Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Nila Thozhikku

En Nila Thozhikku 11

    11

     அவள் சத்தியம் செய்ததும் நிலா நிரஞ்சனை நோக்க, “என்ன நம்பு நிலா.. நிஜமா நான் இவளை விரும்பல…!” என்றான் நிரு பாவமாக.

     “அது எனக்கு முன்னாடியே தெரியும்…!” என்று நிலா சொல்ல,

     “எனக்குத் தெரியும் என் நிலா என் பேச்சைதான் நம்புவான்னு!” என்றான் நிரு.



Advertisement

     “என்ன நிலா நீங்க?! இப்படி காலை வாரிட்டேங்களே..?!” என்ற யாஷினி,

     “என்னை நம்பி நீங்க நிருவை எனக்குக் கல்யாணம் பண்ணி வையுங்க! நான் அவரைக் காலம்முழுக்க கண்கலங்காம  காப்பாத்துவேன்!” என்று வசனம் பேச, நிலாவின் இதழோரம் மெல்லிய சிரிப்பு எட்டிப் பார்த்தது.

     “என்னடா இவ சரியான காமெடி பீசா இருக்காளேன்னு பார்க்காதீங்க! இந்த உலகமே எதிர்த்து நின்னாலும் என் நிருவை, ஸாரி ஸாரி நம்ம நிருவை நான் கைப்பிடிக்கம விடமாட்டேன்!” என்றாள் ஏற்ற இறக்கத்துடன்.

Advertisement

     “ஏய்.. இங்க யாரும் சினிமா ஷூட்டிங் எடுக்கலை! நீ எதுக்கு இப்படி எமோஷனல் டைலாக்சை காமெடி ஸ்டைல்ல பேசி டைம் வேஸ்ட் பண்ற?!” என்று நிரு அவளை வார,

Advertisement

     “என்ன பாப்பா நீ… உனக்காகத்தான நான் பேசிக்கிட்டு இருக்கேன்! நீயே உன் டார்லிங்கை இப்படி இன்சல்ட் பண்றீயே?!” என்று கேட்டு அவனை சீண்டினாள்.

     “ஏய் நிலா… நீ வாடி.. அது ஒரு சரியான லூசு…! விட்டா என்னேன்னமோ பேசிக்கிட்டே இருக்கும்! நீ வா!” என்று அவள் கைப்படித்து இழுத்துச் சென்றான் நிரு.  

     நிலாவிற்கு யாஷினியின் வெள்ளை மனம் பிடித்தாலும், ‘இவள் எந்த அளவிற்கு நிருவைக் கைப்பிடிப்பதில் உறுதியாய் இருப்பாள்! எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எடுக்கின்ற முடிவல்லவே இது! வாழ்க்கையாயிற்றே?!’ என்று யோசித்தபடியே அவனுடன் நடந்தாள்.

Advertisement

     நிலா சற்றுதூரம் சென்றதும், மெல்ல யாஷினியின் புறம் திரும்பிப் பார்த்து, சற்றே வாடிய முகத்துடன் இருந்த யாஷினியைப் பார்த்து புன்னகை பூத்தாள்.

     அவள் புன்சிரிப்பை கண்டுகொண்ட யாஷினி, “யே!!” என்று கத்தியபடி எகிறிக் குதிக்க, நிலாவிற்கு ஏனோ மனதில் மகிழ்ச்சி பரவியது.

     ‘ஹப்பா… நிலாவைக் கரக்ட் பண்ணியாச்சு! இந்த பாப்பாவைதான் என்ன பண்ணி கரக்ட் பண்றதுன்னே புரிய மாட்டேங்குது!?’ என்று புலம்பியவள், சந்நிதானத்தை நோக்கி,

     “பிள்ளையாரப்பா… நீதான் அவர் மனசை மாத்தனும்! நீ பிரம்மச்சாரியா இருக்கன்னு காலம் முழுக்க அவரையும் பிரம்மச்சாரி ஆக்கிடாத? மீ வையிட்டிங்…!” என்று வேண்டுதலை வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

    நிருவிடம் எதுவும் பேசாமல் யோசனையுடனே நடந்து வந்து கொண்டிருந்த நிலாவிடம்,

     “ஏய் என்னாச்சு நிலா.. அந்த லூசு சொன்னதையே யோசிச்சிக்கிட்டு இருக்கியா?!” என்றான் நிரு.

     “நிரு உனக்கு அவளைப் பிடிச்சிருக்கா?!” என்றாள் நிலா ஆவலுடன்.    

