Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Nila Thozhikku

En Nila Thozhikku 25

                                     25

     தன் அறை நோக்கிச் செல்ல முயன்ற நிருவை, “ஒரு நிமிஷம் நில்லு நிரு!” என்ற ராமநாதனின் குரல் தடுத்து நிறுத்தியது.

     அவன் புரியாத பாவனையுடன் அவர் முகம் நோக்க, “இங்க வா நிரு!” என்றார் இராமநாதன்.

     “தாத்தா…!” என்று அவன் தயங்க,



Advertisement

     “கிட்ட வாப்பா…!” என்றார் அன்புடன்.

     அவன் தயக்கத்துடன் மெல்ல அவர் அருகே வந்தவுடன், யாஷினியின் தந்தை கொடுத்த அழைப்பிதழைக் அவன் கையில் கொடுத்து, “இந்த அழைப்பிதழைப் பிரிச்சுப் பாரு…!” என்றார்.

     அவன் அமைதியாகவே நிற்க, “பிரிச்சுப் பாரு நிரு…!” என்றார் அவர் மறுபடியும்.

Advertisement

      அவன் செய்வதறியாமல் கண்களை அழைப்பிதழில் செலுத்தினான். கண்கவரும் அழகிய அழைப்பிதழ். ஆனால் அவன் கருத்தில் எதுவும் பதியவில்லை! அவன் ஏதோ போல், அழைப்பிதழையே வெறித்துக் கொண்டிருக்க, சட்டென்று அவன் கண்கள் ஆச்சர்யத்தில் திளைத்தது.

Advertisement

     அழைப்பிதழின் வெளிப்புறத்தில் அச்சிடப்பட்டிருந்த மணமகன், மணமகள், பெயரில் அவன் பெயரும், அவள் பெயரும்!

     அப்போதும் நம்பமுடியாமல், மறுபடியும் பெயரை உச்சரித்துப் பார்க்க, மணமகன்- கி.நிரஞ்சன், MA. M. Phil… மணமகள்- ப.யாஷினி, MA.Lit என்று குங்கும நிற அழைப்பிதழில், பொன்னிற எழுத்துக்கள் மின்னின.

      அப்போதும் அவனால் அது உண்மை என்று நம்ப முடியவில்லை! ‘சே என்ன மாதிரி கற்பனை இது! யாஷினி வேறோருத்தருக்கு மனைவியாகப் போறவள்! அவ பெயரோட என் பெயரை இணைச்சு! என்ன மடத்தனமான கற்பனை இது?!’ என்று அவன் தன்னையே நொந்து கொண்டான்.

Advertisement

     ஒரு நொடி அவன் முகம் மலர்வதும், மறு நொடி வேதனை கொள்வதும், என்று அவன் சொல்ல முடியாத உணர்வுகளில் தத்தளிப்பதை கவனித்த நிலா,

     “ரஞ்சு… அவனைப் பத்திரிக்கையைப் பிரிச்சுப் படிக்கச் சொல்லுங்க!” என்று மெல்ல கணவனின் காதருகில் கூறினாள்.

    “ம்!” என்ற ரஞ்சன், “பத்திரிக்கையைப் பிரிச்சித்தான் பாரேன் நிரு…!” என்றான்.

     நிரஞ்சன் மனம் படபடக்க, கைகள் நடுநடுங்க அதனைப் பிரித்துப்  படிக்கத் துவங்கினான்.

      படிக்க படிக்க அவன் மனம் ஆனந்தக் கூத்தாடியது! இது நிஜமா?! நிஜமா?! என்று படித்து முடிப்பதற்குள் பல முறை அவனையே கேட்டுக் கொண்டான்.   

