Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எண்ணமெல்லாம் உன் வண்ணமே

வண்ணம் – 3.1

காலை துயில் களைந்து எழுந்து வந்த ரகுவின் உடல் வழக்கம் போல் சோம்பேறித்தனமாக இருந்தது. திங்கள்கிழமை வந்தாலே படுக்கையை அதிகம் தேடும் அவன் உள்ளம் இன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. சோர்வோடு வெளியில் வந்தவனுக்கு சமையலை எண்ணி இன்னும் சோர்வு கூடியது.

நேரம் இப்பொழுதே ஏழு முப்பத்தை தொட்டிருக்க இவளுக்கும் உணவு சமைக்க வேண்டுமே என்ற அயர்வு அவனுக்கு. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் இன்னமும். தேநீரையாவது தயாரிக்கலாமென அந்த வேலையை முடித்தவன் கைபேசிக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வர அவளது தூக்கத்தை தொந்தரவு செய்யாமல் அறையினுள் சென்றுவிட்டான்.

நீண்டுகொண்டே சென்ற அந்த அழைப்பில் நேரம் கடந்திருக்க அதற்கு மேல் சமையல் செய்ய முடியாது வெளியில் வாங்கலாம் என நினைத்து ரகு வரவேற்பறைக்கு வந்த நேரம் திவ்யா கையில் ஒரு பையோடு நின்றாள். எழுந்து குளித்ததற்கான அடையாளம் இல்லை, முகம் கழுவி சிகையை மட்டும் அள்ளி போனி டைல் போட்டிருந்தாள்.

“கடைல வாங்கிருக்கேன் பரவால்ல தான?”



Advertisement

“நானும் அத தான் பண்ணனும் நினைச்சேன். குளிச்சிட்டு வந்தர்றேன்” அவன் வரும் முன்பு நேற்று இரவு பயன்படுத்திய பாத்திரங்களை திவ்யா சுத்தம் செய்து வர, சரியாக ரகுவும் வந்திருந்தான்.

தனியாக உணவு மேஜை அங்கு இருந்ததில்லை, டீ பாயை தான் மேஜை போல் பயன்படுத்துவார்கள்.

இன்றும் அதில் இவருக்கான உணவை எடுத்து வைத்து திவ்யா அவனை பார்க்க, கைக்கடிகாரத்தை அணிந்து அமரவும் மீண்டும் ஒரு அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

Advertisement

திவ்யாவை பார்த்து ஒரு நொடி தயங்கி பிறகு அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

Advertisement

தன்னை ரகு பார்ப்பது தெரிந்தும் தலையை கவிழ்த்து வேலையை துவங்க, “சொல்லு டால்” என்ற ரகுவின் குரலில், கைகள் பாதியில் நின்றது அவளுக்கு.

அவனோ அவளுக்காக இதை பேசவில்லையே, அவன் பேசும் மொழியே இது தான் என்பது போல் ஒரு கவளம் உண்பதும் சிரிப்பதும், பேசுவதுமாய் இருந்தான். அழைத்திருந்தது அவன் அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் பெண் ஒருத்தி தான்.

“அட நீ வேற அதை ஏன் நியாபகப்படுத்துற, நானே அந்த அசிங்கத்தை மறைக்க தான் எல்லாருக்கும் டீ வாங்கி குடுத்து பேச்ச மாத்திவிட்டேன்”

Advertisement

“நீ எங்க டா மறக்க வச்ச, பேசி பேசி மறந்துடுங்க மறந்துடுங்கனு சொல்லி சொல்லியே மனசுல நல்லா பதிய வச்சிட்ட” என்றாள் அந்த பெண். பெயர் விஜயலக்ஷ்மி. திவ்யாவின் வயதை ஒத்தவள் தான்.

“சரி விட்டேன்டி” அவனது அந்த உரிமை அழைப்பில் இங்கு திவ்யாவுக்கு உணவு தொண்டையில் அடைத்தது.

இதுவரை தன்னை தவிர வேறு எவரிடமும் இவ்வளவு உரிமையாய் டி எல்லாம் வைத்து பேசவே மாட்டான் என எண்ணியது எல்லாம் பொய்த்துப்போனது.

