Skip to content
Post Views: 4,903
21
யாஷினி கோபத்துடன் நகங்களைக் கடித்தபடி அமர்ந்திருப்பதை கண்ட பஞ்சட்சரம் மெல்ல அவள் அருகே சென்று அமர்ந்தார்.
தந்தையின் வருகையை உணர்ந்தபோதும் அவள் நிமிர்ந்து கூட பார்க்காமல், பிடிவாதத்துடன் அமர்ந்திருக்க,
Advertisement
“யாஷினி…” என்றார் தன் மகளின் தலை வருடி.
வெடுக்கென்று திரும்பியவள், “மறுபடியும் உங்க வேலையை ஆரம்பிச்சுட்டீங்க இல்ல…?!” என்றாள் கடும் கோபத்துடன்.
அவர் பதிலேதுமின்றி அமைதி காக்க, கோபத்துடன் அவர் முகம் நோக்கி ஏதோ சொல்ல வந்தவள், அவர் முகத்தில் தெரிந்த வேதனையை உணர்ந்து, சற்றுத் தாழ்ந்து வந்து,
Advertisement
“ப்ளீஸ் ப்பா… தயவு செய்து புரிஞ்சிக்கோங்க… நிருவைத் தவிர வேற யாரையும் என்னால என் வாழ்க்கைத் துணையா ஏத்துக்க முடியாது! அவர்தான், அவர் மட்டும்தான் என் சந்தோஷம்! நீங்க எனக்காக தேடி வைக்கிற மாப்பிள்ளை எனக்கு வசதியான வாழ்க்கையைக் கொடுக்கலாம்! ஆனா நிச்சயமா என் மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுக்க முடியாது…!” என்றவள், கண்களில் நீர் ததும்ப,
Advertisement
“என் நிரு… என் நிரு எனக்கு வேணும் ப்பா… ப்ளீஸ்…! எங்களைப் பிரிச்சிடாதீங்க…!” என்றாள் உடைந்து போய்.
சில நொடிகள் கலங்கிப் போய் நிற்கும் தன் மகளையே பார்த்திருந்தவர்,
“சரி…. ஒரு வேலை நான் உன் விருப்பத்துக்கு சம்மதம் தெரிவிக்கறேன்னே வச்சுக்கோ! ஆனா அந்த நிரஞ்சனே உன்னை ஏத்துக்க மறுக்கறாரே ம்மா…?!” என்று மடக்கினார் பஞ்சாட்சரம்.
Advertisement
‘அதெப்படி இவருக்குத் தெரியும்’ என்று அவள் அவரைக் கேள்வியுடன் பார்க்க,
“உன் அண்ணிதான் சொன்னா…!” என்றவர் மேலும் தொடர்ந்து,
“உனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தரேன்… நீ கடைசியா ஒருமுறை அந்த பையன் கிட்ட போய் பேசிப் பாரு, அப்பாவும் அவன் உன் காதலை ஏத்துக்கலைன்னா நீ என் முடிவுக்கு சம்மதிக்கணும்!” என்றார் நிரஞ்சன் அவளை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்ற நம்பிக்கையில்.
“இல்ல ப்பா… அவர் என்னை ஏத்துகிட்டாலும், இல்லைனாலும், நான் அவரை மட்டுதான் நினைச்சிக்கிட்டு வாழ்வேன்! இதுதான் என் முடிவு..!” என்றாள் உறுதியாக.
“இதென்ன யாஷினி… முட்டாள்தனமான முடிவு…!” என்று சற்றே தன்னிலை மறந்து கோபம் கொள்ளப் பார்த்தவர், உடனே தன் கோபத்தைக் கைவிட்டு,
“இங்க பாரும்மா… இதென்ன வீண் பிடிவாதம்?! ஒண்ணு உன் ஆசையாவது நிறைவேறனும், இல்ல எங்க ஆசையாவது நிறைவேறனும் ரெண்டும் இல்லாம நீ கஷ்டபடுறதைப் பார்த்து நாங்க எல்லோரும் வேதனைப் பட்டுகிட்டே இருக்கணுமாம்மா..?!” என்றார் பொறுமையுடன்.
அவள் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் தலை கவிழ, “எங்க சூழ்நிலையில இருந்தும் கொஞ்சம் யோசிச்சு பாரும்மா..! உனக்கு கொடுக்க வேண்டிய வாய்ப்பையும் நான் கொடுத்திட்டேன். ரெண்டு நாள்ல எனக்கு உன்னோட முடிவை சொல்லும்மா…!” என்றவர் எழுந்து தன் அறைக்குச் சென்றார்.