     ‘யாஷினி என் மனைவியாகப் போறாளா?! எனக்குக் கிட்டவே கிட்டாது என நினைத்த என் காதல்! என் யாஷினி! இன்று என் காதலியாக மட்டுமல்ல, மனைவியாகவும் என் வாழ்வில்! இது எப்படி நிகழ்ந்தது?!’ என்று யோசித்தவன், முதலில் நிமிர்ந்து பார்த்தது நிலாவின் முகத்தைத்தான்.

     அவள் பொய்க் கோபத்துடன் அவனை முறைக்க, “என்ன மன்னிச்சிடுங்க நிரஞ்சன்!” என்றார் பஞ்சாட்சரம்.

     “அய்யோ நீங்க எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்கறீங்க?!” என்று நிரஞ்சன் தடுக்க,

    “இல்ல நிரஞ்சன்! அன்னிக்கு நான் பேசின வார்த்தைகள் உங்களை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும்?! என் பெண்ணோட சந்தோஷமே நீங்கதான் கிறதை உணராம உங்க குறையைச் சுட்டிக் காட்டி, உங்களை விலகும்படி சொன்னது…” என்று தயங்கியவர்,

     “எவ்வளவு சுயநலமா யோசிச்சிருக்கேன்!? உங்க அண்ணனும், அண்ணியும் மட்டும் என்னிடம் பேசிப் புரியவைக்காம போயிருந்தா, என் பெண்ணோட சந்தோஷத்தை காலம்முழுக்க பறிச்சிட்ட குற்ற உணர்ச்சி என் மனசுல இருந்துகிட்டே இருந்திருக்கும்!” என்றார்.

     “ஆமாம் நிரு நாங்க எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் புரிஞ்சிக்காதவன், நிலாவும், ரஞ்சனும் இவனோடு பேசிட்டுப் போன பிறகு எனக்கு போன் போட்டு, நான் செய்யிறது தப்போன்னு முதல் முறையா சந்தேகத்தோடு கேட்டான். அதையே பிடிச்சிக்கிட்டு நானும் கொஞ்சம் கொஞ்சமா அவன் மனசை கரைச்சு, புரிய வைச்சு, உங்க வீட்லயும் பேசினேன்! யாஷினிக்கே பத்திரிக்கை அடிக்கிற வரைக்கும், நீதான் மாப்பிள்ளைன்னு தெரியாது!” என்று தாமோதரன் கூற, நிரஞ்சன் நன்றியுடன் அவரைப் பார்த்தான்.

     “எ எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைங்க சார்… ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்…!” என்று மனதார அவன் நன்றி உரைக்க,

     “டேய் நிரு பையா… நாங்க சம்மதிக்கலைன்னாலும் இந்தக் கல்யாணம் முடிவாகியிருக்காது!” என்றார் அவன் அருகே அமர்ந்திருந்த காமாட்சி பாட்டி.

     “பாட்டி…!” என்று நிரு அவரைக் கட்டிக் கொள்ள, அங்கிருந்த அனைவர் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்தது.

     பஞ்சாட்சரமும், தாமோதரனும் அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பிய பின், நிரஞ்சன், “ரொம்ப தாங்க்ஸ்… தாத்தா, ரொம்ப தாங்க்ஸ் பாட்டி!” என்க,

      “தாங்கஸ் எங்களுக்கு வேண்டாம்! உன் பிரெண்டுக்கு சொல்லு!” என்றார் காமாட்சி.

     அவன் நிலாவின் முகம் பார்க்க, “பாட்டி.. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு நான் ரூமுக்குப் போறேன்!” என்று நிலா கிளம்பிவிட,

     “எங்களுக்கு தெரியாதுப்பா… நீயாச்சு உன் தோழியாச்சு.!” என்றார் காமட்சி.

     அவன் பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள, அனைவருக்கும் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

     “போ போய் நீயே சமாதானப் படுத்து!” என்று ரஞ்சனும் சொல்ல, அவன் அருகே வந்த நிரஞ்சன்,

     “தாங்க்ஸ் ரஞ்சு…!” என்றான் ஆத்தமார்த்தமாக.

