Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Nila Thozhikku

En Nila Thozhikku 17 1

                                                                  

                           

                              



Advertisement

 

                                        17

      அவன் சென்ற சில நிமிடங்களுக்குப் பின்னும் நிலா அவன் தள்ளிவிட்ட இடத்திலேயே அசைவின்றி அமர்ந்திருந்தாள். அவள் மனம் அவனின் நிலையெண்ணி வருத்தத்திலும், குழப்பத்திலும் திளைத்திருந்தது.

Advertisement

     சிறிது நேரம் யோசித்தவளின், மனதில் ஓர் யோசனை தோன்றியது.

Advertisement

     ‘நாளை முதல் வேலையாக இதனைச் செயல் படுத்த வேண்டும்’ என்று முடிவெடுத்தவள், அவன் வருகைக்காகக் காத்திருக்கத் துவங்கினாள்.

     ஒரு மணி நேரத்திற்குப் பின் வீடு திரும்பிய ரஞ்சன், அவள் இன்னும் உறங்காமல் அமர்ந்திருப்பதைக் கண்டு,

     “ஏய் என்ன? என்னை கண்காணிச்சு வீட்ல போட்டுக் கொடுக்கலாம்னு பார்க்கறியா?!” என்றான் மிரட்டலாக.

Advertisement

     “இ இல்ல….!” என்று அவள் தடுமாற,

     “வீட்ல யார்கிட்டயாவது இந்த விஷயத்தைப் பத்தி வாயைத் திறந்தியோ நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்!” என்று அவன் ஒற்றை விரல் நீட்டி மிரட்ட,

     “சொ சொல்ல மாட்டேன்..!” என்று தலையசைத்தாள்.

     அதன் பின் ரஞ்சன், தான் கடைக்குச் சென்று வாங்கி வந்திருந்த மாத்திரைகளிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டு உறங்க, பாவையின் உறக்கம் பறிபோனது.

     அங்கு யாஷினி எப்போதும் போல் அவள் உறங்கச் செல்லும் முன் நிருவின் கைப்பேசிக்கு அழைப்பு விடுக்க, அவனும் எப்போதும் போல் அவள் அழைப்புக்கு செவி கொடுக்காமல் அவளைத் தவிக்க விட்டுக் கொண்டிருந்தான்.     

     அவனின் நிராகரிப்பு அவளுக்கு புதிதில்லைதான் என்றாலும், அன்று ஏனோ அவளுக்கு வருத்தம் அதிகரித்தது. ஏனெனில் அந்த நாளில் தான் அவளின் தாயை அவள் இழந்திருந்தாள். ஏற்கனவே மனம் தாயன்பில்லாத தவிப்பில் வாடியிருக்க, அவனின் நிராகரிப்பும் சேர்ந்து, அவள் கண்களில் நீர்த் துளிர்க்கச் செய்தது. வெகு நேரம் அவன் நினைவில் எண்ணங்களைச் சூழல விட்டவள், தூக்கத்தைப் பறிகொடுத்தாள்.

    இரு ஆண்மகன்களும், ஒவ்வொரு காரணங்களுக்காக தங்கள் உயிரின் பாதிகளைத் தவிக்கவிட்டுக் கொண்டிருக்க, காதலைச் சுமக்கும் இரு பெண்மான்களின் இதயங்கள், ஏக்கத்திலும், வாட்டத்திலும் தவித்துக் கொண்டிருந்தன.

     இது புரியாத பகலவன், பூமியின் ஒரு பாதிக்கு ஒளிகொடுக்க ஆயத்தமானான்.

     ஆனால் பெண்ணிலவுகளின் வாழ்விற்கு ஒளிகொடுக்க வேண்டிய பகலவன்கள் மனம்கசிந்து ஒளிகொடுப்பார்களா?!

     மறுநாள் காலை யாஷினி பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு, நிருவின் கார் வரும் பாதையில் சென்று காத்திருந்தாள்.