அவனுக்கு அவ்வாறு பேசவும் பிடிக்காது என்பது அவனே அவன் வாயால் கூறிய செய்தி. இன்று இத்தனை உரிமையாய் அழைக்கவும் இருவருக்குமான நெருக்கம் என்னவென புரிந்துகொண்டாள் திவ்யா. (etutorworld.com)

“அதெல்லாம் விட முடியாது. பெருசா என்ன கவனி நீ, அசிங்கப்பட்ட வீடியோவ வெளிய லீக் ஆகாம பாத்துக்குறேன்” என்றாள் விஜயலக்ஷ்மி.

“அடிப்பாவி வீடியோ வேறயா?” அதிர்ச்சியிலும் சிரித்தவனை ஏறிட்டும் திவ்யா பார்க்கவில்லை.

“ஆமா அவ்ளோ அழகா அசிங்கப்பட்டு நின்னுருக்க, நாள பின்ன எங்கையாவது உதவுமேன்னு  நானும் சரத்தும் எடுத்து வச்சிட்டோம்”

“அட சதிகாரய்ங்களா” என்றான் இன்னும் சிரிப்போடு.

“ஏன்டா, நான் டி.ஜே நைட்ல சும்மா டூயட் ஆடுனதை என் மொத்த குடும்பத்துக்கும் அனுப்பிவிட்ட நீ இதெல்லாம் சொல்லலாமா? என்ன கோபி இதெல்லாம்”

“ஒரு கிக்கு வேணாம்…?? சரி அப்படியே அந்த விடீயோவை டெலீட் பண்ணு உன்ன தனியா பெருசா கவனிக்கிறேன்”

“சத்தியமா?”

“அட என்ன வேணும்னு மட்டும் சொல்லு” என்றான்.

“நம்ம ஆபீஸ் பின்னாடி புதுசா ஒரு ஸ்பா ஓபன் பண்ணிருக்காங்களாம். ஹேர் டிரீட்மென்ட் நல்லா இருக்காம். பண்ணலாம்னு யோசிச்சேன்… சரியா ஒரு ஆடு சிக்கிடுச்சு. செலவு மொத்தமும் நீ தான் சரியா?”

பெரிதாக செலவு வரும் என உறுதியாக எண்ணியவன், “அதெல்லாம் உனக்கு எதுக்கு விஜி? உன் முடி இருக்க அழகுக்கு இதெல்லாம் தேவையா”

“இந்த காக்கா பிடிக்கிற வேலை இங்க வேணாம். உன் அபார்ட்மெண்ட் வந்துட்டேன். வரப்போ மறக்காம காசு எடுத்துட்டு வா”

சிரிப்போடு இணைப்பை துண்டித்தவன் அவசர கதியில் உணவுண்டு ஷூ மாட்டி வாயிலை நோக்கி நகர, “ரகு பைக் கீ” அவன் முன்னே சாவியை நீட்டினாள் திவ்யா.

“வேணாம் திவ்யா. இப்பலாம் நான் வண்டில போறதில்ல, ப்ரன்ட் கூட கார்ல தான் போறேன்”

கதைவடைத்து பரபரப்போடு வெளியில் சென்றவன் சென்ற வேகத்திலே மீண்டும் உள்ளே வந்து அவள் கையில் பணத்தை திணித்தான்.

“நீ ஸ்டே பன்னிருந்த பி.ஜிக்கு இந்த காசு கட்டிட்டு. மிச்சம் நீ வச்சுக்கோ” அவள் பதிலையே கேட்காமல் ஓடிவிட்டான் மின்தூக்கியை நிறுத்த.

அவன் சென்றதும் பால்கனி சென்றவள் அப்பார்மென்டின் வாயிலை பார்க்க, அவன் கூறியது போல் ஒரு சிகப்பு நிற ஹூண்டாய் க்ரேட்டா ஒன்று நிற்க முன்னிருக்கையில் ஏறிக்கொண்டான்.

அவன் ஏறவும் அந்த வாகனம் வழுக்கிக்கொண்டு தார்சாலையில் சீறியது. அதை கவனித்து வீட்டினுள் வந்த திவ்யா கையிலிருந்த பணத்தை அதே வேகத்தில் அவர்களுடைய அறையில்… இல்லை இல்லை அவனுடைய அறையில் வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்தாள்.

இங்கு நடப்பவற்றை எல்லாம் பார்க்க மனதிற்கு தைரியமில்லை. முதலில் ஒரு வேலையை தேட வேண்டுமென்ற முனைப்பில் ரகுவின் மடிக்கணினியை வீட்டில் தேடி எடுத்து தனக்கு சரியாக வருமென நினைத்த வேலைகளை எல்லாம் விண்ணப்பத்து முடிக்கவே மதியமாகியது.

