Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Nila Thozhikku

En Nila Thozhikku 10

                                              

                                    

                                     1௦

     “என்ன யாஷினி?! விளையாடுறியா?!” என்று தாமோதரன் கேட்க,



Advertisement

     “நோ நாட் அட் ஆல் அங்கிள்…! நான் நிருவை என் வாழ்க்கையா துணையா தேர்ந்தெடுத்து ரொம்ப நாள் ஆச்சு! வாழ்ந்தா அவரோடுதான்!” என்றாள் தீர்க்கமாக.

    சோனியா, தாமோதரன், அவரின் மனைவி  மூவரும் அதிர்ச்சியில் திளைத்து நிற்க,

     “என்ன.. எல்லோரும் இப்படி ஷாக் ஆகறீங்க?! சீக்கிரம் உங்க பிரெண்ட்கிட்ட விஷயத்தை சொல்லி, கல்யாணத்தை பேசி முடிக்க சொல்லுங்க அங்கிள்! பை..!” என்று விடைபெற்றவள், அசையாமல் உறைந்து போய் நின்றிருந்த தன் தோழி சோனியாவின் கன்னத்தை நறுக்கென்று  கிள்ளி,

Advertisement

     “ஷாக்லயிருந்து வெளில வா பப்ளிமாஸ்!” என்று சொல்லி வெளியேறினாள்.  

Advertisement

    அவள் சென்ற பிறகு, “என்னப்பா இது?! எல்லாம் உங்களால்தான்! நீங்கதான் எப்பவும் அந்த நிரஞ்சன், நிலா புராணத்தைப் பாடிப் பாடி அவளை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டீங்க!” என்றாள் சோனியா கோபத்துடன்.

     “நான் அவங்க ரொம்ப நல்ல பசங்களாச்சேன்னு அடிக்கடி அவங்களைப் பத்தி பேசிக்கிட்டு இருப்பேன்! யாஷினி இப்படி ஒரு முடிவேடுப்பான்னு நான் எதிர்ப்பார்க்கலை!” என்றவர், சில நொடிகள் யோசனைக்குப் பின்,

     “நிஜமாவே நம்ம யாஷினி நிருவைக் கல்யாணம் செய்துகிட்டா எவ்ளோ நல்லாயிருக்கும்?!” என்றார்.

Advertisement

     “என்னப்பா நீங்க? நம்ம யாஷினிக்கு போய் அப்படி ஒரு பையனா?! இதே நான் இப்படி ஒரு பையனை காதலிச்சிருந்தா நீங்க சம்மதிசிருப்பீங்களா?! என்றாள் சோனியா.

     “அப்படி ஒரு நல்ல மனசு என் பொண்ணுக்கு இல்லையே!” என்றார் தாமோதரன்.

     “என்னங்க நீங்க?!” என்ற அவரின் அருமை மனைவியும், மகளுக்குத் துணை வர,

     “நிரஞ்சன் மாதிரி நல்ல குணம் படைத்த பசங்க இந்த காலத்துல எத்தனை பேர் இருக்காங்க சொல்லு?! உருவத்தையும், அழகையும் முன்னிறுத்திப் பார்க்காம அவனோட குணத்தை முன்னிறுத்திப் பாருங்க!” என்றார் மனைவி, மகள் இருவருக்கும் பொதுவாக.

     “நீங்க என்னதான் சொல்லுங்க ப்பா… என்னால இதை ஏத்துக்க முடியலை!” என்றாள் சோனியா.

     “வாழபோறது அவங்க! அவங்க ரெண்டு பேரோட முடிவுதான் இதுல முக்கியம்! யாஷினியோட பிடிவாதம் பத்தி உனக்குத் தெரியாததா என்ன?! பார்ப்போம் என்ன நடக்கப் போகுதுன்னு!” என்று எழுந்து வேலைக்குக் கிளம்பத் தயாரானார் தாமோதரன்.

