Skip to content
Post Views: 4,286
3
தன் அறைக்குச் சென்று புத்தாடை உடுத்தி வந்தவன், தன் எதிரே வந்த குளிர் நிலவை, சூரியனாய்ச் சுட்டேரித்துவிட்டு, மாப்பிள்ளை வீட்டுக் காரர்களை வரவேற்கச் சென்றான்.
இதற்கெல்லாம் அஞ்சும் ரகமல்லவே அவள். அவன் பார்வைக்கு தக்க பதில் பார்வை வீசிவிட்டு, தன் தோழி நிவியின் அறைக்குள் சென்று, மணமகனின் வரவை நிவியிடம் தெரிவித்து அவள் கன்னங்களைச் சிவக்கச் செய்தாள்.
Advertisement
அந்நேரம் மணமகன் கார்த்திக்கும், நிவியின் தரிசனத்தைக் காண ஆவலுடன் அவளின் அறை ஜன்னலை நோக்கிப் பார்வையை சுழலவிட்டான்.
அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல், நிவி மேலேயிருந்த தனது அறையின் ஜன்னல் வழியே கையசைத்து அவனை வரவேற்றாள்.
“ம் நடத்துங்க நடத்துங்க!” என்று நிவியின் தோளில் முகம் வைத்து நிலாவும் அவனைப் பார்த்துக் கையசைக்க,
Advertisement
“ஏய் சும்மா இருடி! அவர் ஏதாவது நினைச்சுக்கப் போறாரு!” என்று அவள் கையைத் தட்டினாள் நிவி.
Advertisement
“ரெண்டு பேருக்கும் ஜன்னல்கிட்ட என்ன வேலை?!” என்று ஒரு உறவுக்காரப் பெண்மணி குரல் கொடுக்க,
“ஆ ஒண்ணுமில்லை பெரியம்மா….!” என்று சமாளித்த நிவி, அமைதியாகச் சென்று டிரெஸ்ஸிங் டேபிளின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
மாப்பிள்ளையைப் பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்த நிவியின் கல்லூரித் தோழிகள் அனைவரும் திரும்ப அறைக்கு வந்துவிட, அங்கே கேலிக்கும் கிண்டலுக்கும் பஞ்சமில்லாமல் போனது.
Advertisement
மிகுந்த வசதி படைத்த குடும்பம் என்பதால், நிச்சயதார்த்தத்தையே திருமணம் போல் வெகு சிறப்பாக செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.
அவர்கள் வீட்டுத் தோட்டத்தில்தான் விழா வைபவம் நடைபெறவிருந்தது. செடிகளிலும், மரங்களிலும் ஒளிர்விட்ட மின்விளக்கு அலங்காரங்கள் அத்தோட்டத்தை மேலும் அழகுபடுத்திக் காட்டின. சுயசேவை உணவுமுறை என்பதால், ஆங்காங்கே சுடச் சுட அடுப்பில் காத்திருந்த உணவு வகைகள், அனைவர் நாசிகளையும், நாவுகளையும் கட்டி இழுத்தன.
ராதா, கிருஷ்ணன் இருவரும் வசதி படைத்தவராயினும், மிக நல்ல உள்ளம் படைத்தவர்களாதலால், ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அக்கம் பக்கத்துக்கு வீட்டினர்களையும் விழாவிற்கு அழைத்திருந்தனர்.
நிலா சிறு வயது முதலே நிவி, நிரஞ்சனுக்கு உற்ற தோழி என்பதால், அவள் வீட்டிற்கு தம்பதி சமயதராகச் சென்று அழைப்பு விடுத்திருந்தனர்.
அதனால் நிலாவின் தாய், தந்தை இருவரும் அங்கு வந்திருந்தனர். நிரஞ்சனும், அவன் குடும்பமும் அன்போடு அவர்களை வரவேற்று உபசரித்தனர். ஆனால் ரஞ்சனோ வேண்டுமென்றே அவர்கள் அருகே அமர்ந்திருந்தவர்களை வலிய சென்று விசாரித்துவிட்டு, அவர்களை விசாரிக்காமல் அலட்சியப் பார்வை வீசிச் சென்றான்.