     “சே என்னடா இது நமக்குள்ள தாங்க்ஸ் எல்லாம்?! போயி உன் பிரெண்டை சமாதானப் படுத்து!” என்றான் புன்சிரிப்புடன்.

     அவன் தயக்கத்துடன் நிலாவின் அறைக்குச் செல்ல, நிலா, மறுநாள் வகுப்பில் தான் எடுக்க வேண்டிய பாடத்திற்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தாள்.

     அவன் வரும் காலடி ஓசை கேட்டும் கேட்காதது போல் தன் வேளையில் மூழ்கியிருந்தவளின் அருகே சென்று, “தாங்க்ஸ் நிலா….!” என்றான்.      

     அவள் முறைப்புடன், “ம்ம்! நீயே வைச்சிக்கோ உன் தாங்க்சை!” என்றாள்.

     “ம் சரி..!” என்று அவன் கிளம்ப எத்தனிக்க, அவள் அருகே இருந்த குஷனை எடுத்து அவன் மேல் வீசி,

     “எருமை எருமை! எவ்ளோ கஷ்டப் பட்டு உனக்காக யோசிச்சு, தாமோதரன் சாரைப் பார்த்து விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டு, அந்த சிடு மூஞ்சி பஞ்சாட்சரம் கிட்ட எல்லாம் பேச்சு வாங்கி உங்க காதலுக்குப் பச்சைக் கொடி காட்ட வைச்சேன்! தாங்க்ஸ் வேணாம்னா நீயே வச்சிக்குவியா?!” என்றாள் முறைத்தபடி.

     “ம்!” என்று சிரித்தவன், “இதுக்குதான் அப்படிச் சொன்னேன்!” என்றான்.

     “எதுக்கு?!” என்று அவள் கேட்க,

     “கெஞ்சினா கண்டிப்பா நீ மதிக்க மாட்ட, அதான் அப்படிப் பேசினேன்!” என்ற நிரு, அவள் அருகே சென்று அவள் கைப்பிடித்து,

     “தாங்க் யூ ஸோ மச் நிலா..!” என்றான் பேரன்புடன்.

     “ப்ச்…! ப்ச்..! தாங்க்ஸ்லாம் கூடாது!” என்றவள் அவன் கண்கள் லேசாகக் கலங்குவதைப் பார்த்து,

     அவன் கண்ணீரைத் துடைத்து, “என் நிரு எப்பவும் எந்த கட்டத்திலயும் கண்ணீர் சிந்த மாட்டேன்னு எனக்கு ஸ்கூல் டேஸ்லயே ப்ராமிஸ் பண்ணிக் கொடுத்திருக்கான்!” என்று அவளுமே சற்றுக் கண்கலங்கக் கூற,

     “அய்யோ போதும் ப்பா…! புல்லரிக்குது!” என்றான், கதவோரம் கைகட்டி நின்றிருந்த ரஞ்சன்.

     “வந்தாச்சா?! நாங்களே இப்பதான் ரொம்ப நாள் கழிச்சுப் பேசியிருக்கோம்! பொறுக்காதே உங்களுக்கு!” என்று நிலா முறைக்க,

     “பொறாமையா இருக்குடி.. உங்களைப் பார்த்தா…!” என்றான் ரஞ்சன்.

     அவன் சொன்னதைக் கேட்டு இருவருமே தங்கள் நட்பை எண்ணி பெருமிதம் கொண்டனர்.

     சில நிமிடங்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்க, “நிலா… எல்லோரும் சாப்பிட வாங்க!” என்று குரல் கொடுத்தார் ராதா.

     அதைக் கேட்ட நிரஞ்சன், “நீங்க ரெண்டுபேரும் போங்க… நான் கொஞ்ச நேரத்துல வந்திடறேன்..!” என்று நிரு தன் அறைக்குக் கிளம்ப,

     “ஏய்.. யாஷினிக்கிட்ட பேசத்தான எஸ்கேப் ஆகுற?!” என்று குறும்பு செய்தாள் நிலா.

