“நான் போயிட்டு வந்துடறேன் நிலா… நீ பேசிகிட்டு இரு” என்று சொல்லி நகர்ந்தாள்.
“இப்ப சொல்லும்மா யார் இந்த மாத்திரையை எடுத்துக்கறது?! எவ்வளவு நாளா எடுத்துக்கறாங்க?! அவங்களோட நடவடிக்கையில என்னென்ன மாற்றங்கள் தெரியுது?!” என்றார் பொறுமையாக.
“அ அங்கிள்…?!” என்று அவள் திகைக்க,
“டாக்டர்கிட்டயும், வக்கீல்கிட்டயும் உண்மையை சொன்னதான் அவங்களால சரியான தீர்வைச் சொல்ல முடியும் ம்மா… பயப்படாம சொல்லு… எங்க பேஷண்ட்ஸோட பெர்சனல் டிடைல்சை நாங்க யார்கிட்டயும் பகிர்ந்துக்க மாட்டோம்!” என்று தைரியம் கொடுத்தார்.
அவள் அனைத்தையும் சொல்லி முடிக்க, அதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டவர், சில நிமிட இடைவேளைக்குப் பின் பேசத் துவங்கினார்.
“நிலா…. நீங்க படிச்சவங்ககிறதுனால உங்களுக்கு ஏற்கனவே இந்த விஷயம் தெரியும்…! எந்த ஒரு விஷயத்தையும் நாம தொடர்ந்து பழக்கப் படுத்திக்கும் போது அதுக்கு நாம அடிமையாகிடுவோம்னு…! அது உணவுப் பழக்கம் முதற்கொண்டு எல்லா விஷயத்துக்கும் பொருந்தும்! ஆனா இந்த மாத்திரைகள் விஷயம் கொஞ்சம் எக்ஸ்ட்ரீம் லேவலுக்குப் போகும்! கிட்டத்தட்ட ட்ரக் அடிக்ட் மாதிரி…!” என்று அவர் நிறுத்த, அவள் மனதைப் பெரும் கவலை சூழ்ந்தது.
“இயற்கைக்குப் புறம்பா நாம எடுத்துக்கிற எல்லா விஷயமுமே நம்ம உடலுக்கு பாதிப்பு விளைவிக்கும்தான். சில தவிர்க்க முடியாத நோய்களுக்கான, அத்தியாவசியமான மாத்திரைகளைத் தவிர எந்த மாத்திரைகளையும் தொடர் பழக்கமா எடுத்துக்கிறது ரொம்பவே தவறு. அதிலும் இந்த தூக்க மாத்திரைகள், அலர்ஜி மாத்திரைகள், தலைவலி, கைகால் வலி மாத்திரைகள், ஐ மீன் பெயின் கில்லர்ஸ்… இதெல்லாமே நிறைய பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியது!
இப்பல்லாம் வேலைக்குப் போற நிறைய பெண்கள், ஆண்கள் எல்லோரும், ஸ்ட்ரெஸ், ஸ்ட்ரெஸ்னு சொல்லிக்கிட்டு, அடிக்கடி இந்த தலைவலி மாத்திரையை எடுத்துக்கிறது ஒரு வழக்கமாகிடுச்சு! அதிலும் ப்ரிஸ்க்ரிப்ஷன் கூட இல்லாம… அப்புறம் தலைவலியோடு சேர்த்து பல பிரச்சனைகள் உருவான பிறகு எங்களைத் தேடி ஓடி வர வேண்டியது!” என்று அவர் சலிப்போடு சொன்னாலும், அவர் குரலில் வேதனையும் நிறைந்திருந்தது.
“அப்போ இதனால அவருக்கு எதுவும் பாதிப்பு இருக்குமா?!” என்றாள் நிலா கலக்கத்தோடு.
“இருக்காதுன்னு சொல்ல மாட்டேன், பட் அதிகமா இருக்காது… ஆனா இதுக்குப் பிறகும் அவர் இந்த பழக்கத்தைத் தொடரக் கூடாது! அதுக்கு முதல்ல நீங்க அவரை இங்க கூட்டிட்டு வாங்க, எக்ஸாமின் பண்ணிட்டு, அவருக்கு கவுன்சிலிங் கொடுப்போம்” என்றார் டாக்டர். சண்முகம்.
“ம் சரிங்க அங்கிள்…!” என்று அவள் தலையசைக்கவும், மோனிகா அவரின் அறைக் கதவைத் தட்டிவிட்டு, தன் அண்ணன் இளமாறனுடன் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
“அண்ணா திஸ் இஸ் நிலா… மை பிரெண்ட்…!”
“நிலா… இவர் என்னோட அண்ணா… இளமாறன், சைக்கியாட்ரிஸ்ட்” என்று அறிமுகப் படுத்தினாள்.
“ஹாய் நிலா….!” என்று இளா கைகொடுக்க,
“ஹாய்..” என்றாள் நிலாவும் சிநேகிதமாக.
சில நிமிடப் பேச்சு வார்த்தைக்குப் பின், “நான் நாளைக்கு அவரைக் கூட்டிட்டு வரேன் அங்கிள்” என்று சொல்லி நிலா விடைபெற,
“ம் சரிம்மா…!” என்றார்.
