Skip to content
Post Views: 4,062
22
ரஞ்சன் குறும்புப் பார்வையுடன், அப்படி ஒரு கேள்வியைக் கேட்டதும், அவளுக்கு ரோஷம் துளிர் விட, துள்ளிக் கொண்டு சென்றவள், அவன் கொடுத்த அதிர்ச்சியால், வாயடைத்துப் போனாள்.
ஹே! காலம் வந்து மாயம் செய்து
நெஞ்சை மாற்றிப் போனதே…!
Advertisement
என்னுள்ளே இன்றுக் காதல் வந்துக்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே!
ரஞ்சன் சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே அவளை நேசிக்கவும், ரசிக்கவும் துவங்கிருந்தாலும், ஏதோ ஒரு தடையை தன் மனதுள் வைத்துக் கொண்டு, வெகு சிரமப்பட்டு அவளைத் தவிர்த்து வந்தான்.
Advertisement
இன்று அவ்வளவு நெருக்கத்தில், அவளின் அலைபாயும் விழிகளையும், சினம் கொண்ட சிவந்த கன்னங்களையும், உதடுகளையும் கண்டவனுக்கு தன்னையும் மீறி உணர்ச்சிகள் கொந்தளிக்க, தன் ஒற்றைக் கையால் அவள் இடை வளைத்து தன்னோடு இறுக்கி, முகத்தோடு முகம் உரச, உதடுகளைச் சிறையெடுத்து, தன் காதலை வார்த்தையால் அன்றி செய்கையால் வெளிப்படுத்திவிட்டான்.
Advertisement
அப்படி ஒரு அதிர்ச்சியை சற்றும் எதிர்பார்த்திராத நிலா, தன்னை மறந்து அவன் தொடுகையில் கட்டுண்டு கிடந்தாள். அவளது மூளையும், மனமும் சிந்திக்கவும் மறந்தன. சிலமணித்துளிகள் நீண்ட அந்த இதழ் திருட்டை, களவாடியவனே முடிவுக்கு கொண்டு வந்து, அவளை மெல்ல விடுவித்தான்.
அவன் பிடி விலகிய பின்னும் அவள் பொற்சிலை போல் அசையாது நின்றிருக்க, அவன் மெல்ல அவள் கன்னத்தில் தட்டி, “போ போய் பேசாம படுத்துத் தூங்கு…!” என்றான்.
அவன் கன்னத்தில் தட்டிய பின்பே சுய உணர்வுக்கு வந்த நிலா, திருதிருவென விழித்தபடி, “நீ?! வந்து… நான்?! என்ன… நீ என்ன…?!” என்று ஏதேதோ உளற,
Advertisement
“நீ என் பொண்டாட்டிதானே?!” என்றான் ரஞ்சன்.
“ம்ம்ம்!!” என்று மண்டையை ஆட்டினாள் நிலா.
“உன்கிட்ட எனக்கு உரிமை இருக்கில்ல..?!” என்றான்.
“ம்ம்ம்!” என்றாள் மேலும் கீழுமாக தலை அசைத்து.
“நான் உன்னை என்ன வேணா பண்ணலாம் இல்ல..?!” என்றான் கள்ளப் பார்வையுடன்.
“ம்ம்ம்!” என்று மண்டையை மேலும் கீழுமாக உருட்டியவள், சட்டென்று பதறி, “ம்ஹும் ம்ஹும்!” என்று இடம் புறமாக தலை ஆட்டினாள்.
அவள் செய்கை அவனுக்கு சிரிப்பை வரவழைக்க, “அப்ப எதுவும் செய்யக் கூடாதா?!” என்றான் குறும்பாக.
‘என்னடி நடக்குது இங்க?! ஏய் நிலா… முழிச்சிக்கிட்டே கனவு காண்றியாடி…!?’ என்று அதட்டியது மனம்.