சில நிமிடங்கள் தலையைப் பிடித்தபடி யோசனையுடன் அமர்ந்திருந்த யாஷினி, தன் கைப்பேசியை எடுத்து நிருவின் எண்ணிற்கு அழைத்தாள்.
ஆனால் எப்போதும் போல் அவள் அழைப்பு எடுக்கப் படாமலேயே துண்டிக்கப் பட்டது. அதனால் மேலும் கோபமுற்றவள், வேகமாக தன் அறையை விட்டு வெளியேறி தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
அவள் சென்ற வேகத்தைப் பார்த்து சந்தோஷ் பதட்டத்துடன், அவளைப் பின் தொடர்ந்து செல்லப் பார்க்க,
“அவ போகட்டும் விடு சந்தோஷ்…! அப்பதான் அவளோட பிரச்சனைக்கு ஒரு முடிவு தெரியும்!” என்றார் பஞ்சாட்சரம்.
வேகமாகக் காரைச் செலுத்திக் கொண்டு போனவள், நேராக சென்று நிரு வீட்டின் முன் காரை நிறுத்தினாள்.
கார்க் கதவைத் திறந்து இறங்கியவள், அதனைப் படிறேன அடித்துச் சாத்திவிட்டு வீட்டினுள் சென்றவள், கோபமும், வேதனையும் போட்டியிட கூடத்தில் நின்று கொண்டு, “நிரு…. நிரு…!” என்று கத்தினாள்.
வீட்டில் நிரு, நிலா, மற்றும் வேலையாட்கள் மட்டுமே இருந்தனர். ராதாவும், காமாட்சி பாட்டியும் அன்று வெள்ளிக் கிழமையாதலால், கோவிலுக்குச் சென்றிருந்தனர். ரஞ்சன், கிருஷ்ணன், இராமநாதன் மூவரும் கடையிலிருந்து வீடு திரும்பவில்லை.
யாஷினியின் குரல் கேட்டு தன் அறையிலிருந்த நிலா, அவளை வரவேற்க ஆசையுடன் எழுந்து வந்தாள்.
ஆனால் அவளைக் கண்டதும், அவள் நிலை புரிந்துவிட, “என்னாச்சு யாஷினி…” என்றாள் பதட்டத்துடன்.
“அவர் என்னதான் நினைச்சிக்கிட்டு இருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டு போகலாம்னு ஒரு முடிவோடு வந்திருக்கேன் நிலா….!” என்றவள் மறுபடியும்,
“நிரு…. இப்ப நீங்க வெளில வரப் போறீங்களா இல்லையா?” என்றாள் ஆவேசமாக.
“ஏய்.. உனக்கு என்னதான் பிரச்சனை?!” என்று வெறுப்புடன் கேட்டபடியே நிரு தன் அறையிலிருந்து வெளிப்பட்டான்.
கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க, “ம்ம்..! என் பிரச்சனையே நீங்கதான்….!” என்று கோபத்துடன் ஆரம்பித்தவள்,
“ஏன் நிரு இப்படி என்னை சித்திரவதைப் பண்றீங்க…?!” என்றாள் கமறலுடன்.
“சித்ரவதைப் பண்றது நானா இல்லை…” என்று ஏதோ சொல்ல வந்தவன், அவள் கண்கலங்க தன்னை வெறிப்பதைப் பார்த்ததும் முடிக்க முடியாமல் வார்த்தையின்றித் தடுமாறினான்.
“சொல்லுங்க என்னென்ன சொல்லனும்னு யோசிச்சி வச்சிருக்கீங்களோ சொல்லிடுங்க…! ஆனா நீங்க சொல்றது எல்லாமே பொய்ன்னு எனக்குத் தெரியும்!” என்றாள் அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து.