     அவன் கார் எதிரே வருவதைப் பார்த்ததும், தன் காரைக் கிளப்பிக் கொண்டு அவன் எதிரே சென்று வழிமறித்து நிறுத்தினாள்.

     அவளைப் பார்த்ததும், நிருவின் மனதுள் படபடப்புக் கூடியது.

     ‘இவ என்ன சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேங்கறாளே..?!’ என்று நினைத்தபடி காரை விட்டுக் கீழிறங்கினான்.

     அதற்குள் பின்னே வந்த வண்டிகள் ஹாரன் சத்தத்தை கிளப்ப, அவள் கார் அருகே சென்று, கார்க் கண்ணாடியைத் தட்டினான்.

    கார்க் கண்ணாடியை இறக்கியவள், அவன் கண்களை நேருக்கு நேர்  பார்க்க, அப்பார்வையின் தாக்கம் தாளாமல் தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டான் நிரு.

      மறுபடியும் ஹாரன் சத்தம் அதிகரிக்க, “ப்ளீஸ் வண்டியை கொஞ்சம் ஓரமா நிறுத்தறியா?!” என்றான்.

     “நான் உங்ககிட்ட பேசணும்!” என்றாள்.

     “சரி பேசலாம்…! இப்ப வண்டியை எடு!” என்று அவன் சொல்ல,

     “இல்ல இப்பவே பேசியாகணும்!” என்றாள் அழுத்தமாக.

     “சரி…. முதல்ல வண்டியை ஓரமா எடு! எல்லோரும் நம்மையே பார்க்கறாங்க, யாரவது இறங்கி வந்து திட்டுறதுக்குள்ள வண்டியை எடு!’ என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

     “நீங்க…!?” என்று அவள் கேள்வியோடு நோக்க,

     “நானும் வண்டியை ஓரமா நிறுத்தறேன், அப்புறம் பேசுவோம்!” என்றான்.

     அதன் பின் இருவரும் வண்டியை ஓரமாக நிறுத்த, மற்றவர்கள் தங்கள் வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றனர்.

     “ஹலோ… நீங்க ரெண்டு பெரும் லவ் பண்ண வேற இடமே கிடைக்கலையா?! நடு ரோட்ல நின்னு பேசி மத்தவங்க நேரத்தை வேஸ்ட் பண்றீங்க?!” என்று ஓர் இளைஞன் கேட்டுவிட்டுச் செல்ல,

     “பாருங்க அவங்க கூட நாம லவ்வர்ஸ்னு சொல்றாங்க! நீங்கதான்…!?” என்று அவள் கூலாகக் கை கட்டிக் கொண்டு சிரிக்க,

     “உனக்கு கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் கிடையாதா?! இத்தனை பேர் வந்து போற ரோட்ல வண்டியை நிறுத்திகிட்டு வேடிக்கை காட்டுற?!” என்றான் எரிச்சலுடன்.

     “நான் என்ன செய்யிறது? நீங்க போன் பண்ணா எடுக்க மாட்டேங்கறீங்க… மெசேஜ் பண்ணாலும் ரிப்ளை பண்ண மாட்டேங்கறீங்க…! இங்க விட்டா உங்களை ஈவினிங் காபி ஷாப்லதான் பார்க்கணும்! அங்கேயும் நான் பேச பேச நீங்க எழுந்து போயிடறீங்க! அதான் இப்படிப் பண்ணேன்” என்றாள் விளக்கம் போல். 

     “சரி என்ன விஷயம் சொல்லு!” என்றான்.

     “என் மனசு புரிஞ்சும் புரியாத மாதிரி ஏன் நிரு நடிக்கிறீங்க?!” என்றாள் அவன் முகம் நோக்கி.

     அவன் அமைதியாக இருக்க,

     “எனக்குத் தெரியும் நிரு… உங்க மனசில நான் இருக்கேன்னு! நீங்க என்னை ஏத்துக்க தயங்கிற காரணமும் எனக்குத் தெரியும்! எல்லா விதத்துலையும் உங்களோட தடைகளை தகர்த்தெறிஞ்ச நீங்க, ஏன் நம்ம விஷயத்துல மட்டும் உங்களுக்கு நீங்களே அணை போட்டுக்கறீங்க?!” என்றாள்.