ஏதும் பேசாமல் பேயறைந்ததைப் போல் நிற்பவளைப் பார்த்தவனுக்கு, பாவமாகத் தோன்ற, “போ… எதையும் யோசிக்காம போய் படுத்துத் தூங்கு!” என்றான்.
‘என்னது?! எதையும் யோசிக்காம படுக்கணுமா? அடப்பாவி! செய்யிறதை எல்லாம் செய்துட்டு யோசிக்காம எப்படிப் படுக்கறதாம்?!’ என்று அவள் மனதுள் கமென்ட் கொடுக்க,
“எல்லாம் தூங்கலாம்! போய்ப் படு!” என்றான் அவள் மனதைப் படித்தவன் போல்.
“இது நிஜமா கனவுதான்!” என்று கையை ஆட்டி, வாய்விட்டு முனகியபடியே அவள் நகர, அவனும் சிரிப்புடன் நகர்ந்தான்.
உறங்கச் சென்றவளுக்கு உறக்கம் வந்தால்தானே..?! ‘பாவிபய இதுவரைக்கும் ஒரு… லவ் லுக்காவது விட்டிருப்பானா?! இப்படி பட்டுன்னு கிஸ் அடிச்சிட்டானே!? என்னடி நடக்குது இங்க?!’ என்று மீண்டும் அதிசயித்தாள்.
இருவருமே ஒருவரையொருவர் நினைத்தபடியே வெகு நேரம் உறக்கத்தைத் தொலைத்து விடியற்காலையில் உறக்கத்தைத் தழுவினர்.
காலை அலாரம் சத்தம் கேட்டு கண்விழித்த நிலா, அதை அணைத்துவிட்டு நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ரஞ்சனைப் பார்க்க, அவள் முகம் வண்ணம் பூசிக் கொண்டது.
புன்னகையுடன் எழுந்து குளிக்கச் சென்றவள், அவள் குளித்து வந்த பின்னும் அவன் எழாததைக் கண்டு, அவனை எழுப்பிவிடலாம் என்று, மெல்ல அவன் அருகே சென்றாள்.
ஆனால் அவனருகே சென்றவளுக்கு அவனை எழுப்ப மனம் வரவில்லை. எப்போதும் போல், அவன் முகஅழகு அவளைக் கட்டிப் போட்டு ரசிக்கத் தூண்டியது.
நல்ல நிறமான சரீரம், அலைபாயும் கருகரு கேசம், சீரான நாசி, செதுக்கி வைத்தாற் போன்ற நெற்றி, வசீகரமான உதடுகள், அளவான கம்பீரமான மீசை, எப்போதுமே அவளைக் கண்டுகொள்ளாதது போன்ற பார்வையை வீசிச் செல்லும் கள்ளவிழிகள்! ஆனால் இன்று ஏனோ அவன் உறங்கும் போது கூட அவளையே பார்ப்பதுபோல் ஓர் எண்ணம் அவளுள்!
ஏனோ அவளுக்கு அக்கண்ணில் அழகான, அழுத்தமான ஓர் முத்தம் பதிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
ஆனால் பெண்ணல்லவா?! ‘சே என்ன ஆசை இது? வெட்கமே இல்லாம?! அவன் உன்னை காதலிக்கறேன்னு கூட இன்னும் ஒரு வார்த்தை சொல்லலை! ஏன், உன் காதலை நீ சொன்ன பிறகும் கூட ஒரு வார்த்தை அவன் பதில் பேசலை! ஆனா நேத்து அவன் உன்னைக் கட்டி அணைச்சு முத்தம் கொடுக்கறான் நீயும் பேசாம நிக்கற?! இப்போ நீ நினைக்கிறது இன்னும் மோசம்!’ என்று அவளைச் சாடியது மனம்.
‘என்னயிருந்தாலும் அவன் என் புருஷன்! அவனுக்கு என்கிட்டயும், எனக்கு அவன்கிட்டயும் எல்லா உரிமையும் இருக்கு! என்னை கொஞ்ச நேரம் என் புருஷனை ரசிக்க விடறியா? ஆன்னா ஊன்னா நைநைன்னுகிட்டு வந்துடற?!’ என்று அதட்டி அதனை அடங்கச் செய்தாள் மனைவி.