உணவு உண்ணவும் தோணவில்லை, சமைக்கவும் தோன்றவில்லை. உறக்கம் வராமலே படுத்துக்கிடந்தாள். நேற்று ஆறுதலாய் தெரிந்த அந்த குட்டி பூனையின் வரவும் கூட இன்று ஆறுதல் தரவில்லை.

அந்த அமைதியும் தற்காலிக நிம்மதி தானா என்ற சலிப்பு வந்தது.மாலை வேளையிலும் மனம் நிம்மதியே இல்லாமல் தவித்தது.

இத்தனை நாள் இதே வீட்டில் தான் இருந்தாள், அப்பொழுதெல்லாம் இல்லாத ஒரு சஞ்சலம் இந்த இரண்டு நாட்களில். வேறு இடம் போல், தான் அவ்விடத்தில் ஒன்றி போகாமல் ஒரு அந்நிய உணர்வு.

அந்த வீட்டில் இருக்க மூச்சடைக்க அபார்ட்மென்டின் கீழ் பகுதியில் அமைந்திருந்த சிறுவர்கள் விளையாட்டு பூங்காவில் சென்று அமர்ந்தாள். கண்ணீர் பெருகிக்கொண்டு வந்தது.

தன்னுடைய உடல் தனக்கே பாரமாக மாறியது. ஆசைகள் ஆயிரம் வைத்து, கனவுகள் பல லட்சம் வைத்து துவங்கிய வாழ்க்கை இன்று பாதை தெரியாத காட்டில் தனித்து சிக்கியது போலாகியது.

நேற்று வீட்டினர் பேசிய வார்த்தைகள், இன்று காலை ரகு செய்த செயல்கள் என அனைத்தும் அவளை அதிகம் வருத்தியது. ஒன்றாக வாழ்ந்த காலங்களில் கூட இல்லாத எதிர்பார்ப்பு இப்பொழுது அதிகம் வருவது எவ்வளவு பெரிய பிழை? நிதானித்தாள் மனதை கண்கள் மூடி.

‘அவனோடு அதிகம் பேச கூடாது, அவனோடு அதிக நேரம் செலவழிக்க கூடாது. அவன் முகத்தையே அதிகம் பார்ப்பதை தவிர்த்திட வேண்டும். அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் அவன் முன்னே செல்ல கூடாது. அவனை பற்றிய எண்ணங்களை தனிமையிலும் எண்ணி பார்க்க கூடாது’

பற்பல அறிவுரைகளை தனக்கு தானே வழங்கி கண்களை திறந்தாள்.

அவளை சோதிக்கவென்றே வாயிலில் காலை ஏறி சென்ற அதே வாகனத்தில் ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கினான் ரகு. அவனை தொடர்ந்து மறு பக்க கதவை திறந்து ஒரு பெண்ணும் வர அவளை முழுமையாக ஆராய்ந்து திவ்யாவின் கண்கள்.

திவ்யாவை விட மெல்லிய உடல். ஆனால் ஆளை வீழ்த்தும் அழகு உடல் தான். எளிமையான உடை. கருப்பு நிற ஜீன்ஸ், வெள்ளை நிற ஹால்ப் ஸ்லீவ் ஷர்ட் அணிந்திருந்தாள்.

திவ்யாவுக்கு சிகையை அதிக நீளத்தில் வைத்திருக்க பிடிக்காது. ரகுவும் பல முறை முடியை வளர்க்க கேட்டு பார்த்து சோர்ந்து போனான்.

இவளுக்கோ அழகான நீல முடி. தளர காற்றில் ஆட விட்டிருந்தாலும் அதனை வெட்டியிருந்த விதம் அவளுக்கு இன்னும் அழகாக இருந்தது.

காலையிலிருந்து அலுவலகத்தில் வேலை செய்து வந்த களைப்பு சிறிதும் இல்லாமல் புதிதாக பூத்த மலராக தான் தெரிந்தாள். இருவரும் ஏதோ தீவிரமாக வாகனத்தை சுற்றி பார்த்து பேசிக்கொண்டிருக்க பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள் திவ்யா.