     “உனக்கும் பையித்தியம் பிடிச்சிருச்சா என்ன?!” என்றான் நிரஞ்சன் சற்றே கடுப்புடன்.

     “ஏன் நீ என்ன கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லையா? யாரையோ ஒருத்தரை கல்யாணம் செய்துக்கதானே போற?! அது ஏன் இந்த பொண்ணா இருக்கக் கூடாது?!” என்றாள் நிலா.

     “எனக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்கலை…!” என்றான் நிரு பட்டென்று.

     “ஓ அப்படியா?!”

     “நான் சீரியஸா சொல்றேன் நிலா”

     “நானும் சீரியஸாதான் கேட்டேன்!” என்றவள்,

     “ஏன் உனக்கு அந்தப் பொண்ணை பிடிக்கலை?!” என்றாள்.

     “பிடிக்கலைன்னா பிடிக்கலை…!” என்றான்.

     “அதான் என்ன காரணம்னு கேட்டேன்!?”

     “எப்பப் பார்த்தாலும் ஒரே டார்ச்சர் நிலா… நான் எங்கே எல்லாம் போறேனோ அங்கே எல்லாம் எப்படியோ கண்டுபிடிச்சு வந்துடறா! பொது இடம்னு கூட பார்க்காம கண்டதையும் பேசறா!” என்றான் வெறுப்புடன்.

     “ஓ அப்போ அவ உன்னை ரொம்ப நாளா பாலோ பண்றா அப்படித்தானே…!” என்றாள் நிலா.

     “ஆமாம்!” என்று அவன் பதிலளிக்க,

     “நீ நினைச்சிருந்தா ஒரே நாள்ல அவளை இந்த மாதிரி எல்லாம் என் பின்னாடி சுத்துற வேலை வச்சிக்காதன்னு கண்டிப்பா சொல்லி வரவிடாம செய்திருக்கலாமே?!” என்று அவள் கேட்க,

     “அது நான்.. எனக்கு அப்படித் தோணலை…!” என்றான் அவன் திணறலுடன்.

     “அப்படி வாங்க சார் வழிக்கு… அப்போ உன் மனசிலயும் அந்தப் பொண்ணு மேல ஏதோ ஈர்ப்பு இருக்கு!” என்று கொக்கி போட்டாள் நிலா.

     “சே! சே! அதெல்லாம் ஒண்ணும் இல்லை! நீயும் அந்த லூசு மாதிரி ஏதாவது உளறாதே!” என்று அவள் கண்களைப் பார்க்காமல் சொன்னவன்,

     ‘என்ன இது?! நிலா என்ன சொல்றா?! எனக்கு அவ மேல ஈர்ப்பு இருக்கா? சே சே… நெவர்..!” என்று தானே கேள்வியையும் கேட்டு பதிலையும் கொடுத்துக் கொண்டான்.

     ‘நிச்சயமா உனக்கு அந்தப் பொண்ணு மேல ஏதோ பிடிப்பு இருக்கு! அது நீ அவகிட்ட பேசுற விதத்துலயே தெரியுதுடா… ஆனா உன் நிலைய மனசுல வைச்சி, நீயே உனக்கு தடை போட்டுக்கறேன்னு நினைக்கிறேன்…! உன் மனசு மாறனும்… மாறும்! அவ உன்னை மாத்துவா!’ என்று நினைத்தவாரே அவனுடன் நடந்து வீட்டை அடைந்தாள் நிலா.

     “வீட்டுக்கு வாயேன் நிலா… நிச்சயம் முடிந்ததுலயிருந்து நீ அதிகமா வீட்டுக்கு வரதே இல்லை!” என்றான் நிரு.

     “அப்படியெல்லாம் இல்லை நிரு.. அம்மா கொஞ்சம் வேலையிருக்குன்னு சொன்னாங்க அதான்..!” என்று சமாளித்துவிட்டு தன் வீட்டிற்குச் சென்றாள்.

     ‘இப்போவெல்லாம் என்னால நிரு வீட்டுக்கு சகஜமா போக முடியறதில்லை… அதுவும் ரஞ்சு வீட்ல இருக்கும் போது… ஏனோ அவன் முகத்தை பார்க்கவே… தயக்கமா இருக்கு! இதுல ரெண்டு பேரும் கல்யாணம் வேற செய்துக்கப் போறோம்! அவன் எப்படி என்னை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சான்னே இன்னி வரைக்கும் எனக்கு புரியாத புதிரா இருக்கு..? ஒரு வேலை நான் அப்பாவுக்காக சம்மதிச்ச மாதிரி அவனும் அவங்க வீட்டைச் சேர்ந்தவங்களுக்காக சம்மதிச்சிருப்பானோ?! என்ன நடக்கப் போகுதோ?!’ என்று நூறாவது முறையாக  எண்ணியபடியே வீட்டினுள் நுழைந்தவள், வாயிற் படியில் கவனிக்காமல் இடித்துக் கொண்டாள்.