“இந்தத் தம்பிக்கு இன்னும் நம்ம பொண்ணு மேல இருக்கக் கோபம் போகல போலிருக்குங்க!” என்றார் வேணி.
“விடு வேணி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ரகம்!” என்றார் வெங்கடேசன்.
இதை கவனித்து விட்ட நிலாவிற்கு கோபம் துளிர்த்தது.
‘திமிர் பிடிச்சவன், பெரியவங்களை கூட அவமதிக்கிறதே வேலையாப் போச்சு!” என்று நினைத்தவாரே, வந்திருந்த விருந்தினர்களை உபசரித்து, பழச்சாற்றை வழங்கினாள்.
ஓர் இடத்தில் கும்பலாக ரஞ்சனின் தோழர்கள் அமர்ந்திருக்க, அவர்களை மட்டும் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு சென்றாள்.
அவள் வேண்டுமென்றே தங்களைத் தவிர்த்துவிட்டுச் சென்றதை அவமானமாக நினைத்த அவர்கள், கோபத்தில் அங்கிருந்து கிளம்ப முற்பட,
“டேய் அவ எல்லாம் ஒரு ஆளுன்னு கிளம்பறீங்களே?!” என்று அவர்களைச் சமாதானப் படுத்திவிட்டு, தங்கள் வேலையாட்களை ஏவி தன் நண்பர்களுக்கு பழச்சாறு கொண்டு வருமாறு ஏவினான்.
“உன் தம்பியைக் கைக்குள்ள போட்டுக்கிட்டு இவ பண்ற அலும்பலுக்கு ஒரு அளவே இல்லாம போயிகிட்டு இருக்குடா… இதே ரேஞ்ச்ல போனா… உன்னைவிட உன் வீட்டு ஆளுங்களுக்கு அவதான் முக்கியமா போயிடப் போறா, பார்த்து நடந்துக்கோ டா…!” என்றான் அவன் நண்பன் ஒருவன்.
“நீ வேற இப்பவே அப்படிதான்டா..!” என்று கேலியாகச் சொன்னான் கிரிஷ்.
‘என் பிரெண்ட்ஸ் முன்னாடி என்னை வேணும்னே அவமானப் படுத்தி அசிங்கப் பட வச்சிட்ட இல்ல…?! உன்னை இன்னிக்கு அழ வைக்கறேன்டி..!’ என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டான் ரஞ்சன்.
விழா இனிதே முடிவடைய, பெண்ணையும், மாப்பிள்ளையையும் உணவருந்த அழைத்துச் சென்றனர்.
நிவி, நிலாவையும் தங்களோடு உணவருந்த அழைக்க, நிலா மறுக்க முடியாமல் அவர்களுடன் சென்றாள்.
மாப்பிள்ளை வீட்டினரின் நெருங்கிய சொந்தகளும், பெண் வீட்டின் நெருங்கிய சொந்தங்களும் மட்டுமே அங்கிருந்தனர். மற்றவர்கள் நேரமாகி விட்டதால், முன்பே விருந்து முடித்து கிளம்பிச் சென்று விட்டிருந்தனர்.
மற்ற தோழியர் யாரும் உடன் இல்லாததால், நிலாவிற்கு அவர்களுடன் சென்று உணவுண்ண சற்று சங்கடமாக இருந்தது. இது போதாதென்று நிரஞ்சனும் அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்ள, வந்திருந்தவர்கள், அவர்களைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டனர்.
“என்ன ராதா..? இந்தப் பொண்ணு யாரு?! நானும் வந்ததுலயிருந்து கவனிக்கறேன்! ரொம்ப உரிமையா எல்லோரிடமும் பழகுறாளே…!” என்று ஒரு பெண்மணி வாய்விட்டே கேட்டுவிட்டார்.
“அவ நிவி, நிரஞ்சனோட தோழி நிலா…! ரொம்ப நல்ல பொண்ணு! நம்ம வீட்டுக்கு எதிர் வீடுதான் அவங்களோடது” என்றார் ராதா வெளிப்படையாய்.