இதயத்தின் மேல் யாரோ ஏறி அழுத்த நடப்பது போல் வலித்தது. என்றைக்கும் இது போல் பலவீனமாக உணர்ந்ததில்லை அவள். இந்த புதிய உணர்வு அவளை அவளுக்கே பிடிக்கவில்லை. தளர்ந்த மனதை வெறுத்து இருளை பார்த்து அமர்ந்திருக்க, அவளை இடித்து தள்ளி அருகில் அமர்ந்தான் ரகு.

வந்தது அவன் தான் என தெரிந்தும் அவள் திரும்பவில்லை.

“ஹே காலைல போட்டிருந்த அதே டிரஸ் தான இது? என்னடி குளிக்கலையா இன்னும்?”

லூசாக அணிந்திருந்த அவளது டீ-ஷர்டின் கை பகுதியை பிடித்து மெல்ல இழுத்தான் கேலி செய்யும் பொருட்டு. அவன் கையை தட்டிவிட்டவள், “டி சொல்லாத” என்றாள் வேகமாக கோவத்தை காட்டாமல்.

“என்னது?” தவறாக கேட்டுவிட்டோமோ என மீண்டும் கேட்டான்.

“நான் என்ன உன் பொண்டாட்டியா இப்டி உரிமையா டி சொல்லி பேசுற” முகம் சுளிக்காமல் தீர்க்கமாய் அவள் கேட்ட கேள்வியில் தன்னால் அவளை ஒட்டியிருந்த கால்களை தள்ளி அமர்ந்தான்.

“என்னாச்சுடி… ப்ச்” தலை கோதியவன் பிறகு, “என்னாச்சு உனக்கு? காலைல நல்லா தானே இருந்த” நிதானமாக கேட்டான் பொறுமையை பிடித்து வைத்து.

“ஏன் எங்கையாவது தலைல அடிபட்டு பைத்தியமானா தான் இப்டி எல்லாம் பேசணுமா”

“இவ்ளோ நேரம் சந்தோசமா இருந்தேன். கருமம் ஏன்டா உன்ன பாத்து பேச வந்தேன்னு இருக்கு. அப்டியே போயிருக்கனும்” கோவத்தில் அவள் மடியில் வைத்த மடிக்கணினி பையை வெடுக்கென பிடிங்கி வீட்டை நோக்கி சென்றுவிட்டான்.

அவன் செல்லவும் இவளால் ஜடமாக அமர்ந்திருக்க முடியவில்லை, கேட்பாறட்று மௌனமாய் அலுத்து தீர்ந்தாள்.

சில நிமிடங்களில் தானும் மேலே வந்த திவ்யா அவனை திரும்பியும் பார்க்காமல் இரவு உணவை சமைத்துக்கொண்டிருந்த வேளையில் அவன் அறையிலிருந்து கத்தினான்,

“எத்தனை தடவ தான் திவ்யா உனக்கு சொல்றது? கைல காச குடுத்தா அத கண்ட இடத்துல வைக்காதன்னு” வார்த்தைகள் அவளை நெருங்கிக்கொண்டே வந்தது.

சமயலறையில் தனக்கு பின்னே அவன் வரவை அறிந்தவள், “எனக்கு உன் காசு வேணாம் ரகு. என்னோட தேவைய நானே சம்பாதிச்சு பூர்த்தி பண்ணிக்குறேன்”

“ஓ நீ தங்க என் வீடு வேணும், ஹெல்ப் பண்ண நான் வேணும். ஆனா நான் குடுக்குற பணத்தை மட்டும் வாங்கிக்க மாட்ட. அப்டி தான!”

ரகுவுக்கு பொதுவாகவே கோவம் சற்று அதிகம் வரும். இன்று அவள் பேசிய வார்த்தைகள் அவனுக்கு இன்னும் ஜுவாலையை கூட்டியிருந்தது.

“நான் இனிமேல் இந்த வீட்டுல எல்லா வேலையும் பாக்குறேன். நீ எதுவும் பண்ண வேணாம். சமையல் கூட” என்றாள் அவனை பார்த்து.

அவளை நொடியில் நெருங்கியிருந்தவன் அவளது உயரத்திற்கு குனிந்து தீயாய் கண்களை பார்த்து முறைத்தான். அவனது அனல் பார்வையில் பயந்த திவ்யா சமையல் திட்டோடு ஒட்டி நின்று கைகளை அந்த ஸ்லாபில் ஊன்றி பின்வாங்கினாள்.

