Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Nila Thozhikku

En Nila Thozhikku 28 2

     அவள் அமைதியாகவே நிற்கவும், அவள் முகம் பார்த்து, “பொறுக்கி….?! ம்ம்?!” என்று புருவம் உயர்த்திக் கேட்டவன்,

     “பொறுக்கி எப்படி பிகேவ் பண்ணுவான் தெரியுமா?!” என்று கேட்டு, அவள் என்ன?! ஏது?! என்று யூகிக்கும் முன்பே அவனருகே இழுத்து, அவள் உதட்டை நெருங்க, அவள் நடுநடுங்கிப் போனாள். பயத்தில் நா வறண்டு, கண்ணீர் பெருக்கெடுத்தது.

     “ப்ளீஸ் என்னை எதுவும் செய்துடாதீங்க!” என்று அவள் கண்ணீருடன் கெஞ்ச, சில நொடிகள் அவளை அப்படியே பிடித்திருந்தவன், வேறேதும் செய்யாமல் விடுவித்து,



Advertisement

     “யாரைப் பத்தியும் முழுசா தெரியமா அவங்களை பத்தி தப்பா பேசாத!” என்று எச்சரித்துவிட்டு விடுவிடுவென அங்கிருந்து சென்று விட்டான்.

     ரஞ்சனைக் காணவில்லையே என்று அவனைத் தேடிக் கொண்டு சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த ரிஷிக்கு, அவன் செய்துவிட்டு வந்த செயலை எண்ணி கோபம் துளிர்த்தது.

     எதிரே வந்தவனை நோக்கி, “அறிவிருக்காடா உனக்கு?! நடு ரோட்ல வைச்சு ஒரு பொண்ணுகிட்ட இப்படியா நடந்துக்குவ?!” என்று கத்த,

Advertisement

     “அவ மட்டும் அப்படி பேசினது சரியா?!” என்று ரஞ்சன் சினம் கொள்ள,

Advertisement

     “அவ பேசினது தப்புதான். அதுக்கு இப்படியா நடந்துக்கறது?!” என்று ரிஷி கேட்க,

     “இப்ப என்ன?! அவளை கிஸ்ஸா பண்ணிட்டேன்!” என்று அவன் துள்ள,

     “அப்படி மட்டும் செய்திருந்த நானே உன்னை ஈவ் டீசிங் கேஸ்ல பிடிச்சுக் குடுத்திருப்பேன்!” என்ற ரிஷி கோபம் அடங்காமல்,

Advertisement

     “எத்தனை பேர் முன்னாடி?! சீ.. அந்தப் பொண்ணுக்கு எவ்ளோ அவமானமா இருந்திருக்கும்?! உன் தங்கச்சிகிட்ட யாரவது இப்படி நடந்தா…?!” என்று வார்த்தைகளை வீச,

      “ரிஷி…!” என்று அதட்டினான் ரஞ்சன்.

     “உங்க வீட்டுப் பொண்ணுன்னா உசத்தி! வெளிவீட்டுப் பொண்ணுன்னா மட்டமோ?!” என்று அவன் நக்கலாய்க் கேட்க,

     “ரிஷி….!” என்று தணிந்து தலை குனிந்தான் ரஞ்சன்.

     “உன்னை என் பிரெண்டுன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்குடா..?!” என்று சொல்லி அவனிடமிருந்து வேகமாய் விலகியவன், அப்பெண்ணிடம் விரைந்தான்.

     அவள் அவன் விட்டுவிட்டு வந்த நிலையிலேயே கண்ணீர் வழிந்தோட, நின்றது நின்றபடி இருந்தாள்.

     அவளருகே சென்ற ரிஷி, “ம்மா… ப்ளீஸ் அழாதம்மா… எல்லோரும் பார்க்கறாங்க! வா! இங்க ஓரமா வந்து நில்லும்மா…” என்று அவன் கெஞ்சலாய் அழைக்க, அப்போதும் அவன் அழுகையை நிறுத்துவதாய்த் தெரியவில்லை.

     “தயவு செய்து அழாதம்மா…. அவன்… கொஞ்சம் கோபக்காரன்…  ஏதோ உணர்ச்சிவசப்பட்டு… இருந்தாலும் அவன் செய்தது பெரிய தப்புத்தான்! அவனுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன் ம்மா…! ப்ளீஸ் தயவு செய்து அப்படி ஓரமா வந்து நில்லும்மா…” என்று ரிஷி மன்னிப்பு வேண்ட, அவள் மனமிறங்கி அவன் பேச்சுக்கு  மதிப்பு கொடுத்தாள்.