“ஓ அந்த ஓட்டு வீடு இருக்கே?! அதுவா?!!” என்று முகத்தைச் சுழித்த அந்தப் பெண்மணி,
“நான் கூட நம்ம நிரஞ்சன் காதல் ஏதும் பண்றானொன்னு நினைச்சிட்டேன்! பேசாம இந்தப் பொண்ணையே அவனுக்குக் கட்டி வைச்சிடுங்களேன்! அவனுக்கும் வேற யார் பொண்ணு கொடுக்கப் போறாங்க!” என்று அவர் மனம் போன போக்கில் பேச, ராதாவிற்கு கண்கள் கலங்கி விட்டது.
அவரது கெட்ட நேரம் இவையனைத்தும் அருகே இருந்த நிலா, நிரஞ்சனின் காதில் விழுந்து விட்டது. நிலா சாப்பிடுவதை விட்டுவிட்டு எழ, நிரஞ்சன் அவள் கையைப் பற்றி நிறுத்தினான்.
“கையை விடு நிரு…! இவங்களை மாதிரி ஆளுங்களையெல்லாம் நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டாதான் புத்தி வரும்!” என்று சொல்லிவிட்டு, எதிரே நின்று ராதாவிடம் பேசிக் கொண்டிருந்த பெண்மணியை நெருங்கி,
“ஹலோ… ஊர்வம்பு…! எங்க நிருக்கு பொண்ணு கொடுக்க மாட்டோம்ன்னு ஊர்ல இருக்க எல்லோரும் வந்து உங்ககிட்ட சொன்னாங்களா என்ன!!?? இல்ல…. நீங்க என்ன ஜோசியக் காரங்களா? அப்படி இருந்தா… ஏதாவது மரத்தடியில போய் ஜோசியம் சொல்லுங்க! இல்ல உங்க ஸ்டேடஸ்க்கு பைவ் ஸ்டார் ஹோட்டல்ல சொல்றதுனாலும் எங்களுக்குப் பிரச்சனையில்லை! எங்க யாருக்கும் இந்த ஜோசியத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல! தே….வையில்லாம பேசி மத்தவங்க மனசை புண்படுத்தாதீங்க!” என்று நக்கலாக துவங்கி கோபமாக அவரை எச்சரித்துவிட்டு, ராதாவைக் கைப்பிடித்து அங்கிருந்து அழைத்து வந்து அவள் அருகில் அமர வைத்துக் கொண்டாள்.
அப்பெண்மணி அவளை முறைத்தபடி அங்கிருந்து வெளியேற, ராதாவின் கைகளைப் பற்றிய நிலா, அவரது கலங்கிய கண்களை துடைத்து,
“அட என்ன ஆன்ட்டி இவங்க பேச்சுகெல்லாம் கண்கலங்கிகிட்டு? எவ்ளோ மனதைரியம் படைச்சவங்க நீங்க? இந்த மாதிரி பேசுறவங்களுக்கு பட்டுன்னு பதிலடி கொடுத்துடணும்! அதவிட்டுட்டு… முதல்ல நீங்க வந்து சாப்பிடுங்க! வாங்க…!” என்று அவரை உட்கார வைத்துச் சாப்பிட வைக்க, இதையெல்லாம் பார்த்திருந்த அனைவருமே சில நிமிடங்கள் கனமான உணர்ச்சிகளில் தங்களைத் தொலைத்து மீண்டனர்.
நடந்தது எதையும் அறியாத ரஞ்சன், தன் நண்பர்களை வழியனுப்பச் சென்றுவிட்டு அங்கே வந்து சேர்ந்தான்.
நிரஞ்சன், நிலா தன் மீதும் தங்கள் குடும்பத்தின் மீதும் கொண்டிருந்த அன்பை எண்ணி மனதில் பெருமிதம் கொண்டிருக்க, ரஞ்சனோ அவள் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து சந்தோஷமாக விருந்துண்ணுவதைக் கண்டு மனதில் வஞ்சம் கொண்டான்.
ரஞ்சன் ஆசையாக தன் தங்கையிடம் சென்று, “நிவி சாப்பிட என்னடா வேணும்? சொல்லு… இன்னிக்கு நானே என் கையால் உனக்கும் மாப்பிள்ளைக்கும் பரிமாறனும்னு ஆசைப் படறேன்!” என,
“என்னடா நிரு இது?! திடீர்னு உன் அண்ணன் பாசமலர் படம் காட்றான்?!” என்று நிலா, நிருவின் காதில் கிசுகிசுக்க,
“சும்மா இருடி…! அவன் காதில விழுந்திச்சின்னா இதுக்கு வேற வம்பிழுப்பான்!” என்று அவளை அடக்கினான் நிரஞ்சன்.
