Skip to content
Post Views: 3,615
19
மூடு பனி போன்ற நாட்கள் விலகி, வசந்த காலத்தின் வண்ணம் நிறைந்த நாட்கள் நிலா, ரஞ்சனின் வாழ்வில் தலை காட்டத் துவங்கியிருந்தன.
அன்று காமட்சி பாட்டியின் பிறந்த நாள். ரஞ்சனும், நிலாவும், காமாட்சி, இராமநாதன் தம்பதியர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று, அவர்களுக்கு தங்கள் பரிசை வழங்கினர்.
“என்னப்பா…. இதெல்லாம்?! அவளுக்கு தானே பிறந்த நாள்?! எனக்கு எதுக்குப்பா பரிசு..?!” என்று இராமநாதன் கேட்க,
Advertisement
“நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு வேற வேற இல்லை தாத்தா…!” என்றாள் நிலா ஆத்மார்த்தமாக.
பரிசுப் பெட்டியைப் பிரித்த காமாட்சி பாட்டி, அதிலிருந்த புடவையின் அழகைக் கண்டு வியந்து போய் நின்றார்.
உடல் முழுக்க லைட் ஆனியன் பிங்க் வண்ணத்தில், ஆங்காங்கே தங்க நிற அரச இலைகள் அமைந்திருக்க, பார்டரில், அழகிய அடர் பிங்க் வண்ணத்தில், பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெற்றிருந்த ரம்மியமான காட்சிகள் தங்க ஜரிகைகளில் வடிவமைக்கப் பட்டிருந்தன.
Advertisement
“அடடா… என்ன அற்புதமான படைப்பு?!” என்றார் இராமநாதன்.
Advertisement
அவர்கள் வியப்பதைக் கண்டு ராதாவும், புடவையை ஆவலாகப் பார்க்க, அதன் அழகு அவரையும் ஈர்த்தது.
“நம்ம கடையில இந்த மாதிரி டிசைனே இல்லையே! எங்க வாங்கின ரஞ்சு..?! என்றார் கிருஷ்ணன்.
“கடையில வாங்கலைங்க அங்கிள்… உங்க பையனே டிசைன் செய்து, பட்டுத்தறி நெசவாளர் கிட்ட கொடுத்து நெய்தது!” என்றாள் நிலா பெருமையுடன்.
Advertisement
“என்ன நம்ம ரஞ்சுவா?!” என்று அனைவருமே ஒரே நேரத்தில் ஆச்சர்யத்துடன் கேட்டு அவன் முகம் பார்க்க,
அவன் மென் சிரிப்புடன் “ஆம்!” என்று மெல்ல தலையசைத்தான்.
தன் கணவனுடன் பிறந்த வீடு வந்திருந்த நிவி, “நோ நாட் அட் ஆல்! ரஞ்சு அண்ணாவாவது இந்த அளவுக்கு பொறுமையா யோசிச்சு இவ்ளோ அழகா டிசைன் பண்றதாவது?! சான்சே இல்லை!” என்று நம்பிக்கையின்றி சொல்ல,
“ஏய்! என்னடி நினைச்சிக்கிட்டு இருக்க என் புருஷனைப் பத்தி?! அவர் நினைச்சா தன்னோட சொந்த கற்பனையில இதைவிட அழகழகான டிசைனை கூட உருவாக்க முடியும்! பாவம் மனுஷன் ராத்திரி பகலா எவ்ளோ கஷ்டப் பட்டார் தெரியுமா இந்த டிசைனை உருவாக்க?!” என்ற சற்றே கோபத்துடன் கேட்ட நிலாவை, ரஞ்சன் ஆச்சர்யத்துடன் பார்த்தான்.
“ஏய் சும்மா விளையாட்டுக்கு தான சொன்னேன்! அதுக்குள்ள ஏன்டி இப்படி துள்ற…?! வர வர உன் புருஷன் குணம் உனக்கு வந்துடுச்சி… உன் குணம் அண்ணாவுக்கு வந்திடுச்சி…!” என்றாள் நிவி செல்லமாக முறைத்து.
அவள் சொன்னதைக் கேட்டு நிலா முறைக்க, அவர்களைச் சமதானப்படுத்தும் வகையில்,
“சரி சரி சந்தோஷமான நேரத்துல உங்க சண்டையை ஆரம்பிச்சுடாதீங்க! இன்னிக்கு எல்லோரும் சேர்ந்து வெளில போறோம்!” என்றான் நிரஞ்சன்.