அவன் அவள் முகம் பார்க்க இயலாமல் தலை கவிழ,
“ஏன் தலை கவிழ்ந்து நிக்கறீங்க நிரு… உங்க கண்களே உங்களைக் காட்டிக் கொடுத்துடும்னு பயப்படறீங்களா?! நீங்க வாய்விட்டு சொல்லலைன்னாலும் எனக்குத் தெரியும் நிரு.. உங்க மனசில நான் இருக்கேன்னு! நீங்க என்னை ஏத்துக்க தயங்கிற காரணமும் எனக்குத் தெரியும்! ஆனா ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க நிரு… அதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்ல… காதலும், அன்பும் இருக்கிற இடத்துல குறைகள் எப்பவுமே நிறைதான் நிரு.” என்றவள்,
அவன் அருகே சென்று மண்டியிட்டு அமர்ந்து, அவன் கைகளைப் பற்றி, தாய் மடி தேடும் கன்றின் ஆவலோடு அவனின் முகம் நோக்கி,
“எனக்கு சீக்கிரமே உங்ககிட்ட வந்திடனும் போல இருக்கு நிரு…! உங்ககூடவே இருக்கணும்! உங்க கைப்பிடிச்சு நடக்கணும், உங்களோட சேர்ந்து சாப்பிடனும், உங்க மடியில தலை வைச்சித் தூங்கணும்! சில நேரங்கள்ல நீங்க எனக்குத் தாயாகவும், சில நேரங்கள்ல நான் உங்களுக்குத் தாயாகவும் வாழனும்! உங்களோட சேர்ந்து வாழற ஒவ்வொரு நொடியையும் கலையாத வானவில் போல வண்ணம் நிறைந்ததா மாத்தனும்!” என்று அவள் சொல்லிக் கொண்டே போக,
“ம்ம்! கலையாத வானவில்….!? இதிலிருந்தே தெரியலை உன்னோட கனவுகள் நிலையில்லாதது, கலையக் கூடியதுன்னு!” என்று விரக்தியுடன் சொன்னவன், பிடிவாதமாக தன் கைகளை அவள் கைகளிலிருந்து உருவிக் கொண்டு விலகிச் செல்லப் பார்க்க,
யாஷினி மறுபடியும் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, “ப்ளீஸ் நிரு…. கொஞ்சம் கூட இறங்கி வராத என் அப்பா, எனக்காக ஒரு வாய்ப்பு கொடுத்து, நீங்க என் காதலை ஏத்துகிட்டா… நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்கறேன்னு சொல்லியிருக்கார்! இப்பவாவது உங்க மனசில இருக்கறதை வெளிப்படையா சொல்லுங்க நிரு…!” என்றாள் கெஞ்சலுடன்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நிலாவிற்கு முதன் முதலாக நிருவின் மேல் கோபம் துளிர்த்தது. ஆனாலும் அவர்கள் இடையே குறுக்கிடுவது தவறு என்று மௌனம் காத்தாள்.
‘இவன் நிச்சயமா யாஷினியை விரும்பறான்..! ஆனா ஏன் இப்படி அந்தப் பெண்ணை தவிக்க வைக்கிறான்னு எனக்குக் கொஞ்சம் கூட புரியலை…!’ என்ற எண்ணம் அவளுள் சுழன்று இதயம் கனத்தது.
“என் மனசுல இருக்கறது உனக்குத் தெரியனும் அவ்ளோதானே!? சொல்றேன்…. நல்லா கேட்டுக்கோ! கல்யாணம்கிற விஷயத்துல எனக்கு என்னிக்குமே உடன் பாடு இருந்ததில்லை! அதுவும் உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை! நீயா, நான் உன்னை விரும்பறேன்னு தப்பா கற்பனை பண்ணிகிட்டதுக்கு நான் எந்த விதத்துலயும் பொறுப்பேத்துக்க முடியாது. தயவு செய்து இனி என் கண்பார்வையிலையே படாத! இங்கிருந்து போயிடு…! இனியாவது என்ன நிம்மதியா என் போக்குல வாழவிடு!” என்று மனதை பாறையாக மாற்றி வார்த்தைகளை கொட்டிய நிரஞ்சன், சில நொடிகள் அங்கு இருந்தாலும் தன் குட்டு உடைந்து விடுமோ என்ற நடுக்கத்தில் உடனே அங்கிருந்து தன் அறைக்கு விரைந்தான்.
“நிரு நிரு….!” என்று யாஷினி கதறக் கதற, காதில் வாங்காதவன் போல் தன் அறைக்குச் சென்றவன், அதன் கதவை அவள் முகத்தில் அடித்தார் போல் அறைந்து சாத்தினான்.
அவன் சென்ற சில நிமிடங்களுக்குப் பின்னும் யாஷினி மண்டியிட்டு அமர்ந்த நிலையிலேயே விம்மிக் கொண்டிருக்க, நிலா அவள் அருகே சென்று அவள் தோள் பற்றி அவளை எழுப்பினாள்.
