேளை படித்தும் மருத்துவராக இருந்தும் இவர் அப்டேட் ஆகாமல் இருக்கிறாரோ..?? என்று தோன்ற அவரிடம் எது கேட்க முற்ப்பட,
அதற்குள் “சரி யாழி எனக்கு டைம் ஆச்சு அதிக்கு பால் கொழுக்கட்டை ரொம்ப பிடிக்கும் அதுவும் நான் செய்யறது ரொம்பவே பிடிக்கும் மறக்காம வந்ததும் கொடுத்துடு” என்று கூற,
‘என்னது அவருக்கு பால் கொழுக்கட்டை பிடிக்குமா..?? வைப் நான் எனக்கு இது தெரியலை ஆனா இவங்களுக்கு தெரிஞ்சிருக்கு ‘ என்ற எண்ணமே மனதை பிசைய அங்கேயே அமர்ந்து விட்டவளுக்கு தான் எதிலோ தவறுவது போல தோன்ற அதை சரி பார்க்க இப்போது கைபேசி இல்லாததால் மனதினுள் உழன்று கொண்டிருந்தவள் பின் ஒரு முடிவோடு சமையலறைக்குள் சென்றாள்.
***************************************
குழந்தையுடன் விளையாடிக்கொண்டு இருந்த யாழி மாலை வீட்டிற்கு வந்த அதிர்துடியன் மாடிக்கு செல்வதை கண்டு உடனே சாருவை தேடி அவளிடம் குழந்தையை கொடுத்து விட்டு மாடி ஏறினாள்.
‘உங்களுக்கு பால் கொழு…’ என்றவாறே அறைக்குள் நுழைந்தவள் அங்கே கண்ணாடி முன் அவன் சட்டையின்றி வெற்று மார்பையும் முகத்தையும் துடைத்து கொண்டு இருப்பதை கண்டவள் விழிகள் அவன் மீதிருந்து அசைய மறுத்தது.
கண்ணாடியினூடே அவளை பார்த்தவன், ‘ஏன் அங்கேயே நின்னுட்ட உள்ள வா’ என்று அழைக்க யாழிக்கோ எங்கே அது கேட்டது..!!
‘யாழி உன்னை தான்..’ என்றவன் அப்போது தான் அவள் பார்வையை உணர்ந்து உடனே டிஷர்ட்டை தேடி எடுத்து போட்டுக்கொண்டு அவளை நெருங்கி,
‘இங்க நின்னுட்டு என்னடி பண்ற..??’ என்று உலுக்க தெளிந்தவளுக்கு அவன் விழிகளை சந்திக்கும் திடமின்றி பார்வையை தழைத்து நிற்க,
அவளை புரிந்தவனும் பேச்சை மாற்றி, ‘வரும்போது ஏதோ கேட்டுட்டு வந்த என்ன..??’
கேட்டுட்டு வந்தோமோ அப்படி என்ன என்று பல நிமிடங்களுக்கு யோசிக்க,
‘ஏதோ பிடிக்குமான்னு கேட்டுட்டு வந்தியே..’
‘ஹான் ஆமா..’ என்று ஜோராக தலை அசைத்தவள், ‘உங்களுக்கு பால் கொழுக்கட்டை பிடிக்கும்ன்னு ஏன் என் கிட்ட சொல்லலை’ என்று உரிமையாக கேட்க,
சுழிந்த புருவங்களுடன் அவளை பார்த்தவன், ‘நீ கேட்கவே இல்லையே அப்புறம் எப்படி சொல்ல..??’ என்றான்.
அவன் இயல்பாக கேட்டிருந்தாலும் யாழிக்கு ‘ஆமால நாம எதுவுமே கேட்கலையே அன்னைக்கு அவர் நமக்கு சர்ப்ரைஸ் கொடுக்கல, நமக்கு பிடிச்சதை செய்யலைன்னு நெனச்சி நமக்கு தேவையானதை தானே கேட்டோம் அவர் கிட்ட என்ன பிடிக்கும்ன்னு கேட்கவே இல்லையே’ என்று தோன்ற,
‘சா…ச.. சாரி என… எனக்கு அப்போ’
‘இப்போ எதுக்கு சாரி.., அதை விடு பிரஷா கொடுத்த பால்கொழுக்கட்டை எங்க..??’