“அப்போ கடைக்கு யார் போறது?!” என்று ரஞ்சன் கேட்க,
“ஆனாலும் அண்ணா… நீ கல்யாணத்துக்கு அப்புறம் இப்படிப் பொறுப்பு பொன்னம்பலமா மாறிட்டியே?! எல்லாம் நம்ம நிலா ட்ரையினிங் போல?!” என்று நிவி மறுபடியும் வம்பிழுக்க, இம்முறை அவள் காதைப் பிடித்து திருகியது அவள் அண்ணன் ரஞ்சனே!
“ஆனாலும் உனக்கும் கல்யாணத்துக்கு பிறகு வாய் ரொம்ப அதிகமாயிடுச்சு!” என்றான் செல்லமாக.
“டேய் குட்டி…. உன் மாமா அம்மாவை அடிக்கிறார்டா…! என்னன்னு கேளு!” என்றாள் தன் வயிற்றில் வளர்ந்து வரும் ஐந்து மாத பிள்ளையிடம்.
சிறியவர்களின் குறும்பைக் கண்டு பெரியவர்களின் மனம் பூரிப்பில் மூழ்கியது.
“ரஞ்சு இந்தப் புடவையை நாம நம்ம கடையில் புது டிசைனா இன்ட்ரோடியூஸ் பண்ணுவோம்!” என்று இராமநாதன் சொல்ல,
“நிலாவும் அதேதான் தாத்தா சொன்னாள்!” என்றான் ரஞ்சன்.
“ஓ!” என்றவர், ரொம்ப வருஷமா இந்த வேலையில இருக்கிறவங்க கூட இவ்ளோ நுணுக்கமா இந்த வேலையைச் செய்து முடிக்கிறது கஷ்டம் ப்பா…. ஆச்சர்யமாயிருக்கு! ரொம்ப அற்புதமா வடிவமைச்சிருக்க…!” என்று மனதாரப் பாராட்டினார்.
“இந்தப் பாராட்டு நிச்சயமா என்னைவிட நிலாவுக்கு தான் உரியதா இருக்கும் தாத்தா…! ஏன்னா அவதான் இதுக்கு முழு காரணம்!” என்று ரஞ்சன் சொல்ல,
“இல்லீங்க தாத்தா… முயற்சி பண்ண சொன்னது மட்டும் தான் நான். மத்தபடி உழைப்பெல்லாம் அவருடையதுதான்.!” என்றாள் நிலா.
இதைக் கேட்டிருந்த நிருவின் மனதில் ஏகப்பட்ட சந்தோஷம். தன் அண்ணனும், தன் தோழியும் இவ்வளவு மன ஒற்றுமையுடன் இருப்பதை நினைத்து பெருமிதம் அடைந்தான்.
காமாட்சி பாட்டி, இராமநாதன் தாத்தாவுக்கும் கூட ரஞ்சன், நிலாவின் வாழ்வைப் பற்றி இருந்த மனக்கவலைகள் பறந்து போயின என்றே சொல்லலாம்.
நாட்கள் அழகான விடியலை கொடுத்து கொண்டிருக்க, நிலாவின் அன்பும், அக்கறையும் சிறிது சிறிதாக ரஞ்சனை அவள் பால் ஈர்க்கத் துவங்கியது.
அன்று நிலா, நேரு விளையாட்டு அரங்கத்தில் தங்கள் பள்ளி நடத்திய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்த பின், வீடு திரும்புவதற்காக, அருகே இருந்த பேருந்து நிலையத்தில் காத்திருந்தாள்.
அவள் வந்து நின்ற சில நிமிடங்களிலேயே லேசாக இருட்டிக் கொண்டிருந்த வானம் முற்றிலும் கருமேகங்கள் சூழ்ந்து, மின்னல், இடியுடன் மழையைப் பொழிய ஆரம்பித்தது.
முதலில் மழைச் சாரல் பட்ட போது, அவள் உடல் சிலிர்த்தாலும், சற்று நேரத்தில் மழையின் தீண்டல், அவள் மனதிற்கும் உடலிற்கும் இதமாய் இருந்தது. கண்மூடி மழையை ரசித்தவளின் கண்களில், அவள் உள்ளத்தில் புதைந்திருக்கும் கள்வனின் முகம் தென்பட, பட்டென்று கண்களைத் திறந்தாள்.
கண்களைத் திறந்தால், அவள் முன்னே தெறித்து விழும் மழைத்துளிகளும் அவன் முகம்!
