Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennavalin Innisai

Ennavalin Innisai 1 1

அத்தியாயம் 1

வாழ்க்கை என்பது மிக 

அழகானது என்று உணர்ந்தேன், 

நீ கிடைத்த போது!!!



Advertisement

திருச்சியில் அமைந்திருக்கும் ‘எஸ். கே இண்டர்நெசனல் ஸ்கூல்’ உள்ளே பயந்து பயந்து அடி எடுத்து வைத்தாள் ஸ்ருதி. இனிமே அவள் இங்கு தான் படிக்கப் போகிறாள்.

Advertisement

தேவேந்திரன் மற்றும் வேணி தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் நவீன், இப்போது தான் சென்னை மெடிக்கல் காலேஜில் முதலாம் ஆண்டு சேர்ந்திருக்கிறான். அவனுக்கு அடுத்து பிறந்தது ஸ்ருதி. ஸ்ருதி இப்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். இவ்வளவு நாள் அவள் சென்னையில் தான் படித்துக் கொண்டிருந்தாள். தேவேந்திரன் ரயில்வே துறையில் பணி புரிகிறார்.

Advertisement

அவருக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு டிரான்ஸ்பர் கிடைத்ததால் மகளின் பள்ளியையும் மாற்ற வேண்டிய சூழ்நிலை. வருடத்தின் பாதியில் வேறு எந்த பள்ளியிலும் அவளுக்கு சீட் கிடைக்காமல் போனதால் இந்த பள்ளியில் அலைந்து திரிந்து சீட் வாங்கி இருக்கிறார்.

Advertisement

பழைய பள்ளியில் ஸ்ருதி துருதுருப்பானவள் தான். சிறு வயதில் இருந்து அந்த பள்ளியில் படித்ததால் அவளுக்கு பள்ளி என்றால் மிகவும் பிடிக்கும். அவளுடைய நண்பர்களையும் மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த பள்ளிக்கு வரவே அவளுக்கு விருப்பம் இல்லை. புதுப் பள்ளி எப்படி இருக்குமோ? இங்கே தனக்கு புது நண்பர்கள் கிடைப்பார்களா? பாடம் எப்படிச் சொல்லிக் கொடுப்பார்கள்? என்றெல்லாம் பல கேள்விகள் அவள் மனதில் எழுந்தது.

அவள் யோசித்த படியே கேட் அருகே நிற்கவும் “என்ன பாப்பா இங்க நிக்குற? கிளாசுக்கு போ”, என்று சொல்லி விட்டுச் சென்றான் ஆபீஸ் பாய். ‘ஒன்பதாம் வகுப்பு ஏ பிரிவு’ எங்கே இருக்கிறது என்று அவள் தேட அவள் கண்ணில் பட்டது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தான். இந்த இரண்டு வகுப்புகளுக்கான கிளாஸ் தான் பள்ளியின் ஆரம்பத்தில் இருந்தது. மற்ற கிளாஸ் எல்லாம் கொஞ்சம் உள்ளே தள்ளி இருந்தது.

அப்போது எதிரே ஒரு டீச்சர் வர அவரிடம் விசாரித்து விட்டு தன்னுடைய கிளாசைக் கண்டு பிடித்து விட்டாள். தயக்கத்துடன் அவள் கிளாசுக்குள் நுழைய அங்கே அமர்ந்திருந்த சில மாணவர்கள் அவளையே பார்த்தார்கள். யாரையும் பார்க்காமல் தயங்கிய படியே உள்ளே சென்றவள் இரண்டாவது பெஞ்சில் அமர்ந்தாள்.

புதிதாக வந்த இவளை வியப்பாக பார்த்த அனைவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். ஆனால் இவளிடம் யாருமே எதுவும் பேச வில்லை. சிறிது நேரம் கழித்து கிளாசைச் சுற்றி கண்களைச் சுழற்றினாள். இரண்டு பையன்கள் இவளைப் பார்த்து தான் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். படக்கென்று தலையைத் திருப்பிக் கொண்டாள்.

தன்னை இப்படி ஒரு சிக்கலில் மாட்டி விட்ட அம்மா அப்பாவை நினைத்து எரிச்சலாக வந்தது. பேசாமல் அவர்கள் சொன்னது போல பழைய பள்ளியின் ஹாஸ்டலில் இருந்திருக்கலாமோ என்று எண்ணினாள்.

சிறிது நேரத்தில் மற்ற மாணவர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். அனைவரும் யார் இது என்பது போல தான் பார்த்துச் சென்றார்கள். மற்றவர்கள் அனைவரும் யூனிபார்மில் இருக்க இவள் மட்டும் கலர் டிரஸில் அமர்ந்திருந்ததால் தனித்து தெரிந்தாள். அப்போது ஸ்ருதி அருகே ஒரு மாணவி வந்து நின்றாள். ஸ்ருதி அவளை நிமிர்ந்து பார்க்க “ஹலோ, இது என்னோட இடம்”, என்றாள் அவள்.