‘அது.. கீழ இருக்கு இருங்க எடுத்துட்டு வரேன்’ என்று அவள் செல்ல முற்ப்பட,
‘நில்லு யாழி’ என்று அவளை நிறுத்தியவன்,
‘நான் எடுத்துக்குறேன் எங்க இருக்குன்னு சொல்லு..??’ என்றான்.
‘ஏன்..?? நா.. நானே போய் எடுத்துட்டு வரேன்’ என்றவளுக்கு ஏற்கனவே நேற்று அவனை ஸ்நாக்ஸ் சாப்பிட விடாமல் செய்த குற்ற உணர்வு..,
பின்னே அவள் மட்டும் மரகதத்தின் உபசரிப்பில் ஹார்லிக்ஸ், பஜ்ஜி, கொழுக்கட்டை என்று அத்தனையும் வயிற்றில் தள்ளி இருக்கும் நிலையில் வேலை முடித்து வந்திருப்பவனுக்கு எத்தனை பசிக்கும் அதற்கு சாப்பிட கொடுக்காமல் அவனிடம் கேள்வி கேட்டதே முதல் தவறு என்றால் இப்போது எடுத்து வந்து கொடுக்காமல் போவது அடுத்த தவறு என்று புரிந்தது.
பின்னே கல்லூரியில் இருந்து வரும் தம்பிக்காக காத்திருந்து இருவருக்கும் சேர்த்து எடுத்து கொண்டு மாடிக்கு சென்று அவனுடன் சேர்ந்து சிற்றுண்டி சாப்பிடுபவள் அல்லவா அவள்..!! அதனால் ‘நானே எடுத்துட்டு வரேன்’ என்று திரும்பினாள்.
அவள் கையை பிடித்து நிறுத்தியவன், ‘இங்க நீ ஒன்னும் எனக்கு அடிமையா இருக்க வரல எனக்கும் கால் இருக்கு கிட்சன் எங்க இருக்குன்னு தெரியும் நானே எடுத்துக்குறேன் நீ போய் உன் வேலையை பாரு.., ஐ மீன் போய் படி’ என்றவன் கீழே செல்ல யாழிக்கோ மனம் சுணங்கி போனது.
பின்னே மகேஷ் வேலையில் இருந்து திரும்பியதும் சுகமதி அவருக்கான சிற்றுண்டியுடன் காத்திருந்து அவருடன் சேர்ந்து பேசிக்கொண்டே காபி குடித்து முடிப்பாரே அப்போது அது பெண்ணடிமைத்தனம் என்று அவரை ஏளனம் பேசியவளுக்கு தெரியவில்லை அது நேசத்தின் பிரதிபலிப்பு என்று..!!
இப்போது ஏனோ அவனுக்காக அவள் செய்வதை தடுக்கவும் தாள முடியவில்லை.
அவர்களை கூட புறம் தள்ளிவிடலாம் ஆனால் விஷ்ணு எத்தனை நாட்கள் அவனுக்காக காத்திருந்து அவனுக்கு பரிமாறி, ஊட்டி விட்டு அவனுடன் சேர்ந்து சாப்பிட்டு இருப்பாள் ஆனால் இங்கே ஏன் இல்லை…,
கணவன் என்றால் மனைவிக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும் அதுவே பெண்கள் செய்தால் அது அடிமைத்தனம், சமையலறையோடு முடக்குவது என்று அவள் கேட்ட பார்த்த காணொளிகள் அவளையும் அறியாமல் மனதில் பதியவைத்திருக்க இப்போது அவள் எதிர்கொள்ளும் போது பெரும் குழப்பமும், தவிப்பும் செயல் பட முடியா நிலையும்.
அறைக்கு திரும்பியவன் யாழியிடம், ‘இது யார் செய்தா..??’ என்றான்.
யாழியோ அவன் பேச்சை மீறி செய்ததற்கு திட்டுவானோ என்று அமைதியாக நின்றிருக்க,
“உன்னை தான் கேட்கிறேன் யாழி.., இது பிரஷா செய்தது இல்லை பார்த்தாலே தெரியுது, வேற யார் செய்தா..??” என்று கேட்க,
‘நான் தான்..’ என்றாள் மெல்லிய குரலில்
‘நீயா..?? நீ ஏன் செய்த..??