“என்ன நிலா… இது சின்னக் குழந்தை மாதிரி மழையில நனைஞ்சுகிட்டு?! ஜலதோஷம் பிடிக்கப் போகுது! வா முதல்ல வந்து வண்டியில ஏறு!” என்று அவள் மனதிற்கு இனியவன் மிரட்டுவது போல் குரல் கேட்க, திடுக்கிட்டு திரும்பியவள், அங்கு யாரும் இல்லாததைக் கண்டு,
‘சே வெறும் கற்பனை!’ என்று சிவந்த புன்னகையுடன் தலையில் அடித்துக் கொண்டாள்.
‘வர வர உன் மனசு ரொம்ப கற்பனையில மிதக்க ஆரம்பிச்சுடுச்சு நிலா… உஷாரா இரு…!’ என்று அவள் மூளை எச்சரிக்க,
‘ஏய் உனக்கு வேற வேலையே இல்லையா?! நல்லயிருக்கிறவங்களை குழப்பி விடுறதே உனக்கு பிழைப்பா போச்சு! அவ புருஷனை அவ நினைக்கறா…?! உனக்கென்ன?!’ என்று மனம் மல்லுக்கு நின்றது.
‘எப்படியோ போ! உன்னாலதான் பலர் வாழ்க்கையில இந்த காதல், அன்பு, பாசம்னு எல்லாம் பித்து பிடிச்சு திரியறாங்க…! உன்னாலதான், இந்த அளவுக்கு அதிகமான எமோஷனல் பீலிங்க்ஸ்ல சிக்கி பலர் சின்ன பின்னமாகிடுறாங்க!’ என்று அறிவின் நாயகன் ஒதுங்கிவிட,
மனமெனும் மாயவன், காட்டாற்று வெள்ளமாய்க் அவள் காதலை கரைபுரளச் செய்து, கடலுக்குள் தள்ளி மூழ்கடித்தது.
அவள் அவன் மணாளனின் நினைவில் மூழ்கித் திளைந்திருந்த நேரம், அவள் எண்ணத்தின் நாயகன் அவளின் கைப்பேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.
கைப்பேசியின் அழைப்பொலி கேட்டு நினைவு கலைந்தவள், அதை ஆன் செய்து, “ஹலோ யாரு?!” என்றாள் தனது இனிய குரலால்.
“நான் ரஞ்சு பேசறேன்…!” என்று அவன் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள, அவள் ஆச்சர்யத்துடன்,
“உ உனக்கு எப்படி என் நம்பர் தெரியும்?! என்றாள்.
“அது… அன்னிக்கு உன் மொபைல இருந்து எனக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்து சேவ் பண்ணிக்கிட்டேன்! ஏதாவது அவசரம்னா கூப்பிடலாம்னு..!” என்று அவன் சொல்ல,
“ஓ!!” என்று அவள் வியக்க,
“என்ன ஓ?! ஏன் யார் யாருக்கெல்லாமோ உன் நம்பர் கொடுக்கற, எனக்குத் தெரியக் கூடாதா?!” என்றான் ஆளுமையாக.
“நான் அப்படிச் சொல்லலையே?!” என்றாள் நிலாவும்.
“சரி அதைவிடு…! நான் வீட்டுக்கு வர்றதுக்குள்ள உன்னால கிளம்பித் தயாரா இருக்க முடியுமா…!? என் பிரெண்ட் ஒருத்தனோட வெட்டிங் ரிசெப்ஷன். நாம ரெண்டு பேரும் போகலாம்னு…!” என்றவன் மனதுள்,
‘நானா கூப்பிடுறேன்னு தெரிஞ்சா, என்ன புதுசா திடீர்னு அக்கறை எல்லாம்னு கேட்பா…?! வேண்டாம்!’ என்ற எண்ணம் தோன்ற,
“எனக்காகன்னு இல்லை…. அவன், உன் மனைவியையும் அழைச்சிக்கிட்டு வரணும்னு கண்டிப்பா சொன்னான் அதான்…!” என்று இழுத்தான்.
‘அப்போ உனக்கு என்னை கூட்டிட்டுப் போகணும் விருப்பம் இல்லை!’ என்று நினைத்தவள், அமைதியாக இருக்க,
“என்ன நிலா…?! எதுவும் பேசமாட்டேங்கற?! என்னோடு வரப் பிடிக்கலையா?!” என்றான்.
