Skip to content
Post Views: 5,302
2
“ஏன்டி அவன்கிட்ட போய் வம்பிழுத்த…?!” என்று நிரஞ்சன் கேட்க,
“எனக்கென்ன ஜோசியமா தெரியும்?! அந்தக் கொரங்கு அது ரூமை விட்டுட்டு இங்க வந்து படுத்திருக்கும்னு?!” என்று முறைத்தாள் நிலா.
“சரி சரி வா கெளம்புவோம்! நேரமாகுது பசங்க எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க!” என்று அவள் கவனத்தை திசை திருப்ப முயன்றான் நிரஞ்சன்.
Advertisement
“எங்க?! இன்னிக்கு நாம பேராசிரியரைப் பார்த்த மாதிரிதான். உன் அருமை அண்ணன் முகத்துல முழிச்சிட்டேனே..!” என்று அவள் தலையில் கைவைத்துக் கொள்ள,
“அதெல்லாம் ஒண்ணுமாகாது! வா நிலா….!” என்று அவள் கைபிடித்து இழுத்துச் சென்றான் நிரஞ்சன்.
சிறிது நேரத்திற்கு பின், அவர்கள் சந்திக்க நினைத்த தமிழ்ப் பேராசிரியரின் இல்லத்தை அடைந்தனர். தங்கள் கல்லூரியில் நடக்கவிருக்கும் இலக்கிய விழாவிற்காக, ‘இன்றைய இளைய சமுதாயத்தினர் பார்வையில் தமிழ்’ என்ற தலைப்பில் தாங்கள் நிகழ்த்தவிருக்கும் உரைக்காக, தாங்கள் எடுத்திருந்த குறிப்புகளை அவரிடம் காண்பித்து ஒப்புதல் பெற வந்திருந்தனர்.
Advertisement
ஆனால் அவரோ, அன்று காலை முதல் கடும் காய்ச்சலில் படுத்திருந்தார்.
Advertisement
அதனால் அவரை தொந்தரவு செய்யாமல், நலம் மட்டும் விசாரித்துவிட்டு அனைவரும் தங்கள் வீட்டிற்குக் கிளம்பினர்.
“நான் நினைச்சது சரியாப் போச்சு! அந்தப் பிசாசு மூஞ்சியில முழிச்சதாலதான் இப்படி ஆகிடுச்சு!” என்று ரஞ்சனை திட்டிக் கொண்டே வண்டியில் ஏறினாள் நிலா.
“என்ன நிலா நீ…!? முதல்ல அவன் மேல இருக்க அந்தக் கோபத்தை தூக்கி எறி! அதனாலதான் நீ இப்படி எல்லாம் யோசிக்கிற!” என்றான் நிரஞ்சன்.
Advertisement
அதற்கு பதிலேதுமின்றி அவள் மௌனமாக இருக்க,
“இன்னும் எத்தனை வருஷம்தான் அவனை நீ மன்னிக்காமயே இருக்கப் போற?!” என்றான் நிரஞ்சன்.
“கோடி முறைக்கும் மேல இதை நீ கேட்டாச்சு நிரு!” என்று அவள் தன் காதைப் பொத்திக் கொண்டாள்.
“ப்ளீஸ் நிலா…! எத்தனை வருஷமாச்சு!? ஸ்கூல் டேஸ்ல நடந்த விஷயம், இப்போ காலேஜும் முடிக்கப் போறோம்! இன்னும் இந்தக் கோபம் ஏன்?!” என்றான் கெஞ்சுதலாக.
“என்னை மட்டும் கேட்கறியே? அவன் மட்டும் இது வரைக்கும் வந்து மன்னிப்பு கேட்டானா?! இப்பவும் தான் செய்ததை நினைச்சு கொஞ்சம் கூட வருத்தப்பட்ட மாதிரி தெரியலையே?! அதே திமிரோடதான இருக்கான்?!” என்றாள் பதிலுக்கு.