நிலாவைப் பார்த்ததும் யாஷினியின் மனம் கட்டுப்பாட்டை இழந்துவிட அவள் நிலாவின் மார்பில் முகம் புதைத்துக் கரைந்தாள்.
தன்னை மீறி யாஷினி, அழ ஆரம்பித்ததும், அவளுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் அதிகமாகியது. அதைப் பார்த்து பயந்து போன நிலா,
“யாஷினி யாஷினி ஒண்ணுமில்லைம்மா… இங்க பாரு அழக்கூடாது…! அவன் ஒரு முட்டாள்! அவன் உளறலையெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு இப்படி அழக்கூடாது! நாங்க இருக்கோம்ல…?! இங்க பாரு நல்லப் பொண்ணு இல்லை! என் பேச்சைக் கேட்ப இல்ல….! அழக் கூடாது!” என்று தாயின் பரிவோடு யாஷினியின் தலைவருடி, அவளைத் தேற்றி மெல்ல சோபாவின் அருகே அழைத்துச் சென்று அமர வைத்து அவள் முதுகை நீவி விட்டாள்.
பின் அங்கு நின்றிருந்த சமையற்காரப் பெண்மணி சாராதாவைப் பார்த்து, “அக்கா குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாங்க!” என்றாள்.
“ம் இதோ கொண்டு வரேன் ம்மா..!” என்று விரைந்தார்.
அவர் தண்ணீர் கொண்டு வந்ததும், அதை மெல்ல யாஷினிக்கு புகட்டியவள், “இப்ப பரவாயில்லையா?!” என்றாள்.
“ம்! ஆனா நிரு…!” என்று அவள் மீண்டும் ஆரம்பிக்க,
“ஷ் இனி இந்த பேச்சே எடுக்கக் கூடாது…!” என்று அவளை அடக்கியவள், மனதில் தன் நண்பனை,
‘உன்ன… இரு! யாஷினியை அவ வீட்ல விட்டுட்டு வந்து கவனிச்சுக்கறேன்!’ என்று கறுவினாள்.
ஒரு வழியாக அவளைத் தேற்றிச் சமாதானப் படுத்தி, தங்கள் வீட்டு டிரைவரின் உதவியோடு யாஷினியின் காரிலேயே அவளை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.
யாஷினி அழுது வாடிய முகத்தோடு யாரோ ஒரு பெண்ணுடன் வீடு திரும்பியதைப் பார்த்த சந்தோஷ், பதறி ஓடி வந்து, “என்னம்மா.. என்னாச்சு…?! என்று பரிதவிப்புடன் கேட்க,
“ஒண்ணுமில்லைங்க லேசான மூச்சுத் திணறல்…! அதான் நானே கூட்டிட்டு வந்தேன்!” என்றாள் நிலா.
“வாம்மா!” என்று சந்தோஷ் ஆதரவாக தன் தங்கையின் கைகளைப் பற்ற அவள் நிரு தன்னை நிராகரித்ததால் ஏற்பட்ட கோபத்திலும், வேதனையிலும் அவன் கைகளை உதறினாள்.
“அவ கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்ங்க! அவளோட ரூம் எங்க?!” என்று நிலா கேட்க, சந்தோஷ் அவள் அறையைச் சுட்டிக் கட்டினான்.
நிலா, யாஷினியை அழைத்துச் சென்று அவள் அறையில் படுக்க வைத்துவிட்டு வந்தாள். காரில் வரும்போதே நிலா யாஷினிக்கு பொறுமையாக எடுத்துக் கூறியிருந்தாள். அதனால் யாஷினி அவள் வீட்டினர் யாரிடமும் ஏதும் பேசாமல், அமைதியாகப் படுத்துக் கொண்டாள்.
அவளைப் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்த நிலா, சந்தோஷிடம், “நான் நிலா… நிருவோட…!” என்று அவள் முடிப்பதற்குள்,
“உயிர்த் தோழி…!” என்றான் சந்தோஷ்.
“நீங்கதான் யாஷினி அண்ணனா? உங்க மனைவியும், குழந்தையும் நல்லா இருக்காங்களா?!” என்றாள் நிலா.