‘உங்களுக்கு பிடிக்குமேன்னு’
‘ஆமா எனக்கு பிடிக்கும் ஆனா அதை நீ செய்யணும்ன்னு எந்த கட்டாயமும் இல்ல யாழி’ என்றான் அமைதியான குரலில்.
‘ஏன்..??’
“இதென்ன கேள்வி..?? ஒரு மனைவியை சமையலறையோடு முடக்கி போடறது நல்ல கணவனுக்கு அழகா சொல்லு..?? எனக்கு சமைச்சு கொடுக்க எங்க அம்மா இருக்காங்க, தங்கச்சி இருக்கா அவங்களால் முடியாட்டி சாரு கிட்ட ஒரு வார்த்தை சொன்னா எனக்கு ஆபிஸ்க்கு வந்துடும் சமையல் அவங்க எல்லாரும் பார்த்துப்பாங்க”
“அவங்களுக்கு முடியாதப்போ உனக்கு வேணும்ன்னா சொல்லு நான் சமைச்சு கொடுக்குறேன் ஆனா நீ படிக்கிற வேலையை மட்டும் பாரு எனக்காக எதுவும் செய்யாத” என்று அவளை தள்ளி நிறுத்த, யாழிக்கு மனமெங்கும் சொல்லில் வடிக்க முடியா வலி எழுந்தது.
‘ஏன் நான் செய்… ‘ என்றவளுக்கு தனக்கு பிடித்ததை செய்வதில் தவறில்லை அது எப்படி அடிமைத்தனமாகும் என்று கூட கேட்க தெரியாமல் நின்றாள்.
********************************************
‘நீ சாப்ட்டியா..??’
‘ஹ்ம்ம்’ என்றாள் கலங்கிய விழிகளை அவனிடம் இருந்து மறைத்தவாறு.
‘நிஜமா..??’
‘ஆமா அத்தை கூட சாப்பிட்டேன் நீங்க சாப்பிடுங்க நான் தண்ணி..’ என்று ஆரம்பித்தவள் எங்கே அவனிடம் கேட்டால் அதையும் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் விரைவாக வெளியே ஓடியவள் தண்ணீரோடு சேர்த்து காபியையும் கொண்டு வந்து வைக்க,
‘என்ன இது..?? நான் தான் உன்னை எதுவும்…’
‘இல்ல அத்தை கூப்பிட்ட மாதிரி இருந்தது கீழ போனதும் அவ… அவங்க தான் கொட… கொடுத்தது …விட்டாங்க’ என்று முடிக்கும் முன்னமே அவள் கண்களில் நீர் திரண்டு விட்டது.
பின்னே ஒருவர் பசியில் தாகத்தில் இருந்தால் தனக்கு இல்லையென்றாலும் அவர்களுக்கு உணவை அளித்து தான் அவளுக்கு வழக்கம்.., ஆ.. ஆனால் கட்டிய கணவனுக்கு உணவு பரிமாறுவது கூட பெண் அடிமைத்தனம் என்று அவள் மனதில் பதிந்து போனதை வைத்து எத்தனை முறை சுகமதியை கேலி பேசி இருப்பாள் ஆனால் இப்போது அவனே வேண்டாம் என்று கூறவும் குதுகலிப்பதர்க்கு பதில் தொண்டையை அடைத்து கொண்டு வந்தது..
‘எங்கே அழுதால் அவன் சாப்பிடுவதை நிறுத்தி விடுவானோ…’ என்று தன்னை கட்டுபடுத்தி கொண்டு நின்றாள்.
‘சரி நீ படி நான் கீழ போயிட்டு வரேன்’ என்றவன் சாப்பிட்ட தட்டையும் டம்ப்ளரையும் கைடுயோடு கொண்டு செல்ல ஏனோ அவன் தன்னை விட்டு விலகி செல்வது போல தோன்ற கட்டுபடுத்த முடியாத கண்ணீரோடு அமர்ந்திருந்தாள்.
அவன் வருவதற்குள் முகம் கழுவி வந்தவள் புத்தகத்தோடு அமர அதிர்துடியனோ அறையை சுத்தபடுத்த தொடங்கினான்.
ஒன்றும் புரியாமல் அவனை பார்த்த யாழி சில நிமிடங்களுக்கு பின் அதி பக்கெட் மாப்புடன் அறையினுள் வருவதை கண்டு,
‘என்ன பண்றீங்க..??’