இப்போது மௌனம் அவன் முறையாயிற்று!
‘ம்ம்! என்னிக்குதான் இவங்க பிரச்சனை ஓயுமோ?!’ என்று பெருமூச்செறிந்துவிட்டு, ரோட்டில் கவனம் வைத்துக் காரைச் செலுத்தலானான் நிரஞ்சன்.
வண்டி வீட்டை அடைந்ததும், நிலா காரை வெளியிலேயே நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொண்டாள்.
“பை டா நிரு…!” என்று அவனிடம் கையசைத்து விடைபெற்று, நிரஞ்சனின் வீட்டிற்கு நேரெதிரே அமைந்திருந்த தனது வீட்டினுள் நுழைந்தாள்.
“ஹே கலை எப்ப டீ வந்த?! மாமா வந்திருக்காரா? வீட்ல அத்தை மாமா, அஷ்மிதா எல்லோரும் நல்லாயிருக்காங்களா?” என்று தன் தமக்கையிடம் நலம் விசாரித்தபடியே ஓடிச்சென்று, கீழே தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த தன் அக்காள் மகன் சித்தார்த்தைத் தூக்கிக் கொண்டாள்.
“அவருக்கு ஏதோ வேலை இருக்காம். என்னை விட்டதும் கிளம்பிட்டார்டீ… நீ எப்படி டீ இருக்க?” என்றாள் கலைச்செல்வி.
“ம் எனக்கென்ன..? நல்லாதான் இருக்கேன்!” என்றவள் குழந்தையிடம் திரும்பி,
“செல்லக் கண்ணா எப்படி இருக்கீங்க? சித்தியைப் பார்க்க வந்திருக்கீங்களா?! நானே உங்களைப் பார்க்க வரணும்னு இருந்தேன்டா பட்டு…! இங்க பாருங்க உங்களுக்காக சித்தி ஒரு பொம்மை வாங்கி வச்சிருக்கேன்!” என்று சொல்லி தான் வாங்கி வைத்திருந்த கார் பொம்மையைக் கீ கொடுத்து தரையில் ஓட விட்டாள்.
கார் மெல்ல நகரத் தொடங்கியதும், அப்பிஞ்சு தன் பொக்கை வாயைத் திறந்து அழகாய் சிரித்தது.
“இருக்க கஷ்டத்துல இதெல்லாம் எதுக்கு டீ வாங்கற?!” என்று கலை, நிலாவை திட்ட,
“கஷ்டம் எப்பவும்தான் இருக்கும்! அதுக்காக நான் குழந்தைக்கு எதுவுமே வாங்கித் தரக் கூடாதா என்ன?!” என்று அவள் எதிர் கேள்வி கேட்க,
“நீயே பார்ட் டைம் வேலைக்கு போய் சம்பாதிச்சு படிக்கிற! இதுல இந்த செலவெல்லாம் எதுக்குன்னுதான் கேட்டேன்!?” என்றாள் கலை.
“விடு கலை…!” என்ற நிலா, தன் தாயிடம் சென்று,
“அம்மா…. அப்பா எங்க?! கடைக்குப் போயிருக்காரா என்ன?!” என்றாள்.
“அக்கா வந்திருக்காளேன்னு மீன் வாங்கிட்டு வரேன்னு போயிருக்கார்!” என்றார் வேணி.
“ஏன் ம்மா வெயில் நேரத்துல அவரை வெளியில அனுப்பின?! நான் வந்ததும் போயிருக்க மாட்டேனா?” என்று நிலா கேட்க,
“சொன்னா எங்கடீ கேட்கறாரு!” என்று அவர் சமையலுக்கான ஆயத்தங்களில் இறங்க,
“என்னம்மா நிலா… அதுக்குள்ள வந்துட்டிங்களா!? உங்க பேராசிரியரைப் பார்த்தீங்களா?! என்ன சொன்னார்?” என்று கேட்டபடியே வாங்கி வந்திருந்த பொருட்களை தன் மனைவியிடம் கொடுத்தார் வெங்கடேசன்.