இன்னும் சில நொடிகள் அவள் நின்றபடியே அவனை ரசித்துக் கொண்டிருக்க, “போதும்டி ரசிச்சது… எவ்ளோ நேரம்தான் தூங்கற மாதிரியே நடிக்கறது?!” என்றான் அவளின் ஆருயிர்க் கள்வன்.
“அய்யய்யோ… முழிச்சிக்கிட்டுதான் இருக்கானா?! மானம் போச்சே!” என்று அவள் ஒரு கையால் முகம் மறைத்துக் கண்மூடிச் சிரிக்க,
“தினமும் இவ்ளோ நேரம் நின்னு ரசிக்கிறியே?! போரடிக்கலை உனக்கு?!” என்றான் கேலியாக.
‘கடவுளே…! அப்ப இத்தனை நாளும் இவன் என்னை கவனிச்சிக்கிட்டுதான் இருந்தானா?’ என்று மீண்டும் அவள் முகம் சிவக்க, அவன் ஆசையோடு அவள் கரம் பற்றினான்.
அவன் தீண்டல் அவளைச் சிலிர்க்க வைக்க, அவள் மெல்ல தன் கையை இழுத்துக் கொள்ள முயன்றாள்.
அவன் எழுந்து, விடாபிடியாய் அவளை அவன் புறம் இழுத்து அமர வைத்தான்.
சில நிமிடங்கள் அவள் முகத்தையே அவன் கூர்ந்து ரசிக்க, அவளைக் கூச்சம் நெட்டித் தள்ளியது.
அவள் வெடுக்கென்று எழுந்து ஓட முயல, அவள் கையை இழுத்துப் பிடித்து அவன் அருகே அமர்த்திக் கொண்டான் கள்வன்.
அவள் கைகளைப் பிசைந்தபடி, கூச்சமும், குழப்புமும் சூழ படபடப்புடன் அமர்ந்திருக்க, “எப்பலயிருந்து டீ இவ்ளோ காதல் உனக்கு என்மேல?!” என்றான் அவள் முகம் நிமிர்த்தி.
“ம்ம்ம்! தெரியலை….!!” என்றாள் எங்கோ பார்த்தபடி.
அவள் கைகளை விடாமல் பற்றி இருந்தவன், “என்னடா இவன் அன்னிக்கு நாம காதலைச் சொல்லும்போது கொஞ்சம் கூட கண்டுக்காம போனான். இப்போ இப்டீல்லாம் நடந்துக்கறானேன்னு நினைக்கறியா?!” என்றான்.
அவள் அமைதியாக இருக்க, “ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?!” என்றான் அவள் கண்களைப் பார்த்து.
“நீ உன் காதலை என்கிட்டே சொல்றதுக்கு முன்னாடியே நானும் உன்னை காதலிக்க ஆரம்பிசிட்டேன்…!” என்றான் சிறிதும் தடுமாற்றமின்றி.
அவள் வியப்புடன் அவன் முகம் பார்க்க, “ம்ம்!” என்றான் கண்ணசைத்து.
அவளுக்கு அந்த நிமிடம் வானில் பறப்பது போன்ற ஓர் உணர்வு. ‘உலகின் அனைத்து சந்தோஷங்களும் தனக்கு ஒரே நொடியில் கிடைத்துவிட்டனவோ?’ என்று வியந்தாள்.
அதுவரை காதலுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தவனின் முகத்தில் திடீரென்று கசப்புணர்வு சூழ்ந்தது.
“ஆனா….! என் வாழ்கையில நடந்த சில கசப்பான சம்பவங்கள் உன்னை ஏத்துக்கவிடாம என் மனசுக்கு தடை விதிச்சது!” என்றான் வேதனையுடன்.