     “ஏன்டி… கவனமா நடக்கறது இல்லையா? எப்பப்பாரு ஏதோ யோசனையிலயே மூழ்கிக் கிடக்கறே?! எங்காயாவது கல்யாணப் பொண்ணுக்கு உரிய சந்தோஷம் உன் முகத்துல இருக்கா?!” என்று வேணி புலம்ப,

     “போதும் ம்மா.. புலம்ப ஆரம்பிச்சிடாத! இந்தா குங்குமம் எடுத்துக்கோ!” என்று கோவிலில் வாங்கி வந்திருந்த குங்குமத்தை தன் தாய்க்குக் கொடுத்துவிட்டு, தந்தையிடமும் கொடுத்தாள்.

     சந்தோஷ், தாமோதரன் இருவரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், யாஷினியின் தந்தை பஞ்சாட்சரம் அவள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டவில்லை. அதுமட்டுமின்றி மும்முரமாக அவளுக்கு மாப்பிள்ளையும் பார்க்கத் துவங்கிவிட்டார். ஆனால் யாஷினி மட்டும் அவள் முடிவில் உறுதியாய் இருந்தாள்.

     ஓர் மாலை வேளையில் நிரஞ்சனின் கார் வெறிச்சொடியிருந்த அந்தச் சாலையில் வழுக்கிக் கொண்டிருந்தது.

     அவனுக்கு ஏற்றார் போல் அமைக்கப் பட்டிருந்த டிரைவிங் சீட்டில் அமர்ந்தபடி அதை லாவகமாகச் செலுத்திக் கொண்டிருந்த நிரு, எஃப். எம் மில் ஒலிக்கத் துவங்கிய அப் பாடலில் மனதைத் தொலைக்கலானான்.

     பூங்காற்றிலே உன் சுவாசத்தை

     தனியாகத் தேடித் பார்த்தேன்…

     கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

     அதைத் தேடித் தேடித் பார்த்தேன்…

     எதிர்பாராமல் திடீரென்று அவன் வண்டியின் எதிரே வந்து, வழி மறித்து நின்றவளைப் பார்த்து, சட்டென்று பிரேக் போட்டான்.

     அவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் ஏற, வேகமாக வண்டியை விட்டிறங்கி அவளருகே வந்தான்.

     ‘ஏய் உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா?! கவனிக்காம வந்திருந்தேன்னா என்ன ஆகியிருக்கும்?!” என்றான் ஆத்திரத்துடன்.

     “என்ன ஆகியிருக்கும்?! ஒண்ணு மேல போய் சேர்ந்திருப்பேன்! இல்ல அடிபட்டு ஹாஸ்பிட்டல்ல இருந்திருப்பேன்!” என்றாள் யாஷினி கூலாக கைகளைக் கட்டி கொண்டு.

     “நீ வந்து விழறதுக்கு என் வண்டியா கிடைச்சது?!” என்றான் எரிச்சலுடன்.

     “என்ன பண்றது?! விரும்பினவன் கையால வாழ்க்கைதான் கிடைக்கல…! அட்லீஸ்ட் மரணமாவது கிடைக்கட்டுமே!” என்றாள் சோகம் போல்.

     “பையித்தியமா நீ?!” என்றான் நிரு.

     “ம் கொஞ்ச நாளாவே….!” என்றவள்,

     “சரி சரி நான் வந்த விஷயத்தை சொல்லிடறேன்… அந்த வில்லன் எனக்கு மும்முரமா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாரு! அதனால சீக்கிரமா உங்க வீட்ல நம்ம விஷயத்தை சொல்ற வழியைப் பாருங்க! இல்லைன்னா பெட்டிப் படுக்கையோட நேரா உங்க வீட்டுக்கு வந்துடுவேன்!” என்று சொல்லிவிட்டு, அவள் பாட்டிற்கு ஓரமாக நிறுத்தியிருந்த தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

     அவன் பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், “லூசு லூசு..!” என்று தலையிலடித்து கொண்டு நிரு தன் வண்டியில் ஏறினான்.

     அவள் நிரஞ்சனிடம் இதனைச் சொல்லி ஒரு மாதத்திற்கும் மேல்  ஆகிவிட்டது. ஆனால் அப்போதும் அவன், அவளைச் சற்றும் கண்டு கொள்ளவில்லை.