‘எருமை எருமை உன் பிரெண்ட்தான வர சொன்னாருன்னு சொல்ற… நீ ஒண்ணும் ஆசையா கூப்பிடலையே?!’ என்று அவள் மனதுள் வைது கொண்டிருக்க,
அவள் போனை அணைத்துவிட்டாளோ என்று எண்ணி, “நிலா… நிலா…!?” என்றான் ரஞ்சன் பதட்டத்துடன்.
“லைன்லதான் இருக்கேன்!” என்றவள்,
“நான் நேரு விளையாட்டு அரங்கம் பக்கத்துல இருக்க பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்!” என்றாள்.
“ஏன்?! நீ எதுக்கு அங்க போன?!” என்று அவன் கேட்க, அவள் விவரம் கூறினாள்.
“ஓ! சரி நீ அங்கயே வெயிட் பண்ணு. நான் வந்து உன்னை பிக் அப் பண்ணிகறேன்!” என்று சொல்லி போனை அணைத்தவன், அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவள் முன்வந்து நின்றான்.
மழையை ரசித்தபடி சொட்டச் சொட்ட நனைய நின்றிருந்தவளின் அருகே சென்று, “என்ன நிலா இது? சின்னக் குழந்தை மாதிரி மழையில நனைஞ்சுகிட்டு?! ஜலதோஷம் பிடிச்சா என்ன ஆகிறது?!” என்று அவன் கேட்க,
சிறிது நேரத்திற்கு முன் ஏற்பட்ட பிரமை, நிஜமானதால் அவள் லேசாகச் சிரித்தாள்.
“என்ன நீ?! நான் கேட்டதுல சிரிக்கிற மாதிரி எதுவும் இல்லையே?!” என்று புரியாத முகத்துடன் அவள் கைபிடித்து வேகமாய் காரின் அருகே அழைத்துச் சென்றான்.
காரில் ஏறி அமர்ந்தவள் ஓரக்கண்ணில் அவனை ரசித்தபடி வர, அதைக் கவனியாமல் காரைச் செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு, ஏதோ ஓர் உள்ளுணர்வு உந்த சட்டேன்று அவள் புறம் திரும்பினான்.
அவன் திடிரென்று திரும்பவும் அவள் தன் மனதைக்கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டாள்.
“என்னாச்சு…!?” என்றான்.
“ம் ஒண்ணுமில்லை!” என்று சொல்லிவிட்டு அவள் சாலையின் புறம் பார்வையைத் திருப்பிக் கொள்ள, மழையில் நனைந்த அவள் உடல், காரின் ஏ. சி குளிரில் நடுங்குவதைக் கண்டு, ஏ.சியை ஆஃப் செய்தான்.
அவன் செய்கை அவள் மனதிற்கும், உடலிற்கும் இதம் அளிக்க, “தாங்க்ஸ்…!” என்றாள்.
அவன் பதிலேதுமின்றி மௌனத்துடன் காரைச் செலுத்தினான்.
சில நிமிடங்களில் அவர்கள் வீட்டை அடைந்துவிட, “என்ன நிலா இது?! இப்படி நனைஞ்சு இருக்க?! முதல்ல போய் தலையைத் துவட்டு..!” என்றார் ராதா.
“அது வந்துங்க ஆன்ட்டி…” என்று நிலா விவரம் சொல்ல,
“பரவயில்லையே என் பிள்ளை ரொம்ப பொறுப்புள்ள கணவனா நடந்துக்கறானே…!?” என்றார் ராதா.
“அம்மா நாங்க ரெண்டு பேரும் ஒரு வெட்டிங் ரிசப்ஷனுக்கு போறோம்மா… நைட் எங்களுக்கு டின்னர் ரெடி பண்ண வேண்டாம்!” என்று சொல்லிவிட்டு அவன் செல்ல, அவனைப் பின் தொடர்ந்து அவர்கள் அறைக்குச் சென்ற நிலா,
“நான் வரேன்னு சொல்லவே இல்லையே?!” என்றாள்.
“அப்போ என்னோட வர இஷ்டமில்லையா?!” என்றான்.
“நீ ஒண்ணும் என்னை கூப்பிடலையே?! உன் பிரெண்ட் இன்வைட் பண்ணதுனாலதானே என்னை கூப்பிடுற?!” என்றாள் அவன் முகம் பார்த்து.
“அ அது வந்து…” என்று தயங்கியவன்,
“ஆனாலும் எனக்கும் விருப்பம் இல்லாமையா கூப்பிடுறேன்?!” என்றான் பட்டென்று.