“சாப்பிட்டே முடிக்கப் போறோம் அண்ணா…! இப்ப வந்து நீ பரிமாறுறேன்னு சொல்றியே?!” என்று நிவி கேட்க,
“இல்ல இல்ல எனக்காக இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க! என்ன கொண்டு வரணும் சொல்லுங்க?” என்றான் ரஞ்சன் விடாப்பிடியாய்.
“ம்… என்ன சாப்பிடறது?!” என்று நிவி யோசிக்க,
“உனக்கு ரொம்ப பிடிச்ச மஷ் ரூம் சூப் ஓகேவா?!” என்றான் ரஞ்சன்.
“ஹான் ஓகே!” என்று நிவி சொன்னதும், ரஞ்சன் அவர்கள் இருவருக்கும் ஆவி பறக்க சூப்பைக் கொண்டு வந்தான்.
முதலில் கார்த்திக்கின் அருகில் சூப் கிண்ணத்தைப் பத்திரமாக எடுத்து வைத்தவன், தன் தங்கையின் அருகில் எடுத்து வைக்கப் போகும் போது, கை தடுமாறுவதைப் போல் தவறவிட்டு, அருகே அமர்ந்திருந்த நிலாவின் கைகளில் கொட்டி விட்டான்.
நிலாவின் கைகளை சூடு பதம் பார்த்தவுடன், அவள் வெடுக்கென கைகளை இழுத்துக் கொண்டாள்.
“அச்சோ ஸாரி ஸாரி….! நான் தெரியாம…!” என்று அனைவர் முன்னிலையிலும் அவன் வேதனை படுவது போல் அழகாக நடிக்க, அவளுக்குமே அவனின் நடிப்பை உண்மை என்று ஒரு நொடி நம்பத் தோன்றியது.
ஆனால் அவனின் பார்வையில் உண்மை இல்லை என்பதைக் கண்ட நொடி, அது நடிப்பு என்று அவள் அறிந்து கொண்டாள்.
‘ராட்சஷன்….! இவனாவது திருந்தறதாவது?! எல்லாம் நடிப்பு!” என்று அவள் மனதுள் திட்டிக் கொண்டிருக்க,
அவள் நிலையைக் கண்டு பதறிய நிரஞ்சன், வேகமாக ஓடிச் சென்று, ஓர் கிண்ணத்தில் நீர் கொண்டு வந்து அவள் கையை எடுத்து அதில் வைத்தான்.
“ஸ்… எரியுது நிரு!” என்று அவள் கண்கலங்க பல்லைக் கடித்துக் கொண்டு வலியைப் பொறுத்துக் கொள்ள,
“என்ன அண்ணா நீ இப்படிப் பண்ணிட்ட?!” என்று நிவி அவனைச் சலித்துக் கொண்டாள்.
“ஸாரிடா நிவி….!” என்று மறுபடியும் அவன் நடிக்க, நிலாவிற்கு, கைகளைவிடவும், நெஞ்சம் காந்தியது.
‘எப்படி நடிக்கிறான் பாரு?! கிராதகன்!’ என்று அவள் கண்களால் அவனை எரிக்க,
‘போதுமா? இல்ல… இன்னும்…?!’ என்று கண்களாலேயே வினவினான் ரஞ்சனும்.
“வா நிலா ஹாஸ்பிட்டலுக்குப் போகலாம்” என்று நிரஞ்சன் அவளை அழைக்க,
“வேணாம் நிரு….! வீட்ல மருந்து இருக்கு, அதைப் போட்டாலே சரியாகிடும்” என்று அவள் மறுத்தாள்.
ஆனால் காமாட்சி பாட்டியும், ராதாவும், நிவியும் சேர்ந்து விடாப்பிடியாக நிரஞ்சனுடன் அவளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் அங்கிருந்து கிளம்பிய பின், “ஏன்டா… நீ எந்த வேலையுமே ஒழுங்கா செய்ய மாட்டியா?!” என்று காமாட்சி பாட்டி ரஞ்சனைத் திட்ட, அவன் பேசாமல் அமைதியாக அங்கிருந்து வெளியேறினான்.