     நிரஞ்சன் எம்.பில் பயின்று கொண்டிருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அருகில் இருக்கும் அந்த காபி ஷாப்பில், எப்போதும் போல் வீட்டிற்குக் கிளம்பும் முன், மாலை நேரம் தான் அருந்திவிட்டுச் செல்லும் காபியைப் பருகியபடி நிரஞ்சன் அமர்ந்திருக்க,

     “ஹலோ என்ன பாப்பா நீங்க… இப்படி பண்ணிட்டீங்களே?! உங்க அண்ணனுக்கும் நம்ம நிலாவுக்கும் நான் இல்லாமலே நிச்சயம் பண்ணிட்டீங்க இல்ல?!” என்றாள் யாஷினி அவனெதிரே வந்தமர்ந்து.

     “ஏய் பாப்பான்னு கூப்பிடாதன்னு உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன்! அதுவும் எப்பப்பாரு பொது இடத்துல வைச்சு என் மானத்தை வாங்குற?” என்றான் நிரஞ்சன் வெறுப்புடன்.        

     “அப்போ தனியா இருக்கும் போது கூப்பிட்டா ஓகேவா?” என்று கண்ணடித்துவிட்டு,

     “நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலை!” என்றாள்.

     “என்ன..?!” என்றான் எரிச்சலுடன்.

     “நிலாவுக்கும், உங்க அண்ணனுக்கும் நடந்த நிச்சயத்துக்கு என்னைக் கூப்பிடவே இல்லையேன்னு கேட்டேன்?!” என்றாள் அவள் மறுபடியும்.

     “நீ யாரு? உன்னை எதுக்கு கூப்பிடனும்!?” என்றான் அவன் காபியைக் பருகியபடியே அலட்சியமாக.

     “என்ன என்ன நான் யாரா? ரஞ்சன் மாமாவோட ஒன் அண்ட் ஒன்லி தம்பி.. மிஸ்டர். நிரஞ்சனோட வருங்கால பொண்டாட்டி” என்று அவள் ஒரே போடாகப் போட, காபியைப் பருகிக் கொண்டிருந்தவனுக்குப் புரையேற சட்டென்று காபிக் கப்பை எடுத்தான்.

     “ச்சோ..! என்ன பாப்பா நீங்க பொறுமையா குடிக்கனும்ல…!” என்றபடி அவள் எழுந்து அவன் தலையைத் தட்டி விட, காபி ஷாப்பிலிருந்த பலரது பார்வையும் அவர்கள் மேல் பதிந்தது.

     நிரஞ்சன் அவளுடைய கையைத் தட்டி விட்டு, “வேணாம்! வீணா வம்பு பண்ணாம  இங்கிருந்து போயிடு!” என்றான் கோபம் ஏற.

     “சரி, என்னோட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீங்க பதில் சொல்லிடுங்க நான் போயிடறேன்!” என்றாள் அவள்.

     அவன் பதிலின்றி அவளை முறைக்க, “என்ன கேள்வி கேட்கலாமா?!” என்றாள்.

     “கேட்டுத் தொலை!” என்றான் சலிப்புடன்.

     “எப்போ நம்ம கல்யாணத்தை வைச்சுக்கலாம்?!” என்று கேட்டு மேலும் அவனைக் கோபமுறச் செய்தாள் அவள்.

     “உன்னை…!” என்று பற்களைக் கடித்தவன், “மரியாதையா இங்கிருந்து போயிடு!” என்று கத்தினான்.

     “ஷ்ஷ்ஷ்ஷ்! மெதுவா இது பொதுஇடம்!” என்று அவனுக்கு நினைவூட்டியவள்,

     “எப்போன்னு சொல்லுங்க போயிடறேன்!” என்றாள்.

     “நீ இங்கயே உட்கார்ந்திரு நான் போறேன்!” என்று பில்லுக்கான பணத்தை வைத்துவிட்டு, அவன் எழுந்து விறுவிறுவென்று நடக்க,

     “ஹலோ பாப்பா… என்ன பதிலே சொல்லாம போறீங்க!” என்று அவனைப் பின் தொடர்ந்து ஓடினாள்.