அன்று இரவு வீட்டிற்கு வந்த நிலா…. நாளை அவனை எப்படி ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துப் போவது என்ற எண்ணத்திலேயே சுழன்று கொண்டிருக்க, நிரு அவள் அருகே வந்தமர்ந்து,
“எந்த கோட்டையைப் பிடிக்க மகாராணி இப்படி யோசனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க?!” என்றான்.
“ம்! உன் அண்ணனோட மனக் கோட்டையைப் பிடிக்கத்தான்! (glockapps.com) ” என்று நிலா சொல்ல,
“என்னாச்சு நிலா… அவன் ஏதாவது பிரச்சனை பண்றானா?!” என்றான் நிரு கவலையுடன்.
‘இவன்கிட்ட சொன்னா ரொம்ப வருத்தப் படுவானே?!’ என்று அவள் நினைக்க,
“என்ன நிலா…?! சொல்லு நான் அவனை கேட்கறேன்” என்றான் நிரு.
“என்ன நினைச்சிகிட்டு இருக்கீங்க நீங்க எல்லாரும்?! எப்பப் பார்த்தாலும் என் புருஷன் ஏதாவது பிரச்சனை பண்ணாறா? பிரச்சனை பண்ணாறான்னு கேட்கறீங்க? அன்னிக்கு பாட்டி! இன்னிக்கு நீ.! ம்ம்!” என்று அவள் முறைக்க,
“அய்யய்யோ!! புருஷனைச் சொன்னதும் பொண்டாட்டிக்கு என்னமா கோவம் வருது?!” என்று சிரித்தவன்,
“ரொம்ப சந்தோஷமா இருக்கு நிலா… நீ அவன் மேல இவ்ளோ அன்பு வைச்சிருக்கறதைப் பார்க்கும் போது! தாத்தா உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைக்கணும்னு சொல்லும்போது ரொம்பவே கவலைப் பட்டேன்! ஆனா இப்போ.. ரொம்ப சந்தோஷமா இருக்கு!” என்றான் நிறைவுடன்.
“ம்ம்!” என்று வேதனையை தனக்குள் மறைத்துச் சிரித்தவள், “சரி நிரு… எனக்குத் தூக்கம் வர மாதிரி இருக்கு நான் போய் படுக்கறேன்! குட் நைட்…!” என்று சொல்லி எழுந்தாள்.
“ம் பை… குட் நைட்..!” என்று அவனும் விடைகொடுத்தான்.
தங்கள் அறைக்குச் சென்றவள், நாளை ரஞ்சனை எப்படி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என்று யோசித்தபடியே உறக்கத்தைத் தழுவினாள்.
மறுநாள் காலை அவன் கடைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் சமயம், அவன் முன் சென்று நின்றாள்.
என்னவென்பது போல் அவன் பார்க்க, “எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை…!” என்றாள் தயங்கியபடி.
“அதுக்கு?!” என்று அவன் முறைக்க,
“என் கூட ஹாஸ்பிட்டல் வரமுடியுமா?! ப்ளீஸ்…!” என்றாள் கெஞ்சலாக.
“பார்க்க நல்லாதானே இருக்க? அப்படியென்ன உடம்புக்கு!?” என்று அவன் கேட்க,
‘எருமை எருமை ஹாஸ்பிட்டலுக்கு வான்னா வர வேண்டியதுதானே…! இதை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போக என்னவெல்லாம் பொய் சொல்ல வேண்டியிருக்கு!’ என்று மனதுள் அவனை வைதவள்,
“அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாது… நீ இப்ப கூட்டிட்டுப் போறியா இல்லையா?!” என்று கெஞ்சலில் இருந்து மிரட்டலுக்குத் தாவ,
“ஏய் இந்த மிரட்டலேல்லாம் என்கிட்டே வைச்சிக்காத…!” என்று அவனும் எகிறத் துவங்கினான்.
“சரி நீ போ… நான் பாட்டிக் கூட போயிக்கிறேன்..!” என்றாள் அசட்டையாக.
“எல்லாம் என் தலையெழுத்து..! தாத்தா, பாட்டி பேரை சொல்லியே என்னை கொல்றா…!” என்று வாய்விட்டுப் புலம்பியவன்,
“வந்துத் தொலை…!” என்றான் வேண்டா வெறுப்பாக.
“அப்படி ஒண்ணும் சலிச்சிகிட்டு எல்லாம் என்னை கூட்டிட்டுப் போக வேண்டியதில்லை…!” என்றாள் அவளும் வீம்புடன்.
“ஈஈ… வாம்மா… போலாம்..!” என்று அவன் சிரித்தபடி அழைக்க,
‘அழகன்டா நீ…!’ என்று மனதுள் கணவனை ரசித்தாலும்,
“இதுக்கு அதுவே மேல்!” என்று அவளும் முகத்தைக் கடுகடுவென வைத்தபடி கிளம்பினாள்.
இருவரும் மருத்துவமனையை அடைந்தபின் அவள், அவனையும் உள்ளே வருமாறு அழைக்க,
‘இம்சை இம்சை…’ என்று சலிப்போடு அவள் உடன் நடந்தான்.