“இல்லப்பா… அவருக்கு நல்ல காய்ச்சல். அதனால அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்னு நலம் மட்டும் விசாரிச்சுட்டு கிளம்பிட்டோம்!” என்ற நிலா,
“ஏன் ப்பா இப்படி வெயில்ல அலையிறீங்க? காலையில சாப்பிட்டதும் மாத்திரை போட்டிங்களா?!” என்றாள் அக்கறையோடு.
“ம் போட்டுட்டேன் ம்மா…!” என்றவர், அயர்வுடன் தன் மேல்சட்டையைக் கழற்றிவிட்டு கூடத்தில் படுத்துக் கொண்டார்.
“அப்பா வெறுந்தரையில படுக்காதீங்கன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்!” என்று நிலா சொல்ல,
“வெயிலுக்கு ஜில்லுன்னு தரையில படுத்தாதான்மா நல்லா தூக்கம் வருது!” என்றவர் சோர்வாக கண்களை மூடிக் கொள்ள, நிலாவும், கலையும் பரிவோடு தன் தந்தையைப் பார்த்தனர்.
“அப்பாவுக்கு ஹார்ட் ப்ராப்ளம் வந்ததுல இருந்தே ரொம்பே சோர்வா தெரியிறாரு இல்ல நிலா…!” என்றாள் கலை.
“ம்ம்!” என்று வேதனையோடு பதிலளித்த நிலா, “நான் போய் அம்மாவுக்கு மீன் சுத்தம் செய்து கொடுத்துட்டு வரேன் கலை… நீ பாப்பாவ வைச்சிக்கோ!” என்று பிள்ளையை அதன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு சென்றாள்.
“வாடா நிரு… என்ன போன வேகத்துலயே திரும்பி வந்துட்ட?! அந்தக் கொரங்கு ஏதாச்சும் வம்பு பண்ணுச்சா?!” என்றான் ரஞ்சன்.
“ரஞ்சு…!” என்று அவன் முறைக்க,
“ஹப்பப்பா.. அவளை ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாதே…! சரி, எனக்கு டைம் ஆகுது நான் கிளம்பறேன்” என்றவன் தனது தாயைப் பார்த்து,
“ம்மா…. என் பிரெண்ட்சோட சினிமாவுக்கு போறேன். வர ரொம்ப லேட் ஆகும். சும்மா நைநைன்னு போனைப் போட்டு நச்சரிக்காதீங்க!” என்று சொல்லிவிட்டு, தனது பைக் சாவியை ஸ்டைலாகச் சுழற்றியபடி, கிளம்பினான்.
“டேய் நீ வீட்ல இருக்கிறதே மாசத்துல ரெண்டு மூணு நாள்தான். அப்பவும் வீட்ல இல்லாம வெளிய சுத்தப் போறியே டா….!” என்று ராதா கேட்க,
“ப்ச் போகும்போதே டென்ஷன் பண்ணாதம்மா..!” என்று தாயிடம் எரிந்து விழுந்தான்.
“அண்ணா எனக்காகவாவது இரேன் அண்ணா…. ப்ளீஸ்…!” என்று நிவி கெஞ்ச,
“நிவி.. பசங்க நேத்திக்கே நான் வரேன்னு டிக்கட் புக் பண்ணிட்டாங்க! இப்ப நான் போகலைன்னா செம கடுப்பாகிடுவானுங்க!” என்று அவன் தங்கையின் கன்னத்தைத் தட்டிவிட்டுக் கிளம்ப,
“நண்பர்கள் மேல இருக்குற அக்கறை, கொஞ்சம் வீட்டு மனுசங்க மேலயும் இருந்தா நல்லாயிருக்கும்!” என்றார் காமாட்சி பாட்டி.