“விடுங்க அத்தை அவன் என்ன வேணும்னேவா இப்படி செஞ்சான்?!” என்று ராதா அவனுக்குப் பரிந்து பேச அவர் மௌனமானார்.
அதன் பின் மும்பைக்குக் சென்ற ரஞ்சன், ஒரு மாதம் கழித்துதான், சென்னை திரும்பினான். ஆனால் அப்படித் திரும்பி வந்திருந்த ரஞ்சனிடம் நிறைய மாற்றங்கள் தென்பட்டது.
முன்பு போல் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான்.
அதிலும் விடுமுறை தினம் முடிந்தும் அவன் ஊருக்குக் கிளம்பாததால், நிரஞ்சன் அவனிடம் சென்று விசாரித்தான்.
“என்ன ரஞ்சு ஏதாவது பிரச்சனையா?!” என்றான் அக்கறையோடு.
“ம் ஒண்ணுமில்ல நிரு!” என்று அவன் கடமைக்கு பதில் சொல்ல,
“எதுவாயிருந்தாலும் மனசு விட்டு பேசு ரஞ்சு… அப்போதான எங்களுக்கும் உன் மனசில என்ன இருக்குன்னு புரியும்?!” என்றான் நிரஞ்சன்.
“எனக்குன்னு எல்லாருமே இருந்தும் நான் ஒரு ஆனாதை மாதிரி இருக்கேன்டா…! யாரெல்லாம் என் சொந்தம்னு நினைக்கிறேனோ அவங்கல்லாம் என்னைவிட மத்தவங்கதான் பெரிசுன்னு நினைக்கிறாங்க!” என்றான் விரக்தியாக.
“ஏன் ரஞ்சு இப்படி பேசுற? நம்ம குடும்பத்தில இருக்க எல்லோரும் உன் மேல எவ்ளோ அன்பு வைச்சிருக்காங்க தெரியுமா?!” என்றான் நிரஞ்சன்.
“ஆனா ஒரு முறை கூட அவங்கெல்லாம் உன்கிட்ட காண்பிக்கிற அளவு பாசத்தை என்கிட்டே காண்பிச்சது இல்ல நிரு… எல்லாம் அவளாலதான்!” என்று அதற்கும் நிலாவைக் காரணமாக்கினான்.
“அப்படியெல்லாம் இல்ல ரஞ்சு… அந்த சம்பவத்தை எல்லோரும் எப்பவோ மறந்துட்டோம். நீ அன்னிக்கு அவ கையில தெரியாம சூப்பைக் கொட்டின போது கூட, நாங்க யாருமே உன்னைத் தப்பா நினைக்கல! நீதான் எப்பவும் உன் மனசுல தப்பா எதையாவது கற்பனை செய்துகிட்டு இப்படி எல்லாம் பேசுற” என்றான் நிரஞ்சன்.
இதைக் கேட்டு சில நொடிகள் மெளனமாக இருந்த ரஞ்சன், திடீரென்று, “எனக்கு வாழவே பிடிக்கலைடா….! என் வாழறோம்னு தோணுது!” என்றான் கண்கலங்க எங்கோ வெறித்தபடி.
“ரஞ்சு என்னடா ஆச்சு ஏன் இப்படி எல்லாம் பேசுற…!?” என்று கலங்கிக் போய் தன் சகோதரனின் கைகளைப் பற்றிக் கொண்டான் நிரஞ்சன்.
“நிரு…. நான் வேலைய விட்டுட்டு வந்துட்டேன்டா…” என்று ஆரம்பித்து, உணர்ச்சிவயப்பட்டு தன் மனதில் உள்ளதை அவனிடம் கொட்டித் தீர்த்தான்.