     அன்று யாஷினியின் வீட்டிற்கு அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள் என்ற விஷயம் தெரிந்து அவள் தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டாள்.

      அழகாக அலங்காரம் செய்துகொண்டு தன்னறையிலிருந்து வெளியே வந்தவளைப் பார்த்து,

     “ஏய் யாஷு… செமையா இருக்கடி!” என்றாள் காவ்யா.

     “தாங்க் யூ காவி…! பை” என்று சொல்லிவிட்டு, அவள் கிளம்ப எத்தனிக்க,

     “ஏய் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரத்துல… எங்க கிளம்பற?!” என்றாள் காவ்யா.

     “போக வேண்டிய இடத்துக்கு…!” என்று கண்ணடித்துவிட்டு அவள் நழுவ முயல,

     ‘யாஷு என்ன பண்ற நீ? மாமாவுக்குத் தெரிஞ்சா அவ்ளோதான்!” என்றாள் காவ்யா வெளிறிய முகத்துடன்.

     “போடி நீயும் உங்க மாமனாரும்!” என்று யாஷினி மறுபடியும் கிளம்பப் பார்க்க,

     “யாஷு வேணாம்டி…! எனக்குமே இதுல சுத்தமா விருப்பம் இல்லை… இன்னிக்கு நீ காதல் வேகத்துல, குறையோட இருக்க ஒருத்தர கல்யாணம் செய்துக்கலாம்னு நினைக்கலாம். ஆனா காலம் முழுதும் இதே நினைப்பு தொடரும்னு என்னடி நிச்சயம்? இன்னிக்கு பிடிக்கிற இதே விஷயம் நாளைக்கு வெறுப்பாவும் தோணலாம் இல்லையா?!” என்ற காவ்யாவை உற்று நோக்கிய யாஷினி,

     “நீ கூட என்னைப் புரிஞ்சிக்கலை இல்ல காவி…!” என்றாள்.

     அதைக் கேட்டு காவ்யா தலை குனிய, அவள் முகத்தை நிமிர்த்தி,

     “குறையே இல்லாதவங்க இந்த உலகத்துல இருக்காங்களா காவி…?! சிலருக்கு உடலளவில் குறையிருந்தால் சிலருக்கு மனசளவில்!” என்றவள்,

     “நீ கேட்ட கேள்விக்கு நான் வாழப் போற வாழ்க்கை மூலமா உனக்கு பதில் கிடைக்கும்!” என்று சொல்லிவிட்டு நேராக நிரஞ்சன் வீட்டிற்குக்  கிளம்பினாள்.

    அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை நேரமாதலால், அனைவரும் வீட்டிலிருந்தனர்.

     யாஷினி நேராகச் சென்று, ஹாலில் அமர்ந்து தங்களது கடையின் கணக்கு வழக்கை பார்த்து கொண்டிருந்த கிருஷ்ணன், இராமநாதன் இருவரின் கால்களிலும் விழுந்து வணங்கி,

     “என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க தாத்தா.. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா..” என்றாள்.

     இருவருமே அவள் யாரென்று புரியாமல் விழிக்க, “முதல்ல நீங்க ரெண்டு பெரும் ஆசீர்வாதம் பண்ணுங்க அப்புறம் நான் யாருன்னு சொல்றேன்!” என்றாள்.

     அவர்கள் ஆசி வழங்கிய பின், பூஜையறையில் இருந்த காமாட்சி பாட்டியிடமும் சென்று வணங்கி ஆசி பெற்று வந்தாள்.

     பின் சமையலறையிலிருந்து தன் மாமனாருக்கும், கணவருக்கும் சிற்றூண்டி எடுத்து வந்து கொண்டிருந்த ராதாவின் கால்களிலும் விழுந்து வணங்கினாள்.

     அனைவரும் அவள் யாரென்று புரியாமல் விழித்து கொண்டிருக்க, மடிக்கணினியில் ஏதோ வேலையாக இருந்த ரஞ்சனிடமும் சென்று,     

     “மாமா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க!” என்று வணங்கினாள்.

     அவன் பதறிப்போய், “யார் யார் ம்மா நீ?!” என்று கேட்க,

     அந்நேரம் பார்த்து நிலாவும், நிவியும் மாடியிலிருந்து கீழிறங்கி வந்தனர்.

     நிலா அவளைப் பார்த்ததும், ‘ஏதோ முடிவோடதான் வந்திருக்கா போல..! இன்னிக்கு நம்ம நிரு பாடு திண்டாட்டம்தான்!’ என்று எண்ணிக் கொண்டாள்.