‘பார்த்தா தெரியலை மாப் போட போறேன்’,
‘ஏன்..?? நீங்க ஏன் செய்.. செய்யறீங்க..??’
“என் ரூம்க்கு நான் செய்யாம வேற யார் செய்வா..?? எங்க வீட்ல அவங்கவங்க ரூம் அவங்களே தான் சுத்தம் பண்ணனும்”.
“யாழிக்கோ இது அவனுடையது மட்டுமல்லாமல் அவள் அறையும் தானே” என்ற எண்ணம் எழ,
‘நீங்க கொடுங்க நான் பண்றேன்’
“நோ இதெல்லாம் செய்ய நீ என்ன இந்த வீட்டு வேலைக்காரியா..?? அதோட என் பொண்டாட்டியை நான் என்னைக்கும் யாருக்கும் அடிமையா இருக்க விடமாட்டேன் நீ ப்ரீயா சாப்ட்டு, தூங்கி, எந்த தொந்தரவும் இல்லாம படிச்சி கலெக்டர் ஆகிற வழியை மட்டும் பாரு இதெல்லாம் அதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்” என்றவன் அறையை சுத்தபடுத்தி விட்டு கீழே செல்ல யாழியோ பெரும் குழப்பத்தோடு செல்லும் அவனை பார்த்திருந்தாள்.
இரவு உணவையும் அறைக்கே கொண்டு வந்தவன் அவளிடம் அன்றைய தலைப்பிற்கு ஏற்ப இணையத்தில் இருந்து எடுத்த தகவல்களை கொடுத்து இதையும் சேர்த்து படி என்றவன் உணவை அவளுக்கு ஊட்ட,
யாழிக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை, ‘ஆனால் ஏதோ தவறுகிறது அவன் விருப்பம், அவன் பிடித்தம் இப்படி எதையும் தெரிந்திராமல்.. கடவுளே ஏன் இப்படி ப்ச்… ‘ என்ன என்று சரியாக யோசிக்கவும் முடியாமல் தவித்தவளுக்கு மூச்சு முட்டி போனது அவன் பேரன்பில்..!!
அவள் மறுப்பை பொருட்படுத்தாமல் அதிர்துடியன் அவளுக்கு ஊட்டிவிட ஒருகட்டத்தில், ‘எனக்கு வேண்டாம் போதும்’
‘யாழி சாப்பிடாட்டி எப்படி ஸ்ட்ரெந்த் கிடைக்கும்..?? எப்படி படிக்க முடியும்..?? சாப்பிடு’
‘நீ.. நீங்க சாப்ட்டீங்களா..??’
‘நீ முதல்ல சாப்பிடு நான் அப்பா கூட உட்காந்துப்பேன்’ என்றவன் ஊட்டி முடித்து கீழே செல்ல யாழிக்கு அது நேரம் வரை கட்டுபடுத்திய கண்ணீர் அதிகரித்தது.
‘அவன் அவனாக இருக்க அவள் அவளாக இருக்க இந்த உறவிற்கு பெயர் என்ன..??’
‘அவனுக்கு நான் யார் ..?? எதுவும் செய்ய கூடாதுன்னா அப்போ எப்படி நாங்க ..’ என்றவளுக்கு அதே நேரம் சுகமதி மகேஷின் நினைவு எழாமல் இல்லை.., எப்போதும் தந்தையின் அருகாமையில் அன்னையின் முகத்தில் வற்றாத புன்னகையை மட்டுமே கண்டிருக்கிறாள் ஆனால் இங்கே அவன் அருகே அவளால் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லையே.., என்று மனம் ஆர்பரித்தாலும் நிச்சயம் இதற்கு அவன் காரணமில்லை என்பது வரை புரிந்தது பேதைக்கு..!!
ஏன்..?? ஏன்..?? என்ற கேள்வியுடனே அவன் மீண்டும் வரும் வரை அமர்ந்திருந்தவள் அவன் திரும்பி வந்ததும் ,
‘உங்களுக்கு என்னலாம் பிடிக்கும்..?? எனக்கு உங்களை பத்தி தெரிஞ்சிக்கணும் சொல்லுங்க’ என்றாள்.