அவனது மனவேதனையை அறிந்த நிரஞ்சனுக்கு, ரஞ்சனைத் தேற்றி சமாதானம் செய்வது, பெரிய விடயமாகிப் போனது. ஒரு வழியாக அவனைத் தேற்றி,
“ரஞ்சு… முதல்ல நீ இங்கிருந்து எழுந்து வெளியில வா…! எல்லாரும் நாளைக்கு நிவியோட கல்யாணத்துக்காக நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போய் பொங்கல் வைக்க போறாங்க! அதுக்கான ஏற்பாடெல்லாம் வெளிய நடந்துகிட்டு இருக்கு. நீயும் வெளியே வந்து அவங்களோட கலகலப்பா இருந்தா உனக்கும் கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆகும்! எழுந்து வா…!” என்று அவன் கைப்பிடித்து எழுப்பி வெளியே கூட்டிச் சென்றான்.
அங்கே அவர்கள் வீட்டுப் பெரியக் கூடத்தில், ஓர் ஜவுளிக் கடையையே விரித்திருந்தாள் அவர்களின் செல்லத் தங்கை நிவி.
“அம்மா… நான் நாளைக்கு கோவிலுக்கு இந்த சேலைக் கட்டிக்கட்டுமா?! நிலா இது ஓகேவா?! பாட்டி உங்களுக்கு?!” என்று நிவி அனைவரையும் படுத்திக் கொண்டிருந்த பாட்டைப் பார்த்து ரஞ்சனின் இதழோரம் லேசாகச் சிரிப்பு எட்டிப் பார்த்தது.
நிரஞ்சன், ரஞ்சன் இருவரும் அவர்கள் பாட்டியின் அருகே சென்று அமர, காமாட்சி பாட்டி, ரஞ்சனின் அருகே வந்து, அவன் தலை வருடி,
“என்னடா ரஞ்சு… உடம்பு எதுவும் சரியில்லையா? ரொம்ப வாடி தெரியிற?!” என்றார் வாஞ்சையாக.
“ம்ஹும் அதெல்லாம் இல்ல பாட்டி… கொஞ்சம் சோர்வா இருக்கு அவ்வளவுதான்!” என்றான் ரஞ்சன்.
“நேரத்துக்கு சாப்பிட்டாதானே?!” என்றவர், தங்கள் வீட்டுச் சமையல் காரரிடம், அவனுக்கு ஏதேனும் பழச்சாறு கொண்டு வருமாறு பணித்தார்.
“பார்த்தியா ரஞ்சு… எங்க எல்லோருக்குமே உன்னை எப்பவுமே ரொம்ப பிடிக்கத்தான் செய்யும்! நீதான் ஏதோதோ கற்பனை செய்துகிட்டு உன் மனசைக் குழப்பிக்கற!” என்றான் நிரஞ்சன்.
ஒரு பக்கம் இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க, நிவி, நிலாவை தங்களுடன் கோவிலுக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருந்தாள்.
“நிவி சொன்னாப் புரிஞ்சிக்கோடி.. அடிக்கடி என்னால ஸ்கூல் லீவ் போட முடியாது!” என்று நிலா மறுப்பு தெரிவிக்க,
“எனக்குத் தெரியாது! நீ வந்துதான் ஆகணும்!” என்றாள் நிவி கட்டளையாக.
அவள் பிடிவாதம் அறிந்த நிலா, “நிரு… இவ இம்சை தாங்க முடியலடா…! நீயே என்னன்னு கேளேன்?!” என்று நிரஞ்சனை துணைக்கு அழைத்தாள்.
“நீயும் வாயேன் நிலா…!” என்றான் நிரஞ்சனும் தங்கையுடன் சேர்ந்துகொண்டு.
“நீயுமாடா?!” என்று அவள் சலித்துக் கொள்ள,
“அம்மா, அப்பாகிட்ட நான் பேசுறேன் நிலா… நீயும் வந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்றார் ராதாவும்.
“ம்ம்…” என்று சிறிது யோசித்தவள்,
“ஓகே சொல்லுடி ப்ளீஸ்..!” என்று நிலாவின் கன்னம் கிள்ளி நிவி கெஞ்சத் துவங்க,
“ம் சரி…!” என்று சம்மதம் தெரிவித்தாள்.
“சே! அங்கேயும் இவ முகத்தைப் பார்க்கணுமா? என்று எரிச்சலுற்றான் ரஞ்சன்.
error: Content is protected !!