    அனைவரும் யாஷினியின் செய்கையில் குழம்பிப் போய் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க,

     காமாட்சி பாட்டிதான் சற்று சுதாரித்து, “நீ.. நீ யாரும்மா…?!” என்றார்.

     “நான் வந்து பாட்டி…” என்று அவள் சொல்வதற்குள், தங்கள் வீட்டிலிருந்த நூலகத்திலிருந்து வெளியே வந்த நிரஞ்சன் அவளைப் பார்த்து பதறிப் போய்,

     “ஏய் நீ நீயா? நீ எதுக்கு இங்க வந்த?!” என்றான் கோபமாக.

     “என்ன நிரு நீங்க?! நீங்களும் வீட்ல சொல்லி எந்த முயற்சியும் எடுக்க மாட்டேங்கறீங்க? நான் வந்து பேச நினைச்சாலும் ஏன் வந்தேன்னு கேட்கறீங்க?!” என்றாள் யாஷினி பாவம் போல்.

     நிவி நடப்பவற்றைப் பார்த்து, “என்ன நிலா இது?” என்று கேட்க,

     நிலா சிரித்தபடி, “பொறுத்திருந்து வேடிக்கை பாரு!” என்றாள்.

     “நிரு.. யார்டா இந்தப் பொண்ணு?! உனக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்?! எங்க எல்லோரையும் முறை வச்சிக் கூப்பிடறா?!” என்றார் காமாட்சி பாட்டி.

     “அய்யோ பாட்டி… இவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…! இவ யார்னே எனக்குத் தெரியாது!” என்றான் நிரு பதட்டத்துடன்.

     “யார்னே தெரியாம உன்னை எப்படிடா அவ பேர் சொல்லிக் கூப்பிடுவா?! அதுவும் நாங்க கூப்பிடுற செல்லப் பேரை?!” என்றார் கிருஷ்ணன்.

     “அ அப்பா… இந்தப் பொண்ணு!” என்று அவன் திணற,

     “நான் சொல்றேன் மாமா..” என்றவள்,

     “என் பேரு யாஷினி. நான் M.A. English.Literature முடிச்சிருக்கேன். எனக்கு அஞ்சு வயசு இருக்கும் போதே என் அம்மா இறந்துட்டாங்க. அப்பா ஒரு பக்கா பிசினஸ் மேன். பெரிய கோடிஸ்வரர். குழந்தைகளை பார்த்துக்க பணமும், வேலைக்காரங்களும் மட்டுமே போதும்னு நினைக்கிறவர். எனக்கு ஒரு அண்ணன் இருக்கான். பேரு சந்தோஷ். அவன்தான் சின்ன வயசில எனக்கு அன்புன்னா என்னன்னு புரிய வைக்க இருந்த ஒரே உறவு. இப்போ அவன் மனைவி காவ்யாவும், மக தர்ஷினியும் கூட என் மேல் அன்பைப் பொழியறாங்க.

     நான் நிருவை முதன் முதலா பார்த்தபோதே அவர் என் மனசுல பதிஞ்சிட்டார். ஆனா அது காதலா எப்போ மாறுச்சுன்னு எனக்கே தெரியல?! நான் என் காதலை உணர்ந்த பிறகு.. இவர்கிட்ட என் காதலை சொன்னேன். ஆனா இவர் என்னை ஏத்துக்கவே இல்லை! நானும் அவர் என்னை ஏத்துக்கிற வரைக்கும் பொறுமையா இருக்கலாம்னுதான் நினைச்சேன். ஆனா என் அப்பா என்னை வேற யாருக்கோ கல்யாணம் செய்து வைக்கணும்னு ரொம்ப தீவிரமா இருக்காரு! இன்னிக்கு அவங்க எல்லோரும் பொண்ணு பார்க்க வந்திருப்பாங்க. நான் இங்க கிளம்பி வந்துட்டேன்.

      நிரு இல்லைன்னா நான் இல்லை, அவர் எனக்கு கிடைக்கலைன்னா நான் செத்துடுவேன் அப்படின்னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனா அவர்தான் என்னோட வாழ்க்கைத் துணை. அவரைத் தவிர வேற யாரையும் நான் என் கணவரா ஏத்துக்க மாட்டேன்! நீங்க எல்லோரும் சம்மதிக்கற வரைக்கும் நான் காத்திருப்பேன்.