     “புரியுது இல்ல… எனக்கு நானே அணை போட்டுக்கறேன்னு புரியுது இல்ல… அப்புறமும் ஏன்டி என்னை இப்படித் தொல்லைப் பண்ற…!? போயிடு…. எனக்கு யாரும் வேணாம்! என் வாழ்க்கையை கடைசி வரைக்கும் நான் தனியாவே வாழ்ந்துட்டு போறேன்! என்னை விட்டு போயிடு… மறுபடியும் மறுபடியும் என் கண் முன்னாடி வந்து நின்னு என்னை சாகடிக்காதடி…!” என்றான் தன் வேதனையை மறைத்துக் கொண்டு.

     “ம்! சரி…!” என்று அவள் புன்னைகையுடன் தலையசைக்க,

     “நான் சீரியஸா சொல்றேன்…. இனி எப்பவும் என்னை சந்திக்க முயற்சி பண்ணாத…!” என்றான்.

     “ஓ!? அப்போ… நீங்க என்னை நிஜமாவே லவ் பண்ணல, அப்படித்தானே?!” என்றாள்.

     அவன் அவளை முறைக்க, “ம் சொல்லுங்க…!?” என்றாள்.

     “ஆமாம் லவ் பண்ணல?!” என்றான் தீர்மானமாக.

     “அப்போ எந்த உரிமையில என்ன டி போட்டுக் கூப்பிடறீங்க?!” என்றாள் கேள்வியாக.

      “அ அது….!” என்று அவன் திணற,

      ‘ம்ம்! இது போதும்…!’ என்று மனதுள் மகிழ்ந்தவள்,

     “நோ ப்ராப் பாப்பா…. நீங்க என்னை எப்படி வேணாலும் கூப்பிடலாம்… உங்களுக்கு எல்லா ரைட்சும் இருக்கு! பைபை…!” என்று கையசைத்து விடை பெற்றாள்.

     ‘சே…!’ என்று தன்னையே நொந்து கொண்டு காரில் ஏறியவன் மனதில், அன்று யாஷினியின் தந்தை அவனைச் சந்தித்து பேசிய வார்த்தைகளும், அவன் அவருக்கு கொடுத்த வாக்குறுதியும்  நிழலாடியது.

     சில நாட்களுக்கு முன் ப்ரொபசர் தாமோதரன், யாஷினியின் தந்தை அவனுடன் பேச வேண்டும் என்று விரும்புவதாகக் கூறி, அவனை அவர் வீட்டிற்கு வர முடியுமா என்று கேட்டிருந்தார். 

     அவன் அவர் கேட்டுக் கொண்டதால் அன்று மாலை அவர் வீட்டிற்குச் சென்றான்.    

     தாமோதரன், இருவரையும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப் படுத்தி வைக்க, இருவரும் மரியாதை நிமித்தம் வணக்கம் தெரிவித்தனர்.

     சில நிமிடங்கள் அங்கே மௌனத்தில் கழிய, அம்மௌனத்தை கலைக்கும் வேலையை பஞ்சாட்சரமே எடுத்துக் கொண்டார்.

     “மிஸ்டர். நிரஞ்சன்…. தாமோதரன் உங்களை பத்தி என்கிட்டே சொல்லியிருக்கான். அது மட்டுமில்லாம என் பொண்ணு உங்க மேல வைச்சிருக்க பிரியத்தைப் பார்க்கும் போது நீங்க எவ்ளோ நல்ல குணமுடையவர்னு எனக்குத் தெரியுது இருந்தாலும்….!” என அவர் தயக்கத்துடன் நிறுத்த,

     “இருந்தாலும் என்னங்க சார்… சொல்ல வந்ததை தயங்காம சொல்லுங்க…!” என்றான் நிரஞ்சன்.