“ஓ, சாரி”, என்று சொல்லி விட்டு எழுந்து கொண்ட ஸ்ருதிக்கு அடுத்து எங்கே அமர்வது என்று தெரிய வில்லை. எங்கே அமர்ந்தாலும் அந்த இடத்தில் அமர்பவர்கள் வந்தால் தன்னை அமர விட மாட்டார்கள் என்று புரிந்தது.

கூடவே அந்த பக்கம் அமர்ந்திருந்த மாணவர்களும் புதிதாக வந்திருக்கும் அவளையே நோட்டம் விட ஒரு மாதிரியான அவஸ்தையில் நின்றாள்.

கண்களைச் சுழற்றிப் பார்க்க கூட அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. அப்போது “ஏய் இங்க வா”, என்று கடைசி பெஞ்சில் இருந்து சத்தம் வர அங்கே பார்த்தாள்.

அங்கே ஒரு மாணவி அவளை அழைக்கவும் தன்னுடைய பேகை எடுத்துக் கொண்டு அங்கே சென்றாள்.

“இங்க யாரும் வர மாட்டாங்க. இங்க உக்காரு”, என்று அவள் சொன்னதும் அங்கே அமர்ந்தவள் அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.

தனக்கு இடம் தந்தது மட்டுமின்றி ஒரு நிம்மதி உணர்வையும் தந்த அவளை அவ்வளவு பிடித்தது ஸ்ருதிக்கு. அந்த பெண்ணே பேச ஆரம்பித்தாள் ஸ்ருதியிடம்.

“என்னோட பேர் தேன்மொழி. உன் பேர் என்ன?”

“என் பேர் ஸ்ருதி”

“நல்ல பேர். ஆமா ஏன் ஸ்கூலுக்கு பாதில வந்துருக்க?”

“அப்பா ரயில்வேல வேலை பாக்குறாங்க. சென்னைல இருந்து இங்க டிரான்ஸ்பர் ஆகிருச்சு. அதனால தான் இங்க சேத்துட்டாங்க”

“சரி உங்க வீட்ல எத்தனை பேர்?”

“நான் அம்மா அப்பா அப்புறம் ஒரு அண்ணன். அவன் மெடிக்கல் படிக்கிறான் சென்னைல. உங்க வீட்ல எத்தனை பேர்?”

“எங்க வீட்ல நான் அப்பா அம்மா எனக்கு ஒரு அண்ணனும் தம்பியும் இருக்காங்க. அண்ணன் இதே ஸ்கூல்ல தான் படிக்கிறான். பேர் ராகவன். எப்பவாது அவனை உனக்கு காட்டுறேன். அப்புறம் தம்பி வேற ஸ்கூல்ல சிக்த் படிக்கிறான்”

“அப்பா அம்மா என்ன பண்ணுறாங்க தேனு?”, என்று ஸ்ருதியும் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டாள்.

“அப்பா தாலுகா ஆஃபிஸ்ல வேலை பாக்குறாங்க. அம்மா இன்னொரு பிரைவேட் ஸ்கூல்ல மியுசிக் டீச்சர்”, என்று தன்னைப் பற்றி சொன்னாள்.

இருவருக்கும் இடையே நட்பென்ற தீ வேகமாக பற்றிக் கொண்டு அவர்களை இறுக்கி பிணைத்தது. அதற்கு பிறகு டீச்சர் வந்து அவளைப் பற்றிக் கேட்பது, பாடம் கவனிப்பது என்று அன்றைய நாள் அப்படியே கடக்க அன்று மாலை பள்ளி முடிந்ததும் “வீட்டுக்கு எப்படி போவ ஸ்ருதி?”, என்று கேட்டாள் தேன்மொழி.

“அப்பா கூப்பிட வருவாங்க. ஆனா அஞ்சறைக்கு தான் அவங்களுக்கு ஷிப்ட் முடியும். அது வரைக்கும் கேட் கிட்ட வெயிட் பண்ணனும்”

“ஓ சாரி டி, என்னால அவ்வளவு நேரம் இருக்க முடியாது. என் அண்ணன் வந்துருவான்”

“பரவால்ல தேனு, நீ போ. நான் வெயிட் பண்ணுறேன்”

“அதுக்கு முன்னாடி என் கூட சைக்கிள் ஸ்டாண்ட்க்கு வா. பேசிட்டே போகலாம். உனக்கும் நேரம் போகும்”, என்று சொல்லி அழைத்துச் சென்றாள் தேன்மொழி.

அவர்கள் சைக்கிள் ஸ்டாண்ட் அருகே போன போது அங்கே நின்றிருந்தான் ராகவன். அவனைக் கண்டு பிரமித்து போய் தன்னுடைய நடையை நிறுத்தி விட்டாள் ஸ்ருதி.