     அவனோ அவள் கூப்பிடுவதைச் சற்றும் கண்டு கொள்ளாமல் வேகநடையிட்டுச் சென்று, தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

     “ம் இவரை சம்மதிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம் போல..!” என்று வாய்விட்டுப் புலம்பியவளும்,

     “யாஷினி நினைச்சா முடியாததா?!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

     அன்று இரவு தங்கள் வீட்டினுள் நுழையும்போதே, “யாஷினி… ஏய் யாஷினி!” என்று அதட்டலுடன் குரல் கொடுத்துக் கொண்டே வந்தார் பஞ்சாட்சரம்.

     ‘அடடா… அந்த சோனி குண்டோதரி போட்டுக் கொடுத்துட்டா போலவே! ஹப்பா! இப்பதான் நிம்மதியா இருக்கு! எப்படிடா இந்த விஷயத்தை வீட்ல ஓபன் பண்ணப் போறோம்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்! தாங்க்ஸ் டி பப்ளிமாஸ்!’ என்று தன் தோழிக்கு மனதில் நன்றியுரைத்தவள், நல்ல பிள்ளை போல் ஹாலிற்கு வந்து நின்றாள்.

     “என்ன நடக்குது இங்க?!” என்றார் மிஸ்டர். பஞ்ச்.

     “ம்!” என்று கன்னத்தில் விரல் வைத்து யோசித்தவள்,

     “இப்போ… நீங்க குறுக்கும் நெடுக்குமா நடக்கறீங்க. அப்புறம் நம்ம காவி இங்க என்ன நடக்குதோன்னு பாத்துகிட்டே நடந்து வர்றா, அப்புறம் நம்ம தர்பூஷணி மாடில இருந்து இறங்கி நடந்து வர்றா, அங்க பாருங்க! அப்புறம் நம்ம வீட்டு வேலைக்காரங்க சமையற்கட்டுல நடக்கறாங்க! இதெல்லாம்விட ஹைலைட், நம்ம டாலி கூட நீங்க போட்ட அதட்டல்ல.. என்னாச்சோ ஏதாச்சோன்னு பார்த்துகிட்டு வாசலிலிருந்து உள்ள நடந்து வருது! அப்புறம் உங்க…” என்று அவள் சொல்லிக் கொண்டே போக… 

     “ஸ்டாப் இட் இடியட்!” என்று கத்தினார் பஞ்சாட்சரம்.

     “ஏவ அவ?!” என்று அவள் காதலன் பிரபு தேவா பாணியில் கேட்க,

     “ஏய் உன் விளையாட்டை யெல்லாம் கொஞ்சம் நிறுத்திட்டு நடந்த விஷயத்தை சொல்றியா?” என்றார் பஞ்சாட்சரம் காட்டமாக.

     “என்ன சொல்லணும்?!” என்றாள் சற்றும் அசராமல்.

     “நீ யாரோ ஒரு குள்ளனை விரும்பறியாமே?!”

     அதுவரை விளையாட்டாக பதில் சொல்லிக் கொண்டிருந்தவள், “படிச்சவங்கதானே நீங்க?! ஒருத்தரோட குறையை சம்மந்தப் படுத்தி அவங்களை அழைக்கறீங்க?! அவருக்கு பேரு இருக்கு! நிரஞ்சன்னு மரியாதையா கூப்பிடுங்க!” என்றாள் காட்டமாக.

