Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Nila Thozhikku

En Nila Thozhikku 27 2

   “இப்ப நீ வழியை விடப் போறியா… இல்லை… நான் கத்தி எல்லாரையும் எழுப்பி சொல்லிட்டு இங்கிருந்து போகவா?!” என்று அவள் தீர்மானமாய்ச் சொல்ல, அவள் கண்களை ஒரு நொடி சந்தித்தவன் வேதனையுடன் அவளுக்கு வழிவிட்டான்.

     ஆனால் கதவின் கைப்பிடியைத் திறந்து வெளியே போக முயன்றவள், தன் கால்களுக்கு ஏதோ தடையிட்டது போல் அப்படியே நின்றாள்.

     மாலையில் தன் தந்தை சொன்ன வார்த்தைகள் அவள் காதில் ரீங்காரமிட, சில நொடிகள் பேயறைந்ததைப் போல் நின்றவள், தனது கையிலிருந்து பேக்கை நழுவவிட்டு அங்கேயே சரிந்து அமர்ந்தாள்.

     அவள் செய்கையைக் கண்டு, அவள் தந்தைக்காகத்தான் தன் முடிவைக் கைவிட்டிருப்பாள், என்று புரிந்து கொண்டவன், அவளைச் சமதானப் படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையுடன் அவளருகே சென்றான்.



Advertisement

       கோபத்திலும், வேதனையிலும் அவள் மனம் கனன்று சுழன்றது. “அய்யோ கடவுளே!! நான் அப்படியென்ன தப்பு செய்தேன்?! நான் ஏழையாப் பிறந்தது தப்பா! சின்ன வயசில… என் மேல திருட்டுப் பழிபோட்டான்! இப்ப பணத்துக்காக நடிச்சு அவனோட வாழறேன்னு சொல்றான்! அப்போ என் காதல், என் அன்பு எல்லாமே அவனுக்கு நடிப்பாதான் தெரியுது இல்ல!? இதுக்கு மேலயும் எப்படி நான் அவனோடு வாழுறது?! அப்படி வாழ்ந்தா அவன் சொன்னது உண்மையாகிடும் இல்ல.. பணத்துக்காகத்தான் நான் அவன் வாழ்க்கையில இருக்கேங்கிறது உண்மையாகிடும் இல்ல…!!” என்று நினைத்தவளுக்கு  அழுகை கட்டுமீறிக் கொண்டு வர,

     “இப்ப நான் என்ன செய்வேன்?! என் அம்மா வீட்டுக்கும் போக முடியாம, இங்கயும் இருக்க முடியாம இப்படி என்னை தவிக்க வைச்சிட்டியே நான் என்ன செய்வேன்?!” என்று எண்ணிக் கதறினாள்.

     அவள் அழுவதைக் காணச் சகியாமல், மெல்ல அவளருகே அமர்ந்து அவள் தலையைக் கோதியவன், நிலாம்மா… இங்க பாரு! நான் பேசினது தப்புதா…!” என்று முடிப்பதற்குள், சுட்டெரிக்கும் கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

Advertisement

     “இல்ல! நீ பேசினது தப்பு இல்ல… நான் திருடிதான்!! நான் பணத்தாசைப் பிடிச்சவதான்! உன்னைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சது, உன்னை உருகி உருகிக் காதலிச்சது, உன்னோடு வாழ்ந்தது எல்லாமே பணத்துக்காகதான்! எல்லாமே பணத்துக்காகத்தான்!” என்று வெறி பிடித்தவள் போல் கத்தியவள், அவன் சட்டையை உலுக்கி,

Advertisement

     “ஏன்டா… ஏன்டா… சின்ன வயசில இருந்தே என்னை இப்படி பாடாய்ப் படுத்துற?! நான் ஏழையாப் பொறந்ததுதான்டா நான் செய்த தப்பு… அதைத் தவிர நான் எந்த தப்புமே செய்யலையே டா…!” என்று ஆதங்கத்துடன் கூற, அவன் நெஞ்சம் நெருப்பில் வெந்தது.

     “சே உன்கிட்ட போய் இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கேனே?! உனக்குதான் சின்ன வயசில இருந்தே என்னைப் பிடிக்காதே?!” என்று விரக்தியாய்க் கூறியவள்,

     அவனை நிமிர்ந்து பார்த்து, “அப்போ இத்தனை நாள் நாம சந்தோஷமா வாழ்ந்தது எல்லாம் வெறும் மாயையா? அப்பவும் உன் மனசுல என்னைப் பத்தி இப்படித்தான் நினைச்சிகிட்டு இருந்தியா?!” என்றாள் கேள்வியாக.

Advertisement

     “இல்ல இல்ல… நிலா.. ஆரம்பத்துல வேணா நான் அப்படி நினைச்சிருக்கலாம் ஆனா…” என்று ஏதோ சொல்ல வந்தவனை முடிக்க விடாமல்,

     “ஓ! அப்போ இந்த நினைப்பு எப்பவுமே உன் மனசுல இருந்துகிட்டுதான் இருக்கு! அதான் இன்னிக்கு வெளிவந்துடுச்சு!” என்றாள் விரக்தியுடன்.