“சே வீடா இது! எதுக்கெடுத்தாலும் ஏதாவது சொல்லிக்கிட்டு!” என்று ரஞ்சன் பைக் சாவியைத் தூக்கி எறிய,
“ரஞ்சன்….” என்று அதட்டினார் காமாட்சி பாட்டி.
அதற்குள் நிரஞ்சன் தனது பாட்டியின் அருகே சென்று கண்களால் கெஞ்ச, அவர் சற்று அமைதியானார்.
“நீ கிளம்பு ரஞ்சு….!” என்றான் நிரஞ்சன்.
“தேவையில்லை…. வீட்லயே இருந்து தொலைக்கறேன்!” என்று கோபமாக தனது அறைக்குள் சென்று கதவைப் படாரென அறைந்து சாத்தினான்.
நிரஞ்சன் அவனைப் பின்தொடர்ந்து, மெல்ல அவனது அறைக் கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றான். அவனைக் கண்டதும்,
“சே இந்த வீட்ல என்னிக்குமே நிம்மதி இல்ல நிரு… நம்மளால சுயமா ஒரு முடிவு கூட எடுக்க முடியல! இவங்க தொல்லை தாங்க முடியாமதான நான் மும்பையில இருக்க கல்லூரியைத் தேர்ந்தெடுத்து சேர்ந்தேன்!” என்றான் ரஞ்சன் எரிச்சலுடன்.
“ப்ச் கோபப் படாத ரஞ்சு… அவங்களுக்கும் உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசை இருக்காதா?! அவங்க நிலைமையில இருந்து யோசிச்சு பாரேன்…!” என்று தன் அண்ணனைச் சமாதானப் படுத்த முயல, ரஞ்சனின் கைப்பேசி சிணுங்கியது.
“ப்ச் இவன் வேற!” என்று சலிப்போடு ரஞ்சன் தனது கைப்பேசியை அணைக்க முயல, அதைக் கையில் வாங்கிய நிரஞ்சன்,
“இன்னும் பத்து நிமிஷத்துல அவன் வந்திடுவான் கிரீஷ்..!” என்று அவனுக்கு பதிலளித்து விட்டு,
“கிளம்பு ரஞ்சு… உன் பிரெண்டஸ் எல்லோரும் காத்துக்கிட்டு இருக்காங்க!” என்று ஒருவழியாக அவனைக் கிளப்பி அனுப்பினான்.
“ப்ச்!” என்று வேண்டா வெறுப்பாக எழுந்து சென்றான் ரஞ்சன்.
அவன் கிளம்பி வெளியே வந்து போர்டிகோவில் இருந்த தனது வண்டியை எடுக்கவும், அவள் மீனைச் சுத்தம் செய்துவிட்டு அதன் மீதங்களை எடுத்துவந்து, வெளியே இருக்கும் பூனைக்கு வைக்கவும் சரியாக இருந்தது.
“ராட்சஸி..! காலையில இவ முகத்தில முழிச்சதாலதான் இவ்ளோ டென்ஷன்!” என்று அவளை முறைத்தபடி, புலம்பிக் கொண்டே வண்டியை எடுத்தான்.
“கிராதகன்… முனகறத பாரு?!” என்று அவளும் புலம்பிக் கொண்டே உள்ளே செல்ல முனைய, அவள், காலில் கல் குத்திக் கொண்டு ரத்தம் கசிந்தது.
அவள், “ஸ்ஸ்…!” என்று வலியோடு தனது காலில் இருந்த கல்லை எடுத்தெரிய,
“ஹும் ஹும் ஹும் நல்லா வேணும்!” என்றான் வாய்விட்டுச் சிரித்தபடியே.
“சிரிக்கிறதப் பாரு! நல்லா காட்ஸில்லா கொரட்ட விட்ட மாதிரி! எனக்காவது கால்ல கல்லுதான் குத்திச்சி! நீ வண்டியில இருந்து கீழ விழுந்த…. எலும்பே முறிஞ்சிடும்…!” என்று அவள் சொல்ல, சரியாக அவள் வீட்டுப் பூனை அவன் சென்ற வண்டியின் குறுக்கே ஓடியது.