அவன் வேதனை அவளையும் தொற்றிக் கொள்ள, ஆதரவாக மெல்ல அவன் கைகளை அழுத்தியவள், “எனக்குத் தெரியும் ரஞ்சு…!” என்க, அவன் ஆச்சர்யத்தோடு அவள் முகம் பார்த்தான்.
அவள் மேலும் தொடர்ந்து, “எனக்கு எல்லாம் தெரியும் ரஞ்சு… ஆனா கடந்த கால சோகங்களை நினைச்சு, நிகழ்காலத்தையும் நீங்க தொலைச்சிகிட்டு இருக்கறதுதான் எனக்கு வருத்தமாயிருக்கு!” என்றாள் உண்மையான வருத்ததுடன்.
“நிலா…?!” என்று அவன் அதிர்ச்சியுடன் பார்க்க,
“உங்க வீட்ல இருந்து என்னைப் பெண் பார்க்க வந்த அன்னிக்கே நிரு எல்லா உண்மையையும் சொல்லிட்டான்” என்றாள்.
இருவர் இடையிலும் மிகுந்த நிசப்தம் நிலவியது.
சிறிது நேரம் தயக்கத்தில் உழன்றவன், “நிலா… நான் உன்கிட்ட மறைக்கணும்னு நினைக்கலை! ஆனா அப்போ உன்மேல இருந்த கோபத்தில எனக்கு எதுவுமே சொல்லனும்னு தோணலை! உண்மையை சொல்லப் போனா எனக்கு கல்யாணம் செய்துக்கவே விருப்பம் இல்லை! தாத்தாவுக்காக வேண்டா வெறுப்பாகத்தான் நான் இந்தக் கல்யாணம் சம்மதிச்சேன்!
ஆரம்பத்துல எனக்கு உன்மேல அளவுக்கு அதிகமா வெறுப்பும் கோபமும் மட்டும்தான் இருந்தது! ஆனா நீ என்மேல காட்டின அன்பும், அக்கறையும், உன்னால என் வாழ்க்கையில ஏற்பட்ட மாற்றங்களும் எனக்கு நிறைய மனநிம்மதியைக் கொடுத்தது. சொல்லப் போன உன்னோட அருகாமையை நான் என்னையே அறியாம எதிர்பார்க்கத் துவங்கினேன்! உன்னோட இருந்த நொடிகள் என்னோட சந்தோஷங்களை மீட்டுக் கொடுத்ததுன்னே சொல்லாம்!
உன்னோட எப்பவுமே இருக்கணும்னு தோணுச்சு! ஆனா அது நட்பா மட்டும் இருந்தா போதும்னு நினைச்சேன்! அதை மீறி என் மனசில உனக்கு இடம் கொடுக்கக் கூடாதுன்னு நினைச்சேன்! ஆனா அன்னிக்கு என் பிரெண்ட் கல்யாணத்துல, என்னை தூரத்திலிருந்து நீ ஏக்கத்தோடு பார்த்திருந்ததை கவனிச்சபோது, நீ என்மேல வைச்சிருந்தது நட்பு மட்டும் இல்லைன்னு தெரிஞ்சுகிட்டேன்!
அதனாலதான் உன்னை விட்டு வேணும்னே விலகிப் போக நினைச்சேன்! ஆனா முடியலை! நீ அன்னிக்கு ராத்திரி, ‘ஏன் ரஞ்சு என்னை தவிர்க்கறீங்கன்னு’ கேட்ட போது, எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை! ஏதோ சொல்லி சமாளிச்சேன்! ஆனா நீ கண்கலங்க அங்கிருந்து போனபோது உன்னை அப்படியே அணைச்சி ஆறுதல் சொல்லனும்னு என் மனசு தவிச்சது! அப்பதான் எனக்கும் புரிஞ்சது நான் உன்மேல வைச்சிருக்கிறதும் நட்பு மட்டும் இல்லைன்னு! எனக்கே எப்படி இது சாத்தியம்னு பிரமிப்பா இருந்தது!