     “போங்க போய் சாப்பிடற வேலையைப் பாருங்க..!” என்று நிரு டைனிங் ஹாலுக்கு வழிக்காட்டிவிட்டுச் செல்ல,

     “அடப்பாவி உன் ரூட் கிளியர் ஆனதும் எங்களுக்கே வழிக்காட்டுறியா?” என்று நிலா முறைக்க,

     “போதும் வா நிலா… அவனாவது நிம்மதியா இருக்கட்டும்!” என்று ரஞ்சன் சொல்ல,

     “அப்போ நான் இருந்தா நிம்மதி இருக்காதா?!” என்று நிலா முறைக்க,

     “ம்…! புரிஞ்சிக்கிட்டா சரிதான்!” என்றான் பெருமூச்சோடு.

     “உன்னை…!” என்று நிலா அவனை செல்லமாக அடிக்க வர, அவன் அவள் கையை லாவகமாகப் பிடித்து,

     “நம்ம சடுகுடு ஆட்டத்தை எல்லாம் சாப்பிட்டு வந்து வைச்சிக்கலாம்!” என்றான் கண்ணடித்து.

     “சீ!” என்ற நிலாவின் முகம் வெட்க மூலாம் பூசிக் கொண்டது.

     அங்கு, முதன் முதலாக நிரஞ்சனின் கைப்பேசியிலிருந்து தன் கைப்பேசிக்கு அழைப்பு வந்ததும், யாஷினியின் மனம் மான் குட்டியாய் துள்ளிக் குதித்தது! ஆனாலும் போனை அட்டென்ட் செய்துப் பேசாமல், திரையில் மின்னும் அவன் பெயரை கோபத்துடன் ரசித்திருந்தாள்.

     “கமான் யாஷினி போனை எடேன்!” என்று நிரு மனதிற்குள் ஜெபித்துக் கொண்டிருக்க, அவன் மனதைத் தீண்டியவளோ, வேண்டுமென்றே போனை எடுக்காமல் அவனைத் தவிக்க விட்டுக் கொண்டிருந்தாள்.

     “எத்தனை நாள் நான் போன் பண்ணியிருப்பேன் ஒரு நாளாவது எடுத்துப் பேசியிருக்கியா?! பேட் பாப்பா…! கொஞ்ச நாளாவது நான் அனுபவிச்ச வேதனையை நீயும் உணர வேண்டாமா?!” என்று தன் காதலனிடம் மனதிற்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் காதலி.

     பத்து முறைக்கும் மேல் அவன் போன் செய்தும் அவள் போன் எடுக்கப் படாததால், “அடடா பழி வாங்கும் படலம் ஆரம்பிச்சிடுச்சு போலவே?!” என்று பொய்யாகச் சலித்துக் கொண்ட நிரு, அதை அப்படியே குறுஞ்செய்தியாகவும் அவளுக்கு அனுப்பினான்.

     அதை படித்த யாஷினி மென்னகையுடன் அதனை ரசித்தாள்.

     அன்று இரவும் நிரஞ்சன் அவள் கைப்பேசிக்கு அழைக்க அப்போதும் அவள் போனை எடுக்காமல் போக்கு காட்ட, மறுநாள், அவள் வேலை செய்யும் பள்ளிக்கு அருகில் உள்ள கோவிலின் அருகே சென்று தன் காரை நிறுத்திவிட்டுக் காத்திருந்தான்.

     வரும் வழியிலேயே அவனை கவனித்துவிட்ட யாஷினி, குறும்புப் பார்வையுடன் அவனைக் கண்டு கொள்ளாது செல்ல, அவள் கோபம் நியாயமானது என்றுணர்ந்த நிரு, “யாஷினி…!” என்று காதலுடன் அழைக்க, அவ்வொற்றை வார்த்தை அவள் பொய்க் கோபத்தைத் தணிக்கப் போதுமானதாக இருந்தது!