     “என் பொண்ணு உங்க விஷயத்துல ரொம்ப பிடிவாதமா இருக்கா… ஆனா எனக்கும் என் குடும்பத்துல இருக்க யாருக்கும் இந்த விஷயத்துல கொஞ்சம் கூட உடன் பாடில்லை… நான் மட்டும் இல்லை, எந்த தகப்பனும் தன் பொண்ணுக்கு எந்த குறையும் இல்லாத ஒரு நல்ல துணையா பார்த்துதான் கல்யாணம் செய்து வைக்கணும்னு விரும்புவாங்க! நான் உங்களை காயப் படுத்தனும்னு இப்படிச் சொல்லலை…! எங்க மனநிலையையும் கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க!” என்றார் தயக்கத்தோடு.

     “ம்! இதுல காயப்படுறதுக்கு என்னங்க சார் இருக்கு?! நீங்க உண்மையைத்தான சொல்றீங்க…! நீங்க உங்க பொண்ணுக்கு நல்ல பையனா பார்த்துக் கல்யாணம் முடிங்க! நான் உங்க ஆசைக்கு எப்பவும் தடையா இருக்க மாட்டேன்! இதுவரைக்கும் நான் உங்க பொண்ணோட காதலை ஏத்துக்கலை! இனியும் ஏத்துக்க மாட்டேன்…!” என்றான் தன்னுள் துளிர்விட்ட காதலை தன்னுள்ளத்திலேயே புதைத்து. 

     “ரொம்ப நன்றி நிரஞ்சன்!” என்று பஞ்சாட்சரம் கைகூப்பி நன்றி தெரிவிக்க, நிரஞ்சனும் கைகூப்பி விடை பெற்றான்.

     வாசல் வரை அவனை வழியனுப்ப வந்த தாமோதரன், “என்னை மன்னிச்சிடு நிரஞ்சன்… அவன் என்னோட உயிர் நண்பன். அவனுக்காக நான் உன்னை இங்க வரச் சொல்ல வேண்டியதாப் போயிடுச்சு!” என்றார்.

     “பரவாயில்லைங்க சார்…. யாஷினி என்கிட்டே தன் காதலைச் சொல்லும்போதே இந்தப் பிரச்சனைகள் எல்லாம் வரும்னு எனக்குத் தெரியும். அதான் என் மனசில எந்த விதமான ஆசைகளுக்கும் நான் இடம் கொடுக்கறதில்லை!” என்றான் விரக்தியுடன்.

     அவன் பதில் அவர் மனதை வருத்த அவரால் எதுவும் பேச முடியாமல் போனது.

     “நான் கிளம்பறேன் சார்..!” என்று அவன் விடை பெற,

     “ம்!” என்று தலையசைத்து விடை கொடுத்தவர்,

     ‘என்னை மன்னிச்சிடு நிரு….!’ என்றார் மானசீகமாக.

     நினைவுகளின் ஊடே கவனத்தை செலுத்தியபடியே, நிரு தரமணியை நெருங்கியிருந்தான்.

      அங்கு நிலா தன் மனதில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள, தன் உடன் பணிபுரியும் ஆசிரியையும், தோழியுமான மோனிகாவின் தந்தையின் மருத்துவமனையில் மோனிகாவுடன் காத்திருந்தாள்.

     அவர் அறையிலிருந்த பேஷண்ட் வெளியே வந்ததும், இருவரும் உள்ளே சென்றனர்.

     “அட மோனி… நீ என்னம்மா இங்க? அதிசயமா இருக்கு!” என்று அவள் தந்தை, டாக்டர். சண்முகம் வினவ,

     “டாட்…. இவ என் பிரெண்ட் நிலா… இவளுக்கு ஏதோ ஒரு மாத்திரையைப் பத்தின விவரம் தெரியணுமாம் உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்க முடியுமான்னு கேட்டா அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றாள் மோனிகா.

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!