     “ஓ!” என்று ஆச்சரியக்குறியுடன் அவளைப் பார்த்தவர்,

     “அவனை எல்லாம் உனக்கு கல்யாணம் செய்து வைக்க முடியாது! உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளையை பார்க்கச் சொல்லியிருக்கேன் தெரியுமா?! போயும் போயும் ஒரு…” என்று அவர் முடிப்பதற்குள்,

     “ஓ! அதக் கூட பார்க்கச் சொல்லியிருக்கீங்க?! யாருகிட்ட? உங்க பி.ஏ கிட்டதானே!?” என்று அவரைக் கேள்வியால் துளைத்தவள், அவரருகே சென்று,

     “என் பொண்ணு அவ வாழ்க்கையை அவளே தேர்ந்தெடுத்துக்கிட்டா… அதனால நீங்க மாப்பிள்ளை பார்க்க வேண்டாம்னு சொல்லிடுங்க! உங்க பி. ஏ… கிட்ட!” என்று அலட்சியத்துடன் சொல்லிவிட்டு அவள் நகரப் பார்க்க,

     “யாஷினி…?!” என்று அவர் சத்தம் போட, அதற்குச் சற்றும் அஞ்சாமல்,

     “உங்களுக்கு இந்த விஷயம் தெரியனும்னு நினைச்சேன். தெரிஞ்சிடுச்சு! நீங்க சம்மதம் சொல்லி எங்களை சேர்த்து வைச்சா ஓகே! இல்லைன்னா நானே ஆக வேண்டியதை பார்த்துக்கறேன்!” என்று  சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

     “பார்த்தியா சந்தோஷ்… அவ எப்படி பேசிட்டு போற?!” என்றார் பஞ்சாட்சரம் தன் மகனிடம்.

     “நான் அவகிட்ட பேசிப் பார்க்கறேன் ப்பா…!” என்றான் சந்தோஷ்.

     “உன் அம்மா இருந்திருந்தா அவள இப்படியெல்லாம் பேச விட்டிருப்பாளடா…?!” என்றார் பஞ்சாட்சரம்.

     “அம்மா ஸ்தானத்துல இருந்து நீங்க எங்கள வளர்த்திருந்தாலும் அவ இப்படி பேசியிருக்க மாட்ட ப்பா…!” என்றான் சந்தோஷ் முதன்முறையாக தன் மனதை மறையாமல்.

     “சந்தோஷ்…!?” என்று அவர் அவனைப் பார்க்க,

     “எங்களுக்கு அம்மாதான் இல்லாம போயிட்டாங்க…! ஆனா அப்பா நீங்க இருந்தும் உங்க  பாசம் கிடைக்கம நாங்க ரெண்டு பேரும் எத்தனை நாள் ஏங்கியிருக்ககோம்னு உங்களுக்குத்  தெரியுமா ப்பா…?!” என்றான் சந்தோஷ்.

     “நான் உங்களுக்கு என்னடா குறை வைச்சேன்?! உங்களுக்காகத் தானடா ஓடி ஓடி உழைக்கிறேன்!” என்றார் பஞ்சாட்சரம்.

     “ஹும் ஓடி ஓடி உழைச்சு என்ன பிரயோஜனம் ப்பா… ஒரு அப்பாகிட்ட இருந்து எங்களுக்கு கிடைக்க வேண்டிய அன்பு எங்களுக்கு எப்பவுமே கிடைச்சதில்லை! இன்னிக்கு வரைக்கும்!” என்றான் விரக்தியுடன்.

     “சந்தோஷ் உங்களை பார்த்துக்க தான் அத்தனை பேரை நியமிச்சிருந்தேனே?! அவங்க உங்களுக்குத் தேவையானதை எல்லாம் கவனிச்சிக்கிட்டாங்க இல்லையா?!”

     “ம் ஆமாம் ப்பா… செய்து கொடுத்தாங்க தான்.. நாங்க கேட்டதெல்லாம் எங்களுக்கு கிடைச்சது. அன்பைத் தவிர…!” என்றவன், தன் தங்கையின் அறையின் புறம் பார்வைச் செலுத்தி மீட்டு,

     “நான் கூட பரவாயில்லைப்பா.. அம்மா சாகும் போது எனக்கு பத்து வயசு ஆகிடுச்சு. ஓரளவு எனக்கு விவரம் தெரியிற வயசு. ஆனா யாஷுக்கு அப்போ  அஞ்சு வயசுதான். அவ என்கிட்டே அம்மா வேணும்னு அழும் போதெல்லாம் நான் அவளை சமாதனப் படுத்த முடியாம எப்படித் தவிச்சுப் போயிருப்பேன் தெரியுமா?!