     அவளை பேருந்து நிலையத்தின் நிழற்குடையின் கீழ் அமரவைத்தவன், அருகே இருந்த கடைக்குச் சென்று தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து அவளிடம் கொடுத்துக் குடிக்கச் சொல்ல, அவள் தயங்கினாள்.

     “குடிம்மா…!” என்று அவன் மீண்டும் வேண்ட, அவள் அதை வாங்கி அருந்தினாள்.

     “மன்னிச்சுடும்மா…! நான் அவனை கண்டிக்கறேன். அவன் இனிமே உன்கிட்ட எந்த வம்பும் பண்ண மாட்டான்!” என்று அவளுக்கு உறுதி கொடுத்துவிட்டு, 

     “நீ எங்க போகணும்னு சொல்லும்மா. நான் ஆட்டோ பிடிச்சு விடறேன்!” என்று அவன் கேட்க,

     “இல்ல.. நான்.. நான் பஸ்லயே போய்க்கறேன்! எனக்கு தனியா ஆட்டோல போய் பழக்கமில்லை!” என்றாள்.

     “சரிம்மா.. உன் விருப்பம்!” என்றவன், அவளுக்கான பேருந்து வரும் வரை காத்திருந்து, அவள் அதில் ஏறிச் செல்லும் வரை உடன் இருந்துவிட்டு திரும்பினான்.

     சற்று தூரத்தில் இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனுக்கு, அவமானமாக இருந்தது.

     “சே இப்படிப் பண்ணிட்டோமே!” என்று அவர்களையே பார்த்தபடி மனம் வருந்த நின்றிருந்தான்.

     எதிரே நின்றிருந்த ரஞ்சனை சற்றும் கண்டு கொள்ளாமல் ரிஷி முன்னேற, “ரிஷி… டேய்.. நில்லுடா…!” என்றபடி ரஞ்சன் பின் தொடர்ந்தான்.

     அவன் பதிலேதும் பேசாமல் தனது கல்லூரி பார்க்கிங் ஏரியாவிற்குச் சென்று தன் பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட, ரஞ்சனின் மனம் வேதனை கொண்டது.

     “சே தப்பு பண்ணிட்டேன்!” என்றான் உணர்ந்து.

     இதுதான் ரஞ்சன்! அவனைப் பற்றித்தான் உங்களுக்கே நன்றாகத்  தெரியுமே?! எதையும் யோசிக்காமல் செய்ய வேண்டியது, பின்பு வருந்த வேண்டியது. இந்த குணம் எப்போதுதான் மாறும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

     இரண்டு நாட்களாக ரஞ்சன் மன்றாடியும் ரிஷி அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. இறுதியாக ரஞ்சன் தனது பொறுமையைக் கைவிட்டு,

     “இப்ப என்ன என்னதான்டா பண்ணச் சொல்ற?! அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா?!” என்றான் சற்றே சலிப்புடன்.

     அவ்வார்த்தைகள் ரிஷியின் கோபத்தை சற்றுத் தணிக்க, “கால்ல எல்லாம் ஒண்ணும் விழ வேண்டாம்! மன்னிப்பு மட்டும் கேட்டா போதும்!” என்றான் மெதுவாக.

     “சரி கேட்கறேன் போதுமா?! இனியாவது பேசுவியா?!” என்றான் ரஞ்சன் ஆவலுடன்.

     “முதல்ல நீ மன்னிப்புக் கேளு அப்புறம் பார்க்கலாம்!” என்று ரிஷி சொல்ல,

     “போடா…!” என்றவன், நொடியும் தாமதிக்காமல் அவள் வகுப்பறையை நோக்கிச் சென்றான்.

     அவள் வகுப்பறை விட்டு வெளியே வரும் சமயம், சரியாக அவள் முன்னே போய் நின்றவன், “ஸாரி… நான் ஏதோ முட்டாள்தனமா அப்படி செய்துட்டேன்! ஆனாலும் தப்புதான் ஸாரி…!” என்றான்.

     அவன் எதிரே வந்து நின்றதுமே அவள் மயக்கம் போடாத குறையாக நின்றுவிட, அவன் சொன்னது பாதி புரிந்தும் புரியாமல் அவள் காதில்  விழுந்தது.

     பேயைக் கண்ட சேயைப் போல் பயத்தில் உறைந்து நின்றவளை, அவள் கையிலிருந்த புத்தகத்தையே எடுத்து, அவள் தலையில் ஒரு தட்டு தட்டி சுயநினைவுக்கு இட்டு வந்தான்.