     இதெல்லாம் நியாயமா என் அப்பாவோ, அம்மாவோ, அண்ணனோதான் வந்து உங்ககிட்ட பேசியிருக்கனும்! ஆனா எனக்கு அம்மா இல்லை. அப்பா எப்பவுமே எங்க விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அண்ணாவுக்கு இதில் சம்மதம்னாலும் அப்பாவுக்கு ரொம்ப பயந்த பிள்ளை. அவரை மீறி எனக்காக உங்ககிட்ட வந்து பேச பயப்படுறான். அதான் வெட்கத்தை விட்டு நானே உங்க எல்லோர்கிட்டயும் வந்து பேசிட்டேன்! நான் செய்தது தப்புன்னா என்னை மன்னிச்சிடுங்க!” என்றாள் லேசாகக் கலங்கிய தன் கண்களைத் துடைத்தபடி.

     அவள் பேசியதைக் கேட்ட அனைவரின் நெஞ்சமும் கரைந்து போக, நிரு முதன் முதலாக அவள் முகத்தை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்த்தான்.

     நிரு இதுவரை அவளை இப்படிப் பட்ட நிலையில் கண்டதே இல்லை. எப்போதும் அவள் முகத்தில் ஒரு விளையாட்டுத் தனம் குடியிருக்கும்! அவன் அவளை நிராகரித்துப் பேசும் போதும் கூட அவள் சிறு பிள்ளைகளைப் போல் சிரித்தபடிதான் தான் இருப்பாள்.

     அவள் கண்ணீர் கண்டு அவன் மனம் ஏனோ பதறித் துடித்தது. ஓடிபோய் அவள் கண்ணீரைத் துடைத்துவிட வேண்டுமென்று அவன் உள்ளம் ஏங்கியது.

     ‘சே என்ன இதெல்லாம்?! ஏன் என் மனசு இப்படி எல்லாம் யோசிக்கிறது?!’ என்று தன்னையே கடிந்து கொண்டவன்,

     ‘அவ இருக்க அழகுக்கு நானெல்லாம் அவ பக்கத்துல நின்னு கூட பேச முடியாது! இதுல நான் அவளை கல்யாணம் செய்துக்கறதா?! இல்ல நிச்சயமா முடியாது! இப்பவே அவளோட இந்த நினைப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வரணும்!’ என்று நினைத்தவன், 

     “பாட்டி அவளை வெளியப் போகச் சொல்லுங்க…!” என்றான்.

     அவள் அவனை ஏக்கத்துடன் பார்க்க, அவள் பார்வை ஏனோ அவன் உயிரை ஊடுருவியது!

     “பாட்டி இதெல்லாம் சரிவராது… முதல்ல இங்கிருந்து அவளைக் கிளம்பச் சொல்லுங்க!” என்றான் நிரு குரலில் கடினத்தை வரவழைத்து.

     காமாட்சி பாட்டி அவன் பேச்சை சற்றும் காதில் வாங்காமல், அவளைக் கைபிடித்து அழைத்துச் சென்று சோபாவில் அமரவைத்து, தானும் அவள் அருகே அமர்ந்து கொண்டார்.

     பின் ராதாவைப் பார்த்து, “யாஷினிக்கு சாப்பிட ஏதேனும் கொண்டு வா ராதா..” என்றார்.

     “ம் சரிங்க அத்தை!” என்று அவர் நகர,

     நிலா அவர்கள் அருகே வந்து, யாஷினியைப் பார்த்து சிநேகப் புன்னகைப் புரிந்து, “எப்படி இருக்க யாஷினி?” என்றாள்.

     “ம் நான் நல்லாயிருக்கேன்! நீங்க எப்படி இருக்கீங்க நிலா…?!” என்றாள் யாஷினி.

     “நிலா… உனக்கு இவளை ஏற்கனவே தெரியுமா!?” என்று காமாட்சி பாட்டி கேட்க,

     “ம் பாட்டி…” என்றாள்.

     “இங்க பாரும்மா யாஷினி… திருமணம்கிறது எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்கிற விஷயமில்லை. கல்யாணம் செய்துக்கப் போறவங்க மட்டுமில்லை, அவங்க குடும்பத்தைச்  சேர்ந்தவங்களும் சந்தோஷமா முழுமனசோட சம்மதிக்கணும்! நீ எங்க நிருவை விரும்பறன்னு சொன்ன அந்த தருணம் என்னைவிட சந்தோஷப் பட்டவங்க இந்த உலகத்தில்  வேற யாரும் இருந்திருக்க முடியாது! ஏன்னா ஒவ்வொரு நாளும் எனக்கு அவனோட வாழ்க்கையைப் பத்தின கவலைதான் அதிகம்!