ஸ்ருதி சராசாரி பெண் அல்ல. பார்த்த உடன் சட்டென்று மற்றவர்களுக்கு பதியும் படி இருக்கும் அழகிய வட்ட முகம். இயல்பாக அவளிடம் பேசிட தூண்டும் எளிமையான தோற்றம். துடிப்பும் அழகும் கொண்டவள். அவ்வளவு அழகு கொண்ட ஸ்ருதி ராகவனின் அழகில் அப்படியே நின்று விட்டாள்.

அது அந்த வயதில் ஏற்படும் தடுமாற்றமா? இல்லை உண்மையிலே முதல் பார்வையிலே அவளை அவன் மையம் கொண்டு விட்டானா? ஏதோ ஒன்று அவனது தோற்றம் அவளை அசைத்தது.

ஐந்தரை அடி உயரத்தில், சிவந்த நிறம், டீனேஜுக்கான உடல் அமைப்பு, எத்தனை முறை வாரினாலும் அடங்க மாட்டேன் என்று சிலுப்பிக் கொள்ளும் கேசம், காந்த கண்கள், கூரான நாசி, அரும்பு மீசை, அதற்கு கீழே அழகான உதடுகள் என பார்ப்பவரை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் வசீகரத் தோற்றம் கொண்டவன் தான் ராகவன்.

மொத்தத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் எப்படி இருப்பானோ அப்படி இருந்தான். அந்த பள்ளியில் ராகவன் என்றால் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவன் ஒன்றும் படிப்பில் புலி கிடையாது. அதே நேரம் மோசமாக படிப்பவனும் கிடையாது. சாதாரணமாக படிப்பான். ஆனாலும் சின்னப் பிள்ளைகள் முதல் டீச்சர் வரை அனைவரையும் தன்னுடைய குரலால் கட்டி போட்டிருப்பவன். ஆம் அவனுக்கு அப்படி ஒரு காந்த குரல்.

பள்ளியில் எந்த விழா நடந்தாலும் ராகவனின் பாட்டு இல்லாமல் இருக்காது. அவ்வளவு அழகாக பாடுவான். அவன் மேடை ஏறினாலே அனைவரும் உற்சாகமாக ஆகி விடுவார்கள்.

அவன் காதல் பாட்டை பாட ஆரம்பித்து விட்டால் அவன் குரல் வளமும், அவன் முகத்தில் வந்து போகும் உணர்வுகளும் சொல்லில் அடங்காதவை. அவன் மேடையில் ஏறியது முதல் இறங்கும் வரை இளம் பெண்களின் பார்வை அவன் மீதே இருக்கும். அவனுடைய கிளாசிலே அவனை சைட் அடிக்கும் பெண்களும் உண்டு.

ஆனால் அவன் யாரிடமும் அதிகம் பேச மாட்டான். அவனுக்கு என்று இரண்டு நண்பர்கள். வாசு மற்றும் மணி. அதுவும் வாசு உடன் தான் அதிகம் இருப்பான். அது போக வேறு யாராவது ஏதாவது கேள்வி கேட்டால் கேட்பதற்கு பதில் சொல்வான். அவ்வளவே. மற்ற படி யாரிடமும் அதிகம் பேச மாட்டான்.

அவனுடைய பாடலில் மட்டும் பெண்கள் மயங்கி விட வில்லை. அவனுடைய அழகிலும் மயங்கித் தான் இருந்தார்கள். அழகில் கன்னியர்களை கண்ணசைவில் கட்டிப் போடும் திறமை உள்ளவன். அழகின் முழு உருவாகவும் காந்த குரலால் மற்றவர்களைக் கட்டிப் போடுவதாலும் அனைவரும் மயங்கி நிற்கும் பள்ளியின் நாயகன் அவன். அவனிடம் பேச வேண்டும் என்றும் அவன் தங்களை பார்க்க மாட்டானா என்று ஏங்கி கிடக்கும் பெண்கள் பலர்.

ஆனால் அவன் எந்த பெண்களிடமும் பேச மாட்டான். இன்னும் சொல்லப் போனால் அவனுக்கு பெண்கள், காதல் இந்த வார்த்தை எல்லாம் பிடிக்கவே செய்யாது என்று கூட சொல்லலாம். அவனது வெறுப்புக்கும் ஒரு காரணம் உண்டு.

அவன் மற்ற ஆண்களைப் போல சாதாரணமானவன் அல்ல. அவன் வாழ்க்கையில் நடந்த ஒரு இழப்பு அவனை அனைத்தையும் வெறுக்க வைத்தது. அதனால் எந்த பெண்களையும் தேவையில்லாமல் பார்க்க கூட மாட்டான். அத்தகையவனைக் கண்டு தான் ஸ்ருதி மயங்கி நின்றாள்.

மயக்கம் என்றால் அது சாதாரண மயக்கம் இல்லை. அந்த கண்ணனின் மீது ஆண்டாளுக்கு வந்த மயக்கம் என்று சொல்ல வேண்டுமோ? அவனை பார்த்த படியே நின்று விட்டாள். தன்னுடைய பார்வையை அவனிடம் இருந்து அவளால் விலக்கிக் கொள்ளவே முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!