     அவள் ஒரு நிலைக்கு வந்ததும், “என்ன மன்னிச்சிட்டியா?!” என்றான் ஆவலாய்.

     “ம்ம்?!” என்று அவள் கேள்வியோடு நோக்க,

     “மன்னிச்சிட்டியான்னு கேட்டேன்?!” என்றான் மறுபடியும்.

     “ம்ம்! ம்ம்!” என்றாள் விழிகள் மிரள மண்டையை வேகமாய் உருட்டி.

     இல்லையென்றால் அதற்கு வேறு ஏதேனும் செய்துவிட்டால் என்று அவளுக்குள் ஓர் பயம்!

     “ம் தாங்க்ஸ்…!” என்றவன், பயத்துடன் படபடத்த அவள் இமைகளைப் பார்த்து,

     “ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?!” என்றான் அவள் கண்களைப் பார்த்து.

     “ம்ம்?!” என்று அவள் பேந்தப் பேந்த விழிக்க,

     “நீ நிஜமாவே அழகா இருக்க! அதுவும் பயப்படும் போது ரொம்பவே….!” என்று கண்ணடித்தவன்,

    “உன்னைக் கிஸ் பண்ணாம மிஸ் பண்ணிட்டேனோன்னு இப்போ வருத்தமாயிருக்கு!” என்று அழகாய்ச் சிரித்து விடைபெற,

     “ஹான்?!” என்று அதிர்ச்சியில் வாய்பிளந்து அவள் நின்ற போதும், அவன் புன்னகை அவளை ஈர்க்கத்தான் செய்ததோ!? 

     நாட்கள் செல்லச் செல்ல அவள் பயந்து பயந்து விலகியதே ரஞ்சனை அவள் பால் அதிகம் ஈர்த்தது. அதுவே அவள்மேல் தீராக் காதல் கொள்ளவும் வழிவகுத்தது.

     சில மாதங்கள் எட்ட நின்றே அவளைக் காதலித்து வந்தவன், தனது மூன்றாமாண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு முடிந்ததும், முதுகலைப் பட்டப்படிப்பிற்காக வேறு கல்லூரியில் சேரவிருப்பதால், தன் காதலைச் சொல்லிவிட முடிவெடுத்து அதற்கான தருணம் பார்த்துக் காத்திருந்தான்.

      அதற்கான தருணம் அன்று அவனே எதிர்பாராமல் அமைந்தது. எப்போதுமே கோவிலுக்குச் செல்லாதவன், அன்று ரிஷியின் அக்காவின் திருமணம் கோவிலில் நடைபெறவிருந்ததால், கோவிலுக்குச் சென்றிருந்தான்.

     அந்நேரம் பார்த்து அவளும் தன் தங்கையுடன் அந்த கோவிலுக்கு வந்திருந்தாள். சரியாக அவள் பிரசாதக் குங்குமத்தை எடுத்து தன் நெற்றியில் இடுவதற்காக அவள் முகத்திரையை எடுக்க, அந்நேரம் அவன் விழிகளில் அவள் செவ்வந்தி முகம் சிக்கியது.

     அவளைப் பார்த்தவன் அவள் அருகே செல்ல முயன்ற சமயம், “டேய் எங்கடா போற?! முகுர்த்த நேரம் நெருங்கிடுச்சுடா..!” என்று ரிஷி தடுக்க,

     “டேய் பாரு கோவிலுக்கு வந்திருக்காடா… காலேஜ்லயும் அவகிட்ட பேச முடியலை! என் லவ்வை சொல்ல இதுதான் சரியான சந்தர்ப்பம்! சொல்லிட்டு வந்துடறேன் டா…!” என்று சொல்லி அவளை நோக்கி நகர்ந்தவனின் கைப்பிடித்து தடுத்து நிறுத்திய ரிஷி,

     “டேய் ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து லவ் பண்றேன்னு யார்க் கிட்டயாவது அடிவாங்கப் போற நீ!” என்று ரிஷி எச்சரிக்க,

     “டேய் ஆரம்பிக்கும் போதே சாபம் குடுக்காதடா!” என்று அவன் கையை உதறிக் கொண்டு அவளை நோக்கி சென்றான் ரஞ்சன்.

     நாலே எட்டில் அவளை நெருங்கியவன், அவள் முன்னே சென்று வழிமறித்து நிற்க, எப்போதும் போல் அவனைக் கண்டதும் அவள் இதயத் துடிப்பு எகிற நின்றாள்.

     அதைச் சற்றும் பொருட்படுத்தாமல், “பாரு… ஐ லவ் யூ.. வில் யூ மேரி மீ?!” என்றான் சர்வசாதாரணமாக.