“ம்! எல்லோரும் நல்ல இருக்காங்க… அவளோட அம்மா வீட்டுக்கு போயிருக்கா! யாஷினி உங்க வீட்டுக்கு வந்திருந்தாளா?! என்ன நடந்தது? நிரு என்ன சொன்னார்?!” என்றான் தமையனின் அக்கறையோடு.
அவள் நடந்த முழுவதையும் சொல்லாமல், “எப்பவும் போல்தான்! நிரு யாஷினியை ஏத்துக்க மறுக்கிறான்!” என்றாள் பட்டும் படாமல்.
அவன் பதிலேதும் பேசாமல் மௌனமாய் கலங்க,
“நல்லதாகவே முடியும்னு நம்புவோம் கவலைப் படாதீங்க…!” என்றவள், அவனிடம் விடைபெற்றுக் கிளம்பினாள்.
வீட்டிற்கு வந்தவள் அங்கே ராதாவும், காமாட்சி பாட்டியும் கவலையுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவர்கள் அருகே சென்றாள்.
“என்னம்மா இது இந்தப் பையன் ஏன்மா இப்படி நடந்துக்கறான்?! முன்னாடியெல்லாம் இந்தன் ரஞ்சன் பையன்தான் மத்தவங்க மனசைப் புரிஞ்சிக்காம எடுத்தெறிஞ்சி பேசிக் கஷ்டப் படுத்துவான்! இப்போ அவன் திருந்தினதும், இந்தப் பையன் அந்த வேலையை எடுத்துகிட்டான் போல…?!” என்றார் மீனாட்சி.
‘இவங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது?!’ என்று யோசித்த நிலா,
அருகே இருந்த சாரதாவைப் பார்த்து, ‘உங்க வேலையா?!’ என்பது போல் முறைக்க,
“நான் என்னம்மா பண்றது?! பெரியம்மா நீங்க எங்க போயிருக்கீங்கன்னு கேட்டாங்க… அதான்…!” என்று இழுத்தார் சாரதா.
“நான் அவன்கிட்ட பேசறேன் பாட்டி..!” என்றவள், அடக்கிய கோபத்துடன் அவன் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
யாஷினியிடம் கடுமையாகப் பேசிவிட்டு வந்தவன், சிலமணி நேரங்கள் ஆனபின்னும் அவளது வாடியை முகத்தை மறக்க முடியாமல், அறுபதாவது முறையாக, மானசீகமாக அவளிடம் மன்னிப்புக் கோரிக் கொண்டிருந்தான்.
அப்படியிருக்க நிலா திடீரென்று தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும், வெகு கஷ்டப்பட்டு தன் மனத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து தன் முக பாவங்களை மாற்றினான்.
“என்னடா நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல?! அந்தப் பொண்ணுக்கு உன்னைவிட்டா வேற கதியில்லைன்னா…?! ம்! அவ அவ்ளோ தூரம் கெஞ்சுறா? நீ கொஞ்சம் கூட உனக்கும் அவளுக்கும் சம்மதமே இல்லாத மாதிரி அவளைத் தூக்கி எறிஞ்சு பேசற?! என் முகத்தைப் பார்த்து சொல்லு! நீ அவளைக் காதலிக்கவே இல்லைன்னு!?” என்றாள் படபடவென.
பொறுமையாக அவள் முகம் நோக்கியவன், “இல்லை…!” என்றான் அழுத்தம் திருத்தமாக.
“ஓ! அப்படியா?! சரி இதுக்கு மேல உன்கிட்ட பேசி ஆகப் போறது எதுவும் இல்லை! அண்ணனும் தம்பியும் எதுல ஒற்றுமையா இருக்கீங்களோ இல்லையோ?! மத்தவங்க மனசைக் புரிஞ்சிக்காம கஷ்டப்படுத்துறதுல ரொம்பவே ஒற்றுமையா இருக்கீங்க!” என்று கத்திவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.
இரவு வெகு நேரம் கழித்து வந்த ரஞ்சன், நிலா உறங்காமல் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஏதோ யோசனையில் மூழ்கி இருப்பதைக் கண்டான்.
‘நான் வந்தது கூட தெரியாம மேடமுக்கு அப்படி என்ன யோசனையோ?!’ என்று நினைத்தவன், ப்ரெஷ்அப் செய்து வந்த பின்னும் நிலா அதே நிலையில் அமர்ந்திருப்பதைக் கண்டு, ‘ஏதோ சரியில்லை!’ என்று யூகித்தான்.