     மெல்ல அவன் புறம் பார்வையைத் திருப்பிய யாஷினி, அவனை நோக்கி நடந்தாள்.

    அவள், அவனை நெருங்க நெருங்க, நிருவிற்கு என்றுமில்லாது ஓர் படபடப்பு! அவள் மனதிற்குள்ளும் இனம் புரியாத ஓர் உணர்வு.

     “இங்க நின்னு பேச வேண்டாம். வா கோவிலுக்குள்ள போய் சாமி தரிசனம் பண்ணிட்டு பிறகு பேசுவோம்!” என்று நிரஞ்சன் சொல்ல, இருவரும் கோவிலுக்குள் சென்று இறைவனை தரிசித்து, எண்ணம் போல் தங்கள் வாழ்வை அமைத்துக் கொடுத்ததற்கு நன்றியும் செலுத்திவிட்டு வந்து ஓரிடத்தில் அமர்ந்தனர்.

     இருவராலுமே எதுவும் பேச முடியவில்லை! எப்போதும் கொட்டும் அருவியாய் சலசலக்கும் யாஷினி இன்று பேசாமடந்தையாய் அமர்ந்திருக்க, நிரஞ்சனே அமைதியைக் கலைக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டான்.

     “யா… யாஷினி…!” என்று அவன் அழைக்க,

     “ம்!” என்றாள் குரல் வெளியே கேட்காத வண்ணம்.

     “என்மேல் ரொம்ப கோபமா இருக்கேன்னு தெரியும்” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்,

     “அதெல்லாம் இல்ல…!” என்றாள் பட்டென்று.

     “அப்போ ஏன் போன் எடுக்கலை!?” என்றான் அவள் முகம் பார்த்து.

     “எத்தனை நாள் என்னை தவிக்க விட்டிருப்பீங்க?! அதான் ஒருநாளாவது, என்னோட கஷ்டம் புரியட்டும்னு பேசாம இருந்தேன்!” என்றாள்.

     “ம்!” என்று அவன் சிரிக்க,

     “என்ன சிரிப்பு?! நிலா மட்டும் இல்லைன்னா இந்நேரம் என் அப்பா எனக்கு வேற ஒருத்தரை கல்யாணம் செய்து வைச்சிருப்பாரு!” என்றாள்.

     “நீ சம்மதிச்சிருப்பியா?!” என்றான் கேள்வியாக.

     “இல்லதான்! ஆனா அன்னிக்கு அப்பா எதுவுமே சொல்லாம கொள்ளாம, இன்விடேஷனைக் கொண்டு வந்து கையில கொடுத்தப்போ எப்படி இருந்தது தெரியுமா?! ஒரு நொடி என் உயிரே போன மாதிரி ஆகிடுச்சு! என்ன இவர்? என் சம்மதம் இல்லாமலேயே கல்யாணப் பத்திரிக்கை வரைக்கும் போயிட்டாரே! எப்படி இதை தடுத்து நிறுத்தப்போறேன்னு தவிச்சுப் போயிட்டேன்! நான் கலங்கிப் நின்னதைப் பார்த்துட்டு, அப்பாவே அழைப்பிதழைப் பிரிச்சு படிச்சுக் காட்டினார்! தட் மொமென்ட்! ஐ டோன்ட் நோ ஹவ் டு எக்ஸ்ப்ரெஸ் இட்! இட் வாஸ் மை பெஸ்ட் மொமென்ட் விச் ஐ நெவர் எக்ஸ்பிரியன்ஸ்ட் இன் மை லைப்!” என்றாள் உணர்ச்சிவயப்பட்டு.

     “எனக்குமே நம்ம கல்யாணப் பத்திரிக்கையை பார்த்த நொடி அதே உணர்வுதான் ஏற்பட்டது யாஷினி!” என்றான் நிரஞ்சனும் ஆத்மார்த்தமாக.