ஆனா அதன் பிறகு நீ என்னை முற்றிலும் தவிர்த்து விலகின போது, நான் முழுதாகவே உணர்ந்தேன் அது காதல்தான்னு!
இருந்தாலும் அதை வெளிப் படுத்த சுத்தமா எனக்குத் தைரியம் இல்லை! காரணம் என்னோட கடந்த காலம்!
அன்னிக்கு எதிர் பார்க்காத விதமா நீயே என்கிட்டே காதலை சொன்ன! அப்பவே நானும் உன்னை காதலிக்கேறேன்னு சொல்லணும்னு துடிச்சேன் நிலா…! ஆனா அப்பவும் என்னோட மனசில நான் கத்தின கதறல் வெளியே கேட்காம போனதுக்கான காரணம் அதே கடந்த காலம்தான்!
நேத்து மட்டும் எப்படி அப்படி நடந்துகிட்டேன்னு பார்க்கறியா?!” என்றான் அவள் முகம் பார்த்து.
அவள் பேசாமல் அம்முதல் முத்தத்தை எண்ணி நாணத்தோடு தலை குனிய, அவன் அவள் முகம் நிமிர்த்தி, அவள் உதடுகளின் மேல் விரல்வைத்து, “கோபத்தில் கொஞ்சிய இந்த உதடுகள்தான்!” என்றான்.
“என்ன?! என் கோபம் உனக்கு கொஞ்சல் மாதிரி தெரியுதா?!” என்று அவள் பொய்க் கோபத்துடன் முறைக்க, “மறுபடியும் வேணுமா?!” என்றான் குறும்பாக.
“அய்யோ… வேணாம் ப்பா…! ஆள விடுங்க..” என்று அவள் எழுந்து ஓடப் பார்க்க, அவன் எட்டிப் பிடித்து அவள் மெல்லிடை வளைத்தான்.
“அச்சோ விடு ரஞ்சு…!” என்று அவள் கொஞ்ச,
“உன் குரலே இன்னும் கொஞ்ச நேரம் அணைச்சிக்கோ டான்னு சொல்லுது…!” என்றான் காதலுடன்.
அவன் அணைப்பு அவளுக்கும் இதமான இம்சையாய் இருக்க அவளும் அவன் பிடியிலிருந்து விலக முற்படவில்லை!
“ஹே பூக்கள் யாவும் பூக்கும் நேரம்
காற்றில் வாசம் வீசுதே!
என் நெஞ்சம் பேசும் பாஷை கேட்டுக்
கண்கள் காதல் பேசுதே!
நீண்ட நிமிடங்கள் வார்த்தையின்றி அணைப்பில் கரைய, கண்மூடி கனவில் மூழ்கிக் கிடந்த இளநெஞ்சங்களை கலைக்கும் பொறுப்பை ரஞ்சனின் கைப்பேசி எடுத்துக் கொண்டது.
“ப்ச்…! நானே பல மாசம் கழிச்சு இப்பதான் என் பொண்டாட்டியைக் கொஞ்சறேன்! அது பொறுக்கலையா எவனுக்கோ?!” என்று ரஞ்சன் சலித்துக் கொள்ள,
“போன் எடு ரஞ்சு… ஏதாவது முக்கியமான காலா இருக்கப் போகுது!” என்றாள் நிலா.
அவன் மனதேயில்லாமல் அவளை விடுவித்து போனை அட்டென்ட் செய்ய, அவள் சொன்னது போல் அது முக்கியமான கால்தான்.
அவர்கள் துவங்கவிருக்கும் புதிய கிளைக்கான இடம் கிடைத்துவிட்டதாக செய்தி வந்தது.
செய்தி அறிந்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவளிடம் தெரிவித்த ரஞ்சன், “உடனே கிளம்பனும், அந்த இடத்துக்கு ஏகப் பட்ட போட்டிகள் இன்னிக்கே போய் பேசி முடிக்கணும் நிலா….!” என்றான் உற்சாகத்துடன்.