அவனது சூடான மூச்சுக்காற்று அவளது நெற்றியை அடைய இதயம் தாறுமாறாக துடித்தது பெண்ணுக்கு.

“வேலைக்காரியா இருக்குறேன்னு சொல்றியா?” அவன் கேள்விக்கு அவள் அமைதியே பதில் கூறியது.

“கொன்னு பொதைச்சிடுவேன் ஜாக்கிரதை. வீட்டு வேலை பாக்குறேன், எடுபுடி வேலை பாக்குறேன்னு டயலாக் பேசிட்டு இருந்தா இப்டியே வீட்டை விட்டு வெளிய கெளம்பு.

சும்மா திடீர்னு வந்த பொறுப்பு பருப்பை வச்சு சீன் க்ரியேட் பண்ணிட்டு இருக்காத. இந்த கண்றாவியை எல்லாம் பாக்குறதுக்கு எனக்கு நேரமில்லை. ஒழுங்கா நல்ல வேலையா பாத்துட்டு வீட்டை விட்டு கெளம்புடி. சாவடிக்கனே வந்துருக்கா”

அவள் கையை பிடித்து ஓரமாக நிற்க வைத்து தனக்கான தோசையை தானே சுட்டு அறைக்குள் எடுத்து சென்றுவிட்டான். அவன் வார்த்தைகள் அவளை சுற்றிக்கொண்டே இருந்தது.

அனைத்து தவறும் தன் மேல் தானோ என்ற எண்ணம் அவளுள் உதிக்க துவங்கியது. ரகுவின் கைகளில் இருந்து வெளி வந்த பிறகு தான் அவளுக்கும் பணத்தின் அருமையும் புரியத் துவங்கியது.

மனதில் அவன் வார்த்தைகள் விடாமல் விளையாட, உணவு இறங்க மறுத்தது. கட்டாயப்படுத்தி உள்ளே தள்ளினாள்.

அறைக்குள் சென்ற ரகுவும் உணவை முடித்து வெளியில் வர வரவேற்ப்பறையில் ஒரு மூலையில் போர்வையை உடலோடு போர்த்தி அமர்த்திருந்தவள் இவன் சத்தம் கேட்டு படுத்துகொண்டாள்.

அவளை கவனிக்காதவாறு மீண்டும் அறைக்குள் அடைந்து கொண்ட ரகுவுக்கு இன்னும் கோவம் குறைந்தபாடில்லை. வேலை செய்வதற்கா அவளை வீட்டினுள் அனுமதித்தது.

அவளுக்கான வேலை ஒன்று தேடி எவருடைய துணையும் இல்லாமல் நிற்கும் வரை அவளை தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருக்க மட்டும் எண்ணியிருந்தான் ரகு.

ஆனால் அவளோ வேறு விதமாக யோசித்து, தன்னையும் வாட்டியிருந்தாள். இன்று அவன் பேசியதற்கு எப்பொழுதும் அவளிடம் சிறிய பூங்காங்கமே வெடித்திருக்க கூடும்.

ஆனால் அவளது அமைதி, பிடிவாதம், தீர்க்கம் எல்லாம் அவனுக்கும் புதிது தான். மனதில் எதையேனும் நினைத்து புழுங்குகிறாளா, இல்லை என்னுடைய ஏதாவது செய்கை அவளை இந்த அளவு பாதித்ததா… ஒருவேளை அன்று நான் பணம் கேட்டத்தை மனதில் வைத்தது பேசுகிறாளோ?

பல வேறு கேள்விகள் மனதில் குடைந்துகொண்டே இருக்க அறையிலே குறுக்கும் நெடுக்கும் நடை பயின்றான். மனம் அமைதியுற மறுத்தது. கதவை மெல்ல திறந்து பார்த்தான் உறங்கவில்லை அவள்.

அசைவு தெரிந்துகொண்டே தான் இருந்தது. அவளிடம் சென்று பேசவும் மனம் வரவில்லை.

அதிகம் பேசிவிட்டோமோ என்ற பயம் வியாபித்தது ரகுவுக்கு.

அன்று கூறியது போல் அவனுடைய அன்னையும் தந்தையும் அவனிடம் பேசினார்கள் தான். ஆனால் அவனது மனைவியை பற்றி கேள்வி கேட்ட பொழுது திக்கி திணறி உண்மையை கூறியவன் மேல் பெற்றோருக்கு கட்டுக்கடங்காத கோவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!