     அதைக் கேட்டு அவள் முகம் பூரிக்க, அவன் அதை வெகுவாய் ரசித்தான்.

     யாஷினியும், நிரஞ்சனும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த அவர்களின் மணநாள் இனிதே புலர்ந்தது.

     வாழ்வின் முக்கிய கட்டத்திற்குள் அடி எடுத்து வைக்கப் போகும் இரு இளநெஞ்சங்களும், கண்ணும் கருத்துமாக அய்யர் சொல்ல சொல்ல மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

     அவ்வப்போது இருவரின் பார்வைகளும் காதலுடன் ஒருவரை ஒருவர் இதமாகத் தழுவிச் சென்றன.

     ராதா, கிருஷ்ணன் தம்பதியர், தங்கள் மகனின் மணவாழ்வு சிறக்க இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்க,

     காமாட்சி, இராமநாதன் தம்பதியர், தாங்கள் கண்ட கனவு நிஜமாகிக் கொண்டிருப்பதை மிகுந்த மனமகிழ்ச்சியுடன் கண்ணார கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.

     நிவியும், கார்த்திக்கும் தங்களின் இரண்டு மாதக் கைக்குழந்தையுடன் திருமண ஜோடியை வாழ்த்த ஆவலுடன் காத்திருக்க,

     நிலாவும், ரஞ்சனும் மணவறை அருகே நின்று, திருமண ஜோடியையும் அவர்கள் செய்யும் சடங்குகளையும் மனதார ரசித்துக் கொண்டிருந்தனர்.

     திடீரென்று ரஞ்சனுக்கு ஏதோ தோன்ற, நிலாவின் காதருகே குனிந்து, “நாம திரும்பவும் கல்யாணம் பண்ணிலாமா பேபி..!” என்றான் கிசுகிசுப்பாக.

     அதைக் கேட்டு நிலாவிற்கு சிரிப்பு வந்துவிட, “ரொம்ப முக்கியம்!” என்றாள்.

      “போ பேபி..! நான் உன்னை இந்த மாதிரி எல்லாம் ரசிக்கவே இல்லை!” என்றான் ரஞ்சு சோகமாக.

     அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு சிரிப்பு அதிகமாக, “நான் மட்டும் என்ன?! உன் பக்கத்துல உட்கார்ந்திருந்த பாதி நேரம் பயத்துலயே போயிடுச்சு!” என்றவள் திடீரென்று அவனை நோக்கி, 

     “பேபின்னு கூப்பிடாதேன்னு எத்தனை முறை சொல்றது!?” என்று முறைத்தாள்.

     “ஏன் பேபி?!” என்று அவன் வேண்டுமென்றே கூப்பிட,

     “போடா GEM!” என்றாள் அவளும் அவனுக்குப் பிடிக்காத பெயரைச் சொல்லி.

     “உன்ன…!” என்று அவன் ஏதோ சொல்ல வர, அவன் அணிந்திருந்த வேஷ்டியை பிடித்து நிரஞ்சன் அசைக்க, ரஞ்சன் அவன் அருகே குனிந்தான்.

     “தாலி கட்டப் போறேன்! கொஞ்சம் உங்க செல்ல சண்டையெல்லாம் நிறுத்திட்டு எங்களை ஆசீர்வாதம் பண்றீங்களா?!” என்றான் சீரியசாக முகத்தை வைத்து.

     அதைக் கேட்டு நிலா நாணத்தில் தலை கவிழ, மங்கள மேளம் முழங்கியது.

     மின்னும் நட்சத்திரமாய் யாஷினியின் இன்முகம் ஜொலிக்க, நான் வாழும் காலம் வரை இப்புன்னகையை உன் முகத்தில் தக்க வைப்பேன் என்ற உறுதியுடன் நிறைவானவன் அவள் கரம்பிடித்தான்.

                        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!