“ம் சீக்கிரம் சீக்கிரம் கிளம்பு..!” என்று அவளும் துரிதப் படுத்த, டவலை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனவன், எதிர்பாராத ஓர் இனிய முத்தத்தை அவள் கன்னத்தில் பதித்துவிட்டு சென்றான்.
அவன் குளித்துமுடித்து வருவதற்குள், நிலா அவன் படுக்கையைச் சரி செய்துவிட்டு, பள்ளிக்குத் தயாராகத் துவங்கினாள்.
என்றும் இல்லாத திருநாளாக அன்று அவள் மிக அழகாக தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். அவன் நினைவுகளின் ஊடே வெளிப்பட்ட சிரிப்பு அவள் முகத்திற்கு புதுப் பொலிவை ஊட்டியது.
குளித்துவிட்டு வெளியே வந்தவன், சிரித்தபடியே, குங்குமத்தை வகிட்டில் சூட்டிக் கொண்டவளைக் கண்டு, ஓசைப்படாமல் பின்னே வந்து கட்டி அணைத்தான்.
“என்ன மேடம் தனியா சிரிச்சிகிட்டு இருக்கீங்க?!” என்றான் அவள் தோள் மீது முகம் பதித்து.
“இல்ல… நேத்து வரைக்கும் ஜி. ஈ. எம் மா இருந்தவன், ஒரே நாள்ல இப்படி வி. ஆர். எம் மா மாறிட்டானேன்னு நினைச்சேன். சிரிப்பு வந்துடுச்சு!” என்றாள்.
“ஆமாம்… நான் கூட கவனிச்சிருக்கேன்! எதுக்குடி எப்பப் பாரு என்ன ஜி. ஈ.எம் னு திட்டி முனகுவ?! அப்படின்னா என்ன?!” என்றான் சுவாரஸ்யமாக.
“ஆ அது.. அதெல்லாம் சொல்லமுடியாது!” என்று அவள் அவனிடமிருந்து நழுவ முயல,
அவன்தான் விடகண்டனாயிற்றே! “சொல்லாம விடமாட்டேன்!” என்றான் பிடியை இறுக்கி.
“ம் விடு ரஞ்சு…!” என்று அவள் கெஞ்ச,
“சொல்லியே ஆகணும்!” என்றான் பிடிவாதமாக.
“அது அது வந்து ஜி. ஈ எம் ன்னா.. ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி…!” என்று அவள் தயக்கத்துடன் சொல்ல,
“ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி…?!” என்று சொல்லிப் பார்த்தவன், என்ன நான் இஞ்சி தின்னக் குரங்கா?!” என்றவன் முகம் உண்மையாகவே அந்நிலைக்கு மாற, நிலா சிரிப்பை அடக்க முடியாமல் கலீரெனச் சிரித்தாள்.
முதன் முதலாக அவள் அப்படிச் சிரிப்பதைக் கண்ட ரஞ்சன், அவள் சிரிப்பழகில் தன் மனம் தொலைத்து, “சின்ன வயசில நீ இப்படி சிரிச்சுப் பார்த்ததோடு சரி… அதுக்கப்புறம் நீ இப்படி சிரிச்சுப் பார்த்ததே இல்லைடி..!” என்றான் அவள் உதடுகள் வருடி.
அவள் முகம் உடனே மாறிப் போக, “என்னாச்சு நிலா…?!” என்றான் புரியாமல்.
“ம் ஒண்ணுமில்லை ரஞ்சு.. நீ கிளம்பு! நேரமாகுது!” என்றாள்.
“ப்ச் சொல்லு நிலா… என்னாச்சு?!” என்றான் மறுபடியும்.
“அ அது சின்ன வயசுல, அம்மா என்னை அத்தனை பேர் முன்னாடி திருடிட்டேன்னு சொல்லி அடிச்சதுலயிருந்து என்னால மனம் விட்டு சிரிக்க முடியலை!” என்றாள் வேதனையுடன்.
error: Content is protected !!