“ஓ!?” என்று அவள் சொல்ல,
“எதுக்கெடுத்தாலும் ஓ! ஓ! ன்னு! சும்மா வாயைப் பிளக்காம போய் சீக்கிரமா கிளம்பி வர வழியைப் பாரு…!” என்று சொல்லிவிட்டு, தனது வார்ட்ரோபைத் திறந்தவன், ஏதோ யோசனை வந்தவன் போல் அவள் புறம் திரும்பி,
“உங்கிட்ட காஸ்ட்லி டிரெஸ்சஸ் இருக்கா?!” என்றான்.
“ம்ம்!?” என்று அவள் முறைக்க,
“சரி சரி! ஆன்னா ஊன்னா முறைச்சிடுவியே?! ஏதாவது நல்ல சாரியா எடுத்துக் கட்டிக்கோ!” என்றபடியே, தான் போட வேண்டிய சூட்டை எடுத்து வைத்தான்.
அவன் குளித்து முடித்துத் தயாராவதற்குள், நிலாவும் கிளம்பியிருந்தாள்.
அவள் இளம் ஆரஞ்சு வண்ண டிசைனர் சாரியில், அதிக ஒப்பனை ஏதுமின்றி வெகு சீக்கிரம் தயாராகி அமர்ந்திருப்பதைக் கண்டு,
“ஏய் என்ன?! கிளம்ப சொன்ன இப்படி உட்கார்ந்துகிட்டே இருக்க?!” என்றான்.
“நான் எப்பவோ ரெடி ஆகிட்டேனே!” என்று அவள் சொல்ல,
“வாட் இந்த சாரிலயா வரப் போற?!” என்றான் முகம் சுளித்து.
“என்கிட்டே இருக்கறதுலயே காஸ்ட்லி சாரி இதுதான்!” என்றாள் அழுத்தமாக.
“ஷிட்! நம்ம கல்யாணப் புடவை என்ன ஆச்சு?!” என்றான்.
‘கல்யாணப் புடவைல்லாம் ஞாபகம் இருக்கு! ஆனா பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கறது மட்டும் ஞாபகம் இல்லை!’ என்று அவள் முணுமுணுக்க,
“என்னடி கேட்கறேன்ல பதில் சொல்லாம நீ பாட்டுக்கு ஏதோ மனசுக்குள்ளயே முனகுற…!?” என்றான்.
“அது ரொம்ப வெயிட்டா இருக்கும் அதான்…!” என்று அவள் இழுக்க,
“இப்படி ஒட்டடைக் குச்சி மாதிரி இருந்தா புடவை கூட வெயிட்டாதான் இருக்கும்!” என்று கிண்டலடித்தவன், அவள் துணிகள் இருக்கும் அலமாரியை கண்டபடிக் கலைத்து, ஒரு வழியாக ஓர் அழகிய இளநீல வண்ண டிசைனர் ஸாரியைத் தேர்ந்தெடுத்து அவள் கையில் திணித்தான்.
“சீக்கிரமா இதை மாத்திக்கிட்டு ரெடி ஆகு!” என்று அவன் பாட்டிற்கு சொல்லிவிட்டு தான் கிளம்புவதில் முனைப்பானான்.
பழைய நிலாவாக இருந்தால் அவன் பேச்சு ஒவ்வொன்றிக்கும் எதிர்போட்டி பேசிக் கொண்டு நின்றிருப்பாள். இபொது அவன் முன் நிற்பது காதல் கொண்ட கன்னியாயாயிற்றே?! அவன் கொடுத்த புடவையை ஆசையோடு நெஞ்சில் அணைத்துக் கொண்டாள்.
வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரும் தத்தம் தம்பதியரோடும், குடும்பத்தோடும் கலகலப்பாய்ப் பேசிய வண்ணம் இருக்க, தனியாக அமர்ந்து கொண்டிருந்த நிலா, தன் நண்பர்களுடன் சேர்ந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந்த ரஞ்சனை ஏக்கத்துடன் பார்த்திருந்தாள்.
நண்பர்களுடன் பேசியபடியே எதேச்சையாக அவள் புறம் பார்வையைத் திருப்பிய ரஞ்சன், அவளின் ஏக்கம் நிறைந்த முகத்தை கவனித்துவிட, முதன் முதலாக அறிந்து கொண்டான், அவள் தன் மேல் வைத்திருப்பது அக்கறையும், அன்பும் மட்டுமல்ல, காதலையும் சேர்த்துதான் என்று!
error: Content is protected !!