     “எ என்ன???!!!” என்று திகைத்து நிற்க,

     “புரியலையா பாருக்கா…?! அவர் உன்னைக் காதலிக்கறாராம்! நீ அவரைக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்கறாரு?!” என்று விம் போட்டு விளக்கினாள் அவளை விட ஒருவயதே சிறியவளான, எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் அவளது ஆருயிர் தங்கை சகுந்தலா.

     சகுந்தலா ரொம்பவே மாடர்ன் கேர்ள். தன் தாய் எவ்வளவு மிரட்டினாலும் அவர்கள் சம்பிரதாயப்படி முகத்தில் முக்காடு அணிவதைக் கூட அவள் ஏற்கவே இல்லை. கோவிலுக்கு வருவது கூட அவள் அக்காவிற்காகத்தான். பேச்சிலும் அப்படித்தான் எதையும் மறைத்து வைத்துப் பேசும் பழக்கம் இல்லை. அதுதான் இப்படி!

     அவள் விளக்கியதை ஆமோதிப்பது போல் மறுபடியும், “ம்! ம்!” என்று தலையாட்டி உர்ஜிதம் செய்தான் ரஞ்சன்.    

     “ஏய் சகு.. வாடி போகலாம்!” என்று வேகமாக தன் தங்கையின் கைகளைப் பிடித்து இழுத்தவள், விறுவிறுவென்று அவன் கண்ணைவிட்டு மறைந்தாள்.

     “ஹா ஹா.. சரியான பயந்தாங்கோலி! அவ்ளோ சீக்கிரம் ஏத்துக்குவாளா என்ன?!” என்று சிரித்தபடியே ரஞ்சனும் திருமணம் நடக்கும் மண்டபத்திற்குச் சென்றான். 

      வேகமாக தன் தமக்கையின் கைகளைப் பிடித்து நடந்த வண்ணம், “இவங்கதான் அன்னிக்கு பஸ் ஸ்டாண்ட்ல கலாட்டா பண்ணவங்களா?” என்றாள் சகு.

     “ம்ம்! உனக்கெப்படித் தெரியும்?!” என்று அவள் வியக்க,

     “நீ பயப்படறதை பார்த்தாலே தெரியுதே!” என்ற சகு,

     “எனக்கென்னமோ அவங்களைப் பார்த்தா நீ சொன்ன அளவுக்கு கெட்டப் பையனா தெரியலை!” என்று அவனுக்கு நற்சான்றிதழ் கொடுக்க,

     “பேசாம வான்னு சொல்றேன் ல…!” என்றாள் தங்கையை மிரட்டி.

      “ஹான்! இது நல்லாயிருக்கே?! நீ மட்டும் தினமும், “அவன் என்னை அப்படி மிரட்டுறான்… இப்படி முறைக்கிறான்.. திடீர்னு வழிமறிச்சு கிஸ் பண்ற மாதிரி வந்து திணறடிச்சிட்டான்…. அப்புறம் ஸாரி கேட்குறான்… கடைசியில லூசு மாதிரி சிரிச்சு கிஸ் பண்ண மிஸ் பண்ணிட்டேனு சொல்லி குண்டை தூக்கிப் போடுறான் அப்படி இப்படின்னு சொல்லி, ரெண்டு மணி நேரத்துக்கும் மேல மொக்கை போடுவியாம்! நான் மட்டும் ஒரு ரெண்டு வரி பேசக் கூடாதா?!” என்று அவள் எதிர்கேள்வி கேட்க,

     “ஹான் அது நான் வந்து.. நான் அவனை திட்டிதானே உன்கிட்ட பேசுவேன்!” என்று அவள் சொல்ல,

     “ஆமாம் ஆமாம் திட்டிதான் பேசுவ? ஆனா எனக்கென்னமோ ஒரே டவுட்டா இருக்கு! நீதான் திட்டுறேன்னு சொல்லிக்கிட்டு அவங்களை அதிகமா நினைக்கறியோன்னு!” என்று சகு கன்னத்தில் விரல் வைத்து யோசிக்க,

     “சீ சீ! எனக்கு அவனைப் பார்த்தாலே எரிச்சலா வருது… திமிர் பிடிச்சவன்! பத்மாஸ்… பந்தர்…” என்று அவனை சராமரியாகத் திட்ட,

     “பாருக்கா… அவரு உன் பின்னாடிதான் நிக்கிறார்.!” என்று சகு ஷாக் கொடுக்க,

     “ஹான்?! எங்க எங்க?!” என்று அலறிப் போய் திரும்பினாள் பார்வதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!