அன்று நிலா தன் காதலை அவனிடம் வெளியிட்ட பின்பு நிலாவால் எப்போதும் போல் அவனிடம் சகஜமாகப் பேசமுடியவில்லை! அவனாலும் முன்பு போல் இருக்க முடியவில்லை! ஆனால் ஒருவரைப் பற்றி ஒருவர் எப்போதுமே நினைத்துக் கொண்டிருந்தனர். அவள் மறக்க நினைத்தும்! அவன் மறுக்க நினைத்தும்! ஆனால் இருவராலுமே மறக்கவும் முடியவில்லை! மறுக்கவும் முடியவில்லை! மாறாக மறுக்க நினைத்த அவன் மனதில் மறக்க முடியாதவளாய் வீற்றுவிட்டாள்.
‘ஆனால் கேட்டாலும் ஒண்ணுமில்லைன்னுதான் சொல்லுவா எதுக்கு!?’ என்று நினைத்தவன், ‘பேசாமல் பாலைக் குடிச்சிட்டுப் படுப்போம்’ என்று நினைத்து மேஜையைப் பார்க்க, அங்கு எப்போதும் அவனுக்காக பிளாஸ்கில் சுடச் சுடக் காத்திருக்கும் பாலும் இல்லை, அதனருகே வீற்றிருக்கும் பழமும் இல்லை.
திரும்பி அவன் அவளை முறைக்க, அவள் அப்போதும் யோசனையிலேயே இருந்தாள்.
“க்ஹுக்கும்!” என்று அவன் தொண்டையைச் செரும, திடுக்கிட்டு தன் நிலைக்கு வந்து பார்வையை அவன் புறம் திருப்பினாள்.
நிருவின் மேலிருந்த கோபம் ரஞ்சன் மீதும் தாவ, ‘என்ன?!’ என்றாள் வெட்டும் பார்வையில்.
‘ஹப்பா… என்னப் பார்வைடீ இது?! கத்தி வீச்சு மாதிரி?!’ என்று மனதுள் சொல்லியவன்,
“பால் வைக்கலியா?!” என்றான் மெதுவாக.
‘ஆமாம் இங்க ஊரே தீப்பற்றி எரியுதாம்! இதுல இவரு சொகுசா தூங்க பாலும் பழமும் கேட்குதாம்?!’ என்று முனகியவள்,
“இனி அவங்க அவங்க வேலையை அவங்க அவங்களே செய்துக்கலாம்!” என்றாள் மிடுக்கோடு.
“என்னடி இது…?! நானா இதெல்லாம் கேட்டேன்?! நீதான பால் சாப்பிடுங்க, பழம் சாப்பிடுங்க நல்லா தூக்கம் வரும்னு சொல்லிப் பழக்கப் படுத்தின?!” என்றான் அவனும் நக்கலுடன்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது! அப்ப பாவமா இருந்தது கொடுத்தேன்! இப்ப இல்லை!” என்றாள் வீம்புடன்.
“என்னது?! இப்ப இல்லையா?! காதலுமா?!” என்றான் கேள்வியோடு.
‘இவன் என்ன கேட்கறான்?’ என்று அவள் யோசிக்க,
“நீ என்னைக் காதலிக்கறேன்னு சொன்னியே! அதுவும் இப்ப இல்லையா?!” என்றான் அவள் விழி நோக்கி.
“ம்ம்!” என்று கோபத்தில் மூக்கு விடைக்க, உதடுகள் துடிக்க அவனை முறைத்தவள், புசுபுசுவென கோபப் பெருமூச்சுகளுடன் அவனருகே வந்து,
‘என்ன?! என்ன நினைச்சிகிட்டு இருக்கீங்க அண்ணனும் தம்பியும்?! எங்களைப் பார்த்தா லூசு மாதிரி தெரியுதா?! இல்ல லூசு மாதிரி தெரியுதான்னு கேட்கறேன்! திடீர்னு நல்லா பேசறீங்க… திடீர்னு முஞ்சியைத் தூக்கி வைச்சிக்கறீங்க…! திடீர்னு…!” என்று ஏதோ சொல்ல வந்தவள், பேச்சு மூச்சின்றி வாயடைத்துப் போனாள்.
அவளது பன்னீர் ரோஜா இதழ்கள் அவன் வசீகர உதடுகளால் களவாடப் பட்டிருந்தன.
error: Content is protected !!