அவன் பூனையை ஏற்றிவிடப் போகிறோம் என்று பயந்து வண்டியை சற்று திசை திருப்ப முயல, பைக் ஸ்கிட்டாகி கீழே விழுந்தான்.
அவன் சட்டை முழுதும் மண் ஒட்டிக் கொள்ள, அங்கங்கே சிராய்ப்பு ஏற்பட்டிருந்தது.
“சே..! இவ புனை கூட இவளை மாதிரியே சரியானக் கொரங்கா இருக்கு!” என்று புலம்பியபடியே மெல்ல எழுந்து, கீழே விழுந்திருந்த வண்டியை நிமிர்த்த,
அவள், “இது எப்படி இருக்கு!?” என்று புருவத்தை உயர்த்திச் சிரித்தபடி தன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
ரஞ்சன் வீட்டை வீட்டுக் கிளம்பிச் சென்றதும், “நீ அவனுக்கு இனிமே பரிஞ்சி பேசாத நிரு! இப்படியே விட்டா அவன் போக்கை மாத்துறது ரொம்பக் கஷ்டம்” என்றார் காமாட்சி பாட்டி.
“விடுங்க பாட்டி தன்னால மாறிடுவான்!” என்று நிரஞ்சன் சொல்ல,
“அவனெல்லாம் தன்னால திருந்துற ஜென்மமில்ல நிரு….! கொஞ்சம் கடிவாளத்தை இறுக்கிப் பிடிச்சாதான் சரி வரும்! இன்னும் மூணு மாசத்துல அவன் படிப்பும் முடியப் போகுதுல்ல, சீக்கிரமே ஒரு கால் கட்டு போட்டுடறேன்!” என்றார் காமாட்சி பாட்டி.
நிரஞ்சன் சிரித்தபடியே அவ்விடமிருந்து எழ, “உனக்கும் அப்படியே ஒரு நல்ல பொண்ணா பார்க்கட்டுமாப்பா…!” என்றார் காமாட்சி.
“ம் அதெல்லாம் சரியா வராது பாட்டி!?” என்று அவன் சிரித்தபடியே சொல்ல,
“ஏன் ராஜா உனக்கென்ன?! உன் குணத்துக்கு முன்ன…” என்று காமாட்சி பாட்டி சொல்லி முடிப்பதற்குள், ரஞ்சன் எரிச்சலும், கோபமும் சேர போன வேகத்தில் திரும்ப வீட்டினுள் நுழைந்தான்.
அவனது நிலையைப் பார்த்து, “என்ன ஆச்சு ரஞ்சு…?!” என்று எழுந்து அவனருகே ஓடி வந்தான் நிரஞ்சன்.
“எல்லாம் அந்தப் பிசாசு வளர்க்கிற பூனையாலதான்!” என்று தனது அறைக்குள் சென்று தன்னைச் சுத்தம் செய்து கொண்டு, வேறு உடையை மாற்றிக் கொண்டு வெளியேறினான்.
நாட்கள் கடந்திருக்க, நிலா, நிரஞ்சன், ரஞ்சன் மூவரும் தங்களின் கல்லூரி மேற்படிப்பை முடித்து விட்டிருந்தனர்.
நிரஞ்சன் தொடர்ந்து எம். பில் படிப்பைத் தொடர, நிலா தனது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒரு பள்ளிக் கூடத்தில் தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தாள்.
ரஞ்சன் தனது எம். பி. ஏ படிப்பை முடித்த பின்னும், சென்னைக்குத் திரும்பாமல் அங்கேயே வேலை தேடிக் கொண்டு, உல்லாசமாகப் பொழுதைக் கழித்து வந்தான்.
அன்று மாலை நிவேதாவின் நிச்சயதார்த்தம் என்பதால், அவர்களின் வீடு உறவினர்களின் வருகையால் கலை கட்டிக் கொண்டிருந்தது.