     அவனுக்கு ஒரு நல்ல பொண்ணு கிடைக்க மாட்டாளா?! என் பேரனும் எல்லோரையும் போல சந்தோஷமா வாழமாட்டானான்னு நினைச்சு ஒவ்வொரு நாளும் நான் ஏங்கித் தவிச்சிருக்கேன்! ஆனா இப்போ நீ கேட்டதும் நாங்க சம்மதிச்சு உனக்கு திருமணம் முடிச்சு வைச்சிட்டோம்னா எங்களைவிட சுயநலவாதிங்க வேற யாரும் இருக்க முடியாது! கொஞ்ச நாள் போகட்டும்… யோசிச்சு முடிவெடுக்கலாம்!” என்றவர் அவள் தலை வருடி,

     “அதுவரைக்கும் நீ எப்ப வேணும்னாலும் இந்தப் பாட்டி வீட்டுக்கு வந்துட்டு போகலாம். என் பேத்தியா…” என்று சொல்லித் தன் கணவர் முகம் பார்க்க,

     “ம்!” என்று தலையசைத்தார் இராமநாதனும்.

     ராதா அவளிடம் கேரட் அல்வாவை நீட்ட, அதனை வாங்கிய யாஷினி,

     “சுப்பரா இருக்கு ஆன்ட்டி…! எனக்கு கேரட் அல்வா ன்னா உயிரு..!” என்று சப்புக் கொட்டி சாப்பிட,

     “முதல்ல பாவ் பஜ்ஜிதான் செய்யனும்ன்னு நினைச்சேன். அப்புறம் இல்ல வேண்டாம் ஏதேனும் ஸ்வீட் செய்யலாம்னு நினைச்சு இதைச் செய்தேன்!” என்றார் ராதா புன்முறுவலுடன்.

     “ம் பார்த்தீங்களா… ஆன்ட்டி… காட்தான் உங்க மனசில புகுந்து எனக்காக ஸ்வீட் செய்ய வைச்சிருக்கார்!” என்றாள் யாஷினி சிரிப்புடன்.  

     இதையெல்லாம் பார்த்திருந்த நிரு, கோபமாக அவளை முறைத்துவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட, யாஷினியின் முகம் வாடிப் போனது.

     அதைக் கண்ட நிலா, நிவி, காமாட்சியின் மனமும் வருத்தம் கொண்டது.

     நிலா, யாஷினியின் மனதை திசை திருப்பும் பொருட்டு, “என்ன இருந்தாலும் உங்க வீட்ல பெண் பார்க்க வந்த நேரத்துல நீ இங்க வந்திருக்கக் கூடாது யாஷினி. உங்கப்பாகிட்ட பேசி உன் மனசைப் புரிய வைச்சிருக்கனும்!” என்றாள்.

     “நிருவே இன்னும் என் மனசைப் புரிஞ்சிக்கல… என் அப்பா எங்க புரிஞ்சிக்கப் போறார்!?” என்றாள் யாஷினி வேதனையுடன்.

     அவள் பதில் அங்கு அமைதியைத் தோற்றுவித்தது.

     “உங்க வீட்ல எல்லோரும் உன்னைத் தேட மாட்டாங்களா?!” என்று காமாட்சி கேட்க,

     “காவ்யாவுக்கும் அண்ணனுக்கும் நான் இங்க வர விஷயம் தெரியும்! இந்நேரம் அப்பாவுக்கும் தெரிஞ்சிருக்கும்! அவர் இந்நேரம் செம கோபத்துல இருப்பார் பாட்டி” என்றாள்.

     “நீ உடனே உங்க வீட்டுக்குக் கிளம்புமா? பிரச்சனை ஆகிடப் போகுது!”  என்றவர், அவளுக்கு பூ வைத்து, குங்குமம் கொடுத்து வழியனுப்பினர்.

    “இதெல்லாம் எதுக்கு பாட்டி…?!” என்று அவள் ஆச்சர்யத்துடன் கேட்க,

     “வீட்டுக்கு வர கன்னிப் பெண்களுக்கும், சுமங்கலிப் பெண்களுக்கும் குங்குமம், பூவும் கொடுக்கறது ரொம்ப நல்லதும்மா…!” என்றார்.

     “ஓ அப்படியா?!” என்றவள், “என்ன ப்ளேஸ் பண்ணுங்க பாட்டி!” என்று மறுபடியும் அவர் காலில் விழுந்தாள்.

     “நல்லயிரும்மா..” என்று மனபூர்வமாக ஆசிர்வதித்தார் காமாட்சி.