     “இல்ல இல்ல நிலா…!” என்று அவன் சொல்ல வந்ததை கேட்கக் கூட மனமில்லாமல் சுய இரக்கதில் அவள் கதறிக் கதறி அழுதாள்.

     இங்கு இவர்கள் நிலை இப்படி இருக்க, அன்று மாலை அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் அமர்ந்திருந்த பெண்களில் ஒருவளான பார்வதி, அந்த நள்ளிரவு வேளையிலும் உறங்காமல், தங்கள் படுக்கை அறையின் ஜன்னல் கண்ணாடி வழியே தெரிந்த சாலையை வெறித்தபடி நின்றிருந்தாள்.

     உறக்கத்தினூடே திரும்பிப் படுத்த பிரஸாத், தன் மனைவியின் மீது கைபோட, அவள் அங்கே இல்லாததை உணர்ந்து கண்களைத் திறந்தான்.

     எதிரே வருத்தம் தோய்ந்த முகத்துடன் அவள் நின்றிருப்பதைக் கண்டு, எழுந்து அவள் அருகே சென்றான்.

     “என்னம்மா என்ன ஆச்சு? ஏன் தூங்காம இங்க நின்னுகிட்டு இருக்க?!” என்றான் கனிவாக.

     தன் மனதிலுள்ள பாரத்தைக் குறைக்க மெல்ல அவன் தோளில் சாய்ந்தவள், “இன்னிக்கு ஹோட்டல்ல ரஞ்சியைப் பார்த்தேன்ங்க..!” என்றாள் சன்னமான குரலில்.

     “இஸ் இட்…! அப்பவே என்கிட்டே சொல்லியிருக்கலாமே பாரு..!” நாம அவர்கிட்ட போய் பேசி இருக்கலாம் இல்ல..!” என்று அவன் கேட்க,

     “இல்லங்க எனக்கு அவனைப் பத்தி நல்லாத் தெரியும்! நிச்சயமா அவன் என்கிட்டே பேசமாட்டான்!” என்றாள்.

     “ம்ம்!” என்று மனைவியின் வார்த்தையை ஆமோதிப்பவன் போல் தலையசைத்தவன், “சரி ரொம்ப நேரம் கண் விழிக்காதம்மா.. வா வந்து படு!” என்று அவளை அழைத்துச் சென்றான்.

     “என்ன மனிதர் இவர்?! இவர் மட்டும் இல்லன்னா நான் இன்னிக்கு உயிரோடு இருந்திருப்பேனான்னு கூட தெரியலை!” என்று நினைத்தவள், அவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, உறங்கச் சென்றாள்.

     ஆனால் கண்களை மூடியவளுக்கு உறக்கம்தான் வரவில்லை. அன்றைய நாட்களின் நிகழ்வுகள் அவள் கண்முன்னே விரிந்தது.

     மாலை நேரத்திலும் பரபரப்பாக இருந்த அந்த மும்பை நகரத்தின் ஓர் பேருந்து நிறுத்தத்தில், பல பயணிகளைச் சுமந்தபடி வந்த அந்தப்  பேருந்து குலுங்கி நின்றது.

     அதிலிருந்து மிக ஸ்டைலாக உடையணிந்திருந்த ஒருவன், வாயில் சுவிங் கம்மை மென்றபடியே எதிரே யாரேனும் இருக்கிறார்களா என்று கூட பார்க்காமல், தொப்பென்று எகிறிக் குதித்தான்.

     பேருந்தில் ஏறத் தயாராய் அருகே வந்து காத்திருந்த அப்பெண், இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை போலும். திடீரென்று தன் அருகே, மிக அருகே ஓர் ஆடவன் தொப்பென்று எகிறிக் குதிக்கவும் விதிர்விதிர்த்துப் போய் விலகினாள்.

     அவன் எதையும் கண்டு கொள்ளாமல், தனது சுவிங் கம்மை மென்றபடியே அலட்சியமாக அங்கிருந்து நகர, அப்பெண், அவனைக் கோபமாக ஏதோ திட்டியபடியே பஸ்ஸில் ஏறினாள்.

     அவள் என்னதான் மெல்லமாகத் திட்டியிருந்தாலும், அது அவன் காதுகளை எட்டிவிட, பஸ்ஸில் ஏறிக் கொண்டிருந்த அப்பெண்ணை ஒரே மூச்சாகப் பிடித்துக் கீழே இழுத்து நிறுத்தினான் அந்த ஆடவன்.

     “ஏய் என்னடி திட்டின?!” என்று அவன் மிரட்டலாய்க் கேட்க,

     “குச் நை!!” என்றாள் மிரண்ட விழிகளோடு. ஆனால் அவ்வழகிய விழிகளைப் பார்க்கும் வாய்ப்புதான் அவனுக்குக் கிடைக்கவில்லை. ஏனெனில் அவள்தான் தன் தலையையும், முகத்தையும் தனது சுடிதார் துப்பட்டாவால் திரையிட்டு மறைத்திருந்தாளே!?