     நீங்களும் அவ அழுதழுது ஓய்ந்து தூங்கின பிறகுதான் வீட்டுக்கு வருவீங்க! அப்பவெல்லாம் அவ, “அண்ணா அப்பா வீட்டுக்கு வரவே மாட்டாரா? அம்மா சாமிக்கிட்ட தானே போயிருக்காங்க…?! நாமளும் சாமிக்கிட்ட போயிடலாமான்னு!?” அவ கேட்கும் போதெல்லாம் எனக்கு எவ்ளோ வேதனையா இருக்கும் தெரியுமா ப்பா…” என்றவன் ஒரு நொடி நிறுத்தி,

     “அன்னிக்கு நீங்க எங்களை விட்டுட்டு பிசினஸ் பிசினஸ்னு விலகிப் போனீங்க! இப்போ அவ உங்களை விட்டு விலகியே இருக்கா…!” என்று தன் மனதில் இருந்த ஆதங்கத்தை எல்லாம் கொட்டிவிட்டு சந்தோஷ் தங்கையின் அறை நோக்கிச் செல்ல, அவன் செல்வதையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் பஞ்சாட்சரம்.

     இரவு வெகு நேரம் உறக்கம் வராமல் தவித்த ரஞ்சன், எழுந்து தங்கள் வீட்டு பால்கனியில் போடப் பட்டிருந்த சோபாவில் சென்று அமர்ந்தான்.

     ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?! நான் வேணாம்னு நினைக்கிறதுதான் என்னைத் தேடி வருது!’ என்று சலித்துக் கொண்டவன், கண்களை மூடி கடந்த கால நினைவுகளில் தன்னைத் தொலைத்தான்.

     நினைவுகளில் நீந்திக் கொண்டிருந்தவனின் முகத்தில், காற்றில் மிதந்து வந்த சில்லென்ற மழைச்சாரல் தீண்ட, கலங்கியிருந்த தன் கண்களைத் திறந்தான்.

     மழைராணி அவன் மனதை ஈர்க்க, மெல்ல எழுந்து, சுற்றுச் சுவர் அருகே சென்று, தன் முகத்தை மட்டும் வெளியே நீட்டி மழையின் ஸ்பரிசத்தை யாசித்தான்.

     மழைச்சாரல் அவன் முகத்தை மட்டுமின்றி மனதையும் குளிர்வித்தது.

     அன்று நிலாவின் தந்தை தான் ஆச்சாரியாகப் பணிபுரியும் நகைக் கடையின் முதலாளியிடம் சென்று நிலாவின் திருமண விஷயம் பற்றிக் கூறி கடன் கேட்டார்.

     “என்ன வெங்கடேசன் இப்போதான் உங்களுக்கு ஆபரேஷன் செய்ததுக்கு இருபதாயிரம் ரூபாய் கொடுத்தேன். இப்போ பொண்ணுக்கு கல்யாணம்னு வந்து நிக்கறீங்களே..?!” என்றார் அவர் முதலாளி.

     “அய்யா மாப்பிளை வீடு ரொம்ப பெரிய இடம்! இருந்தாலும் அவங்க பத்து காசு கூட வரதட்சனை கேட்கலை! ஆனா ஓரளவுக்காவது பொண்ணை மரியாதையோடு அவங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கணும்னு நினைக்கிறேங்கய்யா…! அதுக்குதான்” என்றவர், தன் பையிலிருந்து தங்களின் வீட்டுப் பத்திரத்தை எடுத்து அவரிடம் கொடுத்து,

     “அய்யா இது எங்க வீட்டுப் பத்திரம்.. மாசாமாசம் நான் வாங்குற கடனை என் சம்பளத்துல பிடிச்சுடுங்க! நான் கடனை அடைக்கிற வரைக்கும் இந்த பத்திரத்தை அடமானமா வைச்சிக்கோங்கய்யா…!” என்றார் தாழ்மையாக.