     அனைவரிடமும் விடைபெற்றுத் தன் வீட்டிற்குக் கிளம்பிய யாஷினி, வீட்டை அடைந்த பின், ஹாலில் கடும் கோபத்துடன் அமர்ந்திருந்த பஞ்சாட்சரத்தை சற்றும் கண்டு கொள்ளாமல் தன் அறை நோக்கிச் செல்ல,

     “யாஷினி…!” என்று கத்தினார் பஞ்சாட்சரம்.

     “என்ன?!” என்பது போல் அவள் அலட்சியமாக நிற்க, அவள் அருகே வந்தவர், பளாரென்று அவள் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டார்.

     அவர் அடித்த அடியில் அவளின் பட்டுக் கன்னங்கள் சிவந்து போக, வலி தாளாமல் கன்னத்தைப் பிடித்துக் கொண்டவளின் கண்கள் தாமாகக் கலங்கின.

     அவள் வருகையை அறிந்து, சந்தோஷ், காவ்யா இருவரும் அங்கே வந்திருக்க அவர்களுக்கும் அக்காட்சி பயத்தைத் தோற்றுவித்தது. அவர்கள் வீட்டிலிருந்த வேலைக்காரர்கள் உட்பட அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்.

     பஞ்சாட்சரம் கோபக்காரர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும், இதுவரை அவர் தன் பிள்ளைகளை கை நீட்டி அடித்ததில்லை.

     அவர் அடித்த அடியில் யாஷினிக்கு அழுகையும், கோபமும்  பீறிட்டுக் கொண்டு வர, அவளுக்கு மூச்சு வாங்கத் துவங்கியது.

     “ஆ… ஷ் ஆ ஷ்!” என்று அவள் மூச்சை இழுத்து இழுத்துவிட, பதறிய சந்தோஷ் அவளுருகே ஓடி வந்து,

     “யாஷு.. யாஷு கன்ட்ரோல் கன்ட்ரோல் யுவர்செல்ப்!” என்று அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான்.

     பஞ்சாட்சரம் பதட்டத்துடன் மருத்துவருக்கு அழைக்க, “வேணாம் வேணாம் ப்பா… அவ ரூம்லயே மாத்திரைகள் இருக்கு!” என்றவன், காவ்யாவிடம் யாஷினியைப் பார்த்துக் கொள்ளும் படிப் பணித்துவிட்டு, தங்கைக்கு மாத்திரையை எடுத்து வந்துக் கொடுத்து சாப்பிடச் வைத்து அவளை உறங்கச் செய்தான்.

     மகள் உறங்கியவுடன் பஞ்சாட்சரம் தன் அறைக்குச் சென்று விட, சந்தோஷ் அவள் அருகேயே இருந்து பார்த்துக் கொண்டான்.

     உறக்கம் கலைந்து யாஷினி எழுந்த பின், அவளை அவள் அறைக்கு இட்டுச் சென்று படுக்க வைத்துவிட்டு, தன் அறைக்குச் சென்றான் அன்பு அண்ணன்.

     மறுநாள் காலை அவள் எடுத்த முடிவு பஞ்சாட்சரம் சற்றும் எதிர்பார்க்காதது.

     நாட்கள் காற்றைப் போல் நகர்ந்தது. நிலா, ரஞ்சனின் திருமண வரவேற்பு மிக விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. மணப்பெண்ணும், மணமகனும் ஓர் வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. அவ்வப்போது பார்வைப் பரிமாற்றங்கள் மட்டுமே நடந்து கொண்டிருந்தது.

     வரவேற்பு முடிந்த இரவு, நிலாவின் மனமும், ரஞ்சனின் மனமும் பல்வேறு எண்ணங்களில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

    மறுநாள் ஆதவன் மெல்ல மெல்ல கிழக்கில் முகம்காட்ட, அவனது பிரகாசமான ஒளியில், நிலா ராணியும், அவளது நட்சத்திரத் தோழிகளும் தங்களைத் தொலைத்துக் கொண்டிருந்தனர்.

     மூகூர்த்த நேரம் நெருங்க நெருங்க நிலாவின் நெஞ்சில் படபடப்புக் கூடிக் கொண்டே போனது. ரஞ்சனின் மனமோ எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஓர் விரக்தி நிலையில் இருந்தது.

     சாஸ்திர சம்பிரதாயங்கள் முடிவடைய, அய்யர் ரஞ்சனைப் பார்த்து, “தாலியைக் கட்டுங்கோ…!!” என, அவன் தயக்கத்துடன் அத்தாலியை வெறித்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!