நிலாவும், நிரஞ்சனும் நிச்சயதார்த்த வேலையில் மூழ்கியிருந்தனர். ரஞ்சன் எப்போதும் போல் அன்று கூட வீடு தங்காமல் தன் நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்ருந்தான்.
சரியாக விழா ஆரம்பிக்க ஒரு மணி நேரம் இருக்கும் போது தான் வீடு வந்து சேர்ந்தான் ரஞ்சன்.
“என்ன அண்ணா இன்னிக்குக் கூட வீட்ல இல்லாம வெளிய போயிட்ட?!” என்று கோபித்து கொண்டாள் நிவி.
“அதான் கரெக்டா விழா ஆரம்பிக்கறதுக்குள்ள வந்துட்டேன் இல்லடா?” என்றவன் தன் தங்கைக்கு அழகான முத்து மாலை ஒன்றை பரிசளித்தான்.
“ரொம்ப அழகாயிருக்கு அண்ணா..!” என்று அவள் அன்போடு அதனை வாங்கிக் கொள்ள,
“அட பரவாயில்லையே…! தங்கச்சி மேல இந்த அளவுக்காவது பாசம் வைச்சிருக்கியே!?” என்றபடி அங்கு வந்து சேர்ந்தார் காமாட்சி.
“ப்ச் பாட்டி… நீங்களும் சும்மா இருக்க மாட்டீங்களே…!” என்று நிவி சொல்ல,
“ஆமாம்டி எனக்கு எப்பவும் ஆசை பாரு அவனைத் திட்டணும்னு! அவன் செய்யிறதெல்லாம் கொஞ்சமாவது நல்ல இருக்கா?! தங்கச்சிக்கு நிச்சயதார்த்தம்! வீட்ல எவ்ளோ வேலை இருக்கும்! அதை எடுத்துப் போட்டு செய்யிறத விட்டுட்டு, பிரெண்ட்சோட ஊரை சுத்திட்டு வரான். நிலாவும், நிரஞ்சனும்தான் எல்லா வேலையையும் கவனிச்சிக்கிறாங்க! நிரஞ்சனாவது கூடப் பிறந்தவன் ஓடி ஓடி வேலை செய்யிறான். அந்த நிலாப் பொண்ணு…. அவளுக்கு இருக்கிற அக்கறைக் கூட உன் அண்ணனுக்கு இல்லையே!” என்று அவர் பாட்டிற்கு பொரிந்து தள்ள ரஞ்சனுக்கு மூளை சூடேறியது.
“எப்பப் பாரு என்னைக் குறை சொல்லலைன்னா உங்களுக்கெல்லாம் தூக்கம் வராது இல்ல…! சே….!” என்று அவன் கோபத்தோடு அங்கிருந்து வெளியேறப் போக,
“உறவுக்காரங்க வந்திருக்க நேரத்துல எதுக்கு ரெண்டு பெரும் இப்படி சத்தம் போடறீங்க?!” என்று அதட்டலுடன் அங்கு வந்து சேர்ந்தார் இராமநாதன்.
“உங்க பேரனையே கேளுங்க?!” என்று காமாட்சி அவனைக் கோர்த்துவிட,
“ஒண்ணுமில்ல தாத்தா… நான் கிளம்பறேன்!” என்று அவன் வெளியேற முனைந்தான்.
“மாப்பிளை வீட்டுக்காரங்க வர நேரமாச்சு! போய் சீக்கிரம் குளிச்சிட்டு புது துணியை போட்டுக்கிட்டு வா! எல்லோருமா சேர்ந்துதான் அவங்களை வரவேற்கனும்!” என்றார் இராமநாதன்.
“ம் சரிங்க தாத்தா…!” என்று நல்ல பிள்ளைபோல் தன் அறைக்குச் சென்றான்.
அவர்கள் வீட்டில் அவன் எதிர்த்து பேசியிராத ஒரே ஆள் இராமநாதன் மட்டும்தான்.
error: Content is protected !!