     “என்ன வெங்கடேசன் இதெல்லாம் எடுத்து உள்ள வையுங்க…! உங்க வார்த்தையில எனக்கு நம்பிக்கை இருக்காதா என்ன?!” என்றவர்,

     “சரி மேனேஜர்கிட்ட சொல்லிப் பணத்தை வாங்கிக்கோங்க!” என்றார்.

     மனநிறைவுடன் அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்றார் வெங்கடேசன்.

     திருமணத்திற்கான ஆயத்தங்கள் படு ஜோராக ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, திருமணம் செய்து கொள்ளப் போகும் உள்ளங்கள் மட்டும் ஏதோ ஓர் இனம் புரியாத பதட்டத்தில் தவித்துக் கொண்டிருந்தன.

     ஓர் நாள் நிலாவும், நிரஞ்சனும் கோவிலில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்க,

     “ஹாய் நிலா… எப்படி இருக்கீங்க?! என்று கேட்டபடி பல நாள் பழகியவள் போல் நிலாவின் அருகே வந்தமர்ந்தாள் யாஷினி.

     “நீ நீங்க அன்னிக்கு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல…?!” என்று நிலா யோசனையுடன் கேட்க,

     “அட செம ஞாபக சக்திங்க உங்களுக்கு! ஒரு முறை பார்த்தாலும் சரியா ஞாபகம் வைச்சிருக்கீங்க! ஆனா ஞாபகம் வைச்சிக்க வேண்டியவங்கதான் ஞாபகமே இல்லாதது போல நடதுக்கறாங்க!” என்று புதிர் போட்டாள்.

     நிரு அவளை முறைக்க, “ம் யாரை சொல்றீங்க?! புரியலையே…!?” என்றாள் நிலா.

     “அதை விடுங்க… ரஞ்சன் மாமா எப்படி இருக்காங்க?!” என்றாள் யாஷினி.

     “என்ன ரஞ்சன் மாமாவா?!” என்று நிலா விழிக்க,

     “அய்யோ நிலா… அது ஒரு லூசு..! நீ வா நாம வீட்டுக்கு கிளம்பலாம்!” என்று அவள் கைபிடித்து இழுத்தான் நிரஞ்சன்.

     “ஹலோ பாப்பா… நீங்க இன்னும் எந்த விஷயத்தையும் நிலாகிட்ட சொல்லவே இல்லையா?! சே! என்னப்பா நீங்க?! உங்க பிரெண்ட்ஷிப் எவ்ளோ டீப்பானதுன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்! இப்படிப் பண்ணிட்டிங்களே…?!” என்று அவள் உச்சுக் கொட்டினாள்.

     “ஏய் நிரு.. என்னடா சொல்றா இவ?! நீ என்ன மறைச்ச என்கிட்ட?!” ம்?!” என்று நிலா அவனைப் பார்க்க,

     “அதை நான் சொல்றேன். முதல்ல நீங்க உட்காருங்க!” என்று அவள் கைப்பிடித்து மீண்டும் அமர வைத்தாள் யாஷினி.

     “உங்க ப்ரெண்டும் நானும் எவ்ளோ நாளா லவ் பண்றோம் தெரியுமா?!” என்று யாஷினி நிறுத்த,

     “என்ன??!!” என்று ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் ஒருசேர விழிகளை   விரித்தாள் நிலா.

     “இல்லை நிலா… அவசொல்றதெல்லாம் பொய் நம்பாத…!” என்று அலறினான் நிரஞ்சன்.

     “நீ சும்மா இரு நிரு!” என்று அவன் பேச்சைக் காற்றில் பறக்க விட்டவள், யாஷினியிடம் திரும்பி,

     “நீ எதுவும் விளையாடலையே?!” என்றாள் நிலா.

     “காட் ப்ராமிஸ்..! நான் அவரை உயிருக்கு உயிரா நேசிக்கறேன்!” என்று சத்தியம் செய்தாள் யாஷினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!