     “என்ன என்ன சொன்ன..?!” என்று அவன் மீண்டும் வினவ, அந்நேரம் பஸ்சும் புறப்பட்டு விட்டது.

      “கை கைய விடுங்க! பஸ் கிளம்புது நான் போகணும்!” என்று கெஞ்சினாள் அவள்.

     “ஓ! இப்ப மட்டும் தமிழ் வருதோ?!” என்று கேட்டவன், என்ன திட்டினன்னு மரியாதையா சொல்லிடு!” என்றான் மீண்டும் மிரட்டும் பாவனையில்.

     “நான் நான் எதுவும் த தப்பா சொல்லலை!” என்று அவள் விழுங்குவதிலிருந்தே அவள் ஏதோ தப்பான வார்த்தையைச் சொல்லித்தான் தன்னைத் திட்டியிருக்கிறாள் என்று உணர்ந்து கொண்டவன், அவள் முகத்தை மூடியிருந்த அவளின் துப்பட்டாவை எடுக்கப் போக,

    “அய்யோ ப்ளீஸ்… முகத்திரையை எடுக்காதீங்க!” என்றாள் அழுது விடும் குரலில்.

     அதற்குள் அவன் நண்பன் ரிஷி, தனது வண்டியை எடுத்துக் கொண்டு அங்கே வந்துவிட, ரஞ்சன் ஏதோ ஒரு பெண்ணிடம் வம்பு செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவன் அருகே ஓடினான்.

     அங்கே அந்தப் பெண் அழும் நிலையில் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்டு, “என்னாச்சுடா மச்சி…?! ஏன் இந்தப் பொண்ணை பிடிச்சு வைச்சிக்கிட்டு இருக்க?!” என்றான்.

     “பஸ்லர்ந்து நான் கீழே குதிக்கும் போது இவதான்டா இங்க பக்கத்துல வந்து நின்னுக்கிட்டு இருந்தா? ஆனா என்னைப் பார்த்து ஏதோ திட்டுறா மச்சி..!” என்று அவன் சொல்ல,

     “என்னம்மா என்ன இதெல்லாம்?!” என்று ரிஷியும் தன் நண்பனுக்கு வக்காலத்து வாங்க, அவள் எங்கே பிரச்சனை பெரிதாகிவிடுமோ என பயந்து,

     “அண்ணா… ப்ளீஸ் ண்ணா… தெரியாம சொல்லிட்டேன், என்னை மன்னிச்சிடுங்க அண்ணா…! எங்க பஸ் சீக்கிரம் கிளம்பிடுமொங்கிற பயத்தில, பக்கத்துல வந்து நின்னுட்டு இருந்தேன். இவர் திடீர்னு குதிச்சதும் பயந்துட்டேன்! அதான் ண்ணா.. ப்ளீஸ் என்னைவிடச் சொல்லுங்க?!” என்று கெஞ்சினாள் ரஞ்சன் இறுகப் பற்றியிருந்த தன் கையை விடுவிக்க முயன்றவாரே.

     அவள் கெஞ்சியதைப் பார்க்க ரஞ்சனுக்கே பாவமாகத் தோன்ற, ரிஷியை அவள் அண்ணா அண்ணா என்று அழைத்ததில், ரிஷி உருகியேவிட்டான். ஏனென்றால் தன் ஆசைத் தங்கை மேல் அவ்வளவு பிரியம் வைத்திருப்பவனாயிற்றே!

     “டேய் பாவம்டா… விட்டுடு!” என்று பரிந்து சொல்ல,

     “அதான?! அண்ணான்னு சொன்னாப் போதுமே! கையில இருக்க காசைக் கூட எடுத்து தாரை வார்க்கிறவனாச்சே?!” என்று நண்பனை கேலி பேசியவன், அவன் வேண்டிக் கொண்டதால் அவளை விடுவித்தான்.

     விட்டால் போதும் என்று அவனிடமிருந்து விழுந்தடித்துக் கொண்டு சில அடி தூரம் விலகி போய் நின்றவள், பஸ்ஸைத் தேட, பஸ்ஸோ அந்நேரம் அவள் கண்ணைவிட்டு மறையும் தூரம் சென்றிருந்தது. அவளுக்கு அழுகை வந்துவிடும் போல் இருந்தது. தப்பித் தவறியும் வாயைத் திறக்காமல் மனதுள் அவனை அர்ச்சனை செய்தபடியே தன் கைப்பேசியை எடுத்து தன் தங்கைக்கு அழைப்பு விடுத்தாள்.

     அவளது பதட்டமான செய்கையைப் பார்த்தபடியே தன் நண்பனது பைக்கில் எறிவனுக்கு, ‘சே! அவ முகத்தைப் பார்க்க முடியலையே!’ என்ற எண்ணம் எழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!